Tuesday, October 6, 2020

இஸ்லாம் கூறும் கவலைக்கான மருந்து


 

நாம் வாழுகிற வாழ்க்கை வெற்றி தோல்வி, லாப நஷ்டம், இன்பம் துன்பம் என அத்தனை அம்சங்களும் கலந்த வாழ்க்கை.மனித வாழ்வில் மகிழ்ச்சியும் கவலையும் மாறி மாறி வரும். எந்த மகிழ்ச்சியையும் பார்க்காமல் கவலைகளில் மட்டுமே மூழ்கிப்போனவனும் கிடையாது. எந்த கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சியில் மட்டுமே திளைப்பவனும் கிடையாது.இரண்டும் கலந்த கலவை தான் மனித வாழ்க்கை.இதில் மகிழ்ச்சி வருகிற போது மனிதன் துள்ளிக் குதிக்கிறான்,கவலைகள் அவனை சூழ்ந்து கொள்கிற போது துவண்டு விடுகிறான்.இரண்டும் தவறானது. மகிழ்ச்சியில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் கவலையில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

பல்வேறு விஷயங்களை இலக்காகக் கொண்டு வாழும் நாம், நம் இலக்கை தொடுவதற்கும் நம் விருப்பங்களை அடைவதற்கும் அல்லும் பகலுமாக பாடுபடுகிறோம், உழைக்கிறோம், கஷ்டப்படுகிறோம், அதற்காக நேரங்களை செலவழிக்கிறோம்.ஆனால் நம் இலக்கைத் தொடுவதற்கு முட்டுக்கட்டையாக ஒன்று வந்து விட்டால், நம் விருப்பங்களை அடைவதற்கு தடைக்கல்லாக ஒன்று வந்து விட்டால் உடனே கவலைப்படுகிறோம்.

கவலைகள் இல்லாத எந்த உயிரும் உலகத்தில் கிடையாது. பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையில் கவலைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். பள்ளிப்பருவக் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு போக வேண்டுமே என்ற கவலை, ஸ்கூலுக்கு போனால் படிக்க வேண்டுமே என்ற கவலை,வீட்டிற்கு வந்தால் ஹோம் ஒர்க் பண்ண வேண்டுமே என்ற கவலை,எக்ஸாம் வந்தால் அதில் நல்ல மார்க் வாங்க வேண்டுமே என்ற கவலை,படிப்பை முடித்து விட்டால் நல்ல வேலை கிடைக்க வேண்டுமே என்ற கவலை, நல்ல வேலை கிடைத்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே என்ற கவலை ,செட்டில் ஆகி விட்டால் கல்யாணம் செய்ய வேண்டுமே என்ற கவலை, கல்யாணம் செய்து விட்டால் குழ்ந்தை பிறக்க வேண்டுமே என்ற கவலை,குழந்தை பிறந்தால் அதை நல்ல வளர்க்க வேண்டுமே என்ற கவலை, அப்புறம் அவர்களை படிக்க வைக்க வேண்டும், அவர்கள் நல்ல மார்க் வாங்க வேண்டும் நல்ல வேலைக்கு போக வேண்டும் அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும், இப்படி கவலைகள் மரணம் வரை நம்மை விடாது துறத்திக் கொண்டே இருக்கும்.

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு.இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்ற கவலை சிலருக்கு.கவலையின் விதங்களும் அதன் ரூபங்களும் மாறுபடலாமே தவிர கவலையை விட்டும் உலகில் யாரும் தப்ப முடியாது. கவலைக்கான காரணங்கள் மனிதருக்கு மனிதர் வித்தியாசப் படலாமே தவிர கவலை இல்லா மனிதனைப் பார்க்க முடியாது.

கவலையில்லா மனிதர்கள் சொர்க்கவாதிகள் மட்டும் தான்  என்று குர்ஆன் கூறுகிறது.

 وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ

எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று சுவனவாதிகள் கூறுவார்கள். (அல்குர்ஆன் : 35 ; 34)

இந்த கவலைகளை நாம் சாதாரணமாக நினைத்து விட முடியாது. இன்றைக்கு பலர் வியாபாரத்தில் உயர முடியாமல் துவண்டு போவதற்கு காரணம் இந்த மனக்கவலைகள் தான். பலர் படிப்பில் கவனம் செலுத்தாமல் பின்னடைவை சந்திப்பதற்கு காரணம் இந்த மனக்கவலைகள் தான். இன்றைக்கு நடக்கும் அதிகமான விபத்துகளுக்கும், தற்கொலைகளுக்கும் காரணம் இந்த மனக்கவலைகள் தான். துடிப்பான பல இளைஞர்களை செயல் பட விடாமல் முடக்கிப் போட்டிருப்பதும் இந்த மனக்கவலைகள் தான். ஒருவன் என்ன தான் திறமையுள்ளவனாக, விவேக முள்ளவனாக, வீரனாக, அறிஞனாக, கலை நயம் உள்ளவனாக இருந்தாலும் கவலை அவனை சூழ்ந்து விட்டால் அவனிடம் இருக்கும் அத்தனை திறமைகளும் பயனற்றுப் போய் விடுகிறது. யாருக்கும் அடங்காத பலம் மிக்க ஒரு வீரனையும் சாய்த்து விடும் ஆற்றல் கவலைக்கு உண்டு.

قال الإمام علي رضي الله عنه : «أشد جنود الله عشرة: الجبال الرواسي والحديد يقطع الجبال، والنار تذيب الحديد، والماء يطفئ النار، والسحاب المسخر بين السماء والأرض يحمل الماء، والريح يقطع السحاب، وابن آدم يغلب الريح يستتر بالثوب أو الشيء ويمضي لحاجته ، والسُّكْر يغلب ابن آدم، والنوم يغلب السكر، والهم يغلب النوم، فأشد جنود الله الهم!

ஹள்ரத் அலி ரலி அவர்கள் கூறினார்கள் ; அல்லாஹ்வின் படைப்புக்களில்  மிகவும் பலமிக்க படைப்புகள் பத்தாகும். 1 வது மலைகள். ஆனால் அந்த மலைகளை இரும்பு உடைத்து விடும். அந்த இரும்பை நெருப்பு உருக்கி விடும். அந்த நெருப்பை நீர் அனைத்து விடும். அந்த நீரை மேகம் சுமந்து செல்லும். அந்த மேகத்தை காற்று உடைத்து விடும். மனிதன் அந்த காற்றை தன் ஆற்றலால் அடைத்து வைத்துக் கொள்கிறான்.போதை மனிதனை மிகைத்து விடும். அந்த போதையை தூக்கம் மிகைத்து விடும். அந்த தூக்கத்தை கவலை மிகைத்து விடும்.எனவே அல்லாஹ்வின் படைப்புக்களில் மிகவும் பலமானது கவலையாகும். (ஹாஷியது தஃப்ஸீர் ஷஃராவீ)

لما سئل علي رضي الله عن اشد جنود الله في الارض قال الهم. فان تسلط علي الانسان اقلقه واقض مضجعه لذلك قالوا والهم يغلب النوم فكان اشد منه وما يزال الهم بالانسان حتي يصير نحيلا بعد البدانة

அல்லாஹ்வின் படைப்புக்களில் மிகவும் பலமானது எது என்று அலி ரலி அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் கவலையாகும், ஏனெனில் மனிதனுக்கு கவலை வந்து விட்டால் அவனுக்கு அது கலக்கத்தை ஏற்படுத்தி அவன் தூக்கத்தை கெடுத்து விடும் என்று சொன்னார்கள். அதனால் தான், ஒரு மனிதனுக்கு கவலை இருந்து கொணடே இருந்தால் நல்ல உடல் எடையுள்ளவனாக இருந்தாலும் அவனை மெலிந்தவனாக மாற்றி விடும் என்று சொல்வார்கள். (தஃப்ஸீர் ஷஃராவீ)

قال ابن القيم رحمه الله: "أربعة تهدم الجسم: الهم والحزن، والجوع، والسهر

துக்கம்,கவலை,பசி,இரவு கண் விழிப்பு இவை நான்கும் உடலை சிதைத்து விடும் என்று இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுவார்கள்.

வாழ்க்கையில் கவலை இருக்கலாம்.ஆனால் வாழ்க்கையே கவலையாகி விட்டால் அந்த கவலையே மனிதனை அழித்து அவனை இல்லாமல் ஆக்கி விடும். உலகில் ஒரு வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. இந்த அத்தனை தற்கொலைகளும் கவலைகளால் தான் நடக்கிறது.எனவே கவலையினால் ஏற்படும் பாதிப்புகளும் ஆபத்துக்களும் இழப்புக்களும் ஏராளம்.

அதனால் தான் நபி அவர்கள் இந்த கவலையிலிருந்து அதிகமாக அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியிருக்கிறார்கள்.தேடும்படியும் உணர்த்தியிருக்கிறார்கள்.

دخل رسول اللهِ صلى الله عليه وسلم ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة فقال يا أبًا أمامة ما لي أراك جالسا في المسجد في غير وقت الصلاة قال هموم لزمتني وديون يا رسول اللهِ قال أفلا أعلمك كلاما إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك قال قلت بلى يا رسول اللهِ قال قل إذا أصبحت وإذا أمسيت اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال قال ففعلت ذلك فأذهب الله عز وجل همي وقضى عني ديني

ஒரு நாள் நபி  அவர்கள் மஸ்ஜிதுக்கு வருகிறார்கள். அங்கே அபூஉமாமா ரலி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தொழுகையில்லாத இந்த நேரத்தில் மஸ்ஜிதில் அமர்ந்திருக்க காரணமென்ன? என்று கேட்டார்கள். எனக்கு நிறைய கடன்களும் கவலைகளும் இருக்கிறது என்றார். ஒரு துஆவை சொல்லித்தரட்டுமா? அதை நீ காலையிலும் மாலையிலும் ஓதினால் அல்லாஹ் உன் கவலையைப் போக்கி விடுவான். உன் கடனை அடைத்து விடுவான் என்று சொல்லி அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹுஸ்ன் என்ற துஆவை சொல்லிக் கொடுத்தார்கள். (துஆவின் பொருள் ; யாஅல்லாஹ்! கடந்த காலம் மற்றும் வருங்காலத்தின் கவலை யை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இயலாமை மற்றும் சோம்பலை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கோழைத் தன்மை மற்றும் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.கடன் மிகைப்பது மற்றும் எதிரிகளின் அடக்குமுறையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்) அந்த துஆவை நான் தினமும் ஓதினேன். அல்லாஹ் என் கவலையைப் போக்கி விட்டான். என் கடனையும் அடைத்து விட்டான் என்று அபூஉமாமா ரலி அவர்கள் கூறுகிறார்கள். (அபூதாவூது 1555)

இந்த கவலைகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கும் அதன் விபரீதங்களிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கும் இஸ்லாம் அழகான வழிமுறைகளைக் கற்றுத்தருகிறது.இஸ்லாம் கற்றுத்தருகிற அந்த வழிமுறைகளை நாம் நம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் கவலை இல்லாத வாழ்க்கை வாழலாம். அல்லது அந்த கவலையின் மூலம் ஏற்படும் விபரீதங்களைத் தடுத்து விடலாம்.

 

கவலையிலிருந்து பாதுகாப்புப் பெற இஸ்லாம் சொல்லும் அற்புதமான விஷயம் الرضاء بقضاء الله அல்லாஹ்வுடைய களா கத்ரை ஏற்றுக் கொள்வது. நம் வாழ்க்கையில் எது நடந்தாலும், அதை நடத்தியவன் அல்லாஹ்,காரணமில்லாமல் அல்லாஹ் எதையும் நடத்த மாட்டான்.அவன் செய்கிற அத்தனை காரியங்களிலும் ஏதாவது நன்மை இருக்கும் என்ற உணர்வோடு எல்லாவற்றையும் பொருந்திக் கொள்கிற மனப்பான் மையையும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.அந்த பக்குவம் வந்து விட்டால் நம் வாழ்க்கை கவலைகள் இல்லாத, மகிழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கையாக மாறி விடும்.ஸஹாபாக்களிடம் அந்த பண்பு இருந்தது.அதனால் அவர்களின் வாழ்க்கை வசந்தமானது. எனக்கென்று எந்த விருப்பும் வெறுப்பும் இல்லை. படைத்தவன் அல்லாஹ்,அவன் எதை செய்தாலும் அது நன்மையாகத்தான் இருக்கும் என்று அவர்கள் விளங்கினார்கள்.அதனால் தான் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எத்தனை சோதனைகள் வந்தாலும் கலங்காமல் மனம் தளராமல் நிம்மதியாக இருந்தார்கள்.

இன்றைக்கு நம்மிடம் அந்த தன்மை இல்லாததினால் தான் நிம்மதி இல்லாமல் போனது.அல்லாஹ் எல்லோருக்கும் செல்வத்தைக் கொடுத்திருக்கிறான், எனக்கு மட்டும் வறுமையைக் கொடுத்து விட்டான். எல்லோருக்கும் ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கிறான். எனக்கு மட்டும் நோயைக் கொடுத்து விட்டான். எல்லோருக்கும் நல்ல மனைவி மக்களைக் கொடுத்திருக்கிறான்.எனக்கு மட்டும் மோசமான மனைவி மக்களைக் கொடுத்து விட்டான் என்று அல்லாஹ் கொடுத்த விஷயங்களை ஏற்றுக் கொள்ளாமல் குறை காண ஆரம்பிக்கின்ற போது தான் கவலைகள் நம்மை தொற்றிக் கொள்கிறது.

நடக்கிற அத்தனை விஷயங்களை பொறுந்திக் கொள்ள ஆரம்பித்தால் கவலைகள் நம்மை நெருங்காது. வியாபாரத்தில் நஷ்டமா? அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொல்ல வேண்டும். அந்த கவலை பறந்து விடும்.வீட்டில் பிரச்சனைகளா? அல்லாஹ்வின் நாட்டம் என்று சொல்ல வேண்டும். அந்த கவலை காணாமல் போய் விடும்.கடுமையான நோய்களா? அல்லாஹ்வின் நாட்டம் என்று சொல்ல வேண்டும், அந்த கவலை மாயமாய் மறைந்து விடும்,நெருங்கியவர்களின் மறைவா? அல்லாஹ்வின் நாட்டம் என்று சொல்ல வேண்டும், அந்த கவலை ஒன்றும் இல்லாமல் ஆகி விடும். இது தான் கவலைகளை நம்மை விட்டும் தூரமாக்குவதற் கான வழி.

وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ».رواه الترمذي

அறிந்து கொள்! ஒரு சமூகமே ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை செய்ய நினைத்தாலும் அல்லாஹ் உனக்கு விதித்ததைத் தவிர வேறு எந்தப் பயனையும் செய்ய முடியாது. அவர்கள் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு தீங்கு செய்ய நினைத்தாலும் அல்லாஹ் உனக்கு விதித்ததைத் தவிர வேறு எந்த தீமையையும் அவர்கள் செய்ய முடியாது.பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டது. ஏடுகள் காய்ந்து விட்டது. (திர்மிதி : 2516)

مر إبراهيم بن أدهم على رجل مهموم فقال له: "إني سائلك عن ثلاثة فأجبني، قال: أيجري في هذا الكون شيء لا يريده الله؟ أو ينقص من رزقك شيء قدره الله؟ أو ينقص من أجلك لحظة كتبها الله؟ فقال الرجل: لا، قال إبراهيم: فعلام الهم إذن"؟

இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் கவலையான ஒரு மனிதரைக் கண்டார்கள். நான் உன்னிடம் மூன்று கேள்விகளைக் கேட்கிறேன். நீ பதில் சொல் என்றார்கள். இந்த உலகில் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்குமா ? அவர் இல்லையென்றார். அல்லாஹ் உன் விதியில் எழுதிய ரிஸ்கில் எதுவும் குறையுமா ? இல்லையென்றார். அல்லாஹ் உனக்கெழுதிய ஆயுளில் ஒரு நொடிப்பொழுதேனும் குறையுமா ? இல்லையென்றார் அவர். பிறகு எதற்கு கவலை என்று இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் கேட்டார். (அல்விகாயது மின் குல்லி தாயின்)

அல்லாஹ் நாடியதைத்தவிர வேறு எதுவும் நடக்காது என்பதும் நமக்கு அல்லாஹ் எழுதிய ரிஸ்கில் அனுவளவும் குறையாது என்பதும், நமக்கு அல்லாஹ் நியமித்த தவனையில் கூடுதல் குறைவு ஏற்படாது என்பதும் நாம் அத்தனை பேரும் அறிந்திருக்கிறோம்,நம்பியிருக்கிறோம். இருந்தாலும் அதில் ஒரு சின்ன தடுமாற்றம், சின்ன பலவீனம். அது தான் நம் கவலைக்கான காரணம்.

عن عُبَادَةَ بْنِ الصَّامِتِ رضي الله عنه: أنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقالَ : يَا نَبِيَّ اللَّهِ، أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ : «الْإِيمانُ باللَّهِ، وتصديقٌ به، وجهاد فِي سبيله، قال : أريدُ أهونَ من ذلك يا رسول اللَّه، قال: السماحةُ والصبرُ، قال: أريدُ أهونَ من ذلك يا رسول اللَّه، قال: لا تتَّهِمِ اللَّهَ تبارك وتعالى في شيء قَضَى لك به

ஒரு மனிதர் நபி அவர்களிடம் அமல்களில் சிறந்தது எது என்று கேட்டார். அல்லாஹ்வை நம்புவது, அவனை உண்மைப்படுத்துவது, அவனுடைய பாதையில் போரிடுவது என்றார்கள். இதை விட இலேசானதை விரும்புகிறேன் என்றார். அப்படியானால் பெருந்தன்மையும் பொறுமையும் என்றார்கள். இதை விட இலேசானதை எதிர் பார்க்கிறேன் என்றார்கள். அப்படியானால் அல்லாஹ் உன் விதியில் எழுதிய எதிலும் அல்லாஹ்வின் மீது சந்தேகம் கொள்ளாதே என்றார்கள். (முஸ்னத் அஹ்மத் : 5/318)

சந்தேகம் கொள்ளாதே என்பதற்கு பொருள், உன் விதியில் எழுதப்பட்டது நிச்சயம் உனக்கு கிடைக்கும் என்பது. அல்லாஹ் உன் விதியில் தீயதை எழுதி விட்டான் என்று நினைக்காதே அல்லாஹ் விதித்த அனைத்தும் நன்மையானது என்று நம்பிக்கை கொள் என்று பொருள் கூறப்படுகிறது.

அல்லாஹ் விஷயத்தில் நம் எண்ணங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும். இறைவன் என்னை வீணாக்க மாட்டான்.இறைவன் என் விஷயத்தில் அநீதம் இழைக்க மாட்டான் என்று இறைவன் மீது அபார நம்பிக்கை வேண்டும்.அந்த உண்மையான நம்பிக்கை வந்து விட்டால் ஸஹாபாக்களைப் போன்று நம் வாழ்க்கையும் வசந்தமாகும்.

 


3 comments: