Friday, February 14, 2014

நிம்மதியைத் தேடி ஓர் பயணம்

இன்றைக்கு உலகிலே மனிதர்களுக்கு நிறைய தேட்டங்களும், நாட்டங்களும்,ஓட்டங்களும் இருக்கின்றன. மனிதன் பல்வேறு விஷயங்களை நோக்கி ஓடுகிறான்,பயணிக்கிறான்.
பணத்தை, பதவியை, அதிகாரத்தை,கல்வியை,பெண்ணை, பொன்னை,மண்ணை என்று மனிதனின் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

ஆனால் மனிதன் மட்டுமல்ல உலகில் இருக்கிற விலங்குகள், பறவைகள்,புழுபூச்சி முதற்கொண்டு அனைத்தும் தேடுகின்ற ஒரு விஷயம் உலகில் உண்டு.
எதை வேண்டுமென்றாலும் நாம் வேண்டாம் என்று சொல்லி விடுவோம்.ஆனால் அதை மட்டும் வேண்டாம் என்று எப்பொழுதும் சொல்ல மாட்டோம். சொல்ல முடியாது.

அகிலத்தில் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராகி விடுகிறோம்.ஆனால் அந்த விஷயத்தை மாத்திரம் நாம் இழக்கத் தயாராக மாட்டோம்.

இன்று அதிகம் மக்கள் தொலைத்து விட்டு,தொலைத்த இடம் தெரியாமல் அலைந்து தேடிக் கொண்டிருக்கும் ஓர் பொக்கிஷமும் அது தான்.

அந்த பொக்கிஷம் தான் நிம்மதி,சந்தோஷம்,மகிழ்ச்சி.

இன்று நம்மிடம் எல்லாம் இருக்கிறது.இல்லாத ஒரே விஷயம் நிம்மதி தான்.

மனித வாழ்க்கையின் அத்தியாவசியமான,அவசியமான தேவை நிம்மதி தான்.

அதனால் தான் உலகில் அனைத்து வஸ்துக்களும் தங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதைப் பார்க்கலாம்.

யாரும் தங்களை மிதித்து விடக்கூடாது என்பதற்காக எறும்புகள் மண்ணிற்குக் கீழே தங்களுக்கு இருப்பிடங்களை அமைத்து வாழ்கின்றன.

யாருக்கும் தாங்கள் இறையாகி விடக்கூடாது என்பதற்காக பறவைகள் மரங்களிலே தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொள்கிறது.

காட்டு மிருகங்கள், மனித இனம் தங்களை வேட்டையாடி விடாமல் இருப்பதற்காக மனிதன் வசிக்காத காட்டுப் பகுதியில் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொள்கிறது.

மற்ற படைப்புக்களிலிருந்து எந்த இடையூறும்,ஆபத்துக்களும் நேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாம்,மனிதர்கள் வசிக்கின்ற ஊருக்கு மத்தியில் நமது வீடுகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  
இப்படி ஒவ்வொன்றும் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்துகிறது.காரணம்,நிம்மதியின் அடிப்படை ஆதாரம் பாதுகாப்பு தான்.

இதன் மூலம் நிம்மதியின் அருமையை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.

ஒரு நேரத்தில் மனித சஞ்சாரமற்ற,புற்பூண்டு முளைக்காத, வாழ்க்கையின் எந்த வசதி வாய்ப்பும் அமையப் பெறாத பாலைவனத்தில் தன் மனைவியையும்,குழந்தையையும் விட்டு வர வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளைக் கிணங்கி இப்ராஹீம் [அலை] அவர்கள் தன் குடும்பத்தை மக்காவில் விட்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து வரும்போது இரு கரம் ஏந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து கேட்ட விஷயங்களில் முதன்மையானது ;
اعلم أنه سبحانه وتعالى حكى عن إبراهيم عليه السلام في هذا الموضع أنه طلب في دعائه أموراً سبعة .
المطلوب الأول : طلب من الله نعمة الأمان وهو قوله : { رَبّ اجعل هذا البلد آمِنًا } [ البقرة : 126 ] والابتداء بطلب نعمة الأمن في هذا الدعاء يدل على أنه أعظم أنواع النعم والخيرات وأنه لا يتم شيء من مصالح الدين والدنيا إلا به
அவர்கள் கேட்ட ஏழு விஷயங்களில் முதன்மையாக நிம்மதியைத் தான் கேட்டார்கள்.ஏனெனில் ஈருலகிலும் நிம்மதியில்லாமல் எந்த நலவையும் முழுமையாகப் பெற முடியாது என இமாம் ராஸி [ரஹ்] அவர்கள் தன் தஃப்ஸீர் கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

وسئل بعض العلماء الأمن أفضل أم الصحة؟ فقال : الأمن أفضل ، والدليل عليه أن شاة لو انكسرت رجلها فإنها تصح بعد زمان ، ثم إنها تقبل على الرعي والأكل ولو أنها ربطت في موضع وربط بالقرب منها ذئب فإنها تمسك عن العلف ولا تتناوله إلى أن تموت وذلك يدل على أن الضرر الحاصل من الخوف أشد من الضرر الحاصل من ألم الجسد .تفسير الرازي
நிம்மதி சிறந்ததா? ஆரோக்கியம் சிறந்ததா? என்று ஒரு அறிஞரிடம் கேட்கப்பட்ட போது ; ஆரோக்கியத்தை விட நிம்மதியே சிறந்தது என்று கூறி விட்டு அதற்கு ஆதாரமாக ஒரு உதாரணத்தையும் கூறினார்கள்.

ஒரு ஆட்டுக்கு கால் ஒடிந்து ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு விட்டால் ஒரு சில நாட்களுக்குப் பிறகு பழைய நிலைமைக்குத் திரும்பி தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்து விடும். ஆனால், எந்த தங்கடமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிற ஒரு ஆட்டை ஓரிடத்தில் கட்டி வைத்து அதனருகில் அதன் உணவும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கத்தில் ஒரு ஓநாய் இருந்தது என்றால் அந்த ஆடு செத்து மடியுமே தவிர அந்த உணவை உண்ணாது.
எனவே ஆரோக்கியமின்மையால் ஏற்படும் பாதிப்பை விட பாதுகாப்பின்மையால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்று அந்த அறிஞர் கூறுகிறார்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا سنن الترمدي
  
நிம்மதி,உடல் சுகம்,அன்றைய நாளின் உணவு இம்மூன்றும் அமையப் பெற்று யாருக்கு காலைப் பொழுது விடிகிறதோ அவருக்கு உலகமே கிடைத்ததைப் போல என்றார்கள் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள். [திர்மிதி]

عَنِ ابْنِ عُمَرَ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ :« اللَّهُ أَكْبَرُ ، اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالأَمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى ، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ ». سنن الدارمي
ஒரு மாதத்தின் தலைப் பிறையைக் கண்டதும் நபி [ஸல்] அவர்கள் கேட்கும் துஆ ; இறைவா! நிம்மதியோடும்,ஈமானோடும், சுகத்தோடும்,இஸ்லாத்தோடும்,நீ விரும்பி,திருப்தி கொள்கிற காரியங்களை செய்வதற்குறிய பேருதவியோடும் இந்த மாதத்தை எங்களின் மீது உதிக்கச் செய்வாயாக!.

இப்படி குர்ஆன்,ஹதீஸ் வெளிச்சத்தில் அலசினால் நிம்மதி, வாழ்வில் எந்தளவு அவசியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால் இன்றைக்கு பலரின் வாழ்வு கவலைகளும்,துக்கங்களும், மனக்கஷ்டங்களும் நிறந்ததாகத்தான் அமைந்திருக்கிறது.அந்த கவலைகளைப் போக்குவதற்கு என்ன வழி என்று ஒவ்வொருவரும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். நிச்சயம் அலைய வேண்டும்.
இந்த கவலைகளையும்,மனக்கஷ்டங்களையும் நாம் சாதாரணமாக நினைத்து விட முடியாது.

Ø  இன்றைக்கு பல தம்பதிகளுக்குள் விரிசல் ஏற்பட்டு தலாக் வரை போவதற்கு காரணம் இந்த மனக்கஷ்டங்கள் தான்.

Ø  பலர் வியாபாரத்தில் உயர முடியாமல் துவண்டு போவதற்கு காரணம் இந்த மனக்கஷ்டங்கள் தான்.


Ø  பலர் படிப்பில் கவனம் செலுத்தாமல் பின்னடைவை சந்திப்பதற்கு காரணம் இந்த மனக்கஷ்டங்கள் தான்.

Ø  இன்றைக்கு நடக்கும் அதிகமான விபத்துகளுக்கும், தற்கொலை களுக்கும் காரணம் இந்த மனக்கஷ்டங்கள் தான்.


Ø  துடிப்பான பல இளைஞர்களை செயல் பட விடாமல் முடக்கிப் போட்டிருப்பதும் இந்த மனக்கஷ்டங்கள் தான்.

Ø  ஒருவன் என்னதான் திறமையுள்ளவனாக, விவேகமுள்ளவ னாக, வீரனாக,அறிஞனாக,கலை நயம் உள்ளவனாக இருந்தாலும் கவலை அவனை சூழ்ந்து விட்டால் அவனிடம் இருக்கும் அத்தனை திறமைகளும் பயனற்றுப் போய் விடுகிறது.

 
Ø  கவலையின் பாதிப்பு கருவில் இருக்கும் குழந்தையையும் விட்டு வைப்பதில்லை. 

ஒரு பெண் கருவுற்றிருந்தால், குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் அந்த காலங்களில் அந்தப்பெண் எந்த கவலைகளும்,எந்த குழப்பங்களும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.காரணம்,ஒரு பெண் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தன் உணவுடன் தன் உணர்வுகளையும் சேர்த்து கொடுக்கிறாள்.

ஐந்தாவது மாதத்தில் வயிற்றில் இருக்கும் சிசு, கேட்கும் திறனையும்,தாயின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறனையும் பெற்று விடுகிறது.

ஒரு பெண் கருவுற்ற காலத்தில் கல்வியிலும்,கலையிலும் மனம் ஒன்றி ஈடுபடும்போது அந்த கல்வியும்,கலையும் அப்படியே கருவிலிருக்கும் சிசுவை சென்றடைகிறது.
கருவறையில் அறியப்படும் கலைகள் கல்லறை வரை தொடர்கிறது.

ஒரு பெண் அந்த காலங்களில் கவலையுடனும் குழப்பத்துடனும் இருந்தால் அந்த குழந்தை இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே மனதால் அடிபட்டு பயத்துடனும் குழப்பத்துடனும் மனபாதிப்புடனும் பிறக்கிறது என்று இன்றைய ஆய்வு கூறுகிறது.

கருவில் மனதால் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளங்கள் ;

Ø அந்த குழந்தை எதிலும் பிடிமானம் இல்லாமல் இருக்கம்.

Ø யாருடனும் கலக்காமல் ஒட்டாமல் கலகலப்பாக இல்லாமல் சோர்நது காணப்படுவார்கள்.

Ø ஏதோ இனம் புரியாத பயமும்,படபடப்பும் எப்போதும் அவர்களிடம் இருக்கும்.

Ø தாழ் மனப்பான்மை இருக்கும்.

Ø காரணமின்றி கோபப்படுவார்கள்.

Ø அளவுக்கு மீறிய வெறிச்செயலில் ஈடுபடுவார்கள்.

Ø அவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.ஒரு நேரம் இருக்கும் புத்தி மறு நேரம் இருக்காது.


இப்படி கவலையினால் ஏற்படும்,நாம் சந்திக்கும் விளைவுகளை பட்டியலிடலாம்.எனவே அந்த விபரீதமான கவலையை நம்மிடமிருந்து விரட்ட வேண்டும்.

கவலை விரட்ட வழி என்ன?

கவலையில்லாமல்,தோள்வி இல்லாமல்,பிரச்சனையில்லாமல் யாரும் வாழ முடியாது.எனவே கவலைகளையும், பிரச்சனைகளையும் இல்லாமல் ஆக்க முடியாது.ஆனால் மறந்து வாழ முடியும்.

எல்லா கவலைகளையும் மறந்து,நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ இஸ்லாம் சொல்கிற வழி என்ன வென்றால், அல்லாஹ்வின் விதியை பொருந்திக் கொள்ள வேண்டும். எது நடந்தாலும் அது அல்லாஹ்வின் ஏற்பாடு என்று உணர வேண்டும். இந்த தன்மை வந்து விட்டால் கவலைகள் கவலைகளாக தெரியாது.கஷ்டங்கள் கஷ்டங்களாக தெரியாது.

ஒரு கஷ்டம் வரும்போது இது அல்லாஹ்வின் வேளை தான் என்று நம் மனதைப் பார்த்து சொல்ல வேண்டும்.அவ்வாறு கூறினால் நிச்சயம் அந்த கவலைகள் காணாமல் போகும். இந்த தன்மை நம்மிடம் இல்லாத காரணத்தினால் தான் நாம் இன்று நிம்மதியை இழந்து நிற்கிறோம்.


قال عمر بن الخطاب : « ما أبالي على أي حال أصبحت على ما أحب أو على ما أكره ، لأني لا أدري ، الخير فيما أحب أو فيما أكره ؟ »
நான் விரும்பியது நடந்தாலும்,எனக்கு விருப்பமில்லாதது நடந்தாலும் நான் கவலை கொள்ள மாட்டேன்.எதில் நலவு இருக்கிறது என்று எனக்கு தெரியாது.


عن أبي علي الرازي ، قال : صحبت فضيل بن عياض ثلاثين سنة ما رأيته ضاحكا ولا مبتسما إلا يوم مات علي ابنه فقلت له في ذلك فقال : « إن
الله عز وجل أحب أمرا فأحببت ما أحب الله »
அபூ அலி ராஸி [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள் ; ஃபுளைல் பின் இயாழ் [ரலி] அவர்களை எனக்கு 30 வருடமாகத் தெரியும். அந்த 30 வருடத்தில் ஒரு நாள் கூட அவர்கள் சிரித்தோ, புன்னகைத்தோ நான் கண்டதில்லை.அத்தகையவர்கள், அவர்களின் மகன் இறந்த அன்று சிரித்தார்கள்.
என்றைக்கும் சிரிக்காத நீங்கள் அழ வேண்டிய ஒரு தினத்தில் சிரிக்கிறீர்களே என்று வியப்புடன் வினவினேன்.அப்போது அவர்கள் ; என் மகனின் மரணத்தை இறைவன் விரும்பியிருக்கிறான்.அவன் விரும்பியதை நானும் விரும்பும் பாக்கியம் இன்று தான் எனக்கு கிடைத்திருக்கிறது என்றார்கள்.


يخرج إبراهيم بن أدهم إلى الحج ماشيا فرآه رجل على ناقته فقال له: إلى أين يا إبراهيم؟ قال: أريد الحج. قال: أين الراحلة فإن الطريق طويلة؟ فقال: لي مراكب كثيرة لا تراها. قال: ما هي؟ قال: إذا نزلت بي مصيبة ركبت مركب الصبر. وإذا نزلت بي نعمة ركبت مركب الشكر. وإذا نزل بي القضاء ركبت مركب الرضا. فقال له الرجل: سر على بركة الله، فأنت الراكب وأنا الماشي

வாகனமில்லாமல் கால்நடையாக ஹஜ்ஜுக்கு சென்று கொண்டிருந்த இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்களைப் பார்த்து நீண்ட பயணத்தில் வாகனமில்லாமல் போகிறீர்களே என்று ஒருவர் கேட்டார்.அதற்கு இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் ;
உங்களுக்கு தெரியாத பல வாகனங்கள் என்னிடம் இருக்கிறது. என் வாழ்வில் ஒரு சோதனை வந்தால் பொறுமை என்ற வாகனத்தில் ஏறிக் கொள்வேன்.ஒரு பாக்கியம் நடந்தால் ஷுக்ர் [நன்றி] என்ற வாகனத்தில் ஏறிக் கொள்வேன். என் விஷயத்தில் அல்லாஹ்வின் விதி ஒன்று ஏற்பட்டால் [அது எப்படி இருந்தாலும்] பொருத்தம் என்ற வாகனத்தில் ஏறிக் கொள்வேன் என்றார்கள்.

அல்லாஹ்வின் திருப்தி, நாம் அவனை திருப்தி கொள்வதில் தான் இருக்கிறது.

ஸுஃப்யான் ஸவ்ரீ [ரஹ்] அவர்கள்  اللهم ارض عنا என்னை திருப்தி கொள் என்று துஆ செய்து கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த ராபியத்துல் அதவிய்யா [ரலி] அவரகள் ;
اما تستحي من الله تسا له الرضا وانت غير راض
நீங்கள் அவனை திருப்தி கொள்ளாமல் அவன் திருப்தியை எதிர்பார்க்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டார்கள்.  

அப்படியானால் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டவனாக ஓர் அடியான் எப்போது ஆகுவான் என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.
நல்லதைக் கண்டு சந்தோஷிப்பதைப் போன்று கெட்டதைக் கண்டும் எவன் சந்தோஷிக்கிறானோ அப்போது தான் அவன் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டதாக பொருள் என்றார்கள் ராபியத்துல் அதவிய்யா [ரலி] அவர்கள்.  

எதையும் பொருந்திக் கொள்ளும் இந்த தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் நமது கவலைகள் மறந்து உலக வாழ்க்கை இனிக்கும்.அல்லாஹ்வின் திருப்தி கிடைத்து மறுமை வாழ்க்கையும் மனக்கும்.
அல்லாஹ் அந்த உயர்ந்த பண்பை நம் அனைவருக்கும் வழங்குவானாக!..


2 comments:

  1. தாங்களின் இப்பணி மென்மேலும் தொடர எங்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்...

    ReplyDelete