Monday, March 7, 2022

ஆரோக்கிம்

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் ஆரோக்கியம் ஒரு அருட்கொடை என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

இன்று உலகத்தில் நமக்கு நிறைய செல்வங்கள் உண்டு.நமக்கு அறிவைப் புகட்டுகின்ற கல்விச்செலவம் உண்டு.நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற பொருட்செல்வம் உண்டு. சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி அமைக்கின்ற இளமைச் செல்வம் உண்டு. நமக்கு ஈருலகிலும் பெருமை சேர்க்கிற குழந்தைச் செல்வம் உண்டு. இப்படி நம் வாழ்வில் நிறைய செல்வங்கள் உண்டு.ஆனால் இந்த அனைத்து செல்வங்களிலும் ஆக உயர்ந்த செல்வம் உடல் ஆரோக்கியம்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள்.நோய்நொடியில்லாத சுகமான வாழ்க்கை தான் நாம் பெற்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.ஆரோக்கியம் இருந்தால் தான் மற்ற எல்லா விஷயங்களையும் நாம் அனுபவிக்க முடியும். ஆரோக்கியம் என்ற செல்வம் மட்டும் இல்லாமல் போனால் மற்ற எந்த செல்வத்தையும் நாம் அனுபவிக்க முடியாது. நிறைய கல்வியும் அறிவும் இருந்து ஆரோக்கியம் இல்லையென்றால் அந்த கல்வியும் அறிவும் பயனற்றது.நிறைய வசதியும் பொருளாதாரமும் இருந்து ஆரோக்கியம் இல்லையென்றால் அந்த வசதியும் பொருளாதாரமும் பயனற்றது. இளமையும் துடிப்பும் இருந்து ஆரோக்கியம் இல்லையென்றால் அந்த இளமையும் துடிப்பும் பயனற்றது.நிறைய குழந்தைகள் இருந்தும் ஆரோக்கியம் இல்லையென்றால் நம் வாழ்க்கை பயனற்று போனதோடு மட்டுமின்றி நம்மை உடனிருந்து கவனிக்கிற நம்மை பராமரிக்கிற அவர்களது வாழ்க்கையும் வீணாகி விடும்.ஆக ஆரோக்கியம் என்ற ஒரு செல்வம் மட்டும் இல்லையென்றால் மற்ற எத்தனை செல்வங்கள் இருந்தாலும் இல்லாததைப் போலத்தான்.எனவே செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் ஆரோக்கியம் என்பதை நாம் விளங்க முடிகிறது.

نعمتان مغبون فيهما كثير من الناس

இரண்டு செல்வங்கள் உண்டு.ஆனால் மக்கள் அதன் அருமையை உணராமல் அதை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒன்று ஆரோக்கி யம், இன்னொன்று ஓய்வு என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். 

குர்ஆனும் சரி ஹதீஸ்களும் சரி மிகப்பெரும் செல்வம் என்றும் மிகப்பெரும் நிஃமத் என்றும் உடல் ஆரோக்கியத்தைத் தான் அடையாளம் காட்டுகிறது.

ஆனால் அந்த மாபெரும் செல்வமாக இருக்கிற மாபெரும் நிஃமத்தாக இருக்கிற உடல் ஆரோக்கியம் பகல் கனவு என்று சொல்லும் அளவு இன்றைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. நம் முன்னோர்கள் நினைத்துக்கூட பார்க்காத நாம் சிந்தித்துக்கூட பார்க்காத எண்ணற்ற புதிய புதிய நோய்கள் தோன்றி மனித சமூகத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த நேரத்தில் நமக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் வேண்டும். அதே சமயம் அந்த ஆரோக்கியத்தை எப்போதும் எந்நேரமும் அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இன்றைக்கு அல்லாஹ்விடம் நாம் எத்தனையோ விஷயங்களைக் கேட்கிறோம். எத்தனையோ விஷயங்களை வேண்டுகிறோம்.கல்வியைக் கேட்கிறோம். அறிவைக் கேட்கிறோம்,சொத்தைக் கேட்கிறோம்,சுகத்தைக் கேட்கிறோம். வசதியைக் கேட்கிறோம்,ஆடம்பரத்தைக் கேட்கிறோம், நிம்மதியைக் கேட்கிறோம்.மனிநிறைவைக் கேட்கிறோம்.குழந்தைகளைக் கேட்கிறோம்.அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் கேட்கிறோம்.இப்படி நாம் அல்லாஹ்விடம் கேட்கிற விஷயங்களுக்கு அளவே கிடையாது.ஆனால் நாம் கேட்கிற விஷயங்களிலெல்லாம் ஆக உயர்ந்த விஷயம் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான விஷயம் ஆரோக்கியம் தான்.

நபி ஸல் அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் வந்து நான் அல்லாஹ்விடம் கேட்பதற்கு ஒரு சிறந்த துஆவைக் கற்றுத் தாருங்கள் என்று சொன்ன போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள் என்று சொன்னார்கள். அப்பாஸ் ரலி அவர்கள் மறுபடியும் வந்து யாரசூலல்லாஹ் நான் அல்லாஹ்விடம் கேட்பதற்கு ஒரு சிறந்த துஆவைக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள்,அப்போதும் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள் என்று சொன்னார்கள்.மூன்றாவது தடவையும் அதேபோன்று கேட்ட போது அப்போதும்  நபி ஸல் அவர்கள் அதே பதிலைத்தான் சொன்னார்கள்.

எனவே அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே உலகத்தில் எத்தனையோ விஷயங்கள், தேவைகள் இருக்கிற போது அதையெல்லாம் சொல்லாமல் மூன்று தடவை கேட்கும் போதும் ஆரோக்கியத்தை மட்டும் கேட்கச் சொன்னார்கள் என்றால் ஆரோக்கியம் எந்தளவு முக்கியமானது, அதை அல்லாஹ்விடம் கேட்பது எந்தளவு அவசியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அல்லாஹ்விடம் அதிகம் ஆரோக்கியத்தைக் கேட்போம். வல்ல ரஹ்மான் நம் மரணம் வரை நம்மை ஆரோக்கியத்தோடு வைப்பானாக ஆமீன்.


No comments:

Post a Comment