Friday, August 30, 2024

மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்

 


அல்லாஹுத்தஆலா வாழ்வியல் நெறியாக உலக மக்களுக்கு இஸ்லாத்தைத் தந்திருக்கின்றான். இஸ்லாம் முழுமை பெற்ற மார்க்கம். எல்லா காலத்திற்கும் பொருந்தும் மார்க்கம்.

أن كل حكم مبني على عادة ؛ إذا تغيرت العادة : تغير

பொதுவாக எந்த சட்டமாக இருந்தாலும் ஒரு வழமையின் மீது அமைக்கப்பட்டிருக்கும். அந்த வழமை மாறி விட்டால் அந்த சட்டமும் மாறி விடும். ஆனால் இது இஸ்லாமிய சட்டங்களுக்கு பொருந்தாது. கால மாற்றங்களோ மக்களின் சூழ்நிலை மாற்றமோ இஸ்லாமிய சட்டங்களை ஒன்றும் செய்ய வில்லை. ஒன்றும் செய்யாது.

ذكرها ابن قيم الجوزية رحمه الله تعالى ، وهي : الزمان ، والمكان ، والعادات ، والأحوال ، والنيات ولكن هذا التغير مقصور على الأحكام التي هي من طبيعتها متغيرة ، وليست ثابتة في أصل الوضع الشرعي

அல்லாமா இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;  காலங்கள் நேரங்கள் மக்களின் வழமைகள் சூழ்நிலைகள் மக்களின் உணர்வுகள் மாறுவதைக் கொண்டு இயற்றப்படுகின்ற சட்டங்களும் மாறிவிடும். ஆனால் இது உலகத்தில் இருக்கிற மற்ற ஏனைய சட்டங்களுக்கு பொருந்தும். இஸ்லாமிய சட்டங்களுக்கு இது பொருந்தாது.

காலத்திற்கு தகுந்தார் போல் மக்களின் மனோ நிலைக்கு தகுந்தார் போல் அவ்வப்போது மாற்றமடையும் சட்டம் இஸ்லாமியச் சட்டமல்ல. 1400 வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் எதை சட்டமாக சொன்னதோ அது தான் இன்றைக்கும் கடைபிடிக்கப்படுகிறது. உலக அழிவு நாள் வரை அது தான் கடைபிடிக்கப்படும்.

இஸ்லாம் மண்ணுக்கேற்ற மார்க்கம். இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாம் கூறும் விழுமியங்கள் அனைத்தும் எல்லா காலத்திற்கும் பொருந்தும். எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தும். எல்லா தரப்பு மக்களுக்கும் பொருந்தும். காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். மக்களின் மனோநிலை மாறலாம். சிந்தனைகள் மாறலாம். ஆனால் இஸ்லாமும் இஸ்லாமிய சட்டங்களும் மாறாது. இது இஸ்லாத்தின் தனி சிறப்புகளில் ஒன்று.

اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்குர்ஆன் : 5:3)

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங்கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(அல்குர்ஆன் : 34:28)

உலக அழிவு நாள் வரை பெருமானார் ஸல் அவர்கள் தான் நபி. அவர்கள் கொண்டு மார்க்கம் தான் வழிமுறை. அது தான் அனைத்திற்குமான தீர்வு.எந்த காலத்தில் யார் வந்து குர்ஆனையோ ஹதீஸையோ தேடினாலும் அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை குர்ஆனும் ஹதீஸும் சொல்லும். மார்க்கம் முழுமை பெற்று விட்டது என்பதற்கான பொருள் இது தான்.

 

இஸ்லாமிய சட்டங்களின் மீது அவ்வப்போது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவதுண்டு. இஸ்லாமிய சட்டங்கள் மண்ணுக்கும் பொருந்துவதில்லை. மக்களுக்கு பொருந்துவதில்லை. இன்றைய நவீன காலத்திற்கு உகந்ததாக இல்லை என்றெல்லாம் அவ்வப்போது கூறப்படுவதுண்டு. ஆனால் திறந்த மனதோடு ஆழமான சிந்தனையோடு இஸ்லாமிய சட்டங்களை உற்றுநோக்கினால் அது எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. மட்டுமல்ல, இஸ்லாம் கூறியிருக்கின்ற ஒவ்வொரு சட்டங்களிலும் நியாயங்களும் நேர்மையும் தூரநோக்கு சிந்தனையும் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

 

இஸ்லாமும் ஜீவனாம்சமும்

கடந்த ஜூலை மாதம் தெலுங்கானாவைச் சார்ந்த முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய தெலுங்கானா குடும்ப நல நீதிமன்றம் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு கணவன் மாதந்தோறும் 20000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து கணவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மாநில உயர்நீதிமன்றம் மாதம் 20000 என்பதைக் குறைத்து மாதம் 10000 வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து அந்தக் கணவர் விவாகரத்து உரிமை சட்டம் 1986 ஐ மேற்கோள் காட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி இருவரும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை ரத்து செய்ததுடன் குற்றவியல் சட்டத்தின் 125 வது பிரிவை மேற்கோள் காட்டி விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மதப் பாகுபாடு இன்றி ஜீவனாம்சம் கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள்.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், குடும்ப வாழ்க்கையில் பெண்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக பொருளாதார உதவிகளை வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக குறிப்பிட்டார்கள்.

ஆனால் இது முற்றிலும் இஸ்லாமிய சட்டத்திற்கும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கும் எதிரானது. குடும்ப வாழ்வில் ஈடுபடுகின்ற பெண்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள் என்பதையும் தலாக் விடப்படுவதால் பெண்கள் பொருளாதார ரீதியாக பாதிப்புக் குள்ளாகிறார்கள் என்பதையும் இஸ்லாம் கவனிக்காமல் இல்லை. அதற்கான நிவாரணத்தை கூறாமலும் இல்லை. இந்த உண்மை யாராலும் புரிந்து கொள்ளப்படவும் இல்லை.

முதலில் தலாக் விடப்பட்ட இஸ்லாமிய பெண்ணுக்கு அந்த கணவன் தொடர்ந்து ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

1, ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் நீதிமன்றம் அந்த பெண்ணின் சூழலையும் தேவையையும் முன் வைத்து மட்டுமே முடிவு செய்கிறது. அந்த கணவனின் தொழிலையோ வருமான சூழ்நிலைகளையோ அவனது சிரமங்களையோ கவனத்தில் கொண்டு ஜீவனாம்சத் தொகையை முடிவு செய்வதில்லை. இந்த நிலையில் தீர்ப்புக்குப் பிறகு ஜீவனாம்சம் கொடுக்க இயலாத அந்த கணவன் என்ன செய்வான்? அந்த பெண் தான் எவ்வாறு அவனிடமிருந்து ஜீவனாம்சத் தொகையை பெறுவாள்? அதிகபட்சமாக அவள் ஜீவனாம்சம் பெறுவதற்காக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவாள. ஜீவனாம்சம் கொடுக்காத முன்னாள் கணவனை ஜீவனாம்சம் கொடுக்காததன் பேரில் சிறையில் தள்ளப்படும். இது தான் நடக்கும். வெளியில் இருக்கும் போதே கொடுக்காத அந்த கணவன் சிறைக்குள் சென்ற பிறகு எவ்வாறு ஜீவனாம்சம் கொடுக்க முடியும்? எனவே இது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

 

2, தலாக் கொடுத்த கணவன் பொருளாதார வசதி உள்ளவனாகவே இருந்தாலும் கூட அவன் முறையாக ஜீவனாம்சம் கொடுப்பான் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் ஈட்டுபவர்களே அதற்கான வரிகளை செலுத்தாமல் இருக்கின்ற சமூகம் இது. ஒரு அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் தனக்கு பிடிக்காமல் தலாக் விட்டு விட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பார்கள் என்பது என்ன நிச்சயம்?

 

3, தலாக்கின் மூலம் இருவரும் பிரிந்த பிறகு அந்தப் பெண் இன்னொரு திருமணம் செய்து இரண்டாவது கணவனோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது முதல் கணவனிடம் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டிருந்தால் அவளின் மீது இந்த இரண்டாவது கணவனுக்கு தேவையில்லாத சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது. இதனை அந்தப் பெண் எப்படி எதிர் கொள்வாள்?

 

4, தலாக் விடப்பட்ட பெண் திருமண வாழ்வின் மூலம் ஏற்பட்ட கசப்பான அந்த அனுபவங்களினால் ஒருவேளை மறுமணம் செய்யாமலேயே தனது எஞ்சியுள்ள காலத்தை கழித்து விடலாம். இந்த நிலையில் முன்னால் கணவனிடம் இருந்து கிடைக்கின்ற ஜீவனாம்சத் தொகையின் மூலம் தனது வயிற்று பசியை தனித்து கொள்ளலாம்.  அதே சமயத்தில் தனது பாலியல் உணர்வுகளை தணித்துக் கொள்ள இன்னொரு அந்நிய ஆணுடன் தகாத முறையில் உறவு வைத்துக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பொருளாதார தேவை பூர்த்தி ஆகிவிடுகிறது. பாலியல் தேவைகளை இவ்வாறு செய்து கொள்ளலாம் என்று அந்த பெண் ஒருவேளை முடிவெடுத்து விட்டால் அவள் செய்யக்கூடிய அந்த ஒழுக்கக்கேடான செயல்பாட்டை அந்த ஜீவனாம்சத் தொகை ஊக்குவிப்பதாக அமைந்து விடும்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் தொடர்ந்து கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது.

சரி தலாக் மூலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்ற பெண்ணுக்கு என்ன தான் தீர்வு என்று நாம் யோசிக்கலாம். குடும்ப வாழ்வில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு இது மாதிரியான நிலை ஏற்படும் என்பதை இஸ்லாம் உணர்ந்தே இருக்கிறது. அதனால் தான் திருமணத்தின் போது மகர்க்கொடையை ஒவ்வொரு கணவரும் கொடுத்து விட வேண்டும் என்று சொல்கிறது. அவளுக்கும் அவளது குழந்தைகளுக்குமான வாழ்வாதாரம் அந்த மகர் மூலம் பூர்த்தியாகி விடும். மட்டுமல்ல அவள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த கணவனின் மூலமாகவும் அவளுக்கு மகர் தொகை கிடைக்கும்.

ஜீவனாம்சம் குறித்து இஸ்லாமிய சட்டத்தை இந்த நேரத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு அவள் இத்தா காலம் முடியும் வரை மட்டும் செலவினங்களுக்கு அந்த கணவன் உதவி செய்ய வேண்டும்.அவர்களுக்கு குழந்தை இருந்தால் அந்த குழந்தைகளின் எதிர் கால தேவைகளை பூர்த்தி செய்வது கணவனின் மீது கடமை.

 

இஸ்லாமும் பெண் சாட்சியும்

وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْ‌ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰى

உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; (அல்குர்ஆன் : 2:282)

இரண்டு பெண்களுடைய சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சியத்திற்கு நிகராகும்’ என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இதை விமர்சனம் செய்கின்றனர்.

இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாகக் குர்ஆன் கூறுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத் திறனுக்கும் சான்றாக உள்ளது. சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத் திறனும் நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ள போது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருத எந்தவித நியாயமும் இல்லை.

பெண்களில் சிலர் சில நாடுகளின் தலைமைப் பதவியில் இருந்து சிறப்பாக நிர்வகித்து வரும் போது சாதாரண சாட்சியம் கூறும் தகுதியில் கூடப் பாரபட்சம் காட்டுவது அக்கிரமமானது என்பன போன்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த வாதங்கள் நியாயமானவை என்றாலும் சாட்சியம் கூறுவதற்கும், இவற்றுக்கும் சம்மந்தமில்லை என்பதை விளங்கினால் இந்த வாதம் அடிபட்டுப் போகும்.பெண்களுக்கு நல்ல நினைவாற்றலும் அறிவுத் திறனும் உள்ளதை இஸ்லாம் மறுக்க வில்லை. சில விஷயங்களில் ஆண்களை விட இவர்களுக்கு அதிகமாக அந்தத் தகுதிகள் உள்ளதையும் இஸ்லாம் மறுக்க வில்லை.

அன்னை ஆயிஷா (ரலி), அன்னை உம்மு ஸலமா (ரலி) போன்ற பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கே பாடம் சொல்லித் தருமளவிற்கு நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். ஆண்களையே தர்க்க ரீதியாக மடக்கும் அளவுக்கு அவர்களின் அறிவுத் திறமை மேலோங்கியிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் இவை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும்.

ஆனால் சாட்சியம் கூறுவதற்கு நினைவாற்றல், அறிவுத் திறன் என்ற இரண்டு தகுதிகள் மட்டும் போதுமா? நிச்சயமாகப் போதாது! இவ்விரண்டை விட மிக முக்கியமான தகுதி ஒன்று அவசியம். உள்ளதை உள்ளபடி கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல், திரிக்காமல் கூற வேண்டும். இந்தத் தகுதி தான் சாட்சியம் கூறுவதற்கு மிக முக்கியம். சாட்சியம் என்பது உண்மையை உலகறியச் செய்வதும், இன்னொருவரின் எதிர் காலத்தை முடிவு செய்வதுமாகும்.

தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ் சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.

அதேபோன்று இயற்கையாகவே அவர்களிடம் பலவீனம் இருக்கிறது.

பெண்கள் ஆண்களைப் போன்ற உடலமைப்புக் கொண்டவர்களல்ல. பலவீனமானவர்களாகவும் இயற்கையில் மாதாந்திர உதிரப் போக்கு என்ற உபாதைக்கு ஆளாகுபவர்களாகவும் உள்ளனர். இந்த மாதாந்திர உபாதை மனநிலையில் பாதிப்பையும், தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என மருத்துவவியலாரும், மனோதத்துவ இயலாரும், உடற்கூறு வல்லுனர்களும் கூறுவது அனைவரும் அறிந்ததே!

ஒரு சம்பவத்திற்கு சாட்சியாக அழைக்கப்படும் பெண், மாதாந்திர உபாதையுடனிருக்கும் போது அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலோ, அல்லது சாட்சியத்திற்கு அழைக்கப்படும் போது அவ்வுபாதையுடனிருந்தாலோ அவள் அளிக்கும் சாட்சியத்தில் அவளது உடல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மனநிலை பிரதிபலிப்பதால், சாட்சியம் முழுமையடையாது.

உள்ளதை உள்ளபடி கூறாமல் குழம்பிய நிலையில் அளிக்கப்படும் சாட்சியத்தால் நீதி வழங்குவதிலும் குறைபாடு ஏற்படும். இது இரண்டாவது காரணம்,

இவ்விடத்தில் மற்றொரு கேள்வி எழலாம். மாதவிடாய் நின்று போன பெண்ணையாவது ஒரு ஆணுக்கு நிகரான சாட்சியாக ஏற்கலாமல்லவா என்று வினவலாம். ஆனால் இத்தகைய பெண்களுக்கு வேறு விதமான மனநிலைக் குழப்பம் ஏற்படுவதையும் மருத்துவ விஞ்ஞானம் உறுதி செய்வதால் இவ்வினா அர்த்தமற்றுப் போகிறது!

அதேபோன்று பொதுவாக சாட்சி கூறும் போது இரு தரப்பில் ஒரு தரப்புக்கு பாதகமாகத் தான் அது அமையும். யார் பாதிக்கப்படுகிறானோ அவன் தனக்கு எதிராகச் சாட்சி கூறும் பெண்ணை மிரட்டலாம். அவளையோ, அவளது குடும்பத்தில் ஒருவரையோ கொன்று விடுவதாகக் கூறினால் போதும், சாட்சியத்தை மாற்றிக் கூறி விடக் கூடியவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர். இந்தப் பலவீனத்தின் காரணமாகவும், இவ்வாறு வேறுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

 

இயல்பிலே அமைந்த இரக்க குணம்

மேலும், பெண்கள் இயல்பிலேயே இரக்கமும், பச்சாதாபமும் கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தாய்மையுணர்வின் காரணமாகக் குற்றவாளியின் மீது இரக்கப்பட்டு, சாட்சியத்தில் ஒளிவு மறைவு செய்யலாம் என்பதாலும், ஒரு ஆணுக்கு நிகராக இரு பெண்கள் சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். நிச்சயமாக இரு பெண்கள் ஒரு சம்பவத்தை ஒரே மாதிரியாகக் கூறுவதில்லை என்பதை முதலாவது சொன்ன காரணம் உறுதிப்படுத்துகின்றது.

எனவே ஒரு ஆண் சாட்சிக்கு நிகராக இரு பெண் சாட்சிகள் தேவை என்று இஸ்லாம் வகுத்துள்ள சட்டம் அறிவுக்குப் பொருத்தமானதும் நியாயமானதும் ஆகும் என்பது தெளிவாகிறது.

 

இஸ்லாமும் பேர்கால உதிரப்போக்கும்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். அதைக்குறித்து அவரே சொல்கின்றார் ;

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார்.''ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்'' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது."இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார்.

 

மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்."என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.

குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன். "பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர். எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.

அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி, "பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்."அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.

அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன் என்று அந்த அமெரிக்க பெண் மருத்துவர் கூறுகிறார்.

இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டங்களும் இவ்வாறு தான்.அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.எல்லா காலத்திற்கும் பொருந்தும். அதை தற்போது அனைவரும் உணர ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான் கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பிறகு அனைத்து தரப்பு மக்களும் இஸ்லாமிய சட்டம் தான் இப்போது வேண்டும் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் தட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

அல்லாஹ் ஷரீஅத் சட்டங்களைப் பாதுகாப்பானாக. அனைவரும் புரிந்து கொள்ள தவ்ஃபீக் செய்வானாக

2 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் ஹஜரத் அருமையான பதிவு, அருமையான பதிவு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுடைய இல்மில் உங்களுடைய செய்வானா

    ReplyDelete
  2. அல்லாஹ் ஷரீஅத் சட்டங்களைப் பாதுகாப்பானாக. அனைவரும் புரிந்து கொள்ள தவ்ஃபீக் செய்வானாக

    ReplyDelete