Thursday, September 8, 2022

ஈமான் இல்லையேல் எதுவும் இல்லை

 

அல்லாஹுத்தஆலா உலகில் நமக்கு வாழ்க்கை நெறியாக தீனுல் இஸ்லாத்தை கொடுத்திருக்கிறான். தீனுல் இஸ்லாம் என்பது ஈமானை அடிப்படையாகக் கொண்டது, இறை நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டது, செயல்களை காட்டிலும் இறை நம்பிக்கைக்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் முதன்மை இடத்தைக் கொண்டது. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அமல்கள் என்பது அவனுக்கு முக்கியமானதாக இருந்தாலும் அந்த அமல்களுக்கு மிகவும் பிரதானமானது அவனது இறை நம்பிக்கையும் இறை விசுவாசமும் தான். இறை விசுவாசம் தான் அவன் செய்யக்கூடிய காரியங்கள் நன்மையா இல்லையா என்பதையே தீர்மானிக்கிறது. இறை விசுவாசத் திற்கு பிறகு தான் ஒரு காரியம் நன்மை என்ற அங்கீகாரத்தையே பெறுகிறது.

குர்ஆனுடைய வசனங்களை நாம் உற்று நோக்கினால் நல்லமல்கள் என்று எங்கெல்லாம் இறைவன் பேசுகிறானோ அங்கெல்லாம் அதோடு ஈமானையும் அல்லாஹ் இணைத்திருக்கிறான்.

فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ‏

எனினும், (இவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்தில் இருந்து) விலகி, மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் வெற்றி அடைந்தவர்களில் (சேர்ந்து) விடுவார்கள். (அல்குர்ஆன் : 28:67)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ يَهْدِيْهِمْ رَبُّهُمْ بِاِيْمَانِهِمْ‌ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِىْ جَنّٰتِ النَّعِيْمِ‏

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன்  அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மிக்க இன்பம் தரும் சுவனபதிகளுக்குரிய வழியில் செலுத்துகின்றான். (அல்குர்ஆன் : 10:9)

நல்லமல்கள் பயன் தர வேண்டும் என்றால் அங்கே ஈமான் இருக்க வேண்டும். ஒருவர் என்ன தான் நல்லமல்கள் செய்தாலும் நற்காரியங்கள் புரிந்தாலும் ஈமான் இல்லை என்றால் அவர் செய்த நல்ல அமல்களும் நற்காரியங்களும் பயன் இல்லாமல் போய் விடும் என்பதைத்தான் திருமறைக் குர்ஆனின் இதுபோன்ற வசனங்கள் நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது.

عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال «إِنَّ الْكَافِرَ إِذَا عَمِلَ حَسَنَةً أُطْعِمَ بِهَا طُعْمَةً مِنَ الدُّنْيَا، وَأَمَّا الْمُؤْمِنُ، فَإِنَّ اللهَ يَدَّخِرُ لَهُ حَسَنَاتِهِ فِي الْآخِرَةِ وَيُعْقِبُهُ رِزْقًا فِي الدُّنْيَا عَلَى طَاعَتِهِ» رواه مسلم.

நிச்சயமாக ஒரு இறை நிராகரிப்பாளன் ஒரு நற்காரியத்தை புரிந்தால் அதற்காக அவர் உலகில் உணவளிக்கப்படுவான். ஒரு இறை விசுவாசி ஒரு நற்காரியத்தை புரிந்தால் அவருடைய நன்மைகளை அல்லாஹ் மறுமைக்காக சேமித்து வைக்கிறான். இறைவனுக்கு வழிபட்டு வாழ்வதினால் அவருக்கு உலகிலும் அல்லாஹ் உணவளிக்கிறான். (முஸ்லிம் ; 2808 (

