Thursday, November 24, 2022

குளிர்காலம் பாரமல்ல, பாக்கியம்

 

அல்லாஹுத்தஆலா தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்துவதற்கு இவ்வுலகில் எண்ணற்ற அத்தாட்சிக்களை வைத்திருக்கிறான். அந்த அத்தாட்சிக்களை சிந்தித்து அவனுடைய வல்லமை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நமக்குக் கட்டளையிடுகின்றான். படைத்தோனின் வல்லமையை நமக்கு புரிய வைக்கும் அத்தாட்சிக்களில் ஒன்று தான் பருவ காலங்கள்.

ஒரு வருடத்தில் குளிர்காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் என நான்கு பருவ காலங்கள் உள்ளன. பூமி 23 1/2 டிகிரி சாய்வாக தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருவதை நாம் அறிந்திருக்கிறோம்.பூமி, சூரியனுக்கு அருகாமையில் வரும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அதை கோடைக்காலம் என்கிறோம்.பூமி சூரியனை விட்டு விலகி தூரமாக இருக்கும் போது பூமியில் வெப்பம் மிகக் குறைவாக இருக்கும். அதை குளிர்காலம் என்றழைக்கிறோம். பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர் நிலைகளில் உள்ள நீர், வெப்பம் காரணமாக ஆவியாகி மேகங்கள் உருவாகின்றன. குளிர்ந்த பகுதியில் உள்ள குளிர்ந்த காற்றை நோக்கி வெப்பக்காற்று பயணிப்பதால் காற்றோட்டம் ஏற்படுகிறது. இந்தக் காற்றோட்டம் மேகக்கூட்டங்களை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நகர்த்திச் சென்று குளிர்ந்த பகுதியில் மழையாகப் பொழிகிறது. வருடத்தில் பருவநிலை  மாற்றங்கள் இப்படித்தான் ஏற்படுகிறது.

பருவநிலை மாற்றங்கள் என்பது இறைவனுடைய மாபெறும் அத்தாட்சி. இந்த பருவகால நிலை மாற்றங்கள் நிகழ வில்லையெனில் பூமியில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. வருடம் முழுக்க எப்போதும் வெயில் மட்டுமே அடித்துக் கொண்டிருந்தால் பூமி கடுமையான உஷ்ணத்தை சந்திக்கும். மழையின்றி நீரின்றி மனிதனும் மற்ற உயிரினங்களும் செத்து மடிந்து விடும்.அனைத்து உயிரினங்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது! இந்த பூமி உயிரினங்கள் வாழ முடியாத ஓர் இடமாக மாறி விடும்.

அதே போல் வருடம் முழுக்க பனிக் காலமாக இருந்தால் தேவையான வெப்பம் கிடைக்காமல் உயிரினங்கள் உரைந்து போய் விடும். பயிர்கள் பட்டுப் போய் விடும். அதேபோன்று தொடர்ந்து மழை பெய்தாலும் பூமி அழிந்து விடும். நம்மைப்படைத்த ரப்புல் ஆலமீன் தேவையான இடத்திற்கு தேவையான மக்களுக்கு தேவையான அளவு வெப்பத்தையும் குளிரையும் மழையையும் கொடுத்து இப்பூமியில் உயிரினங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறான். அதேபோன்று பருவ கால மாற்றங்கள் பூமி முழுக்க ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக நிகழ்ந்தால் அப்போதும் பூமி தாங்காது. எனவே தான் அந்த பருவ கால மாற்றங்களை பூமி முழுக்க ஒரே மாதிரியாக வைக்க வில்லை. பூமியின் ஒரு துருவத்தில் குளிர் என்றால் மறு துருவத்தில் வெப்பமாக இருக்கும். இதுவும் இறைவனின் மாபெரும் அத்தாட்சி.

பருவ காலங்களில் இப்போது நாம் குளிர் காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நான்கு பருவங்களில் இந்த குளிர் காலம் என்பது கொஞ்சம் சிரமத்தைத் தருகின்ற ஒரு காலம். சிறியவர் முதல் பெரியவர் வரை நோய் நொடிகளால் சுகவீனம் கண்டு கொஞ்சம் அவஸ்தைகளை அனுபவிக்கின்ற ஒரு காலம். அதுவும் அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பு ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கின்ற நமக்கு அதிகம் சிரமத்தைத் தருகின்ற காலம்.

குளிர் காலத்தை சந்தித்திருக்கிற இந்த நேரத்தில் இரண்டு விஷயங்கள் கவனத்திற்குரியது. ஒன்று, அதிகம் சுகவீனம் ஏற்படும் இந்த கால கட்டத்தில் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் கெட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும். ஆரோக்கியம் என்பது மிகப்பெரும் செல்வம். மாபெரும் சொத்து.

قام رسول الله صلى الله عليه و سلم عام الأول على المنبر ثم بكى فقال اسألوا الله العفو و العافية فإن أحد لم يعط بعد اليقين خيرا من العافية

 

ஒருமுறை நபி அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு அழுதார்கள்.பின்பு மக்களை நோக்கி அல்லாஹ்விடம் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் கேளுங்கள். ஏனென்றால்  ஈமானுக்குப் பிறகு ஆரோக்கியத்தை விட சிறந்த ஒரு நிஃமத்தை எவரும் வழங்கப் படவில்லை என்றார்கள். (சுனனுத் திர்மிதி)

இன்று உலகத்தில் நமக்கு நிறைய செல்வங்கள் உண்டு.நமக்கு அறிவைப் புகட்டுகின்ற கல்விச்செல்வம், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற பொருட்செல்வம், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி அமைக்கின்ற இளமைச் செல்வம், நமக்கு ஈருலகிலும் பெருமை சேர்க்கிற குழந்தைச் செல்வம், இப்படி நம் வாழ்வில் நிறைய செல்வங்கள் உண்டு.ஆனால் இந்த அனைத்து செல்வங்களிலும் ஆக உயர்ந்த, மிகவும் மேலான, ஈடுஇணையற்ற செல்வம் உடல் ஆரோக்கியம்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். ஆரோக்கியம் இருந்தால் தான் மற்ற எல்லா விஷயங்களையும் நாம் அனுபவிக்க முடியும்.ஆரோக்கியம் என்ற செல்வம் மட்டும் இல்லாமல் போனால் மற்ற எந்த செல்வத்தையும் நாம் அனுபவிக்க முடியாது. நிறைய கல்வியும் அறிவும் இருந்து ஆரோக்கியம் இல்லையென்றால் அந்த கல்வியும் அறிவும் பயனற்றது.நிறைய வசதியும் பொருளாதார மும் இருந்து ஆரோக்கியம் இல்லையென்றால் அந்த வசதியும் பொருளாதாரமும் பயனற்றது.இளமையும் துடிப்பும் இருந்து ஆரோக்கியம் இல்லையென்றால் அந்த இளமையும் துடிப்பும் பயனற்றது.நிறைய குழந்தைகள் இருந்தும் ஆரோக்கியம் இல்லை யென்றால் நம் வாழ்க்கை பயனற்று போனதோடு மட்டுமின்றி நம்மை உடனிருந்து கவனிக்கிற, நம்மை பராமரிக்கிற அவர்களது வாழ்க்கையும் வீணாகி விடும்.ஆக ஆரோக்கியம் என்ற ஒரு செல்வம் மட்டும் இல்லையென்றால் மற்ற எத்தனை செல்வங்கள் இருந்தாலும் இல்லாததைப் போலத்தான்.எனவே செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் ஆரோக்கியம் தான்.

ஆரோக்கியம் இருந்தால் தான் நாம் உண்ணக்கூடிய உணவு கூட சுவையாக இருக்கும். உணவு எவ்வளவு சுவையாக இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையெனில் அது சுவையாகத் தெரியாது.

حجّ الحجاج فنزل مكانًا فدعا بغدائه، فقال لحاجبه: انظر من يَتَغدى معي وأسألُه عن بعض الأمر, فنظر الحاجبُ فإذا هو بأعرابيٍّ بين شَمْلتين من شَعَرٍ نائم، فضربه برجليه وقال: ائت الأميرَ، فأتاه, فقال له الحجاج: اغسِلْ يدك وتَغَدَ معي، قال: إنه دعاني مَنْ هو خيرٌ منك فأجبته؛ فقال له الحجاج: من الذي دعاك؟ قال: اللهّ -تعالى- دعاني إلى الصوم فصُمت، قال: في هذا اليوم الحارّ! قال: نعم، صُمتُ ليوم أحرَّ منه، قال: فأفطِر وتصوم غداً؛ قال: إن ضمنتَ لي البقاءَ إلى غد، قال: ليس ذاك إلي، قال: فكيف تسألني عاجلاً بآجل لا تقدر عليه! قال: إنه طعامٌ طيب؛ قال: إنك لم تُطَيبه، ولا الخبًاز، ولكن طيّبته العافية.

ஒரு பயணத்தில் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் உணவிற்கு அமர்ந்த போது தன் பணியாளரிடத்தில் என்னோடு அமர்ந்து உண்ணுவதற்கு ஒருவரை அழைத்து வா என்றான். அவர் ஒரு கிராமவாசியை அழைத்து வந்தார். தன்னோடு அமர்ந்து உணவு சாப்பிடும் படி கூறினான். அவர், உன்னை விட மிகச்சிறந்தவன் என்னை அழைத்திருக்கிறான். அவன் அழைப்பிற்கு நான் பதிலளிக்க வேண்டும் என்றார். என்னை விட சிறந்தவன் யார் என்று கேட்ட போது, அல்லாஹ். அவனுக்காக நான் நோன்பு வைத்திருக்கிறேன் என்றார். இந்த கடும் வெயிலிலா நோன்பு நோற்றிருக்கிறாய் என்றான். நான் இதை விட கடுமையான வெயிலேயே நோன்பு நோற்பேன் என்றார். சரி பரவாயில்லை. இப்போது என்னோடு சாப்பிடு. நாளை நோன்பு வைத்துக் கொள் என்றான். நாளை நான் இருப்பேன் என்று உங்களால் உத்தரவாதம் வழங்க முடியுமா என்றார். அது எப்படி என்னால் முடியும் என்றான். அப்படியென்றால் என்னை எப்படி நாளை நோன்பு நோற்க சொன்னீர்கள் என்றார். இது நல்ல உணவு. இந்த மாதிரியான உணவு  உனக்கு மீண்டும் கிடைக்காது என்றான். நீங்களோ அல்லது அதை சமைத்தவரோ உணவிற்கு ருசியைத் தருவதில்லை. ஆரோக்கியம் தான் உணவிற்கு ருசியைத் தருகிறது என்றார்.

உலகத்தின் காரியங்கள் மட்டுமல்ல, வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் ஆரோக்கியம் மிகவும் பிரதானமானது. எனவே தான் ஆரோக்கியத்தை மிகப்பெரும் நிஃமத் என்று இஸ்லாம் கூறுகிறது.

وما بكم من نعمة فمن الله

எந்த நிஃமத் உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும். (அல்குர்ஆன் 16 53)

உங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற நிஃமத்துகள் என்று வருகின்ற இந்த வசனத்திற்கு பெரும்பாலான குர்ஆன் விரிவுரை யாளர்கள் உடல் ஆரோக்கியம் என்று தான் எழுதுகிறார்கள். இப்படி குர்ஆனும் சரி ஹதீஸ்களும் சரி மிகப்பெரும் செல்வம் என்றும் மிகப்பெரும் நிஃமத் என்றும் உடல் ஆரோக்கியத்தைத் தான் அடையாளம் காட்டுகிறது.

நாம் கேட்கிற விஷயங்களிலெல்லாம் ஆக உயர்ந்த விஷயம் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான விஷயம் ஆரோக்கியம் தான்.

أن رجلاً جاء إلى النبيِّ صلى الله عليه وسلم فقال : يا رسولَ اللهِ أيُّ الدعاءِ أفضلُ ؟ قال : سَل ربَّك العافيةَ والمعافاةَ في الدنيا والآخرةِ , ثم أتاهُ في اليومِ الثاني ، فقال : يا رسولَ اللهِ أيُّ الدعاءِ أفضلُ ؟ فقال له مثلَ ذلكَ ، ثم أتاهُ في اليومِ الثالثِ ، فقال له مثلَ ذلكَ ، قال : فإذا أُعْطِيتَ العافيةَ في الدنيا ، وأُعْطِيتَها في الآخرةِ فقد أفلَحتَ

ஒரு மனிதர் நபியிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! துஆவில் மிகச் சிறந்தது எதுவென்று கேட்டார்.உலகத்திலும் மறுமையில் ஆரோக்கியத்தை உன் இறைவனிடம் கேள் என்றார்கள். அடுத்த நாளும் வந்து அதே கேள்வியைக் கேட்டார். நபி  அவர்களும் முதல் நாள் சொன்ன அதே பதிலைச் சொன்னார்கள். மூன்றாம் நாளும் வந்து கேட்ட போது நபி  அவர்கள் அதே பதிலைக் கூறி விட்டு உலகத்திலும் மறுமையிலும் உனக்கு ஆரோக்கியம் கிடைத்து விட்டால் நீ வெற்றி பெற்று விடுவாய் என்றார்கள். (திர்மிதி 3512)

அளப்பெரும் நிஃமத்தாக இருக்கிற ஆரோக்கியத்தின் மீது இந்த நேரத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இரண்டாவது விஷயம், சிரமமான இந்த நேரத்திலும் நாம் வணக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். இறைவன் அருளாளன். மிக அன்பாளன். தன் அடியார்களின் சிரமத்திற்கு ஏற்றவாறு நன்மைகளை பன்மடங்காக்கித் தந்து விடுவான். ஒரு அமலைச் செய்கின்ற போது எந்தளவு சிரமங்களும் சுமைகளும் கூடுதலாக இருக்கிறதோ அந்தளவு நன்மைகளும் கூடுதலாக இருக்கும்.

عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ النَّبِى صلى الله عليه وسلم قَالَ لَهَا فِى عُمْرَتِهَا: «إِنَّ لَكِ مِنَ الْأَجْرِ قَدْرَ نَصَبِكِ

உன்னுடைய சிரமத்தின் அளவிற்கு உனக்கு கூலி உண்டு. (ஹாகிம்)

இதற்கு எண்ணற்ற உதாரணங்களை ஹதீஸிலிருந்து நாம் பார்க்கலாம்.

قال عليه الصلاة والسلام: “ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات”؟ قالوا: بلى يا رسول الله قال: “إسباغ الوضوء على المكاره وكثرة الخطا إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلك الرباط

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தான் கட்டுப் பாடுகளாகும் (முஸ்லிம் ; 251)

الماهر بالقرآن مع السفرة الكرام البررة. والذي يقرأه ويتعتع فيه وهو عليه شاق له أجران

அல்குர்ஆனில் நன்கு தேர்ச்சி பெற்றவர் சங்கையான மலக்குமார் களோடு இருப்பார். திக்கித் திக்கி சிரமப்பட்டு அந்தக் குர்ஆனை ஓதக்கூடியவருக்கு இரு கூலிகள் உண்டு. (முஸ்லிம் ; 798)

عن جابر رضي الله عنه؛ قال: كانت ديارنا نائية عن المسجد، فأردنا أنْ نبيع بيوتنا، فنقترب من المسجد، فنهانا رسول الله صلى الله عليه وسلم؛ فقال: «إنَّ لكم بكل خطوة درجة

எங்களுடைய இல்லங்கள் பள்ளிவாசலிலிருந்து தூரமாக இருந்தன. எனவே நாங்கள் பள்ளிவாசலுக்கு அருகாமையில் வீடுகளை வாங்கி அங்கே குடியேற நாடினோம். அப்போது நபி அவர்கள் எங்களைத் தடுத்து, நீங்கள் பள்ளிவாசலுக்காக எடுத்து வைக்கிற ஒவ்வொரு எட்டுக்கும் அந்தஸ்து இருக்கிறது என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 461)

இந்த வார்த்தையைக் கேட்ட பிறகு பெரும்பாலும் ஸஹாபாக்கள்  வாகனத்தில் வருவதை விரும்ப வில்லை. பள்ளிவாசலுக்கு அதிகம் நடந்து வருவதையே பிரியப்பட்டார்கள்.

 

عن أُبَيّ بن كعب رضي الله عنه؛ قال: كان رجل لا أعلم رجلًا أبعد من المسجد منه، وكان لا تخطئه صلاةٌ، قال: فقيل له أو قلتُ له: لو اشتريتَ حمارًا تركبه في الظلماء وفي الرمضاء. قال: ما يسرني أنَّ منزلي إلى جنب المسجد، إني أريد أنْ يُكتب لي ممشاي إلى المسجد، ورجوعي إذا رجعت إلى أهلي. فقال رسول الله صلى الله عليه وسلم: «قد جمع الله لك ذلك كله»، وفي رواية: «إن لك ما احتسبت     

மதீனாவில் ஒரு நபித்தோழர் இருந்தார். அவரை விட பள்ளிக்கு வெகுதூரமாக இருந்த நபரை நான் பார்த்ததில்லை. (அதே வேளை) அவருக்கு ஒரு தொழுகை கூட தவறியதில்லை. கும் மிருட்டிலும் கடும்வெப்பத்திலும் ஏறிவருவதற்காக ஒரு கழுதையை வாங்கலாம் தானே என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்க வில்லை. பள்ளிக்கு நான் நடந்து வருவதிலும் குடும்பத்தாரிடம் திரும்பி செல்வதிலும் (என் கால் எட்டுக்களுக்குமான) நன்மைகள் பதியப்படுவதையே விரும்பு கிறேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் சேர்த்துத் தருவானாக என கூறினார்கள். (முஸ்லிம்  ; 663)

عن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ : إِمَامٌ عَدْلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ : إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ ".[متفق عليه]

அல்லாஹ் தன்னுடைய (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் கொடுப்பான். நீதிமிக்க ஆட்சியாளர். இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்.பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.அல்லாஹ்வுக்காக நட்புக் கொண்ட இருவர்.அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போது நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்என்று கூறியவர்.தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். புகாரி ; 6806)

இந்த ஹதீஸில் கூறப்பட்ட ஏழு விஷயங்களும் மிகவும் கடினமானவை. சிரமமானவை. அதிகாரத்தில் இருப்பதினால் அவர்களை யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத காரணத்தினால் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் அநீதம் செய்பவர்களாகத் தான் இருப்பார்கள். இன்றைய காலத்தில் சொல்வதாக இருந்தால் அநீதம் செய்பவருக்குத்தான் ஆட்சியாளர் என்றே சொல்லப்படும். எனவே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர் நீதமாக நடப்பது அரிதான விஷயம். எனவே அத்தகைய நபர்களுக்கு மறுமையில் கண்ணியமளிக்கப் படுகின்றது. வாலிபப் பருவம் என்பது பாவங்களைத் தூண்டுகின்ற பருவம். விளையாட்டுக்களிலும் கேலிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய பருவம். அந்த வயதில் ஒருவர் அல்லாஹ்விற்கு நெருக்கமான காரியங்களைச் செய்வது மிகவும் ஆச்சரியமானது. எனவே அத்தகைய வாலிபருக்கு அந்த நிழல் வழங்கப்படுகின்றது. இவ்வாறே இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட ஏழு விஷயங்களும் கடினமானவை. எனவே மற்றவர்களுக்கு இல்லாத கண்ணியமும் அந்தஸ்தும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

எனவே சிரமம் கூடுதலாக இருப்பதைப் பொறுத்து நன்மைகளும் கூடுதலாக வழங்கப்படும். அந்த வகையில் இந்த குளிர் காலம் சிரமத்தைத் தருகின்ற காலம். இந்த காலத்தில் அதிகாலையில் எழுவதும், எழுந்து ஒழு செய்வதும், குளிக்கும் தேவை இருப்பின் குளிப்பதும் சிரமம் தரும் காரியம். ஆனால் அந்த சிரமத்தைப் பொருட்படுத்தாமல் மற்ற காலங்களைப் போன்றே இந்த குளிர் காலத்திலும் அல்லாஹ்வின் கடமைகளை பேணுதலாக ஒருவர் நிறை வேற்றினால் அவருக்கு மற்ற காலங்களில் கிடைக்கும் நன்மைகளை விட கூடுதலாக கிடைக்கும் என்பதை ஐயமேதுமில்லை.

நான்கு பருவங்களில் இந்தப் பருவம் சிரமத்தைத் தரும் பருவம் என்று நாம் கருதுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் இந்த பருவத்தைத் தான் பாக்கியமாக நினைத்தார்கள். மிகப்பெரும் வரப்பிரசாதமாக கருதினார்கள்.

عن عمر بن الخطاب رضي الله عنه انه قال الشتاء غنيمة العابدين

குளிர் காலம் என்பது வணக்கசாலிகளுக்கு கிடைத்த கனீமத்தாகும் என உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.

وعن ابن مسعود رضي الله عنه أنه قال: مرحبًا بالشتاء، تنزل فيه البركة ويطول فيه الليل للقيام ويقصر فيه النهار للصيام.

குளிர் காலம் என்பது மகிழ்ச்சியானது. பரக்கத்துகள் அதில் இறங்குகிறது. ஏனெனில் இந்த காலத்தில் இரவு நீளமாக இருப்பதினால் இரவு வணக்கத்திற்கு ஏற்றமானது. பகல் குறைவாக இருப்பதினால் நோன்பு வைப்பதற்கு ஏற்றமானது என்று இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.  

கடும் குளிர் என்று இந்த பருவத்தை நாம் வெறுக்கிறோம். ஆனால் இந்த பருவத்தை அவர்கள் வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். நன்மைகள் செய்வதற்கு ஏற்றமான காலம் என்று அவர்கள் நினைத்து இந்த காலத்தை அவர்கள் வரவேற்றார்கள்.

عامر بن عبد الله لما حضر جعل يبكي، فقيل له: ما يبكيك؟ قال: «ما أبكي جزعا من الموت، ولا حرصا على الدنيا، ولكن أبكي على ظمأ الهواجر وقيام ليالي الشتاء

ஆமிர் பின் அப்துல்லாஹ் ரலி அவர்கள் மரண நேரத்தில் அழுதார்கள். காரணம் கேட்கப்பட்ட போது, மரணத்தை பயந்தோ உலக மோகத்தினாலோ நான் அழ வில்லை. மாறாக கடும் உஷ்ணமான நேரத்தில் அதிக தாகமாக இருப்பதும் குளிர் காலங்களில் இரவு வணக்கம் புரிவதும் எனக்கு மிகவும் விருப்பமானது. அதை செய்ய முடிய வில்லையே என்பதை நினைத்து அழுகிறேன் என்றார்கள்.

இந்த காலங்களை பலனுல்லாத ஆக்க வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

12 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் கால சூழ்நிலைக்கேற்ப அருமையான பதிவு

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் ஷாஃபி அஜரத் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற அற்புதமான பயான் அல்லாஹ் உங்கள் இல்மில் ஆயுளில் பரக்கத் செய்வானாக ஆமீன்.

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ்

    ReplyDelete
  4. بارك الله لكم

    ReplyDelete
  5. பாரகல்லாஹ்
    வியாழன் காலையே பதிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
    ஜசாகல்லாஹ்.

    ReplyDelete
  6. Masha Allah barakallah hazrth

    ReplyDelete