கடந்த சில வாரங்களாகவே உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கக்கூடிய கொரோனாவைக் குறித்தும் சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்தும் நோய்கள் குறித்தும் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்கிற ஆரோக்கியத்தின் வழிகாட்டுதல் குறித்தும் நாம் பார்த்து வருகிறோம் பேசி வருகிறோம்.
நாம யாரும் எதிர்பார்த்திராத இந்த கொரோனா வைரஸின்
தாக்கத்தால் உலக நாடுகள் பெரும் பொருளாதார
வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இந்தியப் பங்கு சந்தைகள் சரித்திரம் காணாத அளவில் சரிந்திருக்கிறது.
மாதாந்திர ஊதியத்திற்கு வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், சுயதொழில் செய்யக்கூடியவர்கள், சிறு - குறு தொழில் செய்பவர்கள் என பல தரப்பு
மக்களுக்கும் இது மிகப்பெரும் மோசமான சூழலை உருவாக்கி விட்டது.
இன்றைய நிலையில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் கோடிக்கணக்கான
மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது.
வேலைதேடி மற்ற மாநிலங்களுக்கு சென்று வாழ்க்கையை ஓட்டி வந்த புலம் பெயர் தொழிலாளர்கள்
அடுத்த வேளை சோற்றுக்கே வழியின்றி, கண்ணீரும், கம்பலையுமாக,
நடந்தே தங்களது சொந்த ஊர்களை
நோக்கி சென்ற கொடுமையை நாம் பார்த்தோம்.
கொரோனா ஏற்படுத்திய பொருளாதார ரீதியான இந்த சோதனை
நம்மையும் விட்டு வைக்க வில்லை. பொருளாதாரத்தை மட்டுமே வாழ்க்கையின் அடிப்படையாகக்
கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு இந்த கொரோனா எவ்வளவு பெரிய தாக்கத்தையும் பாதிப்பையும்
ஏற்படுத்தியது என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆறு மாதங்களாக வியாபாரம்
இல்லாமல் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கு வழியில்லாமல் விழிபிதுங்கி நிற்கிற சூழலை
நாம் சந்தித்தோம். தற்போது நிலைமை கொஞ்சம் சீரடையத் தொடங்கினாலும் பொருளாதார
வீழ்ச்சியிலிருந்து நாம் இன்னும் மீண்டு வர வில்லை என்பது தான் உண்மை. இப்படி
கொரோனா ஏற்படுத்திய பொருளார தாக்கத்தையும் பொருளாதார நெருக்கடியையும் சொல்லிக்
கொண்டே போகலாம்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் முஸ்லிம்களாக இருக்கிற
நாம் செய்ய வேண்டியது என்ன? மிகப்பெரும்
பொருளார வீழ்ச்சியை சந்தித்திருக்கிற இவ்வேளையில் நம் நிலைபாடு எப்படி இருக்க
வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் இது.
முதலாவது ; இது இறைவன்
செயல், இறைவன் நாட்டமின்றி எதுவும் நடக்காது, அணுவும் அசையாது, இறைவன் செய்கின்ற அனைத்திலும்
நன்மை இருக்கிறது என்கிற ஆழமான நம்பிக்கையை நம் உள்ளத்திலே புகுத்திக் கொள்ள வேண்டும்.
வெளிப்படையில் உலகத்தில் நடைபெறக் கூடிய சில காரியங்கள் நமக்கு எதிரானதாக நமக்கு பாதகமானதாக
இழப்புகளையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தக்கூடியதாக தெரிந்தாலும் அதிலும் இறைவன்
ஏதாவது ஒரு நன்மையை மறைத்து வைத்திருப்பான்.
முற்காலத்தில் மிகப் பெரிய ஞானி ஒருவர் இருந்தார்.
அவருக்கு அழகான குதிரை ஒன்று இருந்தது. அந்த குதிரையில் ஒரு நாள் அவருடைய மகன் ஏறி
பயணித்த போது அது திமிரி கொஞ்சம் முரண்டு பிடித்து துள்ளிய காரணத்தினால் அவருடைய மகன்
கீழே விழுந்து அவன் கால் உடைந்து விட்டது. அதை பார்த்து ரொம்ப வேதனைப்பட்டார். துடிப்பாக
ஓடிக்கொண்டிருந்த மகன் கால் உடைந்து கிடக்கின்றானே என்று வருத்தப்பட்டார். கொஞ்ச நாளில்
அந்த ஊரில் மிகப்பெரிய கலவரம் ஒன்று ஏற்பட்டது. அதில் நிறைய வாலிபர்கள் கலந்து கொண்டார்கள்.
இவரது மகன் கால் உடைந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவனால் கலந்து
கொள்ள முடியாமல் போனது. அந்த கலவரத்தில் கலந்து கொண்ட அதிகமான வாலிபர்கள் இறந்து போனார்கள்.
அப்போது தான் அவர் புரிந்து கொண்டார். கால் உடைந்து போச்சே என்று வருத்தப்பட்டேன்.
ஆனால் அதிலேயும் அல்லாஹ் ஒரு நலவை வைத்திருக்கிறான்.வெளிப்படையில் தீமையாக தெரிகிற
விஷயங்களிலும் நன்மையும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அல்குர்ஆனில் கஹ்ஃப் சூராவில் ஹள்ரத் மூஸா அலை அவர்கள்
கிள்ர் அலை அவர்களோடு சென்ற அந்த நிகழ்வை அல்லாஹ்
அந்த சூரா முழுக்க விரிவாகப் பதிவு செய்திருக்கிறான். மூஸா அலை அவர்களும் கிள்ர் அலை
அவர்களும் செல்லுகின்ற அந்த பயணத்தில் முக்கியமாக மூன்று நிகழ்வுகள் நடக்கும். ஒன்று
ஒரு ஊருக்கு போவார்கள். அங்கே சாப்பிடுவதற்கு உணவு கேட்பார்கள். அந்த ஊர்க்காரர்கள்
கொடுக்க மறுத்து விடுவார்கள். சரி பரவாயில்லை என்று சொல்லி அங்கிருந்து வரும் பொழுது
அங்கே ஒரு சுவர் இடிந்து விழக் கூடிய நிலையில் இருப்பதை பார்த்தவுடன் அதை கிள்ர் அலை
அவர்கள் சரி செய்வார்கள். இரண்டாவது விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பிடித்து
அவனை கொன்று விடுவார்கள். மூன்றாவது மக்கள் பயணிக்கக்கூடிய கப்பலை துளையிட்டு அதை சேதப்படுத்துவார்கள்.
ஏன் இப்படி செய்கிறீர்கள் இதுவெல்லாம் தவறில்லையா என்று மூஸா அவர்கள் கேள்வி கேட்கிற
பொழுது தான் கிளர் அலை அவர்கள் அதற்கு பதில் சொல்வார்கள் ; அந்த சுவற்றுக்கு கீழே இரண்டு யதீமான சிறுவர்களுக்கு
சேர வேண்டிய ஒரு பொக்கிஷம் ஒன்று இருக்கிறது. அது பாதுகாக்கப்பட்டு அந்த யதீம்களுக்கு
அது போய் சேர வேண்டும் என்பதற்குத் தான் அந்த சுவற்றை நான் சரி செய்தேன். அந்தக் சிறுவன்
வளர்ந்து பெரியவனாக ஆனால் அவன் தானும் வழிகெட்டு அவனுடைய பெற்றோர்களையும் வழிகெடுத்து
விடுவான். இறை நிராகரிப்பில் கொண்டு போய் சேர்த்து விடுவான். எனவே தான் இறை உத்தரவின்
பேரில் அவனை நான் கொலை செய்தேன். கரையோரத்தில் அநியாயக்கார அரசன் ஒருவன் நல்ல கப்பல்களை
எல்லாம் பிடுங்கி கொண்டிருக்கிறான். அபகரித்துக் கொண்டிருக்கிறான் அவனிடமிருந்து அந்த
கப்பலை காப்பாற்றுவதற்குத் தான் அதில் துளையிட்டேன் என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.
இந்த மூன்று நிகழ்வுகளையும் சற்று யோசித்துப் பார்த்தால் வெளிப்படையில் தீயதைப் போன்று
காட்சி தந்தாலும் அவற்றில் மிகப் பெரிய நன்மை ஒளிந்திருக்கிறது என்பதை கிள்ர்
அவர்கள் சொன்ன பதிலிலிருந்து நாம் விளங்கிக் கொள்கிறோம். எனவே நடப்பவை அனைத்தும்
நன்மைக்கே என்ற உணர்வை உருவாக்கிக் கொள்ள
வேண்டும்.
இரண்டாவது ; பொறுமையை
மேற்கொள்ள வேண்டும் .
பொறுமையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை வைத்திருக்கிறான்.
الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ
قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ () أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ
مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ()
“தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது “நிச்சயமாக, நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும்,
நாம் அவனிடமே திரும்பிச் செல்வோராக
இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.
அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர் தான்
நேர்வழி பெற்றவர்கள்!” ( அல்குர்ஆன்: 2 ; 156,157 )
قال ثابت البناني: مات عبدالله بن مطرف،
فخرج مطرف على قومه في ثياب حسنة وقد ادَّهن، فغضبوا، وقالوا: يموت عبدالله، ثم تخرج
في ثياب من هذه مدهنًا؟! قال: أفأستكين لها، وعَدني ربي تبارك وتعالى ثلاث خصال، كل
خصلة منها أحبُّ إليَّ من الدنيا وما فيها، قال الله تعالى:﴿ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ
مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ * أُولَئِكَ عَلَيْهِمْ
صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ﴾ [البقرة:
156، 157].
மகன் அப்துல்லாஹ் அவர்கள் மரணித்த அன்று
முத்ரிஃப் ரஹ் அவர்கள் அழகிய ஆடை உடுத்தி தலையில் எண்ணை தேய்த்துக் கொண்டு வெளியே
வந்தார்கள். மக்களெல்லாம் கோபம் கொண்டு மகன் இறந்திருக்கிறான். ஆனால் நீங்கள்
கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் இந்த நிலையில் வருகிறீர்களே என்று கேட்டார்கள். அப்போது
அவர்கள், என் இறைவன் எனக்கு மூன்று விஷயங்களைத் தருவதாக வாக்களித்திருக்கிறான். அம்மூன்றும்
இவ்வுலகம் மற்றும் அதில் உள்ளவற்றை விட எனக்குப் பிரியமானது என்று சொல்லி அந்த
வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (அல்முன்தளமு ஃபீ தாரீஹில் முலூகி வல் உமம் )
நம்மைப் போன்றவர்களுக்கு இது சாத்தியமாகுமா ? மகனோ தந்தையோ இறந்த அன்று அந்த சோகம் தான் நம்
கண் முன்னால் வந்து நின்று நம்மை நிலை குலையச் செய்யும். நாம் அல்லாஹ்வுக்கே
உரியவர்கள்.அவன் பக்கமே திரும்பிச் செல்லக்கூடியவர்கள். கொடுத்தவன் அழைத்துக்
கொண்டான் என்று பொறுமை கொண்டால் அல்லாஹ் இந்த மூன்று பாக்கியங்களையும் தருவான்
என்று உணர்வு வருவது இயலாத காரியம். ஆனால் முத்ரிஃப் ரஹ் அவர்கள், மகன் இறந்த
சோகத்தை விட அந்த மூன்று பாக்கியங்களை நினைத்து மகிழ்ந்தார்கள் என்றால் அல்லாஹ்வின்
வார்த்தைகள் மீதும் அல்லாஹ் கொடுத்த வாக்கின் மீதும் அவர்களுக்கிருந்த அசைக்க முடியாத
நம்பிக்கையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பல வகையான இழப்புக்களை சந்தித்திருக்கிற இந்த நேரத்தில் நமக்கு பொறுமை மிக மிக அவசியம்.
மூன்றாவது ; இறைவன் எப்படியும் நம் இழப்புக்களை சரி செய்து விடுவான்.நம்மை பழைய நிலைக்கு திருப்பி
விடுவான்.நாம் எதிர் பார்க்கிற வெற்றியை நமக்குத் தருவான் என்று இறை நம்பிக்கை
வேண்டும்.
عن عُبادةَ بنِ الصامت رضي الله عنه قال:
إن رجلًا أتى النبيَّ صلى الله عليه وسلم، فقال: يا نبيَّ الله، أيُّ العمل أفضل؟ قال:
((الإيمان بالله، وتصديقٌ به، وجهاد في سبيله))، قال: أريد أهونَ من ذلك يا رسول الله،
قال: ((السماحة والصبر))، قال: أريد أهونَ من ذلك يا رسول الله، قال: ((لا تَتَّهِمِ
اللهَ في شيء قضى لك به))
ஒரு மனிதர் நபி ﷺ அவர்களிடம் அமல்களில் சிறந்தது எது என்று கேட்டார். அல்லாஹ்வை நம்புவது, அவனை உண்மைப்படுத்துவது, அவனுடைய பாதையில் போரிடுவது என்றார்கள். இதை விட இலேசானதை விரும்புகிறேன்
என்றார். அப்படியானால் பெருந்தன்மையும் பொறுமையும் என்றார்கள். இதை விட இலேசானதை எதிர்
பார்க்கிறேன் என்றார்கள். அப்படியானால் அல்லாஹ் உன் விதியில் எழுதிய எதிலும்
அல்லாஹ்வின் மீது சந்தேகம் கொள்ளாதே என்றார்கள். (முஸ்னத் அஹ்மத் : 5/318)
சந்தேகம் கொள்ளாதே என்பதற்கு பொருள், உன் விதியில் எழுதப்பட்டது நிச்சயம் உனக்கு
கிடைக்கும் என்பது. அல்லாஹ் உன் விதியில் தீயதை எழுதி விட்டான் என்று நினைக்காதே
அல்லாஹ் விதித்த அனைத்தும் நன்மையானது என்று நம்பிக்கை கொள் என்றும் பொருள்
கூறப்படுகிறது.
இறைநாட்டம் இல்லாமல் உலகில் எதுவும் நடக்காது,
நமக்கு அல்லாஹ் எழுதிய ரிஸ்கில் எதுவும் குறையாது, நமக்கு அல்லாஹ் விதித்த ஆயுளில் கூடுதல் குறைவு ஏற்படாது என்ற
ஆழமான நம்பிக்கை மட்டும் வந்தால் நம்
வாழ்க்கையில் சந்திக்கிற எவ்வளவு பெரிய இழப்புக்களும் நம்மை ஒன்றும் செய்ய
முடியாது.எது நடந்தாலும் கவலை கொள்ளாமல் நிம்மதியாக வாழலாம்.
நான்காவது ; நாம்
இழந்த இழப்புக்களை மீட்பதற்கும் சரி செய்வதற்கும் இறைவனிடம் கரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும்.உண்மையில் நாம்
இழந்த இழப்புக்களை சரி செய்து அதனால் ஏற்பட்ட நம் கவலைகளை போக்கி நம்மை உயர்வான
நிலைக்கு கொண்டு போவது பிரார்த்தனைகள் தான்.
ما مِن مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ، فيَقولُ
ما أمَرَهُ اللَّهُ: {إنَّا لِلَّهِ وإنَّا إلَيْهِ راجِعُونَ}،[البقرة:156] اللَّهُمَّ
أْجُرْنِي في مُصِيبَتِي، وأَخْلِفْ لي خَيْرًا مِنْها، إلَّا أخْلَفَ اللَّهُ له خَيْرًا
مِنْها، قالَتْ: فَلَمَّا ماتَ أبو سَلَمَةَ، قُلتُ: أيُّ المُسْلِمِينَ خَيْرٌ مِن
أبِي سَلَمَةَ؟ أوَّلُ بَيْتٍ هاجَرَ إلى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ،
ثُمَّ إنِّي قُلتُها، فأخْلَفَ اللَّهُ لي رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ
قالَتْ: أرْسَلَ إلَيَّ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ حاطِبَ بنَ أبِي
بَلْتَعَةَ يَخْطُبُنِي له، فَقُلتُ: إنَّ لي بنْتًا وأنا غَيُورٌ، فقالَ: أمَّا ابْنَتُها
فَنَدْعُو اللَّهَ أنْ يُغْنِيَها ع
சோதனை ஏற்படும் போது ஒருவர்,
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ
أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்
மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா
(பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே
திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சோதனையில் கூலியைத் தருவாயாக! எனக்கு
இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக!) என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ்
பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபிகள் நாயகம் ﷺ
அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.
(என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்த போது, முஸ்லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார்?
நபிகள் நாயகம் ﷺ
அவர்களிடம் ஹிஜ்ரத் சென்ற
குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார் (என எண்ணினேன்) பின்பு நான் அந்தப் பிரார்த்தனையைக்
கூறினேன். அல்லாஹ் எனக்கு நபிகள் நாயகம் ﷺ அவர்களைப் பகரமாக வழங்கினான்.
நம் வியாபாரத்திலும் நம் பொருளாதாரத்திலும்
ஏற்பட்டிருக்கிற இழப்புக்களை சரி செய்வதற்கும் நம் வாழ்க்கையின் தரம் உயர்வதற்கும்
இது அற்புதமான துஆ.இதை நாம் இந்த நேரத்தில் அதிகமாக ஓதி வர வேண்டும்.நம்மைப்
படைத்த அல்லாஹ் கூடிய விரைவில் நம் நிலைகளை சரி செய்து விடுவான் இன்ஷா அல்லாஹ்........
ஆமீன் அல்ஹம்து லில்லாஹ்
ReplyDelete