Monday, March 7, 2022

அனாச்சாரம்

 

الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


சிறப்பிற்குரிய இந்த மன்றத்தில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தலைப்பு மார்க்கம் வெறுக்கும் அனாச்சாரங்கள். 

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் புனிதமான இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கிறோம்.மார்க்கம் எதை வழிகாட்டுகிறதோ அது தான் நன்மையான காரியம்.அதற்கு மாற்றமாக எதை செய்தாலும் அதற்கு அனாச்சாரம் என்று சொல்லப்படும்.அறியாமைக் காலத்தில் இருந்த அனைத்து மூட பழக்க வழக்கங்களையும் என் கால்களுக்கு கீழே புதைத்து விட்டேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.ஆனால் நபி ஸல் அவர்கள் புதைத்த அந்த மூடபழக்க வழக்கங்களைத்தான் நாம் தோண்டி எடுத்து இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறோம்.

அன்பிற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே மார்க்கம் காட்டித்தராத ஒரு விஷயத்தை செய்வது மற்ற தவறுகளைப்போன்று சாதாரன தவறு என்றோ மற்ற குற்றங்களைப்போன்று சாதாரண குற்றம் என்றோ சொல்லி விட  முடியாது.    மார்க்கம் காட்டித்தராத ஒரு அனாச்சாரத்தை, ஒரு மூட நம்பிக்கையை செய்வது பாவத்திலெல்லாம் மிகப்பெரிய பாவம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வாறு அனாச்சாரத்தை செய்பவர்கள் புதிய மார்க்கத்தையே உற்பத்தி செய்கிறார்கள் என்று அர்த்தம். அல்லாஹ் ரசூலோடு இந்த மார்க்கம் முடியவில்லை நானும் மார்க்கம் சொல்கிறேன் என்று அல்லாஹ் ரசூலோடு போட்டி போடுகிறார்கள் என்று அர்த்தம்.  எனவே அனாச்சாரங்கள் விஷயத்தில் மூட நம்பிக்கைகள் விஷயத்தில் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

மனிதன் காலத்தை திட்டுகிறான்.ஆனால் நானே காலத்தைப் படைத்தவன்,என் கையில் தான் இரவு பகல் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இன்றைக்கு கெட்ட நேரம் என்றும் கெட்ட நாள் என்றும் கெட்ட மாதம் என்றும் கெட்ட சகுணம் என்றும் எத்தனை மூடநம்பிக்கைகள் நம்மிடத்திலே தோன்றி விட்டன.குர்ஆன் ஹதீஸ் படித்த நம் வீடுகளிலும் இந்த மாதிரியான வார்த்தைகள் நடமாடுகிறது என்பதுதான் வேதனைக்கும் கேவலத்திற்கும் உரிய விஷயமாக இருக்கிறது.

இன்னைக்கு  வீட்டை விட்டு வெளியேறும் போதோ,வீதியில் நடந்து செல்லும்போதோ,பயணங்களில் செல்லும்போதோ,அல்லது ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு தடங்கள் வந்து விட்டாலோ ச்சே நேரமே சரியில்ல இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சனோ----- அப்டின்னு சொல்றது, பிள்ளைக்கு மாறி மாறி ஏதாவது நோய் வந்துகிட்டே இருந்தா போதும், உடனே---ச்சே இவேன் பொறந்த நேரமே சரியில்லப்பா அப்டின்னு சொல்றது.வீட்டுக்கு மருமவ வந்த நேரம்பாத்து ஏதாவது ஒரு சிக்கல் வந்திடுச்சின்னா போதும், இந்த சணியன் வந்த நேரந்தா---வீட்ல ஒவ்வொரு முஸீபத்தா---- நடக்குது அப்படின்னு சொல்றது.தெருவுல போகும் போது ஏதாவது பூன குறுக்க போயிடுச்சின்னா பூன குறுக்கப்போயிடுச்சே இன்னைக்கி போற காரியம் உருப்படாது அப்டின்னு சொல்றது.நமக்கு புடிக்காதவன் யாரையாவது பாத்தன்னா  உடனே ஓன் மூஞ்சில முழிச்சிட்டேன்லே---இன்னைக்கி உருப்பட்ட மாதிரி தான் அப்டின்னு சொல்றது.  இதெல்லாந்தான் இன்னைக்கி நம்ம வாயிலயிருந்து வரக்கூடிய வேத வசனங்கள்.  நம்ம வாயில குர்ஆன் வசனம் வருதோ இல்லையோ இது அடிக்கடி வரும்.

அன்பிற்குரியவர்களே இதுலாம் எங்கயிருந்து வந்துச்சி? யார் சொல்லிக்கொடுத்தா? இப்டில்லாம் சொல்றது சரிதானா? நபி ஸல் அவங்க இப்டித்தா கத்துக்கொடுத்தாங்களா? ஸஹாபாக்கள் இப்டித்தா சொல்லிக்கிட்டு இருந்தாங்களா? இப்டித்தான் குர்ஆன்ல வந்திருக்குதா? அப்டின்லாம் கொஞ்சங்கூட  பாக்குறதும் கிடையாது, யோசிக்கிறதும் கிடயாது.ஆமா  நாம எப்டி யோசிப்போம்! ஏன்னா நாம தான் முஸ்லிமே இல்லியே.என்னடா இவன் மேடையில ஏறி  எல்லாத்தையும் பாத்து காஃபிர்னு சொல்றானேன்னு நினைக்கிறீங்களா-----அன்பிற்குறியவர்களே எப்ப ஒருத்தன் அல்லாஹ் படைச்ச காலத்தையும் நேரத்தையும் திட்ட   ஆரம்பிச்சிட்டானோ அப்ப அவன் உண்மையான முஸ்லிமா இருக்க முடியாது.ஏன்னா ஒரு பொருள் சரியில்லஞ் சொல்லி நாம திட்டுனா, அந்த திட்டு அந்த பொருள தயாரிச்சவனுக்குத்தான் போய் சேரும்.காலத்த படைச்சது அல்லாஹ். இப்ப ஒருத்தன் காலமே சரியில்ல நேரமே சரியில்லன்னு திட்டுனா அவன் அல்லாஹ்வ திட்டுறான்னு தான் அர்த்தம்.  அல்லாஹ்வ திட்றவன் எப்டி உண்மையான முஸ்லிமா இருக்க முடியும்? அதனாலத்தான் காலத்த திட்டுறவங்க முஸ்லிமே இல்லன்னு சொன்னேன். 

அதுமட்டுமில்லாம இன்னைக்கி ஸஃபர் மாசம் வந்திடுச்சின்னா போதும் உடனே சனியம் புடிச்ச மாசம் வந்துடுச்சி,அபசகுணமான மாசம் வந்திடுச்சின்னு சொல்லி அதுல எந்த நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது,கல்யாணம் நடத்தக் கூடாது,வீட்ல எந்த விஷேசமும் வைக்க கூடாது. அப்டி செஞ்சன்னா அந்த காரியம் உருப்படாது அபடின்னு சொல்றது.இப்டி நாம செய்யக்கூடிய அனாச்சாரங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் அளவே இல்லாமப்போச்சி.

அன்பிற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நபி ஸல் அவர்கள் சொன்ன ஒரு பிரபல்யமான ஒரு ஹதீஸ் நமக்கெல்லாத்துக்கும் தெரியும்.

شر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار

காரியங்களில் கெட்டது புதிதாக உருவாக்கப்படக்கூடிய காரியங்களாகும். புதிதாக உருவாக்கப்படக்கூடிய அனைத்தும் பித்அத்தாகும்.பித்அத் அனைத்தும் வழிகேடாகும்.அனைத்து வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும். என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.

நரகத்தில் கொண்டு போய் சேர்கக்கூடிய மிக மோசமான விஷயம் தான் அனாச்சாரங்கள்.எனவே ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு இந்த விஷயம் மார்க்கத்தில் இருக்கிறதா இல்லையா இதை மார்க்கம் அனுமதிக்கிறதா அனுமதிக்க வில்லையா என்று ஆய்வு செய்த பிறகு செய்ய வேண்டும். எனவே அன்பானவர்களே இந்த மாதிரியான அனாச்சாரங்களையும் மூட நம்பிக்கைகளையும் விட்டு விட்டு அல்லாஹ் ரசூல் சொன்ன வழிகளில் நடப்பதற்கு வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவானாக என்று கூறி என் உரையை முடிக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும். 


No comments:

Post a Comment