சமீப காலமாக நம் இஸ்லாமியக் குடும்பங்களில் பிரச்சனைகள் சண்டைகள் குடும்பத் தகராறுகள் குறிப்பாக விவாகரத்துக்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்துக்கள் சர்வசாதாராணமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
நம் நாட்டில் வாழக்கூடிய மக்களில் அமைதியான குடும்ப வாழ்க்கைக்கும் அமைதியான குடும்ப சூழலுக்கும் அதிக பிரச்சனைகள் இல்லாத, அதிக குடும்ப தகராறுகள் இல்லாத குடும்ப முறைக்கும் சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள் தான். நாட்டினுடைய குடும்ப நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் விவாகரத்து வழக்குகளில் மிக மிக குறைவாக பதிவாயிருப்பது முஸ்லிம் சமூகத்தினுடைய வழக்குகள் தான் என்பது கடந்த காலத்தினுடைய வரலாறு. ஆனால் இன்றைக்கு வீட்டுக்கு வீடு விவாகரத்துக்கள் பெருகிக் கொண்டே வருகிறது. மாதத்திற்கு 2 அல்லது 3 குடும்ப பஞ்சாயத்துகள் பள்ளிவாசலுக்கு வருவது வாடிக்கையாகிப் போனது. திருமணமாகி 2 வருடங்களில், சில குடும்பங்களில் 2 மாதங்களில் கணவன் மனைவிக்கான உறவு கசந்து போய் விடுகிறது. இந்த நேரத்தில் நம் குடும்பங்களில் அதிகமாக மணமுறிவுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன அதற்கான தீர்வு என்ன என்று யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.பொதுவாக மனிதர்களுக்கு தான் விரும்பிய துணையை
தேர்வு செய்து முறையாக திருமணம் செய்து சேர்ந்து வாழ்வதற்கு உரிமைகள்
வழங்கப்பட்டிருப்பதைப் போன்றே ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ முடியாத நிர்பந்த நிலை
ஏற்படுகின்ற போது பிரிந்து கொள்வதற்கான உரிமைகள் கணவன் மனைவி இருவருக்கும்
வழங்கப்பட்டிருக்கிறது.அந்த அடிப்படையில் தான் இஸ்லாம் தலாக்கை
அறிமுகப்படுத்தியது.பிரிந்து வாழும் உரிமைக்காக வழங்கப்பட்டிருந்தாலும் இஸ்லாம்
தலாக்கை கடுமையாக எச்சரிக்கிறது.
أنَّ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ
أُخبِرَ عن رجلٍ طلَّقَ امرأتَه ثلاثَ تطليقاتٍ جميعًا فقامَ مُغضَبًا ثمَّ قالَ أيُلعَبُ
بِكتابِ اللَّهِ وأنا بينَ أظهُرِكم
ஒரு மனிதர் தன் மனைவியை மூன்று முறை தலாக்
சொல்லி விட்டார் என்று நபி ஸல் அவர்களுக்கு செய்தி சொல்லப்பட்ட போது கோபத்தில்
எழுந்து நான் உங்களுக்கு மத்தியில் இருக்கின்ற நிலையில் அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு
விளையாடுகிறாரா என்று கேட்டார்கள். (ஜாதுல் மஆத் ; 220/5)
أبغضُ الحلالِ إلى اللهِ الطلاقُ
ஆகுமாக்கப்பட்ட காரியங்களில் அல்லாஹ்விடம்
மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் விஷயம் தலாக்காகும். (இப்னுமாஜா ; 394)
கணவன் மனைவிக்கிடையில் ஏதோ காரணத்தினால் மனக்கசப்பு
ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் ஒன்றாக பயணிக்க முடியாத நிர்பந்த நிலை
வருகிற போது இருவரும் பிரிந்து வேறொரு வாழ்க்கையை தேர்வு செய்யலாம் என்று
ஆசைப்படுவார்கள். பிரிவதற்கு அனுமதியில்லை யென்றால் மனம் நொந்து கொண்டே காலம்
முழுக்க வாழ வேண்டிய நிலை ஏற்படும். அதை தவிர்ப்பதற்குத்தான் இக்கட்டான
சூழ்நிலையில் தலாக் விடுவதற்கு இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. ஆனால் இன்றைக்கு
தகுந்த காரணங்களோ நிர்பந்தங்களோ எதுவுமின்றி சாதாரணமாக தலாக் என்ற முடிவுக்கு போய்
விடுகிறார்கள். அதுவும் இன்றைக்கு பெண்களாக விரும்பி கேட்கின்ற குலாக்கள்
சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.
أيما امرأةٍ سألت زوجها طلاقًا من غير بأسٍ، فحرامٌ
عليها رائحةُ الجنةِ
தகுந்த காரணமின்றி எந்த பெண்மனி தன் கணவரிடம்
விவாகரத்தைக் கேட்கிறாளோ அவளின் மீது சுவனத்தின் வாடை தடுக்கப்பட்டு விடும். (திர்மிதி ; 1187)
இஸ்லாம் தலாக்கை வன்மையாக கண்டிக்கிறது.அது மிகப்பெரும்
குற்றமாக வர்ணிக்கிறது. இருந்தாலும் நம் சமூகத்தில் தலாக் அங்கொன்றும்
இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த காலம் மாறி இப்போது வீடுகள் தோறும் சாதாரணாக
நடந்து கொண்டிருக்கிறது. தலாக் என்ற கொடுமையாக சட்டத்தின் மூலம் இஸ்லாம் பெண்களை
அடிமைப்படுத்துகிறது. அவர்களின் உரிமைகளை பறிக்கிறது.அவர்களின் உள்ளங்களை காயப்படுத்துகிறது.
அவர்களின் வாழ்க்கையை அழிக்குறது என்று குற்றச்சாட்டு வைக்கப்படும் அளவிற்கு
இன்றைக்கு தலாக்குகள் பெருகி விட்டது.
மனமான வாழ்க்கை கசந்து போவதற்கும் நிகாஹ்வில்
தொடங்குகிற வாழ்க்கை சீக்கிரமே தலாக்கில் போய் முடிவதற்கும் என்ன காரணம் என்பதை
ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.தலாக் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.
அதில் முதல் காரணம்.இன்றைக்கு மனவாழ்க்கையில் இணைகின்ற ஜோடிகள் தகுதி பார்த்து தராதரம் பார்த்து இணைக்கப்படுவதில்லை.
تُنْكَحُ المَرْأَةُ لأرْبَعٍ: لِمالِها،
ولِحَسَبِها، وجَمالِها، ولِدِينِها، فاظْفَرْ بذاتِ الدِّينِ، تَرِبَتْ يَداكَ
ஒரு பெண்மனி அவளுடைய பொருளாதாரம், அவளுடைய குடும்ப பாரம்பரியம், அவளுடைய அழகு,
அவளுடைய மார்க்கம் இந்த நான்கிற்காக மணமுடிக்கப்படுகிறாள். நீ மார்க்கமுடைய பெண்ணைக் கொண்டு வெற்றி பெற்றுக் கொள்.உன் கரங்களை
அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள். (புகாரி ; 5090)
நீங்கள் மார்க்கமுடைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க
வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிற காரணத்தினால் மற்ற விஷயங்களைப் பார்க்க கூடாது,
எதிர் பார்க்கக்கூடாது என்ற அர்த்தமல்ல. நான்கு நோக்கங்களைப் பார்த்து பொதுவாக மக்கள்
பெண்ணை தேர்வு செய்வார்கள். அதில் நீங்கள் முக்கியமாக மார்க்கத்தைப் பாருங்கள். மற்ற
மூன்று விஷயங்களை விட மார்க்கம் தான் முதன்மையாக பார்க்கப்பட வேண்டும் என்பது தான்
இந்த ஹதீஸின் பொருள். பொருளையோ குடும்ப பாரம்பரியத்தையோ அழகையோ பார்க்கக்கூடாது
என்ற தடை இந்த ஹதீஸில் இல்லை.
மார்க்கத்தோடு சேர்த்து மற்ற விஷங்களையும் பார்ப்பது
நல்லது என்பதை நபி ஸல் அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.
