Friday, November 8, 2024

அமெரிக்க ஆட்சி மாற்றம்

 

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47 வது அதிபராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்காவின் இந்த அதிபர் தேர்தலில் மொத்தம் 186 மில்லியன் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்கு பதிலாக 'எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டு மொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.538 ல் 295 வாக்குகளைப் பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.

அமெரிக்க தேர்தல் முடிவைப் பற்றி இங்கே நாம் பேசுவதற்கான காரணம் அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் மற்ற உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.குறிப்பாக இந்தியாவின்   

சர்வதேச அரசியல் குறித்து பேசும் பிரிட்டனில் உள்ள மூத்த பத்திரிகையாளர் சிவ்காந்த் கூறுகிறார் :

அமெரிக்கா முன்பு போல் தற்போது பலமாக இல்லை. ஆனாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் சர்வதேச நிறுவனங்களில் இன்னும் இருக்கிறது" இந்தியா போன்ற பெரிய நாடுகளின் கருத்துகள் முறையாக கேட்கப்படுவதற்கும், முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவும் ஐ.நாவில் மாற்றங்களைக் கொண்டுவர இந்தியா பல காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் அமெரிக்கா இதற்கு தயாரானால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார்.

அமெரிக்காவில் எந்த விதமான முடிவுகள் எட்டப்பட்டாலும், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அரசியலில் அது பாதிப்பை ஏற்படுத்தும்.மட்டுமின்றி வர்த்தகமாக இருக்கட்டும், தூதரக ரீதியிலான விவகாரமாகட்டும், சுற்றுச்சூழல் பிரச்னைகள், காலநிலை மாற்றம், பயங்கரவாதம் என எதுவாக இருந்தாலும் அதில் பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார். அதனால் அமெரிக்க அதிபர் தேர்தலை உலகம் மிகவும் உற்று கவனிக்கின்றது.

இப்போது டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருக்கின்றார். அதுவும் கடந்த தேர்தலில் தோற்று இம்முறை வெற்றி பெற்றது பெரும் வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகின்றது.

டொனால்டு டிரம்ப் அதிபராக வந்திருப்பது இந்தியாவிற்கு சாதகமா பாதகமா என்பதை யோசிக்க வேண்டும்.டிரம்ப் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறுகையில்,"டிரம்ப்பைப் பொறுத்தவரை, வர்த்தகம் மற்றும் குடியேற்றம் தொடர்பாக சில கடினமான முடிவுகளை எடுப்பார். டோனால்ட் டிரம்ப் அவரது கடந்த ஆட்சியில் வெளிநாட்டவர் குடியேற்றத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இதனால், H1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியர்களுக்கு அப்போதே அது பெருந்தலை வலியாக இருந்தது. அது இந்த ஆட்சிக் காலத்திலும் தொடர வாய்ப்புள்ளது.

இஸ்லாமியர்களாக இருக்கின்ற நமக்கு இந்த ஆட்சி மாற்றம் நன்மையா தீமையா என்பதை முக்கியமாக சிந்திக்க வேண்டும்.அமெரிக்காவைப் பொறுத்த வரை அது இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்கும் நாடு.இதுவரை ஆட்சியில் இருந்த ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவிக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு உதவி செய்தாலும் முழு உடன்பாடு இல்லாதவர். அதனால் அதிபராக இருந்த கால கட்டத்தில் ஒரு தடவை கூட இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுக்க வில்லை.ஆனால் டிரம்ப் வெற்றி பெற்றால், இஸ்ரேல் விரும்பியதை விருப்பம் போல் செய்யட்டும் என்ற சுதந்திரம் அந்த நாட்டிற்கு வழங்கப்படும். வன்முறை அதிகரிக்கக் கூடும்," என்று அரசியல் நிபுணர்கள் கூறினார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, வரலாறு மீண்டும் திரும்பி உள்ளது. உங்களின் வரலாற்று வெற்றி என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உறவை பலப்படுத்துவதற்கான புதிய தொடக்கமாக அமையும். இது பெரிய வெற்றி என வாழ்த்து தெரிவித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

டொனால்ட் டிரம்பு குறித்து காஸா பகுதி மக்கள் கூறிய கருத்து தான் இங்கே மிகவும் கவனிக்கத்தக்கது. அவர்களில் அதிகமானோர் டிரம்ப் ஆட்சிக்கு வரக்கூடாது. ஏனெனில் அவர் இஸ்ரேலுக்கு ரொம்ப சாதகமாக செயல்படுவார். இஸ்ரேல் எதைக் கேட்டாலும் செய்து கொடுப்பார். அவருடைய ஆட்சியின் போது தான் இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலம் அறிவிக்கப்பட்டது. மற்றும் அவருடைய ஆட்சியில் நாங்கள் நிறைய பேரழிவுகளை சந்தித்தோம். மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேலின் அட்டூடூழியம் இன்னும் அதிகரித்து விடும். எனவே அவர் வரக்கூடாது என்று கூறினார்கள்.

என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஜோ பைடன் கட்சி தோற்றுப் போனதற்கான காரணத்தை சிந்திக்க வேண்டும். முதலில் அவர் தான் அதிபராக போட்டியிடுவதற்கு தயாராக இருந்தார்.ஆனால் அவருடைய வயது மூப்பினால் போட்டியில் நிற்க முடிய வில்லை. தனக்குப் பகரமாக துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸை நிறுத்தினார். இதில் தான் ஜோ பைடன் தவறு செய்து விட்டார். தனக்கு பின்னால் சரியான ஒரு நபரை அவர் தேர்வு செய்ய வில்லை. எந்த இயக்கமாக இருந்தாலும் கட்சியாக இருந்தாலும் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தனக்குப் பின்னால் பொறுப்பிற்கு வருவதற்கு தகுதியான மிகச்சரியான ஒருவரை அடையாளப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அந்த கட்சி ஆட்டம் கண்டு விடும். தமிழகத்தில் கூட அதனால் ஒரு கட்சி ஆட்டம் கண்டு விட்டது.

இந்த இடத்தில் தான் நபி ஸல் அவர்களின் தீட்சண்யமான பார்வையையும் தொலை நோக்கு சிந்தனையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தனக்குப் பின்னால் யார் கலீஃபாக வர வேண்டும். யார் அதற்கு தகுதியானவர் என்பதை தன் வாழ்நாளிலேயே அடையாளப்படுத்தி விட்டார்கள்.

أن عائشةَ قالت: لما استُعزَّ برسولِ الله صلى الله عليه وسلم قال: ((مُروا أبا بكرٍ فلْيُصل بالناس، قالت: قلت: يا نبيَّ الله، إن أبا بكر رجلٌ رقيقٌ، ضعيفُ الصوت، كثيرُ البكاء، إذا قرأ القرآن! قال: ((مُروه فليُصلِّ بالناس))، قالت: فعُدتُ بمثلِ قولي، فقال: ((إنكن صواحبُ يوسف، فمُرُوه فليصلِّ بالناس))،

நபி ஸல் அவர்களின் மரண நேரம் நெருங்கிய போது ஆயிஷா ரலி அவர்களை அழைத்து அபூபக்கர் ரலி அவர்களை எனக்குப் பதிலாக மக்களுக்கு தொழ வைக்கும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு ஆயிஷா ரலி அவர்கள், இல்லை, என் தந்தை இலகிய மனம் கொண்டவர். நீங்கள் நின்ற இடத்தில் நின்று தொழ வைக்கும் தைரியமும் துணிச்சலும் அவர்களுக்கு இல்லை என்று சொன்னார்கள். ஆனால் நபி ஸல் அவர்கள் அபூபக்கர் ரலி அவர்கள் தான் தொழுகை நடத்த வேண்டும் என்று உறுதியாக சொல்லி விட்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

 பல முறை ஆயிஷா ரலி அவர்கள் மறுத்தும் கூட நபி ஸல் அவர்கள் அபூபக்கர் தான் தொழ வைக்க வேண்டும் என்று உறுதியாக சொன்னதற்கான காரணம் அப்போது அவர்களுக்கு புரிய வில்லை. பின்பு தான் புரிந்தது.

நபி ஸல் அவர்கள் உலகத்தை விட்டு பிரிந்து விடுகிறார்கள். அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் இடத்திலிருந்து ஆட்சிப் பொறுப்பை கவனிப்பது யார், அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர்வது யார், கலீபாவாக அடுத்து யாரை நியமிப்பது என்ற பிரச்சனை எழுகிறது. ஏனென்றால் நபி ஸல் அவர்கள் தனக்குப் பிறகு இவர்தான் கலீபாவாக வருவார் என்று யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல வில்லை. எனவே யாரை நியமிப்பது என்று சஹாபாக்கள் யோசிக்கிறார்கள். அந்த பொறுப்புக்கு வருவதற்கு தகுதியான நிறைய சஹாபாக்கள் இருக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் நபி ஸல் அவர்களால் முதன்மை படுத்தப்பட்ட நிறைய ஸஹாபாக்கள் இருக்கிறார்கள், குறிப்பாக உற்ற தோழராக இருந்ததோடு மட்டுமின்றி நபியைக் கொண்டு ஈமான் கொண்ட முதல் மனிதரான ஹள்ரத் அபுபக்கர் ரலி அவர்கள் இருக்கிறார்கள். அவரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி ஸல் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட, அவர்கள் முன்மொழிந்த பல்வேறு விஷயங்களை மார்க்கச் சட்டமாக அல்லாஹ் இயற்றும் அளவிற்கு இறை நெருக்கத்தை பெற்ற உமர் ரலி அவர்கள் இருக்கிறார்கள், நபி ஸல் அவர்களின் இரு மகள்களை திருமணம் முடித்து தின்னூரைன் இரு ஒளியை உடையவர் என்று சொல்லப்பட்ட உஸ்மான் ரலி அவர்கள் இருக்கிறார்கள், நான் அவரைச் சார்ந்தவன், அவர் என்னைச் சார்ந்தவர் என்று சொல்லும் அளவுக்கு நபியின் நெருக்கத்தைப் பெற்ற ஹள்ரத் அலி ரலி அவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் நபியின் நெருக்கத்தை பெற்றவர்கள் தான். அந்த பொறுப்புக்கு வருவதற்கு தகுதியானவர்கள் தான். இருந்தாலும் யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் நிலவியது. ஆனால் ஒரு கட்டத்தில் எல்லோரும் அபுபக்கர் ரலி அவர்களைத் தான் முன்மொழிந்தார்கள். அதற்கு மிக முக்கியமான காரணம் அந்த முந்திய  நிகழ்வு தான்.

تقدم أبو عبيدة بن الجراح الأمين رضي الله عنه وقال: لا ينبغي لأحد بعد رسول الله صلى الله عليه وسلم أن يكون فوقك يا أبا بكر، أنت صاحب الغار مع رسول الله صلى الله عليه وسلم، وثاني اثنين، وأمّرك رسول الله صلى الله عليه وسلم حيث اشتكى فصليت بالناس، فأنت أحق الناس بهذا الأمر؟

அபூ உபைதா ரலி அவர்கள் எழுந்து நின்று அபூபக்கர் சித்திக் ரலி அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதருக்குப் பிறகு உங்களை விட சிறந்தவர் யாருமில்லை. ஏனென்றால் ஸவ்ர் குகையில் நபி ஸல் அவர்களோடு நீங்கள் தான் இருந்தீர்கள். நபி ஸல் அவர்கள் தொழ வைக்க முடியாத அந்த நிலை ஏற்பட்ட போது உங்களைத்தான் தொழ வைக்கும்படி உத்தரவிட்டார்கள். எனவே இந்த ஆட்சி பொறுப்பிற்கு நீங்கள் தான் தகுதி என்று கூறினார்கள்.

أن عمر بن الخطاب رضي الله عنه قال للناس: ألستم تعلمون أن رسول الله صلى الله عليه وسلم قدّم أبا بكر للصلاة؟ قالوا: بلى. قال: فأيكم تطيب نفسه أن يتقدم مَن قدّمه رسول الله صلى الله عليه وسلم؟ قالوا: لا أحد، معاذ الله أن نتقدم على أبي بكر.

உமர் ரலி அவர்கள் கூறினார்கள் ; நபி ஸல் அவர்கள் தனக்குப் பிறகு தொழுகை நடத்துவதற்கு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களைத் தான் முற்படுத்தினார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? ஆம் என்று மக்கள் பதில் சொன்ன போது நபி ஸல் அவர்களால் முற்படுத்தப்பட்ட ஒருவரை விட முந்தி செல்வதற்கு உங்களில் யாருடைய மனம் இடம் கொடுக்கும் என்று கேட்டார்கள்.

 قال عليٌّ رضي الله عنه: لَمَّا قُبِض رسول الله صلى الله عليه وسلم، نظَرْنا في أمرِنا، فوجدنا النبي صلى الله عليه وسلم قد قدَّم أبا بكرٍ في الصلاة، فرضِينا لدُنيانا مَن رضي رسولُ الله لدِينِنا؛ فقدَّمنا أبا بكرٍ[

நபி ஸல் அவர்கள் உலகத்தை விட்டு பிரிந்த போது அடுத்து அந்த பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்று நாங்கள் யோசித்தோம். அப்போது அபுபக்கர் சித்திக் ரலி அவர்களைத்தான் அந்தப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். ஏனெனில் அவர்களைத்தான் நபி ஸல் அவர்கள் தன் இடத்தில் நின்று தொழுகை நடத்தும்படி ஏற்படுத்தினார்கள். எங்களுடைய தீன் விஷயத்தில் பெருமானார் ஸல் அவர்களால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஒருவரையே நாங்கள் எங்களுடைய துன்யாவிற்கும் பொருந்திக் கொண்டோம் என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

பலமுறை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் என் தந்தை அபூபக்கர் அவர்களை தொழ வைக்கச் சொல்ல வேண்டாம். அவரால் தொழ வைக்க முடியாது என்று சொல்லியும் அவர் தான் தொழ வைக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் உறுதியாக சொன்னதற்கு காரணம்.என் மறைவிக்குப் பின்னால் என் இடத்தில் அவர் தான் நிற்க வேண்டும்,கிலாஃபத்திற்கு அவர் தான் வர வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தி விட்டார்கள்.

 

ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்களும் அதே போன்று தனக்குப் பின்னால் சரியான தலைமையை அடையாளப்படுத்தி விட்டார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّهُ قَالَ: أَفَرَسُ النَّاسِ ثَلَاثَةٌ: عَزِيزُ مِصْرَ حِينَ قَالَ لِاِمْرَأَتِهِ: ﴿أَكْرِمِي مَثْوَاهُ﴾ وَالْمَرْأَةُ الَّتِي قَالَتْ لِأَبِيهَا [عَنْ مُوسَى](٤) : ﴿يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الأمِينُ﴾ [الْقَصَصِ: ٢٦] وَأَبُو بَكْرٍ الصِّدِّيقُ حِينَ اسْتَخْلَفَ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا(٥)

வரலாற்றில் மூன்று நபர்கள் முக்கியமான தருணத்தில் மிகவும் தெளிவாக முடிவெடுத்தார்கள். அது அவர்களின் அறிவார்ந்த அணுகுமுறையைக் காட்டுகின்றது. அவர்கள் மிகவும் தொலை நோக்கு சிந்தனை உடையவர்கள் என்பதை உணர்த்துகின்றது என்று இப்னு மஸ்வூ ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

1.       யூசுஃப் அலை அவர்கள தன் அரண்மனைக்கு அழைத்து வந்த மிஸ்ர் நாட்டு அரசர்.

2.   மூஸா அலை அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று தன் தந்தையிடம் கூறிய அந்த பெண்மனி.

3.   தனக்குப் பின்னால் உமர் ரலி அவர்களை கலீஃபாவாக அடையாளம் காட்டிய அபூபக்கர் ரலி அவர்கள்.

 

அமெரிக்க முன்னால் அதிபர் ஜோ பைடன் சரியான நபரை அடையாளம் காட்ட வில்லை என்பது ஒரு தவறு.தனக்குப் பகரமாக ஒரு பெண்ணை நிறுத்தியது அவர் செய்த இரண்டாவது தவறு.அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஒரு பெண் கூட அதிபராக வெற்றி பெற்றதில்லை. காரணம் அமெரிக்க மக்கள் ஒரு பெண்ணை அதிபராக தேர்வு செய்ய தயாராக இல்லை.      

அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரியா சங்கர் என்பவர் bbc யிடம் கூறினார் ;  ஒரு பெண்ணை தங்களின் அதிபராக ஏற்றுக்கொள்ள அமெரிக்கர்கள் இன்னும் தயாராக  வில்லை என்றே நான் நினைக்கிறேன்”.

அதனால் தான் டிரம்ப் ஒரு மோசமான ஆட்சியாளராக இருந்தும் அமெரிக்க முஸ்லிம்களின் கனிசமாக ஓட்டு டிரம்பிற்கு விழுந்திருக்கின்றது.

இஸ்லாமும் அதைத்தான் சொல்கிறது. பெண்களுக்கு இஸ்லாம் எல்லா சலுகைகளையும் உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. ஆனால் ஒரு பெண் பெரிய பொறுப்பிற்கு வருவதை விரும்ப வில்லை.

لن يفلح قوم ولوا أمرهم امرأة

ஒரு பெண்ணை பொறுப்பில் அமர்த்துகின்ற ஒரு சமூகம் நிச்சயம் ஈடேற்றம் பெறாது. (புகாரி ; 7099) 

لما قَتَل شيرويه أباه كسرى، لم يملك سوى ثمانية أشهر، ويُقال ستة أشهر، ثم هلك، فملك بعده ابنه أردشير، وكان له سبع سنين فقُتِل، فملكت بعده بوران بنت كسرى، فبلغ هذا رسولَ الله صلى الله عليه وآله وسلم، فقال: «لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً»؛ وكذلك كان، فإنهم لم يستقم لهم أمر

பாரசீக மன்னன் கிஸ்ராவிற்குப் பின்னால் அவரின் மகள் ஆட்சிக்கு வந்த செய்தியை அறிந்த போது தான் நபி ஸல் அவர்கள் இந்த வார்த்தையை சொன்னார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌ 

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 4:34)

ஒரு குடும்பத்தின் விவகாரங்களுக்கே ஒரு பெண் தகுதியில்லை என்றால் ஒரு நாட்டை ஆளுவதற்கு ஒரு பெண் எப்படி தகுதி பெற்றவளாக இருப்பாள் என்பது அறிஞர்களின் கேள்வி.

நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் ஒரு சமூகம் தான் வெற்றி பெறும். அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றாத சமூகம் நஷ்டமடையும்.

وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌  وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏

 (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.(அல்குர்ஆன் : 59:7)

குறிப்பு : கோவை அப்துல் அஜீஸ் பாகவி ஹழ்ரத் அவர்கள் பதிவு செய்த ஒரு காணொலியை அடிப்படையாகக் கொண்டு இந்த குறிப்பு தயார் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment