Tuesday, January 21, 2014

நோயாளிகளை நலம் விசாரிப்போம்



 உலகலாவிய மார்க்கமான இஸ்லாம்,வெறும் ஆன்மீகத்தை மட்டும் போதிக்கும் மார்க்கமல்ல.மாறாக முழு வாழ்க்கை திட்டத்தையும் எடுத்தியம்பக் கூடிய மார்க்கம்.

மனித சமூகத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும்.சமுதாய நலன்களை முக்கியத்துவப் படுத்துவதிலும்,மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது. அந்த வரிசையில் நோயுற்றவர்களை நலம் விசாரித்தலும் ஒன்று.

ஒரு சகோதரர் நோயுற்றால் அவரை சந்தித்து நலம் விசாரித்து கவலைப்பட வேண்டாம் விரைவில் உனக்கு சுகம் கிடைக்கும் என்று சொல்லி ஆறுதல் கூற வேண்டுமென இஸ்லாம் கற்றுத்தருகின்றது.
அஸ்ஸலாமு அலைக்கும் அதாவது உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று ஒருவர் கூறினால், அவருக்கு வ அலைக்குமுஸ்ஸலாம் உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும் என்று பதில் கூறுதல்,நோயாளியை நலம் விசாரித்தல், ஒருவர் மரணித்து விட்டால் அவரது இறுதி காரியங்களில் கலந்து கொள்ளுதல்,அழைத்தால் பதில் கொடுத்தல், தும்மியவருக்காக பிரார்த்தனை செய்தல் ஆகிய ஐந்து விஷயங்களும் ஒரு முஸ்லிம் தன் சகோதரனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்று இஸ்லாம் போதிக்கிறது.

\மறுமை நாளில் அல்லாஹ், மனிதர்களை அழைத்து அடியானேநான் சகவீனமாக இருந்தேன்.நீ ஏன் என்னை நலம் விசாரிக்க வில்லை? எனக் கேட்பான். அப்பொழுது, என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தின் இரட்சகனாக இருக்கிறாய்! என அடியான் கேட்பான்.அதற்கு அல்லாஹ், உன் சகோதரனான என் அடியான் சகவீனம் கண்டிருந்தான். அவனை நீ நலம் விசாரிக்க வில்லை என்பதை அறிவாயா? என்று கேட்பான் என்பதாக கண்மனி நாயகம் [ஸல்] அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அடியானின் சுகவீனத்தை தன் சுகவீனமாக அல்லாஹ் சித்தரிக்கிறான் என்பதைப் பார்க்கும்போது, பிறர் நலம் பேணுவதில், மனித நேயத்தோடு வாழ்வதில் பிறர் மனதை குளிர்விப்பதில் இஸ்லாம் காட்டுகின்ற அக்கரையை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
பொதுவாக, ஒருவர் நோயுற்றால் இயல்பிலேயே அவருடைய மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டிருக்கும். அதுவும் நோயின் வீரியம் கொஞ்சம் அதிகமாக இருந்தால்,அவரின் பயமும் படபடப்பும் இன்னும் அதிகமாகி விடும்.

நோயாளிகளைக் குறித்து வீட்டிலுள்ளவர்களின் கவலையோ அதை விட மேலாகத்தான் இருக்கும் என்பது கண்கூடு. அந்த தருணத்தில் பக்கத்தி லுள்ளவர்களின் ஆறுதலான வார்த்தைகள் நிச்சயம் நோயுற்றவருக்கு நிம்மதியைத் தரும்,மன தைரியத்தை பரிசளிக்கும்,அவரின் உள்ளத்தை குளிர்விக்கும் என்பது அனுபவ ரீதியாக நாம் வாழ்வில் கண்டு வருகின்ற உண்மை.

மருந்து மாத்திரைகள் நோயாளியின் பாதி நோயை குணப்படுத்தும் என்றால், அவருக்கு கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகள் தான் மீதி நோயை குணமாக்கும் என்பது மனோதத்துவ நிபுணர்கள் கூறும் பேருண்மை.

இதுபோன்ற உயர்ந்த நோக்கங்களை கருத்தில் கொண்டு தான் இஸ்லாம் உடம் நலம் விசாரிப்பதை முஸ்லிம்களுக்கு கடமையாகவே ஆக்கியிருக்கிறது.

எனவே இஸ்லாம் காட்டித்தருகின்ற வழியில் நோயாளிகளை நலம் விசாரிப்போம், மனித நேயம் காப்போம். வஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]


No comments:

Post a Comment