أن معاوية بن أبي سفيان وأبا جهم خطباني
فقال رسول الله صلى الله عليه وسلم أما أبو جهم فلا يضع العصا عن عاتقه وأما معاوية
فصعلوك لا مال له أنكحي أسامة بن زيد فكرهته ثم قال أنكحي أسامة بن زيد فنكحته فجعل
الله فيه خيراً واغتبطت
முஆவியா ரலி அபூஜஹ்ம் ரலி ஆகிய இருவர் என்னைப்
பெண் கேட்கிறார்கள். நான் யாரை மணமுடிப்பது என்று ஃபாத்திமா பின்த் கைஸ் ரலி
அவர்கள் நபி ஸல் அவர்களிடம் வந்து கேட்ட போது முஆவியா பணம் இல்லாத ஏழை. அபூஜஹ்ம்
கோபக்காரர். சட்டென்று கை ஓங்கி விடுவார். எனவே நீ உஸாமாவை மணமுடித்துக் கொள்
என்று ஆலோசனை வழங்கினார்கள். உஸாமாவை எனக்கு பிடிக்க வில்லை. என்றாலும் நான் மணமுடித்துக்
கொண்டேன், அல்லாஹ் அதில் எனக்கு நலவை வைத்திருந்தான். மற்ற பெண்கள் பார்த்து பொறாமைப
படும் அளவிற்கு என் வாழ்க்கை அமைந்தது என்று ஃபாத்திமா பின்த் கைஸ் ரலி அவர்கள்
கூறுகிறார்கள்.(அபூதாவூது ; 2284)
மணவாழ்க்கை சிறப்பாக அமையை பொருளும் தேவை என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.
எனவே மார்க்கத்தோடு சேர்த்து மற்ற விஷயங்களையும் பார்க்கலாம். இருந்தாலும் கொஞ்சம்
பொருந்துகின்ற அமைப்பில் இருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்களில் இருவருக்குமிடையில் ஒரளவிற்கு
பொருத்தம் ஏற்பட வேண்டும்.
يَا عَلِيُّ، ثَلاثٌ لا تُؤَخِّرْهَا، الصَّلاةُ
إِذَا آنَتْ، وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ، وَالأيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْئًا المصدر : ضعيف الترمذي.
நபி ﷺ அவர்கள் ஹள்ரத் அலி ரலி அவர்களைப் பார்த்து சொன்னார்கள்
; மூன்று விஷயங்களை
பிற்படுத்தாதே. 1, நேரம் வந்து விட்டால் தொழுகையை. 2, மரணித்து விட்டால் அடக்கம் செய்வதை. 3, பெண்ணிற்கு பொருத்தமான ஜோடி அமைந்து விட்டால் மணமுடிப்பதை.
(திர்மிதி : 1075)
تَخَيَّرُوا لِنُطَفِكُمْ، وَانْكِحُوا
الأكْفَاءَ، وَأَنْكِحُوا إِلَيْهِمْ
உங்களின் இந்திரியத்துளிக்கு தகுந்த பெண்களை
தேர்வு செய்து கொள்ளுங்கள். பொருத்தானவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். பொருத்தானவர்களையே
மணமுடித்து வைய்யுங்கள். (ஹாகிம் ; 2687)
பொருத்தமானவர்கள் என்பதற்கு குடும்ப
பாரம்பரியத்திலும் அந்தஸ்திலும் வசதிகளிலும் உங்களுக்கு பொருத்தமானவர்களை
மணமுடிக்க வேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
ஒன்றுமே வசதியில்லாத அன்றாடம் சாப்பாட்டுக்குக்
கூட வழியில்லாத ஒருவனுக்கு மிகப்பெரும் செல்வம் படைத்த ஒரு செல்வச் சீமாட்டியை
மனமுடித்து வைத்தால் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போய் விடும்.அறவே
அழகில்லாத பங்கரையான தோற்றமுள்ள ஒருவனுக்கு ஊரிலேயே மிகப்பெரும் அழகியாக இருக்கிற
ஒரு அழகு சுந்தரியை மனமுடித்து வைத்தால் அவர்களுக்கு மத்தியில் வாழ்க்கையில்
கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஊரிலேயே ஆக மோசமான குடும்பத்தைச்
சார்ந்த ஒருவனுக்கு மிக உயர்ந்த குடும்பத்து பெண்ணை மனமுடித்து வைத்தால்
அவர்களுக்குள் ஒத்துப் போகாது. மழைக்குக் கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத கையெழுத்தைக்
கூட சரியாக போடத்தெரியாத ஒருவனுக்கு நிறைய படித்து எண்ணற்ற பட்டங்களைப் பெற்ற ஒரு
பட்டதாரிப் பெண்ணை மனமுடித்து வைத்தால் அவர்களுக்குள் இணக்கம் ஏற்படாமல் பிரச்சனைகள்
வர வாய்ப்பிருக்கிறது. எனவே இருவருக்கும் மத்தியில் கொஞ்சமாவது ஒத்துப் போக
வேண்டும்.
