Friday, June 21, 2024

பிள்ளைகளின் வாழ்வை அழித்து விட வேண்டாம்

அல்லாஹ் நம் வாழ்வில் நமக்கு எண்ணற்ற நிஃமத்துக்களை வழங்கியிருக்கிறான். இஸ்லாம், ஆரோக்கியம், பொருளாதாரம், ரிஸ்க், நீர், குழந்தைகள். இவைகளெல்லாம் அல்லாஹ் நமக்களித்த நிஃமத்துக்களில் கட்டுப்பட்டவை. இந்த நிஃமத்துக்களுக்கு முதலில் அல்லாஹ்விற்கு ஷுக்ர் செய்ய வேண்டும். இரண்டாவது அவைகளுடைய ஹக்குகளைப் பேண வேண்டும். மூன்றாவது அவைகளைப் பாதுகாக்க வேண்டும்.

பொருளாதாரம் என்பது அல்லாஹ் நமக்கு அளித்த நிஃமத். முதலில் அதைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இரண்டாவது பொருளாதாரக் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும். மார்க்கம் அனுமதித்த வழிகளில் அதை சம்பாதிக்க வேண்டும். தான தர்மங்கள், மிஸ்கின்களுக்கு உணவளித்தல், நற்காரியங்களுக்காக செலவழித்தல், பொருளாதாரக் கடமையாக இருக்கிற ஜகாத்தை நிறைவேற்றுதல், இவ்வாறு பொருளாதாரத்தை அல்லாஹ் எந்த நோக்கத்திற்காக நம்மிடம் வழங்கினானோ அந்த நோக்கத்திற்காக அதை பயன்படுத்த வேண்டும். மூன்றாவது அல்லாஹ் கொடுத்த அந்த பொருளாதாரத்தைப்  பாதுகாக்க வேண்டும்.

பொருளாதாரம் வீணாக்கப்படுவதை அல்லாஹ் விரும்புவதில்லை.

إنَّ اللهَ يرضى لكم ثلاثًا ويسخَطُ ثلاثًا: يرضى لكم أنْ تعبُدوه ولا تُشرِكوا به شيئًا وأنْ تعتصموا بحبلِ اللهِ جميعًا وأنْ تُناصِحوا مَن ولّاه اللهُ أمرَكم ويسخَطُ لكم قيل وقال وإضاعةَ المالِ وكثرةَ السُّؤالِ

அல்லாஹ் உங்களிடம் மூன்று விஷயங்களை விரும்புகின்றான். மூன்றை விரும்புவதில்லை. (மற்றொரு அறிவிப்பில் ‘அவன் மூன்று விஷயங்களின் காரணமாக உங்கள் மீது கடும் சீற்றம் கொள்கின்றான்’ என்கிற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன). அவன் உங்களிடம் விரும்புகின்ற விஷயங்கள் என்னவெனில், (முதலாவதாக) நீங்கள் அவனை வணங்குவதும், அவனுக்கு இணையாக எதனையும் எவரையும் ஆக்கிக் கொள்ளாமல் இருப்பதுமாகும். (இரண்டாவதாக) மேலும் நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்வதாகும். (மூன்றாவதாக) இறைவன் உங்களுக்குத் தலைவராக ஆக்கியிருக்கின்ற மனிதரின் நலம் நாடுவதாகும்.1 அவன் உங்களிடம் விரும்பாத விஷயங்கள்: (1) வீண் அரட்டையும், பயனற்ற பேச்சும்.2 (2) அதிகம் கேள்வி கேட்பது (3) செல்வத்தை விரயமாக்குதல். (முஸ்லிம் : 1715)

அல்லாஹ் நமக்களித்த நிஃமத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்.அழிந்து போய் விடாதவாறு அதில் கவனமாக இருக்க வேண்டும்.

நபி ஸல் அவர்கள் நிஃமத்துக்கள் நீங்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அல்லாஹ்விடம் துஆ செய்பவர்களாக இருந்தார்கள்.

اللهم إني أعوذ بك من زوال نعمتك

இறைவா நிச்சயமாக நான் உனது நிஃமத்து என்னிலிருந்து நீங்கிப் போவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

அல்லாஹ் நமக்கு செய்த மிகப்பெரிய நிஃமத் என்பது நம் பிள்ளைச் செல்வங்கள். அல்லாஹ் நமக்கு பல்வேறு செல்வங்களைக் கொடுத்திருக்கிறான். பொருட்செல்வம், மனைச்செல்வம்,கல்விச்செல்வம். இப்படி நமக்களித்த செல்வங்கள் நிறைய உண்டு.ஆனால் அல்லாஹ் நமக்கு கொடுத்த செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த விலை மதிக்க முடியாத செல்வம் குழந்தைச் செல்வம்.

يا زكريا إنا نبشرك بغلام

ஜகரிய்யாவே! குழந்தையைக் கொண்டு உங்களுக்கு நாம் சுபச்செய்தி சொன்னோம் என்று குழந்தையின் பிறப்பை சுபச்செய்தி என்று கூறுகிறான்.

ஒருவர் இறந்த பிறகும் அவரின் குழந்தைகள் மூலம் அவருக்கு நன்மைகளும் பலன்களும் கிடைத்துக் கொண்டிருக்கும்.

أي رجل مات وترك ذرية طيبة أجرى الله مثل أجر عملهم ولم ينقص من أجورهم شيئا قرطبي

யார் நல்ல சந்ததிகளை விட்டு விட்டு மரணித்து விடுகிறாரோ அல்லாஹுத்தஆலா அவருக்கு அவர்களின் கூலியைப் போன்றதைக் கொடுக்கிறான். அவர்களின் கூலியில் இருந்து எதையும் குறைப்பதில்லை. (குர்துபி)

مر عيسي ابن مريم عليه السلام على قبر ، فرأى ملائكة العذاب يعذبون ميتا ، فلما انصرف من حاجته مر على القبر ، فرأى ملائكة الرحمة معهم أطباق من نور ، فتعجب من ذلك ، فصلى ودعا الله تعالى ، فأوحى الله تعالى إليه : يا عيسى ، كان هذا العبد عاصيا ، ومذ مات كان محبوسا في عذابي ، وكان قد ترك امرأة حبلى فولدت ولدا وربته حتى كبر ، فسلمته إلى الكتاب ، فلقنه المعلم بسم الله الرحمن الرحيم ، فاستحييت من عبدي أن أعذبه بناري في بطن الأرض وولده يذكر اسمي على وجه الأرض

ஹழ்ரத் ஈஸா நபி அலை அவர்கள் ஒரு மண்ணரையைக் கடந்து சென்றார்கள்.அதிலுள்ளவர் வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தார்.சில நாட்கள் கழிந்து அதே மண்ணரையைக் கடந்து போன போது அதிலுள்ள மனிதர் வேதனைகள் நீக்கப்பட்டு சுகமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்து அல்லாஹ்விடம் அது குறித்து கேட்டார்கள். செய்த பாவங்களுக்காக அவர் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் விட்டுச் சென்ற அவருடைய குழந்தை இப்போது மத்ரஸாவிற்கு சென்று என்னுடைய பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது. அவருடைய குழந்தை பூமியின் மேற்பரப்பில் எனது பெயரை சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் பூமிக்கு உள்ளே அவருக்கு வேதனையைத் தருவதற்கு நான் வெட்கப்படுகிறேன் என்று அல்லாஹ் கூறினான். (தஃப்ஸீர் ராஸீ

எனவே தான் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதை மார்க்கம் ஊக்கப்படுத்துகிறது.

قالت أم سليم: يا رسول الله، خادمك أنس أدع الله له.فقال: (اللهم أكثر مال وولده وبارك له فيما أعطيته بخاري

உம்மு சுலைம் ரலி அவர்கள் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே இதோ உங்களுடைய பணியாளர் அனஸ் இருக்கிறார். அவருக்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆ செய்யுங்கள் என்று சொன்ன பொழுது நபி ஸல் அவர்கள் இறைவா இவருடைய பொருளையும் குழந்தைகளையும் அதிகப்படுத்துவாயாக! அவருக்கு நீ வழங்கியதில் பரக்கத் செய்வாயாக என்று துஆ செய்தார்கள். (புகாரி ; 6380)

جاءَ رجلٌ إلى النَّبيِّ - صلَّى اللَّهُ علَيهِ وعلَى آلِهِ وسلَّمَ – فقالَ : إنِّي أصبتُ امرأةً ذاتَ جمالٍ وحسَبٍ وأنَّها لا تَلدُ ، أفأتَزَوَّجُها قالَ : لا ثمَّ أتاهُ الثَّانيةَ فنَهاهُ ثمَّ أتاهُ الثَّالثةَ فقالَ : تزَوَّجوا الودودَ الولودَ فإنِّي مُكاثرٌ بِكُم الأُمَمَ

ஒரு மனிதர் நபி இடத்தில் வந்து ஒரு பெண் நல்ல அழகும் பாரம்பரியமும் மிக்கவள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்க மாட்டாள். அவளை நான் திருமணம் முடித்துக் கொள்ளலாமா என்று கேட்டார். வேண்டாம் என்றார்கள். இரண்டாவது முறை வந்து கேட்ட போது அவரைத் தடுத்து விட்டார்கள். மூன்றாவது முறை வந்த போதும் அவரைத் தடுத்து விட்டார்கள். அப்போது அதிகம் அன்பு கொள்ளக்கூடிய அதிகம் குழந்தையைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள். ஏனென்றால் மறுமையில் என் சமுதாயம் அதிகம் இருப்பதைக் கொண்டு நான் பெருமைப் படுவேன் என்றார்கள். (அஸ்ஸஹீஹுல் முஸ்னத் ; 1143)

அல்லாஹ் நமக்கு வழங்கிய பெரும் நிஃமத்தாக இருக்கிற குழந்தைகள் விஷயத்தில் இன்றைக்கு நாம் சரியாக நடக்கின்றோமா என்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். குழந்தையைத் தந்த ரப்புல் ஆலமீனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் வருவதில்லை. அந்த குழந்தைகளை சரியாக, மார்க்கம் வழிகாட்டிய பிரகாரம் வளர்ப்பதும் இல்லை.

குழந்தைகள் நல்லவர்களாக உருவாக்கப்பட வேண்டும். குழந்தைச் செல்வத்தைப் பற்றி சொல்கின்ற இடங்கள் அனைத்திலும் அல்லாஹ் ஸாலிஹான என்ற வார்த்தையை சேர்த்தே கூறுகிறான்.

நபி இப்ராகீம் (அலை) அவர்கள் இறைவனிடம் குழந்தை வரம் வேண்டியதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்). (அல்குர்ஆன் : 37:100)

 

அதுபோல நபி ஸகரிய்யா தனக்கு ஒரு வாரிசு தருமாறு இறைவனிடம் வேண்டியது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

 

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌  اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ

அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் : 3:38)

குழந்தைகள் அல்லாஹ்வினால் நமக்கு வழங்கப்பட்ட அமானிதம்.அந்த அமானிதத்தைப் பேண வேண்டும்.அவர்களை நல்லவர்களாக உருவாக்க வேண்டும்.

يقول الغزالي رحمه الله: "الصبي أمانة عند والديه، وقلبه الطاهر جوهرة نفيسة ساذجة خالية من كل نقش وصورة، وهو قابل لكل نقش ومائل إلى كل ما يمال إليه، فإن عُوِّد الخير وعُلِّمه نشأ عليه وسعد في الدنيا والآخرة، وشاركه في ثوابه أبواه، وكل معلم له ومؤدب. وإن عُوِّد الشر وأهمل إهمال البهائم شقي وهلك، وكان الوزر في رقبة القيِّم عليه والوالي له" (إحياء علوم الدين:106/4)

குழந்தைகள் பெற்றோர்களிடம் தரப்பட்ட அமானிதமாகும். அவர்களின் உள்ளங்கள் தூய்மையானதும் விலை மதிக்க முடியாத மாணிக்கமும் ஆகும். எந்த பதிவுகளும் இல்லாத காலியான எதையும் ஏற்றுக்கொள்ளும் உள்ளங்களாகும். எதன் பக்கம் திருப்பப்படுகிறதோ அதன் பக்கமே திரும்பும். எனவே நல்லதை பழக்கமாகி நல்லதையே கற்றுக் கொடுத்தால் அதன்படியே அவர்கள் வளர்ந்து உலகத்திலும் மறுமையிலும் பாக்கியம் பெருவார்கள். அவர்களுக்கு கிடைத்த கூலியில் அவர்களுடைய பெற்றோர்களும் அவர்களுக்கு கல்வி போதித்தவர்களும் ஒழுக்கம் கற்பித்தவர்களும் கூட்டாகி விடுவார்கள். அவர்களுக்கு தீமையை பழக்கமாக்கி அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அவர்கள் பாக்கியமற்றவர்களாக அழிந்து போய் விடுவார்கள். அவர்களுடைய குற்றத்தில் அவர்களுடைய பொறுப்பாளர்களும் கூட்டாகி விடுவார்கள் என கஜ்ஜாலி இமாம் அவர்கள் கூறுகிறார்கள். (இஹ்யா)

அதேபோன்று குழந்தை என்ற நிஃமத்தைப் பாதுகாக்க வேண்டும்.இன்றைக்கு குழந்தைகளைப் பாதுகாப்பதில் அதிகம் பெற்றோர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள். இந்த மோசமான காலாச்சார சீரழிவிலிருந்து பாதுகாப்பதில்லை. குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதில்லை.அதனால் இன்றைய தலைமுறை தவறானவர்களோடு பழகி தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.

இன்னும் பல பெற்றோர் நல்லதா கெட்டதா பயன் தருமா பயன் தராதா ஆபத்தா ஆபத்து இல்லாயா என்றெல்லாம் யோசிக்காமல் பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அதன் மூலம் பிள்ளைகளின் வாழ்க்கையை அழித்து விடுகிறார்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதல்ல. அது ஒரு கலை, அது ஒரு அறிவியல். இன்றைய சூழலில் அது பெரும் சவால். ஒரு காலத்தில் சாதாரணமாக 8,10 குழந்தைகளை பெற்று நல்ல முறையில் வளர்த்து உருவாக்கினார்கள். ஆனால் இன்றைக்கு 2 குழந்தைகளை வளர்ப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. "ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்; இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்'. அது நேற்றைய தாரக மந்திரம். தற்போது ஒருபடி மேலே சென்று பெரும்பாலானோர் ஒன்றுடன் நிறுத்திக்கொள்கின்றனர்.

காரணம், இன்று காலம் மாறிப் போய் விட்டது. வாழ்க்கை முறை மாறி விட்டது. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, சிதறி தனிக் குடும்பங்கள் பெருகி விட்டன. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தை வளர்ப்பு பெற்றோர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதென்பது உண்மைதான்.

எந்த ஒரு பெற்றோரும் தன்னுடைய குழந்தையை ஒழுக்க மற்றவர்களாகவும் சமுதாயத்தால் வெறுக்க கூடியவனாகவும் வளர்க்க விரும்ப மாட்டார்கள். ஆனால் சில நேரங்களில் பெற்றோர்கள் கொடுக்கும் அதிக சுதந்திரமும் அதிகப்படியான செல்லமும் குழந்தைகளை அப்படி மாற்றி விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் சில விஷயங்கள் குழந்தைகள் கேட்கும் போது அவற்றிற்கு மறுப்பு சொல்லவும் அதற்கான காரணத்தை தெளிவாக அவர்களிடம் கூறி புரிய வைக்கவும் முயல வேண்டும்.

அதற்கு பதிலாக அவர்கள் என்ன கேட்டாலும் செய்து விடுவதும் வாழ்க்கையில் ஏமாற்றங்களே சந்திக்க கூடாது என நினைப்பதும், விரும்பியது அனைத்தையும் கொடுத்து வளர்ப்பதும் அவர்களை சில தவறான செயல்களை செய்ய வைக்கிறது. வாழ்க்கையில் சில காலகட்டங்களில் தாங்கள் விரும்பியது கிடைக்காத போது அது கிடைப்பதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராகிறார்கள்.

சமீப காலமாக பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள் என்று சொல்லி அதி வேக இரு சக்கர வாகனங்களை வாங்கித் தந்து விடுகிறார்கள். பல வீடுகளில் எப்போதும் அடம்பிடித்து எதையும் சாதித்து விடுகின்ற பிள்ளைகள் அடம் பிடித்து அதி வேக பைக்களை வாங்கி விடுவதையும் அதனால் தங்களின் மதிப்புமிக்க உயிரையும் விட்டு விடுவதையும் அதற்குப் பிறகு தவறு செய்து விட்டோமே என்று பெற்றோர்கள் கைசேதப்படுவதையும் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பெற்றோர்கள் செய்யக்கூடிய தவறு, குழந்தைகளை சிறு வயதிலிருந்தே அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து பழக்கி விடுகிறார்கள். குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எது அவசியம் எது தேவை என்பதை பெற்றோர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். குழந்தைகள் கேட்பது அந்த நேரத்தில் அவர்களுக்கு அவசியமில்லாதது, ஆபத்தானது என் உணர்ந்தால் அதை எக்காரணத்தைக் கொண்டும் வாங்கித்தரக்கூடாது.அதே சமயத்தில் இது வேண்டாம், இது ஆபத்து,அதற்குப் பதிலாக இதை வாங்கித்தருகிறேன் என்று அதற்கான மாற்று வழிகளை கூறி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இந்த இடத்தில் தான் பெற்றோர்கள் தவறு செய்து விடுகிறார்கள். ஒன்று கேட்டதையெல்லாம் யோசிக்காமல் வாங்கித்தந்து விடுகிறார்கள். அல்லது முடியாது என்று கராராக பேசி அவர்களின் மனங்களை உடைத்து விடுகிறார்கள்.

இந்த விஷயத்தில் நபி ஸல் அவர்களின் அழகிய நடைமுறையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

روى أبو الورد بن ثمامة : قال : قال علي لابن أعْبُد : "أَلا أُحدِّثُكَ عنِّي وعن فاطمةَ بنت رسولِ الله -صلى الله عليه وسلم- ، وكانت من أحبِّ أهله إِليه ، وكانت عندي؟

قلتُ : بلى ، قال : إِنها جَرَّتْ بالرَّحا ، حتى أَثَّرت في يدها ، واستقتْ بالقِرْبة حتى أَثَّرَت في نَحْرِها ، وَكَنَسَتِ البيتَ حتى اغبرَّت ثيابُها ، فأتى النبيَّ -صلى الله عليه وسلم- خَدَم ، فقلتُ : لو أتيتِ أباكِ فسألتِه خادما ؟ فأتته فوجدتْ عندهُ حُدَّاثا ، فرجعت.

فأتاها من الغَدِ ، فقال : (ما كان حاجتُكِ ؟) فسكتت، فقلتُ : أنّا أُحَدِّثُكَ يا رسولَ الله : جَرَّت بالرَّحى حتى أَثَّرَتْ في يَدِها ، وحَمَلَت بالقِربة حتى أَثَّرتْ في نَحرها ، فلمَّا أن جاءَ الخَدمُ ، أمرتُها أن تأْتِيَكَ ، فتَستَخْدِمَكَ خادما ، يَقيها حَرَّ ما هي فيهِ.

قال، أي أبوها رسول الله صلى الله عليه وسلم : (اتَّقي الله يا فاطمةُ ، وأَدِّي فريضةَ ربِّكِ ، واعملي عَمَلَ أهلِكِ ، وإذا أَخَذْتِ مَضجعكِ فَسَبِّحي ثلاثا وثلاثين ، واحمَدي ثلاثا وثلاثين ، وكَبِّري أربعا وثلاثين، فتلك مائة ، فهي خَير لَكِ من خادم ، قالت : رَضِيتُ عن الله وعن رسوله) زاد في رواية : (ولَم يُخْدِمها). [البخاري ومسلم و أبو داود.]

தண்ணீர் இரைத்தும் திருகை அரைத்தும் பாத்திமா ரலி கையில் காப்புக் காய்த்த்தைப் பார்த்த அலி ரலி , பெருமானாருக்கு அடிமைகள் கிடைத்திருப்பதை அறிந்து ஒரு அடிமை வேண்டுமென கேட்டுவர பாத்திமா ரலியை அனுப்பினார். அவர் வந்த நேரத்தில் பெருமானார் பேசிக் கொண்டிருந்தார்கள்.எனவே அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள்.மறுநாள் பெருமார் ஸல் அவர்கள் ஃபாத்திமா ரலி அவர்களைத்தேடி வந்து விபரம் கேட்டார்கள்.அவர்கள் விஷயத்தைச்சொன்ன போது எனது அருமை மகளே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்று! வீட்டின் கடமைகளிலும் கவனம் செலுத்து! படுக்கைக்கு சென்றால் 33 தடவை சுப்ஹானல்லாஹ் 33 தடவை அல்ஹம்து வில்லாஹ் 34 தடவை அல்லாஹு அக்பர் என்று சொல்.இது நீ கேட்டதை விட சிறந்தது என்று கூறினார்கள். அதற்கு ஃபாத்திமா ரலி அவர்கள் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொருந்திக் கொண்டேன் என்றார்கள்.

தன் மகள் ஃபாத்திமா தன்னிடத்தில் ஒரு விஷயத்தைக் கேட்கின்ற போது, முடியாது, உனக்கு தர முடியாது என்று கூற வில்லை. கேட்டவுடன் கொடுத்து விடவும் இல்லை. அது தன் மகளுக்கு வேண்டாம் என்று யோசிக்கிறார்கள்.அதை விட இதுவே சிறந்தது என்பதை தெளிவுபடுத்துகிறார்கள். அவர்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதைத்தான் இன்றைய பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும்.

குழந்தைகள் விஷயத்தில் மட்டுமல்ல, அனைவர் விஷயத்திலும் இதையே பின்பற்ற வேண்டும்.

عن أبي ذر رضي الله عنه قال: قُلتُ: يَا رسُولَ الله، أَلاَ تَسْتَعْمِلُنِي؟ فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةٌ، وَإِنَّهَا يَوْمَ القِيَامَةِ خِزيٌ وَنَدَامَةٌ، إِلاَّ مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيهِ فِيهَا

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள்.

நபி ஸல் அவர்களின் வாழ்வில் அனைத்திற்கும் முன்மாதிரி இருக்கிறது என்று இறைவன் கூறுகிறான். பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்திலும் அவர்களின் வாழ்வில் அழகிய முன்மாதிரி உண்டு. அதைப் பின்பற்றினால் சிறந்த தலைமுறையை உருவாக்கலாம். நம் குழந்தைகளைப் பாதுகாக்கலாம். அல்லாஹ் அருள் புரிவானாக! 

3 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ங

    ReplyDelete
  2. ஜஸாகல்லாஹு கைர் ஹழ்ரத்

    ReplyDelete
  3. Super Masha Allah

    ReplyDelete