Monday, March 11, 2024

தராவீஹ் 1 நடுநிலைச் சமூகம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கனினி பழுதடைந்திருந்ததால் நீண்ட நாட்களாக ஜும்ஆ குறிப்புகள் தர இயல வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் அருளாலும் உலமாப் பெருமக்களின் துஆ பரக்கத்தாலும்  தராவீஹ் குறிப்பிலிருந்து மீண்டும் தொடங்கியிருக்கிறேன். தொய்வின்றி தொடர்வதற்கும் உடலும் மனதும் ஒத்துழைப்பதற்கும் நேரத்தில் பரக்கத் ஏற்படுவதற்கும் அனைவரும் துஆ செய்வீர்கள் என ஆதரவு வைக்கின்றேன். 

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَكَذَ ٰ⁠لِكَ جَعَلۡنَـٰكُمۡ أُمَّةࣰ وَسَطࣰا

அவ்வாறே நாம் உங்களை நடுநிலைச் சமூகமாக ஆக்கினோம். (2:143)

قال أبو جعفر: وأنا أرى أن"الوسط" في هذا الموضع، هو"الوسط" الذي بمعنى: الجزءُ الذي هو بين الطرفين، مثل"وسَط الدار" محرَّك الوَسط مثقَّله، غيرَ جائز في"سينه" التخفيف.

وأرى أن الله تعالى ذكره إنما وصفهم بأنهم"وسَط"، لتوسطهم في الدين، فلا هُم أهل غُلوٍّ فيه، غلوَّ النصارى الذين غلوا بالترهب، وقيلهم في عيسى ما قالوا فيه - ولا هُم أهلُ تقصير فيه، تقصيرَ اليهود الذين بدَّلوا كتابَ الله، وقتلوا أنبياءَهم، وكذبوا على ربهم، وكفروا به؛ ولكنهم أهل توسط واعتدال فيه. فوصفهم الله بذلك، إذ كان أحبَّ الأمور إلى الله أوْسطُها.

அல்லாமா தப்ரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; இந்த வசனத்தில் கூறப்படும், “வசத்தன் எனும் நடுநிலை, என்னைப் பொருத்த வரை வீட்டின் இரு மூலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை, அதாவது வீட்டின் நடுப்பகுதியைப் போன்றதாகும். அதாவது, இங்கு இறைவன், மார்க்கத்தில் நடுநிலையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிவிக்கும் வண்ணம் இவ்வாறு கூறியுள்ளான் என்றே கருதுகின்றேன். அதாவது ஏகத்துவக் கொள்ளைகயையும் விட்டுப் பிறழ்ந்து, தமது தூதராகிய ஈஸா (அலை) அவர்களை, உயர்த்திப் பிடிக்கின்றோம் எனும் பெயரில், இறுதியில் அவரையே கடவுளாக்கிக் கொண்ட வகையிலான தீவிரத்தனமோ அல்லது யூதர்கள் தமது இறைமார்க்கத்தைப் புறக்கணித்து, இறைவனுடைய வேதத்தைப் புரட்டி எழுதி, இறைத்தூதர்களைக் கொன்று மேலும் இறைவனையும் மறுதலித்தது போன்று உதாசீனமான அலட்சியப் போக்கும் இன்றி, அல்லாஹ் முஸ்லிம்களை தீவிரத்துக்கும் அலட்சியத்துக்கும் இடையிலான ஒரு நடுநிலைத் தன்மையைக் கொண்ட சமூகமாகப் படைத்து சான்று பகர்ந்து விட்டான்..!

ஒரு காரியத்தை செய்ய வேண்டிய முறைப்படி செய்வதற்கு நடுநிலை என்று கூறப்படும். அதில் வரம்பு மீறுவதோ அல்லது குறைபாடு செய்வதோ அக்காரியத்தை கெடுத்து விடும்.அந்த வகையில் இஸ்லாம் அனைத்திலும் நடுநிலையான போக்கை கையாளுகிறது.

 

வணக்கங்களில் நடுநிலை.

முந்தைய உம்மத்தினர் இறைவனின் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் உலகத்தின் மீது மோகம் கொண்டு மார்க்கச் சட்டங்களில் பல குளறுபடிகளைச் செய்தனர். பணம் வாங்கிக் கொண்டு இறைவனின் வேதமான தவ்ராத்தின் வார்த்தைகளை மாற்றி விட்டனர். முந்தைய உம்மத்தில் இன்னொரு கூட்டம் உலகை முற்றிலுமாக வெறுத்து ஹலாலானவைகளைக் கூட தமக்குத்தாமே ஹராமாக்கிக் கொண்டு திருமணம் செய்யாமல் காடுகளிலும் ஆலயங்களிலும் சென்று தங்கி துறவு வாழ்க்கையை மேற்கொண்டனர்.

ஆனால் இந்த உம்மத்தில் வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அந்த வேதத்தின் படி நடுநிலையோடு செயல்படும்படி கட்டளையிட்டுள்ளான்.  உடலை வருத்திக் கொள்ளும் படியான வணக்கங்களில் ஈடுபடுவதையும் திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொள்வதையும் மார்க்கம் முற்றிலும் தடை செய்துள்ளது. மார்க்கம் கடமையாக்கிய கட்டாய கடமைகள்  போக உபரியான வணக்கங்களை பொறுத்த வரை ஒவ்வொருவரும் தத்தமது உடல் நிலைக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு உள்ள வணக்கங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

جاءَ ثَلاثَةُ رَهْطٍ إلى بُيُوتِ أزْواجِ النَّبيِّ ﷺ، يَسْأَلُونَ عن عِبادَةِ النَّبيِّ ﷺ، فَلَمّا أُخْبِرُوا كَأنَّهُمْ تَقالُّوها، فَقالوا: وأَيْنَ نَحْنُ مِنَ النَّبيِّ ﷺ؟! قدْ غُفِرَ له ما تَقَدَّمَ مِن ذَنْبِهِ وما تَأَخَّرَ، قالَ أحَدُهُمْ: أمّا أنا فإنِّي أُصَلِّي اللَّيْلَ أبَدًا، وقالَ آخَرُ: أنا أصُومُ الدَّهْرَ ولا أُفْطِرُ، وقالَ آخَرُ: أنا أعْتَزِلُ النِّساءَ فلا أتَزَوَّجُ أبَدًا، فَجاءَ رَسولُ اللَّهِ ﷺ إليهِم، فَقالَ: أنْتُمُ الَّذِينَ قُلتُمْ كَذا وكَذا؟! أَما واللَّهِ إنِّي لَأَخْشاكُمْ لِلَّهِ وأَتْقاكُمْ له، لَكِنِّي أصُومُ وأُفْطِرُ، وأُصَلِّي وأَرْقُدُ، وأَتَزَوَّجُ النِّساءَ، فمَن رَغِبَ عن سُنَّتي فليسَ مِنِّي.

நபி அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), ‘முன் பின் தவறுகள் மன்னிக்கப் பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன்” என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்று கூறினார். ஒரு போதும் பெண்களை மணந்து கொள்ள மாட்டேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டு விடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள். (புகாரி : 5063)

عن أبي جحيفة وهب بن عبد الله ـ رضي الله عنه ـ قال : آخى النبي  بين سلمان وأبي الدرداء ، فزار سلمان أبا الدرداء ، فرأى أم الدرداء متبذلة فقال : ما شأنك : قالت أخوك أبو الدرداء ليس له حاجة في الدنيا . فجاء أبو الدرداء فصنع له طعاماً، فقال له : كل فإني صائم ، قال : ما أنا بآكل حتى تأكل . فأكل **ا كان الليل ذهب أبو الدرداء يقوم، فقال له : نم ،فنام . ثم ذهب يقوم فقال له : نم **ا كان من آخر الليل قال سلمان : قم الآن . فصليا جميعاً ، فقال له سلمان :إن لربك عليك حقاً، وإن لنفسك عليك حقاً ، ولأهلك عليك حقاً ، فأعط كل ذي حق حقه , فأتى النبي  فذكر ذلك له، فقال النبي صلي الله عليه وسلم : ( صدق سلمان ) . رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனா நகரம் வந்த பின்னர்) அபுத்தர்தா, ஸல்மான் ஃபார்ஸி (ரலி) இருவரையும் ஒருவருக்கொருவர் சகோதரர் களாக்கியிருந்தார்கள். எனவே ஸல்மான் (ரலி) அவர்கள், அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். அப்போது உம்முத்தர்தா (ரலி) அவர்கள் (அபுத்தர்தாவின் துணைவியார்) சாதாரண உடையில் (அலங்காரம் எதுவும் இல்லாமல்) இருப்பதைக் கண்டார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் 'ஏன் இப்படி இருக்கிறீர்கள்? (ஏன் விதவைப் பெண்களைப் போல் உங்களை ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று வினவினார்கள்.

அம்மையார் கூறினார்கள்: 'உங்கள் சகோதரர் அபுத்தர்தாவுக்கு உலகைப்பற்றிய ஆர்வமே இல்லையே! (பின் யாருக்காக நான் என்னை அலங்கரித்துக் கொள்வது?)'

அதன்பின் அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள், விருந்தினராக வந்த தமமுடைய சகோதரருக்காக உணவு தயாரிக்கச் செய்தார்கள். பின்னர் 'நீங்கள் உண்ணுங்கள் நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்' என்று கூறினார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் 'நீங்கள் உண்ணாதவரை நான் உண்ண முடியாது' என்று கூறினார்கள். பின்னர் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நோன்பை முறித்துக் கொண்டு ஸல்மான் (ரலி) அவர்களுடன் உணவு உண்டார்கள். பின்னர் இரவு வந்தவுடன் நஃபில் தொழுகைகள் தொழுதிட எழுந்தார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் 'உறங்குங்கள்!' என்று கூறினார்கள். பின்னர் மீண்டும் நஃபில் தொழுகைகள் தொழுதிட எழுந்தார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் மீண்டும் 'உறங்குங்கள்!' என்று கூறினார்கள். இரவின் இறுதிப் பகுதியில் ஸல்மான் (ரலி) அவர்கள் 'எழுந்திருங்கள்!' என்று அபுத்தர்தாவை எழுப்பினார்கள். பின்னர் ஸல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம் கூறினார்கள்: 'பாருங்கள்! உங்கள் மீது உங்கள் இறைவனுக்கு உரிமை உண்டு, உங்கள் ஆன்மாவுக்கு உரிமை உண்டு, உங்கள் மனைவிக்கும் உரிமையுண்டு. அனைவரின் உரிமையையும் நிறைவேற்றுங்கள்!'பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஸல்மான் (ரலி) அவர்கள் வந்தார்கள். நடந்தவையனைத்தையும் கூறினார்கள். அணைத்தையும் செவியேற்ற அண்ணலார் 'ஸல்மான் உண்மையே கூறினார்'என நவின்றாhகள். (புகாரி : 6139)

உலகமும் வேண்டும். மறுமையும் வேண்டும். இதற்காக அதையும் அதற்காக இதையும் விட்டு விடக்கூடாது.

وَابْتَغِ فِيْمَاۤ اٰتٰٮكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ‌ وَلَا تَنْسَ نَصِيْبَكَ مِنَ الدُّنْيَا‌ وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَيْكَ‌ وَلَا تَبْغِ الْـفَسَادَ فِى الْاَرْضِ‌ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ‏

மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்). (அல்குர்ஆன் : 28:77)

 

செலவழிப்பதில் நடுநிலை

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا‏

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர். (அல்குர்ஆன் : 17:29)

وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏

இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் : 25:67)

 

மனித நேயத்தில் நடுநிலை

அறியாமைக்கால அரபுலகில் ஒருவரின் ஒட்டகம் இன்னொருவரின் ஒட்டகப் பட்டியினுள் நுழைந்து சேதப்படுத்தியதற்காக இரு குடும்பங்களிடையே ஏற்பட்ட சண்டை பெரும் யுத்தமாக உருவாகி நூறு ஆண்டுகள் யுத்தம் தொடர்ந்து நடந்து பல ஆயிரக்கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர்.

இன்னொரு புறம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று கூறி உணவுக்காக கூட கால்நடைகளை அறுப்பது பெரும் பாவமாக கருதப்பட்டது அதை ஜீவகாருண்யம் என்று அழைக்கப்பட்டது.

ஆனால் இஸ்லாம் தான் உண்மையான மனிதநேயத்தையும் உண்மையான ஜீவகாருண்யத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

நிர்பந்த நிலையில் எதிர்த்து வரும் எதிரிகளுடன் தற்காப்பு யுத்தம் செய்வது அநியாயமாக கொலை செய்தவர்களை பழி வாங்குவது மனிதநேயத்திற்கு மாற்றமல்ல. உணவுக்காக அனுமதிக்கப்பட்ட கால்நடைகளை உண்பது ஜீவகாருண்யத்திற்கு மாற்றமானது அல்ல என்பதை எடுத்துக் கூறி இவ்விரண்டிலும் சில நெறிமுறைகளை வகுத்து அவற்றை பின்பற்றுவதை கட்டாயமாக்கியது.

 

பெண்ணுரிமையில் நடுநிலை .

பெண்களுக்கு ஆன்மாவே இல்லை என்றும் அவர்கள் மனிதப் படைப்பே இல்லை என்றும் கருதி பெண்களை மிகக் கேவலமாக சில சமுதாயங்கள் நடத்தி வந்தது. சொல்லொணாக் கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்பட்டது. அதன் உச்ச கட்டமாக பெண் குழந்தைகளை உயிரோடு மண்ணில் புதைப்பதும் கணவன் இறந்தவுடன் அவளும் நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற உடன்கட்டை ஏறுதல் என்ற கொடுஞ் செயலும் அரங்கேறிக்கொண்டிருந்தது.

இன்னொரு புறம் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் எனவே ஆண்களுக்குரிய அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற வறட்டு சித்தாந்தமும் முன் வைக்கப்பட்டது.

இவ்விரண்டிற்குமிடையே பெண்களின் உண்மையான மதிப்பு என்ன என்பதை இஸ்லாம் எடுத்துக்காட்டி அதை முறையாக அவர்கள் பெறுவதற்கு இஸ்லாம் வழி செய்தது.

 

தொழுகையில் ஓதுவதில் நடுநிலை

قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌  اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا‏

நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக. (அல்குர்ஆன் : 17:110)

 

சட்டங்களில் நடுநிலை

முந்திய உம்மத்தினரின் சிலருக்கு அவர்களின் மார்க்கத்தில் கடுமையான சட்டங்கள் தரப்பட்டிருந்தது. வேறு சிலருக்கோ மிக இலகுவாக சட்டங்கள் தரப்பட்டு இருந்தது.ஆனால் நம்முடைய இந்த உம்மத்தினருக்கு அவர்களின் சக்திக்கு ஏற்ப நடுநிலையான சட்டங்கள் தரப்பட்டுள்ளன அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

الوسطية في أماكن العبادات: كانت الأمم المُتقدِّمة لا يصلون إلاَّ في كنائسهم وبِيَعِهم

முந்தைய சமுதாயத்தில் அவர்கள் வணக்கங்களை அவர்களின் ஆலயங்களில் மட்டுமே தொழ முடியும்.ஆனால் நம் சமூகத்திற்கு பூமி முழுக்க தொழுமிடமாக ஆக்கப்பட்டிருக்கிறது.

وعن جَابِرِ بنِ عبدِ اللَّهِ رضي الله عنه؛ أَنَّ النبي صلى الله عليه وسلم قال: (أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي) وذَكَرَ منها: (وَجُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا؛ فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاةُ فَلْيُصَلِّ

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் ஆடையில் அசுத்தம் பட்டால் பட்ட இடத்தை கத்திரியால் வெட்டி எடுக்க வேண்டும் அப்போது தான் அது சுத்தமாகும். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் ஆடையில் அசுத்தம் பட்டாலும் ஆடை அசுத்தமாகாது அதே நிலையில் தொழுகை கூடிவிடும்

நமது ஷரீஅத்தில் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையான சட்டமாக அசுத்தத்தை தண்ணீரால் முழுமையாக கழுவி விட்டால் ஆடை சுத்தமாகி விடும் என்ற சட்டம் தரப்பட்டுள்ளது.

الوسطية في التعامل مع الحائض: جاءت الشريعة الإسلامية بالوسطية في التعامل مع الحائض بين إفراط اليهود؛ الذين يحرِّمون السكن مع الحائض والتعامل معها، وبين تفريطِ النصارى؛ الذين يُبيحون وَطْأَها في تلك الحال، عن أَنَسٍ رضي الله عنه؛ أَنَّ الْيَهُودَ كَانُوا إذا حَاضَتْ الْمَرْأَةُ فِيهِمْ لم يُؤَاكِلُوهَا، ولم يُجَامِعُوهُنَّ في الْبُيُوتِ، فَسَأَلَ أَصْحَابُ النبيِّ صلى الله عليه وسلم النبيَّ صلى الله عليه وسلم فَأَنْزَلَ الله تَعَالَى: ﴿ وَيَسْأَلُونَكَ عن الْمَحِيضِ قُلْ هو أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ في الْمَحِيضِ ﴾ إلى آخِرِ الآيَة [البقرة: 222]. فقال رسولُ اللَّهِ صلى الله عليه وسلم: (اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلاَّ النِّكَاحَ)، فَبَلَغَ ذلك الْيَهُودَ، فَقَالُوا: ما يُرِيدُ هذا الرَّجُلُ أَنْ يَدَعَ مِنْ أَمْرِنَا شَيْئاً إِلاَّ خَالَفَنَا فِيهِ

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் மாதவிடாயுள்ள சமயத்தில் மனைவியை விலக்கி வைத்து விட வேண்டும் சேர்ந்து படுப்பதோ உறவு கொள்வதோ. தொடுவதோ கூடாது.

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் அந்த நிலையிலும் மனைவியுடன் உறவு கொள்வது கூடும் நமது ஷரீஅத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்வதை தவிர்த்து மற்ற விஷயங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் அநியாயமாக ஒருவர் இன்னொருவரை கொலை செய்து விட்டால் பதிலுக்கு கொன்றவரை கொலை செய்து விடுவது கடமையாகும். அவரை மன்னிப்பது கூடாது. நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் கொலை செய்தவரை மன்னிப்பது கடமையாகும் அவரை கொல்வது-பழி வாங்குவது கூடாது.

நமது ஷரீஅத்தில் கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு முழு இஷ்டம்  தரப்பட்டுள்ளது அவர்கள் விரும்பினால் கொன்றவரை பழிக்கு பழியாக கொலை செய்வதும் கூடும் அல்லது நஷ்டஈடு வாங்கியோ வாங்காமலோ அவரை மன்னிப்பதும் கூடும் .

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் கணவன் மனைவியை தலாக் விட்டு அவள் வேறொருவரை திருமணம் செய்து விட்டால் இனி எப்பொழுதும் முதல் கணவர் அவளை திருமணம் செய்ய முடியாது. நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில் திருமணம் செய்த பின்பு கணவன் மனைவியை தலாக் விடுவதற்கு அறவே அனுமதி இல்லை.

ஆனால் நமது ஷரீஅத்தில் மனைவி கணவனுக்கு ஒத்துவரா விட்டால் அவளை தலாக் விட்டு பிரிந்து விடுவதற்கும் . பின்பு அப்பெண் வேறொருவரை திருமணம் செய்து அந்தக் கணவர் இம்மனைவியுடன் உடலுறவு கொண்டு பின்பு இவரை விட்டும் மரணம் அல்லது தலாக்கின் காரணமாக பிரிந்து விட்டால். இத்தா முடிந்த பிறகு  மீண்டும் முதல் கணவருடன் திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு.

மேலும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தில்  நான்கில் ஒரு பகுதி ஜகாத்தாக  கடமையாக்கப்பட்டிருந்தது. நமக்கு நாற்பதில் ஒரு பகுதிதான் கடமையாகும். அவர்கள் தொடர்ந்து 20 மணி நேரம் நோன்பு வைக்க வேண்டும் அதை முடித்தவுடன் ஒரே ஒரு தடவை மட்டுமே சாப்பிட முடியும்.

நமக்கோ அதை விட குறைவான நேரம் நோன்புடைய நேரமாகவும் மஃரிப் நேரத்திலிருந்து  அதிகாலை ஸஹர்  நேரம் முடியும்வரை விரும்பிய அளவு சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு சட்டங்களில் நமக்கு சலுகை வழங்கப்பட்டு அனைத்து உம்மத்தினரை விட நடுநிலையான உம்மத்தாக இவ்வுலகில் அல்லாஹ் நம்மை ஆக்கியதோடு மறுமையில் அனைத்து நபிமார்களும் தம் உம்மத்தினருக்கு இறைவனின் அழைப்பை எடுத்துரைத்தார்கள் என்பதற்கு சாட்சி சொல்லும் பாக்கியத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறான்.

உலகமாக இருந்தாலும் மறுமையாக இருந்தாலும் எல்லா விஷயத்திலும் நடுநிலை பேண வேண்டும்.

خير الأمور أوسطها"

 

 2022 - ரமலான் காலங்கள் தனித்துவமானவை

2023 - ஏன் இந்த தயக்கம்

வாஹிதிகள் பேரவை - அல்குர்ஆன் ஓர் அழியா அற்புதம்  

1 comment:

  1. அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக தொய்வின்றி தொடரட்டும் இப்பணி

    ReplyDelete