Thursday, July 25, 2024

இஸ்லாம் கூறும் பொருளீட்டல்

 

இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களைக் குறித்தும் பேசிய உயர்ந்த மார்க்கம்.வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான வழிகாட்டுதலையும் மனித சமூகத்திற்கு கொடையாக தந்த உன்னத மார்க்கம்.அனைத்தையும் வழிகாட்டிய இஸ்லாம் பொருளாதாரம் குறித்தும் பொருளீட்டல் குறித்தும் அழகான வழிகாட்டுதலை வழங்கியிருக்கின்றது. இஸ்லாத்தைப் பொருத்த வரை தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் இவை மட்டும் கடமையல்ல. குடும்பத்திற்காக உழைப்பதும் சம்பாதிப்பதும் கடமை தான்.

طلبُ كَسبِ الحلالِ فريضةٌ بعدَ الفريضَةِ

ஹலாலான சம்பாத்தியத்தைத் தேடுவது கடமைக்குப் பின் இன்னொரு கடமையாகும். (தப்ரானீ)

நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் இயற்கையிலேயே மனிதனுக்கு பொருளின் மீது ஆசையைக் கொடுத்திருக்கிறான்.அதைக் கொண்டு தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் சீராக இயங்குவதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளை செய்ய வேண்டும்.விவசாயி விவசாயம் செய்ய வேண்டும். பொருட்களைத் தயாரிக்கக்கூடியவர்கள் அந்த வேலைகளை சரியாக செய்ய வேண்டும். சுத்தம் செய்பவர்கள் அவர்களின் பணிகளை செய்ய வேண்டும். வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும்.ஆட்சியாளர்கள் ஆட்சி செய்ய வேண்டும்.எல்லா காரியங்களும் சரியாக நடந்தால் மட்டுமே உலகம் சரியாக இயங்கும். எல்லா காரியங்களும் நடைபெற வேண்டுமென்றால் மனிதர்களுக்கு பொருளின் மீது தேட்டமும் ஈடுபாடும் இருக்க வேண்டும். பொருளின் மீது தேவையும் தேட்டமும் இல்லாதவர் எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார். எல்லா காரியங்களும் சரியாக நடந்து அதன் மூலம் உலகம் சீராக இயங்குவதற்காக அல்லாஹ் மனிதனுக்கு பொருள் மீது ஆசையை ஏற்படுத்தியிருக்கிறான்.

ஆனால் இன்றைக்கு அந்த பொருளாசை மிகைத்து, வரும் பொருளாதாரம் ஹலாலா ஹராமா என்று யோசிக்காமல் சிந்திக்காமல் பணம் வந்தால் போதும்.அது எப்படி வந்தால் என்ன ? எங்கிருந்து வந்தால் என்ன என்ற எண்ணத்தில் இன்றைக்கு மனிதர்கள் இறையச்சம் இல்லாமல் பேணுதல் இல்லாமல் பொருளீட்டுகின்ற நிலையைப் பார்க்கிறோம்.

இஸ்லாம் பொருளீட்டுவதை ஆர்வப்படுத்துகின்ற அதே நேரம் அந்த பொருளீட்டல் சரியாக முறையாக மார்க்கம் அனுமதித்த வழிகளில் அமையப்பெற வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறது.

ஒரு முஃமினைப் பொருத்த வரை ஹலால் ஹராமில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஹலாம் ஹராமில் பேணுதல் இல்லாத ஒருவர் தன்னை இறையச்சமுள்ளவர், அல்லாஹ்வை அஞ்சி வாழ்பவர் என்று சொன்னால் அதை ஏற்க முடியாது. காரணம் இறையச்சத்தின் முதல் அளவுகோலே ஹலால் ஹராமைப் பேணி வாழ்வது தான்.

عن ميمون بن مهران قال: لا يكون الرجل من المتقين، حتى يحاسب نفسه أشد من محاسبة شريكه، حتى يعلم من أين مطعمه، ومن أين ملبسة، ومن أين مشربه: أمن حلال ذلك، أم من حرام.]

உணவு எங்கிருந்து வந்தது ஆடை எங்கிருந்து வந்தது நீர் எங்கிருந்து வந்தது அது ஹலாலா ஹராமா என்று ஒருவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்ளாத வரை அவர் இறையச்சமுள்ளராக ஆக முடியாது என மைமூன் பின் மிஹ்ரான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

 

ஹலாலான சம்பாத்தியம் தான் அனைத்திற்குமான அடிப்படை. நாம் செய்கின்ற அமல்கள் ஏற்கப்படுவதற்கும் துஆக்கள் ஏற்கப்படுவதற்கும் நம் சம்பாத்தியம் ஹலாலாக இருக்க வேண்டும். நாம் உண்ணுகிற உணவுக்கும் உடுத்துகிற உடைக்கும் நாம் சம்பாதிக்கும் பணத்திற்கும் வணக்கங்களுக்கும் தொடர்புண்டு. அவைகள் தூய்மையாக இருந்தால் நம் வணக்கங்கள் தூய்மையாக இருக்கும். அவைகள் கெட்டுப் போனால் நம் வணக்கமும் கெட்டுப் போகும்.

يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌  اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ

(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல்குர்ஆன் : 23:51)

عَنْ ضَمْرَة بْنِ حَبِيبٍ، أَنَّ أُمَّ عَبْدِ اللَّهِ، أُخْتَ(٥) شَدَّادِ بْنِ(٦) أَوْسٍ بَعَثَتْ إِلَى النَّبِيِّ ﷺ بِقَدَحِ لَبَنٍ عِنْدَ فِطْرِهِ وَهُوَ صَائِمٌ، وَذَلِكَ فِي أَوَّلِ النَّهَارِ وَشِدَّةِ الْحَرِّ، فَرَدَّ إِلَيْهَا رَسُولَهَا: أنَّى كَانَتْ لَكِ الشَّاةُ؟ فَقَالَتِ: اشْتَرَيْتُهَا مِنْ مَالِي، فَشَرِبَ مِنْهُ، فَلَمَّا كَانَ الْغَدُ أَتَتْهُ أُمُّ عَبْدِ اللَّهِ أُخْتُ(٧) شَدَّادٍ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ(٨) ، بعثتُ إِلَيْكَ بِلَبَنٍ مَرثيةً(٩) لَكَ مِنْ طُولِ النَّهَارِ وَشِدَّةِ الْحَرِّ، فَرَدَدْتَ إليَّ الرَّسُولَ فِيهِ؟. فَقَالَ لَهَا: "بِذَلِكَ أُمِرَتِ الرُّسُلُ، أَلَّا تَأْكُلَ إِلَّا طَيَّبًا، وَلَا تَعْمَلَ إِلَّا صَالِحًا"(١٠) .

ஷத்தாது பின் அவ்ஸின் சகோதரி உம்மு அப்துல்லாஹ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:ஒரு நாள் நபி(ஸல்)அவர்கள் நோன்பு  திறப்பதற்காக ஒரு கோப்பையில் ஆட்டுப்பாலை அவர்களிடம் கொடுத்து அனுப்பினேன்.ஏனெனில் அன்றைய தினம் பகலும் நீளம்,வெயிலும் அதிகம்.ஆனால் நபி(ஸல்)அவர்கள் அதை பெற்றுக்கொள்ளாமல் அந்த ஆடு எப்படி கிடைத்தது?என்று விளக்கம் கேட்டு என்னிடம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.பிறகு நான் "என்னுடைய சொந்த பொருளிலிருந்துதான் அதை வாங்கினேன் என்று சொல்லி அனுப்பியவுடன் அதை அருந்தினார்கள்.மறுநாள் அவர்களிடம் வந்து,நான் உங்களுக்கு பால் கொடுத்து அனுப்பியபோது,ஏன் விளக்கம் கேட்டு அனுப்பினீர்கள்?என்று நான் கேட்டபோது நபி (ஸல்) அவர்கள்: இவ்வாறு தான் இறைத்தூதர்கள் கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்று சொல்லி இவ்வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:

 يايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள்;நல்ல காரியத்தையும் செய்யுங்கள்;நிச்சியமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன்.(அல் குர்ஆன் 23:51)

இந்த வசனத்தில் "நற்செயல் புரியுங்கள்" என்பதற்கு முன்பாக "ஹலாலானவற்றை உண்ணுங்கள்"என்று இறைவன் சொல்வதற்கு காரணம்ஹலாலானவற்றை உண்பதின் மூலம்தான் நல்ல அமல்களுக்குரிய தவ்பீக் கிடைக்கும்.ஹராமான உணவால் நற்செயல் புரிவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதுடன் நற்காரியங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது.

فإن العبادة مع أكل الحرام كالبناء على أمواج البحر

ஹராமை சாப்பிட்டுக் கொண்டே செய்யப்படுகின்ற வணக்கம் கடல் அலைகள் மீது கட்டப்படும் கட்டிடத்தைப் போல என்று கூறுவார்கள். இரண்டுமே பயனற்றது தான்.

அனுமதிக்கப்படாத உணவு அது ஒரு பிடியாக இருந்தாலும் அதன் பாதிப்பு அமல்களில் வெளிப்படும்.

 

عن أبي يزيد رضي الله عنه أنّه عبد الله تعالى سنين كثيرة فلم يجد للعبادة طعمًا ولا لذّة، فدخل على أمّه وقال لها: يا أمّاه إنّي لا أجد للعبادة ولا للطاعة حلاوة أبدًا، فانظري هل تناولت شيئًا من الطعام الحرام حين كنت في بطنك أو حين رضاعتك، فتفكرت طويلاً ثم قالت له يا بنيّ لمّا كنت في بطني صعدت فوق سطح فرأيت إجّانة (أي جرّة كبيرة) فيها جبن فاشتهيته فأكلت منه مقدار أنمُلة بغير إذن صاحبه. فقال أبو يزيد: ما هو إلاّ هذا. فاذهبي الى صاحبه وأخبريه بذلك. فذهبت إليه وأخبرته بذلك، فقال لها: أنت في حلّ منه، فأخبرت ابنها بذلك فعندها ذاق حلاوة الطاعة.

பாயஜீது புஸ்தாமீ (ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக் குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. (கல்யூபி, பக்கம்:37)

 

இன்று தொழுகை போன்ற அமல்கள் செய்யும் பலர் இந்த ஹலால் ஹராம் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை.ஆனால் அவ்வாறு செய்யப்படும் அமல்களால் எந்தப் பயனும் இல்லை.

وروي أن العبد إذا تنسك قال إبليس لأصحابه: انظروا ماذا يأكل، فإن كان يأكل الحرام قال دعوه فإن عبادته مع أكل الحرام لا تغني عنه شيئا.

நன்கு வணக்கம் செய்யக்கூடிய ஒருவரைக் குறித்து இப்லீஸிடம் சொல்லப்படும். அப்போது அவன் சொல்வான் ; அவன் உண்ணும் உணவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.அது ஹராமாக இருந்தால் நீங்கள் அவனைக் குறித்து கவலைப்பட வேண்டாம். அவனை அப்படியே விட்டு விடுங்கள். அந்த ஹராமான உணவே அவனுடைய அழிவுக்கு காரணமாகி விடும்.

இன்றைக்கு மற்ற சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம் கவனம் செலுத்தும் பலர் ஹலால் ஹராமில் கவனம் செலுத்துவதில்லை.

سأل رجل سفيان الثوري ايهما أفضل أصلي في يمين الصف الأول أو في يساره؟ فقال : انظركسرة الخبزاللتي تأكلها من حرام أم من حلال ومايضرك صليت في أي صف

பள்ளிவாசலில் தொழுகைக்காக வலது பக்கத்தில் நிற்பது சிறந்ததா இடது பக்கத்தில் நிற்பது சிறந்ததா என்று சுஃப்யான் ஸவ்ரீ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் நீ சாப்பிடும் ரொட்டித்துண்டு ஹலாலா ஹராமா என்பதை முதலில் பார். நீ எந்த இடத்தில் நின்று தொழுதாலும் தொழுகைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முதலில்  நீ உண்ணும் உணவில் கவனம் செலுத்து. அது தான் அடிப்படையானது என்று கூறினார்கள்.

قال حبيب ابن أبي ثابت رحمه الله تعالى: «لا يُعجبْكم كثرةُ صلاة امرئ ولا صيامه، ولكن انظروا إلى وَرَعِه، فإن كان وَرِعا مع ما رزقه الله من العبادة فهو عبدٌ لله حقّا»

ஹபீப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஒருவர் அதிகம் தொழுவதோ அதிகம் நோன்பு வைப்பதோ உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அவரிடம் பேணுதல் இருக்கிறதா என்று பாருங்கள். வணக்கத்தோடு பேணுதலும் யாரிடம் இருக்கிறதோ அவரே அல்லாஹ்விடம் சிறந்த மனிதர்.

நம் வணக்கங்களுக்கும் தொழுகைகளுக்கும் அடிப்படை நம் உணவும் பொருளும் ஹலாலாக இருப்பது.ஹலால் இல்லையென்றால் நம் வணக்கங்கள் பயனில்லாமல் போய் விடும். ஹராமை சாப்பிட்டவனின் தொழுகையே ஏற்றுக் கொள்ளப்படாது என்று இருக்கின்ற போது அவன் எங்கிருந்து தொழுதால் என்ன ? என்பது தான் சுஃப்யான் ஸவ்ரீ ரஹ் அவர்களின் கேள்வி.

துஆக்கள் கபூலாகுவதற்கும் உணவு சம்பாத்தியம் ஹலாலாக இருக்க வேண்டும்.

فَقَامَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مُسْتَجَابَ الدَّعْوَةِ ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا سَعْدُ أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، إِنَّ الْعَبْدَ لَيَقْذِفُ اللُّقْمَةَ الْحَرَامَ فِي جَوْفِهِ مَا يُتَقَبَّلُ مِنْهُ عَمَلَ أَرْبَعِينَ يَوْمًا ، وَأَيُّمَا عَبْدٍ نَبَتَ لَحْمُهُ مِنَ السُّحْتِ وَالرِّبَا فَالنَّارُ أَوْلَى بِهِ "

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நபராக நான் ஆகுவதற்கு அல்லாஹ் விடத்தில் எனக்காக துஆ செய்யுங்கள் என்று ஸஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்கள் கூறிய போது ஸஃதே உன் உணவை நீ ஹலாலாக ஆக்கிக் கொள். துஆ ஒப்புக் கொள்ளப்படும் நபராக நீ ஆகி விடுவாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒரு அடியான் ஹராமான ஒரு பிடி உணவை தன் வயிற்றுக்குள் செலுத்தி விட்டால் அவரிடம் இருந்து 40 நாட்களுடைய அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. எவருடைய உடம்பு ஹராமினாலும் வட்டியினாலும் வளர்கிறதோ அது நரகத்திற்கே உரியது என்றார்கள். (தப்ரானி ; 6495)

நபிகளாரின் இந்த உபதேசத்திற்குப்பின் ஸஅத் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு உணவில் தூய்மையானவற்றைக் கடைப்பிடித்தார் என்றால், அதற்குப் பின் அவர் ஹலாலான உணவை மட்டுமே உண்டு வந்தார். அவர் வீட்டில் ஆடு ஒன்று இருந்தது. அந்த ஆட்டின் பாலைத்தான் வீட்டில் உள்ளவர்கள் அருந்துவர். ஒருநாள் அந்த ஆடு அண்டை வீட்டுக்காரரின் நிலத்தில் அனுமதியின்றி நுழைந்து அங்கிருந்த புற்களை மேய்ந்துவிட்டது. இதை அறிந்த ஸஅத் (ரலி) அன்றுமுதல் ஆடு இறக்கும்வரை அதிலிருந்து கறக்கும் பாலை அருந்துவதை நிறுத்திவிட்டார். காரணம் அனுமதியின்றி நுழைந்து மேய்ந்த புல்லின் தாக்கம் அந்த ஆட்டின் பாலில் வெளிப்பட்டுவிடுமோ, அது அனுமதியில்லாத உணவாக மாறிவிடுமோ என்ற பயம் தான்.

ஹலால் ஹராம் விஷயத்தில் நல்லோர்களுக்கு இருந்த பேணுதல்

قَالَ لِي ابْنُ المُبَارَكِ: اسْتَعَرتُ قَلَماً بِأَرْضِ الشَّامِ، فَذَهَبتُ عَلَى أَنْ أَرُدَّهُ، فَلَمَّا قَدِمْتُ مَرْوَ، نَظَرْتُ، فَإِذَا هُوَ مَعِي، فَرَجَعتُ إِلَى الشَّامِ حَتَّى رَدَدْتُهُ عَلَى صَاحِبِهِ.( الزهد لابن المبارك 19 , الذهبي : سير أعلام النبلاء 15/411 ,صفة الصفوة لابن الجوزي 2/239 )

அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள் சிரியாவில் இருக்கின்ற போது ஒருவரிடம் பேனா ஒன்றை இரவலாக வாங்கியிருந்தார்கள். ஆனால் அதை அவரிடம் திருப்பிக் கொடுப்பதற்கு மறந்து அங்கிருந்து வந்து விட்டார்கள். ஈரானில் இருக்கின்ற மெர்வி என்ற இடத்தில் அதைப் பற்றி அவர்களுக்கு யாபகம் வந்தது. உடனே அவர்கள் மீண்டும் பல மைல் தூரம் பயணித்து சிரியாவிற்கு சென்று அந்த பேனாவை உரியவரிடம் ஒப்படைத்து விட்டு வந்தார்கள்.

وروي عن امرأة صالحة أنه قد أتاها نعي زوجها ( خبر وفاته ) وهي تعجن العجين فرفعت يدها , وقالت : هذا طعام قد صار لنا فيه شريك ( تعني الورثة ).

இறையச்சமுள்ள ஒரு பெண் மாவு குழைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்த பெண்ணுடைய கணவர் இறந்து விட்ட செய்தி கிடைத்தது. உடனே அந்தப் பெண், இதுவரை இது என் கணவருடைய பொருளாக இருந்தது. அவர் இறந்த பிறகு அது அவரின் வாரிசுகளின் பொருளாகி விட்டது என்று கூறி அதிலிருந்து கையை எடுத்து விட்டார்.

இன்றைக்கு ஹலால் ஹராமைக் குறித்து எந்த கவனமும் நம்மிடையே இருப்பதில்லை.நபி பெருமானார் ஸல் அவர்கள் எச்சரித்த காலத்தில் நாம் இருக்கிறோம்.

لَيَأْتِيَنَّ على النّاسِ زَمانٌ، لا يُبالِي المَرْءُ بما أخَذَ المالَ، أمِنْ حَلالٍ أمْ مِن حَرامٍ.

தாம் சம்பாதித்தது ஹலாலா? ஹராமா? என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!. (புகாரி ; 2083)

எந்தெந்த வகையில் இஸ்லாமிய மக்கள் ஹராமான பொருளீட்டலில் ஈடுபடுகிறார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் வாரங்களில் வாய்ப்பிருந்தால் பதிவு செய்கின்றேன். துஆ செய்யுங்கள்.

1 comment: