Friday, February 11, 2022

ஹிஜாபும் 3 ம்

 


கடந்த சில நாட்களாக நம் நாட்டில் பரபரப்பாக பேசப்படும் பொருளாக சமூக ஊடகங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கும் சொல்லாக இருப்பது ஹிஜாப் என்ற வார்த்தையும் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையும் தான். 

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய சகோதரிகளை அந்தக் கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தி இதுபோன்று மத அடையாளங்களோடு கல்லூரிக்கு வரக்கூடாது என்று சொல்லி அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தது. உள்ளே அனுமதிக்கா விட்டாலும் பரவாயில்லை. இது நாங்கள் உயிருக்கு மேலாக மதிக்கிற ஷரீஅத்தின் சட்டம். ஷரீஅத்தின் சட்டத்தில் நாங்கள் எதற்காகவும் யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டோம். இது பன்முகத்தன்மை கொண்ட நாடு, வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. இந்த நாட்டில் ஒவ்வொருவரும் அவரவர் மத விருப்பப்படி வாழ்வதற்கும் வழிபடுவதற்கும் அனுமதி உண்டு.இது எங்களின் உரிமை. எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி ஒரு மாத காலமாக கல்லூரியின் கேட்டுக்கு வெளியே நின்று கொண்டு தங்கள் உரிமைக்காக அந்த சகோதரிகள் போராடினார்கள். அவர்களை ஹிஜாபோடு உள்ளே செல்ல அனுமதித்தால் நாங்கள் காவித் துண்டுகளோடு வருவோம் என்று காவித்துண்டை அணிந்து கொண்டு தீய சக்திகளின் தூண்டுதலால் சங்பரிவார கும்பலின் உந்துதலால் மாணவர்கள் நம் இஸ்லாமிய சகோதரிகளை எதிர்த்து அவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். இந்த பிரச்சனை இன்றைக்கு உலக அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் மந்தியா மாவட்டத்தில் முஸ்கான் கான் என்ற சகோதரி தன் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த போது காவித்துண்டை அணிந்து கொண்டு ஒரு கும்பல் அந்த சகோதரிக்கு எதிராக கோஷம் எழுப்பியது. ஒரு கும்பலே தன்னை எதிர்த்து கோஷம் எழுப்பிய போதும் தன்னை நெருங்கி வந்த போதும் கொஞ்சம் கூட அச்சப்படாமல் பதட்டப்படாமல் அல்லாஹு அக்பர் என்று சொல்லி அந்த சகோதரி வீர முழக்கமிட்டார். ஒரிரு தினங்களாக ஊடகங்கள் அனைத்திலும் ஹிஜாப் என்ற சொல்லும் அல்லாஹு அக்பர் என்ற சொல்லும் ஆக்கிரமித்து நிற்கிறது. இன்றைக்கு உலக அளவில் மிகப்பெரும் பேசும் பொருளாக விவாதிக்கும் பொருளாக இவ்விரண்டும் தான் இருக்கிறது.

இந்த நேரத்தில் மூன்று விஷயங்களை முஸ்லிம் சமூகம் விளங்க வேண்டும்.

1, சத்தியத்தை விளங்க வைப்பதற்குத்தான் இதுமாதிரியான எதிர்மறையான சம்பவங்களை உலகத்தில் அவ்வப்போது இறைவன் நடத்துகிறான். எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போது தான் சரியான கருத்துக்கு உயிரோட்டம் ஏற்படும்.சில வருடங்களுக்கு முன்னால் நபி ஸல் அவர்களை கேலிச்சித்திரம் வரைந்து கார்ட்டூன் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு தான் நபியின் கண்ணியம் என்ன நபியின் மகத்துவம் என்ன என்பதை இந்த உலகம் புரிய ஆரம்பித்தது. கடந்த வருடம் நபியின் பலதார மணம் குறித்து ஒருவன் கேவலமாக பேசினான். அந்த நிகழ்விற்குப் பிறகு நபியின் தூய்மையான வாழ்க்கை குறித்து அதிகம் பேசப்பட்டு நபியின் தூய்மையான வாழ்க்கையை இந்த உலகம் புரிந்து கொண்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வேளான் குறித்த ஒரு மசோதாவை மத்திய அரசாங்கம் கொண்டு வந்தது. அதனால் டெல்லியில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த நிகழ்விற்குப் பிறகு விவசாயிகள் என்றால் யார் அவர்கள் படும் கஷ்டங்கள் என்ன என்பதை இந்த உலகம் உணர்ந்து கொண்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு CAA,NRC,NPR  என்று சொல்லி குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நாடு முழுக்க மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதில் மிகப்பெரிய நன்மை நம் இஸ்லாமிய சமூகத்திற்கு கிடைத்தது. என்றைக்குமே ஒன்று சேராத நம் சமூகம் அந்த பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்தது. அனைத்து இயக்கங்கள் அந்த கொள்கையைச் சார்ந்தவர்கள் அனைத்து சிந்தனையை உடையவர்கள் என ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் ஒரே அணியின் கீழ் ஒன்று சேர்த்தது அந்த குடியுரிமை திருத்த சட்டம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. முத்தலாக் தடைச்சட்டம் என்ற பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்த பிறகு தான் தலாக் என்றால் என்ன தலாக்கின் விபரீதம் என்ன என்பதை நம் சமூகம் உணர ஆரம்பித்தது.கொரோனா என்ற ஒரு முஸீபத் வந்த பிறகு தான் ஆரோக்கியத்தின் மீது நமக்கு அதிகம் கவனம் ஏற்பட்டிருக்கிறது. மரணத்தின் மீது அதிகம் சிந்தனை வந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் ஹிஜாப் என்ற இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த பிறகு ஹிஜாபின் மகத்துவம் என்ன ஹிஜாபை இஸ்லாம் ஏன் கடமையாக்கியது என்ற உண்மையை உலகம் புரிந்திருக்கிறது.ஹிஜாப் என்பது பெண் அடிமைத்தனம் என்று சொன்னவர்கள் கூட ஹிஜாப் அவசியம் என்பதை உணர்ந்து விட்டார்கள். நம் தொப்புல் கொடி உறவுகளாக இருக்கக்கூடிய சகோதரர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு ஹிஜாபை அணிவித்து நமக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.இஸ்லாமியப் பெண்களுக்கு ஹிஜாப் அணிய தடை விதித்தால் நாங்கள் ஹிஜாபோடு களத்திற்கு வந்து விடுவோம் என்று மாற்று மத சகோதரிகள் சொல்கின்ற அளவிற்கு ஹிஜாபைப பற்றிய புரிதல் மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.வணக்கத்திற்காகவும் இறைவனை மேன்மைப் படுத்துவதற்காகவும் நாம் பயன்படுத்துகின்ற ஒரு வார்த்தை இன்றைக்கு பாசிசத்திற்கு எதிரான ஒரு சொல்லாக அவர்களை மிரல வைக்கும் ஒரு சொல்லாக மாறியிருக்கிறது.தன் வாழ்நாளில் ஒரு நாள் கூட அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்லாத ஒருவன் வாயால் அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன் என்ற வார்த்தையை அல்லாஹ் சொல்ல வைத்து விட்டான். உண்மையில் அவன் மிகப்பெரியவன் தான். ஒரு எதிர்மறையான விஷயத்தின் பின்னனியில் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும் என்பதற்கு மிகப்பெரிய சான்று தான் இந்த ஹிஜாப்.

சொந்த மண்ணில் தீனுல் இஸ்லாமை நிலை நிறுத்த முடியாத அளவு, சொந்த மண்ணில் அல்லாஹ்வை வணங்க முடியாத அளவு தடுக்கப்பட்டு நபி ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் அங்கிருந்து வெளியேறும் நிலை வருத்தத்திற்குரியதாக இருந்தாலும் அங்கிருந்து அவர்கள் மதீனா வர வில்லையென்றால் தீனுல் இஸ்லாம் இவ்வளவு தூரம் வளர்ச்சியை அடைந்திருக்காது. எந்த சமூகம் அவர்களை விரட்டியடித்ததோ அதே சமூகத்தை ஹிஜ்ரத்திலிருந்து சரியாக எட்டு ஆண்டுகளில் அல்லாஹ் அவர்களுக்கு முன்னால் மண்டியிட வைத்தான். இது இறைவனின் ஏற்பாடு. 

2, உலகத்தின் மற்ற சமயத்தவர்கள் கூட ஹிஜாபைக் குறித்து பேச ஆரம்பித்து விட்ட, ஹிஜாபை மாண்பை புரிய ஆரம்பித்து விட்ட இந்த தருணத்தில் நம் இஸ்லாமிய சமூகம் இன்னும் அதன் மாண்பை சரியாக விளங்காமல் அதில் கவனக்குறைவாகத்தான் இருக்கிறது. மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் நிகாஹ் போன்ற வைபவங்களில் நம் இஸ்லாமியப் பெண்கள் இன்னும் சரியாக ஹிஜாபை கடைபிடிப்பதில்லை என்பது கசப்பான உண்மை.  

