உலகில் வாழும் அனைத்துப் படைப்பினங்களுக்கும் அன்பும் இரக்கமும் இருக்கிறது. மனிதர்கள் முதல் பறவைகள்,மிருகங்கள்,சிறு எறும்பு வரை அனைத்துப் படைப்புகளும்
தங்களுக்குள் அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தும்
ஜீவன்களாகத்தான் இருக்கிறது.
இரத்த உறவு, திருமண உறவு, நட்பு, இவைகள் மூலம்,
கல்வியின் மூலம், இப்படி அன்புக்கான காரணம் வேறுபடலாம், அன்பின் அளவு வித்தியாசப்படலாம்.ஆனால்
எல்லாரிடத்திலும் அன்பு இருக்கிறது.
சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் அன்பு
கிடைத்து விடும். சிலருக்கு
கிடைக்காமல் போய் விடும்.ஆனால் உலகில் யாருடைய அன்பு நமக்கு கிடைக்கிறதோ இல்லையோ
நம்மைப் படைத்த ரப்புடைய அன்பு நிச்சயம் கிடைக்க வேண்டும். இவ்வுலகில் மனிதர்களின் அன்பைப் பெறுவதை விட படைத்தவனின்
அன்பைப் பெறுவது மிக மிக முக்கிய மானது பாக்கியமானது.
உலகத்தில் எதையதையோ இன்பம் என்று நினைக்கிறோம்.
மகிழ்ச்சி என்று கருதுகிறோம்.ஆனால் அல்லாஹ்வின் அன்பை விட மிகப்பெரிய இன்பமும் மகிழ்ச்சியும்
வேறெதுவும் இல்லை.
قال يحيى بن أبي كثير رحمه الله:
"نظرنا فلم نجد شيئًا يتلذَّذ به المتلذِّذُون أفضل من حبِّ الله تعالى
அல்லாஹ்வின் அன்பைத்தவிர
வேறு எதையும் நாங்கள் இன்பமாகப் பார்க்க வில்லை என்று யஹ்யா பின் அபூகஸீர் ரஹ்
அவர்கள் கூறுகிறார்கள்.
وقال أحد الصالحين: "والله ما طابت
الدنيا إلا بمحبته وطاعته، ولا الجنة إلا برؤيته ومشاهدته".
அல்லாஹ்வின் பிரியத்தைக் கொண்டும்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதைக் கொண்டும் தான் உலகம் இன்பமாகும். அவனைப் பார்ப்பதைக்
கொண்டு தான் சுவனம் இன்பமாகும் என்று நல்லோர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் அன்பு கிடைத்து விட்டால் அதை விட
பாக்கியம் உலகத்தில் வெறொன்றும் இருக்க முடியாது.அவனுடைய அன்பைப் பெற்று விட்டால்
உலகத்தில் எல்லாம் கிடைத்து விடும். குறிப்பாக
உலகத்தில் எல்லோருடைய அன்பும் கிடைத்து விடும்.
قال النبي إِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ
عَبْدًا دَعَا جِبْرِيلَ فَقَالَ إِنِّي أُحِبُّ فُلَانًا فَأَحِبَّهُ قَالَ فَيُحِبُّهُ
جِبْرِيلُ ثُمَّ يُنَادِي فِي السَّمَاءِ فَيَقُولُ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلَانًا
فَأَحِبُّوهُ فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ قَالَ ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي
الْأَرْضِ وَإِذَا أَبْغَضَ عَبْدًا دَعَا جِبْرِيلَ فَيَقُولُ إِنِّي أُبْغِضُ فُلَانًا
فَأَبْغِضْهُ قَالَ فَيُبْغِضُهُ جِبْرِيلُ ثُمَّ يُنَادِي فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ
اللَّهَ يُبْغِضُ فُلَانًا فَأَبْغِضُوهُ قَالَ فَيُبْغِضُونَهُ ثُمَّ تُوضَعُ لَهُ
الْبَغْضَاءُ فِي الْأَرْضِ
அவ்வா ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரயீல் அவர்களை
அழைத்து நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் நீங்களும் அவரை நேசியுங்கள் என்று சொல்லுகிறான்
எனவே விரைவில் அவர் நேசிக்கிறார் பின்பு வானத்திலே மற்ற மலக்குமார்களை அழைத்து இறைவன்
இந்த மனிதரை நேசிக்கிறான் எனவே நீங்கள் நேசியுங்கள் என்று கூறுகிறார் வானத்தில் உள்ளவர்கள்
அவரை நேசிக்கிறார்கள் பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது அல்லாஹ் ஒரு அடியானை
கோபம் கொண்டால் விரைவில் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை கோபம் கொண்டு விட்டேன் நீங்களும்
அவர் மீது கோபம் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்முடைய
கோபம் கொள்கிறார்கள் என்பவரை அழைத்து அல்லாஹுத்தஆலா இவர் மீது கோபம் கொண்டு விட்டால்
நீங்களும் அவரை கோபப்படும் என்று சொல்கிறார்கள் ஆனால் அதிலுள்ள மலக்குமார்கள் அந்த
மனிதர் மீது கோபம் கொள்கிறார்கள் பின்பு பூமியிலே அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தப்படுகிறது. (முஸ்லிம் ; 2637)
அல்லாஹ்வின் அன்பை ஒருவன் பெற்று விட்டானா
படைத்தவனின் அன்பு கிடைத்து விட்டதா என்பதற்கான அளவுகோல் இது தான். சமூகம் ஒருவரை
நேசிக்க ஆரம்பித்து விட்டால் ஒருவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டால் அவர்
அல்லாஹ்வின் அன்பைப் பெற்று விட்டார் என்று பொருள்.சமூகம் ஒருவரை வெறுக்க
ஆரம்பித்து அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்றால் அவர் அல்லாஹ்வின் அன்பை விட்டும்
தூரமாக இருக்கிறார் என்று அர்த்தம்.
இங்கே சமூகம் நேசிக்கும் சமூகம் வெறுக்கும்
என்று சொன்னது இஸ்லாமிய சமூகத்தைத் தான் சொல்கிறேனே தவிர.மற்ற சமூகத்தை அல்ல.
ஏனென்றால் நபி ஸல் அவர்கள் உட்பட எல்லா நபிமார்களையும் அன்றைக்கு இருந்த சமூகம்
வெறுக்கத்தான் செய்தது. இன்றைக்கு மாட்டுக்கறி சாப்பிட்டான் என்று சொல்லி ஒரு
முஸ்லிம் அடிக்கபடுவதும், பாரத் மாதாகீ ஜே சொல்லச் சொல்லி ஒரு முஸ்லிம் சித்தரவதை
செய்யப்படுவதும் ஆங்காங்கே பரவலாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. பல தெய்வ
கடவுகளை ஏற்காதவன் எங்கள் எதிரி என்று அவர்கள் சொன்ன காலம் போய் இப்போது
மாட்டுக்கறி சாப்பிடுபவனும் பாரத் மாதாகீ ஜே சொல்லாதவனும் தான் எங்கள் பரம எதிரி
என்று முழக்கமிடும் காலம் வந்திருக்கிறது. வடமாநிலங்களில் நடந்து கொண்டிருந்த இந்த
அவலங்கள் இப்போது தமிழ் நாட்டிலும் நடக்கத் தொடங்கியிருக்கிறது. எல்லா சமூகமும்
நம்மை நேசிக்க வேண்டும் என்று சொன்னால் நம்மில் யாரையும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றவர் என்று சொல்ல
முடியாது. எனவே அல்லாஹ்வின்
அன்பைப் பெற்றவரை முஸ்லிம் சமூகத்தின் நேசத்திற்குரியவராக இருப்பார் என்பது தான்
பொருத்தமாக இருக்கும்.
قال تعالي في موسي وَأَلْقَيْتُ عَلَيْكَ
مَحَبَّةً مِنِّي [طه:39] ما رآه أحد إلا أحبه،
ஹள்ரத் மூஸா அலை அவர்களைக் குறித்து அல்லாஹ்,
உம்மீது என் பிரியத்தைப் போட்டு விட்டேன் என்று கூறுகிறான்.
அன்னை ஆசியா அம்மையார் அவர்கள் மூஸா அலை
அவர்களை குழந்தையாகப் பார்த்த அந்த முதல் பார்வையிலேயே அவர்களின் மீது மையல் கொள்ள
ஆரம்பித்து விட்டார்கள்.இது எனக்கு கண்குளிர்ச்சியான குழந்தை என்றார்கள். தன் ஆட்சிக்கும்
தன் உயிருக்கும் உலை வைத்து விடும் என்று சொல்லி
ஆயிரக்கணக்கான குழந்தைகளை கொன்று குவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்ன் கூட அந்த
குழந்தையைப் பார்த்தவுடன் ஏற்றுக் கொண்டான். அவன் அரண்மனையில் இருந்தவர்கள், மிஸ்ரில்
இருந்தவர்கள், குழந்தை களுக்கு பால் கொடுப்பதற்காக வந்த செவிலித் தாய்மார்கள், சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என
அத்தனை பேரும் விரும்பினார்கள். காரணம் அவர்களை அல்லாஹ் நேசித்தான்.
ஆகவே அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றவர்களுக்கு உலகத்தாரின்
அன்பு கிடைத்து விடும்.
ஒருவருக்கு அல்லாஹ்வின் அன்பு கிடைத்து
விட்டால் அவரின் உயர்வு என்ன என்பதை பின்வரும் ஹதீஸே குதுஸி விவரிக்கிறது.
وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ
بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ
بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ
الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لأُعِيذَنَّهُ
இறைத்தூதர் ﷺ
அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்:
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான்
போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்
கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம்
கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான்
அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புஹாரி ; 6502)
நாம் அவன் செவியாக, அவன் பார்வையாக, அவன் கரமாக, அவன் காலாக, இறைவன் மாறி விடுகிறான் என்பதற்கான பொருள், அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப அவனது செவியும்
அவனது பார்வையும் அவனது கரமும் காலும் மாறி விடுகிறது. அதாவது அல்லாஹ் விரும்புவதைத் தான் அவர் கேட்கிறார். அல்லாஹ் விரும்புவதைத்
தான் அவர் பார்க்கிறார். அல்லாஹ் விரும்புவதைத் தான் அவர் கரத்தால் செய்கிறார். அல்லாஹ் விரும்பும்
இடத்தை நோக்கித்தான் அவர் செல்கிறார்.முழுக்க முழுக்க அவர் எண்ணமும் செயல்பாடுகளும்
இறைவனுக்கு பொறுத்தமானதாக மாறி விடுகிறது. அப்படி மாறிவிடுகிற காரணத்தினால் தான் அவர்
எதைக் கேட்டாலும் அல்லாஹ் கொடுக்கின்றான். அவரை தன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு
வந்து விடுகிறான்.தன் நேசத்தைப் பெற்றவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்படும்
வெகுமதிகள் தான் இவை.
ان سيدنا ابراهيم عندما القي في النار هبط عليه ملك الرياح قفال الك
حاجة عندي حتي اقضيها لك قال حاجتي عند ربي
நம்ரூத் மன்னன் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களை
நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறிய உத்தர வித்தான்.அவர்களை அதில் போடுவதற்கு ஏற்பாடுகள்
நடந்து கொண்டிருந்த நேரத்தில் வானவர்கள் வருகை புரிந்து உங்களுக்கு எதுவும் தேவை
இருக்கிறதா? இருந்தால்
சொல்லுங்கள், நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று கேட்ட போது, இல்லை. என் தேவை
அல்லாஹ்விடத்தில் தான்.என்னை இந்நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திய இறைவனே என்னைக்
காப்பற்றுவான்.உங்கள் உதவி வேண்டாம் என்று இப்ராஹீம் அலை அவர்கள் கூறி
விட்டார்கள்.
யாராவது நமக்கு உதவிக்கரம் நீட்ட வர
மாட்டார்களா! என்று எதிர்
பார்த்துக் கொண்டிருக்கிற, உயிர் போகும் அந்த நேரத்தில் உதவி செய்வதற்கு
மிகப்பொறுத்தமான அத்தனை மலக்குகளும் வந்து கேட்ட போது கூட, இறைவன் உதவி தான்
எனக்கு வேண்டும். உங்கள் உதவி எனக்கு தேவையில்லை என்று சொல்லுகிற வலிமையும்
துணிச்சலும் அவர்களுக்கு இருந்தது என்றால் இறைவன் மீது அவர்களுக்கு இருந்த அபாரமான
நம்பிக்கையையும் தவக்குலையும் நமக்கு காட்டுகிறது. அதே சமயத்தில் இந்த நிகழ்வு
சொல்லக்கூடிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இறைவன் ஒருவரை தன்
நேசத்திற்குரிய வராக ஆக்கி விட்டால் அவர் எத்தனை பெரிய ஆபத்தில் இருந்தாலும்
அவருக்கு தன் உதவிக்கரத்தை நீட்டுகிறான் என்பது இந்நிகழ்வு சொல்லுகிற அழுத்தமான
செய்தி.
எனவே அல்லாஹ்வின் அன்பைப் பெற்றவருக்கு எல்லாம்
கிடைத்து விடும்.சமூகத்தின் அன்பு கிடைத்து விடும்,சமூகத்தின் அங்கீகாரம் கிடைத்து
விடும்.இறைவனின் பொறுத்தமும் அவனுடைய மேலான உதவியும் கிடைத்து விடும்.அத்தகைய
அல்லாஹ்வின் அன்பைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.இறைவனிடத்தில் அதை திரும்பத்
திரும்ப கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment