Thursday, February 25, 2021

இது தான் பரக்கத்

 

நாம் இன்று 21 ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.கடந்த காலங்களை விட இந்த காலம் பொருளாதாரத்திலும் தொழில் நுட்பங்களிலும் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் இன்ன பிற மனித வாழ்வின் அனைத்து வசதி வாய்ப்புகளிலும் கடந்த காலத்து மனிதனின் சிந்தனையில் கூட உதிக்காத பல்வேறு முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டு விட்ட காலம்.

ஒரு நேரம் அரை வயிறு உணவிற்காக அல்லும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்த காலங்கள் கடந்து இப்போது இதை சாப்பிடுவதா அதை சாப்பிடுவதா இதை எடுப்பதா அதை எடுப்பதா என்று யோசிக்கிற அளவுக்கு பலதரப்பட்ட உணவுகள் பரிமாறப்படுகிறது.

தங்குவதற்கு இடமில்லாமல், வசதியில்லாமல் குடிசைகளிலும் கூடாரங்களிலும் வாழ்க்கையை கழித்த காலம் மாறி இப்போது தலை உயர்த்தி பார்த்தால் கழுத்து வலிக்கிற அளவுக்கு, தலை சுற்றுகிற அளவுக்கு மிக உயர்ந்த கட்டிடங்களும் மாளிகைகளும் காட்சி தருகிறது.

உடுத்துவதற்கும் மானத்தை மறைப்பதற்கும் வழியில்லாமல் இருப்பதைக் கொண்டு மானத்தை மறைத்து வந்த காலம் மாறி இப்போது பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் 100 அல்ல 1000 அல்ல இலட்சக்கணக்கில் செலவு செய்து ஆடைகளை உடுத்துகிற காலம் இது.

இப்படி கடந்த காலத்து மனிதர்களை விட இந்த நவீன காலத்து மனிதர்கள் எல்லா வகையிலும் முன்னேறியிருக்கிறார்கள். உயர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் இத்தனை முன்னேற்றங்களும் இத்தனை வளர்ச்சிகளும் இத்தனை வளங்களும் வசதி வாய்ப்புகளும் கடந்த காலத்தவர்களை விட இக்காலத்தவர்களுக்கு மனநிறைவைத் தந்திருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எந்த வசதி வாய்ப்புகளும் அமையப்பெறாத அந்த காலத்து மக்களுக்கு இருந்த மன நிறைவில் ஒரு பாதியளவு கூட எல்லா வளங்களும் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கிற நமக்கு இல்லை என்பது தான் நிதர்சன மான உண்மை.  

காரணம் என்னவென்று ஆழமாக தூரநோக்கு சிந்தனையோடு சிந்துத்துப் பார்த்தால், நமக்கு கிடைக்கிற ஒரே பதில் நபி ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் அனைத்து நபிமார்களும் எந்த பரக்கத்தை கேட்டார் களோ ஆசைப்பட்டார்களோ,எந்த பரக்கத்தைப் பெற்று தங்கள் வாழ்வில் அனுபவித்தார்களோ அந்த பரக்கத்தை நாம் நம் வாழ்வில் பெற்றுக் கொள்ள வில்லை.

அல்லது எல்லாம் இருக்கிறது.பரக்கத்தும் இருக்கிறது.ஆனால் பரக்கத் என்பதற்கு மார்க்கம் என்ன முகவரியை கூறுகிறதோ அதை விளங்க வில்லை. அதனால் தான் பரக்கத் இருந்தும் இல்லாததைப் போன்று புலம்பிக் கொண்டிருக்கிறாம்.மனநிறைவை இழந்திருக்கிறோம்.

 “அதிகமாக இருத்தல்”  இது தான் பரக்கத் என்ற வார்த்தைக்கு நாம்  கற்பிக்கும் அர்த்தம். நிறைய சம்பாதிப்பது,நிறைய வியாபாரம் நடப்பது, நிறைய சாப்பிடுவது, நிறைய நேரங்கள் ஓய்வு கிடைப்பது,நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்வது இது தான் {பரக்கத்} அபிவிரித்தி என்று நாம் நினைத்து வருகிறோம்.

