Thursday, September 21, 2023

கருணை உள்ளம் கொண்ட காருண்ய நபி ﷺ

 

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தின் 2 வது வார ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். வருடத்தின் எல்லா மாதங்களிலும் எல்லா வாரங்களிலும் நபி அவர்களைப் பற்றி பேசப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை அலசப்படுகிறது. அவர்களின் வரலாறுகள் குறித்து ஆராயப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடிப்பொழுதும்  அவர்களின் பெயர் உலகம் முழுக்க உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உலக மக்களால் அதிகம் மொழியப்படும் வார்த்தை முஹம்மது என்ற வார்த்தை தான். உலகில் அதிகம் பேசப்படும் நபராக, அதிகம் எழுதப்படும் நபராக, அதிகம் விசுவாசம் கொள்ளப்படும் நபராக, அதிகம் நேசிக்கப்படும் நபராக,  அதிகம் பின்பற்றப்படும் நபராக இருப்பது பெருமானார் அவர்கள் தான். உலகம் முழுக்க குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்படும் பெயர்களில் 5 வது இடத்தில் இருப்பது அஹ்மது என்ற பெயர். நம்பர் 1 ஆக இருப்பது முஹம்மது என்ற பெயர்.  Who is the best human in the world உலகில் தலைசிறந்த மனிதர் யார் என்று google ல் கேட்டால் முஹம்மது என்ற பெயரைத்தான் அதுவும் பதிலாகத் தருகிறது.

எனவே நபி அவர்கள்  வருடம் முழுக்க எல்லா நாட்களிலும் பேசப்படுகிறார்கள், எல்லா இடங்களிலும் பேசப்படுகிறார்கள், எல்லா காலத்திலும் பேசப்படுகிறார்கள், எல்லா மக்களாலும் பேசப்படுகிறார்கள், எல்லா இனத்தாலும் எல்லா மொழியாலும் பேசப்படுகிறார்கள், அவர்களைப் பற்றி பேசாத, அவர்களின் பெயரை உச்சரிக்காத நாட்களும் இல்லை,ஆட்களும் இல்லை.

அல்லாஹ்வும் குர்ஆன் முழுக்க அவர்களைப் பற்றி  பல இடங்களில் பேசுகிறான்.

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

(நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார். (அல்குர்ஆன் : 9:128)

உண்மையான அன்புக்கும் பாசத்திற்கும் கருணைக்கும் கிருபைக்கும் இரக்கத்திற்கும் அடையாளமாக இலக்கணமாக திகழ்ந்தார்கள் அருமை நாயகம் அவர்கள். தன் சமூகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்புக்கும் அக்கரைக்கும் அளவும் எல்லையும் கிடையாது, தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் கவலைப்பட்டதை விட தன் சமூகத்திற்காக கவலைப்பட்டது தான் அதிகம்.தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் துஆ செய்ததை விட தன் சமூகத்திற்காக துஆ செய்தது தான். தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் இருந்த சிந்தனையை விட தன் சமூகத்தைப்பற்றிய சிந்தனை தான் அவர்களது உள்ளத்தில் நிரம்பியிருந்தது.அந்தளவு அன்பின் அடையாளமாக பாசத்தின் வெளிப்பாடாக கருணையின் சிகரமாக கிருபையின் இலக்கணமாக இரக்கத்தின் மறு உருவமாக இருந்தவர்கள், இருப்பவர்கள் பூமான் நபி அவர்கள்.

தன் உம்மத்தில் ஒருவருக்கு ஒரு சிரமம் என்றால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவாரோ இல்லையோ நபி அவர்கள் முதலில் கவலைப்படுவார்கள்.

عن جرير بن عبد الله:] كُنّا عِنْدَ رَسولِ اللهِ ﷺ في صَدْرِ النَّهارِ، قالَ: فَجاءَهُ قَوْمٌ حُفاةٌ عُراةٌ مُجْتابِي النِّمارِ أوِ العَباءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عامَّتُهُمْ مِن مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِن مُضَرَ فَتَمَعَّرَ وجْهُ رَسولِ اللهِ ﷺ لِما رَأى بهِمْ مِنَ الفاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فأمَرَ بلالًا فأذَّنَ وأَقامَ، فَصَلّى ثُمَّ خَطَبَ فَقالَ: {يا أيُّها النّاسُ اتَّقُوا رَبَّكُمُ الذي خَلَقَكُمْ مِن نَفْسٍ واحِدَةٍ} إلى آخِرِ الآيَةِ، {إنّ اللهَ كانَ علَيْكُم رَقِيبًا} [النساء:١] والآيَةَ الَّتي في الحَشْرِ: {اتَّقُوا اللهَ ولْتَنْظُرْ نَفْسٌ ما قَدَّمَتْ لِغَدٍ واتَّقُوا اللهَ}[الحشر:١٨] تَصَدَّقَ رَجُلٌ مِن دِينارِهِ، مِن دِرْهَمِهِ، مِن ثَوْبِهِ، مِن صاعِ بُرِّهِ، مِن صاعِ تَمْرِهِ، حتّى قالَ، ولو بشِقِّ تَمْرَةٍ قالَ: فَجاءَ رَجُلٌ مِنَ الأنْصارِ بصُرَّةٍ كادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْها، بَلْ قدْ عَجَزَتْ، قالَ: ثُمَّ تَتابَعَ النّاسُ، حتّى رَأَيْتُ كَوْمَيْنِ مِن طَعامٍ وثِيابٍ، حتّى رَأَيْتُ وجْهَ رَسولِ اللهِ ﷺ يَتَهَلَّلُ، كَأنّهُ مُذْهَبَةٌ

(ஒருநாள்) நடுப்பகல் நேரத்தில் நபி அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது செருப்பணியாத அரை குறை ஆடையணிந்த நிர்வாணிகளான வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் கழுத்துகளில் வாட்களை தொங்க விட்டவர்களாக அல்லாஹ் வின் தூதர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும் பான்மையினர் முழர் கூட்டத்தாரைச் சேர்ந்தவர்கள். இல்லை, அவர்கள் எல்லோரும் முழர் கூட்டத்தார்கள் தான். அவர்களின் வறுமையைக் கண்ட நபி அவர்களின் முகம் மாறி விட்டது. உடனே நபி அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் நுழைந்து விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் பாங்கு கூறி இகாமத்தும் கூறினார். நபி தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழத்தினார்கள். (அவ்வுரையில்)..

மனிதர்களே! ஒரே ஆத்மாவிலிருந்து உங்களை படைத்து அந்த ஆத்மாவிலிருந்து அதன் ஜோடியையும் படைத்து பின்னர் அவ்விருவரிலிருந்தே அதிகமான ஆண்களையும் பெண்களை யும் வெளிப்படுத்தி பரவச் செய்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எவன் மூலம் உதவி பெறுவீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் இரத்த பந்த உறவினர்களை ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்கானிப்பவனாக இருக்கின்றான்.(4:1)

இறைவிசுவாசிகளே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆத்மாவும் நாளை மறுமைக்காக எதனை முற் படுத்தி வைத்தது என்பதை கவனிக்கட்டும்.(59:18) (என்ற வசனங்களை ஓதிக் காட்டி முழர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறினார்கள். அப்போது பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள். உடனே நபித் தோழர்கள் தம்மிடமிருந்த தீனார், திர்ஹம், ஆடை, கோதுமையில் ஒரு ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்ற அளவிலும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரி தோழர்களில் ஒருவர் ஒரு பை நிறைய பொருட்களை கொண்டு வந்தார். அதை தூக்க முடியாது அவரது கை திணறியது. ஏன், அவரால் அதை தூக்கவே முடியவில்லை.

தொடர்ந்தும் மக்கள் தங்களின் தர்மப் பொருட்களுடன் வந்து கொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது நபி அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருந்ததையும் நான் கண்டேன். (முஸ்லிம ; 1017)

எங்கிருந்தோ வந்த அந்த மக்களின் வறுமை நிலை நபி அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.தன் தோழர்களால் அவர்களுக்கு உதவி கிடைத்த போது மகிழ்ச்சியால் அவர்களின் முகம் மலர்கிறது. 

பொதுவாக பிற மனிதர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும். ஒருவரின் பிரச்சனையை அவரது இடத்தில் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் அவர் அந்த பிரச்சனையில் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர முடியும். அத்தோடு அந்த பிரச்சனையிலிருந்து அவரை வெளியே கொண்டு வருவதையும் சிந்திக்க முடியும். இந்த விஷயத்தில் நமக்கு முன்னோடியும் வழிகாட்டியும் நபி அவர்கள் தான்.

مالك بن الحويرث أتَيْنا النبيَّ ﷺ، ونَحْنُ شَبَبَةٌ مُتَقارِبُونَ، فأقَمْنا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، فَظَنَّ أنّا اشْتَقْنا أهْلَنا، وسَأَلَنا عَمَّنْ تَرَكْنا في أهْلِنا، فأخْبَرْناهُ، وكانَ رَفِيقًا رَحِيمًا، فَقالَ: ارْجِعُوا إلى أهْلِيكُمْ، فَعَلِّمُوهُمْ ومُرُوهُمْ، وصَلُّوا كما رَأَيْتُمُونِي أُصَلِّي، وإذا حَضَرَتِ الصَّلاةُ، فَلْيُؤَذِّنْ لَكُمْ أحَدُكُمْ، ثُمَّ لِيَؤُمَّكُمْ أكْبَرُكُمْ

மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ; நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி அவர்கள் நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடத்தில் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும் என்று கூறினார்கள். (புகாரி 6008)

அவர்கள் அந்த நேரத்தில் தீனைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் இருந்தாலும், அவர்கள் வாலிபர்கள். அவர்களுக்கென்று சில ஆசைகள் இருக்கும், தேட்டங்கள் இருக்கும். அதே ஆசையும் தேட்டமும் அவர்களின் குடும்பத்திற்கும் இருக்கும். அவர்களின் அந்த உணர்வுகளை புரிந்து, அவர்களோட இடத்தில் இருந்து யோசிக்கிறார்கள் நபி அவர்கள்.

عن أبي هريرة بيْنَما نَحْنُ جُلُوسٌ عِنْدَ النبيِّ ﷺ، إذْ جاءَهُ رَجُلٌ فَقالَ: يا رَسولَ اللهِ هَلَكْتُ. قالَ: ما لَكَ؟ قالَ: وقَعْتُ على امْرَأَتي وأَنا صائِمٌ، فَقالَ رَسولُ اللهِ ﷺ: هلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُها؟ قالَ: لا، قالَ: فَهلْ تَسْتَطِيعُ أنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتابِعَيْنِ، قالَ: لا، فَقالَ: فَهلْ تَجِدُ إطْعامَ سِتِّينَ مِسْكِينًا. قالَ: لا، قالَ: فَمَكَثَ النبيُّ ﷺ، فَبيْنا نَحْنُ على ذلكَ أُتِيَ النبيُّ ﷺ بعَرَقٍ فِيها تَمْرٌ - والعَرَقُ المِكْتَلُ - قالَ: أيْنَ السّائِلُ؟ فَقالَ: أنا، قالَ: خُذْها، فَتَصَدَّقْ به فَقالَ الرَّجُلُ: أعَلى أفْقَرَ مِنِّي يا رَسولَ اللهِ؟ فَواللَّهِ ما بيْنَ لابَتَيْها - يُرِيدُ الحَرَّتَيْنِ - أهْلُ بَيْتٍ أفْقَرُ مِن أهْلِ بَيْتِي، فَضَحِكَ النبيُّ ﷺ حتّى بَدَتْ أنْيابُهُ، ثُمَّ قالَ: أطْعِمْهُ أهْلَكَ

ஒரு மனிதர் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன் என்றார், என்ன நாசமாகி விட்டீர்?” என்று நபி அவர்கள் கேட்ட போது,ரமழானில் (பகல் பொழுதில்) என் மனைவியுடன் சேர்ந்து விட்டேன்என்றார், ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவிற்கு உம்மிடம் செல்வம் இருக்கிறதா?” என்று நபி அவர்கள் கேட்க, அவர் இல்லைஎன்றார், அப்படியென்றால், தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் இல்லைஎன்றார், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார், பின்பு நபி அவர்கள் சற்று நேரம் (அமைதியாக) உடகார்ந்திருந்தார்கள் பதினைந்து ஸாவு கொள்ளவுள்ள பாத்திரத்தில் பேரீத்தம் பழம் நபி அவர்களிடம் கொண்டு வரப்பட்டது, (அதை அவரிடம் வழங்கி) இதை தர்மம் செய்வீராக என்று நபி அவர்கள் கூறினார்கள், அதற்கவர், என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்..? இந்த மதீனா முழுவதும் எங்களை விட ஏழைகள் எவருமில்லை..என்று அவர் கூறியதும், தனது கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபி அவர்கள் சிரித்தார்கள், பின்பு இதைக் கொண்டு சென்று உமது குடும்பத்தினருக்கு வழங்குவீராக என்று கூறினார்கள். (புகாரி 1936)

சம்பந்தப்பட்டவர் பலவீனமாக, ஏழையாக இருந்ததினால் பிறருக்கு கொடுக்க வேண்டிய பேரீத்தம்பழங்களை அவரையே எடுத்துக் கொள்ளும்படி சொன்ன நபி அவர்களின் அந்த கருணையை எண்ணிப் பார்க்க வேண்டும்.  

وما ارسلناك الا رحمة للعالمين

உம்மை அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்.

நபி அவர்கள் உலகத்திலுள்ள அத்தனை பேருக்கும் ரஹ்மத்தாக இருக்கிறார்கள். குறிப்பாக தன் சமூகமான தன் உம்மத்தான நம் மீது எல்லையில்லா அன்பாளராக நிகரில்லா கிருபையாளராக இருக்கிறார்கள். இந்த சமுதாயம் உயர்வடைய வேண்டும். அல்லாஹ்விடம் உயர்ந்த இடத்தைப் பெற  வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.இன்றைக்கு நாம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறோம் என்றால் உம்மத்தே முஹம்மதிய்யா என்று பெருமைப் பட்டுக் கொள்கிறோம் என்றால் அந்த பெருமையும் சிறப்பும் நமக்கு கிடைக்க காரணம் நமக்காக நபி அவர்கள் கேட்ட பிரார்த்தனையும் அவர்கள் பட்ட கவலையும் தான்.தன் சமூகத்தின் மீது எல்லையில்லா கருணையும் அன்பும் கொண்டவர்களாக இருந்தார்கள்.

 

இஸ்லாமிய வரலாற்றில் பத்ரு போருக்கு அடுத்து இரண்டாவதாக நடந்த மாபெரும் போர் உஹது போர். 1400 வருடங்களைத் தாண்டியும் முஸ்லிம்கள் வாழ்வில் இன்னும் நீங்கா நினைவலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த போர்க்களம். முதன்முதலாக முஸ்லிம்கள் தோல்வியை சந்தித்த இடம் இந்த போர்க்களம். நபி அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று சொல்லி அதன் மூலம் மாபெரும் பிரலயம் வெடித்தது இந்த போர்க்களத்தில் தான். நபி அவர்களின் சிறிய தந்தை ஹள்ரத் ஹம்ஸா ரலி அவர்கள் கொடூரமான முறையில் ஷஹீதாக்கப்பட்டது இந்த போர்க்களத்தில் தான். எல்லாவற்றுக்கும் மேலாக நபி அவர்களின் புனிதமான பற்கள் உடைக்கப்பட்டது இந்த போர்க்களத்தில் தான். பற்கள் உடைக்கப்பட்டு அவர்களது மேனியிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது,இந்த சங்கடமான சூழ்நிலையில் நபி அவர்களின் நாவுகளிலிருந்து உதிர்த்த வார்த்தைகள் ;

ﺍﻟﻠﻬﻢ ﺍﻏﻔﺮ ﻟﻘﻮﻣﻲ ﻓﺈﻧﻬﻢ ﻻ ﻳﻌﻠﻤﻮﻥ

இறைவா என் சமூகத்தை மன்னித்து விடு. அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள்.

தன் உடலை காயப்படுத்திய, தன் தோழர்களுக்கு எண்ணற்ற தொந்தரவுகளை தந்த, தனக்கும் தன் தோழர்களுக்கும் பெருமளவு மனஉளைச்சலை ஏற்படுத்திய அந்த மக்களுக்காகவும் பிரார்த்திக்கிறார்கள் என்றால் தன் சமூகத்தின் மீது நபியவர்களுக்கு இருந்த அன்பையும் அக்கரையையும் விவரிக்க இது ஒன்றே போதுமானது.

அன்றைக்கு அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் மட்டுமல்லாமல், தனக்கு பின்னால் வரும் மக்களின் வாழ்வும் ஸலாமத்தாக சிரமமில்லாததாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தவர்கள் அவர்கள். எந்த வகையிலும் தன் சமூகத்திற்கு சிரமம் வந்து விடக்கூடாது கஷ்டம் வந்து விடக்கூடாது, தான் செய்யக்கூடிய காரியங்கள் பின்னால் வரும் தன் சமூகத்தை எந்த வகையிலும் பாதித்து விடக்கூடாது என்பதில் மிக மிக கவனமாக இருந்தார்கள்.

ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ : ﺧﺮﺝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﻦ ﻋﻨﺪﻱ ﻭﻫﻮ ﻣﺴﺮﻭﺭ ﻃﻴﺐ ﺍﻟﻨﺲ ﺛﻢ ﺭﺟﻊ ﺇﻟﻲ ﻭﻫﻮ ﻛﺌﻴﺐ، ﻓﻘﺎﻝ : ‏(ﺇﻧﻲ ﺩﺧﻠﺖ ﺍﻟﻜﻌﺒﺔ ﻭﻟﻮ ﺍﺳﺘﻘﺒﻠﺖ ﻣﻦ ﺃﻣﺮﻱ ﻣﺎ ﺍﺳﺘﺪﺑﺮﺕ ﻣﺎ ﺩﺧﻠﺘﻬﺎ ﺇﻧﻲ ﺃﺧﺎﻑ ﺃﻥ ﺃﻛﻮﻥ ﻗﺪ ﺷﻘﻘﺖ ﻋﻠﻰ ﺃﻣﺘﻲ

ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; மகிழ்ச்சியான நிலையில் நபி அவர்கள் என் வீட்டிலிருந்து வெளியே சென்றார்கள். பின்பு கவலையடைந் தவர்களாக திரும்பி வந்தார்கள். நான் கஃபதுல்லாஹ்விற்குள் நுழைந்தேன். முன்பே தெரிந்திருந்தால் நான் அதில் நுழைந்திருக்க மாட்டேன். என் சமூகத்திற்கு சிரமம் கொடுத்து விட்டதாக அஞ்சுகிறேன் என்றார்கள். (அபூதாவூது ; 2029)

எனக்குப் பின்னால் என்னை பின்பற்ற நினைக்கும் என் உம்மத்தினருக்கு நான் கஷ்டம் கொடுத்து விட்டேனோ என்று கவலைபட்டார்கள் நபி அவர்கள்.

எத்தனையோ அமல்களை செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அவர்களுக்கு இருந்த போதும், தன் சமூகத்தின் நிலை கருதியே அதை தவிர்த்திருக்கிறார்கள். அதைத்தான் அவர்களின் அன்பு மனைவி அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறுவார்கள்.

ﻓﻌﻦ ﻋﺎﺋﺸﺔ ـ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ـ ﻗﺎﻟﺖ: ‏( ﺇﻥ ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ـ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ـ ﻟﻴﺪﻉ ‏(ﻳﺘﺮﻙ ‏) ﺍﻟﻌﻤﻞ ﻭﻫﻮ ﻳﺤﺐ ﺃﻥ ﻳﻌﻤﻞ ﺑﻪ ﺧﺸﻴﺔ ﺃﻥ ﻳﻌﻤﻞ ﺑﻪ ﺍﻟﻨﺎﺱ ﻓﻴﻔﺮﺽ ﻋﻠﻴهم

ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும் நபி அவர்கள் விட்டு விடுவார்கள். காரணம், அவர்களைப் பார்த்து மக்களும் செய்து, அந்த காரியம் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில். (புகாரி ; 1128)

தன்னால் தன் சமூகத்திற்கு எந்த சிரமமும் வந்து விடக்கூடாது என்று விரும்பினார்கள். நம்மீது அளவு கடந்த அன்பு கொண்ட பெருமானாரை நாம் நேசிப்போம். 

4 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete
  2. السلام عليكم

    ReplyDelete
  3. بارك الله لكم

    ReplyDelete
  4. கடந்த மூன்று வாரங்களாக பதிவு இல்லாமல் ஏமாற்றத்தில்.... ஹஜ்ரத்.

    ReplyDelete