Friday, February 18, 2022

ஒருங்கிணைந்து செயல்படுவோம்

 

மனித வாழ்க்கைகுத் தேவையான அழகான வாழ்வியல் நெறிமுறைகளை இஸ்லாம் மனித சமூகத்திற்கு கொடையாகத் தந்திருக்கிறது. இஸ்லாம் தந்திருக்கிற அந்த ஈடில்லா உயர்வான வாழ்வியல் நெறிகளைக் கொண்டு தான்  ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை அழகாக்கவும் செம்மையாக்கவும் முடியும். அவ்வாறு இஸ்லாம் வழங்கியிருக்கிற உயர் நெறிகளில் ஒன்று தான் ஒற்றுமை.  

  

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ((إن الله يرضى لكم ثلاثا ويكره لكم ثلاثا أن تعبدوه ولا تشركوا به شيئاً وأن تعتصموا بحبل الله جميعاً ولا تفرقوا وأن تناصحوا من ولاه الله أمركم


மூன்று விஷயங்களை அல்லாஹ் உங்களிடத்தில் விரும்புகிறான். 1, அவனையே வணங்க வேண்டும்.அவனுக்கு யாரையும் இணையாக ஆக்க வேண்டாம் 2, அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள் 3, உங்கள் காரியத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு நலவை நாடுவது. (முஸ்லிம் ; 1715)


وروي عن ابن مسعود رضي الله عنه قوله: "يا أيها الناس عليكم بالطاعة والجماعة، فإنها حبل الله الذي أمر به، وإن ما تكرهون في الجماعة والطاعة هو خير مما تحبون في الفرقة"..

இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் கூறுகின்றார்கள் ;‘மக்களே! தலைமைக்குக் கட்டுப் படுங்கள். கூட்டமைப்புடன் இணைந்திருங்கள். இவையிரண்டும் பேணும்படி அல்லாஹ் வலியுறுத்திய அவனது கயிராகும். கட்டுப்படுவதிலும், ஜமாஅத்துடன் இணைந்திருப்பதிலும் நீங்கள் வெறுக்கக் கூடிய விஷயங்கள், பிரிவினையில் நீங்கள் விரும்பக் கூடியதை விட சிறந்ததாகும்.” 


ஜமாஅத்துடன் இணைந்திருக்கும் போது சில விஷயங்கள் நமக்கு பிடிக்காமல் போகலாம். அதிர்ப்தியாக தெரியலாம். நமக்கு முக்கியத்துவம் தரப்படாமல் போகலாம். இருந்தாலும் அதில் தான் நன்மை இருக்கிறது என்று கூறுகிறார்கள். இன்றைக்கு ஒரு ஒருங்கிணைப்பை விட்டும் சிலர் பிரிந்து போவதற்கு காரணம், அங்கே அவர்கள் கண்ட அதிர்ப்தியும் தனக்கு அங்கீகாரம் தரப்பட வில்லை என்பதும் தான். இதனாலே இன்றைக்கு இந்த சமூகம் சிதறிக் கிடக்கிறது. ஆனால் ஒன்று பட்டு செயல்படுவதில் தான் நன்மை இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.  


நபித்தோழர்களிடத்தில் அந்த ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இருந்தது. 

عَنِ الْأَوْزَاعِيِّ رحمه الله تعالى قَالَ 

" كَانَ يُقَالُ : خَمْسٌ كَانَ عَلَيْهَا أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالتَّابِعُونَ لَهُمْ بِإِحْسَانٍ 

لُزُومُ الْجَمَاعَةِ ، وَاتِّبَاعُ السُّنَّةِ ، وَعِمَارَةُ الْمَسْجِدِ ، وَتِلَاوَةُ الْقُرْآنِ ، وَالْجِهَادُ فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ 

ஸஹாபாக்களும் அவர்களை அடுத்து வந்த தாபிஈன்களும் ஐந்து விஷயங்களைக் கடைப் பிடிப்பவர்களாக இருந்தார்கள். 1, ஒருங்கிணைப்பு. 2, நபியின் சுன்னத்துகளைப பின்பற்றுவது. 3, மஸ்ஜிதுகளைக் கட்டுவது. 4, குர்ஆன் ஓதுவது. 5, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது என்று அவ்ஜாயீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (ஹுல்யதுல் அவ்லியா) 


நபி ஸல் அவர்கள் வஃபாத்தான உடனேயே ஸஹாபாக்கள் தங்களுக்கான கலீஃபாவை தேர்வு செய்வதற்கு முற்பட்டார்கள். அன்ஸாரிகளும் முஹாஜிர்களும் சேர்ந்து மஷ்வரா செய்து நபியவர்கள் வஃபாத்தான அடுத்த நாள் அல்லது அதற்கு அடுத்த நாளே ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் கலீஃபாவாக நியமிக்கப்பட்டு விட்டார்கள். ஸஹாபாக்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள். எனவே தான் நபி ஸல் அவர்கள் இறந்த சோகத்தைக் கூட மறந்து உடனுக்குடன் அடுத்த தலைவரை நியமிக்க ஆயத்தமாகி விட்டார்கள் என்று மார்க்கம் தெரியாத, ஸஹாபாக்களின் கண்ணியம் விளங்காத மூடர்கள் இந்நிகழ்வை கொச்சைப் படுத்துவார்கள். ஆனால் உடனுக்குடன் கலீஃபாவை தேர்வு செய்ய முற்பட்டதற்கான மிக முக்கியமான காரணம் மக்களுக்கிடையே பிளவுகள் ஏற்படாமல் தடுப்பதற்குத்தான்.

ஒருவர் தேர்வு செய்யப்பட்டு விட்டால் அனைவரும் ஏற்றுக் கொண்டு விடுவார்கள். பிழவுகளும் தடுக்கப்படும். சமூகம் பிளவு பட்டு விடக் கூடாது என்பதில் நபித்தோழர்கள் காட்டிய அக்கறையைத் தான் இது எடுத்துக் காட்டுகின்றது.  


ஸஹாபாக்களிடத்தில் அன்றைக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தது. சிந்தனையிலும் ஆய்விலும் ஸஹாபாக்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டிருந்தார்கள்.ஆனால் அவர்கள் அணி அணியாகப் பிரிந்து நிற்க வில்லை. சில்லறைக் காசாகச் சிதறி விடவில்லை. மாறாக, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருந்தார்கள். எதிரிகளை ஓரணியில் நின்று சந்தித்தார்கள்.


 قَالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ الأحْزَابِ: لا يُصَلِّيَنَّ أحَدٌ العَصْرَ إلَّا في بَنِي قُرَيْظَةَ فأدْرَكَ بَعْضُهُمُ العَصْرَ في الطَّرِيقِ، فَقَالَ بَعْضُهُمْ: لا نُصَلِّي حتَّى نَأْتِيَهَا، وقَالَ بَعْضُهُمْ: بَلْ نُصَلِّي، لَمْ يُرِدْ مِنَّا ذلكَ، فَذُكِرَ ذلكَ للنبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَلَمْ يُعَنِّفْ واحِدًا منهمْ.

அஹ்ஸாப் போர்க்களத்தின் நாளில் நபி ﷺ அவர்கள் ஸஹாபாக்களிடம் நீங்கள் அனைவரும் பனூகுரைளாவில் தான் அஸர் தொழ வேண்டும் என்றார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு முன்பே அஸர் நேரம் வந்து விட்டது. அவர்களில் சிலர், நபியின் உத்தரவு அங்கே சென்று தொழ வேண்டும் என்பது தான். எனவே நாங்கள் இங்கே தொழ மாட்டோம் என்று கூறி பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சிலர், அஸர் வக்துக்கு அந்த இடத்திற்குப் போய் விட வேண்டும் என்பது தான் நபியவர்களின் அந்த வார்த்தைக்கான பொருள், இடையில் தொழக்கூடாது எனபதல்ல என்று கூறி இடையிலேயே அஸரைத் தொழுத்தார்கள்.இதைப் பற்றி நபி அவர்களிடம் சொல்லப்பட்ட போது அவர்கள் யாரையும் கடிந்து கொள்ள வில்லை. இரண்டையுமே வரவேற்றார்கள். (புகாரி ; 4119)


இது ஒரு உதாரணம் தான். இப்படி எண்ணற்ற விஷயங்கள் ஸஹாபாக்களிடம் இருந்தது.ஆனால் இந்த கருத்து வேறுபாடுகளும் கருத்து வேற்றுமைகளும் அவர்களை இரு அணிகளாக பிரிக்க வில்லை.அவர்களுக்கு மத்தியில் பிரிவினையையோ பிழவுகளையோ ஏற்படுத்த வில்லை. 


ஆய்வில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது. ஒருவரின் ஆய்வு இன்னொருவரின் ஆய்விற்கு வேறுபடும். அதை இஸ்லாம் வரவேற்கிறது. அதனால் தான் இரண்டையும் ﷺ அவர்கள் அங்கீகரித்தார்கள். ஆனால் சில நேரங்களில் பிரிவுக்கு காரணமாகி விடக்கூடாது என்பதற்காக அந்த கருத்து வேறுபாடுகளில் தங்களின் கருத்தையும் ஸஹாபாக்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.


وقد ذكر ابن حجر: كلام العلماء في تفسير اجتهاده هذا، وكان ابن مسعود يرى القصر ركعتين لكونه صلى مع النبي عليه الصلاة والسلام بمنى ركعتين، ومع أبي بكر رضي الله عنه ركعتين، ومع عمر رضي الله عنه ركعتين، وكان يقول: ليت حظِّي من أربع ركعات ركعتان متقبلتان (كما روى ذلك البخاري ومسلم)، ومع ذلك صلى في منى خلف عثمان أربعاً، فقيل له في ذلك: كيف تصلي أربعا وأنت ترى القصر ركعتين، فقال كلمته الشافية الكافية (كما في سنن أبي داود): الخلاف شر.

உஸ்மான் ரலி அவர்கள் கலீஃபாவாக இருக்கும் போது மினாவில் லுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளை நான்கு நான்கு ரக்அத்துக்களாகவே தொழுது வந்தார்கள். மினாவில்  இரண்டாக சுருக்கித் தொழுவது தான் சுன்னத்தாகும். அவ்வாறிருந்தும் உஸ்மான் ரலி அவர்கள் நான்காக தொழுததற்கு பல காரணங்களை இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.


1. அவர்கள் மக்காவில் திருமணம் முடித்தார்கள். எனவே,  மக்காவில் தான் பயணி அல்ல என அவர்கள் கருதினார்கள்.


2. புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள் இருந்தார்கள். மினாவில் நான்கு ரக்அத்துக்களை இரண்டிரண்டாக தொழுதால் அந்த தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கையே இரண்டு தான் என தவறாக எண்ணி விடுவார்கள். எனவே தான் அவர்கள் நான்காக தொழுதார்கள்.


ஆனால் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் மினாவில் இரண்டாக தொழ வேண்டும் என்ற கருத்தில் தான் இருந்தார்கள். இருந்தாலும் உஸ்மான் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களும் நான்காகவே தொழுதார்கள். நீங்கள் நபியுடனும் அபூபக்கர் ரலி மற்றும் உமர் ரலி அவர்களுடனும் இரண்டாகத்தான் தொழுதீர்கள். ஆனால் இப்போது நான்காக தொழுகிறீர்களே என்று  கேட்கப்பட்டது. அப்போது இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கருத்து வேற்றுமை தீங்காகும் என்று கூறினார்கள்.


அந்த நேரத்தில் இரண்டு தான் தொழ வேண்டும் என்று சொல்லி இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் பிரிந்திருந்தால் அவர்களுக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் உருவாகியிருக்கும். சமூகம் பிளவு பட்டிருக்கும். அந்தப் பிளவின் காரணமாக பல்வேறுபட்ட தீமைகள் உருவாகியிருக்கும். எனவே தான் மார்க்க நலன் நாடி அந்த நேரத்தில் அவர்கள் விட்டுக் கொடுத்துச் சென்றார்கள்.  


எனவே எக்காரணத்தைக் கொண்டும் சமூகம் பிழவுபட்டு விடக்கூடாது என்பதற்காக நபித்தோழர்கள் மிக மிக கவனமாக செயல்பட்டார்கள். பிரிந்து விடாமல் அனைவரும் ஒற்றுமையாக பயணித்தார்கள்.அதனால் தான் அவர்கள் வீரத்தில் சிறந்து விளங்கினார்கள். பலம் மிக்க சமூகமாக காட்சி தந்தார்கள். பல நாடுகளை மட்டுமல்ல எண்ணற்ற மக்களின் இதயங்களையும் வென்றார்கள். அவர்கள் வெற்றி கொண்ட நாடுகளின் படை பலத்துடன் ஒப்பிடும் போது அந்த நபித்தோழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு தான்.என்றாலும் 30 வருடங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் கிழக்கிலும் மேற்கிலும் எண்ணற்ற நாடுகளை கைப்பற்றி அங்கே இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்கள்.


இன்றைக்கு ஆசியாவில்- 46 நாடுகள்; ஆப்பிரிக்காவில்- 30 நாடுகள் ; ஐரோப்பாவில் – 4 ; அமெரிக்காவில் – 2 என மொத்தம்  82  முஸ்லிம் நாடுகள் இருக்கிறது.   இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 17 விழுக்காடு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் உலக மக்கட்தொகையில் கால் பகுதி முஸ்லிம்கள். அவ்வாறு இருந்தும்,  அரசியல், அதிகாரம், அறிவியல், இராணுவம், ஆயுதம்,பொருளாதாரம், வளர்ச்சி இப்படி எல்லாவற்றிலும் குறிப்பிட்டுச் சொல்லும் இடத்தில் முஸ்லிம்களோ முஸ்லிம் நாடுகளோ இல்லை.


உலகத்தின் கால் பகுதியைப் பிடித்திருக்கிற நம்மால் ஏன் எதிலும் காலூன்ற முடிய வில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் அன்றைக்கு அந்த ஸஹாபாக்களிடம் இருந்த இறை நம்பிக்கையும் ஈமானும் நம்மிடம் இல்லை என்று உள்ரங்கமான ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் வெளிப்படையான காரணம் என்னவென்றால் நம்மிடம் ஏற்பட்டிருக்கும் பிரிவினைகளும்,பிழவுகளும்,சண்டை சச்சரவுகளும், உட்பூசல்களும் தான்.



ஒரு குடும்பமாக இருந்தாலும் ஒரு சமூகமாக இருந்தாலும் அல்லது ஒரு நாடாக இருந்தாலும் பிரிவினை இல்லாமல் பிழவுகள் இல்லாமல் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையோடு பயணிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.அப்போது தான் அந்த குடும்பத்திலும் அந்த சமூகத்திலும் அந்த நாட்டிலும் அமைதி நிலவும். அவைகளுக்கு பலமும் ஏற்படும்.


وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ


அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கட்டுப்படுங்கள்.கருத்து வேற்றுமை கொள்ளாதீர்கள். (அவ்வாறு கருத்து வேற்றுமை கொண்டால்) நீங்கள் கோழையாகி விடுவீர்கள்.உங்கள் பலம் போய் விடும். பொறுமையை மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 8 ; 46)


பலம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடுகளும் பிரிவினைகளும்  நுழைந்து விட்டால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறி விடும். ஏற்கனவே பலவீனம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடுகளும் பிரிவினைகளும்  தலை தூக்கினால் அந்தச் சமுதாய அமைப்பு அழிந்தே போகும். 


முஸ்லிம்கள் அன்றைக்கு கருத்து வேற்றுமை கொள்ளாமல் ஒரே அணியில் நின்று ஒருங்கிணைந்து செயல்பட்டு எதிரிகளை எதிர் கொண்டதால் அவர்கள் எதிரிகளை விட மிகவும் சொற்பமாக இருந்தும் பத்ர் போரில் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான்.


உஹுதுப் போரில் அவர்களிடையே சின்ன தடுமாற்றம் ஏற்பட்டு அந்த ஒருங்கிணைப்பிலிருந்து சற்று விலகியதால் அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்காமல் போனது. 


இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். அல்லாஹ்வின் அருளும் ஆசியும் முஸ்லிம்கள் ஜமாஅத் எனும் கூட்டமைப்பில் இருக்கும் போது தான் கிடைக்கின்றது. அந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றிடும் போது முஸ்லிம்கள் அழிவுக்கு ஆளாகின்றனர்.


தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.


இந்த தேர்தலில் 2.50 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளார்கள். தமிழகம் முழுவதும் மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பரீசிலனையின் போது பல்வேறு காரணங்களுக்காக 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர். தற்போது 12,500 க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு மொத்தம் 57,600 க்கும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பெரும்பாலான வார்டுகளில் களத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 முதல் 15 வரை உள்ளது. பல வார்டுகளில் 20-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். 

ஒற்றுமை தான் சமூகத்தின் பலம். பிழவுகள் சமூகத்தை சிதைத்து விடும் என்பதற்கு எண்ணற்ற வழிகாட்டுதல்களும் நிதர்சனமான நிகழ்வுகளும் சான்றாக இருந்தும் நம் சமூகம் அனைத்திலும் பிழவு பட்டிருப்பதைப் போல் இந்த தேர்தலிலும் பிழவு பட்டுத்தான் இருக்கிறது.கட்சிகளின் சின்னத்திலும் சுயேட்சையாகவும் ஒரே வார்டில் எண்ணற்ற முஸ்லிம்கள் போட்டிக்கு போட்டியாக நின்று கொண்டிருக்கிறார்கள். இதனால் நம் எதிரிகள் சொற்ப ஓட்டுக்களைப் பெற்று இலகுவாக வெற்றி பெற்று விடுகிறார்கள். இதனை நாம் பல தேர்தல்களில் கண்கூடாக பார்த்து விட்டோம். இருந்தாலும் நாம் திருந்தாமல் அதே தவறைத்தான் இப்போதும் செய்திருக்கிறோம். 


எதிரிகளுடைய மிகப்பெரிய திட்டமே நமக்குள் பிளவை ஏற்படுத்துவது தான். மறைமுகமாக நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி அதன் வழியாக அவர்கள் காயை நகர்த்தி விடுகிறார்கள்.  தங்கள் இலக்கை பிடிப்பதற்கு அவர்கள் மேற்கொள்ளும் யுக்தி இது தான். ஆனால் அதை புரியாமல் நாம் இன்றைக்கு சின்னாபின்னமாகி சிதறி கிடக்கின்றோம்.


நாம் எப்போதும் ஒன்று சேர மாட்டோம். பிளவுபட்டுத் தான் கிடப்போம் என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த தைரியத்தில் தான் ஹிஜாப் குறித்து இவ்வளவு பெரிய சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்த போதும் உலக நாடுகள் அனைத்தும் அதற்காக கண்டனக் குரலை எழுப்பி கொண்டிருக்கிற போதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிப்போம் என்று துணிச்சலாக சொல்கிறார்கள் அந்த அளவிற்கு நம் பலவீனத்தை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

தேர்தலுக்கு ஒரு நாளே இருக்கிற இந்த நேரத்தில் இனி ஒன்றும் செய்ய இலயாது. ஆனால் ஓட்டு போட இருக்கும் நாம் நம் ஓட்டுக்களை அங்கும் இங்கும் சிதற விடாமல் சமுதாய அக்கறை கொண்ட ஒருவரை சமுதாயத்தின் பிரதிநிதியாக தேர்வு செய்ய வேண்டும். இதனால் நாம் வெற்றி பெறுவது மட்டுமல்ல, நம் எதிரியை தோற்கடிப்பதற்கும் அது தான் வழி. நாம் வெற்றி எவ்வளவு முக்கியமோ அதை விட எதிரி வெற்றி பெறக்கூடாது என்பது மிகவும் முக்கியம் இதை உணர்ந்து நாம் தேர்தலை சந்திக்க வேண்டும்.வல்ல ரஹ்மான் நமக்கு வெற்றியைத் தருவானாக.


நம் ஓட்டு யாருக்கு 

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எழுதப்பட்ட என்னுடைய கட்டுரை இது. விரும்பினால் இந்த கட்டுரையையும் படித்துக் கொள்ளலாம்.

2 comments:

  1. ماشاء الله تبارك الله الحمد لله

    சரியான நேரத்தில் பொருத்தமான தலைப்பு!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete