வாழ்க்கையில் எந்த விஷயங்களாக இருந்தாலும் எந்த பிரச்சனை களுக்குத் தீர்வாக இருந்தாலும் எந்த சந்தேகங்களுக்கு விடையாக இருந்தாலும் எந்த கேள்விக்கும் பதிலாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டியும் முன்மாதிரியும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தான்.
நபி ﷺ அவர்கள் வாழ்வில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. எல்லா சந்தேகங்களுக்கும் விடை இருக்கிறது. எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அவர்களின் சொற்களை எடுத்துக் கொள்ளாமல் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றாமல் அவர்களின் வரலாறுகளை அலசாமல் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. எந்த சந்தேகங்களுக்கும் விடை காண முடியாது. அந்த அளவு அவர்கள் நம்மோடு இணைந்திருக்கிறார்கள். நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். நம்மில் ஒருவராகவே இருக்கிறார்கள். அதனால் தான் நாம் ஒவ்வொரு நாளும் நபியைப் பற்றி பேசுகிறோம். நபியின் சொற்களை வாசிக்கிறோம். நபியின் வாழ்க்கையை அலசுகிறோம்.வருடத்தின் ஒவ்வொரு நாளும் நபியை பற்றித்தான் பேசுகிறோம்
என்று இருந்தாலும், நபி பிறந்த இந்த மாதத்தில் நபியின் மகத்துவங்களை நபியின் தனித்தன்மைகளை
நபியின் சாதனைகளை பேசுவது தான் மிகப் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் நபியின் மகத்துவம்
குறித்து நாம் சிந்திக்கலாம்.
وانك لعلي خلق عظيم
நீங்கள் மேலான
நற்குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன் : 68 ; 4)
وكتب الفخر الرازي في التفسير الكبير يروى ان يهودياً
من فصحاء اليهود جاء الى عمر في ايام خلافته
فقال: اخبرني عن اخلاق رسولكم
فقال عمر: اطلبه من بلال، فهو اعلم مني ثم
ان بلالاً دل اليهودي على فاطمة عليها السلام ثم فاطمة دلته على علي عليه السلامفلما
سأله اليهودي قال الامام علي عليه السلام: صف لي متاع الدنيا حتى اصف لك اخلاقه
فقال اليهودي: هذا لا يتيسر لي
فقال علي عليه السلام: عجزت عن وصف متاع الدنيا
وقد شهد الله على قلته حيث قال: (قل متاع الدنيا قليل)، فكيف اصف اخلاق النبي
(صلى الله عليه وآله) وقد شهد الله تعالى بانه عظيم؟! حيث قال: «وانك لعلى خلق
عظيم
ஒரு யூதர் ஹள்ரத் உமர் ரலி அவர்களிடம் வந்து
நபியின் குணங்களைப்பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்றார். அதற்கவர்கள் நீ பிலால் ரலி
அவர்களிடம் செல், அவர் என்னை விட இதைப் பற்றி நன்கு அறிந்தவர் என்றார்கள். அவரிடம் சென்ற போது அவர்கள் அன்னை
ஃபாத்திமா ரலி அவர்களிடம் சென்று கேள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். அவர்கள்
ஹள்ரத் அலி அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர் அலி ரலி அவர்களிடம் வந்து
நபியின் குணத்தைக் குறித்து சொல்லுங்கள் என்றார். அப்போது அலி ரலி அவர்கள் முதலில்
நீ எனக்கு உலகத்தில் இருக்கிற பொருட்களைக் கூறு நான் உனக்கு நபியின் குணங்களைக்
கூறுகிறேன் என்றார்கள். உலகத்தின் பொருட்களை என்னால் எப்படி சொல்ல முடியும், அது
சாத்தியமில்லாத காரியம் என்றார். “சொற்பமானது” என்ற அல்லாஹ்
குறிப்பிட்ட உலகத்தின் பொருட்களையே உன்னால் சொல்ல முடியாத போது, மிகவும் “பிரமாண்டமானது” என்று அவன் குறிப்பிட்ட நபியின் குணங்களை
எப்படி என்னால் வரிசைப்படுத்த முடியும் என்று அலி ரலி அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் கபீர்)
عظيم
என்ற வார்த்தைக்கு மகத்துவம் என்றும் பிரமாண்டம் என்றும் மிக உயர்ந்தது என்றும்
பொருள் கொள்ளப்படுகிறது. நபி ﷺ அவர்கள் வாழ்க்கையில் எல்லாமே
மகத்துவமாகத்தான் இருந்தது. பிரமாண்டமாகத் தான் இருந்தது, உயர்வாகத் தான் இருந்தது.
படைப்பில் உயர்ந்திருந்தார்கள்.அழகில் உயர்ந்திருந்தார்கள். அந்தஸ்தில் உயர்ந்திருந்தார்கள்
ஆன்மீகத்தில் உயர்ந்திருந்தார்கள். இப்படி அவர்கள் வாழ்க்கையில் எல்லாமே உயர்வாகத்
தான் இருந்தது. ஆனால் அவர்களின் படைப்பு குறித்தோ அவர்களின் அழகு குறித்தோ அவர்களின்
அந்தஸ்து குறித்தோ அவர்களின் ஆன்மீகம் குறித்தோ அல்லாஹ் عظيم என்ற வார்த்தையை பயன்படுத்த வில்லை. மாறாக அவர்களின்
குணத்தை மட்டும் தான் மகத்தானது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதற்கு பல காரணங்கள்
உண்டு.
1, எதுவெல்லாம் நற்குணங்கள்
என்று மார்க்கம் வரையறுத்து சொல்லியிருக்கிறதோ, எதையெல்லாம் நல்ல பண்புகள் என்று அடையாளப்படுத்துகிறதோ
அவை அனைத்தின் ஒட்டு மொத்த உருவமாக நபி ﷺ அவர்கள் திகழ்ந்தார்கள்.
انما بعثت لاتمم صالح الاخلاق
நற்குணங்களை
முழுமைப்படுத்துவதற்குத்தான் நான் அனுப்பப் பட்டுள்ளேன். (அஹ்மத் : 8952)
سُئِلَتْ عائِشةُ عن خُلُقِ رسولِ اللهِ
صلَّى اللهُ عليه وسلَّمَ، فقالَتْ: كان خُلُقُه القُرآنَ
நபியின் குணம் குறித்து அன்னை ஆயிஷா ரலி
அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது என்று
கூறினார்கள். (அஹ்மது : 25813)
குர்ஆனின் மறு உருவமாக குர்ஆனின் நகலாக நபி ﷺ
அவர்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள்.
2, இன்றைக்கு உலகத்தில்
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நல்ல குணம் உண்டு. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நல்ல குணங்கள்
கூட இருக்கலாம். ஆனால் அந்த குணங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக, ஏற்ற இறக்கமாக
இருக்கும். பொறுமை அதிகம் இருந்தால் மன்னிக்கும் தன்மை அதை விட குறைவாக இருக்கும் பணிவு
இருந்தால் நீதம் அதை விட சற்று கூடுதலாக இருக்கும். மனிதர்களுக்கு இருக்கும் தன்மைகள்
அனைத்தும் ஒரே அளவில் ஒரே நேர்கோட்டில் இருப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால் நபி ﷺ
அவர்களுக்கு எத்தனை குணங்கள்
இருந்ததோ அவை அனைத்தும் சரி சமமாக ஒரே அமைப்பில் ஒரே நேர் கோட்டில் இருந்தது. எந்த அளவுக்கு பொறுமை இருந்ததோ
அதே அளவிற்கு வீரமும் இருந்தது. எந்த அளவு அமானிதம் இருந்ததோ அதே அளவு உபகாரமும் இருந்தது.
எந்த அளவு உண்மை இருந்ததோ அதே அளவு சகிப்புத்தன்மையும் இருந்தது. நேரத்திற்குத் தகுந்தாற்போல்
அந்த குணங்கள் அந்தந்த சூழ்நிலையில் வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் எல்லா குணங்களின்
அளவும் ஒரே நிலையில் தான் இருந்தது.
3, அவர்களின் குணங்கள்
ஒரு சாராருக்கு அல்லது ஒரு பிரிவினருக்கு என்றில்லாமல் எல்லோரிடத்திலும் வெளிப்பட்டது.
அவர்களின் மனைவிமார்களிடத்தில், அவர்களின் தோழர்களிடத்தில், அவர்களுக்கு அறிமுகமானவர்களிடத்தில், அறிமுகமில்லா தவர்களிடத்தில், நெருக்கமானவர்களிடத்தில், நெருக்கமில்லாதவர்களிடத்தில், உள்ளூர் வாசிகளிடத்தில், வெளியூர்வாசிகளிடத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் களிடத்தில் என்று எல்லோரிடத்திலும் அவர்களின் நற்குணங்கள்
வெளிப்பட்டது. அவர்களின்
நற்குணத்தால் ஒரு சாரார் மட்டுமல்ல எல்லோரும் பயன் பெற்றிருக்கிறார்கள்.
4, அவர்கள்
அறிந்தவர்கள் அறியாதவர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் ஏற்றுக் கொள்ளாதவர்கள்
அனைவராலும் புகழப்பட்டார்கள்.அனைவரும் அவர்களின் நற்குணத்தைப் போற்றினார்கள்.
இன்றைக்கு சாதாரணமாக ஒருவர் வீட்டில் நல்லவராக இருந்தால் வெளி உலகம் அவரை
கெட்டவராகப் பார்க்கும்.வெளி உலகில் நல்லவராக இருந்தால் வீடு அவரை கெட்டவராகத்தான்
பார்க்கும். வெளியுலகில் நல்லவர்களாக, பெரும் தலைவர்களாக, பெரும் சாதனையாளர்களாக
ஜொலித்தவர்களெல்லாம் வீட்டில் கெட்டவர்களாகத்தான் பார்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்
நபி ﷺ
அவர்களின் குணங்களை வெளியுலகமும் போற்றியது.அவர்களின் மனைவிமார்களும்
வாழ்த்தினார்கள். குறிப்பாக அவர்களை சார்ந்து இருப்பவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு எதிராக
செயல்படக் கூடியவர்கள், அவர்களை விரோதியாக
பார்க்கக் கூடியவர்க,ள் அவர்களை அழிக்க
வேண்டும் என்று துடிக்க கூடியவர்கள் என அனைவரும் அவர்களின் குணங்களை பாராட்டினார்கள்.
வரலாற்றில் ஜைஃபர் இப்னுல் ஜுலன்தி என்று
ஒருவர். நபியின் காலத்தில் வாழ்ந்தவர். பனூஜஹ்ரான் கிளையின் தலைவர். இஸ்லாமிய
அழைப்புப் பணிக்காக நபி ﷺ அவர்கள் அம்ர் இப்னுல்
ஆஸ் ரலி அவர்களை அங்கே அனுப்பி வைத்த போது, அவரின் கரத்தைப் பற்றி இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டார் அவர் சொன்ன வார்த்தை ;
وهو الجُلَنْدى(3)؛ الذي انبهر بأخلاق الرسول صلى
الله عليه وسلم، فقال: "والله لقد دلَّني على هذا النبيِّ الأُمِّيِّ أنه لا يأْمُرُ
بخير إلاَّ كان أوَّل آخذ به، ولا يَنْهَى عن شيء إلاَّ كان أوَّل تارك له،
இந்த நபி நல்லதை ஏவுவார்கள். அதை எடுத்து
செயல்படுவதில் அவர்களே முதலாவது நபராக இருப்பார்கள். தீயதை விட்டும் தடுப்பார்கள்.
அதை விட்டும் விலகி நடப்பதிலும் அவர்களே முதலாவது நபராக இருப்பார்கள். வெற்றி
பெறும் நேரத்தில் வரம்பு மீறவும் மாட்டார்கள்.தோற்கும் நேரத்தில் துவண்டு போகவும்
மாட்டார்கள்.செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள். வாக்களித்த விஷயத்தை
செய்வார்கள். எனவே அவர் உண்மையான நபி என்று நான் சாட்சி கூறுகிறேன் என்றார்.
நல்லதை ஏவுவார்கள், ஆனால் அவர்கள் அதை செய்ய
மாட்டார்கள்.தீயதைத் தடுப்பார்கள்.ஆனால் அதை விட்டும் அவர்கள் விலகி நடக்க
மாட்டார்கள். இது தான் பொதுவாக உலகத்தலைவர்களின் அடையாளம். இன்றைக்கும் நாம் அப்டித்தான்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஏழைத்தாயின் மகன் உங்களில் ஒருவன் என்று சொல்வார்கள்.
ஆனால் அவர்கள் போட்டிருக்கிற கோர்ட் சூட்டின் விலை பல இலட்சத்தைத் தாண்டும்.
உண்மையைத்தான் பேச வேண்டும், பொய் சொல்வது நல்ல தலைவனுக்கு அழகல்ல என்று மேடையில்
முழங்குவார்கள். ஆனால் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதில் முதல் இடத்தில்
இருப்பவர்கள் அவர்களாகத் தான் இருக்கும்.உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம், உங்கள்
குறைகளைத் தீர்க்க நாங்கள் வருவோம் என்று மேடையில் கொக்கறிப்பார்கள். ஆனால்
தேர்தல் நேரத்தில் தான் அவர்களைப் பார்க்க முடியும். ஆனால் நல்லதை ஏவினால் முதலில்
அதை கடைபிடிப்பவராகவும், தீயதைத் தடுத்தால் முதலில் அதிலிருந்து விலகி நடப்பவராகவும்
இருந்த ஒரே தலைவர் நபி ﷺ அவர்கள் தான். அந்த
வார்த்தைகளைச் சொல்லித்தான் ஜுலன்தி இஸ்லாதை ஏற்றுக் கொண்டார்.
அபூசுஃப்யான் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வும் வரலாற்று
நூட்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த நேரத்தில்
அவர்கள் சொன்ன வார்த்தை.
وقد شهد بحسن خلقه أبو سفيان قبل أن يُسلم
وهو زعيم المشركين، فقال عند إسلامه: "والله إنك لكريم، ولقد حاربتك فنعم محاربي
كنت، ثم سالمتك فنعم المسالم أنت، فجزاك الله خير
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள்
சங்கையானவர்கள். உங்களை எதிர்த்த நேரத்தில் என்னை எதிர்ப்பவர்களில் நீங்கள்
சிறந்தவராக இருந்தீர்கள். இப்போது உங்களுடன் இணைந்து விட்டேன். என்னோடு
இணைந்தவர்களிலும் நீங்கள் தான் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள்.அல்லாஹ் உங்களுக்கு
நற்கூலியை வழங்குவானாக. (மஃரிஃபதுஸ் ஸஹாபா)
அதேபோன்று தான் அபூஜஹ்லும். நபியின் காலத்தில்
நபிக்கு மிகப்பெரும் எதிரி என்றால் அவனைத்தான் நாம் அடையாளப்படுத்துவோம்.
فالتقى الأخنس وأبو جهل, فخلا الأخنس بأبي جهل,
فقال: يا أبا الحكم, أخبرني عن محمد، أصادق هو أم كاذب؟ فإنه ليس ههنا من قريش أحد
غيري وغيرك يسمع كلامنا! فقال أبو جهل: وَيْحك, والله إن محمدًا لصادق, وما كذب محمّد
قط
அக்னஸ் என்பவன் அபூஜஹ்லை தனியாக அழைத்து, இப்போது நம்முடன் வேறு இல்லை. நாம் பேசுவது
வேறு யாருக்கும் தெரியாது.இப்போது நீ நபியைப்பற்றி சொல். அவர் உண்மையாளரா இல்லை
பொய்யரா என்று கேட்டான். அப்போது அபூஜஹ்ல் சத்தியமாக அவர் உண்மையாளர் தான். இதுவரை
அவர் பொய் சொன்னதில்லை என்றான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)
வெளியிலே நபி அப்படி இப்படி என்று
பேசித்திருந்தவர்கள் கூட உள்ளுக்குள் நபி உண்மையைத் தவிர வேறு எதையும் பேசியதில்லை
என்பதைத்தான் ஏற்றிருந்தார்கள்.அல்லாஹ்வும் அதைத் தான் சொன்னான்.
قال: جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم ذات
يوم وهو جالس حزينٌ, فقال له: ما يُحزنك؟ فقال: كذَّبني هؤلاء! قال فقال له جبريل:
إنهم لا يكذبونك، هم يعلمون أنك صادق," ولكن الظالمين بآيات الله يجحدون
" .
ஒரு நாள் நபி ﷺ அவர்கள் மிகுந்த கவலையுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது
ஜிப்ரயீல் அலை அவர்கள் வந்து என்ன கவலை என்று கேட்டார்கள். என் சமூகத்தினர் என்னை
பொய்ப்பிக்கிறார்கள் என்றார்கள். அதற்கு ஜிப்ரயீல் அலை அவர்கள் நிச்சயமாக அவர்கள்
உங்களை பொய்ப்பிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் உங்களை
உண்மையாளர் என்று அறிந்திருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் அல்லாஹ்வின்
அத்தாட்சிகளைத்தான் மறுக்கிறார்கள் என்று கூறினார்கள். (தஃப்ஸீர் தப்ரீ)
நபியின் குணத்தை மகத்தான குணம் மிக உயர்வான
குணம் என்று இறைவன் சொன்னதற்கான மிக முக்கியமான காரணம் இது தான். அவர்களின்
நுபுவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட அவர்களின் குணத்தை ஏற்றுக் கொண்டார்கள்.அவர்
உண்மையாளர்,பண்பாளர், குணசீலர் என்றெல்லாம் புகழ்ந்துரைத்தது யாரென்றால் அவர்களை
ஏற்றுக் கொள்ளாதவர்கள். அவர்களுக்கு எதிராக செயல் பட்டவர்கள். அவர்களை விரோதியாக பார்த்தவர்கள்,
அவர்களை அழிக்க வேண்டும் என்று துடித்தவர்கள். மாநபி ﷺ
அவர்களின் நற்குணத்திற்குக் கிடைத்த பரிசு இது தான்.அந்த நற்குணசீலர் முஹம்மதுர்
ரசூலுல்லாஹி ﷺ
அவர்களை நபியாகப் பெற்ற
நாம் மிகவும் பாக்கியமானவர்கள். அந்த நபியின் குணங்களை நாமும் பின்பற்றுவோம்.
இறைவன் தவ்ஃபீக் செய்வானாக.
ما شاء الله
ReplyDelete