ஹிஜாப் என்பது பெண்கள் வெளியில் போகும் போது போட்டுக் கொள்ளும் ஒரு போர்வை மட்டுமே என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி பெண்கள் எங்கிருந்தாலும் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குப் பெயர் தான் ஹிஜாப் ஆகும். ஒரு பெண் வீட்டிலிருந்து வெளியே சென்றாலும் அல்லது மற்றவர்கள் அவர்களின் வீடுகளுக்கு வந்தாலும் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கிறாள்.

இன்றைக்குள்ள பெண் சமூகம் தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வதில் தான் அழகு இருக்கிறது என்று விளங்கியிருக்கிறது. ஆனால் அவர்களின் உண்மையான அழகும் சிறப்பும் அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வதில் தான் இருக்கிறது.  

عن علي رضي الله عنه قال: كنا عند رسول الله صلى الله عليه وآله فقال: أخبروني أي شئ خير للنساء، فعيينا بذلك كلنا حتى تفرقنا، فرجعت إلى فاطمة عليها السلام فأخبرتها بالذي قال لنا رسول الله صلى الله عليه وآله وليس أحد منا علمه ولا عرفه، فقالت ولكني أعرفه: خير للنساء أن لا يرين الرجال ولا يراهن الرجال، فرجعت إلى رسول الله صلى الله عليه وآله فقلت: يا رسول الله سألتنا أي شئ خير للنساء خير لهن أن لا يرين الرجال ولا يراهن الرجال، فقال: من أخبرك فلم تعلمه وأنت عندي؟ فقلت: فاطمة، فأعجب ذلك رسول الله صلى الله عليه وآله وقال: ان فاطمة بضعة مني. أقول: وتقدم ما يدل على ذلك، ويأتي ما يدل عليه

பெண்களிடத்தில் எது சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது நாங்கள் பதில் தெரியாமல் மௌனமாக இருந்தோம். நான் உடனே ஃபாத்திமா ரலி அவர்களிடம் விஷயத்தைச் சொன்ன போது அதற்கு அவர்கள், பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்க்கக்கூடாது. அவர்கள் தங்களைப் பார்ப்பதற்கும் அனுமதிக்கக்கூடாது. அது தான் பெண்களிடத்தில் சிறந்தது என்றார்கள். நானே அதை நபியிடம் வந்து சொன்னேன். முன்பு தெரியாது என்று சொன்னீர்கள். இப்போது எப்படி தெரிந்தது என்று கேட்டார்கள். உங்கள் மகள் ஃபாத்திமா ரலி கூறினார்கள் என்று சொன்னேன். நிச்சயமாக ஃபாத்திமா என்னில் ஒரு பகுதி என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (மனாகிபு அமீரில் முஃமினீன்)

அவர்கள் சொன்னதைப் போன்றே வாழ்ந்தும் காட்டினார்கள் ஃபாத்திமா ரலி அவர்கள். வாழும் காலத்தில் யாரும் பார்த்து விடாதவாறு தன்னைப் பாதுகாத்தார்கள். அவர்களின் மரண நேரம் நெருங்கிய சமயம் அஸ்மா பின்த் உமைஸ் ரலி அவர்கள் அவர்களை சந்திக்க வந்தார்கள். அப்போது ஃபாத்திமா ரலி அவர்கள் கவலையோடு இருந்ததைப் பார்த்து காரணம் கேட்ட போது, நான் இறந்து என் உடல் துணியால் சுற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படும் போது என் உடலின் அமைப்பை அந்நிய ஆண்கள் பார்ப்பார்களே என்பதை நினைத்து கவலைப்படுகிறேன் என்றார்கள்.(அந்த நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவரின் மீது கஃபன் துணி சுற்றப்பட்டு ஒரு மரப்பலகையில் வைத்து தூக்கி செல்லப்படும். உடல் மறைக்கப்படும். ஆனால் உடலின் அமைப்பு தெரியும் சூழ்நிலை இருந்தது) அதனைக் கேட்ட அஸ்மா பினத் உமைஸ் ரலி அவர்கள் அந்த நேரத்தில் அபீசீனிய நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த உடலை முழுவதும் மறைக்கக்கூடிய ஒரு பெட்டியை செய்து கொண்டு வந்து காட்டினார்கள். அதனைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்த ஃபாத்திமா ரலி அவர்கள் என்னை மறைத்த உன் குறைகளை அல்லாஹ் மறைப்பானாக என்று துஆ செய்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இறந்த உடலை முழுவதும் மறைக்கும் வண்ணம் தூக்கிச் செல்லும் நடைமுறை அன்றிலிருந்து தான் தொடங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வாழும் போது மட்டுமல்ல, தான் இறந்த பிறகும் கூட தன் உடல் அந்நிய ஆண்களின் பார்வையில் பட்டு விடக்கூடாது என்ற சிந்தனை அவர்களின் மிக உயர்வான பேணுதலின் எடுத்துக் காட்டாகும்.     

சகோதர சமயத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஹிஜாபைப் போட்டு அழகு பார்க்க ஆரம்பித்து விட்ட இந்த காலத்தில் நம் பிள்ளைகளுக்கு அதன் அவசியத்தை உணர்த்தி அதன் பாதுகாப்பை விளங்க வைத்து சிறு வயதிலிருந்தே அந்த பேணுதலான வாழ்விற்கு அவர்களைப் பழக்க வேண்டும்.  

ذهبت صبية وهي ابنة خمس سنين في حاجة إلى أمير المؤمنين عمر بن الخطاب وكان ثوبها يجر وراءها شبرا أو يزيد فأراد عمر أن يمازحها فرفع ثوبها حتى بدت قدماها فقالت: مه ""يعنى دعه واتركه"" أما إنك لو لم تكن أمير المؤمنين لضربت وجهك

ஐந்து வயது சிறுமி உமர் ரலி அவர்களிடத்தில் வந்தது. கீழாடை நீளமாக இருந்ததால் அது தரையோடு இழுத்துக் கொண்டு சென்றது. அதைப் பார்த்த உமர் ரலி அவர்கள் விளையாட்டாக அந்த ஆடையை சற்று தூக்கிப் பிடித்தார்கள். அதனால் அந்த சிறுமியின் கால் பாதங்கள் வெளியே தெரிந்தது. உடனே அந்த சிறுமி விட்டு விடுங்கள் நீங்கள் மட்டும் அமீருல் முஃமினீனாக இல்லையென்றால் உங்கள் கன்னத்தில் அறைந்திருப்பேன் என்றாள்.

விளையாட்டுப் பருவமாக இருக்கிற அந்த வயதிலிருந்தே அவ்ரத் என்றால் என்ன ஹிஜாப் என்றால் என்ன என்றெல்லாம் தெளிவாக சொல்லி பேணுதலாக வளர்த்தார்கள் அன்றைக்கு வாழ்ந்த பெருமக்கள். இன்றைக்கு அந்த மாதிரியான பேணுதலையும் ஒழுக்கத்தையும் சிறு வயதில் நாம் கொடுக்கத் தவறியதால் தான் இன்றைக்குள்ள பெண் சமூகம் ஒழுக்கமில்லாமல் இருக்கிறது.

3, காவித்துண்டை அணிந்து கொண்ட ஒரு பெரும் கும்பல் தன்னை நெருங்கி வந்த போதும் தனி ஒரு பெண்ணாய் நின்று கொண்டு நெஞ்சுறத்தோடு அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழுக்கத்தை மொழிந்தாள் கர்நாடகாவைச் சார்ந்த அந்த முஸ்கான் கான். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இருக்கிற இந்த நாட்டில் பெண்களைச் சுற்றிலும் ஏராளமாக ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கிற இந்த காலகட்டத்தில் வீரமும் நெஞ்சுறமும் நம் பிள்ளைகளுக்கு நிச்சயம் தேவை.

قال بعض الحكماء: "اعلَم أن كل كريهة تُرفَع أو مَكْرُمة تُكتَسب، لا تتحقَّق إلا بالشجاعة،

துன்பங்கள் நீக்கப்படுவதும் கண்ணியம் கிடைப்பதும் வீரத்தைக் கொண்டு தான் என்று கூறுவார்கள்.

وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.

(அல்குர்ஆன் : 3:139)


يقول أنس - رضي الله عنه -: "كان رسول الله - صلى الله عليه وسلم - أحسن الناس، وأجود الناس، وأشجعَ الناس،

மக்களில் மிகப்பெரும் உபகாரியாகவும் மிகப்பெரும் கொடை வள்ளலாகவும் மிகப்பெரும் வீரராகவும் நபி ஸல் அவர்கள் இருந்தார்கள். (முஸ்லிம் ; 2307)

ورجل كان في سريَّة، فَلقوا العدوَّ، فهُزِموا، فأقبَل بصدره؛ حتى يُقتلَ، أو يَفتحَ الله له

ஒரு மனிதர் படை ஒன்றில் இருந்தார்; அந்தப் படை எதிரிகள் சந்தித்து தோல்வியுற்றது. ஆனால் அந்த மனிதர் அவர்களை தனிநபராக எதிர் கொண்டு இறுதியில் வீரமரணமடைந்தார் அல்லது வெற்றிகண்டார். மூன்று மனிதர்களை இறைவன் நேசிக்கிறான். அதில் இவரும் ஒருவர். (முஸ்னத்  அஹ்மத் ; 21355)

நபியின் காலத்தில் வீரப்பெண்மனியாக அடையாளம் காணப் பட்டவர்களில் ஒருவர் உம்மு அம்மாரா ரலி அவர்கள்.எந்தப்போர்களம் நடந்தாலும் அதில் ஸஹாபாக்களோடு கலந்து கொண்டு அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வருதல், காயத்திற்கு மருந்து போடுதல், உணவு தயாரித்தல் போன்ற காரியங்களைச் செய்வார்கள். உஹத் போர்க்களத்தில் எதிரிகள் சூழ்ந்து கொண்ட அந்த நேரத்தில் தன் கையில் வாளை ஏந்திக் கொண்டு கூட்டத்தை கிழித்துக் கொண்டு நபிக்கு அருகில் சென்று அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் எவரையும் நெருங்க விடாமல் எதிரிகளைத் தடுத்து நபியைப் பாதுகாத்தார்கள். இதனால் அவர்களின் உடம்பில் 13 கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டது.

ويُروى عن عمر - رضي الله عنه - أنَّه قال: "سَمِعتُ رسولَ الله - صلَّى الله عليه وسلَّم - يقول يومَ أحد: ((ما التفتُّ يَمينًا ولا شمالاً إلاَّ وأنا أراها تقاتل دوني))؛ يعني: أم عمارة.)  

என் வலப்பக்கம் இடப்பக்கம் எங்கு திரும்பினாலும் அங்கே உம்மு அம்மாரா நின்று கொண்டு எதிரிகளோடு போர் செய்து என்னைப் பாதுகாத்தார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (இப்னு ஸஃது ; 8/415)

இஸ்லாம் அந்த வீரத்தை ஊக்குவிக்கிறது.இறைவன் விரும்பும் குணங்களில் வீரமும் ஒன்று. வாழ்க்கையின் அனைத்து காரியங்களுக்கும் தைரியமும் வீரமும் மிக அவசியம். குறிப்பாக நம் பெண் பிள்ளைகளுக்கு தைரியத்தைக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

إن الشجاعة وقاية، والجُبن مَقتلةٌ

வீரம் பாதுகாக்கும்; கோழைத்தனம் கொல்லும் என்று கூறுவார்கள். வீரத்தையும் தைரியத்தையும் கொடுத்து நம் பிள்ளைகளை எதிர் காலத்தின் வீர மங்கைகளாக உருவாக்குவோம். ஒவ்வொரு வீட்டிலும் முஸ்கான் கானைப் போன்று நெஞ்சுறம் கொண்ட பெண்கள் வேண்டும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக

 

 

7 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்... அருமையான பதிவு... தொடர்ந்து தங்களின் பதிவை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்... அல்லாஹ் தங்களுடைய இந்த சேவையை கபூல் செய்வானாக! ஆமீன்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமை மிக அருமை அல்லாஹ் உங்கள் கல்வி ஆற்றலில் மென்மேலும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு நண்பா தங்களின் ஆக்கம் அருமை ஜஸாகல்லாஹு கைரா

    ReplyDelete
  4. ماشاء الله
    تبارك الله
    அருமையான பதிவு! தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! اللهم آمين

    ReplyDelete
  5. உங்களுடைய கல்வியை இறைவன் பொருந்திக்கொள்வானாக

    அருமையான காலத்திற்கேற்ப சிறந்த பதிவு فتبارك الله حضرت

    ReplyDelete
  6. ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
    துஆ செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஜஸாக்குமுல்லாஹ் அஹ்ஸனல் ஜஸா

    ReplyDelete