Thursday, June 6, 2024

இதுவும் நன்மைக்கே

நாம் நம் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை ஆசைப்படுகிறோம். அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கிற விஷயங்கள் நடக்கும். சமயங்களில் நாம் எதிர் பார்க்காத, சற்றும் அதைப் பற்றி சிந்திக்காத காரியங்களும் நடந்து விடும். நாம் எதிர் பார்த்த விஷயங்கள் நடந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ்! நாம் நினைத்தது நடந்து விட்டது. இனிமேல் எந்தக் கவலையும் இல்லை. எல்லாம் கைராக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தீங்காக அமைந்து விடும். நாம் எதிர் பார்க்காத விஷயங்கள் நடக்கும் போது ஆகா இப்படி நடந்து விட்டதே! இனி என்ன ஆகப் போகுதோ! ஏது ஆகப் போகுதோ! என்று கவலைப்படுவோம், அச்சப்படுவோம். ஆனால் அது நன்மையாக அமைந்து விடும். எனவே நடக்கின்ற காரியங்களில் எது நலவானது? எது தீங்கானது? என்று நமக்குத் தெரியாது. அதை அறிந்தவன் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் மட்டும் தான்.

எனவே கிடைக்காமல் தவறிப் போன ஒரு விஷயத்தைக் குறித்து கைசேதப்படவும் கூடாது. கிடைத்ததை நினைத்து அதிகம் சந்தோஷப்படவும் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ‌ وَاللّٰهُ ­لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ

உங்களை விட்டும் தப்பிப் போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்). அல்லாஹ்கர்வம் கொள்பவர்களையும் பெருமை யடிப்பவர்களையும் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 57:23)

ஏனென்றால் சில நேரம் நாம் கைசேதப்படுகின்ற விஷயத்தில் அல்லாஹ் கைரை வைத்திருப்பான். நாம் சந்தோஷப்படுகின்ற காரியத்தில் ஷர்ரை வைத்திருப்பான்.

மனிதன் ஒரு விஷயத்தை மிகவும் விரும்புவான். ஆனால் அது அவனுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். ஒரு விஷயத்தை அதிகம் வெறுப்பான். ஆனால் அது அவனக்கு நலவைத் தரக்கூடியதாக இருக்கும்.

 كُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّـكُمْ‌ وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْئًا وَّهُوَ خَيْرٌ لَّـکُمْ‌ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْئًا وَّهُوَ شَرٌّ لَّـكُمْ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏

(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:216)

   فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْــٴًـــا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا‏

ஏனென்றால்நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்ஆன் : 4:19)

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ثُمَّ اَحْيَاھُمْ‌ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَکْثَرَ النَّاسِ لَا يَشْکُرُوْنَ‏

(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக் கணக்கில் வெளியேறியவர்களை நீங்கள் கவனித்தீர்களாஅல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். எனினும்மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை. (அல்குர்ஆன் : 2:243)

أَنَّ هَؤُلَاءِ الْقَوْمَ كَانُوا أَهْلَ بَلْدَةٍ فِي زَمَانِ بَنِي إِسْرَائِيلَ اسْتَوْخَمُوا(٣) أَرْضَهُمْ وَأَصَابَهُمْ بِهَا وَبَاءٌ شَدِيدٌ فَخَرَجُوا فِرَارًا مِنَ الْمَوْتِ إِلَى الْبَرِّيَّةِ، فَنَزَلُوا واديًا أفيح، فملأوا مَا بَيْنَ عُدْوَتَيْهِ فَأَرْسَلَ اللَّهُ إِلَيْهِمْ مَلَكَيْنِ أَحَدَهُمَا مِنْ أَسْفَلِ الْوَادِي وَالْآخَرَ مِنْ أَعْلَاهُ فَصَاحَا بِهِمْ صَيْحَةً وَاحِدَةً فَمَاتُوا عَنْ آخِرِهِمْ مَوْتَةَ رَجُلٍ وَاحِدٍ فَحِيزُوا إِلَى حَظَائِرَ وَبُنِي عَلَيْهِمْ جُدْرَانُ وَقُبُورٌ [وَفَنُوا](٤) وَتَمَزَّقُوا وَتَفَرَّقُوا فَلَمَّا كَانَ بَعْدَ دَهْرٍ مَرّ بِهِمْ نَبِيٌّ مِنْ أَنْبِيَاءِ بَنِي إِسْرَائِيلَ يُقَالُ لَهُ: حِزْقِيلُ فَسَأَلَ اللَّهَ أَنْ يُحْيِيَهُمْ عَلَى يَدَيْهِ فَأَجَابَهُ إِلَى ذَلِكَ وَأَمَرَهُ أَنْ يَقُولَ: أَيَّتُهَا الْعِظَامُ الْبَالِيَةُ إِنَّ اللَّهَ يَأْمُرُكِ أَنْ تَجْتَمِعِي فَاجْتَمَعَ عِظَامُ كُلِّ جَسَدٍ بَعْضُهَا إِلَى بَعْضٍ، ثُمَّ أَمَرَهُ فَنَادَى: أَيَّتُهَا الْعِظَامُ إِنَّ اللَّهَ يَأْمُرُكِ بِأَنْ تَكْتَسِيَ لَحْمًا وَعَصَبًا وَجِلْدًا. فَكَانَ ذَلِكَ، وَهُوَ يُشَاهِدُهُ ثُمَّ أَمَرَهُ فَنَادَى: أَيَّتُهَا الْأَرْوَاحُ إِنَّ اللَّهَ يَأْمُرُكِ أَنْ تَرْجِعَ كُلُّ رُوحٍ إِلَى الْجَسَدِ الَّذِي كَانَتْ تَعْمُرُهُ. فَقَامُوا أَحْيَاءً يَنْظُرُونَ قَدْ أَحْيَاهُمُ اللَّهُ بَعْدَ رَقْدَتِهِمُ الطَّوِيلَةِ، وَهُمْ يَقُولُونَ: سُبْحَانَكَ [اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ](٥) لَا إِلَهَ إِلَّا أَنْتَ. ابن كثير

பனூ இஸ்ராயீல் காலத்தில் தாவர்தான் என்ற ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரு நாள் கடுமையான நோய் தொற்று ஏற்பட்டு நிறைய பேர் பாதிக்கப்பட்டார்கள். மரணம் அடைந்தார்கள். அதைப் பார்த்து சுமார் 4000 பேர் அந்த நோய் தொற்றால் மரணம் ஏற்பட்டு விடும் என்று பயந்து அந்த ஊரை விட்டும் வெளியேறி ஒரு பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள்.  அல்லாஹுத்தஆலா அங்கேயே அவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தினான். அத்தனை பேரும் மரணித்து அங்கேயே அடக்கமாகி விட்டார்கள். நீண்ட காலங்களுக்குப் பிறகு பனூ இஸ்ரவேலர்களின் நபிமார்களில் ஒருவரான ஹிஜ்கீல் அலை அவர்கள் அந்த இடத்தைப் பார்த்து இங்கே மரணித்து அடக்கமாகி விட்ட அந்த மக்களை மீண்டும் எழுப்ப வேண்டும். அவர்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று இறைவனிடத்தில் முறையிட்டார்கள். அல்லாஹ் சொன்னான் ; மக்கிப்போன எலும்புகளே! நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுங்கள் என்று இறைவன் உத்தரவிடுகிறான் என்று கூறுங்கள். அவர்கள் அவ்வாறு சொன்னவுடன் எலும்புகள் ஒன்று சேர்ந்து கொண்டது. பின்பு எலும்புகளே! நீங்கள் சதையையும் தோலையும் உங்கள் மீது போர்த்திக் கொள்ளுங்கள் என்று இறைவன் சொல்லுகிறான் என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவ்வாறு சொன்னவுடன் அதேபோன்று நடந்தது. அதற்குப் பிறகு உயிர்களே! நீங்கள் உங்களுடைய உடல்களுக்கு திரும்பி விடுமாறு இறைவன் கட்டளையிடுகிறான் என்று சொன்னார்கள். அந்தந்த உடலோடு உயிர் சேர்ந்து விட்டன. அவர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள். (இப்னுகஸீர்)

இங்கிருந்தால் நம்மையும் நோய் தொற்றிக் கொள்ளும். மரணம் வந்து விடும்.இங்கிருந்து வெளியாகி விட்டால் நாம் தப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு வெளியேறுவது தான் நமக்கு கைர் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு கைராக அமைய வில்லை. அவர்கள் அழிந்து போனார்கள்.

ஹுத் அலை அவர்களின் சமூகம் வானத்தில் மேகத்தைப் பார்த்து அதை மழை தரும் மேகம் என்று மகிழ்ந்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு வேதனையைத் தரும் மேகமாக இருந்தது.

فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا‌  بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ‌ رِيْحٌ فِيْهَا عَذَابٌ اَ لِيْمٌۙ

பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, "இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்" என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) "அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும்இது ஒரு காற்றுஇதில் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது" (என்றும் கூறப்பட்டது). (அல்குர்ஆன் : 46:24)

تُدَمِّرُ كُلَّ شَىْءٍ ۭ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰٓى اِلَّا مَسٰكِنُهُمْ‌ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ‏

ஆகவேஅது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும்  அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம். (அல்குர்ஆன் : 46:25)

மூஸா அலை அவர்களை சிறு குழந்தையாக பார்த்த போது அது கண்குளிர்ச்சியாக இருக்கும். அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும் என்று எண்ணி ஃபிர்அவ்ன் அவர்களை எடுத்தான். ஆனால் அவர்களின் மூலமாக ஃபிர்அவ்னும் அழிந்து போனான். அவனுடைய சாம்ராஜ்யமும் அழிந்து போனது.

فَالْتَقَطَهٗۤ اٰلُ فِرْعَوْنَ لِيَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًا ‌  اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـــِٕيْنَ‏

(ஆகவேமூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினரில் ஒருவர் எடுத்துக்கொண்டார். (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தரக்கூடிய (அக்குழந்)தை (யை அவர்களே எடுத்துக்கொண்டதினால்) ஃபிர்அவ்னும்ஹாமானும்அவர்களுடைய ராணுவங்களும் நிச்சயமாகத் தவறிழைத்தவர்களாவே ஆயினர். (அல்குர்ஆன் : 28:8)

இஸ்லாத்தை அழிப்பதற்கு பயன்படக்கூடிய பொருளாதாரத்தைக் கைப்பற்ற வேண்டும். மேலும் ஹிஜ்ரத்தின் போது மக்காவில் விட்டு வந்த அவர்களின் செல்வத்திற்கு பகரத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் சிரியாவிலிருந்து திரும்பி வந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை பிடிப்பதற்காக சஹாபாக்கள் முற்பட்டார்கள். ஆனால் அல்லாஹ் அதைப் போராக மாற்றி விட்டான். போர் நடக்கும் என்ற எந்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை. அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. போருக்கான அறிவிப்பு வந்த பொழுது லேசான தயக்கம் அவர்களுக்கு இருந்தது. இருந்தாலும் அல்லாஹுத்தஆலா பத்ர் என்ற அந்த போர்க்களத்தில் தான் அவர்களுக்கு கைரை வைத்திருந்தான். மாபெரும் வெற்றியைத் தந்ததோடு இஸ்லாமிய வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அந்தப் போர்க்களத்தை காரணமாக ஆக்கினான்.

وَاِذْ يَعِدُكُمُ اللّٰهُ اِحْدَى الطَّآٮِٕفَتَيْنِ اَنَّهَا لَـكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَـكُمْ وَيُرِيْدُ اللّٰهُ اَنْ يُّحِقَّ الْحَـقَّ بِكَلِمٰتِهٖ وَيَقْطَعَ دَابِرَ الْـكٰفِرِيْنَۙ‏

(எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்றுநிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துவிடுமென்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தில் நீங்கள் (அவ்விரண்டில்) பலமில்லாத (வர்த்தகக்) கூட்டத்தை (அடைய) விரும்பினீர்கள். எனினும்அல்லாஹ்வோ தன் வாக்கின்படி உண்மையை நிலைநாட்டி நிராகரிப்பவர்களின் வேரை அறுத்துவிடவே நாடினான். (அல்குர்ஆன் : 8:7)

لِيُحِقَّ الْحَـقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ‌‏

அன்றிஅவன் பாவிகள் வெறுத்தபோதிலும் பொய்யை அழித்து உண்மையை நிலைநாட்(டவே நா)டினான். (அல்குர்ஆன் : 8:8)

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ۙ

(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அல்குர்ஆன் : 48:1)

இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா வெற்றி என்று குறிப்பிடுவது ஹுதைபியா உடன்படிக்கையைப் பற்றியதாகும்

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு 1400 சஹாபாக்களுடன் உம்ரா செய்ய வேண்டும் என்று பெருமானார் ﷺ அவர்கள் மக்காவிற்கு புறப்பட்டு வந்த பொழுது மக்காவாசிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். ஹுதைபியா என்ற இடத்தில் ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது. உம்ரா செய்ய வேண்டும் என்ற பேராவலுடன் வந்த சஹாபாக்கள் தடுக்கப்பட்டது ஒரு ஏமாற்றம் என்றால், அங்கே நடைபெற்ற ஒப்பந்தத்தில் பேசப்பட்ட அனைத்து விஷயங்களும் சஹாபாக்களுக்கு கூடுதல் வேதனையை அளித்தது. இருந்தாலும் அந்த நிகழ்வை எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் தெளிவானதொரு வெற்றி’ என்று வர்ணிப்பதுவியப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளும்உருவான சூழ்நிலைகளும் உண்மையிலேயே ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் பெரியதொரு வெற்றிக்கான முன்னோடியாகத் திகழ்ந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு முஸ்லிம்களுக்கும்குரைஷிகளுக்கும் இடையே போர் மயமான சூழலே நிலவி வந்தது. இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பமோவாய்ப்போ அறவே இல்லாத நிலை இருந்தது. இந்தச் சமாதான உடன்படிக்கை இத்தகைய சூழ்நிலைக்கு முடிவு கட்டி விட்டது.

இப்போது முஸ்லிம்களும்முஸ்லிம் அல்லாதவர்களும் ஒருவரை யொருவர் சந்திக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இடையே குடும்ப மற்றும் வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட ஆரம்பித்தது. முஸ்லிம் அல்லாதவர்கள் எந்தவித தயக்கமோ பயமோ இல்லாமல் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தனர். பல நாட்கள் பல மாதங்கள் அங்கு தங்கி முஸ்லிம்களுடன் பழகினார்கள். எந்த நல்லடியார்களுடன் நாம் போரை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தோமோஅவர்களின் உள்ளங்களில் பகை உணர்வோவெறுப்போ இல்லை என்பதை உணர்ந்து கொண்டனர். இதனால் முஸ்லிம் அல்லாதவர்கள் தாமாகவே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். குரைஷித் தலைவர்கள் அவர்களின் உள்ளங்களில் விதைத்திருந்த தவறான எண்ணங்கள் தாமாகவே மறையத் தொடங்கின.

இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு முஸ்லிம்களின் எண்ணிக்கை 1400 ஆக இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக உயர்ந்தது. இதே காலகட்டத்தில் தான் குரைஷிகளின் புகழ் பெற்ற தலைவர்கள் சிலர் இஸ்லாத்தினால் கவரப்பட்டுமுஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கிமுஸ்லிம்களின் நண்பர்களாய்உற்ற துணைவர்களாய் மாறினார்கள். காலித் பின் வலித்அம்ரு பின் ஆஸ்உஸ்மான் இப்னு தல்ஹா ரலி ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்தனர். இந்த ஒப்பந்தத்தின் படிபத்தாண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்வது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். குரைஷிகளுடன் முஸ்லிம்கள் ஒரு போதும் முதலில் போரைத் தொடங்கியதில்லை. மாறாக எப்போதும் குரைஷிகள் தான் முதலில் போரைத் தொடங்கினார்கள். இந்த பத்தாண்டு போர் நிறுத்தம் என்பது அல்லாஹ்வின் பாதையில் இருந்து மக்களைத் தடுக்கும் குரைஷிகளின் கொடுமைக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.இப்படி ஹுதைபியா உடன்படிக்கை வெளிப்படையாக பார்க்கின்ற போது நஷ்டத்தைப் போன்று தெரிந்தாலும் அதில் எண்ணற்ற கைர்களை அல்லாஹ் வைத்திருந்தான்.

اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌  لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌  بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ 

எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தாம்! (நம்பிக்கையாளர்களே!) அதனால் உங்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விட்டதாக நீங்கள் எண்ணவேண்டாம். அது உங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. (அல்குர்ஆன் : 24:11)

அன்னை ஆயிஷா ரலி அவர்களின் மீது அவதுறு சொல்லப்பட்டது. அதனால் அவர்கள் மனமுடைந்து போனார்கள். பெருமானார்  அவர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இந்நிகழ்வு வெளிரங்கத்தில் ஷர்ராக தெரிந்தாலும் அது அவர்களுக்கு நன்மையாகவே அமைந்தது. அவர்கள் குறித்து பத்து வசனங்களை அல்லாஹ் இறக்கினான். உலக அழிவு நாள் வரைக்கும் அது மக்களால் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும். அந்த சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால் அந்த வசனங்கள் இறங்கியிருக்காது.

لَمَّا دَخَلَ عَلَيْهَا ابْنُ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ(٢٥) وَهِيَ فِي سِيَاقِ الْمَوْتِ، قَالَ لَهَا: أَبْشِرِي فَإِنَّكِ زَوْجَةُ رَسُولِ اللَّهِ ، وَكَانَ يُحِبُّكِ، وَلَمْ يَتَزَوَّجْ بِكْرًا غَيْرَكِ، وَأُنْزِلَ(٢٦) بَرَاءَتُكِ مِنَ السَّمَاءِ

ஆயிஷா ரலி அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போது அவர்களை சந்திக்க வந்த இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள் முஃமின்களின் அன்னையே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நபி ﷺ அவர்களின் அன்பு மனைவியாக இருந்து அவர்களின் தனிப்பெரும் பெற்றவர்கள். அவர்கள் கன்னிப் பெண்ணாக மணந்து கொண்டது உங்களை மட்டும் தான். மேலும் நீங்கள் தூய்மை யானவர்கள் என்பதை வான்மறையே கூறியிருக்கிறது. (இப்னு கஸீர்)

عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَحْش قَالَ: تفاخَرَت عائشةُ وزينبُ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَتْ زينب: أنا التي نزل تزوُّجي [مِنَ السَّمَاءِ](٢٨) قَالَ: وَقَالَتْ عَائِشَةُ: أَنَا الَّتِي نَزَلَ عُذري فِي كِتَابِهِ، حِينَ حَمَلَنِي ابْنُ الْمُعَطَّلِ عَلَى الرَّاحِلَةِ. فَقَالَتْ لَهَا زَيْنَبُ: يَا عَائِشَةُ، مَا قُلْتِ حِينَ رَكَبْتِيهَا؟ قَالَتْ: قُلْتُ: حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ. قَالَتْ: قُلْتِ كَلِمَةَ الْمُؤْمِنِينَ

ஒரு நாள் அன்னை ஜைனப் ரலி அவர்களும் அன்னை ஆயிஷா ரலி அவர்களும் பேசிக் கொண்ட நேரத்தில் அன்னை ஜைனப் ரலி அவர்கள் என்னை பெருமானார் ﷺ அவர்களுக்கு அல்லாஹ்வே மனமுடித்து வைத்தான் என்றார்கள். அதற்கு ஆயிஷா ரலி அவர்கள் நான் தூய்மையானவள் என்பதற்கு சான்றாக அல்லாஹ் குர்ஆன் வசனங்களை இறக்கி விட்டான் என்றார்கள். (இப்னு கஸீர்)

எனவே அனைத்திலும் நன்மை இருக்கிறது. அனைத்தையும் நன்மையாகவே பார்க்க வேண்டும். அதுவே ஒரு பரிபூரண இறை நம்பிக்கையாளனின் பார்வை.   

மிகுந்த எதிர் பார்ப்பிற்கிடையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் நினைத்த ஆட்சி அமையப் பெற வில்லை. யார் வரக்கூடாது என்று அனுதினமும் படைத்த ரப்பிடம் மன்றாடி அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தோமோ அவர்களே மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது அனைவருக்கும் மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது.நாட்டின் சூழலும் நாட்டின் மக்களின் மனோ நிலையும் இந்த தடவை நிச்சயம் அவர்கள் வர மாட்டார்கள் என்றே உணர்த்தியது. என்றாலும் அவர்களே வந்து விட்டார்கள்.

எனவே நாம் செய்த துஆக்களெல்லாம் வீண் போகி விட்டது, இறைவன் நம்மை கை விட்டு விட்டான் என்ற எண்ணம் நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்கிலாம். ஆனால் உண்மையில் இறைவன் நம்மை கை விட வில்லை என்பதை ஆரம்பமாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேவையான இடங்களை அவர்கள் கைப்பற்றியிருந்தாலும் தனிப் பெரும்பான்மையோடு அவர்கள் வர வில்லை. கூட்டனிக் கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.

தனிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றால் தான் எந்த சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் பாஸ் பண்ண முடியும்.ஆனால் இப்போது அது அவர்களுக்கு எட்டா கனி ஆகி விட்டது.கூட்டணித் தலைவர்களை நம்பி இயங்க வேண்டிய சூழ்நிலைக்கு பாஜகவைக் கொண்டு வந்திருக்கிறது.

'அடுத்த மாசம் NRC கொண்டு வருவோம்; அடுத்து பொது சிவில் சட்டம், அதற்கு அடுத்து நாட்டோட பெயரை பாரதம் என்று மாற்றுவோம், பிறகு ஸ்ட்ரைட்டா இந்து ராஷ்டிரம் தான், என்றெல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்த இந்துத்துவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. இவை எதுவுமே இனிமேல் இன்ஷா அல்லாஹ் நிகழ வாய்ப்பில்லை. சொல்லப் போனால், இப்போது இருக்கும் சிஏஏ கூடத்  தொடருமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இதில் கூடுதல் சுவாரசியம், முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்பது தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று.

மட்டுமல்ல, இதுவரை அவர்கள் செய்ததைப் போன்று இனிமேல் இந்தியாவின் சிறுபான்மையினர் மீது சுலபத்தில் கை வைத்து விட முடியாது. நிதிஷ், நாயுடு மற்றும் வலுவான எதிர்க் கட்சிகள் தொட விட மாட்டார்கள். ஊடகங்களின் சுதந்திரம் மறு கட்டமைக்கப்படும். அமுலாக்கத் துறையையும், வருமான வரித் துறையையும் கண்ட மேனிக்கு துஷ்பிரயோகம் செய்வது குறையும். 'புல்டோசர் பாபா' இனிமேல் புல்டோசரைத் தொட முடியாது. ராம நவமி அன்று மசூதிகள் மேல் ஏறி காவிக்கொடி கட்ட முடியாது. கங்கையில் ஆரத்தி எடுப்பது, குமரியில் தியானம் செய்வது, போன்ற வெத்துவேட்டு ஸ்டண்ட்களை எல்லாம் நிறுத்தி விட்டு உண்மையான அரசுப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியது வரும்.இந்த வகையில் பார்த்தால் இது நமக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். பாம்மைப் பிடிக்க முடியா விட்டாலும் பாம்பின் பல்லைப் பிடுங்கி விட்டோம் என்று சந்தோசப் பட வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான்.அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன்.கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன.அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.!

அன்றைக்கு அவருக்கு அந்த கம்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைக்காமல் போனது அவருக்கு நலவாக அமைந்து விட்டது. அனைத்திலும் நன்மை இருக்கிறது என்ற அடிப்படையை புரிந்து கொண்டவர்கள் இந்த தேர்தல் முடிவையும் நன்மையாகவே பார்க்க வேண்டும். தேர்தலின் இந்த முடிவை அல்லாஹ் நமக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நலவாகவே ஆக்கித் தருவானாக! 

10 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அற்புதமான தொகுப்பு

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் சூப்பர்
    அல்லாஹு தங்கள் கல்வியில் பரகத் செய்வானாக

    ReplyDelete
  3. Masha Allah moulana

    ReplyDelete
  4. தெளிவான குறிப்புகள் தந்த ஹழ்ரத் அவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் கல்வியில் பரகத் செய்வானாக

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் அற்புதமான கட்டுரை

    ReplyDelete
  6. بارك الله فى جهدك

    ReplyDelete
  7. ஆலிம் சமூகத்திற்கு எளிய முறையில் விளங்கிடவும் பயானை பேசுகின்ற பாணியை சுலபமாக்கியும் இருக்கிறீர்கள். துஆ செய்கிறோம்

    ReplyDelete
  8. நீண்ட நாட்களுக்கு ஹழ்ரத் பிறகு அவர்களின் முயர்ச்சி தொடரட்டும்

    ReplyDelete