Monday, March 7, 2022

மார்க்க கல்வி

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் மார்க்க கல்வியின் மகிமை என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ! நாம் மார்க்கக் கல்வியைப் படிப்பதற்காக வந்திருக்கிறோம். முதலில் நாம் இந்த மார்க்க கல்வியின் சிறப்பை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு பொருளின் தரம் என்னவென்று தெரிந்தால் தான் அதன் மீது ஒரு மதிப்பு வரும், மரியாதை வரும்,அதை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும், வீணடித்து விடக் கூடாது என்ற எண்ணம் வரும்.

தங்கத்தின் மதிப்பை நாம் விளங்கி இருக்கிறோம். பணத்தின் மதிப்பை நாம் விளங்கி இருக்கிறோம். நிலத்தின் மதிப்பை நாம் விளங்கி இருக்கிறோம். அதனால் தான் அந்த தங்கத்தின் மீதும் பணத்தின் மீதும் நிலத்தின் மீதும் நமக்கு மரியாதையும் ஆசையும் வருகிறது. மதிப்பை விளங்க வில்லையென்றால் அதன் மீது ஒரு ஆசையும் நமக்கு ஏற்படாது. அந்த அடிப்படையில் மார்க்க கல்வியின் சிறப்பை முதலில் தெரிந்தால் தான் அதன் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் ஆசையும் வரும்,அதை கற்றுக் கொள்வதில் இன்னும் அதிகம் ஆர்வமும் வரும்.

எனவே நாம் முதலில் மார்க்க கல்வியின் அந்தஸ்தை புரிந்து கொள்ள வேண்டும்.

உலகத்தில் ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இடம், மருந்து ஆகிய பொருட்கள் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது கல்வி. குறிப்பாக மார்க்க கல்வி மிக மிக முக்கியமானது.அதனால் தான் குர்ஆனில் 6666 ஆயத்துகள் இருக்கிற போது ஓதுவீராக, படிப்பீராக என்று கல்வியைப் பற்றி வருகிற வசனத்தை அல்லாஹ் முதன் முதலாக இறங்கினான்! 

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ! கல்விக்கு அல்லாஹ் கொடுத்த சிறப்பு என்னவென்றால் ஒரு மனிதனுக்கு கல்வி கிடைத்து விட்டால் மற்ற எல்லாம் தானாக கிடைத்து விடும்.அதைத்தான் திருவள்ளுவர் சொன்னார்- அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடையரேனுமிலர்.

ஹஜ்ரத் சுலைமான் அலை அவங்களிடம் அல்லாஹ் கேட்டான்... நபியே உங்களுக்கு அறிவு வேண்டுமா அதிகாரம் வேண்டுமா என்று. அதற்கு சுலைமான் அவர்கள் எனக்கு அறிவு தான் வேண்டும் என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ் நீங்க அறிவை தேர்ந்தெடுத்த காரணத்தால அறிவையும் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று இரண்டையும் கொடுத்து விட்டான்.

ஹஜ்ரத் யூசுப் அலை அவர்கள் கூட கல்வியின் மூலமாகத்தான் சிம்மாசனத்தை அடைந்தார்கள். ஆரம்பத்தில் செய்யாத ஒரு தப்புக்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள். அரசர் கண்ட கனவுக்கு யாரும் விளக்கம் சொல்லாத போது ஹஜ்ரத் யூசுப் அலை அவங்க தன்னோட அறிவின் மூலம் அதற்கு விளக்கம் சொன்னதினால் தான் அவர்களுக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. அத்தோடு அவர்களுக்கு  ஆட்சியும் கிடைத்தது. எனவே ஒரு மனிதனுக்கு கல்வி கிடைத்து விட்டால் அவன் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. அவனுக்கு எல்லாம் கிடைத்து விடும்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ! நாம் இன்றைக்கு தொழுகிறோம்,நோன்பு வைக்கிறோம்.இப்படி நிறைய வணக்கங்களை செய்கிறோம்.வணக்கத்தின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறலாம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஆனால் அப்படிப்பட்ட வணக்கத்தை விட மார்க்க கல்வி சிறந்தது.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள்.அங்கே இரண்டு கூட்டம் இருந்தது.அதில் ஒரு கூட்டம் தொழுது கொண்டும்  அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டும் இருந்தது. இன்னொரு கூட்டம் மார்க்க விஷயங்களைக் கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தது.அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், இந்த இரு கூட்டமும் நன்மையில் தான் இருக்கிறது. என்றாலும் அதில் ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது. இந்த கூட்டத்தில் உள்ளவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுக்குக் கொடுப்பான்., நாடவில்லையெனில் கொடுக்கமாட்டான்! இந்த கூட்டத்தில் உள்ளவர்கள் கற்றுக் கொண்டும் பிறருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். நான் ஓர் ஆசிரியனாகத்தான் அனுப்பப்பட்டுள்ளேன்! என்று கூறி நேராக அவர்களிடம் சென்று அமர்ந்தார்கள். 

எனவே கல்வி தான் எல்லாவற்றை விட சிறந்தது.அந்த கல்வியை நாம் ஆர்வத்தோடும் ஆசையோடும் படிக்க வேண்டும். அல்லாஹ் அந்த மார்க்க கல்வியை நமக்கு முழுமையாக தந்து நம்மை சிறந்த ஹாஃபிழ்களாக ஆலிம்களாக ஆக்குவானாக


1 comment:

  1. நன்மையை எதிர்பார்த்து அரம் செய்கிறீர்கள்...
    எதுக்கு உங்கள் புகைப்படம்???

    ReplyDelete