இன்றைக்கு உலகில் சகோதர சமயத்தைச் சார்ந்த எத்தனையோ பேர் நற்காரியங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏழை களுக்கு உதவுகிறார்கள், பசித்தவர்களுக்கு உணவு அளிக்கிறார்கள். சமூகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். உரிமை இழந்தவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். தன் சமூகத்திற்காக தங்களை அர்ப்பணிக் கிறார்கள்.இப்படி நாம் எதையெல்லாம் நன்மை என்று சொல்கிறாமோ அவைகளையெல்லாம் செய்யக்கூடியவர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவெல்லாம் இந்த உலகத்தில் அவர்களுக்கு பயன் தருமே தவிர மறுமையில் அவர்களுக்கு எந்தப் பயனையும் கொடுக்காது. காரணம் அந்த அமல்களுக்குத் தேவையான அமல்களுக்கு அடிப்படையான இறை விசுவாசம் அவர்களிடத்தில் இல்லை.

நபி அவர்கள் காலத்தில் கூட அவர்களுக்கும் ஸஹாபாக்களும் உதவிக்கரம் நீட்டக்கூடிய அவர்களை அரவணைக்கக்கூடிய நல்லுள்ளம் கொண்ட சிலர் இருந்தார்கள். அபூஜஹ்ல், அபூலஹப் போன்றவர்கள் பயங்கரமான நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் நபி அவர்களுக்கு பலவகையான உதவிகளைச் செய்தவர்  முத்இம் இப்னு அதீ என்பவர். இவர் பலவகையான உதவிகளை செய்திருந்தாலும் இக்கட்டான ஒரு கட்டத்தில் நபியைப் பாதுகாத்தார். 

فلما انتهى إلى مكة، أرسل رجلا من خزاعة إلى مُطْعَم بن عدي: أدخل في جوارك؟، فقال: نعم، فدعا بنيه وقومه، وقال: البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرتُ محمداً، فدخل رسول الله ـ صلى الله عليه وسلم ـ، ومعه زيد بن حارثة حتى انتهى إلى المسجد الحرام، فقام المطعم على راحلته، فنادى: يا معشر قريش، إني قد أجرت محمداً، فلا يهجه أحد منكم، فانتهى رسول الله ـ صلى الله عليه وسلم ـ إلى الركن، فاستلمه، وصلى ركعتين، وانصرف إلى بيته ومطعم وولده محدقون به بالسلاح حتى دخل بيته

நபி அவர்கள் நபித்துவம் கிடைத்த பத்தாம் ஆண்டு இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்காக தாயிஃப் நகரத்திற்கு புறப்பட்டு சென்றார்கள். நபியவர்கள் திரும்பி வந்தால் அவர்களை மக்காவிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று அவர்களை தடுப்பதற்கு மக்காவாசிகள் காத்திருந்தார்கள். இஸ்லாத்தை ஏற்பார்கள் என்ற நோக்கத்தில் தாயிஃபிற்கு சென்ற பெருமானார் அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அம்மக்கள் நபி அவர்களை ஊரை விட்டு துரத்தினார்கள். தாயிஃப் மக்களும் தன்னை ஆதரிக்க வில்லை. திரும்பி மக்காவிற்குள்ளும் நுழைய முடியாத சூழ்நிலையில் தான் நபி அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா ரழி அவர்களுடன் தாயிபிலிருந்து திரும்பி வந்தார்கள்.  அந்த இக்கட்டான சமயத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது முத்இம் பின் அதீ தான்.

முத்இம் பின் அதீ தன் ஆறு மகன்களோடு வாளேந்திக் கொண்டு நபி அவர்களை பாதுகாப்பாக கஃபதுல்லாஹ்விற்கு அழைத்து வந்து முஹம்மதிற்கு நான் பாதுகாப்பு அளித்து விட்டேன் என்று உரத்த குரலில் சொன்னார்.அதனால் யாரும் நபி அவர்களுக்கு அருகில் வர வில்லை. எனவே முக்கியமான நேரத்தில் நபியவர்களுக்கு முத்இம் பின் அதீ பாதுகாப்பு அளித்தார். (ஸீரத்து இப்னு ஹிஷாம் ; 2/28)

எந்த உபகாரத்திற்கும் பிரதி உபகாரம் செய்வதில் தன்னிகரில்லாத வர்களாக திகழ்ந்த நபி அவர்கள் முத்இம் பின் அதி விஷயத்திலும் அதை செய்தார்கள். பத்ரு போர்க்களத்தில் 70 கும் மேற்பட்ட காஃபிர்கள் கைதிகளாக பிடிபட்டிருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் பினைத்தொகை வாங்க வேண்டும், அவர்களை கொன்று விட வேண்டும் என்று பலவகையான ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த நேரம் நபி அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை புகாரி ஷரீபில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

قال فِي أُسَارَى بَدْرٍ: «لَوْ كَانَ المُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا، ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلاَءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ»

இந்த நேரத்தில் முத்இம் பின் அதீ உயிருடன் இருந்து அவர் இந்த கைதிகள் விஷயத்தில் என்னிடம் வந்து பரிந்து பேசியிருந்தால் நான் அவருக்காக அவர்களை விடுதலை செய்திருப்பேன் என்றார்கள்.

ஆக முத்இம் பின் அதீ நபி அவர்களுக்கு ஏராளமான உபகாரங்களை செய்திருக்கிறார். முக்கியமான சமயத்தில் நபியின் உயிரை காத்திருக்கிறார். அவரின் உயர்விற்கு இதை விட வேற என்ன வேண்டும். நபி அவர்களும் அவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள். அப்படி இருந்தும் அவர்கள் செய்த காரியம் அனைத்தும் பயனில்லாமல் போனது காரணம் அவரிடத்தில் ஈமான் இல்லை.

அதேபோன்று அப்துல்லாஹ் பின் ஜத்ஆன் என்ற ஒரு மனிதர் இருந்தார். இவர் அபூபக்கர் ரலி அவர்களின் சிறிய பாட்டனாரின் மகனாவார். ஏழைகளுக்கு உதவுவது பசித்தவர்களுக்கு உணவளிப்பது என்று பல்வேறு நற்கருமங்களை செய்தவர். கொடை கொடுப்பதில் ஹாதம்தாயியை விட மேலானவர் என்று சிலர் சொல்லும் அளவு மக்களுக்கு வாரி வழங்குபவராக இருந்தார். நுபுவ்வத்திற்கு முன்பு நபி அவர்கள் இளைஞராக இருந்த அந்தப் பருவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் அநீதம் இழைக்கப் பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஹில்ஃபுள் ஃபுளூல் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர்.அவரைக் குறித்து ஒருநாள் அன்னை ஆயிஷா ரலி அவர்கள் இப்டிக் கேட்டார்கள் ;-

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ، قُلْتُ: يَا رَسُولَ اللّهِ! ابْنُ جُدْعَانَ كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ، وَيُطْعِمُ الْمِسْكِينَ، فَهَلْ ذَاكَ نَافِعُهُ؟ قَالَ: "لاَ يَنْفَعُهُ. إِنَّهُ لَمْ يَقُلْ يَوْماً: رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ

அல்லாஹ்வின் தூதர் அவர்களே இப்னு ஜத்ஆன் அவர்கள் உறவுகளை சேர்ந்து வாழுபவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே. அவைகள் அவருக்கு பலனளிக்குமா ? என்று கேட்டார்கள். அப்போது நபி அவர்கள் அவருக்கு பலனளிக்காது. ஏனெனில் அவர் ஒரு நாள் கூட இறைவா என்னை மன்னித்து விடு என்று கூற வில்லை (அதாவது அவர் ஈமான் கொள்ள வில்லை) என்றார்கள். (முஸ்லிம் ; 214)

எனவே அமல்கள் அமல்களாக கணிக்கப்படுவதற்கும் மறுமையில் அது பயன் தருவதற்கும் அடிப்படை ஈமான் இருக்க வேண்டும். ஈமான் இல்லாமல் செய்யப்படும் அமல்கள் பயனில்லாமல் போய் விடும். ஈமான் மட்டும் வந்து விட்டால் ஈமான் கொள்வதற்கு முன்பு ஒருவர் செய்த நற்காரியங்களைக்கூட பாதுகாத்து மறுமையில் அவரின் அந்தஸ்து உயர்விற்கு காரணமாக ஆக்கி விடும். அந்த ஆற்றல் ஈமானுக்கு உண்டு.

حَكِيمَ بْنَ حِزَامٍ رضي الله عنه أنَّهُ قالَ لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: أرَأَيْتَ أُمُورًا كُنْتُ أتَحَنَّثُ بها في الجاهِلِيَّةِ؟ هلْ لي فيها مِن شيءٍ؟ فقالَ له رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: أسْلَمْتَ علَى ما أسْلَفْتَ مِن خَيْرٍ

 நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு செய்த நற்காரியங்களுக்கு எனக்கு கூலி கிடைக்குமா என்று ஹகீம் பின் ஹிஜாம் ரலி அவர்கள் கேட்டார்கள். நீ முன்னால் செய்த அந்த நற்காரியங்களுடன் இஸ்லாத்திற்கு வந்து விட்டாய் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் ; 123)

ஈமானின் மதிப்பு என்ன ஈமானுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற ஆற்றல் என்ன என்பதை இதன் மூலம் நாம் நன்றாக புரிய முடிகிறது.  இந்த ஆற்றல் மிக்க ஈமானில் இன்றைக்கு நம்மில் எத்தனை பேர் உறுதியாக இருக்கிறோம் என்பது யோசிக்க வேண்டிய செய்தி. மனிதர்கள் செய்கிற அமல்களையெல்லாம் பாதுகாத்துத் தருகிற அவர்கள் செய்த குற்றங்களையெல்லாம் அழித்து அவர்களை தூய்மையானவர்களாக மாற்றுகின்ற உன்னதமான ஈமானில் நம்மில் எத்தனை பேர் சரியாக இருக்கிறோம் என்பது சிந்திக்க வேண்டிய செய்தி.

நடப்பவை அனைத்தும் இறை நாட்டப்படி நடக்கிறது. நன்மை தீமை லாப நஷ்டம் உயர்வு தாழ்வு அனைத்தும் இறைவனின் ஏற்பாட்டின் படியே நடக்கிறது என்று கூறுகிறது இஸ்லாம்.

وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ‌  وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ‌  قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ‌  فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ حَدِيْثًا‏

அவர்களை யாதொரு நன்மையடையும் பட்சத்தில் "இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது" எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டு விட்டாலோ "(நபியே!) இது உங்களால் தான் (எங்களுக்கு ஏற்பட்டது)" எனக் கூறுகின்றனர். (ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிட வில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லையே! (அல்குர்ஆன் : 4:78)

நபி அவர்களின் காலத்தில் வாழ்ந்த முனாஃபிக் – கள் ஏதாவது நன்மையான விஷயங்கள் நடந்தால் அல்லாஹ்வினால் நடந்தது என்று கூறுவார்கள். ஏதாவது தீயவை நடந்து விட்டால் உங்களால் தான் நடந்தது. உங்களை நாங்கள் பின்பற்றியதால் தான் நடந்தது என்று நபி அவர்களை குறை கூறுவார்கள். ஆனால் எல்லாம் என் புறத்திலிருந்தே நடக்கிறது என்று இறைவன் கூறுகிறான்.

وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌  اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏

"இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை" என்றும், "(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்; பின்னர் இறந்து விடுகின்றோம். காலத்தைத் தவிர (வேறு யாதொன்றும்) நம்மை அழிப்பதில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு யாதொரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப் போரைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் : 45:24)

إن العرب في الجاهلية كانت تقول : أصابني الدهر في مالي بكذا ، ونالتني قوارع الدهر وبوائقه ومصايبه ، ويقول الهرم : حناني الدهر . فينسبون كل شيء تجري به أقدار الله - عز وجل - عليهم من موت أو سقم أو ثكل أو هرم إلى الدهر ، ويقولون : لعن الله هذا الدهر

அறியாமைக் காலத்து அரபிகள் அவர்களது வாழ்க்கையில் மரணம், அழிவு,நஷ்டம்,இழப்பு,நோய்நொடிகள்,நெருக்கடிகள் இதுமாதிரியான சோதனைகள் ஏற்பட்டால் உடனே அவர்கள் காலத்தை குறை கூறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள்.காலம் தான் என் பொருளாதாரத்தை அழித்து விட்டது,காலத்தின் சோதனைகள் எனக்கு வந்து விட்டது இதுமாதிரியான வார்தைகளைச் சொல்வதன் மூலம் காலத்தைத் திட்டுவார்கள்.

இன்றைக்கு நம்மிடத்திலும் இதுமாதிரியான வார்த்தை பிரயோகம் இருக்கிறது. வாழ்கையில் நஷ்டங்களோ இழப்புக்களோ ஏற்படுகின்ற போது என் நேரம் சரியில்லை என்று நேரங்களை திட்டுவோம். அந்த வீணாப்போன மழையால் என் வியாபாரம் கெட்டு விட்டது என்று மழையை குறை சொல்வோம். சனியன் பிடித்த காய்ச்சல் வந்து விட்டது. அதனால் எனக்கு இந்த நிலைமை வந்து விட்டது என்று காய்ச்சலை பழிப்போம். இதுவெல்லாம் ஈமானுக்கு எதிரான வார்த்தை பிரயோகங்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

عَن ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُما، أَنَّ رَجُلاً لَعَنَ الرِّيحَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَعلى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ، فَقَالَ: «لا تَلْعَنِ الرِّيحَ، فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئاً لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ

ஒரு மனிதர் காற்றை சபித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி அவர்கள் காற்றை சபிக்காதே அது இறைவனால் ஏவப்பட்டிருக்கிறது. ஒருவன் ஒரு பொருளை சபிக்கிறான். அந்த பொருள் அந்த சாபத்திற்குறியதாக இல்லையெனில் அந்த சாபம் அவன் பக்கமே திரும்பும் என்றார்கள். (திர்மிதி ; 1978)

جابر رضي الله عنه: "أن رسول الله صلى الله عليه وسلم دخل على أم السائب - أو أم المسيب - فقال: ((ما لك يا أم السائب - أو أم المسيب - تزفزفين[1]؟!))، قالت: الحمى، لا بارك الله فيها، فقال: ((لا تسبي الحمى؛ فإنها تذهب خطايا بني آدم، كما يذهب الكير خبث الحديد  

உம்மு ஸாயிப் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்த நபி அவர்கள், ''உம்மு ஸாயிபே! உமக்கு என்ன? ஏன் துடிக்கிறீர்'' என்று கேட்டார்கள். ''காய்ச்சல் தான். அதிலே அல்லாஹ் பரக்கத்(அபிவிருத்தி) செய்யாதிருப்பானாக'' என்று உம்மு ஸாயிப் (ரலி) கூறினார். ''காய்ச்சலைத் திட்டாதே! நெருப்பு உலை, இரும்பின் துருவை நீக்குவது போல், காய்ச்சல் மனிதனின் குற்றங்களை நீக்கி விடும்'' என்று நபி கூறினார்கள். (முஸ்லிம் ; 2575)

قال ابن حجر قال المحققون من نسب شئا من الافعال الي الدهر حقيقة كفر

காலம் தான் தனக்கு இப்படி ஒரு சோதனையை ஏற்படுத்தியது என நம்பி அவ்வாறு ஒருவன் அந்த வார்த்தையை சொன்னால் அவன் காஃபிர் ஆவான் என இமாம்கள் கூறுவதாக அல்லாமா இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (ஃபத்ஹுல் பாரி)

முஸ்லிம்களாகிய நாம் அந்த நம்பிக்கையில் சொல்லா விட்டாலும் அவர்கள் சொல்வதைப் போன்று நாம் சொன்னால் அதுவும் குற்றமாகவே கருதப்படும்.

قال القرطبي يراد بابن ادم اهل الجاهلية ومن جري مجراهم ممن يطلق هذا اللفظ மனிதன் காலத்தைத் திட்டுகிறான் என்ற ஹதீஸில் மனிதன் என்பது அறியாமைக் காலத்து மக்களையும் அவர்கள் வழியில் சென்று அவ்வாறான வார்த்தைகளை யார் சொல்கிறார்களோ அவர்களையும் எடுத்துக் கொள்ளும் என்று குர்துபீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

واما من جرت هذه الالفاظ علي لسانه ولا يعتقد صحة ذلك فليس بكافر ولكنه قد تشبه باهل الكفر وبالجاهلية بالاطلاق وقد ارتكب ما نهاه النبي عنه فليتب وليستغفرالله

காலம் தான் சோதனையை ஏற்படுத்துகிறது என்று நம்பாமல் வெறுமனே அந்த வார்த்தைகளை மட்டும் ஒருவர் சொன்னால் அவர் காஃபிராக மாட்டார். என்றாலும் அறியாமைக் காலத்து மக்களுக்கு அவர் ஒப்பாகி விட்டார். நபி அவர்கள் தடுத்த ஒரு காரியத்தை அவர் செய்து விட்டார். அதனால் அவர் தவ்பா செய்ய வேண்டும் என்று குர்துபீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال ابن القيم ساب الدهر دائر بين امرين لا بد له من احدهما اما سبه لله او الشرك به فانه اذا اعتقد ان الدهر فاعل مع الله فهو مشرك وان اعتقد ان الله وحده فاعل وهو يسب من فعله فقد سب الله

காலத்தை திட்டுபவன் இரு விஷயங்களில் ஒன்றை செய்கிறான். 1, அல்லாஹ்வைத் திட்டுகிறான். 2, இணை வைக்கிறான். காலம் தான் சோதனை ஏற்படுத்தியது என நம்பி அவன் திட்டினால் அவன் இணை வைத்து விட்டான். இறைவன் தான் எல்லாவற்றையும் செய்கிறான் என்ற நம்பிய நிலையில் ஒருவன் காலத்தை திட்டினால் அவன் இறைவனைத் திட்டுகிறான். எனவே இரண்டுமே தவறு தான் என்று இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (ஜாதுல் மஆத்)   

ஆக காலத்தை திட்டுவதை எந்த வகையிலும் இஸ்லாம் அனுமதிக்க வில்லை. காலத்தை திட்டுவது இறைவனைத் திட்டுவதாக அமையும் என்பதை நினைவில் கொண்டு நாம் நம் வார்தையில் கவனமாக இருக்க வேண்டும். நாம் நம்பிக்கையில் மட்டுமல்ல, நம் வார்த்தைகளில் கூட உண்மை முஃமின்களாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தருகின்ற இஸ்லாம் ஒரு முஸ்லிம் எவ்வாறு பேச வேண்டும். எந்த மாதிரியான வார்த்தை பதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுத் தருகின்றது.

مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ‌ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ‌ 

"உனக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது" என்றும் "உனக்கு யாதொரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால் தான் வந்தது" என்றும் (நபியே! அவர்களுக்கு கூறுங்கள்) (அல்குர்ஆன் : 4:79)

நன்மைகளை படைத்தவனோடு இணைக்க வேண்டும். குறைகளும் தவறுகளும் தீமைகளும் ஏற்படுகிற போது அது நம்மோடு இணைக்கப்பட வேண்டும் என்று குர்ஆன் பேசுகிறது.  

أبي ذر عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى : ( يا عبادي إنما هي أعمالكم أحصيها لكم ثم أوفيكم إياها ، فمن وجد خيرا فليحمد الله  ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه

நன்மைகளை ஒருவர் பெற்றுக் கொண்டால் அவர் அல்லாஹ்வை புகழ்ந்து கொள்ளட்டும். தீமைகளைப் பெற்றுக் கொண்டால் அவர் தன்னையே பழித்துக் கொள்ளட்டும். (முஸ்லிம் ; 2577)

இஸ்லாம் வழிகாட்டுவது போல் அழகான வாழ்க்கை வாழ்ந்து அழகான வார்த்தைகளை பேசி அல்லாஹ் நமக்கு பொக்கிஷமாக அளித்த ஈமானைப் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக!

8 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete
  5. Masha allaah jazakkumullah khairan

    ReplyDelete
  6. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete