Thursday, March 10, 2022

காத்திருப்பதும் நன்மையே

 


இன்றைக்கு நாம் நம் வாழ்வில் எத்தனையோ விஷயங்களை எதிர் பார்க்கிறோம், எத்தனையோ விஷயங்களுக்காக காத்திருக்கிறோம். காத்திருத்தல் என்பது எல்லோரின் வாழ்விலும் நடக்கிற தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. ஒன்று மற்றவருக்காக நாம் காத்திருப்போம். அல்லது நமக்காக மற்றவரை காத்திருக்கச் செய்வோம்.

மனித வாழ்வில் காத்திருக்கும் விஷயங்கள் நிறைய உண்டு.பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள்  பஸ்ஸுக்காகவோ, ட்ரைனுக்காகவோ காத்திருக்கிறார்கள், ஸ்கூலில் பிள்ளைகளுக்காக அட்மிஷன் போட்டவர்கள் opening date காக காத்திருக்கிறார்கள்,  பரிட்சை எழுதியவர்கள் ரிஸல்டுக்காக காத்திருக்கிறார்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் திருமண நாளுக்காக காத்திருக்கிறார்கள். திருமணம் முடித்த பெண்மனிகள் கர்ப்பம் தரிப்பதற்காக காத்திருக்கிறார்கள்,, கர்ப்பம் தரித்தவர்கள் டெலிவரிக்காக காத்திருக்கிறார்கள். இப்படி வாழ்வில் ஏதோ ஒரு விஷயத்திற்காக அனைவரும் காத்திருக்கிறோம். அவ்வாறு காத்திருக்கிற விஷயங்களில் நமக்கு இன்பத்தை கொடுக்கும் விஷயங்களும் உண்டு, நமக்கு துன்பத்தை கொடுக்கும் விஷயங்களும் உண்டு. நமக்கு கலகலப்பை தரும் விஷயங்களும் உண்டு, நமக்கு கலக்கத்தை தரும் விஷயங்களும் உண்டு.

திருமணம்  பேசப்பட்டு தேதி குறிக்கப்பட்டு அந்த நாளை எதிர் பார்த்து காத்திருக்கிற ஒரு ஆண்மகனுக்கு அந்த காத்திருப்பு இன்பத்தைத் தரும். இறக்கும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகமாகி விடும் என்று சொல்வார்கள்.அந்த அடிப்படையில் மரண தேதி குறிப்பிடப் பட்டவனுக்கு அந்த காத்திருப்பு பெரும் கவலையைத் தரும். எக்ஸாம் எழுதி விட்டு ரிஸல்டுக்காக காத்திருப்பவனுக்கு அந்த எதிர்பார்ப்பு ஒரு விதமான பதட்டத்தைத் தரும். பிரசவத்திற்காக காத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அது ஒரு அச்சம் கலந்த மகிழ்ச்சியைத் தரும். இப்படி ஒவ்வொரு காத்திருப்புக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு விளைவுகள் உண்டு.

ஆனால் வாழ்க்கையில் சில காத்திருப்புகள் நமக்கு நன்மையைப் பெற்றுத்தரும். நம் பாவங்களை அழித்து நமக்கு உயர்வைப் பெற்றுத்தரும்.அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்தரும், ஈருலகத்திலும் சிறந்த பாக்கியங்கள் கிடைக்க காரணமாக அமையும்.காத்திருப்பு நமக்கு இன்பத்தைத் தருகிறதா இல்லை துன்பத்தை தருகிறதா கலகலப்பை தருகிறதா இல்லை கலக்கத்தை தருகிறதா என்று யோசிப்பதை விட பார்ப்பதை விட எது நமக்கு நன்மையைத் தருகிறது? எது நம் ஈருல வாழ்விற்கும் பயன் தருகிறது? எது நம் பாவங்கள் அழிவதற்கும் நம் நன்மைகள் அதிகரிப்பதற்கும் நம் அந்தஸ்து உயர்வதற்கும் அல்லாஹ்வின் நெருக்கம் கிடைப்பதற்கும் காரணமாக இருக்கிறது என்று சிந்திப்பது தான் ஒரு முஸ்லிமுக்கு அழகு. அது தான் ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை புத்திசாலித்தனம்.

