Friday, December 17, 2021

வார்த்தையில் கவனம் தேவை

 

அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கிற இந்த இஸ்லாமிய மார்க்கம் ஒரு கட்டுக் கோப்பான மார்க்கம்.எப்படியும் வாழலாம் என்று விட்டு விடாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறும் கட்டுப்பாடான மார்க்கம்.வெறும் வணக்கவியல் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் சொல்லித்தரும் மார்க்கம். ஒரு முஸ்லிமைப் பொருத்த வரை அவன் எப்படியும் வாழ்ந்து விட முடியாது.இஸ்லாம் கூறுகின்ற வரையறைக்குள் மட்டுமே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.  காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நாம் செய்யும் அத்தனை காரியங்களுக்கும் விசாரணை உண்டு,கேள்வி கணக்கு உண்டு, படைத்தவனிடம் கணக்கு காட்டியாக வேண்டும்,அதற்கு பதிலும் சொல்லியாக வேண்டும்.

நாம் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கிற பணம் காசுகளில் ஒவ்வொரு காசும் எப்படி வந்தது எப்படி போனது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்.நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற நேரங்களில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எப்படி போனது எப்படி கழிந்தது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும். நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் நாவு உச்சரிக்கின்ற வார்த்தைகள் வரைக்கும் அல்லாஹ்விடம் கேள்வி கணக்கு உண்டு. அதற்கு பதில் சொல்ல வேண்டும்.ஒரு முஸ்லிம் சாதாரணமாக ஒரு வார்த்தையைக் கூட தேவையில்லாமல் அனாவசியமாக பயன்படுத்தி விட முடியாது, அந்தளவு எல்லா விஷயங்களிலும் சுய ஒழுக்கத்தையும் சுய கட்டுப்பாட்டையும் சொல்லித்தரும் மார்க்கம் தீனுல் இஸ்லாம்.

நாம் பேசுகின்ற விஷயங்கள் நம் நாவியிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவைகளுக்கு நிறையவே ஆற்றல் உண்டு.ஒரு மனிதனுக்கு கண்ணியத்தைத் தருவதும் இழிவைத் தருவதும் இந்த நாவு தான்.ஒரு மனிதன் தன் நாவால் தன்னை எப்படியும் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மனிதன் உண்மையில் நல்லவனாகவே இருந்தாலும் அவன் வெளியில் மோசமான வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தால் அவனை மோசமானவனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். ஒரு மனிதன் உண்மையில் கெட்டவனாக இருந்தாலும் அவன் வெளியில் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசினால் அவனை சமூகம் நல்லவனாகவே ஏற்றுக் கொள்ளும்.நீண்ட காலங்களாக நல்லவன் போல் மக்கள் நலனில் அக்கரை செலுத்துபவன் போல் நாடகமாடிக் கொண்டிருப்பவர்கள் சமயங்களில் நாவின் மூலம் மாட்டிக் கொள்வார்கள். நாவு அவர்களின் உண்மை முகத்தைக் காட்டி விடும்.ஒரு மனிதனின் கண்ணியத்தையும் இழிவையும் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் தீர்மானிப்பதும் அவனுடைய நாவு தான்.

இன்றைக்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு தனி மனிதனையும் ஒரு சமூகத்தையும் ஒரு மதத்தையும் இழிவாகவும் தரைகுறைவாகவும் பேசுவது சாதாரணமாகிப் போனது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதையும் பேசலாம் எப்படியும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு ஒரு சமூகத்தைப் புண்படுத்தும் காரியத்தை இன்றைக்கு சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். 

மார்க்கமும் நாவுக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தை வழங்குகியிருக்கிறது. ஒருவன் உச்சரிக்கும் ஒரு வார்த்தை அவனது வாழ்க்கையை எப்படியும் புரட்டிப் போட்டு விடும். அந்தளவு மிகப்பெரிய ஆற்றல் நாவுக்குண்டு. ஒரு திருமணம் சரியாவதற்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை விதிக்கிறது.இஸ்லாம் விதிக்கும் திருமண விதிகளில் ஒன்று, மணமகன் தன் நாவால், நான் அவளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வது.இந்த வார்த்தையை மணமகன் மொழிய வில்லையென்றால் அவனது திருமணம் இஸ்லாமிய சட்டத்தின் படி செல்லாது. அப்படியென்றால், நேற்று வரை எந்த உறவுமில்லாமல் இருந்த ஒரு ஆண் பெண்ணுக்கு இடையில் கபில்து ஏற்றுக் கொண்டேன் என்ற ஒரு வார்த்தை காலமெல்லாம் அந்த இருவருக்குமான உறவை உறுதிபடுத்தி விடுகிறது. ஒரு ஆணுக்கு அண்ணியப் பெண்ணை பார்ப்பதையோ, பேசுவதையோ, தனிமையில் சந்திப்பதையோ இஸ்லாம் அனுமதிக்க வில்லை. ஆனால்  ஒரு பெண்ணை பார்ப்பது,பேசுவது, தனிமையில் இருப்பது என அனைத்தும் அந்த ஒரு வார்த்தையால் ஆகிமாகி விடுகிறது. அதே போன்று நேற்று வரை உயிருக்கு உயிராக உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் எல்லா விஷயங்களையும் தங்களுக்குள் பரிமாரிக் கொண்டிருந்த கணவன் மனைவிக்கான உறவு தலாக் என்ற ஒரு வார்த்தையால் சிதைந்து போய் விடுவதையும் பார்க்கிறோம்.

இறை நம்பிக்கையையும் இறை மறுப்பையும் தீர்மானிப்பதில் கூட நாவுக்கும் அதிலிருந்து வெளியாகும் வார்த்தைகளுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. நாற்பது ஐம்பது ஆண்டுகள் இறை மறுப்பில் காலத்தை கழித்து விட்ட ஒருவர் அஷ்ஹது என்ற ஒற்றை வார்த்தையால் இஸ்லாம் எனும் கோட்டைக்குள் நுழைந்து தன் கடந்த கால பாவங்கள் அனைத்தையும் விட்டு விலகி அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு தன்னை சொந்தமாக்கிக் கொள்கிறார். அதேபோன்று நாற்பது ஐம்பது ஆண்டு காலம் இறை நம்பிக்கையில் இருந்த ஒருவர் இறை மறுப்பிற்குரிய ஒற்றை வார்த்தையைக் கூறுவதின் மூலம் இறை நம்பிக்கையில் அவர் பலவீனம் கண்டு விடுகிறார்.

ஒருவர் எவ்வளவு பெரிய இஸ்லாத்தின் எதிரியாக இருந்தாலும் லாயிலாஹ இல்லலாஹ் என்ற ஒரு வார்த்தையை மொழிந்து விட்டால் அவர் ஈமானியச் சகோதரராக ஆகி விடுகிறார். போர்க்களத்தில் நமக்கு எதிரணியில் நின்று போர் புரிபவராக இருந்தாலும் அந்த வார்த்தையைக் கூறி விட்டால் அதற்குப் பிறகு அவரைக் கொல்வது கூடாது.

روى البخاري في صحيحه عن أسامة بن زيد رضي الله عنه قال: (بعثنا رسول الله صلى الله عليه وسلم إلى الحرقة من جهينة، قال: فصبَّحنا القوم فهزمناهم، قال: ولحقتُ أنا ورجل من الأنصار رجلًا منهم، قال: فلما غشيناه قال: لا إله إلا الله، قال: فكفَّ عنه الأنصاري، فطعنته برمحي حتى قتلته، قال: فلما قدمنا بلغ ذلك النبيَّ صلى الله عليه وسلم قال لي: يا أسامة، أقتلْتَه بعدما قال لا إله إلا الله؟ قال: قلت: يا رسول الله، إنما كان متعوذًا، قال: فقال: أقتلته بعد ما قال لا إله إلا الله؟ قال: فمازال يُكرِّرها حتى تمنيت أني لم أكن أسلمت قبل ذلك اليوم)، وفي رواية لمسلم: قال أسامة رضي الله عنه: (قلتُ يا رسول الله: إنما قالها خوفاً من السلاح، قال: أفلا شققتَ عن قلبه حتى تعلم أقالها أم لا، فمازال يكررها حتى تمنيت أني أسلمت يومئذ

உஸாமா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; எங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனாகுலத்தைச் சேர்ந்த ஹுரக்காஎனும் கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் அவர்களிடம் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச் சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்டோம். அப்போது அவர் லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்றார். எனவே, அவரை விட்டு அந்த அன்சாரி (நண்பர்) ஒதுங்கி கொண்டார். ஆனால், நான் என் ஈட்டியை அவரின் மீது பாய்ச்சி அவரைக் கொன்று விட்டேன். நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்த போது இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘உசாமா! லாயிலாஹ இல்லல்லாஹ்என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீங்கள் கொன்றீர்கள்?’ என்று கேட்டார்கள். நான் அவர் உயிரைப் காத்துக் கொள்ளவே (அவ்வாறு கூறினார்)என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீங்கள் கொன்றீர்கள்?’ என்று திரும்பத் திரும்ப (அதிருப்தியுடன்) என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அதற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவாமல் (இந்நிகழ்ச்சி) நடந்த பின்னால் இஸ்லாத்தைத் தழுவி) இருந்தால் நன்றாயிருக்குமே! என்று ஆசைப்பட்டேன். (புகாரி : 4269)

وفي رواية لمسلم: قال أسامة رضي الله عنه: (قلتُ يا رسول الله: إنما قالها خوفاً من السلاح، قال: أفلا شققتَ عن قلبه حتى تعلم أقالها أم لا

முஸ்லிமின் இன்னொரு அறிவிப்பில் அவர் வாளுக்கு பயந்து தான் அதைச் சொன்னார் என்ற போது அவர் அதை அப்படித்தான் சொன்னாரா இல்லையா என்று  நீ அறிந்து கொள்ளும் அளவுக்கு அவரின் உள்ளத்தை பிழந்தா பார்த்தாய் என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். (முஸ்லிம் ; 96)

மனிதனின் நாவுக்கு அல்லாஹ் கொடுத்த ஆற்றல் இது. நாவால் ஒரு உறவை இணைக்கவும் முடியும் ஒரு உறவை அறுக்கவும் முடியும்.நாவால் ஒருவனை இஸ்லாத்தில் இணைக்கவும் முடியும்.ஒருவனை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கவும் முடியும். அந்தளவு மிகப்பெரிய ஆற்றல் நாவுக்குண்டு.அதனால் அதை பயன்படுத்துவதில் அதை கையாளுவதில் மிக மிக கவனம் தேவை.

காரணம் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளும் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது.நாளை மறுமையில் நாம் வெளிப்படுத்திய வார்த்தைகளுக்கான விசாரனை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ﺇِﺫْ ﻳَﺘَﻠَﻘَّﻰ ﺍﻟْﻤُﺘَﻠَﻘِّﻴَﺎﻥِ ﻋَﻦِ ﺍﻟْﻴَﻤِﻴﻦِ ﻭَﻋَﻦِ ﺍﻟﺸِّﻤَﺎﻝِ ﻗَﻌِﻴﺪٌ . ﻣَﺎ ﻳَﻠْﻔِﻆُ ﻣِﻦ ﻗَﻮْﻝٍ ﺇِﻟَّﺎ ﻟَﺪَﻳْﻪِ ﺭَﻗِﻴﺐٌ ﻋَﺘِﻴﺪٌ

(மனிதனின்) வலப்பறத்திலும் இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் : 50 ; 17,18)

நாம் பேசுகின்ற விஷயங்கள் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதிவு செய்யப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது.

அளவில் சிறியது. விளைவில் பெரியது என்று கூறுவார்கள். இன்றைக்கு உலகில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மூலக் காரணம் இந்த நாவு தான். கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளாக இருக்கட்டும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளாக இருக்கட்டும்.இரு சகோதரர்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளாக இருக்கட்டும்.ஒரு சமூகத்திலே அல்லது ஒரு நாட்டிலே ஏற்படும் பிரச்சனைகளாக இருக்கட்டும். இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் ஏதோ வகையில் காரணமாக இருப்பது நாவு தான்.இன்றைக்கு நடக்கின்ற அதிகமான விவாகரத்துகளுக்கு காரணம் நாவு தான்.அவன் எதையாவது சொல்லியிருப்பான்.அல்லது இவள் எதையாவது சொல்லியிருப்பாள்.அல்லது மருமகள் மாமியாரைப் பார்த்து அல்லது மாமியார் மருமகளைப் பார்த்து ஏதையாவது சொல்லியிருப்பார்கள்.அது பெரிய பூதாகரமாக வெடித்து கடைசியில் தலாக்கில் வந்து நிற்கும்.குறிப்பாக பெண்களுக்கு மிகப்பெரிய கேடே அவர்களின் வாய் தான்.எதையாவது ஒன்றை பேசி வம்பை விலை கொடுத்து வாங்கி விடுவார்கள்.

يا مَعْشَرَ النِّساءِ، تَصَدَّقْنَ وأَكْثِرْنَ الاسْتِغْفارَ، فإنِّي رَأَيْتُكُنَّ أكْثَرَ أهْلِ النَّارِ فَقالتِ امْرَأَةٌ منهنَّ جَزْلَةٌ: وما لنا يا رَسولَ اللهِ، أكْثَرُ أهْلِ النَّارِ؟ قالَ: تُكْثِرْنَ اللَّعْنَ، وتَكْفُرْنَ العَشِيرَ

பெண்களே நீங்கள் ஸதகா செய்து கொள்ளுங்கள். அதிகமாக பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள்.நிச்சயமாக நான் உங்களை நரகத்தில் அதிகம் இருப்பதைப் பார்த்தேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அவர்களில் விபரமுள்ள ஒரு பெண்மனி நரகத்தில் அதிகமாக இருப்பதற்கு எங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது என்று கேட்டார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் நீங்கள் அதிகம் சாபமிடுகிறீர்கள். கணவனிடம் நன்றியில்லாமல் நடக்கிறீர்கள் என்றார்கள். (முஸ்லிம் ; 79)

நாவை என்றைக்குமே கவனமாக பயன்படுத்த வேண்டும். கவனமில்லாமல் நாம் சொல்லும் ஒரு வார்த்தை நம் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும்.மன்னர் ஒரு கனவு கண்டார்.அதற்கு விளக்கத்தை கேட்ட போது உங்களுக்கு ஆயுள் ரொம்ப குறைவு.உங்க பிள்ளைகளுக்கு முன்பே நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று ஒரு அமைச்சர் சொன்னவுடன் கோபத்தில் அவரைக் கொன்று விட்டான். இன்னொரு அமைச்சரிடம் அதே கனவுக்கு விளக்கத்தைக் கேட்ட போது, உங்கள் பிள்ளைகளுக்கு ஆயுள் ரொம்ப கெட்டி,உங்களுக்கு பிறகு நீண்ட காலம் அவர்கள் வாழுவார்கள் என்று சொன்னவுடன் சந்தோஷத்தில் பரிசுகளை அள்ளிக் கொடுத்தார். இதனால் தான், ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் என்று அனுபவசாலிகள் கூறுவார்கள்.

كانَا رجلانِ في بني إسرائيلَ مُتواخيينِ فكانَ أحدُهما يذنِبُ والآخَرُ مجتهدٌ في العبادةِ فكانَ لا يزالُ المُجتهدُ يرى الآخرَ على الذَّنبِ فيقولُ أقصِر فوجدَهُ يومًا على ذنبٍ فقالَ لهُ أقصِر فقالَ خلِّني وربِّي أبُعِثتَ عليَّ رقيبًا فقالَ واللَّهِ لا يغفرُ اللَّهُ لكَ أو لا يدخلُكَ اللَّهُ الجنَّةَ فقبضَ أرواحَهما فاجتمعا عندَ ربِّ العالمينَ فقالَ لهذا المُجتهدِ أكنتَ بي عالِمًا أو كنتَ على ما في يدي قادِرًا وقالَ للمذنبِ اذهب فادخلِ الجنَّةَ برحمتي وقالَ للآخرِ اذهبوا بهِ إلى النَّارِ قالَ أبو هريرةَ والَّذي نفسي بيدِهِ لَتكلَّمَ بكلمةٍ أوبَقت دنياهُ آخرتَهُ

பனூ இஸ்ரவேலர்களில் இரு சகோதரர்கள் இருந்தார்கள். அதிலே ஒருவர் அதிகம் வணக்கங்களில் ஈடுபடுபவர். இன்னொருவர் பாவம் செய்யக்கூடியவர். அவரை பாவத்தில் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த வணக்கசாலி அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பாவத்தை விட்டு விடு என்று சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு நாள் அவ்வாறு சொன்ன பொழுது என்னை விட்டு விடு. இது எனக்கும் என் இறைவனுக்கும் மத்தியில் உள்ளது. அதில் நீ தலையிட வேண்டாம். என்னை கண்காணிப்பதற்காகவா இறைவன் உன்னை அனுப்பி இருக்கிறான் என்று கூறினார். அதற்கவர் உன்னை இறைவன் மன்னிக்க மாட்டான் அல்லது சுவனத்தில் நுழைவிக்க மாட்டான் என்று கூறினார். அவ்விருவரின் உயிரும் கைப்பற்றப்பட்டது. இறைவன் மறுமையில் அவர்களை ஒன்று சேர்த்தான். அந்த வணக்கசாலியைப் பார்த்து என்னைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறாயா என் கையிலே உள்ளதின் மீது உனக்கு ஆற்றல் இருக்கிறதா என்று கூறி அவரை நரகத்திற்கு அழைத்துச் செல்லும்படி உத்தரவிட்டான். பிறகு அந்தப் பாவியை அழைத்து சுவனத்தில் நுழையச் செய்தான். (அஸ்ஸஹீஹுல் முஸ்னத் ; 1318)

உடல் உறுப்புக்கள் சரியாக முறையாக இயங்குவதற்கு உள்ளம் ஒரு மூலக்காரணம் என்றால் அதற்கு இன்னொரு காரணம் நம் நாவு.

"إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّمَا نَحْنُ بِكَ فَإِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا (ترمدي) "

ஒரு மனிதன் காலையில் எழுந்திருந்தால் அவனுடைய உறுப்புக்கள் அனைத்தும் நாவைப் பார்த்து பணிவாக எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். நிச்சயமாக நாங்கள் அனைவரும் உன்னைக் கொண்டு தான் இருக்கிறோம்.நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம் என்று சொல்கின்றன. (திர்மிதி ; 2407)

நாவு தான் ஒரு மனிதனுக்கு அடிப்படையானது. நாவும் அந்த நாவில் வெளிப்படும் வார்த்தைகளும் சரியாகி விட்டால் எல்லாம் சரியாகி விடும்.அது கெட்டு விட்டால் எல்லாம் கெட்டு விடும்.எனவே தான் அந்த நாவைப் பேணும்படி அதைப் பாதுகாக்கும் படி அதை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அல்லாஹ் உருவாக்கிய ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான அர்த்தம் இருக்கும் என்று நமக்கெல்லாம் தெரியும்.அந்த அடிப்படையில் நம் உடலில் மிக முக்கியமான நமக்கு மிக மிக அவசியமான உறுப்புக்கள் நாவு,கண்,காது. இதில் காதுகளையும் கண்களையும் இரண்டாட தந்கிருக்கிற இறைவன் ஒரே ஒரு நாவைத்தான் தந்திருக்கிறான்.காரணம் அதிகம் கேட்க வேண்டும். அதிகம் பார்க்க வேண்டும்,ஆனால் குறைவாகத்தான் பேச வேண்டும். மட்டுமல்ல காதுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் மிக மிகக்குறைவு.அதனால் காதுகளை மூடாமல் திறந்தே வைத்திருக்கிறான், கண்களால் ஏற்படும் ஆபத்துக்கள் கொஞ்சம் அதிகம். அதனால் கண்களை இமைகளைக் கொண்டு மூடியிருக்கிறான்,ஆனால் நாவால் ஏற்படும் ஆபத்துக்களும் விபரீதங்களும் ரொம்ப ரொம்ப அதிகம்.அதனால் நாவை பற்கள் உதடுகள் என்ற இரு பாதுகாப்பைக் கொடுத்து மூடியிருக்கிறான்.அல்லாஹ் மனித உடல் உறுப்புக்களில் ஏற்படுத்திய இந்த அமைப்பை வைத்தே நாவு எந்தளவு ஆபத்தானது என்பதை உலகிற்கு சொல்லி விட்டான்.

وعن عقبة بن عامر رضي الله عنه قال: قلت: يا رسول الله، ما النجاة؟ قال: (أمسك عليك لسانك، وليسعك بيتك، وابك على خطيئتك)[

உக்பா பின் ஆமிர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; அல்லாஹ்வின் தூதர் அவர்களே வெற்றி எது என்று கேட்டேன்.அப்போது நபி ஸல் அவர்கள் உன் நாவை உன் மீது தடுத்து வைத்துக் கொள்.உன் வீடு உனக்கு விசாலமாகட்டும்.நீ செய்த பாவத்தை நினைத்து அழு. (திர்மிதி ; 2406)

நம் வெற்றிக்கான வழியே நாவை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது தான்.இன்றைக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் ஒன்று இந்த நாவு தான்.கட்டிய மனைவியைக் கூட கட்டுப்படுத்திடலாம் போல ஆனால் நாவை நம்மால் கட்டுப்படுத்த முடிய வில்லை. அந்த நாவை கட்டுப்படுத்த முடியாமல் எத்தனை எத்தனை பாவங்களை அதன் மூலம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? நம்மிடம் இருப்பது ஒரு நாவு.ஆனால் எத்தனை வடிவங்களில் எத்தனை தோற்றங்களில் அது பரிணமித்துப் போய் நிற்கிறது?  பொய் பேசும் நாவு, புறம் பேசும் நாவு,கோள் சொல்லும் நாவு, ஏமாற்றும் நாவு, பிறரை ஏசும் நாவு,திட்டும் நாவு,பழிக்கும் நாவு,பொய் சத்தியம் செய்யும் நாவு,அல்லாஹ்வை கோபப்படுத்தும் நாவு,பிறரின் உள்ளங்களை காயப்படுத்தும் நாவு,பிறருடைய மான மரியாதைகளை சீர்குலைக்கும் நாவு,அவதூறுகளை கூறும் நாவு,இட்டுக்கட்டும் நாவு,தற்பெருமை பேசும் நாவு, இப்படி நாவின் மூலம் ஏற்படும் பாவங்களையும் குற்றங்களையும் அடுக்கிக கொண்டே போகலாம்.

அதனால் நாவைப் பாதுகாத்துக் கொள்ளும் படி இஸ்லாம் வலியுறுத்துகிறது. நாவைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அதன் மூலம் ஏற்படும் விபரீதங்களை ஆபத்துக்களை தடுக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். தேவையில்லாமல் பேசக்கூடாது, தேவைக்கு அதிகமாகவும் பேசக்கூடாது, வியாபாரத்தில் பொருட்களை அளப்பது போல் நம் நாவை அளந்து பேசிக் கொண்டாலே முக்கால் வாசி பிரச்சனைகள் குறைந்து விடும்.

عن زيد بن أسلم قال: دخل على أبي دجانة وهو مريض، وكان وجهه يتهلل. فقيل: ما لوجهك يتهلل؟ فقال: ما من عملي شيء أوثق عندي من اثنتين: أما إحداهما فكنت لا أتكلم فيما لا يعنيني، وأما الأخرى: فكان قلبي للمسلمين سليمًا

ஹள்ரத் அபூதுஜானா ரலி அவர்கள் நோயுற்றிருந்தார்கள். அவர்களின் முகம் பிரகாசமாக இருந்தது. அப்போது இந்த நோயிலும் உங்கள் முகம் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறதே என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு விஷயங்களை விட என்னிடத்தில் மிகச் சிறந்த அமல் வேறெதுவுமில்லை. ஒன்று எனக்கு தேவையில்லாத விஷயத்தில் நான் பேசமாட்டேன். இன்னொன்று முஸ்லிம்களைப் பொருத்த வரை அவர்கள் விஷயத்தில் என் உள்ளம் ஆரோக்கியமானதாகவே இருக்கும். (

ஸிஃபதுஸ் ஸஃப்வா ;  1/485)

أحد السلف لما أراد أن يطلق زوجته لأمر ما فقيل له: لم تطلقها؟ قال: أنا لا أهتك ستر زوجتي. ثم طلقها بعد ذلك فقيل له: لم طلقتها؟ قال: ما لي وللكلام عن امرأة صارت أجنبية عنى فمن حسن إسلام المرء تركه ما لا يعنيه

முன்னோர்களில் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய நாடிய போது, ஏன் விவாகரத்து செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர், என் மனைவியின் ரகசியத்தை வெளிப்படுத்த மாட்டேன் என்று கூறி விட்டார். பிறகு மனைவியை பிரிந்து விட்டார். அப்போது உங்கள் மனைவியை ஏன் விவாகரத்து செய்தீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர், இப்போது அவள் என்னை விட்டும் பிரிந்து அன்னிய பெண்ணாக மாறி விட்டாள். எனவே அவளைப்பற்றி பேசுவதற்கு எனக்கு என்ன இருக்கிறது என்று கூறி விட்டு, தேவையில்லாத விஷயங்களை விட்டு விடுவது ஒரு மனிதனுடைய அழகான இஸ்லாமிய பண்புகளில் உள்ளது என்ற நபிமொழியை நினைவுபடுத்தினார்.

எனவே நாவு விஷயத்தில் ரொம்ப கவனம் தேவை.மார்க்கம் தடுத்த விஷயங்களை பேசக்கூடாது.தேவையில்லாத விஷயங்களை பேசக்கூடாது, நமக்கு தெரியாத விஷயங்களைப் பேசக்கூடாது,குறிப்பாக பிறரை புன்படுத்தும் பிறர் மனதைக் காயப்படுத்தும் எந்த விஷயத்தையும் பேசக்கூடாது.முடிந்த வரை பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  

وقال سليمان بن داود عليهما السلام: إن كان الكلام من فضة فالسكوت من ذهب

பேசுவது வெள்ளியைப் போன்றது என்றால் மவ்னமாக இருப்பது தங்கத்தைப் போன்றது என்று ஸுலைமான் அலை அவர்கள் கூறுவார்கள்.

 

 

 

9 comments:

  1. அற்புதமான அறிவூட்டல்

    கடைசி பஞ்ச் மிக மிக அருமை

    எல்லாம்வல்ல இறைவா எங்களை
    நாவின் தீமைகளை விட்டும் காப்பாயாக

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்! மிகச் சிறந்த ஆழிய சிந்தனை! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தங்களுடைய கல்விச் சேவைகளை கபூல் செய்தருள்வானாக!!

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ் அற்புதமான அழகிய உரை என்னுடைய தாழ்மையான கருத்து இந்த பயானை புதன்கிழமையே கொற்றவை செய்து அனுப்பினால் ஜும்ஆ விற்கு பயான் செய்ய இலகுவாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்

      Delete
  4. மிகச் சிறந்த ஆக்கம்

    ReplyDelete
  5. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete