Tuesday, January 21, 2014

கடனும் இஸ்லாமும்


 இன்றைக்கு உலகில் வாழும் அன்றாடங்காட்சி முதல் அரசாட்சி புரியும் ஆட்சியாளன் வரை எல்லோரிடத்திலும் இருப்பது கொடுக்கல்,வாங்கல். இதில் ஈடுபடாதவர்  உலகில் யாருக்கும் இருக்க முடியாது.


ஆனால் இந்த கொடுக்கல் வாங்கல், அதில் ஈடுபடக்கூடியவர்களுக்கு மத்தியில் பிணைப்பை ஏற்படுத்தாமல் பிளவை ஏற்படுத்துவது நாம் அன்றாடம் கண்டு வருகின்ற உண்மை.

காரணம், இன்றைக்கு அவசியத்திற்கு கடன் வாங்குகிற நிலை கடந்து அனாவசியத்திற்கும்,ஆடம்பரத்திற்கும் கடன் வாங்குகிற சுழல் உருவாகி இருக்கிறது. வாங்கிய கடனை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதும் இன்றைக்கு வாடிக்கையாகிப்போன ஓர் விஷயம்.கடன் கொடுத்தவரும், கடனாளியின் நிலையை புரிந்து கொள்ளாமல் கடனைப் பெருவதற்காக அவர் கையாளுகிற மோசமான நடவடிக்கைகளும் நமக்குத் தெரியும்.

இதனால் கடன் வாங்கியவர், பகல் நேரத்தில் கடன் கொடுத்தவரின் தகாத வார்த்தைகளைக் கேட்டு கேவலப்படுவதும், இரவு வேளைகளில் கடன் கொடுக்க வேண்டுமே என்ற கவலையில் உறக்கம் வராமல் தவிப்பதும் ஆங்காங்கே நடந்து வருகின்ற உண்மை.

இதைத்தான், கடன் என்பது பகலில் இழிவையும்,இரவில் கவலையையும் பெற்றுத்தரும் என்று அழகுபட உறைத்தார்கள் கண்மனி நாயகம் [ஸல்] அவர்கள்.

இஸ்லாம் இரண்டுக்குமே சிறந்த வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது. கடன் கொடுத்தவர்,கடனாளியின் நிலையைப் புரிந்து செயல்பட வேண்டும். கடன் பெற்றவர், உரிய தவணையில் கடனை செலுத்த முடியாமல் சிரமப்படுகிற போது அவருக்கு அவகாசம் அளிக்க வேண்டும். அந்த அவகாசத்திலும் திருப்பித்தர முடியாமல் சிரமப்பட்டால் அந்த கடனை மன்னித்து விடுவதை மிகச்சிறந்த காரியமாக இஸ்லாம் வர்ணிக்கிறது.

ஒருவர் இறந்து விட்டார். அவரிடம், நீ உலகில் என்ன நன்மை செய்து வந்தாய் என கேட்கப்பட்டது. அதற்கவர், நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும் போது, வசதியுள்ளவருக்கு அவகாசம் அளித்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து அவரின் கடனை தள்ளுபடி செய்து வந்தேன் என்று கூறினார் அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு அவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று மாநபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.

கடன் கொடுத்தவர், அவகாசம் அளிக்க வேண்டும்,முடிந்தால் கடனை மன்னிக்க வேண்டும் என்று கடனாளியின் உணர்வுகளை புரிந்து நடக்கும்படி சொன்ன இஸ்லாம், கடன் கொடுத்தவரின் உரிமைகளையும் மறந்து விட வில்லை. அவர் எந்த வகையிலும் பாதிக்கப் படக்கூடாது என்பதிலும் இஸ்லாம் கவனமாக தன் கருத்தை பதிவு செய்திருக்கிறது.

கடன் வாங்குபவர், கடனை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு கடனைப் பெற வேண்டும். அப்படி ஒருவர் உரிய தவனையில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி கொண்டு கடன் பெற்று, அதை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கையில் மரணம் எய்து விட்டால் அவரின் கடனுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வேன் என்று நபிகள் நாயகம் [ஸல்] சொன்னதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருவர் போரில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்து உயர் அந்தஸ்துக்குப் பாத்திரமானவராக இருந்தாலும் வாங்கிய கடனை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவர் நரகம் செல்வார் என்று இஸ்லாம் கண்டிக்கிறது.


எனவே இஸ்லாம் வழிகாட்டிய இந்த அமைப்பில் இரு சாராரும் நடந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி பெரும்.அல்லாஹுத்தஆலா அருள் புரிவானாக ஆமீன்.

No comments:

Post a Comment