Friday, May 20, 2022

முஸ்லிம்களுக்கு கவனமும் விழிப்புணர்வும் வேண்டும்

 

இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை நமக்கு நன்றாக தெரியும். கடுமையான பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், மதக்கலவரங்கள், எல்லாம் தனியார் மயமாக்கப்படுவது என்று நிர்வாக ரீதியாக மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது. தனது தோல்வியை மறைப்பதற்காகவும், RSS- ன் அஜென்டாவை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களோடு கைகோர்த்து மத்திய பாஜக அரசு மதப்பிரச்சனைகளை கையில் எடுத்திருக்கிறது. RSS- ன் மிக முக்கியமான அஜென்டாவே இஸ்லாமிர்களைத் தீண்டி அவர்களை கொதிப்படையைச் செய்வதும் அவர்கள் உயிராக மதிக்கின்ற ஷரீஅத்தில் கை வைப்பதும் அவர்களின் முக்கிய அடையாளச் சின்னங்களை கைப்பற்றி அதன் மூலம் நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவதும் தான்.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வையும்காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் முகமாக ஒவ்வொரு காரியங்களும் சிறிய சிறிய இடைவெளிக்குப் பின் ஒன்றன் பின் ஒன்றாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகின்றோம். ஒரு விஷயம் நடந்து அது பூகம்பமாக வெடித்து அதற்காக ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் விவாதங்களும் நடந்து முடிவதற்குள் அடுத்த விஷயம். அதைப்பற்றி பேசி முடிப்பதற்குள் அடுத்த விஷயம். இப்படி தன் தோல்வியை மறைப்பதற்காக மத்திய அரசாங்கம் ஒவ்வொரு விஷயங்களையும் மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னால் ஹிஜாப் பிரச்சனையைக் கொண்டு வந்தார்கள். இப்போது இறை இல்லங்களை கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் கியான்வாபி என்ற மசூதிக்குள் தொழுகைக்காக ஒழு செய்யும் நீர் தடாகத்தின் மையப்பகுதியில் நீர் ஊற்றுக்காக வடவமைக்கப்பட்ட கல்லை சிவலிங்கம் என்று சொல்லி பாபர் மஸ்ஜிதுக்கு அடுத்து அந்த மஸ்ஜிதைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பனாக.

இது அவர்களின் நீண்ட கால திட்டம். இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் கட்டிய மஸ்ஜித்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் ஒவ்வொன்றின் மீதும் இந்துத்துவா அமைப்புகள் வழக்குகள் தொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதில், உத்தரப் பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மஸ்ஜித், மதுராவின் ஷாயி ஈத்கா மஸ்ஜித், ஆக்ராவின் தாஜ்மகால் மற்றும் டெல்லியில் இருக்கிற ஜாமா மஸ்ஜித் உள்ளிட்டவற்றின் வரிசையில் டெல்லியின் குதுப்மினாரும் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசின் தொல்லியல் துறையில் (எஸ்ஐயில்) பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான தரம்வீர் சர்மா, புதிதாக ஒரு சர்ச்சைக்குரியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "குதுப்மினார் கோபுரம், டெல்லியின் சுல்தான்களில் ஒருவரான குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டது இல்லை" விக்ரமாதித்யாவின்  சூரிய கோபுரம் அது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் உயிராக மதிக்கிற ஷரீஅத்தை அழிப்பதற்கும் நம் அடையாளச் சின்னங்களையும் நம்மிடமிருந்து பறிப்பதற்கும் முயற்சிக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிற இவ்வேளையில் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கியான்வாபி மஸ்ஜித், மதுராவின் ஷாயி ஈத்கா மஸ்ஜித், தாஜ்மஹால்,குதுப்மினாரோடு நின்று விடாது. இன்னும் அடுத்தடுத்து இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு மஸ்ஜித்களிலும் கை வைப்பார்கள். அதற்குள் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.  

எல்லா நேரத்திலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِيْعًا‏

நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள். (அல்குர்ஆன் : 4:71)

இஸ்லாம் விழிப்புணர்வு மார்க்கம் விழிப்புணர்வை தூண்டுகின்ற மார்க்கம். எப்போதும் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று கற்றுத் தருகின்ற மார்க்கம். ஒரு முஸ்லிம் நிகழ்காலத்தோடு மட்டும் தன் வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளாமல் வருங்காலத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டும். தூரநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். வரும் காலங்களில் நடக்கயிருக்கிற பிரச்சனைகளை இப்போதே யூகித்து அதற்கான திட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்க வேண்டும்.

இஸ்லாம் என்பது வெறும் வணக்கங்களை மட்டுமே கற்றுத்தரும் மார்க்கமல்ல.எப்படி தொழ வேண்டும் எப்படி நோன்பு வைக்க வேண்டும், எப்படி ஹஜ் செய்ய வேண்டும் என்று வணக்கவியலை மட்டுமே கொண்ட மார்க்கமல்ல. அப்படி வணக்கங்களை மட்டுமே சொல்லித் தந்திருந்தால் இன்றைக்கு உலகில் இஸ்லாம் இந்தளவு விரிவடைந்திருக்காது, வெற்றி பெற்றிருக்காது. இஸ்லாம் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் மனித உள்ளங்களை தன் ஈர்பதற்கும் முக்கிய காரணமே இஸ்லாத்தில் எல்லாம் இருக்கிறது என்பது தான். பிறப்பு முதல் இறப்பு வரை நகம் வெட்டுவது முதல் நாடாளுகின்ற வரை அனைத்திற்கும் வழிகாட்டுதல் இஸ்லாத்தில் உண்டு. இஸ்லாத்தில் இல்லாத விஷயங்களே உலகத்தில் இல்லை.

அந்த அடிப்படையில் வெறுமனே வணக்கங்களை மட்டும் கற்றுத் தராமல் தூரநோக்கு சிந்தனை, எதிர்காலத்திற்கான திட்டமிடல், வரும் காலங்களில் நம்மை நோக்கி வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளுதல், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான நகர்வு என எல்லாவற்றையும் இஸ்லாம் கற்றுத் தந்திருக்கிறது. ஒரு முஸ்லிம் என்றைக்கும் தூர நோக்குச் சிந்தனையோடு இருக்க வேண்டும். வருங்காலத்திற்கான திட்டமிடலோடு வாழ்க்கையில் பயணிக்க வேண்டும். எதைச் செய்தாலும் அதன் மூலம் வருகின்ற லாப நஷ்டங்களை வெற்றி தோல்விகளை பிளஸ் மைனஸ்களை யோசித்துச் செய்ய வேண்டும்.

இதற்கு முதல் முன்மாதிரியே நபி ஸல் அவர்கள் தான். வரலாற்றில் நடந்த இரண்டு நிகழ்வுகள் இதற்கு சான்று. ஒன்று நபி ஸல் அவர்கள் ஹயாத்தாக இருக்கும் போது நடந்தது. இன்னொன்று நபி ஸல் அவர்களின் மறைவுக்குப் பின் நடந்தது.

 أن عائشةَ قالت: لما استُعزَّ برسولِ الله صلى الله عليه وسلم قال: ((مُروا أبا بكرٍ فلْيُصل بالناس، قالت: قلت: يا نبيَّ الله، إن أبا بكر رجلٌ رقيقٌ، ضعيفُ الصوت، كثيرُ البكاء، إذا قرأ القرآن! قال: ((مُروه فليُصلِّ بالناس))، قالت: فعُدتُ بمثلِ قولي، فقال: ((إنكن صواحبُ يوسف، فمُرُوه فليصلِّ بالناس))،

நபி ஸல் அவர்களின் மரண நேரம் நெருங்கிய போது ஆயிஷா ரலி அவர்களை அழைத்து அபூபக்கர் ரலி அவர்களை எனக்குப் பதிலாக மக்களுக்கு தொழ வைக்கும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு ஆயிஷா ரலி அவர்கள், இல்லை, என் தந்தை இலகிய மனம் கொண்டவர். நீங்கள் நின்ற இடத்தில் நின்று தொழ வைக்கும் தைரியமும் துணிச்சலும் அவர்களுக்கு இல்லை என்று சொன்னார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் அபூபக்கர் ரலி அவர்கள் தான் தொழுகை நடத்த வேண்டும் என்று உறுதியாக சொல்லி விட்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

இன்னொரு நிகழ்வு, நபி ஸல் அவர்கள் உலகத்தை விட்டு பிரிந்து விடுகிறார்கள். அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் இடத்திலிருந்து ஆட்சிப் பொறுப்பை கவனிப்பது யார், அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர்வது யார், கலீபாவாக அடுத்து யாரை நியமிப்பது என்ற பிரச்சனை எழுகிறது. ஏனென்றால் நபி ஸல் அவர்கள் தனக்குப் பிறகு இவர்தான் கலீபாவாக வருவார் என்று யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல வில்லை. எனவே யாரை நியமிப்பது என்று சஹாபாக்கள் யோசிக்கிறார்கள். அந்த பொறுப்புக்கு வருவதற்கு தகுதியான நிறைய சஹாபாக்கள் இருக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் நபி ஸல் அவர்களால் முதன்மை படுத்தப்பட்ட நிறைய ஸஹாபாக்கள் இருக்கிறார்கள், குறிப்பாக உற்ற தோழராக இருந்ததோடு மட்டுமின்றி நபியைக் கொண்டு ஈமான் கொண்ட முதல் மனிதரான ஹள்ரத் அபுபக்கர் ரலி அவர்கள் இருக்கிறார்கள். அவரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி ஸல் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட, அவர்கள் முன்மொழிந்த பல்வேறு விஷயங்களை மார்க்கச் சட்டமாக அல்லாஹ் இயற்றும் அளவிற்கு இறை நெருக்கத்தை பெற்ற உமர் ரலி அவர்கள் இருக்கிறார்கள், நபி ஸல் அவர்களின் இரு மகள்களை திருமணம் முடித்து தின்னூரைன் இரு ஒளியை உடையவர் என்று சொல்லப்பட்ட உஸ்மான் ரலி அவர்கள் இருக்கிறார்கள், நான் அவரைச் சார்ந்தவன், அவர் என்னைச் சார்ந்தவர் என்று சொல்லும் அளவுக்கு நபியின் நெருக்கத்தைப் பெற்ற ஹள்ரத் அலி ரலி அவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் நபியின் நெருக்கத்தை பெற்றவர்கள் தான். அந்த பொறுப்புக்கு வருவதற்கு தகுதியானவர்கள் தான். இருந்தாலும் யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் நிலவியது. ஆனால் ஒரு கட்டத்தில் எல்லோரும் அபுபக்கர் ரலி அவர்களைத் தான் முன்மொழிந்தார்கள். அதற்கு மிக முக்கியமான காரணம் அந்த முந்திய  நிகழ்வு தான்.

تقدم أبو عبيدة بن الجراح الأمين رضي الله عنه وقال: لا ينبغي لأحد بعد رسول الله صلى الله عليه وسلم أن يكون فوقك يا أبا بكر، أنت صاحب الغار مع رسول الله صلى الله عليه وسلم، وثاني اثنين، وأمّرك رسول الله صلى الله عليه وسلم حيث اشتكى فصليت بالناس، فأنت أحق الناس بهذا الأمر؟

அபூ உபைதா ரலி அவர்கள் எழுந்து நின்று அபூபக்கர் சித்திக் ரலி அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதருக்குப் பிறகு உங்களை விட சிறந்தவர் யாருமில்லை. ஏனென்றால் ஸவ்ர் குகையில் நபி ஸல் அவர்களோடு நீங்கள் தான் இருந்தீர்கள். நபி ஸல் அவர்கள் தொழ வைக்க முடியாத அந்த நிலை ஏற்பட்ட போது உங்களைத்தான் தொழ வைக்கும்படி உத்தரவிட்டார்கள். எனவே இந்த ஆட்சி பொறுப்பிற்கு நீங்கள் தான் தகுதி என்று கூறினார்கள்.

أن عمر بن الخطاب رضي الله عنه قال للناس: ألستم تعلمون أن رسول الله صلى الله عليه وسلم قدّم أبا بكر للصلاة؟ قالوا: بلى. قال: فأيكم تطيب نفسه أن يتقدم مَن قدّمه رسول الله صلى الله عليه وسلم؟ قالوا: لا أحد، معاذ الله أن نتقدم على أبي بكر.

உமர் ரலி அவர்கள் கூறினார்கள் ; நபி ஸல் அவர்கள் தனக்குப் பிறகு தொழுகை நடத்துவதற்கு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களைத் தான் முற்படுத்தினார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? ஆம் என்று மக்கள் பதில் சொன்ன போது நபி ஸல் அவர்களால் முற்படுத்தப்பட்ட ஒருவரை விட முந்தி செல்வதற்கு உங்களில் யாருடைய மனம் இடம் கொடுக்கும் என்று கேட்டார்கள்.

 قال عليٌّ رضي الله عنه: لَمَّا قُبِض رسول الله صلى الله عليه وسلم، نظَرْنا في أمرِنا، فوجدنا النبي صلى الله عليه وسلم قد قدَّم أبا بكرٍ في الصلاة، فرضِينا لدُنيانا مَن رضي رسولُ الله لدِينِنا؛ فقدَّمنا أبا بكرٍ[

நபி ஸல் அவர்கள் உலகத்தை விட்டு பிரிந்த போது அடுத்து அந்த பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்று நாங்கள் யோசித்தோம். அப்போது அபுபக்கர் சித்திக் ரலி அவர்களைத்தான் அந்தப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். ஏனெனில் அவர்களைத்தான் நபி ஸல் அவர்கள் தன் இடத்தில் நின்று தொழுகை நடத்தும்படி ஏற்படுத்தினார்கள். எங்களுடைய தீன் விஷயத்தில் பெருமானார் ஸல் அவர்களால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஒருவரையே நாங்கள் எங்களுடைய துன்யாவிற்கும் பொருந்திக் கொண்டோம் என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் பொருத்திப் பார்த்தால் நபி ஸல் அவர்களின் தீட்சன்யமான பார்வையும் தூரநோக்குச் சிந்தனையும் நமக்குத் தெரியும்.பலமுறை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் என் தந்தை அபூபக்கர் அவர்களை தொழ வைக்கச் சொல்ல வேண்டாம். அவரால் தொழ வைக்க முடியாது என்று சொல்லியும் அவர் தான் தொழ வைக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் உறுதியாக சொன்னதற்கு காரணம்.என் மறைவிக்குப் பின்னால் என் இடத்தில் அவர் தான் நிற்க வேண்டும்,கிலாஃபத்திற்கு அவர் தான் வர வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தி விட்டார்கள். ஒரு வேலை அப்படி ஒரு நிகழ்வு நடக்க வில்லையென்றால் கலீஃபாவை தேர்ந்தெடுப்பதில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும்.பின்னால் அப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை முன்கூட்டியே சிந்தித்ததின் விளைவாகத்தான் நபி ஸல் அவர்கள் ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களை தொழுகைக்கு நிறுத்தினார்கள் என்பதை பார்க்கிறோம். எதிலும் தூரநோக்குச் சிந்தனை, தெளிவான சீரிய பார்வை வேண்டும் என்பதைத்தான் நபியின் இந்த அணுகுமுறை நமக்கு உணர்த்துகிறது. எனவே இந்த நேரத்தில் நமக்கு தூர நோக்கு சிந்தனையும் விழிப்புணர்வும் வேண்டும்.

அதேபோன்று எப்போதும் யாராலும் நாம் ஏமாற்றப்பட்டு விடக் கூடாது.நிறைய ஏமாற்றுக் காரர்களையும் மோசடிக்காரர்களையும் கொண்ட உலகம் இது. எனவே யாருடைய பேச்சைக் கேட்டும் ஒரு முஸ்லிம் ஏமாந்து நிற்கக்கூடாது. மிக கவனத்தோடும் உஷாரோடும் இருக்க வேண்டும்.

اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ‌ۘ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ  وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَـكٰذِبُوْنَ‌ ‏

“(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்என்பதாகச் சாட்சி சொல்கிறான். (அல்குர்ஆன் : 63:1)

ஒருவரின் வெளிப்படையான பேச்சைக் கேட்டு ஏமாந்து விடக்கூடாது என்பதை இந்த வசனத்தின் வழியாக அல்லாஹ் கோடிட்டுக் காட்டுகிறான்.

பிறரை ஏமாற்றக்கூடாது, பிறர் உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்று கற்றுத் தரும் இஸ்லாம் பிறரிடத்தில் ஏமாந்து விடக்கூடாது. நம் உரிமைகளை விட்டுத் தரக்கூடாது என்றும் கூறுகிறது.

في زمن سيدنا عمر بن الخطاب، رضي الله عنه، شكت إليه امرأة مسيحية مصرية عمرو بن العاص، والي مصر آنذاك، بأنه أدخل عنوة دارها في مسجد تمت إقامته إلى جانب دارها، حيث سأل واليه في مصر عن ذلك؛ فرد عليه قائلاً إن المسلمين كثروا وأصبح المسجد يضيق بهم، وفي جواره دار هذه المرأة، وقد عرض عليها عمرو بن العاص ثمن دارها وبالغ في الثمن فلم ترض أن تتنازل عن دارها لأجل ضمها للمسجد، ما اضطر عمرو إلى هدم دارها عنوة، وإدخالها في المسجد، ووضع قيمة الدار في بيت المال لتأخذها متى شاءت، وإذا شاءت أيضاً

سيدنا عمر بن الخطاب لم يرض بذلك، وأمر عمرو بن العاص أن يهدم البناء الجديد من المسجد، ويعيد إلى المرأة المسيحية دارها كما كانت،

உமர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் மிஸ்ர் தேசத்தை வெற்றி கொண்ட நேரத்தில் அந்த நாட்டின் முதல் ஆட்சியாளராக அம்ர் பின் ஆஸ் ரலி அவர்கள் பொறுப்பேற்றார்கள். அங்கே அவர்கள் மக்கள் தொழுவதற்கு ஒரு பள்ளியை கட்ட நினைத்தார்கள். அங்கே ஒரு கிருத்துவ பெண்மணியின் வீடு பள்ளி கட்டுவதற்கு இடையூறாக இருந்தது. அந்த வீட்டையும் இணைத்துக் கொண்டால் தான் விசாலமான ஒரு மஸ்ஜிதை கட்டி எழுப்ப முடியும். எனவே அந்தப் பெண்மணியிடத்தில் மஸ்ஜிதை கட்டுவதற்கு உன் வீடு தடையாக குறுக்கே நிற்கிறது. எனவே உன் வீட்டை எங்களுக்கு கொடுத்து விடு. அதற்குரிய விலையை நான் கொடுத்து விடுகிறேன் என்ற போது, இல்லை அதை நான் பராமரித்துக் கொண்டிருக்கிற யதீம்களுக்கான ஒரு சொத்து. எனவே அதை விட்டு தர முடியாது என்று கூறிவிட்டாள். ஆனால் வேறு வழியில்லை. அந்த பெண்மணி இருக்கும் அந்த இடத்தை இணைக்காமல் விசாலமான மஸ்ஜிதை கட்டி எழுப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அமர் பின் ஆஸ் ரலி அவர்கள் அந்தப் பெண்மணியின் அனுமதியின்றி அந்த வீட்டை பள்ளியோடு இணைத்து விட்டார்கள். அதற்குரிய தொகையை பைத்துல் மாலில் தனியாக வைத்து விட்டார்கள். அவள் எப்போது நினைத்தாலும் அந்த தொகையை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறி விட்டார்கள். ஆனால் அந்த பெண்மணி மதினாவிற்கு வந்து உமர் பின் கத்தாப் ரலி அவர்களை சந்தித்து தனக்கு நடந்த விஷயத்தை முறையிட்டாள். உடனே உமர் ரலி அவர்கள் அந்தப் பெண்மணியின் அனுமதியின்றி கட்டப்பட்ட மஸ்ஜிதை இடித்து விட்டு அவருடைய வீட்டை முன்பிருந்ததை போன்று மீண்டும் கட்டித்தர வேண்டும் என்று உத்தர விட்டார்கள்.(குலஃபாவுர் ரஸூல்)

தொழுகை நடத்தும் மஸ்ஜிதாகவே இருந்தாலும் அது பிறரின் உரிமைகளைப் பறித்தோ பிறரை ஏமாற்றியோ அதை கட்டியெழுப்பக் கூடாது என்பதை உலகிற்கு சொன்ன அதே உமர் ரலி அவர்கள் நாமும் யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது என்று உணர்த்தினார்கள்.

قال عمر لستُ بالخِبِّ ، و لا الخِبُّ يخدعُني

நான் பிறரை ஏமாற்றுபவனாகவும் இல்லை. பிறரிடம் ஏமாந்து போறவனாகவும் இல்லை என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.

நாம் யாரிடமும் மோசம் போய் விடக்கூடாது. ஏமாந்து போய் விடக்கூடாது. நான் அவரை ஏமாற்றி விட்டேன் என்று பிறர் சொல்லும் அளவுக்கு நாம் ஆளாகி விடக்கூடாது.

أبو عَزَّة الجُمَحي الشَّاعر، وكان يهجو النَّبِيَّ صلى الله عليه وسلم وأصحابه، ويؤذي الله ورسوله، وذلك أنه أُسر في غزوة بدر فيمن أُسر من المشركين، فَضَرع إلى النَّبِيِّ صلى الله عليه وسلم أن يعتقه دون فداء، وقال: يا محمد، إني فقير وذو حاجة قد عرفتها، فامنُن عليَّ لفقري وبناتي، فرقَّ الرسول وأطلقَه، بعد أن أخذ عليه الميثاق ألَّا يُظاهر عليه.

فلمَّا عاد إلى مكة أبى له لُؤْمُه وسُوءُ طويَّته إلا أن ينال من المسلمين بِشِعْرِه، وأن يطيعَ المشركين في الخروج إلى أُحد، واستنفار الأعداء لمحاربة النَّبيِّ صلى الله عليه وسلم وأصحابه.

ويشاء الله أن يقع أسيرًا في غزوة حمراء الأسد[4]، وهي التي استجاب المؤمنون فيها لله والرسول من بعدما أصابهم القرح، فعاد سيرته الأولى، يَضْرع ويشكو، ويقول للنَّبيِّ صلى الله عليه وسلم: امنُن عليَّ لفقري وبناتي، وأعاهدك ألَّا أعود لمثل ما فعلت.

فأجابه سيِّدُ الحكماء صَلَوات الله وسلامه عليه إجابته الخالدة: ((لا والله، لا تَمْسَح عَارضَيْك[5] بمكة، وتقول: خدعت محمدًا مرَّتين، لا يُلدغ المؤمن من جُحْر واحد مرتين، اضرب عنقه يا زيد

நபி ஸல் அவர்களின் காலத்தில் அபூ அஸ்ஸா என்ற ஒரு கவிஞன் இருந்தான். நபி ஸல் அவர்களையும் ஸஹாபாக்களையும் இகழ்ந்து பாடுவதையே வழமையாக கொண்டிருந்தான். நபி ஸல் அவர்களுக்கு பல்வேறு வகையான நோவினைகளைக் கொடுத்தவன். அவன் பத்ர் போர்க்களத்தில் கைதியாக பிடிபட்ட போது, நான் மிகவும் ஏழை. தேவையுடையவன். என் மீது கருணை காட்டுங்கள் என்னை விடுவித்து விடுங்கள் என்று பணிந்து சொன்ன பொழுது நபி ஸல் அவர்கள் அவன் மீது இரக்கம் கொண்டு இனிமேல் இஸ்லாமியர்களுக்கு எதிராக களம் இறங்க கூடாது என்ற ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டு அவனை விடுதலை செய்து விட்டார்கள். ஆனால் விடுதலையாகி மக்காவிற்கு சென்ற பிறகு மீண்டும் அவ்வாறே இஸ்லாமியர்களுக்கு எதிராக என் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தான். மட்டுமல்லாது தான் செய்த ஒப்பந்தத்தை மீறி உஹத் போர்களத்தில் மீண்டும் எதிரிகளோடு சேர்ந்து களம் இறங்கினான். உஹது போர் முடிந்து ஒரு நாள் அவன் கைதியாக பிடிபட்ட போது, மீண்டும் அதே போன்று முறையிட்டான். தன் ஏழ்மையையும் தன் தேவையை முன்னிறுத்தி தன்னை விடுதலை செய்து விடுமாறு சொன்னான். இந்த ஒரு தடவை என்னை மன்னித்து விடுங்கள். நான் மீண்டும் உங்களை எதிர்த்து நிற்க மாட்டேன் என்று சொன்னான். அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு மூமின் ஒரு பொந்தில் இருமுறை தீண்டப்பட மாட்டான். நான் இப்போதும் உன்னை விட்டு விட்டால் நான் முஹம்மதை இரண்டு தடவை ஏமாற்றி விட்டேன் என்று நீ சொல்வாய் என்று கூறி அவனைக் கொல்வதற்கு உத்தரவிட்டார்கள்.(பைஹகீ)

நாம் ஏமாறக்கூடாது என்பதோடு அவர்களை ஏமாற்றி விட்டேன் என்று பிறர் சொல்லும் அளவுக்கு கூட நாம் இருக்கக்கூடாது என்பதை நபி ஸல் அவர்கள் உணர்த்துகிறார்கள்.எனவே எப்போதும் நாம் விழிப்போடும் கவனத்தோடும் இருக்க வேண்டும்.

நபி ஸல் அவர்கள் களத்தில் இறங்கி போர் செய்தும் எதிரிகளை தோற்கடித்தார்கள். களத்தில் இறங்காமல் போர் வியூகங்களை அமைத்தும் எதிரிகளை தோற்கடித்தார்கள். இதற்கு கன்தக் போர்க்களம் சிறத்த உதாரணம்.

அந்த மாதிரி நாமும் நமக்கான வியூகங்களை அமைத்து திட்டங்களை அமைத்து சத்தமில்லாமல் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் நாம் மிகவும் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருந்து நம் ஷரீஅத்தையும் இஸ்லாத்தின் மேலான அடையாளச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.  

No comments:

Post a Comment