Friday, December 18, 2020

அரபி எனும் செம்மொழி

 

 


உலகில் மனிதர்களும் மற்ற படைப்பினங்களும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கும் அடிப்படையானது மொழி. உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக் குறியீட்டுக்கு மொழி அல்லது பாஷை என்று சொல்லப்படுகிறது.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் தன்னுடைய அத்தாட்சிகளை வரிசைப்படுத்தி வருகின்ற பொழுது உலகத்தில் பலதரப்பட்ட மொழிகள் இருப்பதை அந்த அத்தாட்சிகளில் ஒன்றாக பதிவு செய்திருக்கிறான். உலகத்தில் வாழுகின்ற எந்த மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் அடிப்படையும் மூலக்கூறும் ஒன்று தான். ஆதம் நபி அலை அவர்களும் ஹவ்வா அலை அவர்களும் தான் உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கிறார்கள். அனைவரும் ஒரு தாய் தந்தையின் மக்களாக இருந்தாலும் அவர்களின் பேசும் மொழி வித்தியாசமாக இருக்கிறது.

 وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِّلْعَالِمِينَ).

மேலும் வானங்களையும்பூமியையும் படைத்திருப்பதும்உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும்அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30 ; 22)

இந்த வசனத்தில் மாறுபட்ட மொழி என்பதற்கு இரு பொருள் உண்டு. ஒன்று ; உலகில் ஒருவரின் சப்தம் மற்றவரின் சப்தத்திலிருந்து மாறுபடுகிறது. உலகத்தில் எத்தனை கோடி மக்கள் இருந்தாலும் அத்தனை கோடி மக்களையும் தனித்தனியாக அடையாளம் காணுவதற்கு தனித்தனியான சப்தங்களைக் கொடுத் திருக்கிறான். ஒருவர் நம்மை விட்டு மறைந்திருந்தாலும் எங்கோ தூரத்திலிருந்து நம்மைத் தொடர்பு கொண்டாலும் அவர் பேசும் போது அவரிடம் இருந்து வரும் சப்தத்திலிருந்தே அவர் யார் என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். நெருங்கிப் பழகுகிற ஒருவர் என்றைக்காவது வேற மாதிரி பேசினால் என்ன சப்தம் வேறமாதிரி இருக்கிறது என்று கேட்கிறோம். பிறந்த குழந்தை கூட சப்தத்தை வைத்தே தன் தாயை அடையாளம் கண்டு கொள்கிறது.  

இதில் நிறைய நன்மைகள் இருக்கிறது. பேசுகின்ற சப்தத்தை வைத்து நண்பனையும் பகைவனையும் அறிந்து கொள்ள முடியும். அறிமுகமானவருக்கும் அறிமுகமில்லாதவருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடியும். ஆணா பெண்ணா என்று அடையாளம் கண்டு கொள்ள முடியும்.  

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு நாம் அனைவரும் செல்ஃபோன் பயன்படுத்துகிறோம். அதில் எண்களை அழுத்துகிறோம். அதில் ஒவ்வொரு பட்டனிற்கும் ஒவ்வொரு சப்தம் இருக்கிறது. இன்றைக்குள்ள நவீன வசதிகளை வைத்து ஒருவர் நம்பரை அழுத்துகிற போது அதை பார்க்காமல் அதிலிருந்து வரும் சப்தங்களை வைத்து அவர் அழுத்துகிற எண்களை கண்டுபிடித்து விட முடியும். அதில் கூட அல்லாஹ் நுணுக்கமான வேறுபாடுகளை வைத்திருக்கிறான். இரண்டாவது பொருள் ; வெவ்வேறு மொழி பேசும் மனிதர்களை பூமியில் அல்லாஹ் வைத்திருக்கிறான்.  

மொழி என்பது மனிதனுக்கு இறைவன் வழங்கிய கொடை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, தன் உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்த துணையாக நிற்பது மொழி!

அந்த வகையில் மொழிகளை பல வகைகளாக பிரிக்கலாம்.

1இறைவனின் மொழி

இறைவன் தான் விரும்பும் விஷயங்களை, தான் செயல்படுத்த நினைக்கும் காரியங்களை வஹியின் மூலமாக நபிமார்களிடமும் ரசூல்மார்களிடமும் பேசுகிறான். இது இறைமொழி.

 

2மழலையின் மொழி

நம் அன்புத் தாய் சிரமத்துடன் சிரமமாக நம்மை 10 மாதம் வயிற்றில் கருவாக சுமந்து ஒருநாள் பிரசவிக்கிறாள். நாம் உலகில் பிறந்தவுடன் குவா குவா என்று அழுகிறோம். இதற்குப் பெயர் தான் மழலை மொழி.

தனக்கு ஏற்பட்டுள்ள பசியை தன் தாய்க்கு உணர்த்த குழந்தை அழுகிறது. உடனே அக்குழந்தையின் தாய் குழந்தையின் பசியினைப் போக்க தன் மார்பகங்களுடன் அக்குழந்தையை அழகாக அணைத்து தாய்ப்பால் புகட்டுகிறாள். தாய்மை என்னும் பெண்மை உணர்ந்த மொழியாக மழலை மொழி அமைகிறது.

3மனிதனின் மொழி

குழந்தை வளரத் தொடங்கி தாயிடம் பேச ஆரம்பிக்கிறது. பின்பு அது சார்ந்த இடத்தின் கல்வியை கற்க முற்படுகிறது. பிறகு நன்கு வளர்ந்து மனிதனாகி கற்றுத் தேர்ந்து தன் கருத்துக்களை அழகான வார்த்தைகளால் உலகிற்கு உணர்த்துகிறான். இது மனித மொழி.

4மாற்றுத்திறனாளியின் மொழி

ஒருவன் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு ஏற்படும் இன்னல்களை பிறரிடம் தெளிவாக தெரிவிக்க ஒரு மொழியை அல்லாஹ் கொடுத்துள்ளான். அதுதான் வாய்பேச முடியாதவர்களின் சைகை மொழி. இது மாற்றுத்திறனாளியின் மொழி

5குருடனின் மொழி

மாற்றுத் திரணாளிகளுக்கும் அவர்களின் சொற்களை பேசுவதற்கு மொழியைக் கொடுத்தது போன்று அந்த மொழிக்கான எழுத்துக்களையும் மிக அழகாக உருவாக்கியுள்ளான். கண் பார்வையற்றவர்கள் தங்கள் கரங்களால் தொட்டு குர்ஆன் ஓதுவதைப் பார்த்திருப்போம். இது கண் பார்வையற்றவர்களின் மொழி.

6பறவையின் மொழி

மனிதர்களைப் போல அல்லாஹ் பறவைகளுக்கும் மொழியைக் கொடுத்துள்ளான். அவற்றின் மூலம் அவைகள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறது.

وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏

தாவூது நபிக்கு ஸுலைமான் நபி வாரிசானார். மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும்” என்று அவர் கூறினார். (அருள்மறை குர்ஆன் 27:16)

7எறும்பின் மொழி

எறும்புகள் பேசுகின்றன. அவைகளுக்கும் மொழி உள்ளது என்பதை இன்றைக்கு அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அறிவியல் கண்டுபிடிப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருள்மறை குர்ஆன் தெளிவாக கூறியுள்ளது.

حَتَّىٰ إِذَا أَتَوْا عَلَىٰ وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும்அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. (திருக்குர்ஆன் 27:18)

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحًا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّلِحِينَ

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். என் இறைவா! என் மீதும்எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும்நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!” என்றார். (திருக்குர்ஆன் 27:19)

இப்படி மொழிகளை பல வகையாக பிரிக்கலாம். 

உலகில் சில மொழிகளுக்குத் தனிச் சிறப்பும் வளமான வரலாறும் இருக்கிறது. உலக மொழிகளில் சில, தோன்றிய வேகத்தில் எழுத்து வடிவம் கூட பெறாமல் மறைந்து போய் விட்டது. சில மொழிகள் குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்து பிறகு இறந்து போனது. ஆட்சியதிகாரத்தின் துணையால் செல்வாக்குப் பெற்று விளங்கிய சில மொழிகள், அந்த ஆட்சி ஒழிந்ததோடு காணாமல் போனதும் உண்டு. ஒரு மொழி மக்கள் நாவுகளில் தவழத் தொடங்கியதிலிருந்து, படிப்படியாக வளர்ந்து, இலக்கணம் கண்டு, இலக்கியம் படைத்து, காப்பியங்கள் பல உருவாக்கி, வேதமொழியாக பரிணமித்துக் காலத்தால் அழியாமல் இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்றால், அம்மொழி முதன்மை மொழி என்ற தகுதியைப் பெறும்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோஅமைப்பு, ஆண்டுதோறும் டிசம்பர் 18 ஆம் தேதியை உலக அரபி நாளாக  2010 ல் அறிவித்தது.முக்கிய அம்சங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்து, அதை உலகெங்கும் கொண்டாடுவதும் கொண்டாடச் சொல்வதும் ஐ.நா.வின் முக்கியப் பணிகளில் ஒன்று. அவ்வாறு செய்ய வேண்டுமானால், அப்பொருள் சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.

உலகத்தில் சுமார் 10 ஆயிரம் மொழிகள் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 1977 ஆம் ஆண்டு வெளி வந்த உலக மொழிகளின் பதிவுஎன்ற நூல் 20 ஆயிரம் மொழிகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. அவற்றில் மூலமொழிகள் நான்காயிரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆங்கிலத்தில் classical language என்பதை தான் தமிழில் செம்மொழி என்கிறோம். உலகில் 9 மொழிகள் செம்மொழியாக உள்ளன. கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், பாரசீகம், சீனம், அரேபியம், எபிரேயம், தமிழ் ,கன்னடம் ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளன. ஒரு மொழி செம்மொழி ஆக வேண்டும் என்றால் குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த பழமையைப் பறைச்சாற்ற இலக்கிய படைப்புகளும், கலைகளும் இருக்க வேண்டும். இவை இருந்தால் அம்மொழி செம்மொழி அந்தஸ்தைப் பெறும்.

செம்மொழிக்கு என்ன தகுதிகள் வேண்டும் என்பது தொடர்பாக மொழி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தாலும், முக்கியமான தகுதிகள் ஐந்து. 1. தொன்மை. 2. இலக்கிய வளம். 3. சொல் வளம். 4. இலக்கண விதிகளும் இலக்கிய விதிகளும் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். 5. மக்கள் வழக்கில் வாழும் மொழியாக இருக்க வேண்டும். இந்த அளவுகோலின் படி செம்மொழிக்கான அனைத்துத் தகுதிகளும் அரபிக்கு உண்டு.

உலக அளவில் அரபி மொழி பேசுவோர் 323 மில்லியன் பேர். அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சுமார் 175 அல்லது 185 மில்லியன் பேர் இருப்பதாக சொல்லப்படுகிறது.இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி.

கி.பி. 650 முதல் தமிழகத்தில் கடல் வழியாகவும் துருக்கி, ஆப்கானிஸ்தான் வழியாகவும் அரேபிய வணிகர்கள் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்கள். முதலில் வணிகம், பின் ஆட்சி என அவர்களின் வரலாறு தொடர்ந்தது. இதனால் இந்திய மொழிகள் பலவற்றில் அரபு மொழியின் தாக்கம் அதிகமானது. இன்று நாம் பயன்படுத்தும் நிர்வாகரீதியான தமிழ் சொற்களில் அதிகமானவை அரபு மொழியிலிருந்து வந்தவை தான். 

உலகத்திலுள்ள மொழிகளிலேயே அரபி மொழி மிகச்சிறந்த மொழி என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களை கூற முடியும்.

உலகத்தில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களும் அந்தந்த சமூகத்திலிருந்து, அந்தந்த மொழி பேசுபவர்களாகத் தான் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் பேசுவதை அந்த சமூகம் அறிய வேண்டும். அந்த சமூகம் பேசுவதை அந்த நபி அறிய வேண்டும். அவர்களுக்குள் பரஸ்பர புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவ்வாறு நபிமார்களை அனுப்பினான்.

وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ)

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : 14 ; 4)

وقال النبي – صلى الله عليه وسلم -: (لم يبعث الله نبيًّا إلا بلغة قومه

அல்லாஹ் எந்த நபியையும் அவருடைய சமூகத்தின் மொழியைக் கொண்டே தவிர அனுப்ப வில்லை. (அல்ஜாமிவுஸ்ஸகீர் ; 7339)

ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் உலகத்தில் இருக்கிற அத்தனை சமூகத்திற்கும் நபி. அத்தனை நாட்டவர்களுக்கும் நபி. அத்தனை மொழி பேசக்கூடியவர்களுக்கும் நபி. அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு தூதராக நபிகள் நாயகத்தை அல்லாஹுத்தஆலா அனுப்பியிருக்கிறான். உலகில் இருக்கிற அத்தனை மொழி பேசக்கூடியவர்களுக்கும் நபியவர்கள் பொதுவாக இருந்தாலும் அவர்களை அரபியாக, அரபி பேசும் நபியாக அனுப்பியதிலிருந்து அரபு மொழியின் மகத்துவத்தை புரிய முடிகிறது.

நபியவர்கள் உலகம் அனைத்திற்கும் பொதுவாக இருந்தும் அவர்களை அரபிகளில் ஒருவராக இறைவன் தேர்ந்தெடுப்பதற்கான காரணம், அரபுகள் மிகத் தெளிவாக பேசுபவர்கள், விரைவாக விளங்கும் ஆற்றல் உள்ளவர்கள், எதையும் எளிதில் புரியும் ஆற்றல் உள்ளவர்கள், அதிகம் புத்தி கூர்மை உடையவர்கள், நேர்வழியை ஏற்றுக் கொள்வதற்காக தங்களை தயார் படுத்துவதில் மிகவும் அழகானவர்கள். (அத்தஹ்ரீர் வத்தன்வீர்)

அரபி மொழி என்பது ஒருவர் இஸ்லாத்தில் அடியெடுத்து வைக்கும் அந்த தருணத்திலிருந்து தொடங்கி  அவன் வாழ்க்கை முழுக்க  தொடர்ந்து மரணம் வரை நீடிக்கிறது. இஸ்லாத்தில்  நுழையக்கூடிய ஒருவன் ஷஹாதத்தின் அந்த வார்த்தையை அரபி மொழியில் மொழிந்தால் மட்டுமே அவன் ஈமான் கொண்டதாக கருதப்படும். அரபி மொழியில் ஸஹாதத்தின் வார்த்தைகளை மொழியாமல் அதன் பொருளை மட்டும்  சொல்வதினால்  அவன்  ஈமான்  கொண்டவனாக ஆக முடியாது.

எனவே அரபி மொழி நம் தீனுல் இஸ்லாத்தோடு ஒன்றடக் கலந்திருக்கிறது. அந்த மொழியின்றி இஸ்லாமிய மார்க்கத்திற்குள் ஒருவர் நுழையவும் முடியாது. அதில் முழுமை பெறவும் முடியாது. இஸ்லாத்தின் அடிப்படையான கலிமாவில் தொடங்கி மார்க்கத்தின் எல்லாக் கடமைகளும் அரபியோடு பிண்ணிப் பினைந்திருக்கிறது. அந்த வகையில் அரபிக்கும் தீனுல் இஸ்லாத்திற்குமான நெருங்கிய பந்தத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

إن أبا عمرو بن العلاء كان يقول: "لَعِلمُ العربية هو الدين بعينه، فبلغ ذلك عبدالله بن المبارك، فقال: صدق؛

அபூ அம்ர் பின் அலா ரஹ் அவர்கள் அரபி மொழி என்பது மார்க்கத்தைச் சார்ந்தது. அதிலிருந்து மார்க்கத்தைப் பிரிக்க முடியாது. மார்க்கத்திலிருந்து அதைப் பிரிக்க முடியாது என்று கூறினார்கள். இதை அறிந்த அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள் உண்மை தான் என்றார்கள்.

ومن القواعد الفقهية "ما لا يتم الواجب إلا به فهو واجب"، وفَهْم الدين لا يكون إلا باللغة العربية؛ لذا فتعلُّمها واجب على كل مسلم

மார்க்கச் சட்டத்தின் ஒரு பொது விதி ; எது இல்லாமல் ஒரு வாஜிபை செய்ய முடியாதோ அதுவும் வாஜிபாகும். அந்த அடிப்படையில் மார்க்கத்தை விளங்குவதும் அதைப் பின்பற்றுவதும் நம் மீது கடமை. அதற்கு அரபி மொழி அத்தியாவசியமானது. எனவே அரபி மொழியைத் தெரியவதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

كان عمر بن الخطاب رضي الله عنه يقول: "تعلَّموا العربية؛ فإنها من دينكم، تعلَّموا الفرائض؛ فإنها من دينكم"، فقدَّم - رضي الله عنه - تعلُّم العربية على تعلُّم الفرائض، لما يعلمه لها من فضل في معرفة الدين والفقه.

அரபியைக் கற்றுக் கொள்ளுங்கள். அது தீனில் கட்டுப்பட்டது. மார்க்கத்தின் கடமைகளைக் கற்று தெரிந்து கொள்ளுங்கள். அதுவும் மார்க்கத்தில் கட்டுப்பட்டது என்று உமர் ரலி அவர்கள் கூறுவார்கள்.

மார்க்கத்தை உள்ளது உள்ள படி விளங்கிக் கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் அரபி கட்டாயம். அரபி தெரியாதவர்கள் மார்க்கத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாது. அதிகம் பேர் வழிதவறிச் செல்வதற்கு அது தான் காரணம்.  

قال الإمام الشافعي رحمة الله عليه " ما جهل الناس، ولا اختلفوا إلا لتركهم لسان العرب "،

மக்கள் அறியாமையில் இருப்பதற்கும் ஆரோக்கியமில்லாத கருத்து வேற்றுமையில் ஈடுபடுவதற்கும் அரபி மொழியை முறையாக கற்றுக் கொள்ளாதது தான் காரணம் என்று இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

 وقال الحسن البصري - رحمه الله- في المبتدعة " أهلكتهم العجمة

அரபி மொழி தெரியாததினால் தான் பித்அத்வாதிகள் அழிந்து போனார்கள் என இமாம் ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وكان الإمام الشافعي يتكلَّم عن البدع، فسئل عن كثرتها في زمانه، فقال "لبُعدْ الناس عن العربية

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களின் காலத்தில் பித்அத்கள் மக்களிடத்தில் அதிகமாக காணப்பட்டது. அதற்காக காரணத்தைக் கேட்கப்பட்ட போது அரபி மொழியிலிருந்து மக்கள் விலகிச் சென்றது என்று குறிப்பிட்டார்கள்.

அரபி மொழியை முறையாக கற்காமல் அதன் இலக்கணச் சட்டங்களை முறையாக அறியாமல் குர்ஆனை ஒருவர் அனுகினால் சில நேரங்களில் குஃப்ரில் விழுந்து விடுவார்.

الأعرابي يسمع القارئ يقرأ قوله تعالى في سورة التوبة: ﴿ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ ﴾ [التوبة: 3][2] ، بكسر اللام، فقال أوَبرِئ الله من رسوله؟ فبلغ ذلك عمرَ بن الخطاب - رضي الله عنه - فأمر ألا يقرئ القرآن إلا مَن يُحسِن العربيَّة"؛

உமர் ரலி அவர்களின் காலத்தில் ஒருவர் தவ்பா அத்தியாத்தின் 3 வது வசனத்தில் அன்னல்லாஹ பரீவும் மினல் முஷ்ரிகீன வரஸூலுஹு (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணை வைப்பவர்களிடமிருந்து நிச்சயமாக விலகிக் கொண்டார்கள்) என்ற வார்த்தையில்  வரஸூலுஹு என்பதற்குப் பகரமாக வரஸூலிஹி என்று ஓதினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கிராமவாசி அல்லாஹ் அவனுடைய தூதரிடமிருந்து விலகிக் கொண்டானா என்று கேட்டார். (வரஸூலிஹி என்று படித்தால் அந்தப் பொருள் தான் வரும்) இந்த செய்தி உமர் ரலி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர்கள் அரபி மொழியில் தேர்ச்சி பெறாத எவரும் குர்ஆனை பிறருக்கு ஓதிக் காட்டக் கூடாது என்று உத்தரவிட்டார்கள்.

அந்த அரபி மொழியில் தான் வல்ல இறைவன் தன் அருள் மறை வேதத்தை அருளி இருக்கிறான்.

لولا القرآن ما كانت عربية

குர்ஆன் இல்லையெனில் அரபி மொழியே இல்லை என்று கூறுவார்கள்.

உலகத்திருமறையான அல்குர்ஆனை அரபி மொழியில் இறைவன் அருளி இருப்பது உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத மிக உயர்ந்த தனிச்சிறப்பை அரபி மொழிக்கு தந்து விட்டது. அல்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் எடுத்துக் கொண்டான்.

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏

நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உங்கள்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனை பாதுகாத்துக் கொள்வோம். (அல்குர்ஆன் : 15:9)

குர்ஆன்  இருக்கும் காலமெல்லாம் அரபி மொழி அழியாது என்பது அந்த  மொழிக்கு அல்லாஹ் கொடுத்த தனித்துவங்களில் ஒன்று. அரபி மொழி உலகத்தில் தன்னிகரில்லாத  மொழி என்பதற்கு இந்த சிறப்பு  ஒன்றே போதுமானது.

ஒரு  முஸ்லிம் செய்யக்கூடிய பெரும்பாலான வணக்க வழிபாடுகள் அரபி மொழியுடன் தொடர்புடையவை. அந்த மொழி தெரிந்தோ தெரியாமலோ அந்த வார்த்தைகளை உச்சரிக்காமல் எண்ணற்ற வணக்கங்கள் நிறைவேறாது. உதாரணத்திற்கு தொழுகையை எடுத்துக் கொள்ளலாம். தொழுகையில் கிராஅத் ஓதுவது கடமை. ஒருவனுக்கு அரபி மொழி  தெரிகிறதோ தெரிய வில்லையோ அவன்  அதை ஓதித்தான் ஆக வேண்டும். இல்லையெனில் தொழுகை நிறைவேறாது. அரபி மொழி நம் வணக்க வழிபாடுகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

இதல்லாமல் அரபி மொழியின் ஆழத்தை  சற்று உற்று நோக்கினால் மற்ற மொழிகளில் இல்லாத ஏராளமான தனித்துவங்கள் அதில் இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

தனித்துவம் 1,

மொழிவதற்கும் பேசுவதற்கும் மிகவும் இலகுவான மொழி அரபு மொழி எல்லா மொழிகளிலும் மூன்று எழுத்துக்களை கொண்ட வார்த்தைகள், நான்கு எழுத்துக்களைக் கொண்ட வார்த்தைகள், ஐந்து எழுத்துக்களை கொண்ட வார்த்தைகள் இருக்கிறது. என்றாலும் அரபி மொழியில் மூன்று எழுத்துக்களைக் கொண்ட வார்த்தைகள் தான் மிகுதியாக இருக்கிறது. மிக இலகுவான மொழி என்பதற்கான முதல் விஷயம் இது. இந்த தனித்துவம் வேறு எந்த மொழிகளிலும் காண முடியாது.

மொழிவதற்கு சிரமமாக இருக்கும் இடங்களில் அந்த சிரமத்தை போக்குவதற்காக எழுத்துக்களை மாற்றி இலகுபடுத்தும் தனித்துவம் அரபி மொழிக்கு மட்டுமே சொந்தமானது. موعاد என்பதை மொழிவதற்கு சிரமம் என்பதினால் ميعاد என்று படிப்பதை உதாரணமாக கூறலாம்.

மற்ற மொழிகளில் எண்ணற்ற எழுத்துக்களால் இணைந்த  வார்த்தைகள் அரபி மொழியில் மிகக்குறைந்த எழுத்துக்களை கொண்டதாக இருப்பதை நாம் பார்க்கலாம்.

 مبنى   building

   جامعة         university

تسلية   entertainment

جد   Grand-father

உதாரணத்திற்கு ஃபாத்திஹா சூரா வில் ஏறக்குறைய 30 வார்த்தைகள் உண்டு. ஆனால் அதை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தால் அதை மொழி பெயர்ப்பதற்கு 70 வார்த்தைகள் தேவைப்படும்.

இதுவெல்லாம் உலகிலுள்ள மற்றெல்லா மொழிகளை விட அரபி மிகவும் இலகுவான மொழி என்பதற்கான உதாரணங்கள்.

 

தனித்துவம் 2

மற்ற எந்த மொழிகளிலும் இல்லாத அளவிற்கு ஏராளமான ஒற்றை வார்த்தை களைக் கொண்ட ஒரே மொழி அரபு மொழி. ஏறக்குறைய 5 கோடியே 99 ஆயிரத்து 400 வார்த்தைகள் அரபி மொழியில் பயன்படுத்தப்படுவதாக பைசல் என்ற அரபு பத்திரிக்கை குறிப்பிடுகிறது

قال الإمام الشافعي – رحمه الله تعالى -: (لسان العرب أوسع الألسنة مذهبًا، وأكثرهم ألفاظًا، ولا نعلمه يحيط بجميع علمه إنسان غير نبي (الرسالة للإمام الشافعي

இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் கூறுவார்கள் ; அரபி மொழி மற்ற மொழிகளெல்லாம் மிக விசாலமானது. அதிகமான வார்த்தைகளைக் கொண்டது. நபித்துவத்தைப் பெற்ற நபிமார்களைத் தவிர மற்ற மனிதர்களால் அதை முழுமையாய் உள்வாங்கிக் கொள்ள முடியாது என்றளவிற்கு மிகவும் விரிவான மொழி அரபி மொழி. (அர்ரிஸாலா)

ஒரே ஒரு பொருளுக்கு நூற்றுக்கணக்கான வார்த்தைகளை கொண்ட மொழி அரபி மொழி. சிங்கம் என்ற வார்த்தைக்கு அரபியில் 250 வார்த்தைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் சிங்கம் என்ற பொருளுக்கு அரபியில் ஐநூறு வார்த்தைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

الحزن، الغم، الغمة، الأسى، والشجن، الترح، الوَجْد، الكآبة، الجزع، الأسف، اللهفة، الحسرة، الجوى، الحرقة، واللوعة

இதுவெல்லாம் கவலை என்று பொருளுக்கு அரபியில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகள்.

அரபி மொழியில் ஒரே வார்த்தை பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் இடைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கலாம்

في என்ற வார்த்தைக்கு நீ நிறைவேற்று என்று வினைச்சொல்லாகவும், (ல்) என்று இடைச்சொல்லாகவும் வாய் என்று பெயர்ச் சொல்லாகவும் பயன்படுத்த முடியும்.

ஒரு பொருளுக்கு அரபி மொழியில் எண்ணற்ற வார்த்தைகள் இருக்கிறது என்பதனை நாம் குர்ஆனுக்கு விரிவுரையாக படிக்கிற தஃப்ஸீர்கள் மிகச்சிறந்த சான்று. لا ريب என்பதற்கு لا شك என்றும் لب என்ற வார்த்தைக்கு عقل என்றும் தஃப்ஸீர் செய்யப்படுவதை உணாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

 

தனித்துவம் 3

வட்டுறுக்கம். குறைந்த வார்த்தைகளில் நிறைவான பொருளைத் தருகிற ஒரு அற்புதத்தை அரபி மொழியில் மட்டுமே காண முடியும்.

அதேபோன்று எந்த எழுத்துக்களையும் கூடுதல் குறைவு செய்யாமல் வெறும் ஹரகத்துகளால் மட்டுமே அர்த்தங்கள் மாறுபடுகின்ற அதிசயத்தை அரபி மொழியில் நாம் காணலாம். قتل என்பதை ஜபர் வைத்துப் படித்தால் கொலை செய்தான் என்றும் பேஷ் வைத்து படித்தால் கொலை செய்யப்பட்டான் என்றும் அர்த்தம் மாறுவதை உணர முடியும்.

ஒரே வார்த்தைக்கு எதிர்மறையான இரு பொருள்கள் கொடுக்கப்படுவது அரபி மொழிக்கு மட்டுமே சொந்தமானது. குர்ஆனில் வரக்கூடிய قرء என்ற வார்த்தைக்கு சுத்தம் என்றும் மாதவிடாய் என்றும் எதிர்மறையான பொருள்கள் தரப்படுவதை தஃப்ஸீர்களில் நாம் காணலாம்.

உதாரணத்திற்காக இந்த மூன்று தனித்துவங்களை கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். கட்டுரையின் விரிவை அஞ்சி இத்துடன் சுருக்கிக் கொள்கிறேன்.

تعلّموا العربيّة فانها تزيد في العقل

ஷுஃபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; அரபி மொழியை கற்றுக் கொள்ளுங்கள். அது அறிவைப் பெறுக்கும்.

إنّ مَن أحَبَّ اللهَ أحبَّ رسولهُ، ومن أحبَّ النّبي أحَبَّ العَربَ، ومَن أحبَّ العربَ أحبَّ اللُّغة العربيّةَ التي بها نزلَ أفضلَ الكُتبِ

ஸஆலபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; அல்லாஹ்வை யார் நேசிக்கிறாரோ அவர் அவனுடைய தூதரையும் நேசிப்பார். யார் நபியை நேசிக்கிறாரோ அவர் அரபியை நேசிப்பார். யார் அரபியை நேசிக்கிறாரோ அவர் அல்குர்ஆன் அருளப்பட்ட இந்த அரபி மொழியையும் நேசிப்பார்.

حبُّ العربِ إيمانٌ ، وبغضُّ العربِ كفرٌ ، فمن أحبَّ العربَ فقد أحبَّني ، ومن أبغضَ العربَ فقد أبغضني

அரபியை நேசிப்பது இறை நம்பிக்கையாகும். அரபியை வெறுப்பது இறை நிராகரிப்பாகும். யார் அரபியை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசிக்கிறார். யார் அரபியை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுக்கிறார். (ஹுல்யதுல் அவ்லியா)

أحبوا العربَ لثلاثٍ: لأني عربيٌّ والقرآنُ عربيٌّ وكلامُ أهلِ الجنَّةِ عربيٌّ

நான் அரபியாக இருக்கிறேன், அல்லாஹ்வுடைய வேதமான அல்குர்ஆனும் அரபியாக இருக்கிறது. சொர்க்கவாசிகள் பேசும் மொழியாகவும் அரபி இருக்கிறது. இந்த மூன்று காரணத்தினால் நீங்கள் அரபியை விரும்புங்கள். (தப்ரானி)

தனித்துவமும் மகத்துவமும் நிறைந்த அரபி மொழியை நாம் நேசிப்போம். அல்லாஹ் ரசூலின் அன்பைப் பெறுவோம்.


11 comments:

  1. நல்ல கருத்துக்கள்...ஆழமான சிந்தனை..இன்னும் விளக்கங்களை
    உதிர்த்திருக்கலாம்

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்

    சிந்தனையில் எட்டக்கூடிய இன்னும் விளங்கக்கூடிய நல்ல பல தகவல்கள்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்..மிக அருமையான பதிவு ..அரபியில் சில ஹதீஸ்களை படித்தால் பல ‌ஞானம் கிடைக்கிறது உண்மையே...படித்தேன் கற்றேன்

    ReplyDelete
  4. ماشاء الله بارك الله شكرا جزاك آلله

    ReplyDelete
  5. ஆமீன் அல்லாஹ் உங்கள் கல்வியில் பரக்கத் செய்வானாக.

    ReplyDelete
  6. மிகவும் அற்புதமான ஆக்கம்

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  8. بارك الله في علمك

    ReplyDelete