இஸ்லாம் அதுமாதிரியான காத்திருப்பைத் தான் வரவேற்கிறது, விரும்புகிறது,

عنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم قَالَ: "أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو الله بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟" قَالُوا: بَلَى. يَا رَسُولَ اللّهِ! قَالَ: "إِسْبَاغُ الْوُضُوءِ علَى الْمَكَارِهِ. وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسْاجِدِ. وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ. فَذلِكُمُ الرِّبَاطُ" رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தான் கட்டுப்பாடுகளாகும்(முஸ்லிம் ; 251)

ஒரு தொழுகையை எதிர்பார்த்து நாம் அமர்ந்திருக்கும் அந்த காத்திருப்பு நம் பாவங்களை அழித்து நம்மை தூய்மைப்படுத்தும்.

عن أبي أيوب عن عبد الله بن عمرو قال صلينا مع رسول الله صلى الله عليه وسلم المغرب فرجع من رجع وعقب من عقب فجاء رسول الله صلى الله عليه وسلم مسرعا قد حفزه النفس وقد حسر عن ركبتيه فقال أبشروا هذا ربكم قد فتح بابا من أبواب السماء يباهي بكم الملائكة يقول انظروا إلى عبادي قد قضوا فريضة وهم ينتظرون أخرى

நாங்கள் நபியுடன் மக்ரிப் தொழுகையைத் தொழுதோம். தொழுகை முடித்து சிலர் அவர்களின் இல்லத்திற்குத் திரும்பினார்கள். சிலர் அடுத்த தொழுகைக்காக அங்கு காத்திருந்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் மூச்சிறைக்க வேகமாக வந்தார்கள். நீங்கள் சுபச்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவன் வானத்தின் கதவுகளில் ஒன்றை திறந்து விட்டான். என் அடியார்களைப் பாருங்கள். ஒரு கடமையை நிறைவு செய்து விட்டு அடுத்த கடமைக்காக காத்திருக்கிறார்கள் என்று மலக்குகளிடம் பெருமை பாராட்டுகிறான். (இப்னுமாஜா ; 801)

அதனால் தான் நம் முன்னோர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் தந்தார்கள். தொழுகைக்காக காத்திருப்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதினார்கள்.

عن عطاء بن السائب قال: دخلنا على أبي عبد الرحمن السلمي وهو يقضي -يعني: ينازع- في المسجد، فقلنا له: لو تحولت إلى دارك وفراشك فإنه أوفر، فقال لهم: حدثني فلان عن فلان أن النبي صلى الله عليه وسلم قال: (لا يزال أحدكم في صلاة ما دام في مصلاه ينتظر الصلاة، والملائكة تقول: اللهم اغفر له، اللهم ارحمه)، فأنا أريد أن أموت في مسجدي وأنا في انتظار الصلاة، أليس من السبعة الذين يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: رجل قلبه معلق بالمساجد؟

அதாஃ பின் ஸாயிப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; நாங்கள் பள்ளிக்கு வந்தோம். அங்கே அபு அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ ரஹ் அவர்கள் தூக்க மிகுதியால் மிகவும் சிரமத்தோடு பள்ளியில் அமர்ந்திருந்தார்கள். ஏன் இவ்வளவு சிரமத்துடன் அமர்ந்திருக்கிறீர்கள். வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கலாமே என்று கேட்டோம். அதற்கவர்கள், ஒருவர், தான் தொழுத இடத்தில் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் வரை மலக்குகள் இவரை மன்னிப்பாயாக! இவரின் மீது அருள் புரிவாயாக! என்று கூறுகிறார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நான் தொழுகையை எதிர் பார்த்தவனாக இருக்கும் நிலையில் இந்த மஸ்ஜிதில் மரணிப்பதைத்தான் விரும்புகிறேன். அர்ஷின் நிழலைப் பெறுகின்ற அந்த ஏழு நபர்களில் நானும் ஒருவனாக ஆக வேண்டாமா என்று கேட்டார்கள். (அல்மதாலிபுல் ஆலியா)

عن الربيع بن خثيم قال: أتيت أويساً القرني، فوجدته قد صلى الصبح وقعد، فقلت: لا أشغله عن التسبيح، فلما كان وقت الصلاة -يعني: بعد شروق الشمس- قام فصلى حتى الظهر، فلما صلى الظهر قام فصلى حتى العصر، فلما صلى العصر قعد يذكر الله إلى المغرب، فلما صلى المغرب قام يصلي حتى العشاء، فلما صلى العشاء اتكأ على سارية في المسجد ثم أغفى إغفاءة ثم أفاق وهو يقول: اللهم إني أعوذ بك من عين نوامة،

ரபீஃ  பின் கைஸம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; உவைஸுல் கர்னீ ரஹ் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் ஃபஜ்ர் தொழுது விட்டு திக்ரில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருந்தார்கள். அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று நான் அமர்ந்து விட்டேன். இஷ்ராக் நேரம் வந்ததும் எழுந்து லுஹர் வரை தொழுதார்கள். பின்பு லுஹர் முடித்து அஸர் வரை தொழுதார்கள்.  பின்பு அஸர் தொழுது விட்டு மக்ரிப் வரை திக்ரில் ஈடுபட்டார்கள். பின்பு மக்ரிப் தொழுகை முடிந்ததும் இஷா வரை தொழுதார்கள். பின்பு இஷா தொழுதார்கள். அவர்களுக்கு தூக்கம் மிகைத்தது. பள்ளியின் தூணில் சாய்ந்து சிறிது நேரம் தூங்கி விட்டார்கள். பிறகு கண் விழித்ததும் அதிகம் தூங்கக்கூடிய இந்த கண்ணிலிருந்தும் திருப்தியடையாத வயிற்றிலிருந்தும் நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினார்கள். அவர்களின் இந்த உயர்ந்த நிலையைப் பார்த்து அவர்களுக்காக நான் துஆ செய்தேன் என்று ரபீஃ  பின் கைஸம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (தபகாது இப்னு ஸஃத்)

எனவே தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளுக்காக காத்திருப்பது நமக்கு சிறந்த பலனைத்தரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யும்படி அல்லாஹ் உத்தரவிட்டான். நபி ஸல் அவர்கள் ஸஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்கள். அத்தனை ஸஹாபாக்களும் மதீனாவை நோக்கி கிழம்பிப் போனார்கள். கடைசியாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மக்காவில் இருக்கிறார்கள்.குறிப்பாக ஹள்ரத் அபூபக்கர் ரலி மக்காவில் இருக்கிறார்கள்.அவர்கள் நபியிடம் வந்து எப்போது மதீனா போக வேண்டும் எப்போது மதீனா போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

وأقام رسول الله صلى الله عليه وسلم بمكة بعد أصحابه من المهاجرين ينتظر أن يؤذن له في الهجرة ، ولم يتخلف معه بمكة أحد من المهاجرين إلا من حبس أو فتن ، إلا علي بن أبي طالب ، وأبو بكر بن أبي قحافة الصديق رضي الله عنهما ، وكان أبو بكر كثيرا ما يستأذن رسول الله صلى الله عليه وسلم في الهجرة ، فيقول له رسول الله صلى الله عليه وسلم : لا تعجل لعل الله يجعل لك صاحبا فيطمع أبو بكر أن يكونه .

ஹிஜ்ரத்திற்கான உத்தரவு வந்தவுடன் அனைவரும் மதீனாவிற்கு கிழம்பி விட்டார்கள். தங்கடம் உள்ளவர்களைத் தவிர. அவர்களோடு ஹழ்ரத் அலி ரலி அவர்களும் ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்களும் மக்காவில் இருந்தார்கள். அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் நபியவர்களிடம் அதிகமாக ஹிஜ்ரத்திற்காக அனுமதி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அப்போது ஸல் அவர்கள் நண்பரே அவசரம் வேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு சிறந்த பயணத்தோழரைத் தருவான் என்று கூறினார்கள். (ஸீரது இப்னு ஹிஷாம்)

ஹிஜ்ரத்திற்கு எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களை நபியின் இந்த வார்த்தை கட்டிப் போட்டது.உம்மோடு வருவதற்கு சிறந்த தோழரை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த சிறந்த தோழர் அற்புதமான தோழர் நபியாகத்தான் இருக்கும் என்பதை ஓரளவுக்கு கணித்து விட்டார்கள்.எனவே நபியின் அடுத்த உத்தரவிற்காக காத்திருக்கிறார்கள். மட்டுமல்ல தன்னிடம் இருந்த அழகான இரண்டு ஒட்டகங்களுக்கு நல்ல தீனி போட்டு அதை பயணத்திற்காக தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக அடுத்து தன்னை அழைக்க நபி ஸல் அவர்கள் எப்போதும் வருகை தந்து விடலாம் என்பதற்காக தன் வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்து காத்திருந்தார்கள். நபி ஸல் அவர்கள் ஒரு நாள் வந்து என்னோடு வாருங்கள் என்று சொன்ன போது ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களின் ஆனந்த கண்ணீருக்கு அளவே கிடையாது.

மஸ்ஜிதுன் நபவியைச் சுற்றிலும் அதை ஒட்டி அன்றைக்கு ஸஹாபாக்களுடைய வீடுகள் இருந்தது.ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்து இலகுவாக பள்ளிக்கு வருவதற்காக மஸ்ஜிதுன் நபவியில் தங்களுக்கென்று ஒரு வாசலை ஏற்படுத்தி யிருந்தார்கள். பள்ளியின் கண்ணியத்திற்கு இது அழகல்ல என்று சொல்லி நபி ஸல் அவர்கள் தங்கள் இறுதி காலத்தில் அத்தனை வாசல்களையும் அடைத்து விடும் படி உத்தர விட்டார்கள். ஆனால் ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் வாசலை மட்டும் விட்டு விட்டார்கள். 

لا يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ بَابٌ إِلاَّ سُدَّ، إِلاَّ بَابَ أَبِي بَكْرٍ"

அபூபக்கரின் வாசலைத் தவிர அனைத்து வாசலையும் அடைத்து விடுங்கள். (ஃபத்ஹுல் பாரீ)

அன்றைக்கு ஹிஜ்ரத்தின் போது தனக்காக தன் வாசலை திறந்து காத்துக் கொண்டிருந்த அபூபக்கர் ரலி அவர்களுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் வருகின்ற வாசலை மட்டும் அடைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.

பெருமானாருக்காக காத்திருந்த காரணத்தினால் அவர்கள் பெற்ற பாக்கியத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.ஹிஜ்ரத் பயணத்தின் போது ஒவ்வொருவரும் தங்களுக்கு தோதுவான நபர்களோடு, தங்கள் மனைவிமார்களோடு, குழந்தைகளோடு, குடும்பத்தோடு, நண்பர்களோடு, சகோதரர்களோடு, சொந்தங்களோடு, இப்படி சென்ற போது நபி ஸல் அவர்களோடு ஹிஜ்ரத் செல்லும பாக்கியத்தை அபூபக்கர் ரலி அவர்கள் பெற்றார்கள் என்றால் நபிக்காக அவர்கள் காத்திருந்ததால் கிடைத்த பாக்கியம். ஒரு உண்மையான நண்பனை பயணத்தில் தான் அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வார்கள்.அந்த பயணத்தோழராக நபி ஸல் அவர்களே அவர்களுக்கு கிடைத்தார்கள். காரணம் அவர்களுடைய அந்த எதிர் பார்ப்பும் காத்திருப்பும் தான்.

