Tuesday, January 21, 2014

அளவான உணவு வழமான வாழ்வு



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே! இன்று நோய்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதனால் நமது ஆரோக்கியமும் குறைந்து கொண்டே வருகிறது. இஸ்லாம், நோயில்லாமல் நலமாக வாழ நமக்கு வழிவகை செய்துள்ளது. பொதுவாக உண்ணக்கூடிய உணவு முறையில் கட்டுப்பாடு இல்லாததே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என இன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த உண்மையை இஸ்லாம்,1400 வருடங்களுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டது.

வாழ்வியலின் எல்லா விதிகளும் குர்ஆனில் இருக்கிறது என்றால், ஆரோக்கியத்திற்கு ஆதாரமாகத் திகழும் மருத்துவ மூல விதி எதுவும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா?  என்று கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷாவிடம் மருத்துவர் ஒருவர் கேட்டார். அப்போது அந்த அவையில் வீற்றிருந்த அலி இப்னு ஹுஸைன் அல்வாகிதீ என்ற அறிஞர் எழுந்து, உடல் நலத்திற்கான {Golden Rule} தங்க விதியொன்று குர்ஆனில் கூறப்பட்டுள் ளது  என்றார். அது என்னவென்று வினவப்பட்ட போது, உண்ணுங்கள் பருகுங்கள் அளவு கடந்து விடாதீர்கள் என்ற திருமறைக் குர்ஆனின் [7-31] வசனத்தைப் படித்துக் காட்டினார்.கேட்டதும் அசந்து போன அந்த மருத்துவர்,இது ஒரு அற்புதமான விதி என்பதை ஒப்புக்கொள்கிறேன். 

இவ்வாறே உங்கள் நபியின் வாழ்வில் ஆன்மீக போதனைகள் நிறைந்திருப்பதை போல், உடல் நலம் தொடர்பான ஏதாவது மூலவிதிகள் இருக்கிறதா? என மீண்டும் கேள்வி எழுப்பினார்.   அதற்கும் ஆம்..!  என பதிலளித்த அந்த அரசரவை அறிஞர் அலி இப்னு ஹுஸைன் அவர்கள் ; இரைப்பைதான்  எல்லா வியாதிகளுக்கும் அடிப்படை. நீங்கள் உங்களின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுங்கள். பத்தியம் சிகிச்சையை விட மேலானது.  என்ற நபியின் வாக்கை எடுத்துக் கூறியதும்  அதிசயித்துப் போனார் அந்த மருத்துவ அறிஞர்

உணவு அதிகமாக உட்கொள்வதே எல்லா வியாதிகளுக்கும் மூலக்காரணம் என்பதை இப்போது எல்லா மருத்துவமும் உறுதி செய்கிறது. எந்த ஒரு இயந்திரமும், கூடுதல் சுமை அதில் ஏற்றப்படும்போது அது பழுதாகி செயலிழந்து விடும் என்பது யதார்த்தம். இரைப்பையும் அவ்வாறு தான். குறைந்த அளவு உணவை அது உள்வாங்கினால் அதை ஜீரணமாக்கி நல்ல பலனைத்தரும். அதிக உணவை அதில் அடைத்தால் ஆபத்துதான் ஏற்படும். 

நாயகம் ஸல் அவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பசியாற சாப்பிட்டதில்லை. ஒரு நாள் சாப்பிட்டால் மறுநாள் பட்டினியாக இருப்பார்கள். இரண்டு தினங்கள் சாப்பிட்டால் மூன்றாவது நாள் பட்டினியோடு இருப்பார்கள். சாப்பிட்டாலும் குறைவாக சாப்பிடு வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவார்கள்.இதுவெல்லாம் இப்போது மருத்துவ உலகம், நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் பரிந்துரைகளாகும்.

ஒரு அரசர் தனது நாட்டிலுள்ள சிறந்த மருத்துவர் ஒருவரை மதீனத்து  மக்களுக்கு சிகிச்சையளிக்க அனுப்பிவைத்தார்.அப்போது மதீனாவில் வேறு எந்த மருத்துவரும் இல்லாததால் தனக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்ப்புடன் சென்ற அந்த மருத்துவருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில்அங்கு அவரிடம் சிகிச்சை பெற ஒரு நோயாளியும் வரவில்லை. எனவே அவர், நாயகம் ஸல் அவர்களின் சமூகம் வந்து, இங்கு நான் வந்ததே எனக்கு இங்கு அதிகம் வரவேற்பு கிடைக்கும் எனறு நினைத்துத்தான். ஆனால் இங்கே யாருமே சிகிச்சைக்கு வரவில்லையே என முறையிட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள், இங்குள்ள மக்கள் பசிக்கும்போது சாப்பிடுவார்கள். இன்னும் கொஞ்சம் பசி  மீதம் இருக்கும் போது உணவிலிருந்து  தங்களது கரத்தை எடுத்து விடுவார்கள். இதனால் இங்கு நோயாளிகள் ரொம்பக்குறைவு" என அவருக்கு எடுத்துரைத்தார்கள்

1400ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் அறிமுகம் செய்த ஆரோக்கியத்திற்கான இந்த இரகசியம் கண்டு மருத்துவ,விஞ்ஞான உலகம் இன்றும் அதிசயித்து நிற்கிறது. ஆகவே  உணவைக் குறைப்போம்.நோயை ஒழிப்போம்.வளமோடு வாழ்வோம். அல்லாஹ் அருள் புரிவானாக வஸ்ஸலாம்.


No comments:

Post a Comment