Thursday, January 4, 2024

மானம் பெரிது

 

நமக்கு அல்லாஹ் கண்ணியமான வாழ்வைத் தந்திருக்கிறான். நாம் அதிகம் எதிர் பார்க்கின்ற விஷயம் கண்ணியம். பிறர் நம்மைக் கண்ணியப்படுத்த வேண்டும். நம்மை மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நம் மானம் மரியாதை காக்கப்பட வேண்டும் என எதிர் பார்க்கின்றோம்.எந்த சந்தர்ப்பத்திலும் நம் கண்ணியம் போய் விடக் கூடாது. நம் மானம் மரியாதையை எவரும் கெடுத்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.

கண்ணியமாக வாழ நினைக்கின்ற எவனும் தன் உயிரே போனாலும் தன் மானம் போய் விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பான். மனிதனின் மானம் வானத்தை விட பெரியது. மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் மிகவும் சிறியவை. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊரிய குணாதிசியங்கள். மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான்' என்பார்கள் நம் முன்னோர்கள். மானம் மலையேரும் போது மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒழிந்து கொள்கிறான். தன்மானம்; காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்கின்றான்.

மானம் மரியாதையைக் காக்க வேண்டும் என்று இஸ்லாமும் உணர்த்துகிறது.

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ، أَوْ بِزِمَامِهِ- قَالَ أَيُّ يَوْمٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَأَىُّ شَهْرٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ

அபூபக்ரா ரலி அவர்கள் கூறியதாவது : (துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி அவர்கள், இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்றோம். அடுத்து இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள். நாங்கள் ஆம் என்றோம். நபி அவர்கள் உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம், மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று கூறிவிட்டு, (இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறி விட வேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மை விட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்து வைக்கக் கூடும் என்றார்கள். (புகாரி ; 67)

மனிதனின் மானம் மரியாதையை நபிகள் நாயகம் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இணையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது. இறை ஆலயமான கஃபாவையும் அதைச் சூழவுள்ள புனிதப்பகுதியையும் மதிப்பது எந்தளவு கடமையோ அவ்வாறே தன் சகோதர முஸ்லிமின் கண்ணியத்தை பேணுவதும் அவனுடைய மானம் மரியாதையைக் காப்பதும் கடமையாகும் என்பதை நபிகளாரின் இந்த உவமை உணர்த்துகின்றது.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ اسْتِطَالَةَ الْمَرْءِ فِى عِرْضِ رَجُلٍ مُسْلِمٍ بِغَيْرِ حَقٍّ وَمِنَ الْكَبَائِرِ السَّبَّتَانِ بِالسَّبَّةِ

ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமை இல்லாமல் வரம்பு மீறுவது தான் (மனிதனுக்கு செய்யும் பாவங்களில்) தண்டனைகளிலே மிகப்பெரியது. (அபூதாவூத் ; 4877)

 

மனிதனின் மானம் மரியாதை மிக மேலானது என்பதால் தான் அதைக் கெடுக்கும் அனைத்து காரியங்களையும் இஸ்லாம் தடை செய்திருக் கின்றது.

1, அவதூறு சொல்லுதல்

அபாண்டமாக ஒருவர் மீது பழி சுமத்துவதால் அவதூறு சொல்வதால் அவருக்கு மக்களிடையே இருந்த கண்ணியமும் மரியாதையும் காணாமல் போய் விடும். எனவே அவதூறு சொல்வதை இஸ்லாம் தடுக்கிறது.

اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் : 24:23)

ஒருவர் குற்றமற்றவராக இருந்து அவரின் மீது வீண் பழி சுமத்தப்பட்டால் அவரின் மீது களங்கம் ஏற்படுத்தப்பட்டால் அதைத் துடைத்தெறிய வேண்டிய கடமையும் பொறுப்பும் அவருக்குண்டு.

وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِىْ بِهٖ‌ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰى رَبِّكَ فَسْـٴَــلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِىْ قَطَّعْنَ اَيْدِيَهُنَّ‌ اِنَّ رَبِّىْ بِكَيْدِهِنَّ عَلِيْمٌ‏

(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்த போது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான் என்று கூறினார். (அல்குர்ஆன் : 12:50)

فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ بِذَلِكَ امْتَنَعَ مِنَ الْخُرُوجِ حَتَّى يَتَحَقَّقَ الْمَلِكُ وَرَعَيَّتُهُ بَرَاءَةَ سَاحَتِهِ، وَنَزَاهَةَ عِرْضِهِ، مِمَّا نُسِبَ إِلَيْهِ مِنْ جِهَةِ امْرَأَةِ الْعَزِيزِ، وَأَنَّ هَذَا السِّجْنَ لَمْ يَكُنْ عَلَى أَمْرٍ يَقْتَضِيهِ، بَلْ كَانَ ظُلْمًا وَعُدْوَانًا، قَالَ: ﴿ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ إِنَّ رَبِّي بِكَيْدِهِنَّ عَلِيمٌ

தகாத நடத்தையில் ஈடுபட்டதாக அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டு பல வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நபி யூஸுஃப் அலை அவர்களை சிறையிலிருந்து விடுவிக்க அரசர் நினைத்த போது, களங்கப்படுத்தப்பட்டுள்ள தன் பெயரை அரசர் தூய்மைப்படுத்தித் தரும் வரையில் சிறைவாசத்தை முடித்துக் கொள்ள அவர்கள் விரும்ப வில்லை. நன்கு விசாரித்து நான் குற்றமற்றவன் என்பது தெளிவாகும் வரை நான் சிறையிலிருந்து வெளியே வர மாட்டேன் என்று கூறி விட்டார்கள். பிறகு  மன்னர் மட்டத்தில் தக்க விசாரணைகள் நடைபெற்றன. குற்றம் சுமத்தியவர்களே நபி யூஸுஃப் அலை அவர்கள் ஒரு தூய மனிதர், தாம் தான் பொய் சொன்னோம் என்பதை வாயார ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவர்கள் ஒரு நிரபராதி என்பது அரசவையில் தெளிவானது. அதன் பின்னரே நபி யூஸுஃப் அலைசிறையிலிருந்து வெளி வந்தார்கள்.

தன் மானத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

 

2, மரணித்தவரின் குறையை வெளிப்படுத்துதல்

மய்யித்தைக் குளிப்பாட்டுபவர் நம்பகமான மனிதராக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.அதாவது அவரிடத்தில் ஏதாவது குறையைக் கண்டால் அதை வெளிப்படுத்தாமல் மறைக்க வேண்டும். குறையை வெளிப்படுத்தி சொல்வதினால் மரணித்தவரின் கண்ணியத்தில் குறைவு ஏற்படும்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ غَسَلَ مَيِّتًا فَأَدَّى فِيهِ الْأَمَانَةَ، وَلَمْ يُفْشِ عَلَيْهِ مَا يَكُونُ مِنْهُ عِنْدَ ذَلِكَ، خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ

யார் ஒருவர் ஒரு மய்யித்தைக் குளிப்பாட்டி அவரிடத்தில் கண்ட குறையை பரப்பாமல் மறைத்து அதில் அமானிதத்தைப் பேணினாரோ அன்று பிறந்த பாலகனைப் போல் பாவங்களிலிருந்து அவர் வெளியேறி விடுகிறார். (அஹ்மது ; 24881)

 

3, புறம் பேசுதல்

ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி அவர் விரும்பாத விஷயத்தை மற்றவர்களிடம் சொல்வதற்குப் பெயர் தான் புறம். இதனால் அவரின் கண்ணியம் கெடுகிறது.அவரின் மானம் மரியாதையில் களங்கம் ஏற்படுகிறது. எனவே புறம் பேசுவதை இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.

وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ‏

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கு கேடு தான். (அல்குர்ஆன் : 104:1)

 وشِرارُ عِبادِ اللهِ المشّاؤونَ بالنَّميمةِ، المُفرِّقونَ بينَ الأحِبَّةِ، الباغونَ البُرَآءَ العَنَتَ

கோள் சொல்லித் திரிபவர்களும் பிரியமானவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துபவர்களும் குற்றமற்றவர்களிடம் குற்றத்தைத் தேடுபவர்களும் தான் அல்லாஹ்வின் அடியார்களில் மோசமானவர்கள். (அஹ்மது ; 17998)

قال عبد الله بن عبَّاس رضي الله عنه قال لي أبي: إني أرى أمير المؤمنين - يعني عمر رضي الله عنه - يدنيك ويقربك، فاحفظ عني ثلاثاً: إياك أن يجرّب عليك كذبة، وإياك أن تفشي له سرِّاً، وإيَّاك أن تغتاب عنده أحدًا،

அப்பாஸ் ரலி அவர்கள் தனது மகன் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அவர்களுக்குச் சொன்னார்கள் ; மூன்று விஷயங்களை நீ பேணினால் உமர் ரலி அவர்கள் உன்னை தன் அருகில் வைத்துக் கொள்வார்கள். 1.பொய் சொல்வதை பழக்கமாக்கிக் கொள்ளாதே!

2.அவரின் இரகசியத்தை வெளிப்படுத்தாதே!

3.அவரிடத்தில் யாரைப் பற்றியும் புறம் பேசாதே!

 

புறம் பேசுவது நன்மைகளை அழித்து விடும். புறம் பேசியவரின் நன்மைகள் புறம் பேசப்பட்டவருக்கு சென்று விடும்.

قال ابن المبارك لو كنت مغتاباً أحداً لاغتبت والديّ لأنهما أحق بحسناتي.

இப்னுல் முபாரக் ரஹ் அவர்கள் கூறினார்கள் ;

நான் புறம் பேசுவதாக இருந்தால் என் பெற்றோர்களைப் பற்றியே பேசுவேன். ஏனெனில் என் நன்மைகளைப் பெறுவதற்கு அவர்களே தகுதியுடையவர்கள்.

பிறரின் கண்ணியத்தையும் மரியாதையையும் கெடுக்கும் எந்தக் காரியத்திலும் ஒருவர் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடும் ஒருவருக்கு கிடைக்கும் தண்டனைகளில் ஒன்று ; மரணிக்கும் நேரத்தில் அவரின் நாவில் கலிமா வராது.

قال ابن الجوزي – رحمه الله: «فمن حفظ لسانه لأجل الله تعالى في الدنيا، أطلق الله لسانه بالشهادة عند الموت ولقاء الله. ومن سرَّح لسانه في أعراض المسلمين، واتبع عوراتهم، أمسك الله لسانه عن الشهادة عند الموت

பிறரைக் குறை கூறுவதிலிருந்தும் பிறரின் மரியாதைக் கெடுக்கும் காரியங்களில் ஈடுபடுவதிலிருந்தும் ஒருவர் தன் நாவை அல்லாஹ்விற்காக பாதுகாத்துக் கொண்டால் மரணிக்கும் நேரத்தில் அவரின் நாவில் அல்லாஹ் கலிமாவை இலேசாக்கி விடுவான். அந்த மாதிரியான காரியங்களில் ஒருவர் தன் நாவைப் பயன்படுத்தினால் மரணிக்கும் நேரத்தில் கலிமாமை மொழிவதிலிருந்து அல்லாஹ் தடுத்து விடுவான் என்று இப்னுல் ஜவ்ஸீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

இன்றைக்கு நிறைய பேர் பிறரைப் பற்றி குறை பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.அது உண்மையா இல்லையா என்று ஆராயாமல் நாமும் உடனே அதை நம்பி விடுகிறோம். அதை மற்றவர்களுக்கு சொல்ல ஆரம்பித்து விடுகிறோம்.இரண்டுமே தவறு. இணையதளப் பயன்பாடு அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் ஒரு செய்தி கண்ணில் பட்டவுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் அதை பரப்புகின்ற மனோநிலை அதிகரித்து விட்டது.

ஒருவரைப் பற்றிய செய்தி உண்மையாக இருந்தாலுமே அதை மற்றவர்களுக்குப் பகிர்வது நல்லதல்ல. ஏனெனில் அதன் மூலம் அவரின் மானம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. ஆனால் உண்மையில்லாத வதந்திகள் அதிகம் பகிரப்படுவதைப் பற்றி என்ன சொல்வது ?

சொல்லப்படும் செய்திகள் அனைத்தையும் உடனே நம்புவது ஏற்புடையதல்ல.   

قال ابن رجب: (يشير إلى أنَّه لا ينبغي الاعتماد على قول كلِّ قائل،

செய்தியில் உண்மையும் இருக்கும் பொய்யும் இருக்கும். எல்லாவற்றையும் உடனே நம்பி விடக்கூடாது என இப்னு ரஜப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவரைப் பற்றி இன்னொருவர் நம்மிடம் ஒரு செய்தியைக் கூறினால் அவரின் கண்ணியத்தைக் கெடுக்கும் நோக்கமாக இருக்கலாம். அல்லது தன்னைப் பெருமைப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம். அல்லது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கமாக இருக்கலாம். எனவே ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால் உடனே அதை நம்பி விடக் கூடாது. சற்றும் சிந்திக்காமல் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தையும் அப்படியே நம்புவது அல்லது ஏற்றுக் கொள்வது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

ஒரு செய்தி வருகின்ற அது உண்மையா இல்லையா என்பதை ஆராய வேண்டும். ஒரு செய்தியைப் பற்றி தெளிவாக தெரியாமல் அதை பிறருக்கு பகிரவும் கூடாது.

وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ‌  وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْبِطُوْنَهٗ مِنْهُمْ‌ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا‏

பயத்தையோ (பொது மக்கள்) பாதுகாப்பையோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதனை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களுடைய அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால் அதிலிருந்து ஊகிக்கக்கூடிய அவர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கிருபையும் உங்கள்மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். (அல்குர்ஆன் : 4:83)

قال الإمام ابن كثير (رحمه الله) قوله تعالى: ﴿ وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ﴾ [النساء: 83] إنكار على من يبادر إلى الأمور قبل تحقُّقها، فيخبر بها ويفشيها وينشرها، وقد لا يكون لها صحة

ஒரு விசயம் உண்மைக்கு மாற்றமாகவும் இருக்கலாம். எனவே ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதை பரப்ப நினைப்பவர்களை அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் எச்சரிக்கை செய்கிறான். (இப்னுகஸீர்

شَكا أَهْلُ الكُوفَةِ سَعْدًا إلى عُمَرَ رَضِيَ اللَّهُ عنْه، فَعَزَلَهُ، واسْتَعْمَلَ عليهم عَمّارًا، فَشَكَوْا حتّى ذَكَرُوا أنَّهُ لا يُحْسِنُ يُصَلِّي، فأرْسَلَ إلَيْهِ، فَقالَ: يا أَبا إسْحاقَ إنَّ هَؤُلاءِ يَزْعُمُونَ أنَّكَ لا تُحْسِنُ تُصَلِّي، قالَ أَبُو إسْحاقَ: أَمّا أَنا واللَّهِ فإنِّي كُنْتُ أُصَلِّي بهِمْ صَلاةَ رَسولِ اللَّهِ ﷺ ما أَخْرِمُ عَنْها، أُصَلِّي صَلاةَ العِشاءِ، فأرْكُدُ في الأُولَيَيْنِ وأُخِفُّ في الأُخْرَيَيْنِ، قالَ: ذاكَ الظَّنُّ بكَ يا أَبا إسْحاقَ، فأرْسَلَ معهُ رَجُلًا أَوْ رِجالًا إلى الكُوفَةِ، فَسَأَلَ عنْه أَهْلَ الكُوفَةِ ولَمْ يَدَعْ مَسْجِدًا إلّا سَأَلَ عنْه، ويُثْنُونَ مَعْرُوفًا، حتّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ، فَقامَ رَجُلٌ منهمْ يُقالُ له أُسامَةُ بنُ قَتادَةَ يُكْنى أَبا سَعْدَةَ قالَ: أَمّا إذْ نَشَدْتَنا فإنَّ سَعْدًا كانَ لا يَسِيرُ بالسَّرِيَّةِ، ولا يَقْسِمُ بالسَّوِيَّةِ، ولا يَعْدِلُ في القَضِيَّةِ، قالَ سَعْدٌ: أَما واللَّهِ لَأَدْعُوَنَّ بثَلاثٍ: اللَّهُمَّ إنْ كانَ عَبْدُكَ هذا كاذِبًا، قامَ رِياءً وسُمْعَةً، فأطِلْ عُمْرَهُ، وأَطِلْ فَقْرَهُ، وعَرِّضْهُ بالفِتَنِ، وكانَ بَعْدُ إذا سُئِلَ يقولُ: شيخٌ كَبِيرٌ مَفْتُونٌ، أَصابَتْنِي دَعْوَةُ سَعْدٍ، قالَ عبدُ المَلِكِ: فأنا رَأَيْتُهُ بَعْدُ، قدْ سَقَطَ حاجِباهُ على عَيْنَيْهِ مِنَ الكِبَرِ، وإنَّه لَيَتَعَرَّضُ لِلْجَوارِي في الطُّرُقِ يَغْمِزُهُنَّ.

ஜாபிர் பின் சமுரா ரலி அவர்கள் கூறுகிறார்கள் :

(கூஃபாவின் ஆளுநர்) ஸஅத் பின் அபீவக்காஸ் ரலி அவர்களைப் பற்றி கூஃபாவாசிகள் (சிலர்) உமர் ரலி அவர்களிடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் (ரலி) அவர்கள் ஸஅத் ரலி அவர்களை (பதவியிருந்து) நீக்கி விட்டு அம்மார் ரலி அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். ஸஅத் ரலி அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது.

ஆகவே, உமர் ரலி அவர்கள் ஸஅத் ரலி அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து; அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழவைப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)” என்று கேட்டார்கள். அதற்கு அபூஇஸ்ஹாக் (ஸஅத் பின் அபீவக்காஸ் ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்து வந்தேன்; அவர்கள் தொழுது காட்டியதை விட நான் குறைத்து விட வில்லை.

நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும் போது முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன் என்று பதிலத்தார்கள். அதற்கு உமர் ரலி அவர்கள், உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே என்று கூறினார்கள். இதையொட்டி உமர் ரலி அவர்கள் ஒருவரை அல்லது சிலரை ஸஅத் ரலி அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பி வைத்து, ஸஅத் ரலி அவர்கள் குறித்து கூஃபாவாசிகடம் விசாரனை நடத்தினார்கள்.

விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகளிடம் விசாரணை மேற்கொண்டார். (கூஃபாவிருந்த) ஒரு பள்ளிவாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் ஸஅத் ரலி அவர்களை மெச்சி நல்லவி தமாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்த போது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூஸஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்: ஸஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தான் செல்ல மாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட மாட்டார். தீர்ப்பு அளிக்கும் போது நீதியுடன் நடக்க மாட்டார் என்று (குறை) கூறினார்.

இதைக் கேட்டு வருத்தமடைந்த ஸஅத் ரலி அவர்கள், அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப் போகிறேன் என்று கூறி விட்டு, இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்லியிருந்தால் பகட்டுக்காகவும், புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன் வந்திருந்தால் அவருடைய வாழ்நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னர் (ஸஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; ஸஅத் அவர்களின் பிரார்த்தனை என்னைப் பீடித்து விட்டது என்று கூறுவார்.

அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பின்னாளில் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்து விட்டிருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார். (புகாரி ; 755)

ஸஅத் பின் அபீவக்காஸ் ரலி அவர்களைப் பற்றி புகார் கூறப்பட்ட போது உமர் ரலி அவர்கள் அதனை உடனே நம்பி விடாமல் அதைப் பற்றி விசாரித்து வரும்படி கூறுகிறார்கள்.

وَقَالَ مُجَاهِدٌ وَقَتَادَةُ: أَرْسَلَ رَسُولُ اللَّهِ الْوَلِيدَ بْنَ عُقْبَةَ إِلَى بَنِي الْمُصْطَلِقِ ليُصدّقهم، فَتَلَقَّوْهُ بِالصَّدَقَةِ، فَرَجَعَ فَقَالَ: إِنَّ بَنِي الْمُصْطَلِقِ قَدْ جَمَعَتْ لَكَ لِتُقَاتِلَكَ -زَادَ قَتَادَةُ: وَإِنَّهُمْ قَدِ ارْتَدُّوا عَنِ الْإِسْلَامِ-فَبَعَثَ رَسُولُ اللَّهِ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَيْهِمْ، وَأَمَرَهُ أَنْ يَتَثَبَّتَ وَلَا يَعْجَلَ. فَانْطَلَقَ حَتَّى أَتَاهُمْ لَيْلًا فَبَعَثَ عُيُونَهُ، فَلَمَّا جَاءُوا أَخْبَرُوا خَالِدًا أَنَّهُمْ مُسْتَمْسِكُونَ بِالْإِسْلَامِ، وَسَمِعُوا أَذَانَهُمْ وَصَلَاتَهُمْ، فَلَمَّا أَصْبَحُوا أَتَاهُمْ خَالِدٌ فَرَأَى الَّذِي يُعْجِبُهُ، فَرَجَعَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَأَخْبَرَهُ الْخَبَرَ، فَأَنْزَلَ اللَّهُ هَذِهِ الْآيَةَ. قَالَ قَتَادَةُ: فَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقُولُ: "التَّبيُّن مِنَ اللَّهِ، والعَجَلَة مِنَ الشَّيْطَانِ".

ஒரு தடவை நபி அவர்கள் ஜகாத் நிதியை வசூலிப்பதற்கு ஹழ்ரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்களை பனீமுஸ்தலிக் எனும் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவருக்கும் அந்த கோத்திரத்தாருக்கும் இஸ்லாத்திற்கு வரும் முன் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்த பின் அந்த பகை மறைந்து போனது.

ஹழ்ரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் படையை திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள்.இதைக் கண்ட ஹழ்ரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட இவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள் என அவராக மனதில் நினைத்துக் கொண்டு, வந்த வழியை நோக்கி நபி அவர்களிடம் திரும்பி விட்டார்கள்.

மேலும் அந்த கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில் பின் வரும் சில செய்திகளை கூறுகிறார்கள். 1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், 2) ஜகாத் நிதியை தர மறுக்கிறார்கள், 3) என்னை கொலை செய்யவும் தயாராகி விட்டார்கள்.

இந்த செய்திகளை நபி அவர்கள் கேட்டதும் நம்பவில்லை. நடந்தது உண்மையா? அல்லது இல்லையா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஹழ்ரத் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி வைத்து, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள்.

அந்த ஊரின் எல்லை அருகே படை வந்ததும், ஹழ்ரத் காலித் (ரலி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள். அந்த நேரம் மக்ரிப் தொழுகை நேரமாகும். ஒற்றர்கள் சென்ற போது அந்த கோத்திரத்தார் தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதை கண்டார்கள்.

இந்த செய்தியை அறிந்து கொண்ட காலித் (ரலி) அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஜகாத் நிதியை வசூலித்துக் கொண்டு, நபி அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னார்கள். அப்போது தான் மேற்கூறப்பட்ட (49:6) இறைவசனம் இறங்கியது. (இப்னுகஸீர்)

 

எனவே எதையும் தீர விசாரிக்க வேண்டும். உண்மைத் தன்மை என்ன என்பதை ஆராய வேண்டும்.

யோசிக்காமல் ஒரு விஷயத்தை நம்புவதாலும் அதை பிறருக்கு சொல்வதாலும் ஒரு மனிதரின் கண்ணியம் கெட்டுப்போகிறது.எந்த வகையிலும் ஒரு மனிதரின் கண்ணியம் கெடுவதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது.

ونظر ابن عمر يوما إلى البيت أو إلى الكعبة فقال: ما أعظمك وأعظم حرمتك، والمؤمن أعظم حرمة عند الله منك

ஒரு நாள் இப்னு உமர் ரலி அவர்கள் கஃபதுல்லாஹ்வைப் பார்த்து உன் கண்ணியம் எவ்வளவு மேலானது! என்றாலும் ஒரு முஃமினின் கண்ணியம் உன்னை விட அல்லாஹ்விடம் மிக உயர்ந்தது என்று கூறினார்கள்.

 

5 comments:

  1. மா ஷா அல்லாஹ் 💕

    ReplyDelete
  2. ما شاء الله...

    ReplyDelete
  3. ونظر ابن عمر يوما إلى البيت أو إلى الكعبة فقال: ما أعظمك وأعظم حرمتك، والمؤمن أعظم حرمة عند الله منك

    செம

    ReplyDelete