اللَّهُمَّ كان لي أبَوانِ شيْخان كبيران، وكنت لا أغْبق قبلهما أهلاً ولا مالاً، فنأى بي في طلب شيءٍ يومًا فلم أرُح عليهما حتَّى ناما، فحلبتُ لهُما غبوقَهما فوجدتُهما نائمَين، وكرهت أن أغبقَ قبلَهما أهلاً أو مالاً،فلبثْتُ والقدح على يدي أنتظِر استيقاظَهُما حتَّى برق الفجْر، فاستيْقَظا فشرِبَا غبوقَهما، اللَّهُمَّ إن كنتُ فعلتُ ذلك ابتِغاء وجْهِك، ففرِّج عنَّا ما نحن فيه من هذه الصَّخرة، فانفرجت شيئًا

இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்ப வில்லை. அவர்களுக்கு முன்பு என் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் அந்தப் பாலைப் புகட்டுவதற்கும் எனக்கு விருப்பமில்லை. எனவே என் கையில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு விடியும் வரை அவர்கள் கண் விழிப்பதற்காக காத்திருந்தேன். அவர்கள் காலையில் எழுந்திருத்து அதைக் குடித்தார்கள். இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டும் இந்தப் பாறையை அகற்று  எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.

பெற்றோரின் பசியைப் போக்குவதற்காக அவர் காத்திருந்த அந்த நிகழ்வை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். எனவே அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான்.

இன்று எத்தனையோ விஷயங்களுக்காக காத்திருக்கிறோம். பஸ்ஸுக்காக, டிரைனுக்காக, ஸ்கூலில் அட்மிஷன் போடுவதற்காக, அரசாங்க சலுகைகளை பெற்றுக் கொள்வதற்காக, இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால் நல்ல விஷயங்களுக்காக காத்திருக்க வேண்டும்.

புனித மாதமான ரஜப் நிறைவு பெற்று ஷஃபான் தொடங்கயிருக்கிறது. அருள் நிறைந்த ரமலானை சந்திக்கயிருக்கிற நாம் அதை ஆவலோடு எதிர் பார்க்க வேண்டும்.அதன் அருளைப் பெற்றுக் கொள்ள ஆர்வத்தோடு காத்திருக்க வேண்டும்.இன்முகத்தோடு அதை வரவேற்க வேண்டும்.அந்த நினைவோடு காத்திருக்க வேண்டும். அதுவும் நிச்சயம் நமக்கு நன்மைகளைப் பெற்றுத்தரும் இன்ஷா அல்லாஹ். எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் இந்த காத்திருப்பை நன்மைக்குரியதாக ஆக்குவானாக! நம் அந்தஸ்துகள் உயர்வதற்குக் காரணமாக ஆக்குவானாக!

ஒரு விஷயத்திற்காக காத்திருக்கிறோம் என்பதற்கு பொருள் என்னவென்றால் அதற்காக நாம் தயாராக இருக்கிறோம் என்பதாகும். பஸ்ஸுக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்றால் எப்போது பஸ் வந்தாலும் அதில் ஏறி பயணம் செய்வதற்கு தயாராக இருக்கிறார் என்று பொருள். அந்த வகையில் ரமலானை எதிர் பார்த்து காத்திருக்கிற நாம் அதற்காக நம்மை எவ்வாறு தயார் படுத்தி வைத்திருக்கிறோம் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு முஸ்லிம் ரமலானுக்காக எவ்வாறு தயாராக வேண்டும் என்பதைக் குறித்து இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் பார்க்கலாம்.

 

9 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான நினைவூட்டல்

    ReplyDelete
  2. ماشاء الله بارك الله حضرت

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பயனுள்ள கல்வி ஞானங்களை வழங்கி பேரருள் புரிவானாக 🤲

    ReplyDelete
  4. ماشاء الله تبارك الله

    ReplyDelete
  5. Masha Allah nalla visayangal hazrath

    Next bayan kuripu eppothu varum

    ReplyDelete