Friday, January 20, 2023

வாலிபச் சமூகத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் ; 1, மக்தப்

 

கடந்த வாரம் இன்றைய காலத்து நம் வாலிப சமூகம் வீண் விளையாட்டுக்களிலும் கூத்து கும்மாளங்களிலும் வீணான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். சாதிக்க வேண்டிய பருவமாக இருக்கிற வாலிபத்தை  அவர்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். மொபைலுக்கும் இன்டர்நெட்டுக்கும் கேம்ஸுக்கும் சினிமாவிற்கும் போதைக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களுக்குப் பின்னால் நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கோடிட்டுக் காட்டினோம். இந்த ஆபத்தான சூழலிலிருந்து அவர்களைக் காக்க நம் வாலிபச் சமூகத்தை மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? எந்த மாதிரியான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் ? என்பதைக் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்து சிந்திக்க இருக்கிறோம்.

எதையுமே பேசி வேதனைப் பட்டால் மட்டும் போதாது. அதற்கான தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும். இஸ்லாத்தில் அனைத்திற்கும் தீர்வு இருக்கிறது. எத்தனை காலங்கள் கடந்தாலும் எத்தனை நவீன பிரச்சனைகள் சிக்கல்கள் நம்மிடையே தோன்றினாலும் அனைத்திற்குமான தீர்வாகத்தான் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் இஸ்லாமிய மார்க்கதை நமக்கு வழங்கியிருக்கிறான். அந்த வகையில் இந்த மோசமான கலாச்சார சீரழிவிலிருந்து நம் வாலிபச் சமூகத்தை மீட்டெடுக்க இஸ்லாம் கூறிய தீர்வுகள் என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

ஏனென்றால் வாலிபர்கள் தான் ஒரு சமூகத்தின் தூண்கள். நாளை அந்த சமூகத்தை அவர்கள் தான் கட்டிக் காக்க வேண்டும். இன்றைய வாலிபர்கள் தான் நாளைக்கு ஒரு குடும்பத்தின் தலைவர்களாக ஒரு சமூகத்தின் தலைவர்களாக ஒரு மஹல்லாவின் தலைவர்களாக ஏன் நாட்டின் தலைவர்களாக வர இருக்கிறார்கள். இன்றைக்கு நம் கையில் இருக்கிற வாலிபர்களை நெறிபடுத்தி அவர்களை பக்குவப்படுத்தினால்  மட்டும் தான் நாளைய சிறந்த தலைமைகளை வருங்கால சந்ததி களுக்கு நாம் வழங்க முடியும்.    

வாலிபர்களை நெறிப்படுத்த அவர்களைப் பக்குவப்படுத்த இஸ்லாம் கூறுகின்ற முதல் தீர்வு குழந்தைப்பருவத்தை நாம் கையில் எடுக்க வேண்டும்,அவர்களை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவர்களுக்கு மார்க்க போதனைகளை,நல்ல கலாச்சாரத்தை, நல்ல ஒழுக்க மேம்பாடுகளைக் கொடுத்து இஸ்லாமிய வட்டத்திற்குள் அவர்களைக் கொண்டு வர வேண்டும், இது காலத்தின் கட்டாயம். இது இன்றைய வாலிபர்களுக்கு பொருந்தாது என்றாலும் அடுத்து வரக்கூடிய வாலிபர்களை நல்லவர்களாக சமூகத்திற்கு நாம் கொடுக்க உதவும்.

நமது குழந்கைகளை நல்லவர்களாக நல்லொழுக்கமிக்கவர்களாக மார்க்கத்தில் ஈடுபாடுள்ளவர்களாக அவர்களை வார்த்தெடுக்கும் ஒரே இடம் மக்தப் மத்ரஸாக்கள் தான். சமுதாயத்தின் ஒழுக்கமும் முன்னேற்றமும் மக்தப் மத்ரஸாக்களிலிருந்து தான் உருவாகிறது. பெற்றோர்களை மதிக்கும் பிள்ளைகளாக அவர்களுக்கு பணிவிடை செய்யும் பிள்ளைகளாக  அனைவராலும் போற்றப்படும் பிள்ளைகளாக அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்ற பிள்ளைகளாக நம் பிள்ளைகளை உருவாக்கும் தளங்கள் தான் மக்தப் மத்ரஸாக்கள்.

குழந்தை பிறந்தவுடன் காதில் பாங்கு சொல்லி இறை சிந்தனை ஊட்டப்படுகிறது. மரணிக்கும் வேளையில் கலிமா சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மனிதனின் வாழ்க்கை பாங்கில் ஆரம்பித்து கலிமாவில் முடிகிறது. இதன் நோக்கம் பிறப்பு முதல் இறைப்பு வரை அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் இறைவனின் சிந்தனையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான். இந்த சிந்தனையை ஊட்டும் இடங்கள் தான் மக்தப் மத்ரஸாக்கள்.

உண்ணுவதின் ஒழுக்கம் என்ன? உறங்குவதின் ஒழுக்கம் என்ன? கழிவறைக்கு செல்வதின் ஒழுக்கம் என்ன? இப்படி சிறு சிறு விஷயத்தில் ஆரம்பித்து நம் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் போன்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நம் நாயகம் அவர்களை எப்படி நேசிக்க வேண்டும்? சத்திய சஹாபாக்களை எப்படி மதிக்க வேண்டும்? கண்ணியம் நிறைந்த இமாம்களை எப்படி கண்ணியப்படுத்த வேண்டும்? மார்க்க அறிஞர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எல்லாவற்றுக்கும் மேலாக படைத்த ரப்பை எப்படி அஞ்ச வேண்டும்? இப்படி மார்க்கம் சார்ந்த எல்லா விஷயங்களும் போதிக்கபட்டு உருவாக்கப்படும் குழந்தைகள் நிச்சயம் எதிர் காலத்தில் சிறந்த தலைமுறைக்கு உரித்தானவர்களாக இருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அமெரிக்க எழுத்தாளர் ஜான் டேவிஒரு சமுதாயத்தின் மாற்றம் குழந்தையின் கல்வியின் மூலமே ஏற்படும்என்று கூறுகிறார். ஆரோக்கியமான மாற்றத்தையும் குழந்தையின் கல்வியின் மூலம் தான் தர முடியும். ஆரோக்கியமற்ற மாற்றத்தையும் குழந்தையின் கல்வியின் மூலம் தான் இன்றைக்கு நம் எதிரிகள் ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள்.

1992 டிசம்பர் 6 ம் தேதி பாபர் மஸ்ஜித் இடித்து தகர்க்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள்  பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கான திட்டத்தின் விதையை  1925 லேயே தூவி விட்டார்கள்.ஆம் 1925 - ல்  நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகியது.  உருவானவுடன் இந்தியா  முழுவதும் பள்ளிக்கூடங்களை  நிறுவினார்கள். கிட்டத்தட்ட  20,000 பள்ளிக் கூடங்களை தன் வசத்தில் வைத்திருந்தார்கள். பாடத் திட்டத்தில் இராமரை கடவுளாகக் கொண்டு வந்தார்கள். போதாக் குறைக்கு எல்லா டி.வி. சேனல்களிலும் இராமாயணம் என்ற நெடுந்தொடரை  நாடகமாக்கி இந்த சமூகத்தைப்  பார்க்க வைத்தார்கள். அதன் விளைவு, 75 ஆண்டுகளுக்குப்  பிறகு ராமரைக் கடவுளாக  ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதன் பின்பே  கரசேவை  என்ற பெயரில் பள்ளிவாசலை  இடித்தார்கள். ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அந்த நேரத்தில்  அந்த இடத்திற்கு வந்த பத்திரிகையாளர்கள்,காவலர்களெல்லாம் பள்ளியை இடித்தார்கள். காரணம்,அவர்கள் பயின்று வந்த பள்ளிகள்  அவர்கள் மனதில்  விதைத்த விதை அது.

எனவே குழந்தைக் கல்வியின் மூலம் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தையும் கொண்டு வர முடியும். கெட்ட மாற்றத்தையும் கொண்டு வர முடியும். நல்ல மாற்றங்களைத் தரும் இடங்கள் தான் மக்தப் மத்ரஸாக்கள்.

நாளை பெற்றோருக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல தலைமுறையை உருவாக்கித் தரும் ஒரு இடம் தான் மக்தப் மத்ரஸாக்கள்.

عن أبي عبد الله  قال إن فلانا رجلا سماه قال إني كنت زاهدا في الولد حتى وقفت بعرفة فإذا إلى جانبي غلام شاب يدعو ويبكي ويقول يا رب والدي والدي فرغبني في الولد حين سمعت ذلك

அபூஅப்துல்லாஹ் ரஹ் அவர்கள் ஒரு மனிதருடைய பெயரைக் குறிப்பிட்டு அந்த மனிதர் சொன்னதாகக் கூறுகிறார்கள் ; நான் குழந்தைப் பெற்றுக் கொள்வதில் ஆசையில்லாதவனாக இருந்தேன். ஒரு நாள் அரஃபாவில் நின்று கொண்டிருந்தேன். அங்கே எனக்கருகில் ஒரு வாலிபன் தன் தந்தைக்காக அழுது துஆ செய்வதைக் கண்டேன். அதைப் பார்த்த பிறகு தான் குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

குறிப்பாக மக்தப் மத்ரஸாக்களில் குர்ஆன் கற்றுத் தரப்படுகிறது. குர்ஆனுடனான நம் தொடர்பை மக்தப் மத்ரஸாக்கள் தான் அதிகப்படுத்துகிறது. இறை வேதமான அல்குர்ஆன் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுடன் நமக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு உலகிலும் நமக்கான அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் பெற்றுத்தருகிறது.

عَنْ أَبِي ذَرِّ نِ الْغِفَارِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : إِنَّكُمْ لاَ تَرْجِعُونَ إِلَي اللهِ بِشَيْءٍ أَفْضَلَ مِمَّا خَرَجَ مِنْهُ يَعْنِي الْقُرْآنَ. رواه الحاكم

அல்லாஹ்விடமிருந்து வெளியான அல்குர்ஆனை விடச் சிறந்த வேறு எதன் மூலமாகவும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது (முஸ்தத்ரக் ஹாகிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : إِذَا سَافَرْتُمْ فَلْيَؤُمَّكُمْ أَقْرَأُكُمْ، وَإِنْ كَانَ أَصْغَرَكُمْ، وَإِذَا أَمَّكُمْ فَهُوَ أَمِيرُكُمْ. رواه البزار واسناده حسن،

நீங்கள் பயணம் செய்தால் அல்குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர் (மார்க்க சட்டத்தை அதிகம் தெரிந்தவர்) உங்களுக்கு இமாமாக நின்று தொழ வைக்கட்டும். அவர் உங்கள் அனைவரிலும் சிறியவராக இருந்தாலும் சரியே! அவர் உங்களுக்கு இமாமாக ஆகி விட்டால் அவர் தான் உங்களுக்கு தலைவர் (பஸ்ஸார்)

இப்படி மக்தப் மத்ரஸாக்களால் அங்கு கற்றுத் தரப்படுகின்ற குர்ஆன் சார்ந்த கல்வியால் நம் சமூகம் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற நன்மைகளை வரிசைப்படுத்தலாம். ஆனால் தற்போது மக்தப் மத்ரஸாக்கள் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அநேகமான இடங்களில் மக்தப் மத்ரஸாக்கள் பொழிவிழந்தே காணப்படுகிறது. மக்தப் என்கிற அடித்தளத்தின் மீது வளர்ந்தவர்கள் நாம் அனைவரும். அன்றிலிருந்து இன்று வரை நம் இஸ்லாமியர்களிடம் மார்க்கத்தின் தன்னிகரற்ற மிகப் பெரிய மீடியாவாக,மார்க்கத்தோடு ஒரு இஸ்லாமியனை இணைக்கும் மிகப் பெரிய பாலமாக விளங்கிக் கொண்டிருக்கிற மக்தப் மத்ரஸாக்களின் இன்றைய நிலை, சமீப காலமாக நம்மை அதிகம் கவலைக்கும்  சிந்தனைக்கும் ஆட்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் பள்ளி செல்லும் குழந்தைகளில் வெறும் 3% குழந்தைகள் மட்டுமே மத்ரஸாவிற்கு செல்கிறார்கள் என இஸ்லாமியர்களின் அரசியல்சமூகபொருளாதார நிலைமை தாழ்ந்து போனதின் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசால் கடந்த 2000 ஆண்டு அமைக்கப்பட்ட சச்சார்  குழுவால் வழங்கப்பட்ட ஆய்வின் முடிவு இது. 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்த நிலை என்றால் 22 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த நேரத்தில் அதன் சதவீதம் இன்னும் குறைந்திருக்கும் என்பது உண்மை.

அன்றைய இஸ்லாமியர்களின் நிலை, அதிகாலை எழுந்து தானும் ஃபஜ்ர் தொழுது தனது பிள்ளைகளையும் ஃபஜ்ர் தொழுவதற்கும் மக்தப் மத்ரஸாக்களுக்கும் அனுப்பி வைத்து பிறகு பிள்ளைகளை நிரப்பமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று பெற்றோர்களும் ஃபஜ்ர் தொழுவதில்லை. பிள்ளைகளையும் எழுப்பி விடுவதில்லை. மத்ரஸாவுக்கும் அனுப்புவதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. இதனால் வரும் காலங்களில் நம் சமூகத்து வாலிபர்களின் நிலை இதை விட மிக மோசமாக இருக்கும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

எதுவரை நம் சமுதாயம் மத்ரஸாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிள்ளைகளை அனுப்பியதோ அதுவரை சிறப்பாகவே இருந்தது. என்றைக்கு நம் சமூகம் மக்தப் மத்ரஸாக்களை கை விட்டதோ அதற்குப் பிறகு தான் வாலிபர்களின் போக்கு மாறிப்போனது. அதனால் தான் இன்றைய வாலிபர்கள் அறவே மார்க்கம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்து வருகிறார்கள். சுதந்திரம் என்ற பெயரில் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்கள். மறுமையை மறந்து அமல்களைத் துறந்து கடைசியில் நம் உயிரிலும் மேலான ஈமானையும் இழந்து விடுகிறார்கள். இவையெல்லாம் மத்ரஸாக்களை இந்த சமூகம் விட்டு விட்டதால் ஏற்பட்ட இழப்புக்கள்.

எங்கு மக்தப் நடை பெற வில்லையோ அங்கு இஸ்லாத்திலிருந்து வெளியேறும் ரித்தத் அதிகமாக நடைபெறும் என்று இந்திய தாருல் உலூம் நத்வதுல் உலமா கல்வி நிறுவனத்தின் அறிஞரும் இந்திய வரலாற்று ஆய்வாளருமான அபுல்ஹஸன் அலி நத்வி அவர்கள்  கூறுகிறார்கள்..

நம் சமூகம் இன்றைக்கு மறுமையின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிற மார்க்கக் கல்வியை விட பொருளாதாரத்தின் அடிப்படையாக அவர்கள் பார்க்கிற உலகக் கல்விக்குத் தான் முக்கியம் தருகிறார்கள். ஆனால் மார்க்கக் கல்விக்குத்தான் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். உலகக்கல்வி அவசியம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை யென்றாலும் இரண்டில் மார்க்க கல்விக்கே முதன்மை இடம் தரப்பட வேண்டும்.

பொதுவாகவே இரண்டு விஷயங்களில் எதை முதலில் தேர்ந்தெடுப்பது என்பதில் தான் ஒருவரின் வெற்றி அடங்கியிருக்கிறது. இரு விஷயங்களில் எது மிக முக்கியமானதோ அதை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை முதலில் செய்ய வேண்டும். அதற்கு prioritizing என்று கூறுவார்கள்.   1990 – களில் ஸ்டீபன் கோவி என்பவர், “the seven habits of highly effective people”  மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்ற மனிதர்களின் ஏழு பழக்கங்கள் என்ற நூலை வெளியிட்டார். அந்த நூலில் ஆற்றல் மிக்க, வெற்றி பெற்ற மனிதர்களின் ஏழு பழக்கங்களில் மூன்றாவது பழக்கமாக first thinks first முதலில் செய்ய வேண்டியவை முதலில் என்பதை குறிப்பிட்டிருந்தார்.

அந்த அடிப்படையில் உலகக்கல்வி, மார்க்கக் கல்வி இரண்டும் தேவை தான். என்றாலும் இன்றைய கலாச்சார சீரழிவிலிருந்து நம் எதிர் கால சந்ததிகளைக் காப்பதற்கும் அவர்களுக்கு ஒழுக்கமாக வாழ்வை அமைத்துத் தருவதற்கும் மார்க்கக் கல்விக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அன்றைக்கு இருந்த நம் சமூகத்தின் தாய்மார்கள் மார்க்கக் கல்விக்கே முன்னுரிமை வழங்கினார்கள். அதை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கு எத்தனை பெரிய விஷயங்களை தியாகம் செய்வதற்கும் முன் வந்தார்கள்.  

الإمام الشافعي كان يتيم الأب و فقيراً أيضاً..و لم تكن أمه تملك المال الكثير لتعلمه مثل أبناء الأغنياء..فكان معلم الأمام الشافعي يتركه و يعلم ابناء الأغنياء و كان عمره أربع سنوات آن ذاك فذهب الإمام لأمه يشكو حاله.. فقالت له أمه: يابني عندما يذهب إستاذك ليعلم أبناء الأغنياء إذهب أنت و اجلس بجانب هذا الولد و لا تضايقه ولا تشعره أنك تتطفل عليه

قال الحميديُّ: قال محمد بن إدريس الشافعي رحمه الله: "كنت يتيمًا في حجر أمي فدفعتني في الكتَّاب، ولم يكن عندها ما تعطي المعلمَ، فكان المعلمُ قد رضي مني أن أخلفه إذا قام، فلما ختمت القرآن دخلت المسجدَ، فكنت أجالسُ العلماءَ، وكنت أسمعُ الحديثَ أو المسألة فأحفظها، ولم يكن عند أمي ما تعطيني أن أشتري به قراطيسَ قطُّ، فكنت إذا رأيت عظمًا يلوح آخُذُه فأكتب فيه

و الأمام الشافعي من شدة فقره لم يكن يملك الورق ليكتب عليه .. ذهب إلى أمه أيضاً يشتكي..فقالت له لا عليك يا بني..وذهبت به إلى ديوان الملك حيث يقوم المدون بكاتبة ما يريد ثم يرمي الورق .. فكانت تاخذ الورق المرمي و تحضره لإبنها ليكتب عليه من الخلف  ..و قد كانت أمه إذا يتصدقون عليها الأغنياء تطلب أن يتصدقوا عليها بالورق..و حتى هذه الأوراق لم تكن تكفيه ..فذهبت به أمه إلى مكان ذبح الغنم و تاخذ عظم الغنم و تجففه ليكتب عليه

و كان الإمام الشافعي يحمل العظم على كتفه و يذهب إلى المدرسة و هو إبن السابعة

و كانت حريصة أن يكون إبنها حافظاً للقرآن الكريم..و الحديث و التفسير فكانت تسافر به إلى أي مكان تجد فيه هذا العلم..حتى أنها رهنت منزلها..لتغطيه مصاريف السفر و الدراسة

இமாம் ஷாஃபி ரஹ் அவர்கள் கைக்குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்தார்கள். அதனால் அவர்களது தாயார் அவர்களை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். குடும்பத்தின் சூழல் மிக நெருக்கடியாக இருந்த நிலையிலும் தனது குழந்தை சிறந்த அறிஞராக வர வேண்டும் என்ற கனவு அந்த தாயிக்கு இருந்தது.

இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவர்களின் தாயார் நான்கு வயதில் கல்வி பயில்வதற்காக ஆரம்ப மதரஸாவிற்கு அனுப்பி வைத்தார்கள். கல்வி பயிற்றுவிக்கக்கூடிய ஆசிரியருக்குக் கட்டணமாகக் கொடுப்பதற்கு தயாரிடத்தில் எதுவும் இல்லை. ஆசிரியர் அவர்களை விட்டு விட்டு வசதியுள்ள பிள்ளைகளுக்கு மட்டும் பாடம் எடுப்பார். இமாம் ஷாஃபி ரஹ் அவர்கள் தன் தாயாரிடத்தில் வந்து முறையிட்ட போது அவர்கள், உன்னுடைய ஆசிரியர் வசதியுள்ள பிள்ளைகளுக்கு பாடம் நடத்துகின்ற பொழுது நீ அவர்களோடு சேர்ந்து மறைவாக நின்று கொள் என்று சொல்வார்கள். அவ்வாறே அவர்களும் செய்வார்கள்.என்றாலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அபாரமான அறிவாற்றலால் மற்ற சக மாணவர்களுக்கு அவர்கள் பாடம் நடத்துவார்கள். ஒரு நாள் அதைக் கண்ணுற்ற அவருடைய ஆசிரியர் தனக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை இருப்பின் தனக்குப் பாரமாக இமாம் ஷாஃபி அவர்களை அங்கே வைத்து விட்டு செல்வார்கள். அதையே அவர்களின் கல்விக்கான கட்டணமாகவும் ஏற்றுக் கொண்டார்கள்.

படித்ததை எழுதுவதற்கு அவர்களுக்கு அந்த நேரத்தில் காகிதங்கள் இருக்காது. அதை வாங்கித் தருவதற்கும் அவருடைய தாயாருக்கு வசதி இல்லை. எனவே வெளியே சென்று தெருக்களில் கிடக்கிற காகிதங்களை பொறுக்கி தன் மகனிடத்தில் வந்து தருவார்கள். செல்வந்தர்கள் சதகா செய்ய முன் வந்தால் காகிதங்களை வாங்கி தன் மகனுக்குத் தருமாறு வேண்டுவார்கள். அந்த காகிதங்கள் அவர்களுக்கு பற்றாமல் போய் விட்டால் ஆடுகள் அறுக்கக் கூடிய இடத்திற்கு சென்று அங்கே கிடக்கிற எலும்புத் துண்டுகளை எடுத்து காய வைத்து தன் மகனாரிடத்தில் தருவார்கள். தன் மகன் குர்ஆனையும் குர்ஆனின் விளக்கங்களையும் ஹதீஸ்களையும் கற்றுக் கொள்வதற்காக அவரை வெளியூர் அனுப்புவதற்கு விரும்பினார்கள். அந்த நேரத்தில் தன் வீட்டை அடமானம் வைத்து அதைக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

தாயாரின் அந்த முயற்சியாலும் ஆர்வத்தாலும் தியாகத்தாலும் தான் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இந்த சமூகத்திற்குக் கிடைத்தார்கள்.  

நாம் நம் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியைக் கொடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அது தான் அவர்களின் எதிர் காலத்தை பிரகாசமாக்கும். வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

 இன்ஷா அல்லாஹ் தொடரும் ....

 

2 comments: