Thursday, January 26, 2023

கூடா நட்பு கேடாய் முடியும்

சமூகத்தின் முக்கிய அங்கமாக இருக்கிற வாலிபர்களை நெறிப்படுத்த வேண்டும், இளம் சமூகத்தை சீர்படுத்த வேண்டும். இன்றைய மோசமான கலாச்சாரச் சீரழிவிலிருந்து அவர்களைப் பாதுகாத்து பழுதுபடாமல் அடுத்த சிறந்த தலைமுறைக்குரியவர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில் தொடர்ந்து மூன்று வாரங்களாக அது குறித்து சிந்தித்தும் பேசியும் வருகிறோம். வாலிபர்களை நெறிப்படுத்த நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய முதல் தேவை பள்ளிவாசல்களில் காலையும் மாலையும் நடைபெறும் மார்க்கத்தின் அடிப்படை விஷயங்கள் போதிக்கப்படுகின்ற மக்தப் மதரஸாக்களை முறைப்படுத்த வேண்டும். அதை மேம்படுத்த வேண்டும் என்று கடந்து வாரம் பேசினோம். அடுத்து நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம், இன்றைய வாலிபர்களின் நட்பு வட்டாரத்தை கவனிக்க நோக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த நட்புகளை உருவாக்கித் தர வேண்டும்.

நாம் வாழ்க்கை நெறியாகக் கொண்டிருக்கிற இஸ்லாம், வாழ்க்கையில் நல்லமல்கள் செய்ய வேண்டும், நற்காரியங்கள் புரிய வேண்டும், நன்நடத்தை வேண்டும், நல்லதை பேச வேண்டும், நல்லதை சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தரும் அதே நேரத்தில் நல்ல நட்பும் நல்லவர்களின் தொடர்பும் சகவாசமும் வேண்டும் என்று கூறுகிறது.தீய காரியங்கள் கூடாது, தீய நடத்தை கூடாது, தீய பேச்சுக்கள் கூடாது, தீய சிந்தனை கூடாது, தீய எண்ணங்கள் கூடாது என்று போதிக்கிற இஸ்லாம் தீய நட்பும் கெட்டவர்களின் தொடர்பும் சகவாசமும் கூடாது என்று சொல்கிறது.

மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாக நட்பு தான் அமைகிறது. பெற்றோர்களின் அன்பும் உற்றார் உறவினர்களின் பாசமும் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடும். பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவதும், பெற்றோர்கள் நல்லதைக் கூறி நல்லவற்றைப் பழக்கி வளர்த்தாலும் தீய நண்பர்களின் சகவாசத்தால் பிள்ளைகள் வழிதவறிச் செல்வதும் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும்.

வாழ்வில் மனிதன் சந்திக்கிற முன்னேற்றம் பின்னடைவு உயர்வு தாழ்வு வெற்றி தோல்வி என அனைத்து பிரதிபலிப்பிற்கும் மூலக்   காரணமாக இருப்பது இந்த நட்பு தான். எனவே நம் பிள்ளைகள், வாலிபர்கள் முன்னேற வேண்டுமென்றால் அவர்களுக்கு நல்ல நட்பை உருவாக்கித் தர வேண்டும்.தீய நட்பு நம் பிள்ளைகளின் வாழ்வை சீரழித்து விடும்.

அன்னை தெரசா சிறுமியாக இருந்த போது அவருடைய தோழியரில் ஒரு தீய தோழி இருப்பதை அவருடைய தாயார் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்து விடும். எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என தெரசாவின் தாய் முடிவெடுத்தார். அந்த நட்பை முறித்து விடு என்று குழந்தைகளிடம் பொதுவாகச் சொன்னால் அதன் விபரீதம் புரியாமல் போய் விடும். அவ்வளவு எளிதாக அந்த உத்தரவை அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். எனவே தீய நட்பின் விபரீதத்தை தன் மகளுக்கு புரிய வைக்க அந்த தாய் விரும்பினாள்.   ஒரு நாள் அவர் தெரசாவை அழைத்து ஒரு கூடையைக் காண்பித்தார். அந்தக் கூடை நிறைய பழங்கள் இருந்தன. அவற்றுள் நல்ல பழங்களாக எடுத்து இரண்டு கூடைகளில் வைக்கும் படி தாய் கூறினாள். அதன் படியே தெரசாவும் வைத்தார். தாய் தனியே வைத்திருந்த ஓர் அழுகிய பழத்தை எடுத்து நல்ல பழங்கள் இருக்கும் ஒரு கூடையின் நடுவே வைத்தார்.ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள்?” என தெரசா கேட்டார். எல்லாம் ஒரு காரணமாகத்தான் என்று கூறி இந்த இரண்டு கூடைகளையும் அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும் போது எடுத்து வாஎன்றார் தாய். தெரசாவும் அப்படியே செய்தார்.

சில நாட்களுக்குப் பின் தாய் தெரசாவை அழைத்து அந்த பழக் கூடைகளை எடுத்து வரச்சொன்னர். பழக் கூடைகளை தெரசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தார்.அழுகிய பழம் வைத்த கூடையில் இருந்த பழங்கள் எல்லாமே அழுகிப்போய் இருந்தன. மற்றக் கூடையில் இருந்த பழங்கள் பழுதடையாது அப்படியே இருந்தது. இதனைப் பார்த்த தெரசா வருந்தினார். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய் விட்டதே என்று அவருக்கு அழுகையே வந்து விட்டது.

தாய் தெரசாவை அருகில் அமர வைத்து, பார்த்தாயா? ஒரே ஒரு அழுகிய பழம் ஒரு கூடையின் அனைத்து நல்ல பழங்களையும் அழுக வைத்து விட்டது. தீய நட்பும் இப்படித் தான். தீய நட்பு ஒரு மனிதனை நாசமாக்கி விடும். மனிதனைக் கொல்வதற்கு ஒரு துளி விஷம் போதும் என்று அறிவுறுத்திய போது அன்னை தெரசா புரிந்து கொண்டார்.

நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. நட்பு மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.ஒருவன் எதோடு சேருகிறானோ அதனுடைய குணம் அவனுக்கும் ஒட்டிக் கொள்ளும். குதிரை வளர்ப்பவனுக்கு இயற்கையிலேயே பெருமை இருக்கும், ஆடு மேய்ப்பவனுக்கு பணிவு இருக்கும். அதனால் தான் நபிமார்கள் அத்தனை பேரும் ஆடு மேய்த்திருக்கிறார்கள். எனவே சேர்க்கை நன்றாக இருக்க வேண்டும். சேரும் இடம் நல்லதாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதனை நல்லவனாக மாற்றுவதும் நட்பு தான். அதே மனிதனை தீயவனாக மாற்றுவதும் நட்பு தான். ஒரு மனிதனை சிறந்தவனாக மாற்றுவதும் நட்பு தான்.அவனை தரம் கெட்டவனாக மாற்றுவதும் நட்பு தான்.ஒரு மனிதனை அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் பிடித்தமானவனாக உகந்தவனாக மாற்றுவதும் நட்பு தான்.அதே மனிதன் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவதற்குக் காரணமாக இருப்பதும் நட்பு தான். நல்ல நட்பு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் தீய நட்பு தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

வானிலிருந்து பொழியும் மழைத்துளி  கடலில் விழும் போது உப்பாக  மாறுகிறது,  கடலில்  விழுந்த  நீர் சிற்பிக்குள்  நுழைந்தால் முத்தாகி விடுகிறது,  அதே நீர்,  சாக்கடையில் விழுந்தால்  நஜீஸாகி  விடுகிறது. சேர்க்கையைப் பொறுத்து சேரும் பொருள் மாறி விடும்.

அதனால் தான் ஒரு மனிதன் எத்தகையவன்? அவன் குணங்கள் என்ன? அவன் பழக்கவழக்கங்கள் என்ன? அவன் நல்லவனா? கெட்டவனா இப்படி ஒரு மனிதனின் மொத்த HISTORY யையும் அறிந்து கொள்வதற்கு பெருமானார் அவர்கள் அவனுடைய நண்பனைப் பாருங்கள் என்றார்கள்.

الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل

ஒரு மனிதன் அவனுடைய நண்பனின் வழியில் இருக்கிறான். எனவே உங்களில் ஒருவர் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானித்துக் கொள்ளட்டும்.  (அபூதாவூது ; 4833)

நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மாஎன்கிறார் தத்துவ மேதை அரிஸ்டோட்டில்.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். உலக வரலாற்றில் அதிகம் பேர் நல்ல நண்பர்களின் சகவாசத்தால் தான் வெற்றியடைந்திருக்கிறார்கள்.

كان رسول الله – صلى الله عليه وسلم - قد عَهِدَ إلى أمرائه من المسلمين حين أمرهم بدخول مكة أن لا يقاتلوا إلا من قاتلهم، لكنّه في نفس الوقت كان قد أهدر دماء عدد من أهل مكّة قيل إنّهم ( 15 نفرا ) ، سمّاهم بأسمائهم ، وأمر صحابته بقتلهم وإن وُجدوا متعلقين بأستار الكعبة ، ولم يقتل منهم سوى أربعة فقط قصاصا ،وعفا عن الباقين . وهؤلاء الذين أمر النبي - صلى الله عليه وسلم - بقتلهم قد قاموا بجرائم شديدة ضد المسلمين .  ومن الذين أُهدر دمهم أيضا {{ صفوان بن أمية }} ، كان من أشد قريش عداوة للنبي - صلى الله عليه وسلم – وإيذاء المسلمين ،وهو ابن أمية بن خلف أحد صناديد قريش الذين قُتلوا في بدر، وشارك أيضا بنقض صلح الحديبية عندما عاون بني بكر على قتل خزاعة ، وأيضا قاتل خالد بن الوليد عند دخوله مكة ، فلما كان فتح مكة هرب صفوان باتجاه البحر يريد اليمن، وكان له ابن عم اسمه عمير بن وهب ، [[ ذكرت لكم قصته بعد بدر ، وكيف اتفق صفوان وعمير على قتل النبي - صلى الله عليه وسلم - وكيف أسلم ]] ، فقال عمير بن وهب : يا نبي الله إن صفوان بن أمية سيد قومه ، وقد خرج هاربا منك إلى البحر ، فأمّنه ، فقال -عليه الصلاة و السلام - : هو آمن ؛ قال : يا رسول الله فأعطني آية يعرف بها أمانك ؛ فأعطاه رسول الله - صلى الله عليه وسلم - عمامته ، فرجع معه ، حتى وقف به على رسول الله - صلى الله عليه وسلم - فقال صفوان : إن هذا يزعم أنك قد أمنتني قال : صدق ، قال : فاجعلني فيه بالخيار شهرين ؟ قال : أنت بالخيار فيه أربعة أشهر ، وأسلم في وقت غزوة حنين

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட அந்த நாளில் நபி அவர்கள் உங்களை எதிர்த்து சண்டையிட்டாலே தவிர யாரிடமும் நீங்கள் சண்டையிடக்கூடாது என்று தன் தோழர்களுக்கு உத்தவிட்டார்கள். அதே சமயம் மக்காவாசிகளில் இஸ்லாமியர்களுக்கு அதிகம் தொந்தரவுகள் கொடுத்த சில நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு (அவர்கள் 15 நபர்கள் என்று கூறப்படுகிறது) அவர்களை எங்கு கண்டாலும் கொன்று விட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அந்த 15 நபர்களில் உமைய்யா பின் கலஃப் என்பவனின் மகன் ஸஃப்வான் பின் உமைய்யாவும் ஒருவர்.

உமைர் பின் வஹ்ப் என்ற நபித்தோழர் தனது பழைய நண்பரான ஸஃபவானைச் சந்தித்து ஏகத்துவத்தை எடுத்துக் கூற நாடிய போது, என்னை நீ நெருங்காதே! முஹம்மதுவுடன் சேர்ந்து கொண்டு என்னை நீ கொல்ல வருகிறாயா? என்று மிரண்டார் ஸஃப்வான். ஒரு சிறந்த மனிதரிடமிருந்து ஓரிறைக் கொள்கையை உனக்கு எடுத்துக் கூறி நல்வழிப்படுத்தவே நான் வருகிறேன் என்று உமைர் ரலி அவர்கள் கூறியும் ஸஃப்வான் ஏற்றுக் கொள்ள வில்லை. தாம் அங்கிருந்தால் விபரீத விளைவு ஏற்படும் எனக் கருதிய ஸஃப்வான் கடல் மார்க்கமாக வேறு நாட்டுக்கு ஓடி விட ஜித்தா சென்று விட்டார். உமைர் ரலி அவர்கள் ஸஃப்வானைக் கண்டு மீண்டும் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறி இஸ்லாமியர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கு மேற்படாது என உறுதி கூறினார். அப்போது எனது பாதுகாப்பிறகுத் தகுந்த ஆதாரம் தந்தால் நான் மக்கா திரும்புவதாக ஸஃப்வான் கூறினார்.

நபியவர்களிடம் விரைந்து வந்த உமைர் ரலி அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஸஃப்வான் குரைஷிக் குலத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். தங்களிடமிருந்து தப்பித்து அவர் ஜித்தாவுக்குச் சென்று விட்டார். அவருக்கு மன்னிப்பும் பாதுகாவலும் அளிப்பதாகத் தாங்கள் உறுதி அளிக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டார்கள்.

அவருக்குப் பாதுகாப்பு உண்டு என்று நபி அவர்கள் உத்தரவாதமளித்தார்கள். என் நண்பனிடம் காண்பிப்பதற்கு அதற்கு அடையாளமாக ஏதாவது தாருங்கள் என்று கேட்டார்கள். நபி அவர்கள் மக்காவில் நுழையும் போது தாம் அணிந்திருந்த தம் தலைப்பாகையை அவிழ்த்து அளித்தார்கள். அதைப் பெற்றுக்கொண்டு  உமைர் ரலி அவர்கள்  ஜித்தாவுக்கு விரைந்து நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து உனக்கு வாக்குறுதிப் பெற்று வந்துள்ளேன் என்றார்கள். என்னை விட்டு விடு. நீ பொய் உரைக்கிறாய் என்றார் ஸஃப்வான். கருணையில் மிகைத்த, அன்பான ஒரு மனிதரிடம் பேசி விட்டு நான் உன்னிடம் வந்திருக்கிறேன் என்று உமைர் ரலி அவர்கள் கூறி தாம் பெற்று வந்திருந்த உத்தரவாதத்தைக் காட்டினார்கள். இறுதியில் இணங்கிய ஸஃப்வான் மக்கா வந்து நபி அவர்களைச் சந்தித்தார். நபிகளார் இஸ்லாத்தின் இனிய கொள்கைகளை ஸஃப்வானிடம் எடுத்துக் கூறினார்கள். நான் சிந்தித்து முடிவு செய்ய 2 மாத கால அவகாசம் தேவை என ஸஃப்வான் கூறினார்.இறுதியில் நான்கு மாத அவகாசத்தைப் பெற்றுக் கொண்டு பின்பு இஸ்லாத்தில் இணைந்து கொண்டார். (அஸ்ஸீரத்துன் நபவிய்யா)

உமைர் ரலி அவர்கள் தான் அறிந்து ஏற்றுக் கொண்ட சத்திய மார்க்கத்தை தன் நண்பர் ஸஃப்வானும் ஏற்றுக் கொண்டு மறுமையின் வெற்றியைப் பெற வேண்டும். தன்னைப் போன்றே அவரும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்ற ஆவல் உமைர் ரலி அவர்களின் செயல் மூலம் நமக்குத் தெளிவாகிறது. ஸஃப்வான் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஸஹாபி என்ற அந்தஸ்தைப் பெற்றதற்கு உமைர் ரலி என்ற நண்பர் தான் காரணமாக இருந்திருக்கிறார்.

நல்ல நண்பர்கள் எப்படி ஒருவரை உயரப் பறக்க விடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் அவரை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். கூடா நட்பு கேடாய் முடியும்என வள்ளுவர் சொன்னது இங்கே நினைவு கூறத்தக்கது.

قال أمير المؤمنين علي بن أبي‏ طالب رضي الله تعالى "صُحْبَةُ الْأَشْرَارِ تَكْسِبُ الشَّرَّ كَالرِّيحِ إِذَا مَرَّتْ بِالنَّتْنِ حَمَلَتْ نَتْناً"

அறுவறுப்பான பொருளை வருடி வரும் காற்று அறுவறுப்பான வாடையைச் சுமந்து வருவதைப் போன்று கெட்டவர்களின் சகவாசம் கேடை ஏற்படுத்தும் என அலி ரலி அவர்கள் கூறினார்கள்.

قال حاتم الأصم رحمه الله: "من اغتابني فليس عدوي، ومن أخذ مني شيئًا فليس هو عدوي، ولكن عدوي الذي إذا كنت في طاعة الله أمرني بمعصية الله، فرأيت ذلك إبليس وجنوده فاتخذتهم عدوًّا"

என்னைப் பற்றி புறம் பேசுபவனோ என்னிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்பவனோ என் எதிரியல்ல. மாறாக நான் நன்மை செய்து கொண்டிருக்கிற போது பாவத்தின் பக்கம் என்னை அழைப்பவனே என் எதிரியாகும். அவர்கள் இப்லீஸின் கூட்டாளிகள்.அவர்களோடு சகவாசத்தை ஆக்கிக் கொள்ள மாட்டேன். மாறாக அவர்களை எதிரிகளாக நான் ஆக்கிக் கொள்வேன் என ஹாத்தமுல் அஸம்மு ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

இன்றைக்கு பெரும்பாலும் நண்பர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். நன்மைகளின் பக்கம் அழைப்பதில்லை. பாவங்களின் அளவிலும் மோசமான பழக்கவழக்கங்களின் அளவிலும் தான் அழைக்கிறார்கள். போதை, திருட்டு, பாலியல், சமூக, விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும், அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் இழுப்பவர்கள் உண்மையில் நண்பர்கள் அல்ல. அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவும் கூடாது. அவர்கள் எதிரிகள்.

فصنع عقبة بن أبي معيط طعاما ودعا الناس إليه ودعا رسول اللّه صلّى اللّه عليه وسلّم فلما قرب الطعام ، قال رسول اللّه صلّى اللّه عليه وسلّم : ما أنا بآكل طعامك حتى تشهد أن لا إله إلا اللّه ، وأني رسول اللّه فقال عقبة : أشهد أن لا إله إلا اللّه وأن محمدا رسول اللّه. فأكل رسول اللّه صلّى اللّه عليه وسلّم من طعامه. وكان عقبة صديقا لأبيّ بن خلف ، فلما أخبر أبيّ بن خلف ، قال له : يا عقبة صبأت ، قال لا واللّه ما صبأت ولكن دخل علي رجل فأبى أن يأكل طعامي إلا أن أشهد له ، فاستحييت أن يخرج من بيتي ، ولم يطعم فشهدت له فطعم ، فقال : ما أنا بالذي أرضى عنك أبدا إلا أن تأتيه فتبزق في وجهه ، ففعل ذلك عقبة فقال عليه الصلاة والسلام ، لا أراك خارجا من مكة إلا علوت رأسك بالسيف ، فقتل عقبة يوم بدر صبرا وأما أبيّ بن خلف فقتله النبيّ صلّى اللّه عليه وسلّم بيده يوم أحد ، وقيل : لما بزق عقبة في وجه النبيّ صلّى اللّه عليه وسلّم عاد بزاقه في وجهه ، فاحترق خداه فكان أثر ذلك في وجهه ، حتى قتل وقيل كان عقبة بن أبي معيط خليل أمية بن خلف ، فأسلم عقبة فقال له أمية

وجهي من وجهك حرام إن تابعت محمدا فكفر وارتد ، فأنزل اللّه فيه وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ يعني عقبة بن أبي معيط بن أمية بن عبد شمس بن عبد مناف ، على يديه  أي ندما وأسفا على ما فرط في جنب اللّه ، وأوبق نفسه

உக்பா பின் அபீ முயீத் என்பவனும், உபை பின் ஃகலஃப் என்பவனும் குறைஷித் குலத்தலைவர்களில் முக்கியமானவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை நபி அவர்களை உக்பா தன் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு அழைத்தான். அதற்கு அண்ணலார் நான் உன் வீட்டிற்கு விருந்துண்ண வரவேண்டுமானால் நீ ஷஹாதத்தை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்று கூறினார்கள். உக்பாவும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறி கலிமா ஷஹாதாவை மொழிந்தான். இந்த நிகழ்வு நடைபெறுகிற போது அவனுடைய நண்பன் உபை ஊரில் இல்லை.

வெளியூர் சென்றிருந்த அவன் ஊர் திரும்பிய போது, மக்கள் அவனிடம் உன்னுடைய நண்பன் உக்பா முஹம்மதின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதாக கூறினார்கள். உக்பாவைச் சந்தித்த உபை நீ மதம் மாறி விட்டாயா என்று கேட்டான். அதற்கவன் நான் அவர்களை விருந்திற்கு அழைத்தேன். கலிமா சொன்னால் தான் விருந்தை ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்கள். நானும் கலிமா சொல்லி விட்டேன் என்றான். நீ அவரைப் பின்பற்றினால்  நம் நட்பு இத்தோடு முடிந்து விடும்.  நம் நட்பு தொடரவேண்டுமானால் முஹம்மதின் முகத்தில் காரி உமிழ வேண்டும். அப்போது தான் நான் திருப்தியடைவேன்என்று கூறினான்.

நண்பனைத் திருப்திப்படுத்த உக்பா வேகமாகச் சென்று அண்ணலாரின் முகத்தில் காரி உமிழ்ந்தான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறினான். நபி அவர்களைப் பார்த்து காரி உமிழ்ந்த போது அது திரும்பி அவன் முகத்திலேயே பட்டு அவன் முகத்தைக் கறித்து விட்டது. அதன் அடையாளம் அவன் கொல்லப்படும் வரை இருந்தது. அவன் விஷயமாகத்தான் கீழ் வரும் வசனங்கள் இறங்கியது. (தஃப்ஸீர் பகவீ)

وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا

அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு "நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?" என்று கூறுவான்.

يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا‏

(அன்றி) "என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா?

لَقَدْ اَضَلَّنِىْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا‏

நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!" (என்றும் புலம்புவான்.) (அல்குர்ஆன் : 25 :27,28,29)

வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையைத் தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ  قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ  وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ‏  وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ‏‏‏

 

அவர்கள் சுவனபதியில் குற்றவாளிகளை நோக்கி உங்களை நரகத்தில் புகுத்தியது எது?” என்று விசாரிப்பார்கள். அதற்கவர்கள் நாங்கள் தொழ வில்லை. ஏழைக்கு உணவளிக்க வில்லை (வீணில்) மூழ்கியோருடன் நாங்கள் மூழ்கிக் கிடந்தோம் எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் : 74 :42,43,44, 45)

நம் பிள்ளைகளுக்கு, குறிப்பாக வாலிபர்களுக்கு நல்ல நட்பை அமைத்துக் கொடுக்க வேண்டும். தீய நட்பு அமைந்து விட்டால் அவர்களின் உலக வாழ்க்கை மோசமாகுவதோடு மறுமையின் வெற்றியும் கேள்விக்குறியாகி விடும். அல்லாஹ் பாதுகாப்பனாக!

   

6 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அருமையான பதிவு

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் 👍🤝🏾👏👏👏👏 தங்களது இந்த முயற்சியில் அல்லாஹ் வெற்றியை தரட்டும். ஜஸாக்கல்லாஹு கைரன் மவ்லவி

    ReplyDelete
  3. محي الدين عبد القادرJanuary 27, 2023 at 12:23 AM

    ما شاء الله خير جزاك الله خيراً

    ReplyDelete
  4. தம்பி, ரொம்ப ரொம்ப சூப்பர்,பாரகல்லாஹு லக,ஃபீ அஹ்லிக,வ மாலிக.

    ReplyDelete
  5. மிக அருமையான ஜும்மா குறிப்புரைகள் மௌலானா அல்லாஹ் தங்கள் அறிவுஞானத்தை அதிகப்படுத்துவானாக

    ReplyDelete