மகனுக்கு பெண்ணைத் தேடுகின்ற பெற்றோர்கள்,
மகளுக்கு மாப்பிள்ளை தேடுகின்ற பெற்றோர்கள் இதை முக்கியமாக கவனத்தில் கொள்ள
வேண்டும்.ஏனென்றால் இன்றைக்கு அதிகமாக மணவாழ்க்கை தலாக்கில் போய் முடிவதற்கு
காரணம் பொருத்தமில்லாமல் இணைக்கப்பட்டு திருமணம் முடிக்கப்படுகின்ற காரணத்தினால்
தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மணவாழ்வில் அடியெடுத்து வைக்கிற மணமக்கள்
எப்படி இருக்க வேண்டும் அவர்கள் எந்த அடிப்படையில் இணைய வேண்டும் என்பதை அல்லாஹ் هن لباس لكم وانتم لباس لهن அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை என்ற ஒற்றை வரியில்
தெளிவுபடுத்தி விட்டான்.நாம் ஆடையைத் தேர்வு செய்கின்ற போது நம் உடலுக்கும் நம்
அந்தஸ்துக்கும் நம் சூழ்நிலைக்கும் தோதுவாகத்தான் தேர்வு செய்வோம்.அதே போன்று தான்
திருமணத்தில் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான் அல்லாஹ்
ஆடையை மணமக்களுக்கு உதாரணமாக கூறுகிறான்.
எனவே திருமணத்தில் பொருத்தம் மிக
முக்கியமானது.பொருத்தமான அமைப்பில் மணமக்கள் இணைக்கப்பட வேண்டும்.அப்படி ஒரு வேளை
பொருத்தமில்லாமல் அமைந்து விட்டாலோ அல்லது எதோ வகையில் மனைவியின் குணம் பிடிக்க
வில்லையென்றாலோ அல்லது ஏதாவது பிரச்சனை என்றாலோ அங்கே அவசரப்படாமல் நிதானமாக அதை
கையாள வேண்டும்.அவளின் மூலம் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் அதை
பொறுத்துக் கொள்ள வேண்டும். அதில் நன்மைகள் அதிகம்.
زوج أبو بكر ابنته أسماء للزبير بن العوام،
والزبير رجل مشغول بالجهاد، ومع النبي ﷺ، وشديد الغيرة، فاشتكت أسماء، فقال:
"يا بنية اصبري، فإن المرأة إذا كان لها زوج صالح، ثم مات عنها، فلم تتزوج بعده
جُمع بينهما في الجنة"
அபூபக்கர் ரலி அவர்கள் தன் மகள் அஸ்மா ரலி அவர்களை
ஜுபைர் பின் அவாம் ரலி அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள். அவர் அதிகம் போருக்கு
சென்று விடுவார். அதிகம் ரோஷமுள்ளவராகவும் இருக்கிறார் என்று அஸ்மா ரலி அவர்கள்
தன் தந்தையிடம் முறையிட்ட போது மகளே நீ பொறுமையாக இரு என்று உபதேசித்தார்கள்.
வாழ்க்கையில் பொறுமை ரொம்ப முக்கியம்.ஆணுக்கோ
பெண்ணுக்கோ பொறுமையில்லாமல் போய்விடுகிற காரணத்தினால் பல குடும்பங்களில் சின்ன
சின்ன பிரச்சனைகளும் பூதாகரமாக வெடித்து அதன் மூலம் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்து
விடுகிறது.தலாக் ஏற்படுவதற்கான இரண்டாவது காரணம் பொறுமையின்மை.இன்றைக்கு நிறைய ஆண்கள்
ஆண் என்ற கர்வத்தில் நான் எதற்கு பொறுமையாக இருக்க வேண்டும். நான் எதற்கு அடங்கிப்
போக வேண்டும் என்று துள்ளிக் குதிக்கிற காரணத்தினால் ஏற்படுகின்ற விளைவு தான்
தலாக். ஆனால் உண்மையில் ஆண்கள் என்ன தான் பெண்களை விட வீரமானவர்களாக பலம்
மிக்கவர்களாக உயர்ந்தவர்களாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வருகின்ற போது
தன் பலத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் ஆண்களை விட அடங்கிப் போகும்
ஆண்களைத்தான் இஸ்லாம் பாராட்டுகிறது.மனைவியிடத்தில் கணவன் சில நேரங்களில்
தோற்றுப்போக வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
عن عائشة رضي الله عنها أنها كانت مع النبي
صلى الله عليه وسلم في سفر. قالت: فسابقته فسبقته على رجلي، فلما حملت اللحم سابقته
فسبقني. فقال: "هذه بتلك السبقة"
ஒரு பயணத்தில் சென்ற போது நானும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களும் ஒட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன். பின்னர் நான்
உடல் பருமனாக ஆன போது மற்றொரு முறை நடந்த ஒட்டப் பந்தயத்தில் அவர்கள் என்னை முந்தி
விட்டார்கள். அப்போது அதற்கு இது சரியாகி விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்
என ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள். (அபூதாவூத் ; 2214)
أَنَّ رَجُلًا جَاءَ إلَى عُمَرَ يَشْكُو
إلَيْهِ خُلُقَ زَوْجَتِهِ، فَوَقَفَ بِبَابِهِ يَنْتَظِرُهُ، فَسَمِعَ امْرَأَتَهُ
تَسْتَطِيلُ عَلَيْهِ بِلِسَانِهَا وَهُوَ سَاكِتٌ لَا يَرُدُّ عَلَيْهَا، فَانْصَرَفَ
الرَّجُلُ قَائِلًا: إذَا كَانَ هَذَا حَالَ أَمِيرِ الْمُؤْمِنِينَ عُمَرَ بْنِ الْخَطَّابِ.
فَكَيْفَ حَالِي؟ فَخَرَجَ عُمَرُ فَرَآهُ مُوَلِّيًا، فَنَادَاهُ: مَا حَاجَتُك يَا
أَخِي؟ فَقَالَ : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ جِئتُ أَشْكُو إلَيْك خُلُقَ زَوْجَتِي
وَاسْتِطَالَتَهَا عَلَيَّ، فَسَمِعْتُ زَوْجَتَكَ كَذَلِكَ فَرَجَعْت، وَقُلْت: إذَا
كَانَ هَذَا حَالَ أَمِيرِ الْمُؤْمِنِينَ مَعَ زَوْجَتِهِ. فَكَيْفَ حَالِي؟ فَقَالَ
لَهُ عُمَرُ: إنَّمَا تَحَمَّلْتُهَا لِحُقُوقٍ لَهَا عَلَيَّ: إنَّهَا طَبَّاخَةٌ
لِطَعَامِي، خَبَّازَةٌ لِخُبْزِي، غَسَّالَةٌ لِثِيَابِي، رَضَّاعَةٌ لِوَلَدِي، وَلَيْسَ
ذَلِكَ بِوَاجِبٍ عَلَيْهَا، وَيَسْكُنُ قَلْبِي بِهَا عَنْ الْحَرَامِ، فَأَنَا أَتَحَمَّلُهَا
لِذَلِكَ، فَقَالَ الرَّجُلُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ وَكَذَلِكَ زَوْجَتِي؟ قَالَ:
فَتَحَمَّلْهَا يَا أَخِي؛ فَإِنَّمَا هِيَ مُدَّةٌ يَسِيرَةٌ. وهذه القصة وردت في
كتاب الكبائرالمنسوب للذهبي, وكذلك ذكرها ابن حجر, في كتاب الزواجر, تنبيه الغافلين" (ص: 517)
ஹழ்ரத் உமர் ரலி அவர்களிடம் ஒரு மனிதர் தன் மனைவியின்
தீய குணத் தை முறையிட வந்து ஜனாதிபதி உமர்
ரலி அவர்களின் வாசலில் காத்து நின்றார்.அப்போது உள்ளே உமர் ரலி அவர்களின் மனைவி உமர்
ரலி அவர்களை சப்தமிட்டு கடும் வார்த்தையால் பேசிக்கொண்டிருந்ததை செவியுற்று ஜனாதிபதியின்
நிலையே இப்படி என்றால் நாம் அவரிடம் முறையிட்டு என்ன பயன்? என்று எண்ணியவராக அங்கிருந்து கிளம்பினார். வெளியே
வந்த உமர் ரலி அவர்கள் அந்த மனிதரிடம் என்ன விஷயம்? என விசாரித்தார்கள்.அவர் தான் வந்த நோக்கத்தயும்
இப்போது திரும்பிச்செல்லும் காரணத்தையும் கூறிய போது உமர் ரலி அவர்கள் என் மனைவியின்
கடும் சொல்லை நான் தாங்கிக்கொள்கிறேன் ஏன் தேரியுமா? எனக்காக அவள் சமையல்காரியாக தன்னை மாற்றிக்கொள்கிறாள்.
என் ஆடைகளை துவைப்பதில் தன்னை வண்ணாத்தியாக மாற்றிக்கொள்கிறாள். என் குழந்தைக்கு தன்
இரத்தத்தை பாலாக கொடுக்கிறாள்.நான் ஹராமான வழியில் சென்று விடாமல் என்னை காப்பாற்றுகிறாள்.எனக்காக
அவள் இவ்வளவு தியாகம் செய்யும் போது அவளுக்காக நான் ஏன் இந்த சின்ன சொல்லை தாங்கக்கூடாது? என்றார்கள். (தன்பீஹுல் காஃபிலீன்)
தலாக் ஏற்படுவதற்கான மூன்றாவது காரணம்
புரிந்துணர்வு இல்லாமை.கணவனை மனைவி புரிந்து கொள்வதில்லை.மனைவியை கணவன் புரிந்து
கொள்வதில்லை.இந்த புரிந்து கொள்ளாமையால் ஏற்படும் விளைவு கொஞ்ச நாளில் அவர்களுக்கு
மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தி விடுகின்றது. முதலில் இருவரும்
ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். என் கணவர் இப்படித்தான். இந்த
நேரத்தில் இப்படி இருப்பார். இந்த நேரத்தில் இப்படி பேசுவார். அவருக்கு இது
பிடிக்கும். இது பிடிக்காது என்று மனைவி புரிந்திருக்க வேண்டும். கணவனும் அவ்வாறே
மனைவியைப் பற்றி புரிந்திருக்க வேண்டும்.
அண்ணலம் பெருமானார் நபி ஸல் அவர்கள் தன்
மனைவிமார்களை அவர்களது குணம் என்ன அவர்களின் தன்மை என்ன அவர்களின் பேச்சு எப்படி
இருக்கும் எந்த நேரத்தில் எப்படி பேசுவார்கள் என்பது முதற்கொண்டு அத்தனையையும்
புரிந்து வைத்திருந்தார்கள்.
عن عائشة رضي الله عنها قالت قال
لي رسول الله صلى الله عليه وسلم إني لأعلم إذا كنت عني راضية وإذا كنت علي غضبى قالت
فقلت من أين تعرف ذلك فقال أما إذا كنت عني راضية فإنك تقولين لا ورب محمد وإذا كنت
علي غضبى قلت لا ورب إبراهيم قالت قلت أجل والله يا رسول الله ما أهجر إلا
اسمك
ஆயிஷாவே நீ என் மீது திருப்திவுடன் இருக்கின்றாயா
அல்லது கோபத்துடன் இருக்கின்றாயா என்பதை நான் அறிந்து கொள்வேன் என்று நபி ஸல்
அவர்கள் கூறினார்கள்.எவ்வாறு அறிந்து கொள்வீர்கள் என்று ஆயிஷா ரலி அவர்கள் கேட்ட
போது நபி (ஸல்) அவர்கள் என் மீது திருப்திவுடன் இருக்கும் போது பேசினால், முஹம்மதுடைய அதிபதியின்
மீது சத்தியமாக! என்று கூறுவாய். என் மீது கோபமாய் இருக்கும் போது பேசினால், இப்ராஹிம் (அலை) அவர்களின்
அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்று கூறுவாய் என்றார்கள். ஆம் யாரஸூலல்லாஹ். அல்லாஹ்வின்
மீது சத்தியமாக நான் அந்த நேரத்தில் உங்கள் பெயரை மட்டும் விட்டு விடுவேன்
என்றார்கள். (புகாரி ; 5228)
في سير أعلام النبلاء للإمام الذهبي في المجلد الرابع. التقى شريح بـالشعبي فقال الشعبي لـشريح : كيف حالك
يا شريح ؟ قال بخير حال، قال: كيف حال أهلك؟ أي كيف حال زوجك؟ فقال شريح : والله يا
شعبي ! منذ عشرين سنة لم أر من زوجي ما يغضبني قط، قال الشعبي : سبحان الله! وكيف ذلك؟!
قال شريح : يا شعبي منذ أول ليلة دخلت فيها على زوجتي رأيت بها جمالاً نادراً وحسناً
باهراً فقلت: أصلي ركعتين شكراً لله!
يقول شريح : فلما صليت وسلمت رأيت زوجتي
تصلي بصلاتي وتسلم بسلامي أي: أنها دخلت معه في الصلاة لله جل وعلا، فلما انتهينا،
وانفض الأهل والأحباب، مددت يدي نحوها، فقالت على رسلك يا أبا أمية ، ثم قالت: أحمد
الله وأستعينه وأستغفره، وأصلي وأسلم على رسول الله، وبعد: أبا أمية ! إني امرأة غريبة
عنك، لا علم لي بأخلاقك، فبين لي ما تحب فآتيه، وما تكرهه فأتركه.
أبا أمية ! لقد كان لك من نساء قومك من
هي كفؤ لك، ولقد كان لي من رجال قومي من هو كفؤ لي، أما وقد قضى الله أمراً كان مفعولاً
فاصنع ما أمرك الله به: فَإمْسَاكٌ بِمَعْرُوفٍ
أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ [البقرة:229]،
وأقول قولي هذا وأستغفر الله لي ولك.
الله أكبر! يقول شريح : فأحوجتني والله
إلى الخطبة في ذلك يا شعبي ، فجلست وقلت: أحمد الله وأستعينه وأستغفره وأصلي وأسلم
على رسول الله وبعد: فإنك قلت كلاماً إن ثبت عليه يكن حظك، وإن تدعيه يكن حجة عليك.
أما إني أحب كذا وكذا، وأكره كذا وكذا.
قالت:
فمن تحب من جيرانك أن يدخل دارك، قال: بنو فلان قوم صالحون، وبنو فلان قوم سوء،
وما رأيت من حسنة فانشريها، وما رأيت من سيئة فاستريها.
يقول شريح : فبت معها بأنعم ليلة، ومكثت
عشرين سنة، والله لم أعتب عليها في حياتي إلا مرة واحدة،
காளீ ஷுரைஹ் ரஹ் அவர்களும் ஷுஃபீ ரஹ் அவர்களும்
சந்தித்துக் கொண்ட பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று ஷுஃபீ ரஹ் கேட்டு விசாரித்தார்கள்.
நான் நலமாக இருக்கிறேன் என்று பதில் சொன்னார்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என விசாரித்த போது அல்ஹம்துலில்லாஹ்! அதுவும் நன்றாகவே
இருக்கிறது. இருபது வருடங்களாக என் மனைவியோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
ஒரு தடவை கூட நான் கோபப்படுகிற மாதிரி எந்த செயலையும் என் மனைவியிடத்தில் நான் பார்த்ததில்லை
என்று கூறினார்கள். அது எப்படி சாத்தியமானது என்று கேட்ட பொழுது அதற்கவர்கள், என் மனைவியை நான் சந்தித்த முதல் நாளில் அவளது அழகைப்
பார்த்து வியந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதேன்.
என் மனைவியும் அவ்வாறு தொழுதாள். தொழுகை முடித்து நான் அவளை நெருங்க முற்பட்ட போது
அவள் என்னை தடுத்து நிறுத்தி நான் உங்களுக்கு முன்பு அறிமுகமில்லாதவள். நீங்களும் எனக்கு
அவ்வாறு தான். இப்போது கணவன் மனைவியாக இணைந்திருக்கிறோம். உங்களுடைய குணங்களைப் பற்றி
எனக்கு எதுவும் தெரியாது. எனவே உங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். உங்களுக்கு எது
பிடிக்கும் என்று கூறினால் அதை நான் செய்வேன். உங்களுக்கு எது பிடிக்காது என்று தெரிந்து
கொண்டால் அதை விட்டு விடுவேன் என்று கூறினாள். நான் எனக்கு பிடித்ததையும் பிடிக்காததையும்
என் மனைவியிடத்தில் விவரித்துக் கூறினேன். அதற்குப் பிறகு உங்கள் வீட்டில் நான் யாரையெல்லாம்
அனுமதிக்க வேண்டும் என்று கேட்டாள். இவரிவர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறிவிட்டு
அவர்களிடத்தில் நல்ல விஷயங்களைக் கண்டால் அதை பிறரிடத்தில் எடுத்துச் சொல். தீய விஷயங்களைக்
கண்டால் அதை மறைத்து விடு என்று கூறினேன். இவ்வாறு அன்றிரவு நிறைய விஷயங்களை மனம் விட்டு
பேசிக்கொண்டோம். பகிர்ந்து கொண்டோம். என்னை பற்றி அவளும் அவளைப் பற்றி நானும் முழுமையாக
தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு வாழ்க்கையை தொடங்கிய காரணத்தினால் எங்களிடையே எந்த
மனக்கசப்பும் ஏற்பட்டதில்லை என்று காளி ஷுரைஹ் ரஹ் அவர்கள் கூறினார்கள். (ஸியரு அஹ்லாமின் நுபுவ்வா)
தலாக்கிற்கான நான்காவது மிக முக்கியமான காரணம் மணமக்களின்
குடும்பத்தார்கள். கணவன் மனைவிக்குள் ஆயிரம் சண்டைகள் வரும் ஆயிரம் பிரச்சனைகள்
வரும்,இன்று சண்டை போடுவார்கள்.நாளை சேர்ந்து கொள்வார்கள்.காலையில் சண்டை
போடுவார்கள். மாலையில் சேர்ந்து கொள்வார்கள்.ஊடலும் கூடலும் நிறைந்தது தான்
வாழ்க்கை.இதில் தேவையில்லாமல் குடும்பத்தினர் தலையிடக்கூடாது. கணவன் மனைவிக்கு
மத்தியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன பிரச்சனைகளில் குடும்பத்தினர் தலையிட்டு அதில்
மூக்கை நுழைக்கிற காரணத்தினால் தான் இன்றைக்கு
அதிகமான தலாக்கள் நிகழ்கிறது.
جَاءَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه
وسلَّمَ بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَجِدْ عَلِيًّا في البَيْتِ، فَقالَ: أيْنَ ابنُ
عَمِّكِ؟ قالَتْ: كانَ بَيْنِي وبيْنَهُ شيءٌ، فَغَاضَبَنِي، فَخَرَجَ، فَلَمْ يَقِلْ
عِندِي فَقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ لِإِنْسَانٍ: انْظُرْ أيْنَ
هُوَ؟ فَجَاءَ فَقالَ: يا رَسولَ اللَّهِ، هو في المَسْجِدِ رَاقِدٌ، فَجَاءَ رَسولُ
اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وهو مُضْطَجِعٌ، قدْ سَقَطَ رِدَاؤُهُ عن شِقِّهِ،
وأَصَابَهُ تُرَابٌ، فَجَعَلَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَمْسَحُهُ
عنْه، ويقولُ: قُمْ أبَا تُرَابٍ، قُمْ أبَا تُرَابٍ.
ஒரு நாள் ஃபாத்திமா ரலி அவர்களின் இல்லத்திற்கு
நபி ஸல் அவர்கள் வந்த போது அலி ரலி அவர்கள் இல்லை. எங்கே என்று கேட்டார்கள். அவர்
கோபம் கொண்டே வீட்டை விட்டு வெளியே சென்றார், எங்கே சென்றார் என்று தெரிய வில்லை
என்று ஃபாத்திமா ரலி அவர்கள் சொன்னார்கள். பள்ளியில் படித்திருந்த அலி ரலி அவர்களை
எழுப்பி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் என்ன பிரச்சனை என்று தன் மகளிடமோ
தன் மருமகன் அலி ரலி அவர்களிடமோ நபி ஸல் அவர்கள் கேட்க வில்லை. இது தான் இங்கே
கவனிக்க வேண்டிய செய்தி.
இன்றைக்கு அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்
மீது அக்கரையுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு சின்ன பிரச்சனைகளிலெல்லாம் தலையிட்டு
அதை பெரிதாக்கி விடுகிறார்கள். இதனாலும் இன்றைக்கு தலாக் நிகழ்கிறது.
தலாக் நிகழ்வதற்கு ஐந்தாவது முக்கியமான காரணம்
மார்க்கம் இல்லாமை. மார்க்கம் இல்லாத காரணத்தினால் கணவனும் மனைவியும் தங்களுக்கிடையில்
வாழ வேண்டிய முறை தெரியாமல் அவர்களின் வாழ்க்கை சீரழிந்து விடுகிறது.
இப்படி தலாக் நிகழ்வதற்கு எண்ணற்ற காரணங்கள்
உண்டு.அவைகள் அனைத்தையும் விளங்கி புரிந்து நம் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்
கொண்டால் அல்லது நம் பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுத்தால் நம் வீடுகளில் இல்லற
வாழ்க்கை சீராகும். அல்லது தவ்ஃபீக் செய்வானாக.
மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய செய்திகளும் அறிவுரைகளும் நிறைந்த கட்டுரை அல்லாஹ் தங்களுடைய இல்மில் பரக்கத் செய்வானாக ஆமீன்
ReplyDeleteبارك الله يا اخي
ReplyDeleteபாரகல்லாஹ் ஃஷாஃபி ஹழ்ரத் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்யட்டும்
ReplyDelete