Friday, June 3, 2022

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்

 


هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 2:29)



இந்த பூமியையும் பூமியிலுள்ள அனைத்து வஸ்துக்களையும் அல்லாஹ் மனிதனுக்காகவே படைத்திருக்கிறான்.வானம் வானத்திலுள்ளவை, பூமி மற்றும் பூமியிலுள்ளவை, பூமிக்கு அடியில் இருப்பவை, கடல் மற்றும் கடலுக்கு மேலே இருப்பவை, கடலுக்கு அடியில் இருப்பவை என உலகில் இருக்கிற அனைத்தும் மனிதனுக்காக படைக்கப்பட்டவை. தனக்காக படைக்கப்பட்ட இந்த பூமியையும் பூமியின் வளங்களையும் பாதுகாப்பதும் அவைகளை தூய்மையாக வைத்துக் கொள்வதும் மனிதனுடைய மிகப்பெரும் பொறுப்பாகும். 


இன்றைக்கு சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைந்திருக்கிறது. மனித வாழ்விற்கு தூய்மையான காற்று அவசியம். ஆனால் இன்றைக்கு  தொழில்சாலைகள், நவீன வாகனங்கள் அதிகரித்து விட்டதால் அந்த தூய்மையான காற்று மிகவும் மாசடைந்து விட்டது.காற்று மாசுபாட்டின் அளவைக் குறிப்பதற்கு பி.எம் 2.5 என்ற  குறியீடு இருக்கிறது. அது 50 க்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் காற்று ஓரளவு தூய்மையாக இருப்பதாக அர்த்தம். இதே PM 2.5 குறியீடு, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 17, நியூயார்க்கில் 38, பெர்லினில் 20, பெய்ஜிங்கில் 59 ஆகும். ஆனால் இந்தியாவில் அதன் குறியீடு 462 ஆக இருக்கிறது. நம் நாட்டில் வாழும் மக்கள், தற்சமயம் சுவாசிக்கும் காற்று ஆரோக்கியமானவர்களை நோய்வாய்ப்படுத்தும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தி விடும்.


நுரையீரல் நோய்களில் நாற்பது சதவீதம் காற்று மாசுபாடு காரணமாகவே உள்ளதாகவும் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பிறந்த குழந்தைகளின் அகால மரணம் ஆகியவற்றிற்கு 60% வரை காற்று மாசுபாடே காரணமாகும் என்றும் இதனால் ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் 16.7 லட்சம் உயிர்கள் பலியாகி இருக்கிறது. இது மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டால், நாடு 2,60,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பையும் சந்தித்திருப்பதாக மத்திய அரசு அமைப்பான ஐ.சி.எம்.ஆர் Indian Council of Medical Research அறிக்கையில் வெளிவந்திருக்கிறது.


அதேபோன்று இப்போது பூமி கடுமையாக வெப்பமாகிக் கொண்டிருக்கிறது.

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் தான்.ஆனால்  சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


 வளிமண்டலத்தில் காணப்படும் கரியமில வாயுக்களை மரங்கள் தான் உறிஞ்சும். ஆனால் இன்றைக்கு  காடுகள் அழிக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்படுகிறது. அதனால் பூமியில் மழை குறைந்து வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.தற்போது நிலவி வரும் வெப்பம் இன்னும் அதிகரிக்கும்  பட்சத்தில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளேயே வெப்பநிலை 3-5 செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பது மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வந்த நிலையில், 3-5 செல்சியஸ் அளவுக்கு வந்து விட்டால் அதனால் ஏற்படும் விளைகளை சொல்லவே முடியாது.

தற்போது அதை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்துவதே பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என்று விஞ்ஞானிகளும், கொள்கை வகுப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.

1.5 டிகிரி செல்சியஸ் என்னும் இலக்கை எட்டுவதற்கு "சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் விரைவான, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மாற்றங்கள்" தேவைப்படும் என்று 2018ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (ஐபிசிசி) தனது அறிக்கை ஒன்றில் பரிந்துரைத்தது.


இன்றைய அரசுகள் சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசுகிறது. அதற்காக பல  திட்டங்களை முன்னெடுப்பதாக கூறுகிறது. ஆனால் அதன் செயல்பாடுகள் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிப்பதாகத்தான் இருக்கிறது. சர்வதேச கம்பெனிகள், பண முதலைகளின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் பல்வேறுபட்ட திட்டங்கள் சுற்றுப் புறச் சூழலையும் புவியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அறிந்திருந்தாலும், அரசியல் தலைமைகள் பணத்தை வாங்கிக் கொண்டு அவற்றுக்கு அனுமதியளிக்கிறார்கள். அதனால்  முறையான கழிவகற்றும் வழிமுறை இல்லாமல் கம்பெனிகள் கழிவுகளை ஆற்று நீரிலும் குளங்களிலும் கலக்கும் வண்ணம் வெளியேற்றி நமது பூமியை மாசுபடுத்தி வருகின்றனர்.


​மீத்தேன் போன்ற திட்டங்கள் சில பண முதலைகளைக் கோடி கோடியாக சம்பாதிக்க வழி வகுத்தாலும் நிலத்தடி நீரை அழித்து நாம் வாழும் பூமிக்கு அடியில் நெருப்பை உண்டாக்கி நம் நாட்டின் வளங்களையெல்லாம் அழித்து வருகின்றன. இந்த நேரத்தில் சூழல் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் சுயநலவாதிகளால் நமது சூழல் சீர்குலைக்கப்பட்டு நமது எதிர்கால சந்ததிகள் பலத்த சவால்களைச் சந்திக்க நேரிடும்.



ஜக்கிய நாடுகள் சபையின் சூழல் பாதுகாப்பு பற்றிய முதலாவது மாநாடு,  1972 ம் ஆண்டு,  சுவீடன் நாட்டின் ஸ்டாக் ஹோம் நகரில் நடைபெற்றது முதல் உலகில் சூழல் பற்றிய கரிசனை பெரிய முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் உலகளவில் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு 1992 ம் ஆண்டு பிரேஸிலில் நடைபெற்ற பூமி உச்சி மாநாடு. இதில் சுமார் 178 நாடுகள் பங்கு கொண்டு சுற்றுச் சுழல் மற்றும் அபிவிருத்திக்கான ரியோ பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சூழல் பாதுகாப்பு குறித்து இன்றைய உலகின் கவனம் இந்தளவு குவிக்கப்படுவதற்குக் காரணம்,  மனிதனே தனது கரங்களால் தான் வாழும் பூமியை நாசம் செய்து கொண்டமை என்பது தெளிவானது.


அல்குர்ஆன் கூறுகிறது, 


ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.

(அல்குர்ஆன் : 30:41)



ஜூன் மாதம் 05 ஆம் தேதி World Environment Day – சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு- தினமாகும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற இந்த நேரத்தில்  நாம் வாழும் இந்த பூமியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு அதை   பக்குவமாக வழங்குவது நமது தார்மீகப் பொறுப்பாகும்.


قال الإمام الشاطبي رحمه الله: "اتفقت الأمة بل سائر الملل على أن الشريعة وضعت للمحافظة على هذه الضروريات الخمس، وهي: الدين، والنفس، والنسل، والمال، والعقل". [الموافقات: 1/31].


இமாம் ஷாதிபி அவர்கள்,  மார்க்கத்தைப் பாதுகாத்தல்,  உயிரைப் பாதுகாத்தல்,  அறிவைப்பாதுகாத்தல்,  பரம்பரையைப் பாதுகாத்தல்,  செல்வத்தைப் பாதுகாத்தல் இந்த ஐந்தும் ஷரீஆவின் மிக முக்கியமான ஜந்து நோக்கங்கள் என்று கூறுகிறார்கள்.


நாம் நம் வாழ்க்கை குறித்து மட்டும் யோசிக்காமல் சிந்திக்காமல் நம் வருங்கால சந்ததிகளைக் குறித்தும் யோசிக்க வேண்டும். 


பெருமானார் ஸல் அவர்கள் தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் யோசித்ததை விட தன் உம்மத்தைப்பற்றி யோசித்தது தான் அதிகம். அதிலும் குறிப்பாக தன் வருங்கால சந்ததிகள்  குறித்து அதிகம் யோசித்திருக்கிறார்கள்.


ﻓﺮﻓﻌﺖ ﺭﺃﺳﻲ ﻓﺈﺫﺍ ﺃﻧﺎ ﺑﺴﺤﺎﺑﺔ ﻗﺪ ﺃﻇﻠﺘﻨﻲ، ﻓﻨﻈﺮﺕ ﻓﺈﺫﺍ ﻓﻴﻬﺎ ﺟﺒﺮﻳﻞ ﻓﻨﺎﺩﺍﻧﻲ، ﻓﻘﺎﻝ : ﺇﻥ ﺍﻟﻠﻪ ﻗﺪ ﺳﻤﻊ ﻗﻮﻝ ﻗﻮﻣﻚ ﻟﻚ، ﻭﻣﺎ ﺭﺩﻭﺍ ﻋﻠﻴﻚ، ﻭﻟﻘﺪ ﺃﺭﺳﻞ ﺇﻟﻴﻚ ﻣﻠَﻚ ﺍﻟﺠﺒﺎﻝ ﻟﺘﺄﻣﺮﻩ ﺑﻤﺎ ﺷﺌﺖ، ﻓﻨﺎﺩﺍﻧﻲ ﻣﻠﻚ ﺍﻟﺠﺒﺎﻝ ﻭﺳﻠﻢ ﻋﻠﻲَّ، ﺛﻢ ﻗﺎﻝ: ﻳﺎ ﻣﺤﻤﺪ، ﺇﻥ ﺍﻟﻠﻪ ﻗﺪ ﺳﻤﻊ ﻗﻮﻝ ﻗﻮﻣﻚ ﻟﻚ،ﻭﺃﻧﺎ ﻣﻠَﻚ ﺍﻟﺠﺒﺎﻝ، ﻭﻗﺪ ﺑﻌﺜﻨﻲ ﺭﺑﻚ ﺇﻟﻴﻚ ﻟﺘﺄﻣﺮﻧﻲ ﺑﺄﻣﺮﻙ ﻓﻴﻤﺎ ﺷﺌﺖ؟، ﺇﻥ ﺷﺌﺖَ ﺃﻥ ﺃُﻃﺒﻖ ﻋﻠﻴﻬﻢ ﺍﻷﺧﺸﺒﻴﻦ ‏(ﺍﻟﺠﺒﻠﻴﻦ‏) ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ : ﺑﻞ ﺃﺭﺟﻮ ﺃﻥ ﻳﺨﺮﺝ ﺍﻟﻠﻪ ﻣﻦ ﺃﺻﻼﺑﻬﻢ ﻣﻦ ﻳﻌﺒﺪ ﺍﻟﻠﻪ ﻭﺣﺪﻩ ﻻ ﻳﺸﺮﻙ ﺑﻪ ﺷﻴﺌﺎ

ஒரு முறை அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அந்த மலக் நபி ﷺ அவர்களிடம் வந்து உங்கள் சமூகம் உங்களைப் பார்த்து என்ன சொன்னது என்பதை அல்லாஹ் கேட்டு விட்டான்.நீங்கள் விரும்புவதை எனக்கு கட்டளையிடுங்கள்.அதை செயல்படுத்துவதற்குத்தான் அல்லாஹ் என்னை உம்மிடம் அனுப்பியிருக்கிறான்.நீங்கள் விரும்பினால் அந்த மக்களை இந்த மலைகளுக்கிடையே நசுக்கி விடுகிறேன் என்று கூறினார். அதற்கு நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்கள் இவர்களின் சந்ததிகளிலிருந்தும் வருவார்கள் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 1795)


தன் வருங்கால சந்ததிகளின் நல்வாழ்க்கை குறித்து யோசித்துத்தான் ஒவ்வொரு வார்த்தைகளையும் பேசுவார்கள். செய்வார்கள்.



ﻟﻮﻻ ﺃﻥ ﺃﺷﻖ ﻋﻠﻰ ﺃﻣﺘﻲ ﻷﻣﺮﺗﻬﻢ ﺑﺎﻟﺴﻮﺍﻙ ﻣﻊ ﻛﻞ ﺻﻼﺓ

لولا أن أشق على أمتي لأمرتهم أن يؤخروا العشاء إلى ثلث الليل أو نصفه 

ﻟﻮﻻ ﺃﻥ ﺃﺷﻖ ﻋﻠﻰ ﺃﻣﺘﻲ ﻣﺎ ﺗﺨﻠﻔﺖ ﻋﻦ ﺳﺮﻳﺔ،ﻭﻟﻜﻦ ﻻ ﺃﺟﺪ ﺣﻤﻠﺔ ﻭﻻ ﺃﺟﺪ ﻣﺎ ﺃﺣﻤﻠﻬﻢ ﻋﻠﻴﻪ ﻭﻳﺸﻖ ﻋﻠﻲ ﺃﻥ ﻳﺘﺨﻠﻔﻮﺍ ﻋﻨﻲ

என் உம்மத்திற்கு சிரமம் ஏற்பட்டு விடும். இல்லையென்றால் ஒவ்வொரு தொழுகையிலும் மிஸ்வாக் செய்யும்படி உத்தரவிட்டிருப்பேன். 


என் உம்மத்திற்கு சிரமம் ஏற்பட்டு விடும். இல்லையென்றால் இஷா தொழுகையை பிந்தி தொழும்படி உத்தரவிட்டிருப்பேன். 


என் உம்மத்திற்கு சிரமம் ஏற்பட்டு விடும். இல்லையென்றால் அனைத்து போரிலும் நான் கலந்திருப்பேன். 


خَطَبَنَا رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، فَقالَ: أَيُّهَا النَّاسُ قدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمُ الحَجَّ، فَحُجُّوا، فَقالَ رَجُلٌ: أَكُلَّ عَامٍ يا رَسولَ اللهِ؟ فَسَكَتَ حتَّى قالَهَا ثَلَاثًا، فَقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: لو قُلتُ: نَعَمْ لَوَجَبَتْ، وَلَما اسْتَطَعْتُمْ


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையில், ‘மக்களே, உங்கள் மீது அல்லாஹ் ஹஜ் கடமையாக்கியுள்ளான் ; எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்’ என்றார்கள். ஒரு தோழர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு ஆண்டுமா ஹஜ் கடமை? என மூன்று தடவை கேட்டார்’ அதுவரை மவுனமாக இருந்த மாநபி (ஸல்) அவர்கள் ‘நான் ஆம் என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் கடமையாகிவிடும்’ (அவ்வாறு அது ஒவ்வொரு ஆண்டும் கடமையாகி விட்டால்) உங்களால் செய்ய முடியாது என பதிலளித்தார்கள்’’ (முஸ்லிம்;  1337)


எனவே ஒரு முஸ்லிம் என்றைக்கும் தன் வருங்கால சந்ததிகள் குறித்து சிந்திப்பவனாக இருக்க வேண்டும். எந்த காரியத்தை செய்தாலும் அது வருங்கால சந்ததிகளின் லாப நஷ்டங்களை யோசித்தே செய்ய வேண்டும்.


நாம் வாழ்க்கை நெறியாக கொண்டிருக்கிற இஸ்லாம் ஒரு உயர்ந்த மார்க்கம், வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அழகாக வழிகாட்டும் ஒரு அழகிய  மார்க்கம், மனிதன் தன்னை பாதுகாக்க வேண்டும் என்பதோடு தன்னைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் பூமியின் இயற்கை வழங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறது. மனிதன் உலகில் வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கிற காடுகள்,  மலைகள்,  மரம் செடி கொடிகள்,  காற்று,  நீர்,  வானம்,  பறவைகள்,  மிருகங்கள் போன்ற இயற்கைச் சூழல்களை பாதுகாப்பதற்கும் மனிதன் கடமைப்பட்டிருக்கிறான் என்றும் உணர்த்துகிறது. நம் இயற்கை சூழலைப்பாதுகாப்பதில் தான் நம் வருங்கால சந்ததிகளின் நல்வாழ்வு அமைந்திருக்கிறது. 



​சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதற்கு காடுகள் அழிக்கப்படுவது மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். 

​காடுகள் அழிக்கப்படுவதைத் தவிர்ப்பதுடன் மரங்களை நடுவது காலத்தின் கட்டாயமாகும். சராசரியாக ஒரு காகம் தனது வாழ்நாளில் பல்லாயிரம் மரங்களை நடுகின்றது. நாம் எமது இருப்புக்காக எமது சுவாசத்திற்காக எமது நிலத்தையும், வழிமண்டலத்தையும் பாதுகாத்து பசுமையடையச் செய்வதற்காக அதன் மூலம் நம் வருங்கால சந்ததிகளை பாதுகாப்பதற்காக எத்தனை மரங்களை நாட்டியுள்ளோம்? இஸ்லாம் மரம் நடுவதை ஒரு இபாதத்தாக, வணக்க வழிபாடாகப் போதிக்கின்றது.


عن أنس بن مالك - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " ما من مسلمٍ يغرسُ غرساً أو يَزْرَعُ زَرْعاً فيأكلُ منه طيرٌ أو إنسانٌ أو بهيمةٌ إلاَّ كان له به صدقة



​இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.(புகாரி: 2320)



இந்த நபிமொழி மரம் நடுவதை மட்டுமன்றி நாம் வாழும் சுற்றுப் புறச் சூழலில் பறவை போன்ற உயிரினங்களின் இருப்பை உறுதிப்படுத்துவதும் வணக்கமாகப் போதிக்கப்படுகின்றது.



عن أنس- رضي الله عنه- قال: «قال رسول الله- صلى الله عليه وسلم-: سَبْعٌ يجري للعبدِ أجْرُ هُنَّ وهو في قبره وهو بعد موته: مَنْ عَلَّمَ علماً، أو كَرَى نهراً، أو حَفَرَ بئراً، أو غَرَسَ نخلاً، أو بنى مسجداً، أو وَرَّث مُصحفاً، أو ترك ولداً يستغفرُ له بعد موته»، (أخرجه البيهقي).


ஒருவரின் மரணத்திற்கு பின்பும் அவருக்கு பயனளிக்கும் ஏழு விஷயங்களில் மரத்தை நடுவதும் ஒன்று. (மஜ்மவுஸ்ஸவாயித்;  1/172)




عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنْ قَامَتِ السَّاعَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنِ اسْتَطَاعَ أَنْ لَا تَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَغْرِسْهَا ) .


அடுத்து, நொடியில் உலகம் அழியும் என்றிருந்தாலும் ஒரு ஈத்த மரக் கன்று ஒருவரின் கரத்தில் இருந்தால்  அதை அவர்  நாட்டிவிட வேண்டும். (ஸஹீஹுல் ஜாமிவு : 1424)



ونَقلَ الطِّيْبِيُّ عن مُحي السُّنّةِ ِأنّ رجُلا مَرّ بأبي الدّرداءِ وهو يَغرِسُ جَوْزَةً فقال أتَغْرِسُ هذِه وأنتَ شَيخٌ كبيرٌ وهذهِ لا تطعَمُ إلا في كَذا وكذا عامًا ، فقال ما عليَّ أن يكونَ لي أجرُها ويَأكُلُ منها غيْرِي


 ஒரு மனிதர் அபுத்தர்தா ரலி அவர்களை கடந்து சென்றார். அவர்கள் தென்னை மரக்கன்றை நட்டிக் கொண்டிருந்தார்கள். வயதாகி விட்டது. இது வளர்த்து பயன் தருவதற்கு நாளாகுமே. உங்களால் அதைக் கொண்டு பயன் பெற முடியாதே என்று கேட்டார். அதற்கவர்கள். நான் சாப்பிடா விட்டாலும் இதைக் கொண்டு மற்றவர்கள் பயன் பெறுவார்கள். அதன் நன்மை எனக்கு கிடைக்கும் என்றார்கள்.


போர்களங்களுக்கு செல்வதற்கு முன்பு நபி ஸல் அவர்கள் செய்த அறிவுரைகளில் மரங்களை பிடுங்கக்கூடாது. செடிகளை வெட்டக்கூடாது என்பதும் இடம்பெற்றிருந்ததை நாம் அறிவோம்.



وعلى نَفْس الهَدْي سار أبو بكر - رضي الله عنه - إذ قال في وَصِيَّته لأميرِ أولِ بعثةٍ حَرْبيَّة في عَهْده، وهو أسامة بن زيد، قال له: "لا تخونوا، ولا تغلوا، ولا تغدروا، ولا تمثلوا، ولا تقتلوا طفلاً صغيرًا، ولا شَيْخًا كبيرًا، ولا امرأة، ولا تقطعوا نخلاً ولا تَحْرقوه، ولا تقطعوا شجرة مُثمرة، ولا تذبحوا شاةً ولا بقرة ولا بعيرًا إلاَّ لِمَأْكلة، وسوف تَمُرُّون على قوم فرغوا أنفسهم في الصَّوامع، فَدَعُوهم وما فرغوا أنفسهم له"؛ تاريخ الطبري


அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் முதன் முதலாக அனுப்பிய படையினரித்தில் செய்த உபதேசத்தில் பேரித்த மரங்களை வெட்டாதீர்கள். அதை தீயிட்டுக் கொளுத்தாதீர்கள். மக்களுக்கு பலன் தரும் மரங்களை வெட்டாதீர்கள் என்பதும் இருந்தது. (தாரீஹுத் தப்ரீ)


فقد روى مسلم في صحيحه أن النبي صلى الله عليه وسلم قال: اتقوا اللاّعِنَيِْن، الذي يتخلى في طريق الناس أو في ظلهم



​’பாதையோரங்களிலும் நிழல் தரும் இடங்களிலும் மலசலம் கழித்து மக்களின் சாபத்தைப் பெறுவதையிட்டும் நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


​இந்த ஹதீஸ் சுற்றுப் புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.



அடுத்து ​சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பில் நீர் நிலைகளைப் பாதுகாப்பது பிரதானமானதாகும். நாம் இன்றைக்கு நமது சுய நலத்திற்காகவும் சுய  இலாபத்திற்காகவும் சோம்பேறித்தனத்திற்காகவும் நிலத்தடி நீரை அழித்துக் கொண்டிருக்கின்றோம். நம்மை அண்டியிருந்த குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகள், கிணறுகள் எல்லாம் கைவிடப்பட்டுவிட்டன.எத்தனையோ நாடுகள் குடிப்பதற்கு உரிய நீர் இல்லாமல் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றன.எனவே தற்போது ​இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், நீர் வளத்தைப் பாதுகாப்பதும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் அவசியமாகும். இஸ்லாம் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் வழிகாட்டியிருக்கிறது.

 


عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلّى الله عليه وسلّم قَالَ: "لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ".


وفي رواية: "الَّذِي لاَ يَجْرِي". وفي رواية البخاري: "ثُمَّ يَغْتَسِلُ فِيْهِ".


​’ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்.

(புகாரி: 239)


​இந்த நபிமொழியில் நிலையான நீரில் சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். இவ்வாறே நீர் நிலைகளுக்கு அருகில் மலசலம் கழிப்பதையும் நீர் நிலைகளை அசுத்தப்படுத்துவதையும் நபி ஸல்  அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள்.


عن أبي ذر ـ رضي الله عنه ـ عن النبي ـ صلى الله عليه وسلم ـ قال : ( عُرِضت عليَّ أعمال أمتي حسنها وسيئها ، فوجدت من محاسن أعمالها الأذى يماط عن الطريق ، ووجدت من مساوئ أعمالها النخاعة تكون في المسجد لا تُدْفَن )( البخاري


என் உம்மத்தின் நல் அமல்களும் தீயமல்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது. நல் அமல்களில் வழியில் மக்களுக்கு இடையூறு அளிக்கும் பொருளை அகற்றுவதும் தீயமல்களில் இறை இல்லங்களில் எச்சிலிட்டு அது  புதைக்கப்படாமல் விடப்பதும் இடம் பெற்றிருந்தது. (முஸ்லிம் :  553) 



நீர் மிகப்பெரிய நிஃமத். அது தான் இந்த பூமியின் மிகப்பெரிய ஆதாரம். எனவே அதை சிக்கனமாக பயன்படுத்தி பாதுகாக்கும் படி நபி ஸல் அவர்கள் உணர்த்தினார்கள்.


ஓடுகின்ற நீரில் வுழூச் செய்தாலும் ஒரு உறுப்பை மூன்று முறைக்கு அதிகமாகக் கழுவுவதை வீண்விரையம் என்று கூறியுள்ளார்கள். இஸ்லாம் கூறும் அளவுக்கு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.


فقد مر النبي صلى الله عليه وآلـه وسلم بِسَعْدٍ وَهُوَ يَتَوَضأ فَقَالَ: «مَا هَذَا السَّرَفُ ؟» فَقَالَ: أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ ؟ قَالَ: « نَعَمْ، وَإِنْ كُنْتَ عَلَى نَهَرٍ جَار» رواه أحمد 



​இஸ்லாத்தைப் பொருத்தவரை தாம் இருக்கும் சூழலை சுத்தமாக வைத்திருப்பது மார்க்கக் கடமையாகும். இதனை உணர்வுபூர்வமாக உணர்ந்து எமது சுற்றுப்புறச் சூழலின் இயற்கையைப் பேணி அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளும் இந்த பூமியின் ஜீவராசிகளும் நிம்மதியாக வாழக் கூடிய இடமாக அதைக் கையளிப்பது எமது தலையாய கடமையாகும். இதில் அரசுகளும் குடிமக்களும் அதி கூடிய கவனத்துடனும் தூர நோக்கத்துடனும் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.




1 comment: