Thursday, December 2, 2021

மாற்றுத் திறனாளிகள்



அல்லாஹுத்தஆலா மனிதனைப் பற்றி கூறும் போது

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

திட்டமாக நாம் மனிதனை அழகான வடிவத்தில் படைத்தோம் என்று குறிப்பிடுகிறான்.

உலகத்தில் எத்தனையோ பார்ப்பதற்கு அழகான ரசிக்கும் படியான கண் கவரும் படியான படைப்புக்கள் இருந்தாலும் இறைவன் மனிதனுக்கு மட்டும் தான் أَحْسَنِ تَقْوِيمٍ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். எனவே உலகத்தில் இருக்கிற எல்லா படைப்புகளை விட மனிதனை அல்லாஹ் அழகிய வடிவத்திலும் அழகிய தோற்றத்தில் உருவகப்படுத்தி இருக்கிறான். என்றாலும் சிலருக்கு அல்லாஹுத்தஆலா சில உடல் ரீதியான அல்லது மனரீதியான குறைகளைக் கொடுத்து அவர்களை சோதிக்கவும் செய்கிறான். கண்பார்வை இல்லாதவராக வாய் பேச முடியாதவராக கை கால்கள் ஊனம் உள்ளவராக, இப்படி உடல்ரீதியான குறைபாடு உள்ளவர்களாக சிலர் பிறக்கிறார்கள். அல்லது இடையில் ஏற்பட்ட விபத்துகளால் அவ்வாறு குறை உள்ளவர்களாக அவர்கள் மாறி விடுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 ஆம் நாள் (International Day of Disabled Persons) உலக மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவர்கள் மதிக்கப்பட வேண்டும் சமூக அந்தஸ்து அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் அவர்களது வாழ்வு ஒளிமயமாக ஆக வேண்டும் என்பது தான் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுவதின் நோக்கம்.

இன்றைக்கு பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் காரர்களாக சாதனையின் உச்சத்தை தொட்டவர்களாக அவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு விதத்தில் உடல் ஊனத்தால் வெளித்தோற்றத்தால் மாறுபட்டவர்களாக இருக்கலாம். ஆனால் மனதால், எண்ணங்களால் அவர்கள் உயர்ந்தவர்கள் தான். மற்றவர்களிடம் இல்லாத மனஉறுதி, வாழ வேண்டும் என்கிற வைராக்கியத்தை அவர்களுக்கு அது தருகிறது. அந்த வைராக்கியம் தான் வலிகளைத் தாங்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளைத் தந்து சாதனையாளர்களாய் சாதிக்க வைக்கின்றது.

ஒட்டு மொத்த விஞ்ஞான உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர்  1942-ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங். கை கால்கள் செயல் படாது. சக்கர நாற்காலியிலேயே வாழ வேண்டும். இன்னும் இரண்டு வருடத்தில் மரணம் ஏற்படும்ஸ்டீபன் ஹாக்கிங்கின் 21 ஆவது வயதில் மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்த வார்த்தைகள் இவை.

ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்துள்ளார். மிகப்பெரிய விஞ்ஞானக் கருத்துக்களை உலகிறகுக் கொடுத்திருக்கிறார். எழுத்தாளராகவும் பரிணமித்த இவரது படைப்புகளில், A BRIEF HISTORY OF TIME, அறிவியல் ஆய்வு புத்தகங்களிலேயே மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. சண்டே டைம்ஸில் தொடர்ந்து 237 வாரங்களுக்கு அதிக விற்பனையான புத்தகங்களில் முதல் இடத்தை பிடித்தது இந்தப் புத்தகம். ஒரு கோடி பிரதிகள் விற்று சாதனை படைத்தது.

63 வயது நிரம்பிய ஸ்டீபன் ஹாக்கிங் வீல் சேரில் அமர்ந்த படி தொலைக்காட்சி நிலையத்திற்கு செவிலியர்கள் அவரை அழைத்து வருகிறார்கள். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமும் செயல்படாத நிலை. நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துகளை அடையாளம் காட்டி பாடம் நடத்தி, புத்தகம் எழுதி புகழின் உச்சிக்கு உயர்ந்தவர். தன்னம்பிக்கைப் பயிற்சியாளர். தொலைக்காட்சியில் கேட்ட கேள்விகளுக்கு கணினி மூலம் விடை சொல்கிறார். வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற ஒரு கேள்வியைக் கேட்கிறார் தொகுப்பாளர். முன்பை விட சந்தோஷமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது என்கிறார் ஹாக்கிங். இந்த உடல் நிலையில் உங்களால் சந்தோஷமாக இருக்க முடிகிறதா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார், தொகுப்பாளர்.எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பது தான் முக்கியம்என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

இன்றைக்கு வீல் சேரில் அமர்ந்திருக்கிற அல்லது கண் பார்வை இழந்த இதுபோன்ற மாற்றுத் திறனாளிகள் அத்தனை பேருக்கும் அவர்களின் உடல் உறுப்புகள் தான் ஊனப்பட்டிருக்கிறதே தவிர அவர்களின் உள்ளங்கள் ஊனமாக வில்லை. அது ஆரோக்கியமாகத் தான் இருக்கிறது. நபி ஸல் அவர்களின் காலத்தில் இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஹள்ரத் அம்ர் பின் ஜமூஹ் ரலி அவர்களைக் கூறலாம்.

لما ندب رسول الله صلى الله عليه وسلم الناس إلى بدر ، عزم عمرو رضي الله عنه على الخروج معهم ، فمنعه بنوه ، بأمر رسول الله صلى الله عليه وسلم لشدة عرجه ، فبقي بالمدينة على مضض وضيق وحرج شديد أن يرى نفسه مع القاعدين من النساء ، والولدان والشيوخ ، فلما كان يوم أحد قال لهم : لقد منعتموني الخروج إلى بدر ، فلا تمنعوني الخروج إلى أحد ، فقالوا : إن الله قد عذرك ، ولا يصلح أمثالك للكر والفر

فأتى رسول الله صلى الله عليه وسلم فقال : إن بَنِيّ يريدون أن يحبسوني عن هذا الوجه ، والخروج معك فيه ، فوالله إني لأرجو أن أطأ بعرجتي هذه في الجنة ، فقال له رسول الله صلى الله عليه وسلم: ( أمّا أنت فقد عذرك الله تعالى ، فلا جهاد عليك).

ولكن لما رأى رسول الله صلى الله عليه وسلم رغبة عارمة في نفس عمرو لخوض المعركة ، ونيل الشهادة ، قال : ( والله لكأني أنظر إليك تمشي برجلك في الجنة وهي صحيحة ) ثم التفت إلى بنيه وقال : ( ماعليكم ألا تمنعوه لعل الله أن يرزقه الشهادة) . فلما سمع عمرو ذلك من رسول الله صلى الله عليه وسلم، خرج رضي الله عنه فرحاً مسروراً مستقبل القبلة يقول : ( اللهم لا تردني إلى أهلي خائبا) 

واستشهد ابنه خلاد بن عمرو، وعبد الله بن عمرو بن حرام والد جابر فحملتهم هند بنت عمرو بن حرام زوجة عمرو بن الجموح على بعير لها تريد بهم المدينة، فلقتها أم المؤمنين عائشة رضي الله عنهما -  فقالت من هؤلاء ؟ قالت: أخي وابني خلاد، وزوجي عمرو بن الجموح.

قالت: وأين تذهبين بهم ؟ قالت: إلى المدينة أقبرهم فيها، ثم قالت: حل حل، تزجر بعيرها، فبرك، فقالت لها عائشة: لما عليه ؟ قالت: ما ذاك به لربما حمل ما يحمل بعيران، ولكن أراه لغير ذلك، وزجرته فقام وبرك، فوجهته راجعة إلى أحد، فأسرع فرجعت إلى النبي صلى الله عليه وسلم فأخبرته بذلك، فقال: إن الجمل مأمور، هل قال عمرو شيئا ؟ قالت: إن عمرا لما توجه إلى أحد قال: اللهم لا تردني إلى أهلي خائبا وارزقني الشهادة، فقال رسول الله صلى الله عليه وسلم: " فلذلك الجمل لا يمضي، إن منكم - معشر الانصار - من لو أقسم على الله لابره.

منهم عمرو بن الجموح، ولقد رأيته [ يطأ ] بعرجته في الجنة، يا هند، ما زالت الملائكة مظلة على أخيك من لدن قيل إلى الساعة ينتظرون أين يدفن "، ثم مكث رسول الله صلى الله عليه وسلم حتى قبرهم، ثم قال: " يا هند، قد ترافقوا في الجنة " قالت: يا رسول الله، ادع الله عسى أن يجعلني معهم. سبل الهدي والرشاد

இஸ்லாமிய வரலாற்றின் முதல் போரான பத்ருக்காக நபியவர்கள் கிளம்பிய போது கால் ஊனப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்த அம்ர் பின் ஜமூஹ் ரலி அவர்கள் நானும் போருக்கு வருகிறேன் என்று சொன்ன போது அவர்களின் மகன்கள் அவரைத் தடுத்து விட்டார்கள். போருக்கு போக வில்லையே என்று மனம் வெம்பிக் கொண்டே மதீனாவில் அமர்ந்திருந்தார்கள்.அடுத்து உஹத் போர் வந்த போது அவர்கள்  கடந்த முறை தான் என்னை தடுத்து விட்டீர்கள். இந்த முறை நான் கண்டிப்பாக அவர்களோடு சென்று போரில் கலந்து கொள்வேன் என்று வைராக்கியமாக கூறினார்கள். உங்களுக்கு தங்கடம் இருக்கிறது. உங்கள் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அவர்களின் பிள்ளைகள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் இல்லை, நான் போகத்தான் போகிறேன் என்று சொல்லி நபியிடத்திலே வந்து நின்றார்கள். என்னுடைய பிள்ளைகள் போர்க்களத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று என்னைத் தடுக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு போருக்கு வர விரும்புகிறேன் என்று சொன்னார்கள். அப்போது நபியவர்களும் உங்கள் போன்றவர்களுக்கு போரில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு அல்லாஹ் சலுகையை வழங்கி இருக்கிறான் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே நான் இதே கால்களோடு சுவனத்தை மிதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னார்கள். அவர்களின் வைராக்கியத்தையும் அவர்களின் ஆர்வத்தையும் பார்த்த நபியவர்கள் அவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். சுவனத்தில் ஆரோக்கியமான கால்களோடு நீங்கள் நடப்பதை நான் காண்கிறேன் என்று சொன்னார்கள்.பிறகு அவர்களின் பிள்ளைகளை அழைத்து, போருக்குச் செல்ல அவரை நீங்கள் தடுக்க வேண்டாம். அவருக்கு அல்லாஹ் ஷஹாதத்தைக் கொடுக்கலாம் என்று சொன்னார்கள். இதை கேட்ட மாத்திரத்தில் அவர்கள் சந்தோஷ மிகுதியில் ஆனந்தப் பெரு வெள்ளத்தில் போருக்குக் கிளம்பினார்கள். போர்க்களத்தில் அந்த கால்களையும் வைத்துக்கொண்டு வீர தீரத்தோடு போர் புரிந்து வீரமரணம் அடைந்தார்கள்.

அவர்களின் மனைவி ஹிந்து ரலி அவர்கள், அந்த போர்க்களத்திலே ஷஹீதான அமர் பின் ஜமூஹ் ரலி அவர்கள், அவர்களின் மகன், அவர்களுடைய சகோதரர் ஆகிய மூவரின் உடல்களையும் ஒரு ஒட்டகத்தில் ஏற்றி மதினாவிற்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். மதினாவை நோக்கி அந்த ஒட்டகத்தை திரும்பிய போது அந்த ஒட்டகம் அப்படியே அமர்ந்து கொண்டது. எவ்வளவோ அதைக் எழுப்பியும் அது எழுந்திருக்க வில்லை. அதைப் பார்த்த அன்னை ஆயிஷா ரலி அவர்கள் சுமை அதிகமாக இருப்பதினால் அது எழுந்திருக்க மறுக்கிறது என்று சொன்னார்கள். இல்லை, இந்த ஒட்டகம் இரண்டு ஒட்டகங்கள் சுமக்கக்கூடிய சுமையைக் கூட சுமக்கும் ஆற்றல் கொண்டது. இருந்தாலும் ஏன் மறுக்கிறது என்று தெரியவில்லை என்று கூறி மீண்டும் அதை எழுப்பி மதினாவை நோக்கி செலுத்தினார்கள். அது மீண்டும் அமர்ந்து கொண்டது. அதை வேறு திசையை நோக்கி திரும்பிய பொழுது அது வேகமாக நடந்து போனது. அதை ஆச்சரியத்தோடு பார்த்த அவர்கள், இந்த செய்தியை நபியவர்களிடம் சொன்னார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் இந்த ஒட்டகம் இறைவனால் ஏவப்பட்டு இருக்கிறது. அமர் பின் ஜமூஹ் ரலி அவர்கள் போருக்கு கிளம்புகின்ற போது ஏதாவது சொன்னார்களா என்று கேட்டார்கள். ஆம், இறைவா என்னை மீண்டும் என் குடும்பத்தின் பக்கம் திருப்பி அனுப்பாதே. எனக்கு வீர மரணத்தைக் கொடு என்று கேட்டார்கள் என்று சொன்ன பொழுது, நபியவர்கள், அதனால் தான் இந்த ஒட்டகம் மதினாவை நோக்கி செல்ல மறுக்கிறது என்று கூறினார்கள். உங்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வார்த்தையைச் சொன்னால் அதை அல்லாஹ் நடத்தி விடுவான். அதில் ஒருவர் தான் அமர் பின் ஜமூஹ் ரலி அவர்கள் என்று கூறினார்கள். (ஸுபுலுல் ஹுதா வர்ரஷாத்)  

கால் ஊனமான அளவுக்கு உள்ளம் ஊனமாக வில்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அமர் பின் ஜமூஹ் ரலி அவர்கள்.

யாரை  இந்த சமூகம் சாதாரணமாக நினைக்கிறோமோ யாரை இந்த சமூகம் ஊனமானவர்கள் என்று சொல்லி ஒதுக்கித்தள்ள முற்படுகிறதோ அவர்கள்  உண்மையில் அல்லாஹ்விடம் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்.  

فيما يرويه أنس رضي الله عنه : «" يا جليبيب ألا تتزوج يا جليبيب ؟ فقال : يا رسول الله و من يزوجني يا رسول الله؟ فقال : أنا أزوجك يا جليبيب فالتفت جليبيب إلى الرسول فقال : إذا تجدني كاسدا يا رسول الله٠ فقال له الرسول صلى الله عليه و سلم:" غير أنك عند الله غير كاسد٠" فزوجه رسول الله فتاة من الأنصار٠ و لم تمض أيام على زواجه حتى خرج مع رسول الله في غزوة استشهد فيها رضي الله عنه٠

நபியின் காலத்தில் மிகக் குள்ளமானவராக இருந்து அன்றைக்கு இருந்த மக்களால் ஒரு மாதிரியாக பார்க்கப்பட்டவர் ஜுலைபீப் ரலி அவர்கள். ஒரு நாள் அவர்களைப் பார்த்து நபி ஸல் அவர்கள் ஜுலைபீபே நீ திருமணம் செய்து கொள்ளக்கூடாதா என்று கேட்டார்கள். எனக்கெல்லாம் யார் பெண் தருவார்கள். நான் மிகவும் அர்ப்பமானவன் என்ற போது, நீ இவ்வுலகத்தில் அவ்வாறு கருதப்படலாம். ஆனால் நீ அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்தவன் என்று கூறி மதீனத்து அன்ஸாரிகளில் ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.மனமுடித்த கொஞ்ச நாளிலேயே ஒரு போரில் கலந்து கொண்டு ஷஹீதாகி விட்டார்கள்.

فعَنْ أَبِي بَرْزَةَ: أَنّ النّبِيّ صلى الله عليه وسلم كَانَ فِي مَغْزَىً لَهُ. فَأَفَاءَ اللّهُ عَلَيْهِ. فَقَالَ لأَصْحَابِهِ: "هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ؟" قَالُوا: نَعَمْ. فُلاَناً وَفُلاَناً وَفُلاَناً. ثُمّ قَالَ: "هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ؟" قَالُوا: نَعَمْ. فُلاَناً وَفُلاَناً وَفُلاَناً. ثُمّ قَالَ: "هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ؟" قَالُوا: لاَ. قَالَ: "لَكِنّي أَفْقِدُ جُلَيْبِيباً. فَاطْلُبُوهُ" فَطُلِبَ فِي الْقَتْلَىَ. فَوَجَدُوهُ إِلَىَ جَنْبِ سَبْعَةٍ قَدْ قَتَلَهُمْ. ثُمّ قَتَلُوهُ. فَأَتَىَ النّبِيّ صلى الله عليه وسلم فَوَقَفَ عَلَيْهِ. فَقَالَ: "قَتَلَ سَبْعَةً. ثُمّ قَتَلُوهُ. هَذَا مِنّي وَأَنَا مِنْهُ. هَذَا مِنّي وَأَنَا مِنْهُ". قَالَ: فَوَضَعَهُ عَلَىَ سَاعِدَيْهِ. لَيْسَ لَهُ إِلاّ سَاعِدا النّبِيّ صلى الله عليه وسلم. قَالَ: فَحُفِرَ لَهُ وَوُضِعَ فِي قَبْرِهِ. وَلَمْ يَذْكُرْ غَسْلا. رواه مسلم.

அந்தப் போர்க்களத்திலேயே நபியவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து நீங்கள் யாரையாவது தேடுகிறீர்களா என்று கேட்டார்கள். இந்தந்த மனிதர்களின் உடல்களைத் தேடுகிறோம் என்று சொன்னார்கள். மீண்டும் கேட்ட பொழுது அப்போதும் அவ்வாறே நபித்தோழர்கள் சொன்னார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் நான் ஜுலைபீபைத் தேடுகிறேன். நீங்களும் அவர்களை தேடுங்கள் என்று சொன்னார்கள். நபித்தோழர்கள் தேடி ஒரு இடத்திலே அவர்களின் உடலை பெற்றுக் கொண்டார்கள். ஏழு எதிரிகளைக் கொன்று விட்டு அவர்களுக்கு அருகில் இவர்களும் ஷஹீதாகிக் கிடந்தார்கள். அதை பார்த்த நபியவர்கள் இவர் என்னை சார்ந்தவர். நான் அவரை சார்ந்தவன் என்று கூறி தன்னுடைய இரு கைகளையும் அவர்களுக்கு தலையணையாக ஆக்கி அவர்களை தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். நபியுடைய இரு கரங்கள் தான் அவருக்கு அந்த நேரத்தில் கட்டிலாக இருந்தது. பிறகு அவருக்கு குழி தோண்டப்பட்டு அதில் அடக்கம் செய்யப்பட்டது. (முஸ்லிம் ; 2472)

பெண் கொடுப்பதற்கே யோசிக்கின்ற அளவுக்கு அன்றைக்கு சாதாரண மனிதராக இருந்த ஜுலைபீப் ரலி அவர்கள் அல்லாஹ்விடத்திலும் அவனின் தூதரிடத்திலும் எத்தகைய அந்தஸ்தைப் பெற்றிருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸின் மூலம் நாம் விளங்கலாம். அவர்கள் மட்டுமல்ல அவர்களைக் கொண்டு அவர்களின் மனைவிக்கும் அன்றைக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்தது.   

فقال أنس : فعدنا إلى المدينه وما كادت تنتهي عدة زوجة جليبيب حتى تسابق إليها كبار الصحابه"

ஜுலைபீப் ரலி அவர்களின் மனைவி அவர்களின் மறைவுக்குப் பின்னால் ஷஹீதின் மனைவி என்றே மக்காளால் அழைக்கப்பட்டார்கள். மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் இத்தா காலம் முடிந்ததும் அவர்களை மறுமணம் செய்வதற்கு பெரும் பெரும் ஸஹாபாக்கள் போட்டி போட்டார்கள் என்று அனஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகின்ற இந்நாளில் இரண்டு செய்திகள் மிக முக்கிமானது. ஒன்று நமக்கு. இன்னொன்று அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு. நமக்கான செய்தி, அவ்வாறு உடல் ஊனமுற்றிருக்கிற யாருக்கும் நாம் உதவி செய்யா விட்டாலும் அவர்களை ஒரு மாதிரியாக பார்க்காமல், அவர்களை நம்மை விட்டும் ஒதுக்காமல், அவர்களை நாம் அரவணைத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு ஊனமுற்றோர் உடல் குறைபாடு உள்ளவர் பிற மக்களால் ஒதுக்கப்படுகிறார்கள். ஒருமாதிரியாக பார்க்கப்படுகிறார்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இப்படி உடல்ரீதியாக அல்லது மனரீதியாக குறை உள்ளவர்களாக பிறப்பதோ அல்லது இருப்பதோ அவர்கள் செய்த குற்றம் அல்ல அவர்களாக விரும்பி எடுத்துக்கொண்ட முடிவும் அல்ல. அது இறைவனுடைய ஏற்பாடு என்பதை நாம் ஆரம்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு குழந்தை எந்த இடத்தில், எந்த வீட்டில், எந்த இனத்தில், எந்த மதத்தில் பிறப்பது என்பதை பிறக்கப்போகும் அந்தக் குழந்தை தீர்மானிப்பதில்லை. பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. அது இறைவனின் விதிக்குட்பட்டது. ஊனமும் அப்படித்தான். யாரும் விரும்பி ஊனமடைவதில்லை. பிறப்பாலோ, வியாதியாலோ, விபத்தாலோ எப்படியோ உடலில் ஊனம் ஏற்பட்டு விடுகின்றது. அத்தகையவர்களை நாம் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்.

எத்தனையோ பானைகளை குயவன் செய்கிறான். அவற்றுள் நல்லவற்றைத் தேடி வாங்கிச் செல்கின்றனர். சில பானைகளை வளைந்திருக்கிறது, நெளிந்திருக்கிறது, ஓட்டையாக இருக்கின்றது என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி வைத்து விடுகின்றனர். அப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பானை பேசுகிறது

வளைந்தும்

நெளிந்தும்

உள்ளதென்று

விலகிப் போகின்றார்கள்

அந்த நாள்

குயவன் செய்த பிழைக்கு

நான் என்ன செய்வேன்?

என்று பாரசீகக் கவிஞன் உமர் கயாம் என்பவர் பானை பேசுகிறதுஎன்கிற தலைப்பில் பானையை உவமைப்படுத்தி ஊனமுற்றவர்களைப் பற்றி அவர் எழுதியிருந்தார். எனவே மாற்றுத் திறனாளிகள் சமூகத்தால் கண்டு கொள்ளப்பட வேண்டும். அவர்களையும் சக மனிதர்களாக மதிக்க வேண்டும்.இது நமக்கான செய்தி.

அவர்களுக்கான செய்தி, உடலில் சில குறைகளை படைத்தவன் கொடுத்திருந்தாலும் மனம் தளராமல் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். அதை பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு சிந்தித்துப் பார்க்க முடியாத அளவு அந்தஸ்துகளையும் படித்தரங்களையும் இறைவன் வைத்திருப்பான் இன்ஷா அல்லாஹ்.  

إن الله قال: إذا ابتليت عبدي بحبيبتيه فصبر، عوضته منهما الجنة

என்னுடைய அடியானுக்கு அவனுடைய இரு கண்களைப் பறித்து அவனை நான் சோதிக்கின்ற போது அவன் பொறுமையாக இருந்தால் அதற்குப் பகரமாக அவனுக்கு நான் சுவனத்தைத் தருகிறான் என்று அல்லாஹ் கூறுகிறான். (புகாரி ; 5653)

நபித்தோழர்களில்  مستجاب الدعاء துஆ ஒப்புக்கொள்ளப்படும் நபர் ஸஃது பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள். அவர்களின் துஆ ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் அவர்களுக்காக துஆ செய்திருக்கிறார்கள். அவர்கள் துஆ கேட்டால் உடனே அல்லாஹ் கபூல் செய்து விடுவான்.

 

جَاءَ في سِيَرِ أَعْلَامِ النُّبَلَاءِ عَنْ مُصْعَبِ بنِ سَعْدٍ: أَنَّ رَجُلَاً نَالَ مِنْ عَلِيٍّ، فَنَهَاهُ سَ

عْدٌ، فَلَمْ يَنْتَهِ، فَدَعَا عَلَيْهِ، فَمَا بَرِحَ حَتَّى جَاءَ بَعِيْرٌ نَادٌّ، فَخَبَطَهُ حَتَّى مَاتَ.

ஒருவர் அலி ரலி அவர்களுக்கு அதிகம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். ஸஃத்  ரலி அவர்கள் அவரைத் தடுத்தும் அவர் விலகிக் கொள்ள வில்லை. அப்போது அவருக்கு எதிராக ஸஃத் ரலி அவர்கள் துஆ செய்தார்கள். அந்த துஆவின் விளைவாக அந்த மனிதர் ஒரு ஒட்டகத்தால் மிதிபட்டு இறந்து போனார். (ஸியரு அஃலாமின் நுபுவ்வா)

لَمَّا قَدِمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ إِلَى مَكَّةَ ـ وَقَدْ كُفَّ بَـصَرُهُ ـ جَعَلَ النَّاسُ يُهْرَعُونَ إِلَيْهِ لِيَدْعُوَ لَهُمْ؛ فَجَعَلَ يَدْعُو لَهُمْ.

قَالَ عَبْدُ اللهِ بْنُ السَّائِبِ: فَأَتَيْتُهُ وَأَنَا غُلَامٌ، فَتَعَرَّفْتُ إِلَيْهِ، فَعَرَفَنِي.

فَقُلْتُ: يَا عَمُّ، أَنْتَ تَدْعُو لِلنَّاسِ فَيُشْفَوْنَ، فَلَوْ دَعَوْتَ لِنَفْسِكَ لَرَدَّ اللهُ عَلَيْكَ بَصَرَكَ.

فَتَبَسَّمَ؛ ثُمَّ قَالَ: يَا بُنَيَّ، قَضَاءُ اللهِ أَحَبُّ إِلَيَّ مِنْ بَصَرِي

ஸஃத் பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள் கரம் ஏந்தி எதைக் கேட்டாலும் இறைவன் கொடுத்து விடுவான். எனவே மக்கள் அனைவரும் தங்களுக்காக துஆச் செய்யும்படி அவர்களிடத்திலே சென்று முறையிடுவார்கள். அவர்களும் மக்களுக்காக துஆ செய்பவர்களாக இருந்தார்கள். அப்துல்லா பின் சாயிப் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; பின்நாட்களில் ஸஃத் ரலி அவர்களின் பார்வை பறி போய் விட்டது. ஒரு நாள் அவரைப் பார்ப்பதற்கு நான் சென்றிருந்தேன். அப்போது நான், மக்களெல்லாம் உங்களிடத்தில் வந்து துஆ செய்யும்படி வேண்டுகிறார்கள். நீங்களும் துஆ செய்கிறீர்கள். அல்லாஹ்வும் கொடுக்கிறான். ஆனால் நீங்கள் பார்வையை இழந்து சிரமப்படுகிறீர்கள். உங்கள் பார்வை உங்களுக்கு கிடைப்பதற்காக இறைவனிடத்தில் நீங்கள் துஆ செய்யக்கூடாதா என்று கேட்டேன். அப்போது ஸஃத் ரலி அவர்கள் சிரித்துக் கொண்டே என் அருமை மகனே என் பார்வையை விட அல்லாஹ்வின் விதியே எனக்கு மிகவும் விருப்பமானது என்று கூறினார்கள். (மதாரிஜுஸ் ஸாலிகீன்)

ஸஃத் பின் அபீ வக்காஸ் ரலி அவர்களின் பொறுமைக்கு உதாரணம் இது. அல்லாஹ்வின் விதி எதுவோ அதை அப்படியே பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் விதியை பொருந்தி பொறுமை கொண்டால் அதன் மூலம் கிடைக்கும் பாக்கியங்கள் எண்ணிலடங்காதவை. இது அவர்களுக்கான செய்தி.

வல்ல ரஹ்மான் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தருவானாக. அவர்கள் வாழ்வின் எல்லா வழங்களையும் நிறைவாகப் பெறுவதற்கு தவ்ஃபீக் செய்வானாக. உள்ளம் ஊனப்படாமல் இருக்க அவர்களுக்கும் நமக்கும் அருள் புரிவானாக.

 


7 comments:

  1. மாஷா அல்லாஹ்...

    அருமையான தகவல்கள்

    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக. ஆமீன்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் நல்ல ஒரு கட்டுரை உங்கள் கட்டுரையை படித்த பிறகு எனது மனம் மிகவும் சந்தோசம் அடைகிறது ஏனென்றால் நானும் ஒரு மாற்றுதிறனாளி தான் அல்லாஹ் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆயுளையும்

    ReplyDelete
  3. அல்லாஹ் உங்களுடைய பிள்ளைக்கு ஷிபாவை தந்தருள்வானாக. நிம்மதியான நோயில்லாத வாழ்க்கை அல்லாஹ் தந்தருள்வானாக. ஆமீன்

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
    காலத்திற்கு ஏற்ற பதிவை தந்தமைக்கு
    ஜஸாக்கல்லாஹ் ஹைரன் ஹஜ்ரத்
    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  5. ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete
  6. மிகவும் அழகான ஆழமான கருத்து சாற்றை பிழிந்து தந்துள்ளீர்கள்.
    நாங்கள் பருகி பிறரும் பருகட்டும்

    ReplyDelete