சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்
என்பார்கள். அதுபோல நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் நெடுநாள் வாழ்ந்து சாதனைகள்
புரிய முடியும். அந்த ஆரோக்கியத்திற்குத் தேவை நல்ல இரவு தூக்கம். ஆனால் இன்றைக்கு
நாகரீகம் என்ற பெயரில்
பார்ட்டி, அரட்டை,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இரவு
தூக்கத்தைத் தொலைப்பவர் சிலர். உழைப்பு என்ற பெயரில்,சம்பாத்தியம் என்ற பெயரில்
கண்களுக்கும் மூளைக்கும் ஓய்வு கொடுக்காமல் இரவு தூக்கத்தை இழப்பவர் பலர்.
வாழ்க்கைக்கு உழைப்பு அவசியம் தான்.ஆனால் அந்த உழைப்புக்கு அவசியம் உடல்
ஆரோக்கியம்.அந்த உடல் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக அமைவது இரவு தூக்கம். தூக்கத்தைத்
துறந்து உழைப்பைத் துரத்தினால் பிறகு தூக்கமின்மையைத் துரத்த மருந்துகளைத் தேடி
அலைய வேண்டிய நிலை ஏற்படும்.
உழைக்க வேண்டிய நேரத்தில் உழைத்து உறங்க வேண்டிய நேரத்தில் உறங்கி வாழ்வில்
உயர்ந்தவர்கள் சிலர். தூக்கத்தை விலையாக்கி மாடி மேல் கட்டி இறுதியில் மன இறுக்கம்
கண்டு வாழ்வின் நிம்மதியை இழந்தவர்கள் பலர்.
தூக்கம் மனித உடலுக்கும்,உள்ளத்திற்கும் தேவை.ஆனால் மனிதனின் தேவைகள் அவனைத்
தூங்க விடுவதில்லை. வருவாய்க்காக அதிக நேரம் உழைப்பதால் ஏழைகளின் உறக்கம்
குறைகிறது. இருக்கும் செல்வத்தைப் பெருக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்ற
பேராசையால் பணக்காரர்களின் உறக்கம் பறிபோகிறது.
தூக்கம் என்பது அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற மாபெரும் அருட்கொடை.பகலில்
வாழ்க்கைப் பிரச்சனைகளில் உழன்று,உழைத்து கலைப்படைவதால் குறைந்து விட்ட தேக
ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்ளவும்,கலைத்துப் போன நரம்பு மண்டலத்திற்கும்,உடலுக்கும்
ஓய்வு கிடைக்கவும் அல்லாஹ் செய்த ஓர் ஏற்பாடு தான் இரவு தூக்கம்.
உறக்கம் என்பது மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தவிர்க்க முடியாத
ஓர் ஆயுட்காலத் தேவையாகும்.அறவே உறக்கமின்றி எந்த உயிரினமும் ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு மேல் இருந்தால் உயிரிழந்து விடும் என்பதினால் உயிர்களின் நலன் கருதி
அல்லாஹ்வே உறக்கத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்துகிறான். உறங்கவே கூடாது என்று ஒருவர்
முடிவெடுத்து அதற்காக முயற்சித்தாலும் அவரை தூக்கம் விடாது கவ்விக் கொள்ளும்.
உறக்கத்தில் இருப்பவர்,உறங்கும் தருணத்தில், தாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை
உணர முடியாதவாறு இருக்கிறார். விழித்தெழுந்த பின்பும் கூட உறக்கத்தின் நிலைகள்
பற்றி அவர் அறியாதவராகவே இருக்கிறார் என்பதை பார்க்கும் போது, “உறக்கம் மரணத்தின் சகோதரன்” என்று நபிகள் நாயகம் [ஸல்] குறிப்பிட்டது தின்னமாகிறது.
குறிப்பாக இரவு உறக்கம் இல்லாதவர்களுக்கு மூளை செயல்பாடு குறைந்து போவதாகவும்,உயிரணுக்கள் குறைவதாகவும் உடல் பலகீனமடைவதாகவும் இன்றைய மருத்துவம் குறிப்பிடுகிறது. “மனிதர்களே! நீங்கள் பகலில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை தேடுவதற்காகவும்,இரவில் அமைதி பெறுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் உங்களுக்கு அல்லாஹ் இரவு பகலை ஏற்படுத்தியுள்ளான்” என்ற திருக்குர்ஆனின் வசனம் இன்றைய மருத்துவ கண்டுபிடிப்பை ஊர்ஜிதம் செய்கிறது.
நபி [ஸல்] அவர்கள் கூட இரவு உணவுக்குப் பிறகு தூங்காமல்
பேசிக்கொண்டிருப்பதை வெறுத்திருக்கிறார்கள்.
எனவே அல்லாஹ் வழங்கிய சிறந்த அருட்கொடையான உறக்கத்தை முறையாக
பயன்படுத்துவோம்.வாழ்க்கையில் பல சாதனைகள் புரிவோம். வஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
No comments:
Post a Comment