Friday, October 23, 2020

நபியே! நீங்கள் எந்தக் குறைகளும் இல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறீர்கள்


 

நபிகள் நாயகம் அவர்கள் அகிலத்திற்கு வந்த வசந்தமான இந்த ரபீவுல் அவ்வல்  மாதத்தில் மாநபியின் தூய்மையான அப்பழுக்கற்ற பரிசுத்தமான வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.

நபி அவர்களின் நபித்துவத்திற்கு முன்பிருந்த 40 ஆண்டுகாலம் நபித்துவத்திற்கு பின்பிருந்த 23 ஆண்டுகாலம். ஆக மொத்தம் 63 ஆண்டு காலமும் அவர்களின் வாழ்க்கை மிகத் தூய்மையானதாக அப்பழுக்கற்றதாக  யாரும் எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு மிக மிக பரிசுத்தமானதாக அமைந்திருந்தது.

பொதுவாக நபிமார்கள் பாவங்களை விட்டும் குறைகளை விட்டும் மனிதர்களுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய பலவீனங்களை விட்டும் தூய்மையானவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள். அதிலும் குறிப்பாக நபிமார்களுக்கெல்லாம் தலைவரான நபிமார்களுக்கெல்லாம் முன்னோடியான முன்மாதிரியான அண்ணல் நபி அவர்களுக்கு இறைவனுடைய விசேஷமான பாதுகாப்பு உண்டு.

அவர்கள் பிறந்தது முதல் அவர்களின் குழந்தைப் பருவம் விளையாட்டுப் பருவம் வாலிப பருவம் என எந்த பருவத்திலும் அவர்கள் தவறு செய்ததில்லை. மட்டுமல்ல எந்த வீணான காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை என்பதை அவர்களின் வரலாறு நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது.

ما همَمْتُ بقبيحٍ ممَّا يهُمُّ به أهلُ الجاهليَّةِ إلَّا مرَّتَيْنِ مِن الدَّهرِ كلتاهما عصَمني اللهُ منهما قُلْتُ ليلةً لفتًى كان معي مِن قُريشٍ بأعلى مكَّةَ في غَنَمٍ لِأهلِنا نرعاها : أبصِرْ لي غَنَمي حتَّى أسمُرَ هذه اللَّيلةَ بمكَّةَ كما يسمُرُ الفتيانُ قال : نَعم فخرَجْتُ فلمَّا جِئْتُ أَدْنى دارٍ مِن دُورِ مكَّةَ سمِعْتُ غِناءً وصوتَ دُفوفٍ ومزاميرَ قُلْتُ : ما هذا ؟ قالوا : فلانٌ تزوَّج فلانةَ لِرجُلٍ مِن قُريشٍ تزوَّج امرأةً مِن قُريشٍ فلهَوْتُ بذلك الغِناءِ وبذلك الصَّوتِ حتَّى غلَبَتْني عَيْني فنِمْتُ فما أيقَظني إلَّا مَسُّ الشَّمسِ فرجَعْتُ إلى صاحبي فقال : ما فعَلْتَ ؟ فأخبَرْتُه ثمَّ فعَلْتُ ليلةً أخرى مِثْلَ ذلك فخرَجْتُ فسمِعْتُ مِثْلَ ذلك فقيل لي مِثْلَ ما قيل لي فسمِعْتُ كما سمِعْتُ حتَّى غلَبَتْني عَيْني فما أيقَظني إلَّا مسُّ الشَّمسِ ثمَّ رجَعْتُ إلى صاحبي فقال لي ما فعَلْتَ ؟ فقُلْتُ : ما فعَلْتُ شيئًا ) قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم : ( فواللهِ ما همَمْتُ بعدَهما بسُوءٍ ممَّا يعمَلُه أهلُ الجاهليَّةِ حتَّى أكرَمني اللهُ بنُبوَّتِه

இரண்டு சூழ்நிலைகளில் தவிர அறியாமை காலத்து மக்கள் எண்ணக்கூடிய எந்த அறுவறுப்பான விஷயத்தையும் நான் எப்போதும் எண்ணியதில்லை. அந்த இரண்டு நிகழ்விலும் அல்லாஹ் அதிலிருந்து என்னைப் பாதுகாத்து விட்டான். ஒன்று குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் மக்காவின் மேட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடத்தில் வாலிபர்கள் இரவு கேளிக்கையில் ஈடுபடுவதை போன்று நானும் ஈடுபடுவதற்காக செல்கிறேன். அதுவரை என் ஆடுகளைப் பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டு நான் சென்றேன்.

மக்காவில் ஒரு வீட்டிற்கு சென்றேன். அங்கே பாட்டு மற்றும் இசையினுடைய சப்தத்தைக் கேட்டேன். இது என்னவென்று நான் கேட்ட பொழுது இது ஒரு திருமண நிகழ்வு என்று எனக்கு சொல்லப்பட்டது அங்கே நான் அமர்ந்தேன். அமர்ந்தவுடன் எனக்கு இறைவன் தூக்கத்தைக் கொடுத்து விட்டான்.நான் தூங்கி விட்டேன். காலையில் சூரிய உதயத்தின் பொழுது தான் எனக்கு விழிப்பு ஏற்பட்டது. இன்னொரு நாள் இரவும் இதே நிகழ்வு நடந்தது. அப்பொழுதும் அல்லாஹுத்தஆலா அதேபோன்று எனக்கு தூக்கத்தை கொடுத்து என்னை அதில் ஈடுபடுவதிலிருந்து என்னைப் பாதுகாத்து விட்டான். அதற்குப் பிறகு அறியாமை காலத்து மக்கள் செய்யக்கூடிய எந்த தீய விஷயத்தையும் நான் எண்ணியதில்லை. (இப்னு ஹிப்பான் : 6272)

நாம் இங்கே விளங்க வேண்டிய செய்தி, ஷரீஅத் என்பது நபியின் 40 வயதிலிருந்து தான் தொடங்குகிறது. ஹலால் ஹராம் சட்டங்கள், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என ஷரீஅத்தின் மொத்த சட்டங்களும் இறைவனால் உலகிற்கு தரப்பட்டது நபி அவர்களின் நுபுவத்திற்குப பிறகு தான். நபித்துவம் கிடைப்பதற்கு முன்பிருந்த அந்த காலத்திற்கு அய்யாமுல் ஜாஹிலிய்யா என்று பெயர். அந்த வகையில் மியூசிக், இசைக்கருவிகளைப் பயன் படுத்துவது, அந்த இசைகளைக் கேட்பது, ஹராம் என்ற சட்டங்களெல்லாம் நபித்துவத்திற்குப் பிறகு தான் உலகத்திற்கு வந்தது.ஆனால் அந்த காலத்தில் கூட அந்த மாதிரியான சூழ்நிலைகளை விட்டும் நபி அவர்கள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள். அதற்குக் காரணம் இறைவனின் விஷேசமான பாதுகாப்பு அவர்களுக்கு இருந்தது.

فإنك بأعيننا اي  نرا ما تفعل ونسمع ما تقول ونحفظك ونحوطك  ونرعاك

நிச்சயமாக நீங்கள் நம் பார்வையில் இருக்கிறீர் (52 ; 48) என்ற வசனத்திற்கு நபி செய்வதை இறைவன் பார்க்கிறான், அவர்கள் சொல்வதை அவன் கேட்கிறான். இறைவனே அவர்களைப் பாதுக்கிறான், அவர்களை வளர்ப்பதற்கு பொறுப்பெடுத்துக் கொண்டான் என்று குர்ஆன் விரிவுரையாளர்கள் விளக்கம் எழுதுகிறார்கள்.

இந்த வசனத்தின் படி அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் அல்லாஹ்வின் விஷேசமான பாதுகாப்பைப் பெற்றவர்கள் என்பது மட்டுமல்ல அவர்களை வளர்க்கும் பொறுப்பை அல்லாஹ்வே எடுத்துக் கொண்டான் என்று புரிய முடிகிறது.

நபி அவர்கள் எந்தக் குறைகளோ பலவீனமோ இல்லாதவர்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவர்களை அல்லாஹ் எதீமாக  பிறக்க வைத்தான். அவர்கள் பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்து விட்டார்கள். இன்றைக்கு தந்தையில்லா எதீமான பிள்ளைகளின் நிலைகளை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். தந்தை இல்லையென்றால் அவர்களிடத்தில் சரியான ஒழுக்கத்தையோ பேணுதலையோ பார்க்க முடியாது. என்ன தான் தாயினுடைய வளர்ப்பும் அரவணைப்பும் இருந்தாலும் குழந்தைகளுக்கு தந்தையின் கண்டிப்பும் தந்தையின் வழிகாட்டுதலும் இல்லையென்றால் அந்த குழந்தைகள் தடம் மாறிப் போய் விடுவார்கள்.இது உலகத்தின் யதார்த்தம். இன்றைக்கு சாதாரணமாகவே தந்தை இல்லாத பெண்ணை மணமகளாக தேர்வு செய்ய நாம் அதிகம் யோசிக்கிறோம். காரணம் ஒன்றே ஒன்று தான், அவர்களின் வளர்ப்பு சரியாக இருக்காது. எனவே தந்தை இல்லை என்பது குழந்தைகளுக்குள்ள ஒரு குறைதான். அப்படியிருந்தும் ஏன் நபியை எதீமாக ஆக்கினான் என்ற கேள்வி நமக்கு வருகிறது. இதே கேள்வியைத் தான் மலக்குகள் கேட்டார்கள்.

لماذا ولد نبيك يتيما فقال الله انا له ولي وحافظ ونصير

உன்னுடைய தூதரான நபி அவர்கள் தந்தையில்லா எதீமாக பிறந்ததன் பின்னனி என்ன என்று மலக்குகள் கேட்ட போது, நானே அவர்களை வளர்ப்பவனாகவும் பாதுகாப்பவனாகவும் உதவி செய்பவனாகவும் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினான். (அல்பிதாயா வன் நிஹாயா)

இதைத்தான் அல்லாஹ் الم يجدك بتيما فاوي  உங்களை எதீமாக கண்டு உம்மை உம் இறைவன் அரவனைத்துக் கொள்ள வில்லையா என்று குறிப்பிடுகிறான். தன்னுடைய நேரடி கண்காணிப்பிலும் தன்னுடைய நேரடி வளர்ப்பிலும் நபி இருக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடினான். மட்டுமல்ல அவர்களின் தந்தை உயிரோடு இருந்திருந்தால் நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல தந்தையின் வளர்ப்பில் தான் நபிக்கு இவ்ளோ பெரிய அந்தஸ்தும் ஒழுக்கமும் கிடைத்தது என்று யாரும் சொல்லி விடக்கூடாது என்பதினால் தான் அல்லாஹ் அவர்களை எதீமாக ஆக்கினான் என்று கூறுவார்கள்.

அல்லாஹ்வின் நேரடி பாதுகாப்பிலும் நேரடி கண்கானிப்பிலும் அரவணைப்பிலும் அவர்கள் இருந்தார்கள்.அதனால் தான் எந்த குறையும் காண முடியாத அளவிற்கு அவர்களின் வாழ்க்கையை மிகத்தூய்மையாக அல்லாஹ் அமைத்தான். எந்தளவுக்கு என்றால், தவறு என்றால் என்ன? அநீதம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள முடியாத குழந்தைப் பருவத்தில் கூட அவர்களால் யாருக்கும் எந்த அநீதமும் ஏற்பட்டுவிடாமல் அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தான்.

وقالت حليمة إنها عندما أخذت النبي -صلى الله عليه وسلم- وضمته إلى صدرها لإرضاعه، كان لا يرضع إلا من الجانب الأيمن فقط، وفسر كُتاب السير ذلك، بقولهم عنه: وكأنه جُبل على العدل، وكأنه يعلم أن معه شريك له في الرضاعة.

ஹலீமா ரலி அவர்கள் நபிக்கு பாலூட்டிய போது நபி அவர்கள் அந்த தாயின் வலது மார்பில் மட்டுமே பாலருந்துவார்கள். பலமுறை முயற்சித்தும் அந்த அன்னையின் இடது புறத்தில் நபியவர்கள் பால் அருந்த வில்லை. நபியின் எல்லா செயலிலும் ஒரு அர்த்தம் இருக்கும்.ஒரு நுட்பம் ஒளிந்திருக்கும். அந்த வகையில் நபியின் அந்த செயலுக்கான நுட்பத்தை கூறும் போது இமாம்கள், ஹலீமா ரலி அவர்களின் மகன் அப்துல்லாஹ்வும் அப்போது அவர்களிடம் பாலருந்திக் கொண்டிருந்தார். இரு புறமும் பாலருந்தினால் அந்த அப்துல்லாஹ்விற்கு அநீதம் இழைத்ததாக ஆகி விடும். அந்த அநீதம் ஏற்படாமல் அவர்களை அல்லாஹ் அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே பாதுகாத்தான் என்று கூறுவார்கள்.

நபி அவர்கள் தன் வாழ்நாளில் யாருக்கும் அநீதம் இழைத்ததில்லை என்று நமக்குத் தெரியும். ஆனால் அந்த குணத்தை அவர்களின் பால்குடிப் பருவத்திலேயே அல்லாஹ் விதைத்து விட்டான் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

நபி அவர்கள், தான் ஒரு நபி என்பதை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்ற போது அவர்கள் சொன்ன வார்த்தை ;

فقد لبثت فيكم عمرا من قبله افلا تعقلون

இதற்கு முன் உங்களிடையே சில காலம் நான் இருந்திருக்கிறேன். எனவே நீங்கள் விளங்க மாட்டீர்களா. (அல்குர்ஆன் :10 ; 16)

அவர்களின் தூய்மையான வாழ்க்கையை ஆதாரமாகக் காட்டி நபித்துவத்தை எடுத்துரைக்குமாறு நபிகள் நாயகம் அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். தானொரு இறைத்தூதர் என்பதற்கு அவர்கள் பல அற்புதங்களையும் பல அத்தாட்சிகளையும் பிற்காலத்தில் காட்டியிருந்தாலும் தமது கடந்த கால வாழ்க்கையைத் தான் நபித்துவத்திற்கான முதல் சான்றாக முக்கிய சான்றாக மக்கள் மத்தியில் முன் வைத்தார்கள்.காரணம் அவர்களின் நபித்துவத்தின் முந்தைய அந்த வாழ்க்கை மிகவும் பரிசுத்தமாக இருந்தது. அவர்கள் பரிசுத்தமானவர்கள், உண்மையாளர், நம்பிக்கையாளர் என்பதை அந்த மக்களே விளங்கியிருந்தார்கள்.

لَمَّا نَزَلَتْ: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأقْرَبِينَ}، صَعِدَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ علَى الصَّفَا، فَجَعَلَ يُنَادِي: يا بَنِي فِهْرٍ، يا بَنِي عَدِيٍّ - لِبُطُونِ قُرَيْشٍ - حتَّى اجْتَمَعُوا فَجَعَلَ الرَّجُلُ إذَا لَمْ يَسْتَطِعْ أنْ يَخْرُجَ أرْسَلَ رَسولًا لِيَنْظُرَ ما هُوَ، فَجَاءَ أبو لَهَبٍ وقُرَيْشٌ، فَقالَ: أرَأَيْتَكُمْ لو أخْبَرْتُكُمْ أنَّ خَيْلًا بالوَادِي تُرِيدُ أنْ تُغِيرَ علَيْكُم، أكُنْتُمْ مُصَدِّقِيَّ؟ قالوا: نَعَمْ، ما جَرَّبْنَا عَلَيْكَ إلَّا صِدْقًا، قالَ: فإنِّي نَذِيرٌ لَكُمْ بيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ فَقالَ أبو لَهَبٍ: تَبًّا لكَ سَائِرَ اليَومِ، ألِهذا جَمَعْتَنَا؟ فَنَزَلَتْ: {تَبَّتْ يَدَا أبِي لَهَبٍ وتَبَّ ما أغْنَى عنْه مَالُهُ وما كَسَبَ} .

நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 26 : 214 வது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி அவர்கள் 'ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, 'பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!' என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூ லஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி அவர்கள், 'சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?' என்று கேட்க, மக்கள் 'ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை' என்று பதிலளித்தனர். நபி அவர்கள், 'அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்' என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூ லஹப், 'நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?' என்று கூறினான். அப்போதுதான் 'அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...' என்று தொடங்கும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது. (புகாரி : 4770)

நபி  அவர்கள் ஒரு இறைத் தூதர் என்பதைத்தான் அவர்களால் ஜீரணிக்க முடிய இல்லை. மற்றபடி நபியின் குணங்களிலும் நபியின் தன்மைகளிலும் அவர்களால் எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு அவர்களின் வாழ்க்கையை பரிசுத்தமாக இருந்தது .

இன்றைக்கு பொதுவாழ்வில் நல்லவராக அடையாளம் காணப்படுகின்ற எத்தனையோ பேருக்கு அவர்களின் தனிப்பட்ட சுய வாழ்க்கை சரியானதாக இல்லை. காந்தி இந்திய நாட்டுக்கு நல்ல தேசபிதாவாக இருந்தார். ஆனால் தன் மனைவி கஸ்தூரீபாயிடம் நல்ல கணவராக எல்லா காலத்திலும் இருந்தாராஎன்றால் நிச்சயம் கிடையாது.  ஏனென்றால் சொல்லும் செயலும் ஒன்றே சேர்ந்து அமையப் பெற்றவர்கள் நபி அவர்கள் மட்டுமே என்றால் அது மிகையாகாது. நபியவர்களின் பொது வாழ்வைப் போலவே அவர்களின் அந்தரங்க வாழ்வும் மிகத்தூய்மையாக இருந்தது. அதனால் தான் உலகில் யாருக்குமே கிடைக்காத ஒரு அங்கீகாரம் நபிக்கு கிடைத்தது. அது அவர்களின் மனைவிமார்களிடம் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.

خَيْرُكُمْ خيركم لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي   

தன் மனைவியிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியிடத்தில் சிறந்தவன். (திர்மிதி ; 3895)

உலகில் ஒருவர் எவ்வளவு தான் உச்சத்தைத் தொட்டிருந்தாலும் எல்லாரிடத்தில் புகழை சம்பாதித்திருந்தாலும் தன் மனைவியிடம் நல்ல பெயரை வாங்க முடியாது. அந்த சாதனையை உலகில் நிகழ்த்திய ஒரே மனிதப்புனிதர் நபி அவர்கள் மட்டும் தான்.

உலகத்தில் எந்த மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள், என் வாழ்க்கையைப் பாருங்கள் என்று கூற முடியாது.அப்படி கூறும் தைரியமோ யோக்கிதையோ உலகில் யாருக்கும் கிடையாது. காரணம் அவர்களின் கடந்த கால வாழ்க்கை அந்த அளவுக்குத் தூய்மையாக இல்லை. இதற்கு உலகில் மிகப்பெரியவர்களாக அறியப்படுகிற அனைவரின் வரலாறும் சான்று.

"நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது'' என்று சொல்வார்கள். உயர்ந்த பாறையிலிருந்து விழுகின்ற அருவி நீர் சூரிய வெப்பம், தூய்மையான காற்றால் தூய்மையாகத் தெரியும். பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆனால், மலையில் அந்த அருவி உற்பத்தியாகும் இடம், சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த இடம் அருவருப்பாக இருக்கலாம். நிறைய அழுக்குகளும் மாசுக்களும் அதில் படிந்திருக்கலாம். இறந்து போன உயிரினங்களின் அசுத்தங்கள் அதில் கலந்திருக்கலாம். அதை யோசித்தால் அந்த அருவியில் குளிக்க முடியாது. அதுபோன்று இன்றைக்கு ரிஷிகளாக மிக உயர்ந்தவர்களாக பார்க்கப்படுகின்ற கடவுள்களின் கடந்த கால சரித்திரங்களைப் பார்த்தால் நாற்றங்களும் அசிங்கங்களும் தான் இருக்கும்.அந்த அளவு அவர்களது பிறப்பும் வாழ்க்கையும் இருக்கிறது.அந்த அடிப்படையில் தான் "நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது'' என்று சொல்வார்கள். 

எனவே உலகத்தில் இன்றைக்கு போற்றப்படுகின்ற யாராக இருந்தாலும் அவர்களின் நிகழ்கால வாழ்க்கை சுத்தமாக இருக்கலாமே தவிர அவர்களின் கடந்தகால வாழ்க்கை மிக மோசமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் தான் ஒரு இறைத்தூதர் என்பதற்கு தன் கடந்த கால வாழ்க்கையை சான்றாகக் காட்டுகிறார்கள் என்றால் எந்தளவு அவர்களின் பொது வாழ்வும் சுய வாழ்வும் ரொம்ப தூய்மையாக இருந்திருக்கிறது என்பதை உணர முடிகின்றது.

واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرا من كل عيب

ஹள்ரத் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரலி அவர்கள் சொல்கிறார்கள் ; உலகில் உங்களை விட அழகான எவரையும் என் கண்கள் கண்டதில்லை. உங்களை விட மிக அழகான ஒருவரை இதுவரை பெண்கள் பெற்றெடுத்ததில்லை. எல்லா குறைகளை விட்டும் தூய்மையான நிலையில் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். (தலாயிலுன் நுபுவ்வா)

 


No comments:

Post a Comment