ஆனால் உண்மையில இஸ்லாமிய கண்ணோட்டத்தில் “அதிகமாக  இருத்தல்” என்பது பரக்கத்திற்கான அறிகுறி அல்ல.காரணம் இறைவன் தன் திருமறையில் ;

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்தபோது [அல்லாஹ்வின் கட்டளைகளை விட்டபோது} {முதலில் ரிஜ்கின்} எல்லா வாயில்களையும் நாம் அவர்களுக்கு திறந்து விட்டோம். பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை {நம் வேதனையைக் கொண்டு} அவர்களை திடீரென பிடித்துக் கொண்டோம்.அப்போது அவர்கள் நம்பிக்கையிழந்தவர்களாக ஆகிவிட்டனர். {6 ; 44}

ரிஜ்கின் எல்லா வாசல்களும் திறக்கப்படுவது ; வேதனையின் அடையாளமாகக் கூட அமையலாம் என்பதை இந்த திருவசனம் நமக்கு உணர்த்துகிறது.

عن عقبة بن عامر، عن النبي صلى الله عليه وسلم قال: "إذا رأيت الله يُعْطِي العبدَ من الدنيا على مَعاصيه ما يُحِبُّ، فإنما هو اسْتِدْرَاج". ثم تلا رسول الله صلى الله عليه وسلم { فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ }

“ஒருவன் பாவமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உலகில் அவன் விரும்புகிற அனைத்தையும் இறைவன் அவனுக்கு தருவதை நீ கண்டால் அவனை இறைவன் விட்டுப்பிடிக்கிறான் என்று பொருள்” என்று நபி ﷺ அவர்கள் கூறிவிட்டு இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். {தஃப்ஸீர் தப்ரீ,முஸ்னத் அஹ்மது – 4/154}



وفي الخبر أن الله تعالى أوحى إلى موسى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إذا رأيت الفقر مقبلا إليك فقل مرحبا بشعار الصالحين وإذا رأيت الغني مقبلا إليك فقل ذنب عجلت عقوبته

ஏழ்மை உன்னை முன்னோக்கி வருவதை நீ கண்டால் நல்லோர்களின் அடையாளம் என்று நினைத்து அதை வரவேற்றுக் கொள். செல்வம் உன்னை முன்நோக்கி வருவதை நீ கண்டால் செய்த பாவத்திற்கு தண்டனை உலகில் கிடைத்திருக்கிறது என்று விளங்கிக் கொள் என்று அல்லாஹ் ஹள்ரத் மூஸா நபி அலை அவர்களுக்குச் சொன்னான். (இஹ்யாவு உலூமித்தீன்)

இந்த செய்தியும் அதிகமாக உலக வளங்கள் நமக்கு வழங்கப்படுவது ; பரக்கத்திற்கான அடையாளம் இல்லை என்று கூறுகிறது.எனவே அதிகம் தான் பரக்கத் என்று நாம் கூறுவது அறியாமையின் வெளிப்பாடாகும்.

பரக்கத் என்பது அதிகத்திற்கான பெயர் அல்ல.குறைவாக இருந்தாலும் நிறைவாக இருப்பதற்குப் பெயர் தான் பரக்கத் ஆகும்.குறைவாக வருமானம் கிடைத்தாலும் வாழ்க்கையின் எல்லா தேவைகளும் அதன் மூலம் பூர்த்தியானால் அது வருமானத்தில் பரக்கத்.குறைவாக வியாபாரம் நடந்தாலும் மனதிற்கு திருப்தியாக இருந்தால் அது வியாபாரத்தின் பரக்கத்.குறைந்த உணவு அது பல பேருக்குப் போதுமானதாக அமைந்து விட்டால் அது உணவின் பரக்கத்  குறைவான நேரத்தில் அதிகமான காரியங்கள் நடைபெற்றால் அது நேரத்தின் பரக்கத்.ஒரு மகன் இருந்தாலும் நமது எல்லா தேவைகளும் அவன் மூலம் பூர்த்தியானால் அது குழந்தைச் செல்வத்தின் பரக்கத்.குறைவான ஆயுட்காலமாக இருந்தாலும் நிறைய சாதனைகளை புரிய முடிந்தால் அது ஆயுட்காலத்தில் பரக்கத்.

மவ்திற்காக அர்ஷ் நடுங்கியது என்று கூறப்பட்ட சஃது பின் முஆத் ரலி அவர்கள் 30 வயதில் இஸ்லாத்தை ஏற்றார்கள்.அவர்களின் மரணத்தின் போது அவர்களுக்கு வயது 36. இஸ்லாத்தில் இருந்தது வெறும் 6 ஆண்டுகள் தான். எனினும் அவர்களின் மரணத்திற்காக அர்ஷ் நடுங்குகிற அளவிற்கு நற்பேற்றைப் பெற்றார்கள் என்றால்,அவர்களது ஆயுளில் அல்லாஹ் பரக்கத் செய்த காரணத்தால்  யாருக்கும் கிடைக்காத இந்த பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது.

அதேபோன்று அபூஹுரைரா ரலி அவர்கள் மிகச்சிறந்த ஸஹாபிகளில் ஒருவர்.அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களுக்குத் தான் முதல் இடம்.ஹதீஸ் கிதாபுகளைப் புரட்டினால் ஒரு பக்கத்தில் ஒரு தடவையாவது இவர்களது பெயர் இடம்பெற்றிருக்கும்.வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே நபியின் தோழமையைப் பெற்றிருந்த அவர்களால் 5374 ஹதீஸ்களை அறிவிக்க முடிந்தது. காரணம், அவர்களது ஆயுளில் பரக்கத் இருந்தது.

وأما إخبار أبي هريرة رضي الله عنه عن نفسه أنه صحب النبي صلى الله عليه وسلم ثلاث سنين ، كما وقع في "صحيح البخاري" (حديث رقم/3591) أنه قال : (صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ سِنِينَ ، لَمْ أَكُنْ فِى سِنِىَّ أَحْرَصَ عَلَى أَنْ أَعِىَ الْحَدِيثَ مِنِّى فِيهِنَّ

அபூஹுரைரா {ரலி} அவர்கள் அனுபவித்த பரக்கத் ;

للناس هم ولي همان بينهم: هم الجراب وهم الشيخ عثمان؟ عن أبي هريرة رضي الله عنه: أتيت النبي صلى الله عليه وسلم بتمرات فقلت يا رسول الله صلى الله عليه وسلم أدع الله فيهن بالبركة؟ فضمهن ثم دعا لي فيهن بالبركة قال: خذهن فاجعلهن في مزودك كلما أردت أن تأخذ منها شيئا فأدخل يدك فيه فخذها ولا تنثرهما نثرا


قال أبو هريرة: فأكلت منه زمن النبي صلى الله عليه وسلم وزمن أبي بكر وعمر وعثمان رضي الله عنهم؟ فلما قتل عثمان انتهب ما في يدي وانتهب ما في المزود؟ ألا أخبركم كم أكلت منه؟ أكثر من مائتي وسق.(12) [رواه الترمذي -مرقاة- مشكاة 11/217-البداية 6/117 أبو نعيم في الدلائل 155 وأحمد والترمذي مختصرا].


அபூஹுரைரா {ரலி} அவர்கள் ஒரு சில பேரீத்தம்பழங்களை கையில் எடுத்துக் கொண்டு அண்ணல் நபி ﷺ அவர்களிடம் வந்து,யா ரஸூலல்லாஹ்!இந்த போரீத்தம்பழங்களில் பரக்கத் ஏற்பட துஆ செய்யுங்கள் என்று கூறினார்கள்.அதை பெற்றுக் கொண்டு நபி ﷺ அவர்கள் துஆ செய்து விட்டு,இதை ஒரு பையில் போட்டு வைத்துக் கொள்.உனக்கு தேவைப்படுகிறபோது அதில் உன் கரத்தை நுழைத்து எடுத்துக்கொள். ஆனால் அதை திறந்து பார்க்கக் கூடாது என்று கூறினார்கள். அதை பெற்றுக் கொண்ட அபூஹுரைரா அவர்களும் அதை பயன் படுத்தி வந்தார்கள்.தான் போகின்ற பயணங்களிலும், போர்க்களங்களிலும் அதை எடுத்துச்செல்வார்கள்.தானும் சாப்பிடுவார்கள், தன் தோழர்களுக்கும் கொடுப்பார்கள். இப்படியே பல வருடங்கள் ஓடின.ஹஜ்ரத் உஸ்மான் {ரலி} அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட தினம் தான் அந்தப் பை அவர்களிடமிருந்து தொலைந்து போனது. {திர்மிதி}


நபி ﷺ அவர்களின் காலத்தில் கிடைத்த அந்தப் பை ;

அபூபக்கர் {ரலி} அவர்களின் ஆட்சி காலம் 2 வருடம்.

 உமர் {ரலி}அவர்களின்      ஆட்சி காலம் 10 வருடம்.

உஸ்மான் {ரலி}அவர்களின் ஆட்சி காலம் 12 வருடம்.ஆக சற்று ஏறக்குறைய 25 வருடங்கள் அந்த பேரீத்தம்பழங்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். தானும் உண்டு மற்றவருக்கும் கொடுத்திருக் கிறார்கள்.அத்தனை வருடங்கள் கடந்த பிறகும் அது தொலைந்து போனதே தவிர தீர்ந்து போக வில்லை.இது தான் பரக்கத்தின் அடையாளம்.

நபி ﷺ அவர்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் பரக்கத்தை நினைவு படுத்தியிருக்கிறார்கள்.அதற்காக துஆ செய்திருக்கிறார்கள். தங்களுடைய தோழர்களுக்காக துஆ செய்யும் போதும் அதிகாமாக இந்த பரகத்தை வழியுருத்தி துஆ செய்தார்கள்.


أن أمَّ أنس رضي الله عنها :- أتت بأنس إلى رسول الله صلى الله عليه وسلم وقالت : " هذا أنس خادمك , ادعُ له بالبركة .. فدعى له : اللهم أكثِر ماله وأكثر ولده وبارك فيه .. " يقول أنس : " فإني أكثر الناس مالاً وولداً , فله من الأولاد والأحفاد مائة وفي صحيح مسلم قال أنس : فَوَاللَّهِ إِنَّ مَالِي لَكَثِيرٌ، وَإِنَّ وَلَدِي وَوَلَدَ وَلَدِي لَيَتَعَادُّونَ عَلَى نَحْوِ الْمِئَةِ الْيَوْمَ [7].

ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ; என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி ﷺ அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! தாங்களின் சேவகர் அனஸ். இவருக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கி யுள்ளவற்றில் அபிவிருத்தியை ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த் தித்தார்கள். நூல்: புகாரி 6344

இந்த துஆவின் பரக்கத்தினால் அனஸ் ரலி அவர்கள் அனைவரை விட பொருட்செல்வத்தாலும் குழந்தைச் செல்வத்தாலும் நிறைவானவராக இருந்தார்கள்.

ஒருவருடைய வாழ்கையில் மிக முக்கியமான நேரங்களில்,மிக முக்கியமான தருணங்களில் ஒன்று திருமணம். அந்த தருணத்தை அனுபவிப்பதற்கும் அதில் நுழைவதற்கும் தான் எல்லா இளைஞர்களும் ஆசைப்படுகிறார்கள்.அந்த திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கிற அம்மணமக்களை பூவும் மணமும் போல்,கண்ணும் இமையும் போல், நகமும் சதையும் போல்,நிலவும் ஒளியும் போல்,பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று பலரும் பல விதமாக வாழ்த்துவதுண்டு.

ஆனால் அந்த இல்வாழ்வில் நுழைகிற அம்மணமக்கள் அன்று முதல் அவர்களின் மரணம் வரை மட்டுமல்ல கியாமத் வரை வருகின்ற அவர்களது சந்ததிகளுக்கும் பயன் தரும் வகையில் மிக அருமையான துஆவை நபி ஸல் அவர்கள் செய்து நம்மையும் செய்யும் படி சொன்னார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَير

திருமணம் முடிப்பவருக்கு வாழ்த்து சொல்வதாக இருந்தால் நபி ﷺ அவர்கள், அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும் உங்கள் இருவரையும் நல்ல விஷயத்தில் ஒன்று சேர்க்கட்டும் என்று சொல்வார்கள். (அபூதாவூது ; 2130)

திருமண பந்தம் சாதாரண பந்தமல்ல.அது சுவனம் வரை தொடரும் ஒரு இனிமையான பந்தம்.

ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ


நீங்களும் உங்கள் மனைவிமார்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சுவனத்தில் நுழையுங்கள். (அல்குர்ஆன் : 43 ; 70)

நலவுகளில் உங்களை ஒன்று சேர்ப்பானாக என்று நபி ﷺ அவர்கள் சொன்னது இன்று தொடங்குகிற உங்களின் இந்த இணைப்பு சுவனம் வரை தொடரட்டும் என்ற கருத்தும் உள்ளடக்கியுள்ளது.அந்த சந்தர்பத்தின் போது கூட நபி ﷺ அவர்கள் பணத்தை கேட்டு பிரார்த்தனை செய்யாமல் பரக்கத்தை முன்னிருத்தித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.

பரக்கத் என்பது இவ்வளவு விசாலமான பொருளைத் தருகிற காரணத்தினாலும் அதில் எண்ணிலடங்காத நன்மைகள் இருப்பதினாலும் தான் நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ அதை தேடிக் கொண்டிருக்கிறோம். பரக்கத்தை ஆசைப்படுகிறோம்.

பரக்கத்தை ஆசைப்படாமல் யாரும் இருக்க முடியாது.

وروى البخاري في صحيحه من حديث أبي هريرة - رضي الله عنه - عن النبي - صلى الله عليه وسلم - قال: ( بَيْنَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا، فَخَرَّ عَلَيْهِ جَرَادٌ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ أَيُّوبُ يَحْتَثِي فِي ثَوْبِهِ، فَنَادَاهُ رَبُّهُ يَا أَيُّوبُ أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى؟ قَالَ: بَلَى وَعِزَّتِكَ، وَلَكِنْ لاَ غِنَى بِي عَنْ بَرَكَتِكَ 

ஹள்ரத் அய்யூப் அலை அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது தங்கத்தினாலான வெட்டுக்கிளி ஒன்று அவர்களின் மீது விழுந்தது. உடனே அவர்கள் அதை எடுத்து தன் துணியால் சுருட்டி வைத்துக் கொண்டார்கள்.உங்களுக்கு நான் செல்வத்தைத் தர வில்லையா ? (இதை எடுப்பதற்கான தேவை என்ன?) என்று அல்லாஹ் கேட்டான்.அதற்கவர்கள், இறைவா நீ எனக்கு செல்வத்தைக் கொடுத்திருக்கிறாய். என்றாலும் இது உன் புறத்திலிருந்து எனக்குக் கிடைத்த பரக்கத்.அதை விட முடியாது என்றார்கள். (புகாரி ; 279)

அந்த பரக்கத்தை நாமும் கேட்போம். அல்லாஹ் நம் வாழ்வின் அத்தனை காரியங்களிலும் பரக்கத்தை வழங்குவானாக.


(இது நம் தளத்தின் முந்தைய பதிவுகளில் ஒன்று. இருந்தாலும் கடந்த வாரத்தின் தொடராகவும் இந்த மாதத்திற்கு பொருத்தமானதாகவும் இருப்பதினால் இதை மறுபதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.)


இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் இஸ்லாத்தின் பார்வையில் பரக்கத்தைப் பெருவதற்கான வழிகளைக் குறித்து சிந்திக்கலாம்.


6 comments:

  1. Arumaiyan pathiv azrath jazakallah

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் அருமையான தொகுப்பு அல்லாஹ் உங்களுக்கும் அனைத்திலும் பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன்

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்...
    ஆக்கப்பூர்வமான பதிவு...
    பாரகல்லாஹ்...

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்
    بارك الله فيك

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அற்புதம் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தை தருவானாக ஆமீன்

    ReplyDelete