அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையால் வருடத்தின் மிகச்சிறந்த நாட்கள் என்று மார்க்கம் அடையாளப் படுத்தியிருக்கிற துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப நாட்களை அடைந்திருக்கிறோம்.அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிற அதே வேளையில் நாம் இங்கே அந்த ஹஜ்ஜின் கடமைகளையும் அந்த புனித இடங்களையும் நினைத்துப் பார்த்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் அங்கே செல்ல வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ்ஜுடைய பாக்கியத்தைத் தருவானாக
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ் என்பது தனித்துவம் வாய்ந்தது. ஹஜ்ஜுடைய கடமைகளுக்கும் மற்ற கடமைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. தொழுகையை ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் தொழ முடியும். எங்கிருந்தாலும் ஒருவரால் நோன்பு நோற்க முடியும். ஜகாத் கொடுக்க முடியும். வருடத்தின் எந்த நாட்களிலும் தொழ முடியும். நோன்பு நோற்க முடியும், ஜகாத் கொடுக்க முடியும். ஆனால் ஹஜ்ஜுடைய கடமைகளை அந்த இடங்களில் தான் செய்ய முடியும். அந்த குறிப்பிட்ட நாட்களில் தான் நிறைவேற்ற முடியும்.
ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தவாஃப் என்பது முக்கிய அமலாக இருக்கிறது. ஒருவர் தங்கத்தால் கஃபாவைப் போன்று ஒரு கட்டிடத்தை எழுப்பி நான் எனது ஊரிலேயே அதனைச் சுற்றி வருவேன் என்று சொல்லி அவ்வாறு செய்தாலும் அது தவாஃபாக ஆகாது.
இப்ராஹிம் அலை அவர்களின் மனைவியான ஹாஜரா அம்மையார் அவர்கள் ஸஃபா - மர்வா மலைகளுக்கு இடையே தண்ணீரைத் தேடி ஓடியதை ஒரு இபாதத்தாகவே அல்லாஹ் ஆக்கி விட்டான்.புற்பூண்டு கூட முளைக்காத சஃபா - மர்வா மலைகளுக்குப் பதிலாக எனது ஊரில் இருக்கிற இரண்டு பசுமையான மலைகளுக்கு இடையே நான் ஓடுகிறேன் என்று ஒருவர் ஓடினாலும் அது ஸஈயாக ஆகாது. அதற்கு அனுமதியும் இல்லை.
ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர்கள் செய்யக்கூடிய மற்றொரு அமல் ஷைத்தானுக்கு கல் எறிதல். அங்கு இருப்பதைப் போன்று ஒரு கல்லைக் கட்டி ஒருவர் கல் எறிந்தால் அது ஷைத்தானுக்கு கல் எறிந்ததாக ஆகாது. இவ்வாறு நாம் சிந்தித்தால் ஹஜ்ஜுடைய கடமைகளை ஹாஜிகள் மட்டுமே செய்ய முடியும். அதுவும் ஹஜ்ஜுடைய காலத்தில் மட்டுமே செய்ய முடியும். அந்த குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செய்ய முடியும்.
ஆனால் ஹஜ்ஜுடைய காலங்களில் ஹாஜிகள் நிறைவேற்றக்கூடிய அமல்களில் ஒரே ஒரு அமல் மட்டும் ஹாஜிகளுக்கு மட்டும் என்றில்லாமல் அனைவருக்கும் அதை பொதுவாக இறைவன் ஆக்கியிருக்கிறான். அந்த அமலை மட்டும் மக்கள் அவரவர்கள் வாழக்கூடிய பகுதியில் இருந்து கொண்டே நிறைவேற்றும் படி அல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறான். அது தான் 'குர்பானி. குர்பானி என்ற அறுத்துப் பழியிடுதலை அங்கே ஹாஜிகள் செய்கிறார்கள். அதே அமலை எல்லோரும் எல்லா இடங்களிலிருந்தும் செய்கிறார்கள்.ஹாஜிகள் அங்கிருந்து செய்யும் ஒரு காரியத்தை நாம் இங்கிருந்து அவர்களோடு இணைந்து செய்கிறோம். அந்த வகையில் குர்பானி என்பது தனிச்சிறப்பைப் பெற்ற அமலாக இருக்கிறது. ஹாஜிகளோடு நம்மை இணைக்கின்ற ஒரு அமலாக இருக்கிறது.
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அல்குர்ஆன் : 6:162)
இந்த வசனத்தில் குர்பானி என்பதற்கு நுஸுக் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியிருக்கிறான். நுஸுக் என்பதற்கு அஸல் பொருள் வணக்கம் என்பதாகும். தொழுகை நோன்பு ஜகாத் என்று எல்லாமே வணக்கமாக இருந்தாலும் நுஸுக் என்ற வார்த்தையை குர்பானிக்கு அல்லாஹ் பயன்படுத்தியிலிருந்து அது தனித்துவம் பெற்ற அமல் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
குர்பானி என்ற தனித்துவம் வாய்ந்த ஒரு அமலை செய்வதற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அந்த குர்பானி எதனால் கடமையாக்கப்பட்டது. அதன் நோக்கம் என்ன ? அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன ? குர்பானியால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன ? என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
1 – அல்லாஹ்வின் நிஃமத்துக்களுக்கு நன்றி செலுத்தும் உணர்வை குர்பானி தருகிறது.
وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَـكُمْ مِّنْ شَعَآٮِٕرِ اللّٰهِ لَـكُمْ فِيْهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهَا صَوَآفَّ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَـرَّ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَـكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன் : 22:36)
இந்த வசனத்தில் கால்நடைகளை உங்களுக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். விரும்பினால் அதில் நீங்கள் பயணிக்கலாம். அல்லது அதிலிருந்து பால் கறந்து அதனைப் பருகலாம். அல்லது அதை அறுத்து சாப்பிடலாம் என்று கூறி விட்டு இவைகளுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்று சொல்கிறான்.எனவே அந்த கால்நடைகளை நமக்கு அளித்ததற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். இறைவன் செய்த நிஃமத்துக்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வை குர்பானி நமக்கு தருகின்றது.
குர்பானியே ஒரு ஷுக்ர் தான்
اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் : 108:1)
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. (அல்குர்ஆன் : 108:2)
பெருமானார் ﷺஅவர்களுக்கு கவ்ஸர் என்ற உயர்ந்த நீர் தடாகத்தைக் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக குர்பானியைக் கொடுக்கும்படி அல்லாஹ் உத்தரவிடுகிறான்.
إنَّ نِعَم الله - عزَّ وجلَّ - كثيرة جدًّا، لا تُعدُّ ولا تُحْصى ﴿ وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لا تُحْصُوهَا ﴾ [إبراهيم: 34]، كنِعْمة الإيمان والطاعة، والسمع والبصر، والمال والأولاد، وهذه النِّعَم تحتاج إلى شكر؛ لِبَقائها، ومن طرُقِ شكر الله على نِعَمِه الإنفاق في سبيل الله، والأُضْحية من صور شكر الله - سبحانه وتعالى.
நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற உயிர் உடமைகள், நிம்மதி, அந்தஸ்து, ஈமான், செல்வம், ஆரோக்கியம், செவி,பார்வை,குழந்தைகள் இப்படி எண்ணற்ற நிஃமத்துக்களை செய்திருக்கிறான்.அவைகளுக்காக நாம் நன்றி செலுத்த வேண்டும். நன்றி செலுத்தும் வழிகளில் ஒன்று செலவு செய்தல். அந்த வகையில் நன்றி செலுத்துவதற்கான ஒரு ஏற்பாடு தான் குர்பானி.
2 – அர்ப்பணிக்கும் உணர்வை நமக்குக் கற்றுத்தருகிறது.
என் வாழ்க்கையில் இறைவனுக்காக எந்த ஒரு தருணத்திலும், எதையும் அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன்.. அது என் உயிராக, உடமையாக, என் உணர்வாக, எதுவாக இருந்தாலும் சரியே! என இறையின் முன்பாக ஒரு மனிதன் தன் அர்ப்பணிக்கும் உணர்வை வெளிப்படுத்துவதற்குப் பெயர் தான் குர்பானி.
அர்ப்பணித்தல் என்பது பல வகையாக இருக்கிறது. உயிரை அர்ப்பணித்தல், பொருளை அர்ப்பணித்தல், நம் வாழ்வின் பொன்னான நேரங்களையும் காலங்களையும் அர்ப்பணித்தல், நம் அந்தஸ்தை அர்ப்பணித்தல், (அல்லாஹ்விற்காகவும் இந்த மார்க்கத்திற்காகவும் அந்தஸ்தை விட்டுத் தருதல்) குடும்பத்தை அர்ப்பணித்தல். இவை அனைத்திற்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்கள் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள்.
அந்த அர்ப்பணிப்பு உணர்வு குர்பானியிலும் வெளிப்படும்.ஆடோ மாடோ வாங்கி அதற்கு தீணி போட்டு வளர்த்து, அதன் மீது அன்போ பிரியமோ ஏற்பட்டு, அதை விட்டு நாம் பிரிய முடியாமல் நம்மை விட்டும் அது பிரிய முடியாத நிலை வந்து, அதன் பிறகு அதை அல்லாஹ்விற்காக அறுத்துப் பலியிடுவதில் அந்த அர்ப்பணிப்பு உணர்வு இல்லையென்று சொல்ல முடியாது.
3 – தேவையுடையவர்களின் பசியைப் போக்குகிறது.
ஒருவர் ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுத்து அதை ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் பங்கிட்டு கொடுக்கும் போது அதைக் கொண்டு அவர்கள் பயன் பெறுகிறார்கள். பெருநாட்களில் அவர்கள் வயிறாற உண்டு மகிழ்கிறார்கள்.
அதனாலேயே பெரும்பாலான முன்னோர்கள் ஒட்டகத்தை குர்பானி கொடுப்பதையே விரும்பியிருக்கிறார்கள்.
عنْ مالِكِ بْنِ أنَسٍ قالَ: حَجَّ سَعِيدُ بْنُ المُسَيَّبِ، وحَجَّ مَعَهُ ابْنُ حَرْمَلَةَ، فاشْتَرى سَعِيدٌ كَبْشًا فَضَحّى بِهِ، واشْتَرى ابْنُ حَرْمَلَةَ بَدَنَةً بِسِتَّةِ دَنانِيرَ فَنَحَرَها، فَقالَ لَهُ سَعِيدٌ: أما كانَ لَكَ فِينا أُسْوَةٌ؟ فَقالَ: إنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ: ﴿والبُدْنَ جَعَلْناها لَكم مِن شَعائِرِ اللَّهِ لَكم فِيها خَيْرٌ﴾ فَأحْبَبْتُ أنْ آخُذَ الخَيْرَ مِن حَيْثُ دَلَّنِي اللَّهُ عَلَيْهِ، فَأعْجَبَ ذَلِكَ ابْنَ المُسَيَّبِ مِنهُ، وجَعَلَ يُحَدِّثُ بِها عَنْهُ.
ஒரு ஹஜ்ஜின் போது சஈத் பின் முஸய்யப் ரஹ் அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்கள். அவர்களோடு ஹஜ்ஜுக்கு சென்ற இப்னு ஹர்மலா ரஹ் அவர்கள் (சஈத் பின் முஸய்யப் ரஹ் அவர்களின் மாணவர்களில் ஒருவர்) ஆறு திர்ஹம்களைக் கொண்டு ஒரு ஒட்டகத்தை வாங்கி குர்பானி கொடுத்தார்கள். ஒட்டகத்தை குர்பானி கொடுப்பதற்கு உங்களுக்கு முன்மாதிரி எதுவும் இருக்கிறதா? எதை வைத்து நீங்கள் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தீர்கள் என்று சஈத் பின் முஸய்யப் ரஹ் அவர்கள் கேட்ட போது, “இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது” (அல்குர்ஆன் : 22:36) அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான். எனவே அல்லாஹ் அறிவித்ததின் படி அந்த நலவுகளை பெறுவதற்கு நான் விரும்பினேன். எனவே தான் ஒட்டகத்தைக் கொடுத்தேன் என்றார்கள். (அத்துர்ருல் மன்ஸூர்)
عَنِ ابْنِ عُيَيْنَةَ قالَ: حَجَّ صَفْوانُ بْنُ سُلَيْمٍ ومَعَهُ سَبْعَةُ دَنانِيرَ، فاشْتَرى بِها بَدَنَةً، فَقِيلَ لَهُ: لَيْسَ مَعَكَ إلّا سَبْعَةُ دَنانِيرَ تَشْتَرِي بِها بَدَنَةٍ، فَقالَ: إنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ: ﴿لَكم فِيها خَيْرٌ﴾
ஸஃப்வான் பின் சுலைம் ரஹ் அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்ற நேரத்தில் ஏழு தீனார்களைக் கொடுத்து ஒட்டகம் ஒன்றை வாங்கி குர்பானி கொடுத்தார்கள். உங்களிடத்தில் இப்போது இருப்பதே ஏழு தீனார்கள் தானே! அதை அப்படியே கொடுத்து ஒட்டகத்தை வாங்கி விட்டீர்களே! என்று கேட்கப்பட்ட போது இதில் நன்மை உண்டு என்று இறைவன் சொல்லி விட்டான். எனவே தான் நான் ஒட்டகத்தை கொடுத்தேன் என்று கூறினார்கள். (அத்துர்ருல் மன்ஸூர்)
உலகத்தின் நன்மை மறுமையில் கிடைக்கும் நன்மை இரண்டையும் அந்த வார்த்தை எடுத்துக் கொள்ளும். உலகத்தில் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று ஒட்டகத்தைக் கொண்டு அதிகம் பேர் பலன் அடைவார்கள் என்பது.
குர்பானி நம் நாட்டு பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டில் சுமார் 25 கோடி முஸ்லிம்கள் பக்ரித் கொண்டாடுகிறார்கள். அதில் குறைந்தது 20% முஸ்லீம்கள், குறைந்தபட்சம் ரூ 7000 / - க்கு குர்பான் ஆடுகளை வாங்குகிறார்கள். 5 கோடி x ரூ 7000 = ரூ 35 ஆயிரம் கோடி.
குர்பானிப் பிராணிகள் என்பது சீனத் தயாரிப்புகள் அல்ல. முழுக்க முழுக்க இந்திய தேசிய கிராமப்புறங்களிருந்து மட்டுமே இந்த வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு விவசாயி, ஒரு ஆண்டுக்கு சராசரியாக 5 ஆடுகளை நிர்வகித்தால் 5 கோடி ÷ 5 = 1 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு எளிமையான வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் கிடைத்து விடுகிறது.
எனவே பக்ரித் 35 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது என்பது மட்டுமின்றி சுமார் 1 கோடி சிறு விவசாயிகளுக்கு மிக இலகுவான வேலைவாய்ப்பைத் தருகிறது.
அதுமட்டுமில்லாமல்,ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும், மூன்றில் இரண்டு மடங்கு ஏழைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுவதால் - அதாவது ஒருவர் குறைந்தது 10 பேருக்கு பகிர்ந்தளிப்பதால், அதைக் கொண்டு 50 கோடி பேர் சாப்பிடுகிறார்கள், பயனடைகிறார்கள்.
இது மேலோட்டமாக பார்க்கப்பட்ட விசயங்கள் தான். இன்னும் ஆழமாக சிந்தித்தால் அதன் தோளைக் கொண்டு பயன் பெறுபவர்கள், அறுப்பதைக் கொண்டு பயன் பெறுபவர்கள் என குர்பானியின் மூலம் இந்த சமூகம் அடைகின்ற நன்மைகளும் பலன்களும் இன்னும் நீளும்.
ஆக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு மற்றும் இந்தியாவில் வேலைவாய்ப்பு போன்ற மிகப்பெரிய துறைகளில், நாம் கொண்டாடுகின்ற பக்ரீதும் அதில் நாம் நிறைவேற்றுகின்ற குர்பானியும் மிகப் பெரும் பங்காற்றுகிறது.
இப்படி எண்ணற்ற பலன்களும் பயன்களும் குர்பானியின் மூலம் ஏற்படுகிறது.எனவே தான் குர்பானி கொடுப்பதை இறைவன் மிகவும் விரும்புகிறான்.
ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عزوجل من إهراق الدم و إنها لتأتي يوم القيامة بقرونها و أشعارها و أظلافها و أن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا.
துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப்பிரியமான அமல் வேறொன்றும் இல்லை. நிச்சயமாக அவை கியாமத் நாளில் தங்களின் கொம்புகளுடனும், உரோமங்களுடனும், குளம்புகளுடனும் வரும்; நிச்சயமாக குர்பானிக் கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் அல்லாஹ்வின் அங்கீகாரத்தை அக்குர்பானி பெற்று விடுகிறது. எனவே அதனை மனமுவந்துச் செய்யுங்கள். (திர்மிதி :180)
கடந்த வருடத்தின் அரஃபா குறித்த குறிப்பு
தொடர்ந்து இது போன்று ஒவ்வொரு வாரமும் பதிவுகள் தருவது, தங்களுக்கு பெரிய குர்பானி தான்.
ReplyDelete😜😜
Deleteஹஜ்ரத் ஏன்?தொடர்ந்து பயான் நோட்ஸ் பதிவேறீறப்படுவதில்லை
ReplyDelete