Friday, December 10, 2021

மனித உரிமை

 

உலகில் இருக்கிற முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று கடைபிடித்துக் கொண்டிருக்கிற இஸ்லாம் மனித வாழ்வின் மிகச்சிறந்த வாழ்க்கை நெறிமுறையாக இருக்கிறது. வெறுமெனே வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்ளாமல் மனித வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் நுழைந்து தன் தீர்க்கமான கருத்துக்களை பதிவு செய்திருப்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று. அந்த வகையில் மனித உரிமைகள் குறித்து தெளிவாக இஸ்லாம் பேசியிருக்கிறது. மனிதனுடைய எண்ணற்ற உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற உரிமைகள் மீறப்படுகிற இன்றைய சூழலில் அது குறித்து சிந்திக்க வேண்டும்.

இன்று டிசம்பர் 10 ம் நாள். ஆண்டு தோறும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் human rights day மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு மனித உரிமை  என்ற சொல்லுக்கு பல விதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் சொல்லப்படுகிறது.இருந்தாலும் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், தான் எவ்வாறு வாழ வெண்டும் என்று விரும்புவானோ, ஒவ்வொரு மனிதனும் தனக்கு எதுவெல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்ப்போனோ ஆசைப்படுவானோ அவை அனைத்திற்கும் பெயர் தான் மனித உரிமைகள். அந்த மனித உரிமைகளை ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தான் ஆண்டு தோறும் டிசம்பர் பத்தாம் தேதி, உலக மனித உரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

உரிமைகளிலேயே ஆக உயர்ந்தது மிக முக்கியமானது வாழும் உரிமை. இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு இடங்களில் மனிதனுக்கு வாழும் உரிமை மறுக்கப்படுகிறது. அநியாயமாக மனித உயிர்கள் கொல்லப்படுகிறது.இன்றைக்கு அர்ப்ப காரணங்களுக்காகவும் அர்ப்ப சுகங்களுக்காகவும்  மனித உயிர்கள் பந்தாடப்படுகின்றது.

அது மட்டுமில்லாமல் இன்றைக்கு சர்வ சாதாரணமாக மனித உயிர்கள் பறிபோயிக் கொண்டிருக்கிறது. சிறைச்சாலைகள் மற்றும் போலிஸ் கஸ்ட‌டியில் ஆண்டிற்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், சாலை விபத்தில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பதாக மனித உரிமை ஆர்வல‌ர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் விபத்தில் ஆண்டிற்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ மானுட உயிர்கள் சாலையில் மடிந்து போகின்றன. இதைத்தவிர‌ இரயில் விபத்து, விமான விபத்து, குடும்ப வன்முறை, சாதி மத மோதல், கடத்தல் மற்றும் காணாமல் போதல், எல்லைப் பிரச்சனை, வெடிகுண்டு, இயற்கை மற்றும் செயற்கை பேரிடர், காலரா, காசநோய், பட்டினிச் சாவு, சிசுக் கொலை, பிர‌சவ இறப்பு, உயிர்க்கொல்லி மற்றும் தொற்று நோய்கள் என ஆண்டிற்கு பல லட்சம் உயிர்கள் போய் கொண்டிருக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இறைவன் விதித்த விதி ஒரு புறம் இருந்தாலும் நம் நாட்டில் அநியாயமாக நடக்கின்ற கொலைகள் குறித்த சரியான தண்டனைகளும் விபத்துக்கள் குறித்த போதிய விழிப்புணர்வும் இருந்தால் எத்தனையோ உயிர்கள் காக்கப்படலாம்.

உயிரின் மதிப்பு என்ன என்பதை இஸ்லாம் அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறது. உடலைக் கெடுத்து உயிரைப் பறிக்கக்கூடிய காரியங்களை செய்வதற்கு தடை விதித்திருப்பது, தன் உயிராகவே இருந்தாலும் அதை மாய்த்துக் கொள்ளக்கூடாது, அவ்வாறு செய்தால் அவர் செய்ததைப் போன்றே மறுமையில் அதற்காக தண்டனை வழங்கப்படும் என்று சொன்னது, ஒரு உயிரை காப்பதற்காக தடை செய்யப்பட்ட அறுவறுப்பான விஷயங்களைக் கூட அனுமதித்திருப்பது இதுவெல்லாம் இஸ்லாம் உயிர்களுக்கு அளித்த மரியாதையை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

ஒரு உயிர் அநியாயமாக பரிபோவதை இஸ்லாம் என்றைக்கும் அனுமதித்ததில்லை.

من حديث جَابِرٍ قَالَ: خَرَجْنَا فِي سَفَرٍ، فَأَصَابَ رَجُلًا مِنَّا حَجَرٌ، فَشَجَّهُ فِي رَأْسِهِ، ثُمَّ احْتَلَمَ، فَسَأَلَ أَصْحَابَهُ، فَقَالَ: هَلْ تَجِدُونَ لِي رُخْصَةً فِي التَّيَمُّمِ؟ فَقَالُوا: مَا نَجِدُ لَكَ رُخْصَةً وَأَنْتَ تَقْدِرُ عَلَى الْمَاءِ، فَاغْتَسَلَ، فَمَاتَ. فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْبِرَ بِذَلِكَ فَقَالَ: قَتَلُوهُ قَتَلَهُمْ اللَّهُ، أَلَا سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا؛ فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ، إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ، وَيَعْصِبَ عَلَى جُرْحِهِ خِرْقَةً، ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا، وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ

நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது எங்களில் ஒருவர் மீது கல் ஒன்று விழுந்து அவரது தலையில் பெரும் காயத்தை ஏற்படுத்தி விட்டது. பிறகு அவர் குளிப்பு கடமையானார். அப்போது தன்னுடைய தோழர்களிடத்திலே தயம்மம் செய்வதற்கு எனக்கு அனுமதியை பெற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அப்போது அவர்கள் தண்ணீருக்கு சக்தி இருக்கின்ற நிலையில் தயம்மம் செய்வதற்கு அனுமதி இல்லை என்று கூறி விட்டார்கள். அவர் தண்ணீரைக் கொண்டு குளித்தார். அதன் பாதிப்பால் அவர் மரணமடைந்து விட்டார். நாங்கள் நபியிடத்தில் வந்த பொழுது அந்த செய்தி அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அப்போது நபி ஸல் அவர்கள், அவரை அவர்கள் கொன்று விட்டார்கள். அல்லாஹ் அவர்களை கொல்வானாக. அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் கேட்டிருக்கக் கூடாதா. அறியாமையின் நிவாரணம் கேட்பது தான். அவருக்கு தயம்மம் செய்வதே போதுமானதாக இருக்கும். அவருடைய அந்த காயத்தின் மீது ஒரு துணியை சுற்றிக் கொண்டு அதன் மீது தடவி கொள்வதே போதுமானதாக இருக்கும் என்று கூறினார்கள். (ஷரஹுஸ் ஸுன்னா  ; 313)

اشتكى رجل منهم حتى أضني فعاد جلدة على عظم، فدخلت عليه جارية لبعضهم فهش لها فوقع عليها، فلما دخل عليه رجال قومه يعودونه أخبرهم بذلك وقال: استفتوا لي رسول الله صلى الله عليه وسلم، فإني قد وقعت على جارية دخلت علي، فذكروا ذلك لرسول الله صلى الله عليه وسلم وقالوا: ما رأينا بأحد من الناس من الضر مثل الذي هو به، لو حملناه إليك لتفسخت عظامه، ما هو إلا جلد على عظم، فأمر رسول الله صلى الله عليه وسلم أن يأخذوا له مائة شمراخ فيضربوه بها ضربة واحدة

எலும்பும் தோலுமாக ஆகும் அளவுக்கு ஒருவர் மெலிந்து போயிருந்தார். அவரிடத்தில் வந்த ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு அவரிடத்தில் தவறாக நடந்து கொண்டு விட்டார். அவருடைய சமூகத்து மக்கள் அவரை நலம் விசாரிப்பதற்காக வந்த போது நடந்ததை அவர்களிடத்தில் சொல்லி எனக்காக அல்லாஹ்வின் தூதரிடத்தில் இதற்கான விளக்கத்தைக் கேளுங்கள் என்றார். அவர்கள் நபியிடத்தில் அதைப் பற்றி சொன்னார்கள். (இதற்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது மார்க்க சட்டமாகும்) ஆனால் அவருக்கு ஏற்பட்டதைப் போன்று இதுமாதிரியான நோய் வேறு யாருக்கும் ஏற்பட்டு நாங்கள் பார்த்ததில்லை. எனவே அவருக்கு அந்த குற்றத்திற்கான தண்டனையை நிறைவேற்றினால் அவருடைய உடம்பின் எலும்புகள்  முறிந்து போய் விடும். அவர் எழும்பும் தோலுமாக இருக்கிறார் என்று நபித்தோழர்கள் சொன்னார்கள். எனவே அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் நூறு குச்சிகளை எடுத்து வரச்சொல்லி அதை ஒன்றாக இணைத்து அதைக்கொண்டு ஒரு அடி அடிப்பதற்கு உத்தரவிட்டார்கள். (அபூதாவூது ; 4472)

குற்றவியல் தண்டனைகள் விஷயத்தில் இஸ்லாம் எந்த அளவிற்கு தீவிரம் காட்டும் என்பது நமக்கு தெரியும். குற்றங்களுக்கு தண்டனைகளை நிறைவேற்றுவது தான் இறை அருளுக்கு காரணமாக இருக்கும். தண்டனை விஷயத்தில் இரக்கப்படுவது கூடாது, தயவு தாட்சண்யம் கூடாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறது. அப்படி இருந்தும் இங்கே நபி ஸல் அவர்கள் கொடுக்க வேண்டிய தண்டனையில் தளர்வு காட்டி அவரின் மீது இரக்கப்பட்டார்கள் என்பதிலிருந்து ஒரு உயிரைக் காப்பதற்கு மாநபி ஸல் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மட்டுமல்ல முன்பொரு காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் சற்றும் இரக்கமில்லாமல் அவர்களை உயிரோடு புதைக்கும் அரக்க குணமுள்ள மக்கள் இருந்தார்கள். ஆனால் இஸ்லாம் பெண் பிள்ளைகள் பரக்கத்  என்றும் அவர்களின் பெற்றோர்களை சுவனத்திற்கு அழைத்துச் செல்பவர்கள் என்றெல்லாம் சொன்னதன் விளைவு பெண் பிள்ளைகளை வளர்ப்பதற்கு அவர்கள் போட்டி போடும் நிலை உருவானது. பெண் பிள்ளைகள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்ற நிலையை மாற்றி அவர்களுக்கு வாழ்வுரிமையை முதன்முதலாக இஸ்லாம்  தான் வழங்கியது.

மனிதனின் மானம் வானம் போல் பெரியது. மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் அத்திப்பழத்தின் விதையை விட சிறியது. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊறிய குணாதிசயங்கள். மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான் என்பார்கள் நம் முன்னோர்கள். ஒரு மனிதனின் கண்ணியத்திற்கும் மானத்திற்கும் ஆபத்து வருகின்ற பொழுது தான் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒளிந்து கொள்கிறான். தன்மானம் காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக் கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்கிறான். எனவே தான் இஸ்லாம் மனிதனின் மானத்திற்கு அதிகம் முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறது. நபி ஸல் அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது

أنَّ رسُول اللَّه قَالَ في خُطْبتِهِ يوْم النَّحر بِمنىً في حجَّةِ الودَاعِ: إنَّ دِماءَكُم، وأمْوالَكم وأعْراضَكُم حرامٌ عَلَيْكُم كَحُرْمة يومِكُم هَذَا، في شهرِكُمْ هَذَا،في بلدكم هذا

இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியமும் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடைய ரத்தம் அவனுடைய சொத்து செல்வங்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு ஹராமாகும் என்று கூறினார்கள். (இப்னு ஹுஜைமா ; 2973)

மனிதனின் கண்ணியத்தை நபி ஸல் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத் தன்மைக்கு இணையாக சொல்லியிருப்பது மனிதனின் மானம் எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை காட்டுகிறது. இன்னொரு ஹதீஸில் முஃமினின் கண்ணியம் கஃபாவை விட மேலானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 عن ابنِ عمرَ : رأيتُ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يطوفُ بالكعبةِ ، وَهو يقولُ: ما أطيبَكِ وأطيبَ ريحَكِ ، ما أعظمَكِ وأعظمَ حُرمتَكِ ، والَّذي نفسُ محمَّدٍ بيدِهِ ، لحُرمةُ المؤمِنِ أعظمُ عندَ اللَّهِ حُرمةً منكِ ، مالِهِ ، ودمِهِ ، وأن يُظنَّ بِهِ إلَّا خيرًا

அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நபி ஸல் அவர்கள் கஃபாவை தவாஃப் செய்து கொண்டிருந்தார்கள்.அபபோது அதைப் பார்த்து நீ எவ்வளவு மனம் பெற்றிருக்கிறாய். நீ எவ்வளவு கண்ணியம் பெற்றிருக்கிறாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒரு முஃமினுடைய கண்ணியம் அல்லாஹ்விடம் உன்னை விட உயர்ந்தது என்றார்கள். (அல்மகாஸிதுல் ஹஸனா ; 512)

பிறர் மானத்தை காப்பதும் அவருக்கான உரிமைகளில் ஒன்றாகும். ஒருவரின் கண்ணியத்தைக் கெடுப்பது ஒருவரை கேவலப்படுத்துவது அவருக்கு நாம் செய்யக்கூடிய உரிமை மீறலாகும். எனவே தான் விபச்சாரத்திற்கும் திருட்டிற்கும் தண்டனைக் குறிப்பிட்டதைப் போல் ஒரு பெண்ணின் மீது அபாண்டமாக பழி சுமத்துபவனின் மீதும் தண்டனையை இஸ்லாம் குறிப்பிட்டிருக்கிறது. அழித்தொழிக்கும் ஏழு பாவங்களில் இதுவும் ஒன்று.

 اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقَاتِ قالوا: يا رَسُولَ اللَّهِ، وَما هُنَّ؟ قالَ: الشِّرْكُ باللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتي حَرَّمَ اللَّهُ إِلَّا بالحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَومَ الزَّحْفِ، وَقَذْفُ المُحْصَنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلَاتِ

அழித்தொழிக்கும் ஏழு பாவங்களை நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறிய போது அவை யாவை என்று கேட்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், கொலை செய்தல், வட்டியை சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடுதல், இறை விசுவாசமுள்ள ஒன்றுமறியாத பத்தினிப் பெண்கள் மீது அவதூறு சொல்லுதல் என்றார்கள். (புகாரி ; 6857)

 إنَّ من أربى الربا الاستطالةُ في عِرْضِ المسلمِ بغيرِ حقّ

வட்டியில் மிக அருவருப்பானது முஸ்லிமான ஒரு மனிதனின் மானத்தில் விளையாடுவது. (ஸஹீஹுல் ஜாமிவு ; 2203)

இஸ்லாம் நமக்கு இயற்றியிருக்கிற பல்வேறு சட்டங்களை மனிதனின் கண்ணியத்தையும் மானத்தையும் அடிப்படையாக வைத்தே இயற்றியிருப்பதைப் பார்க்கலாம்.

கேலி செய்யக்கூடாது, அவதூறு சொல்லக்கூடாது, கெட்ட எண்ணம் கொள்ளக்கூடாது,புறம் பேசக்கூடாது, பிறரின் குறைகளை தேடித்துறுவி ஆராயக்கூடாது. அனுமதி பெறாமல் பிறர் வீட்டில் நுழையக்கூடாதுஇதுபோன்ற குற்றங்கள்  மனிதனுடைய கண்ணியத்தோடும் மரியாதையோடும் தொடர்புடையது. அவைகளின் மூலம் மனிதனின் மானத்தைப் பாதுகாக்கும் உரிமை மீறப்படும். எனவே தான் அவைகளை இஸ்லாம் தடை செய்திருக்கிறது.

மனித உரிமைகள் என்று வருகின்ற போது அதில் மிகவும் பிரதானமானது சமத்துவம். சமத்துவம் மிகப்பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தலைவனுக்கு ஒரு சட்டம்,தொண்டனுக்கு ஒரு சட்டம்,அதிகாரத்தில் இருப்பவனுக்கு ஒரு சட்டம், சாதாரண நிலையில் இருப்பவனுக்கு ஒரு சட்டம்,பணக்காரணுக்கு ஒரு சட்டம், ஏழைக்கு ஒரு சட்டம்,படித்தவனுக்கு ஒரு சட்டம், பாமரனுக்கு ஒரு சட்டம்.ஆளைப் பார்த்தும் அதிகாரத்தைப் பார்த்தும் பணத்தைப் பார்த்தும் படிப்பைப் பார்த்தும் சட்டம் இயற்றப்படுகிற இந்த நாட்டில் மனித உரிமைகள் எங்கே பேணப்படுகிறது.

இந்த சமத்துவத்தை நிறைவாக மனித சமூகத்திற்கு வழங்கியது இஸ்லாம் மட்டும் தான்.உலகில் அனைவரும் சமம். குலத்தாலோ, நிறத்தாலோ, பணத்தாலோ, பதவியாலோ, பட்டங்களாலோ ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவர் இல்லை என்பது சமத்துவம் குறித்த இஸ்லாத்தின் பார்வை. அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் ஸல் அவர்கள் முன்னிலையில் அனைவரும் சமமாக பார்க்கப்பட்டார்கள், அனைவரும் ஒரே விதமாக நடத்தப்பட்டார்கள்,வேற்றுமைகளை கலைந்து மிக உயர்ந்த சமத்துவத்தை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தி விட்டது.

மட்டுமல்ல நீதி வழங்குவதில் பிரச்சனைகளுக்கு தீர்ப்பு சொல்வதில் இஸ்லாம் காட்டித்தந்த சமத்துவத்தைப் போன்று உலகில் எங்கும் பார்க்க முடியாது. ஆட்சியாளாக இருந்தாலும் அதிகாரியாக இருந்தாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை. நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல்.நீதத்தின் உருவம் நியாயத்தின் சிகரம் ஹள்ரத் உமர் ரலி அவர்களின் வாழ்விலே அந்த சமத்துவத்தை தெளிவாக நாம் உணரலாம்.  

எகிப்து நாடு இஸ்லாமிய சாம்மராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக மாறிய போது அந்த எகிப்தின் அதிபதியாக ஹள்ரத் அம்ருப்னுல் ஆஸ் ரலி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஒரு சமயம்

عن ابن عمرو بن العاص -رضي الله عنهما- الذي تسابق مع رجلٍ من أهل مصر فسبقه الرجل، فضربه ابن عمرو بن العاص، فأتى الرجل إلى أمير المؤمنين عمر بن الخطَّاب، وشكى له ما كان من ابن عمرو بن العاص، فاستدعى عمر عمرو بن العاص وابنه، وحضرا إليه، فأمر عمر بن الخطَّاب الرجل المصري بأن يضرب ابن عمرو بن العاص كما ضربه، وقال عمر مقولته الشَّهيرة التي غدت مثلاً يتردَّد في مواقف عدَّة: (مذ كم تعبدتم الناس وقد ولدتهم أمهاتهم أحرارا

ஒரு தடவை எகிப்தில் கவர்னராக இருந்த அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களது மகன்  குதிரை ஓட்டப்போட்டியொன்றில் ஒரு மனிதரிடம் தோல்வியடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அம்ரிம்னுல் ஆஸ் (ரழி) அவர்களது மகன் அந்த மனிதரை சாட்டையால் அடித்து விட்டார். கலீபா உமர் ரலி அவர்களை  சந்தித்து நடந்த விஷயத்தைக் கூறினார் அவர், உமர் (ரழி) அவர்கள், ' மக்களை அவர்களது தாய்மார்கள் சுதந்திரவான்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்போது அவர்களை அடிமைப்படுத்தினீர்கள்' எனக்கேட்டு கவர்னரின் மகனுக்கு உடன் தண்டனை வழங்கினார்கள். தனது கையிலிருந்த சாட்டையை அந்த சிறுவனிடம் வழங்கி 'உனக்கு அடித்தது போலவே நீயும் அடி' என்று கூறினார்கள். (ஹயாதுஸ் ஸஹாபா ; 88/2)

قال : كان بين عمر ، وأبي - رضي الله عنهما - خصومة فقال عمر : اجعل بيني وبينك رجلا قال : فجعلا بينهما زيد بن ثابت قال : فأتوه قال : فقال عمر - رضي الله عنه - أتيناك ؛ لتحكم بيننا وفي بيته يؤتى الحكم قال : فلما دخلوا عليه أجلسه معه على صدر فراشه قال : فقال : هذا أول جور جرت في حكمك أجلسني ، وخصمي مجلسا قال : فقصا عليه القصة قال : فقال زيد لأبي اليمين على أمير المؤمنين ، فإن شئت أعفيته قال : فأقسم عمر - رضي الله عنه - على ذلك ، ثم أقسم له لا تدرك باب القضاء حتى [ ص: 145 ] لا يكون لي عندك على أحد فضيلة .

ஒரு முறை உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள் கலீபா உமர் அவர்கள் மீது வழக்கொன்றைத்  தாக்கல் செய்தார். இருவரும்காழியாக இருந்த ஸைத் பின் ஸாபித்திடம் தீர்ப்புக் கோரிச் சென்றனர். உமர் (ரழி) அவர்களைக் கண்டதும் ஸைத் பின் ஸாபித் அவர்கள் உமர் ரலி அவர்களை தன் விரிப்பில் அமர வைத்தார்கள். உடனே கலீபா “நீர் ஆரம்பமாகவே ஓர் அநீதியைச் செய்து விட்டீர்” என்றார்கள். பின்பு இருவருக்கும் மத்தியில் வாதப்பிரதிவாதம் நடந்து கொண்டிருக்கும் போது காழியான ஸைத் பின் ஸாபித் அவர்கள் உபை இப்னு கஅப் இடம் உமர் (ரழி) அர்கள் கலீபா என்பதற்காக இவ்வழக்கை விட்டுக் கொடுக்கும் படி சிபாரிசு செய்தார்கள். உடனே உமர் (ரழி) அவர்கள் சினம் கொண்டு “இது நீர் செய்த இரண்டாவது அநீதி. உமது பதவியைப் பற்றி நான் சிந்திக்க வேண்டியுள்ளேன்” என்று கண்டித்துக் கூறி விட்டுச் சென்றார்கள். (அஸ்ஸுனனுல் குப்ரா)

குஜராத் கலவரத்தின் போது  அன்றைக்கு ஆட்சியில் இருந்த மோடி அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதி ஜெயந்த் பட்டேல் என்பவர் கர்நாடகாவிற்கும் பிறகு பதவி உயர்வை தடுப்பதற்காக அலகாபாத்திற்கு மாற்றபட்டார். அதனை அவர் எற்க மறுத்து ராஜினாமா செய்தார். அதே கலவர வழக்கில் நீதித்துறை வழக்கறிஞராக வாதாடிய கோபால் சுப்ரமணியம் என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நீதிபதியாக ஆக விடாமல் அவர் தடுக்கப்பட்டார். குஜராத் மோதல் கொலை வழக்கில் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவை விடுவிக்க 100 கோடி பேரம் பேசப்பட்டது. அதை எதிர்த்த சி.பி.ஐ. நீதிபதி லோயா என்பவர் 2014 –ல் மர்மமாக இறந்து போகிறார். அவருக்கு பின் அமித்ஷாவை உடனே விடுவித்த அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கவர்னராக நியமிக்கப்பட்டார். இப்படி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் கவுரவிக்கப் படுகிறார்கள். பதவி உயர்வைப் பெறுகிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் பதவி உயர்வை தடுக்கப்படுகிறார்கள். அல்லது கொல்லப்படுகிறார்கள். இது தான் இன்றைக்குள்ள நிலை. ஆனால் ஒரு வழக்கில் தன்னையும் தன் பிரதிவாதியையும் சமமாக நடத்தாமல் தன்னிடம் சற்று உயர்வாக நடந்து கொண்ட நீதிபதியை ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் கண்டிக்கிறார்கள் என்றால் இஸ்லாம் எந்தளவு சமத்துவத்தைப் பேணுகிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணத்தை சொல்ல முடியாது.

ஒரு நாட்டை ஆளக்கூடிய ஆளுநராக இருந்தாலும் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர்களது பிள்ளைகளாக இருந்தாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்,தவறு செய்து விட்டால் அனைவரும் தண்டனைகளை அனுபவித்தாக வேண்டும் என்ற இந்த சமத்துவம் இஸ்லாத்தில் மட்டும் தான் இருக்கிறது. இந்த சமத்துவம் தான் மனித உரிமைக்கான அடையாளம்.இந்த மனித உரிமைகள் இன்றைக்கு உலகில் பேணப்பட வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக

 


No comments:

Post a Comment