Friday, July 28, 2023

ஆஷூரா சொல்லும் செய்தி - பதறாத காரியம் சிதறாது

 

அல்லாஹ்வின் அருளால் நாளைய தினம் அவனால் சங்கை செய்யப்பட்ட முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளான ஆஷூரா தினம். பல நபிமார்களுக்கு வெற்றிகளைத் தந்த, அவர்களின் வாழ்வின் ஏற்றங்கள் தந்த, அவர்களின் சோதனைகள் நீக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாள் தான் ஆஷூரா தினம். பல வரலாறுகள் இந்த நாளில் நடந்திருந்தாலும் ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தார்களும் அழிக்கப்பட்டு மூஸா நபி அலை அவர்களும் அவர்களது சமூகமும் காக்கப்பட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

عن ابن عباس أنه قال "قدم النبي المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال: ما هذا؟ قالوا: هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى، قال: فأنا أحق بموسى منكم، فصامه وأمر بصيامه

நபி அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் "நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்'' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள். (புகாரி ; 3397)

எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்ன், தனக்கு வழங்கப்பட்ட ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் நானே உங்களுடைய பெரிய இறைவன் என்று பிரகடனப்படுத்தினான். மூஸா நபி அலை அவர்களின் சமூகமான பனூஇஸ்ரவேலர்களை கொத்தடிமைகளாக்கி துன்புறுத்திக் கொண்டிருந்தான். ஹள்ரத் மூஸா அலை அவர்கள் கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு, ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்க போராடினார்கள். அல்லாஹுத்தஆலா அந்த சமூகத்தைப் பாதுகாத்து கொடுங்கோலன் ஃபிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்தையும் அழித்தான்.

ஃபிர்அவ்னின் மூலமாக பனூ இஸ்ரவேலர்களுக்கு கொடுமைகளும் அக்கிரமங்களும் எல்லை மீறிய போது ரப்புல் ஆலமீன் எகிப்திலிருந்து உங்கள் சமூகத்தை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக புரப்படுங்கள் என்று ஹள்ரத் மூஸா அலை அவர்களுக்கு உத்தரவிட்டான். அவர்களும் 6 இலட்சம் பனூ இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு எகிப்திலிருந்து புரப்பட்டார்கள். அவர்களைப் பிடிப்பதற்காக ஃபிர்அவ்ன் தன் கூட்டத்தோடு வந்தான். அந்த நேரத்தில் அவர்கள் 16 இலட்சம் பேர் இருந்ததாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். இறுதியாக அல்லாஹ் கடல் நடுவே பாதைகளை ஏற்படுத்தி மூஸா நபி அலை அவர்களையும் அவர்களின் சமூகத்தையும் பாதுகாத்தான். அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும் அழித்தான்.  ஹள்ரத் மூஸா நபி அலை அவர்கள் தன் சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கிய மாபெரும் வெற்றிக்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாகத்தான் வெற்றி கிடைத்த ஆஷுரா நாளில் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள்.

குர்ஆனில் அல்லாஹ் எண்ணற்ற நபிமார்களின் வரலாறுகளை பதிவு செய்திருக்கிறான்.சுமார் 25 நபிமார்களின் வரலாறுகளை சுருக்கமாகவும் விரிவாகவும் அல்லாஹ் கூறியிருக்கிறான்.  அதில் மூஸா அலை அவர்களின் பெயர் 136 தடவை இடம் பெற்றிருக்கிறது. சுமார் 34 சூராக்களில் அவர்களின் வரலாறுகளை அல்லாஹ் பேசுகிறான். அதில் மூஸா அலை அவர்களுக்கும் ஃபிர்அவ்னுக்கும் மத்தியில் நடந்த நிகழ்வுகள் மட்டும் 20 இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குர்ஆன் என்பது வரலாற்று நூலல்ல. வாழ்க்கையின் அனைத்து விஷயங்களுக்கும் வழிகாட்டும் ஒரு உயர்ந்த வேதம். இருந்தாலும் வரலாறுகளை அதிகம் இடம் பெறச் செய்ததற்கான காரணம், வரலாறுகள் உள்ளத்தை பக்குவப்படுத்தும். கவலைகள் நிரம்பிய உள்ளத்திற்கு ஆறுதலை தரும். உள்ளத்தில் ஏற்பட்ட வடுக்களை மறைய செய்யும். தீனுக்கான சேவைகள் செய்பவர்களுக்கு அந்த சமூகத்தால் தரப்படும் மன உளைச்சல்களுக்கு மருந்தாக அமையும்.

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌  وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏

உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 11:120)

وَقَالَ ابْنُ جُرَيْجٍ: نُصَبِّرُ بِهِ قَلْبَكَ حَتَّى لَا تَجْزَعُ

பதட்டப்படாமல் இருப்பதற்காக வரலாறுகளைக் கொண்டு அவர்களின் உள்ளத்தை உறுதிபடுத்துகிறான் என்று இப்னு ஜுரைஜ் ரஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் தருகிறார்கள்.

நபி அவர்களும் தன் சொந்த சமூகத்தால் நெருக்கடிகளையும் சிரமங்களையும் சந்திக்கின்ற பொழுது, மன உளைச்சலைப் பெறுகின்ற பொழுது, மன இறுக்கத்தை உணர்கிற போது அவர்கள் முந்தைய நபிமார்களின் வரலாறுகளைத் தான் நினைத்துப் பார்ப்பார்கள்.

عَنِ الْأَعْمَشِ ، قَالَ : سَمِعْتُ أَبَا وَائِلٍ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَسَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْمًا، فَقَالَ رَجُلٌ : إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ، فَغَضِبَ حَتَّى رَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ : " يَرْحَمُ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "

நபி  அவர்கள் ஒருமுறை போரில் கிடைத்த பொருட்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒருவர் நிச்சயம் இதில் அல்லாஹ்வின் பொருத்தம் நாடப்பட வில்லை என்று அதிருப்தியுடன் கூறினார். நான் நபி அவர்களிடம் சென்று அதை தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோபத்தின் அடையாளத்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகு மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக. இதை விட மிக அதிகமாக அவர்கள் புண்படுத்தப்பட்டார்கள். இருந்தாலும் அவர்கள் சகித்துக் கொண்டார் என்று கூறினார்கள். (புகாரி ; 3405)

ஆஷூராவுடைய தினத்தில் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்து கொண்டிருந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் அழிந்து போனான். அதேபோன்று அவனால் பல்வேறு கொடுமைகளையும் சித்தரவதை களையும் அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். இந்த வரலாறுகளை நாம் வாசிக்கிற போது நமக்கும் ஆறுதல் ஏற்படுகிறது.அக்கிரமக்காரர்கள் என்றைக்கும் தப்பித்துக் கொண்டே இருக்க மாட்டார்கள்.இருந்த தடம் தெரியாத அளவிற்கு ஒரு நாள் அவர்கள் அழிந்து போவார்கள். எதிரிகளின் கொட்டம் ஒருநாள் அடங்கும். அநியாயக்காரர்கள் அவர்களுக்கு துணை போனவர்களின் முடிவு மிக மோசமானதாக இருக்கும் என்பதை இந்த வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவு மணிப்பூரில் அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை மானபங்கப்படுத்தி அவர்களின் கற்பை சூறையாடி இருக்கிறார்கள். அதைத் தடுக்க வந்த குடும்பத்தாரை கொலை செய்திருக்கிறார்கள். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான சம்பவங்கள் சுமார் 80 நாட்களாக நடந்திருக்கிறது. இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்தியாவிற்கே ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுணிவு. உலக நாடுகள் காரி துப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கக் கூடிய கையாலாகாத மத்திய அரசாங்கம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் அந்த கவலரத்தை தூண்டி விட்டவர்களே அவர்கள் தான். முன்னால் எம் பி யும் பா.ஜ.க வைச் சார்ந்த கிம் காங்டே என்ற குக்கி இனப் பெண்மனி இந்த வன்முறையைச் செய்வது ஆர் எஸ் எஸ் இன் உள்ளூர் இயக்கங்களான அரம்பி திங்கோலும் லீம் மெய்தியும் தான். அதுமட்டுமல்ல, குக்கி மற்றும் மெய்திக்கு இடையே பிரிவினையை உண்டாக்கியது பா.ஜ.க தான் என்று குறிப்பிடுகிறார்.

குற்றவாளிகள் மட்டுமல்ல, குற்றத்திற்கு துணை போகிறவர்களும் குற்றத்தைத் தடுப்பதற்கான சக்தியும் ஆற்றலும் இருந்தும் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பவர்களும் அல்லாஹ்வின் வேதனைக்கு உள்ளாகுவார்கள் என்பது நபிமொழி. அந்த வகையில் அநியாயங்களை செய்யக்கூடிய அவர்கள் அழிந்து போவார்கள். அதை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடியவர்களும் அழிந்து போவார்கள். ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட இந்த வரலாறு நமக்குச் சொல்லும் முதல் செய்தி இது தான்.

இரண்டாவது செய்தி, அந்த நேரத்தில் ஹள்ரத் மூஸா அலை அவர்களுக்கு இருந்த மனோதிடமும் பதட்டமடையாத அமைதியான உள்ளமும் அல்லாஹ்வின் மீது அபாரமான நம்பிக்கையும் நாம் பெற வேண்டிய பாடம். முன்னால் கடல்.பின்னால் ஃபிர்அவ்னின் படை. இரு புறமும் ஆபத்து சூழ்ந்திருந்தும் பதற்றமடையாமல் என் இறைவன் என்னோடு இருக்கிறான் என்று சொன்னார்கள்.

சற்றும் எதிர் பார்க்காமல் திடீரென்று ஒரு ஆபத்தை மனிதன் சந்திக்கின்ற பொழுது பதற்றமடைந்து விடுவான். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போவான். இது மனித இயல்பு. ஒரு வாகனத்தில் நிதானமாக சென்று கொண்டிருக்கிற போது திடீரென்று ஒரு பெரிய வாகம் குறுக்கே வந்து விட்டால் பதட்டமாகி விடுவான். அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்ஸலேட்டரை அழுத்தி விபத்துக்குள்ளாகி விடுவான்.

ஆனால் இந்த மாதிரியான நேரங்களில் தான் பொறுமையும் நிதானமும் புத்திசாலித்தனமும் வேண்டும். பதறாத காரியம் சிதறாது என்று கூறுவார்கள். பதறி விட்டால் காரியம் கெட்டு விடும். ஆபத்தும் ஏற்பட்டு விடும். எந்த சூழ்நிலையிலும் பதற்றமடையாமல் நிதானமாகவும் தைரியமாகவும் இறை நம்பிக்கையோடும் இருந்தால் எதையும் சமாளித்து விட முடியும். ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அல்லாஹ்வின் உதவியும் நமக்கு கிடைக்கும்.

ஒரு கருவுற்ற மானுக்கு தன் குட்டியை ஈயும் நேரம் நெருங்கியது. ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது,அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு. இது தான் சரியான இடம் என்றெண்ணி அங்கே சென்றது.அப்போது கருமேகங்ள் சூழ்ந்திருந்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந் தான்.மானின் வலப்பக்கமோ பசியுடன் ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.இன்னொரு பக்கம் காட்டுத் தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.தீ ஒரு புறம், பொங்கும் காட்டாறு மறு புறம்,புலி ஒரு புறம். வேடன் ஒரு புறம். நான்கு திசையிலும் ஆபத்துகள் அந்த மானை சூழ்ந்திருந்தது. இதற்கிடையில் தன் உயிரைக் காப்பாற்றுவதோடு குட்டியையும் நன்றாக ஈந்தெடுக்க வேண்டும்.

இருந்தாலும் அந்த மான் கொஞ்சமும் பதற்றமடையாமல் தன்னை சுற்றியிருக்கும் ஆபத்துகளைப் பற்றி சிந்திக்காமல் தன் குட்டியை ஈவதிலேயே கவனம் செலுத்தியது. அப்போது தான் அந்த ஆச்சரியம் நடந்தது.

மின்னல் தாக்கியதால் வேடன் கண் பார்வையை இழந்தான்.அவனால் எய்யப்பட்ட அம்பு குறி தவறி புலியைத் தாக்கி அது இறக்கிறது. தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது.அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.

நம் வாழ்விலும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வரும். அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்.சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும். எந்தச் சூழலிலும் பதறாமல் இறை நம்பிக்கையோடு இருந்தால் அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும்.

ஸஹாபாக்களின் மன உறுதியும் இறை நம்பிக்கையும்

 

 

عن السدي قال: لما ندموا يعني أبا سفيان وأصحابه على الرجوع عن رسول الله صلى الله عليه وسلم وأصحابه، وقالوا: " ارجعوا فاستأصلوهم "، فقذف الله في قلوبهم الرعب فهزموا، فلقوا أعرابيًّا فجعلوا له جُعْلا فقالوا له: إن لقيت محمدًا وأصحابه فأخبرهم أنا قد جمعنا لهم! فأخبر الله جل ثناؤه رسول الله صلى الله عليه وسلم، فطلبهم حتى بلغ حمراء الأسد، فلقوا الأعرابيَّ في الطريق، فأخبرهم الخبر، فقالوا: " حسبنا الله ونعم الوكيل "! ثم رجعوا من حمراء الأسد. فأنـزل الله تعالى فيهم وفي الأعرابي الذي لقيهم: " الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانًا وقالوا حسبنا الله ونعم الوكيل ".

உஹதிலிருந்து அபூசுஃப்யான் தமது படையுடன் மக்கா திரும்பிச் சென்று கொண்டிருக்கும் போது, ரவ்ஹா எனும் இடத்தை அடைந்ததும் நமக்கு முழுமையான வெற்றி வேண்டுமானால், (நஊது பில்லாஹ்..) முஹம்மது அவர்களையும் எஞ்சியிருக்கிற முஸ்லிம்களையும் ஏன் நாம் கொல்லக்கூடாது? வாருங்கள்! முஸ்லிம்களையும், நபி அவர்களையும் பூண்டோடு அழித்து வருவோம்!என்று கூறினார். இருந்தாலும் அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் அச்சத்தை ஏற்படுத்தினான். இருந்தாலும் முஸ்லிம்களை பயமுறுத்துவதற்காக அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தார்கள் ஒரு கிராமவாசியிடத்தில் கொஞ்சம் காசு பணத்தைக் கொடுத்து முஸ்லிம்களைப்  பார்த்தால் உங்களை வேரோடு அழிப்பதற்கு மக்காவாசிகள் கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொல்லி விடு என்று கூறி அவரை அனுப்பினார்கள். அவர்களைப் பார்த்து அந்த  செய்தியைக் கூறினார். அப்போது நபித்தோழர்கள் ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் என்ற வாசகத்தை சொன்னார்கள்.

اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا   وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏

அன்றி ஒருசிலர் அவர்களிடம் (வந்து) "உங்களுக்கு  எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. அன்றி "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் : 3:173) இந்த வசனம் அவர்கள் விஷயமாகத்தான் இறங்கியது.

உஹதுப் போர்க்களத்தில் மிகப்பெரிய தோல்வி. பெரும்பெரும் நபித்தோழர்கள் ஷஹீதைக்கப்பட்டு  விட்டார்கள். எண்ணற்ற பேர் காயமடைந்து நிலைகுலைந்து போய் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் தங்களைப் பூண்டோடு அழிப்பதற்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தி சொல்லப்பட்டது. ஆனால் அந்த நிலையில் கூட மனம் தளராமல் அவர்கள் உச்சரித்த வார்த்தை தான் இது.

நபி அவர்களை தாயிஃபிலிருந்து அந்த மக்கள் துறத்திய நேரத்தில் ஒரு வார்த்தையை சொன்னார்கள்.

فقال له زيد بن حارثة : كيف تدخل عليهم وقد أخرجوك ؟ يعني قريشا فقال : [ يا زيد إن الله ناصر دينه ومظهر نبيه.

மக்காவாசிகள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் தான் தாயிஃபிற்கு வந்தீர்கள். இங்கும் அதே நிலை தான் ஏற்பட்டிருக்கிறது. இப்போது எப்படி மீண்டும் மக்காவிற்குள் நுழைவீர்கள் என்று உடனிருந்த ஜைத் பின் ஹாரிஸா ரலி அவர்கள் கேட்ட போது நிச்சயமாக அல்லாஹ் தன் மார்க்கத்திற்கு உதவி புரிவான். தன் நபியின் நிலையை உயர்த்துவான் என்று கூறினார்கள்.

இந்த வார்த்தையை நபி அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் சொன்னார்கள் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நாமும் இப்படி, அல்லாஹ் எனக்கு உதவி செய்வான். அல்லாஹ் என்னை காப்பாற்றுவான், அல்லாஹ் என்னை கை விட மாட்டான் என்று சொல்வோம். எப்போது என்றால், எல்லாம் கைகூடி வருகிற பொழுது, எல்லா உதவிகளும் நம் கண் முன்னால் தெரிகின்ற பொழுது, வெற்றிக்கான வாசல்கள் எல்லாம் திறக்கப்படுகிற போது, சூழ்நிலை களெல்லாம் நமக்கு சாதகமாக அமைகிற போது சொல்வோம். ஆனால் அன்றைக்கு நபி அவர்களின் சூழ்நிலை என்ன? தனக்கு பக்கபலமாக இருந்த அபூதாலிப் அவர்கள் மரணித்து விட்டார்கள். அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகளை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்திய அன்னை கதீஜா ரலி அவர்கள் மரணித்து விட்டார்கள். சொந்த ஊர் மக்கள் அவர்களை துரத்துகிறார்கள். ஆறுதலும் உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற வெளியூர் மக்களும் அவர்களை விரட்டி அடிக்கிறார்கள். உதவிக்கரம் நீட்ட ஆளில்லை. அரவணைக்க ஆளில்லை. தோள் கொடுக்க ஆளில்லை. சூழ்நிலைகள் அவர்களுக்கு சாதகமாக இல்லை. அவர்கள் வெற்றி பெறுவதற்கான எந்த முகாந்திரமும் அந்த நேரத்தில் இல்லை. இந்த நிர்க்கதியான சூழ்நிலையிலும் அல்லாஹ் இந்த தீனுக்கு உதவி செய்வான். அல்லாஹ் என்னை பாதுகாப்பான். எனக்கு கண்ணியத்தைத் தருவான் என்று சொன்னார்கள் என்றால் அவர்களின் மிக உயர்ந்த ஈமானிய பலத்தையும் இறை நம்பிக்கையின் ஆழத்தையும் இந்த வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

இன்றைக்கு நம் வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்சனைகள் வந்து விட்டாலே அப்படியே சோர்ந்து விடுகிறோம். வாழ்க்கையே முடிந்து போய் விட்டது போல் நிராசை அடைந்து விடுகிறோம். மனம் தளர்ந்து விடுகிறோம். ஆனால் முஸ்லிம் சமூகம் எந்த நேரத்திலும் மனம் தளர்ந்து விடக்கூடாது. எந்த நிர்க்கதியான சந்தர்ப்பத்திலும் சோர்ந்து விடக்கூடாது. இறைவன் இருக்கிறான். அவன் நம்மை கைவிட மாட்டான். அவன் நமக்கு உதவி புரிவான். நமக்கு அவன் துணை நிற்பான் என்கிற நம்பிக்கையும் தவக்குலும் முஸ்லிம் சமூகத்திற்கு அவசியம் வேண்டும் என்பதைத்தான் இதுமாதிரியான வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

 

இன்றைக்கு தவக்குல் மிகவும் குறைந்து விட்டது.முதலாவதாக பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியடைகிற இந்த சமூகம் இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ பெண் குழந்தைகள் பிறந்தால் மகழ்ச்சியடைவ தில்லை. மீண்டும் மீண்டும் பெண் குழந்தைகள் பிறந்து விடுவோ என்ற அச்சத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு அச்சப்படும் பெற்றோர்கள். அல்லது உருவான குழந்தையை கருக்கலைப்பு செய்யும் தாய்மார்கள் இன்றைக்கு அதிகமாகி விட்டார்கள்.

இன்றைக்கு பெண் பிள்ளைகள் எத்தனையோ சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்கூலாக இருந்தாலும் காலேஜாக இருந்தாலும் இன்றைக்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் தான் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள்.

பெண்கள் எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் செய்ய முடியாத சாதனைகளையும் பெண்கள் செய்து விடுகிறார்கள். ஆண்கள் தொட முடியாத தூரத்தை பெண்கள் தொட்டு விடுகிறார்கள். அன்று முதல் இன்று வரை உலகில் நடக்கின்ற சாதனைகள் அனைத்திலும் முதல் இடத்தில இருப்பது பெண்கள் தான். இந்தியாவில் இருந்து முதன்முதலாக விண்வெளிக்கு பயணம் செய்து சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது கல்பனா சாவ்லா என்ற ஒரு இளம் பெண் என்பது நாம் அறிந்த விஷயம். மெக்சிகோவில் கலியா மோஸ் என்ற பெண்மணி 41 நாட்கள் தன்னந்தனியாக கடல் பயணம் செய்து அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சாதனை படைத்தார்.

எல்லா துறைகளுக்கும் இன்றைக்கு பெண்கள் வந்து விட்டார்கள். பஸ் டிரைவராக இருக்கிறார்கள். இரயிலை இயக்குபவர்களாக இருக்கிறார்கள். விமானத்தை இயக்கக்கூடிய பைலட்டுகளாக இருக்கிறார்கள். இஞ்சினியர்களாக இருக்கிறார்கள்.மருத்துவர்களாக இருக்கிறார்கள். தொழிலில் உச்சம் தொட்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ சாதனைகளை பெண்கள் செய்து கொண்டிருருந்தாலும் பெண் பிள்ளைகளை பாரமாக நினைக்கின்ற ஒரு கொடுமை இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் பெண் பிள்ளைகள் மீது நமக்கு இருக்கும் வெறுப்பல்ல. இறை நம்பிக்கையில் நமக்கிருக்கும் பலவீனம். இந்த வரலாறுகளை வாசிப்பதின் மூலம் நம்முடைய தவக்குல் அதிகமாகும் என்பதில் ஐயமில்லை. அல்லாஹ் அருள் புரிவானாக!

1 comment:

  1. அல்லாஹ் உங்களுக்கு ஸாலிஹான பெண் பிள்ளையை தருவானாக. ஆமீன்

    ReplyDelete