الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا ولا تسرفوا
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.
மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் உணவுக்கட்டுப்பாடு என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இன்று நோய்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதனால் நமது ஆரோக்கியமும் குறைந்து கொண்டே வருகிறது. இஸ்லாம், நோயில்லாமல் நலமாக வாழ நமக்கு வழிகாட்டியுள்ளது. பொதுவாக உண்ணக்கூடிய உணவு முறையில் கட்டுப்பாடு இல்லாததே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என இன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த உண்மையை இஸ்லாம்,1400 வருடங்களுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டது.
வாழ்வின் எல்லா விதிகளும் குர்ஆனில் இருக்கிறது என்றால், ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய மருத்துவ மூல விதி எதுவும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா? என்று கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷாவிடம் மருத்துவர் ஒருவர் கேட்டார். அப்போது அந்த அவையில் இருந்த அலி இப்னு ஹுஸைன் அல்வாகிதீ என்பவர் எழுந்து, உடல் நலத்திற்கான {Golden Rule} தங்க விதியொன்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்றார். அது என்னவென்று கேட்ட போது, “உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள்” என்ற திருமறைக் குர்ஆனின் [7-31] வசனத்தைப் படித்துக் காட்டினார்.கேட்டதும் அசந்து போன அந்த மருத்துவர்,இது ஒரு அற்புதமான விதி என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றார்.
இவ்வாறே உங்கள் நபியின் வாழ்வில் ஆன்மீக போதனைகள் நிறைந்திருப்பதை போல், உடல் நலம் தொடர்பான ஏதாவது மூலவிதிகள் இருக்கிறதா? என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கும் ஆம்..! என பதிலளித்த அலி இப்னு ஹுஸைன் அவர்கள் ; “இரைப்பைதான் எல்லா வியாதிகளுக்கும் அடிப்படை. நீங்கள் உங்களின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுங்கள். பத்தியம் சிகிச்சையை விட மேலானது.” என்ற நபியின் வாக்கை எடுத்துக் கூறியதும் ஆச்சரியப்பட்டுப் போனார் அந்த மருத்துவர்.
உணவு அதிகமாக உட்கொள்வதே எல்லா வியாதிகளுக்கும் மூலக்காரணம் என்பதை இப்போது எல்லா மருத்துவமும் உறுதி செய்கிறது. எந்த ஒரு இயந்திரமும், கூடுதல் சுமை அதில் ஏற்றப்படும் போது அது பழுதாகி செயலிழந்து விடும் என்பது யதார்த்தம். இரைப்பையும் அவ்வாறு தான். குறைந்த அளவு உணவை அதற்குக் கொடுத்தால் அதை ஜீரணமாக்கி நல்ல பலனைத்தரும். அதிக உணவை அதில் அடைத்தால் ஆபத்துதான் ஏற்படும்.
நாயகம் ஸல் அவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பசியாற சாப்பிட்டதில்லை. ஒரு நாள் சாப்பிட்டால் மறுநாள் பட்டினியாக இருப்பார்கள். இரண்டு தினங்கள் சாப்பிட்டால் மூன்றாவது நாள் பட்டினியோடு இருப்பார்கள். சாப்பிட்டாலும் குறைவாக சாப்பிடு வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவார்கள்.இதுவெல்லாம் இப்போது மருத்துவ உலகம், நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் பரிந்துரைகளாகும்.
ஒரு அரசர் தனது நாட்டிலுள்ள சிறந்த மருத்துவர் ஒருவரை மதீனத்து மக்களுக்கு சிகிச்சையளிக்க அனுப்பி வைத்தார்.அப்போது மதீனாவில் வேறு எந்த மருத்துவரும் இல்லாததால் தனக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்ப்புடன் சென்ற அந்த மருத்துவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனெனில், அங்கு அவரிடம் சிகிச்சை பெற ஒரு நோயாளியும் வரவில்லை.
எனவே அவர், நாயகம் ஸல் அவர்களின் சமூகம் வந்து, இங்கு நான் வந்ததே எனக்கு இங்கு அதிகம் வரவேற்பு கிடைக்கும் எனறு நினைத்துத்தான். ஆனால் இங்கே யாருமே சிகிச்சைக்கு வரவில்லையே என முறையிட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள், இங்குள்ள மக்கள் பசிக்கும்போது சாப்பிடுவார்கள். இன்னும் கொஞ்சம் பசி இருக்கும் போதே உணவிலிருந்து தங்களது கரத்தை எடுத்து விடுவார்கள். இதனால் இங்கு நோயாளிகள் ரொம்பக்குறைவு" என்று சொன்னார்கள்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் அறிமுகம் செய்த ஆரோக்கியத்திற்கான இந்த இரகசியத்தைப் பார்த்து மருத்துவ உலகம் இன்றும் அதிசயித்து நிற்கிறது. ஆகவே உணவைக் குறைப்போம்.நோயை ஒழிப்போம்.வளமோடு வாழ்வோம். அல்லாஹ் அருள் புரிவானாக வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment