Friday, January 31, 2025

ஷரீஅத்தை புறக்கணிக்கும் முஸ்லிம் சமூகம்

 

மனிதன் மனிதனாக வாழ அவனுக்கு சில சட்ட திட்டங்கள்، வாழ்க்கை நெறிமுறைகள் அவசியமாய் தேவைப்படுகிறது. சட்டதிட்டங்கள் தான் மனிதனை சுய ஒழுக்கத்தோடும் கட்டுப்பாடோடும் வாழ செய்கிறது. மனிதனால், சட்டம் என்ற கடிவாளம் இன்றி சுய  ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட்டோடும் வாழ முடியாது.

சட்டம் என்பது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை அகற்றும் சாதனம். பல்வேறு சமுதாயங்கள் இணைந்து வாழ்வதற்கும், கொடுமைகள் களையப் படுவதற்கும், உரிமைகள் பேணப்படுவதற்கும், நீதி நியாயங்கள் நிலை நிறுத்துப்படுவதற்கும் பன்னாட்டு உறவுகளை ஒருமுகப் படுத்துவதற்கும் சட்டத்தின் துணை அவசியமாகிறது.மட்டுமல்ல, சட்டங்களினால் தான் மக்களின் நிர்வாகம் நடத்தப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

அல்லாஹ் நமக்கு வாழ்க்கை நெறியாக மாபெரும் அருட்கொடையாக ஷரீயத்தின் சட்ட திட்டங்களை வழங்கி இருக்கிறான்.உலகத்திலே மிகவும் அற்புதமானது,தெளிவானவது ஷரீஅத்தின் சட்டம்.

 

ஷரீஅத் சட்டங்களின் சிறப்பம்சங்கள்.

1, இஸ்லாமிய ஷரீஅத் என்பது வணக்க வழிபாடு, கொடுக்கல்-வாங்கல், வியாபாரம், குடும்ப விவகாரம் என அனைத்துக்குமான சட்ட திட்டங்களை உள்ளடக்கிய ஒன்றாகும். ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முழு வழிகாட்டுதலும்  ஷரீஅத்தில் உண்டு. இன்று நம் நாட்டை அலைக்கழிக்கும் சட்டங்கள் மனிதர்களால்  இயற்றப்பட்டவை. பலமுறை திருத்தப்பட்டவை. ஆனால் இறைவன் வழங்கும் சட்டங்கள் தொலைநோக்குள்ளவை. மனிதகுலத்தின் அனைத்து அங்கங்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொருத்தமானவை. ஷரீஅத்தின் சட்டங்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தும் எல்லா மக்களுக்கும் பொருந்தும். வாழ்வின் எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அதை இலகுவாக எதிர் கொண்டு அதை தீர்த்துக் கொள்ள முடியும்.

اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌

இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன் (அங்கீகரித்துக் கொண்டேன்). (அல்குர்ஆன் : 5:3)

சில நேரங்களில் இஸ்லாமிய ஷரீ அத்தின் சட்டங்கள் நமக்கு பொருத்தமற்றவை போலத் தெரியலாம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்து சரியான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டோமானால் அதன் அழகையும் புனிதத்துவத்தையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

உதாரணமாக, இன்று முத்தலாக் என்பது பெரும் சர்ச்சைக்குரிய விவகாரம். முத்தலாக்கைப் பொறுத்த வரை ஒரு சில இடங்களில் தான் பெண்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதுவும் விவரமற்று நடந்து கொள்ளும் ஆத்திரக்கார ஆண்களால் அல்லது  அறியாமையில் பஞ்சாயத்து செய்பவர்களால் இந்த விபரீதம் நடக்கிறது. ஆனால் உண்மையில் பார்த்தால் முத்தலாக் என்பது பெண்களை பாதுகாக்கும் நோக்கில்  ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சட்டம் தான். ஆரம்ப காலகட்டத்தில் கணக்கில்லாமல் விளையாட்டுத் தனமாக தலாக் விடுவதும் பிறகு ஏதாவது ஒரு வகையில் நிர்பந்தமாக மனைவியைச் சேர்த்துக் கொள்வதும் நடை முறையில் இருந்த காலகட்டத்தில் மூன்று தலாக்கிற்கு மட்டுமே அனுமதி என்றும் அதற்கு பிறகு கணவன் மனைவி எளிதில் சேர முடியாது என்றும் ஒரு வரையரையை மார்க்கம் விதித்தது.எனவே இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் மனித சமூகத்திற்கு என்றைக்கும் நன்மை தரக்கூடியதாகத்தான் இருக்கும்.

ஒரு மார்க்க அறிஞரிடம் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டார்.

நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். பெண் வீட்டார் வசதியான குடும்பத்தவர்கள். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான் . அதன் பிறகு என் மனைவி இறந்து விட்டார். நான் வேறு திருமணம் செய்து என் மகனை என்னுடன் வைத்து கவனித்து வருகிறேன். எனது முன்னாள் மனைவியின் தந்தை சமீபத்தில் இறந்து விட்டார். அவர்களிடம் எனது மகனுக்கான சொத்து வேண்டும் என்று கேட்டேன். தந்தைக்கு முன்னாலேயே மகள் இறந்து விட்டதால் இஸ்லாமிய வாரிசுரிமைப் படி சொத்து கிடைக்காது என்று சொல்லி விட்டனர். இது சரியா என்று அவர் கேட்டார். அப்படித்தான் ஷரீ அத் சொல்கிறது என்று நான் சொன்னேன். அதென்ன நியாயம் என்றார். அதற்கு அந்த ஆலிம் இஸ்லாத்தில் வாரிசுரிமை என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு கிடைக்கும் ஒரு வழிப் பாதை அல்ல.  ஒரு சில நேரங்களில் தந்தையின் குற்றத்திற்காக மகன் தன்னிடமிருக்கிற சொத்தை அளிக்க வேண்டியதும் வாரிசுரிமையின் படி நிர்பந்தமாகும். இப்போது சொல்லுங்கள் உங்களது மாமனாருக்கு சொத்து இருப்பதால் உரிமை கேட்கிறீர்களே ஒரு வேளை அவர் இரண்டு கோடி ரூபாய் கடன் வைத்திருந்தால் அதில் பங்கேற்க முன் வருவீர்களா என்றேன். அவர் சரிதான் என்று சொல்லி எழுந்து சென்றார்.

 

2, மனிதனுக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ எதுவெல்லாம் பயன் தருமோ அதுவெல்லாம் இந்த ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்டிருக்கும். தனி மனிதனுக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ எது ஆபத்தையும் அழிவையும் ஏற்படுத்துமோ அதுவெல்லாம் இங்கே தடை செய்யப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தில் நூற்றுக்கணக்கான ஏவல்கள் உண்டு நூற்றுக்கணக்கான விலக்கல்கள் உண்டு ஆனால் ஷரியத் கூறுகின்ற ஏவல்களையும் விலக்கல்களையும் ஒரே வரியில் சொல்லுங்கள் என்று சொன்னால் மனித சமூகத்திற்கு எது நன்மையோ அது ஏவல். மனித சமூகத்திற்கு எது அழிவோ அது விலக்கல் என்று சொல்லி விட முடியும்.

செத்த பிராணியை ஷரீஅத் தடை செய்திருக்கின்றது.

உடல் நலத்திற்குக் கேடுவிளைவிப்பதன் காரணத்தால் தான் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிராணி இயற்கையாகச் சாவதற்கு ஒன்று நோய் காரணமாக இருக்கலாம். அல்லது நசிவு காரணமாக இருக்கலாம். அல்லது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் (Microbe) காரணமாக இருக்கலாம். அந்தக் கிருமிகள் உடல் சத்துக்களைச் செயலிழக்கச் செய்து அல்லது விஷத்தை உருவாக்கி மரணத்தை ஏற்படுத்தும். சில வேளைகளில் நோய்க் கிருமிகள் பிணத்தில் நீண்ட காலம் தங்கிவிடும். இந்நிலையில், அதை உண்பது மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவு. அது மட்டுமின்றி, மனித இயல்பும் அதை வெறுக்கிறது. அதே நேரத்தில், உயிருள்ள பிராணியை அறுத்து இரத்தத்தை வெளியே ஒட்டிவிட்டால், அத்தகைய கிருமித் தாக்குதல் இராது. அவ்வாறே, மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களில் இயற்கையாகவே ஓடும் இரத்தம் கிடையாது. எனவே, செத்த மீனை உண்பதால் கேடு விளையாது. (தஃப்ஸீர் அல்மனார்)

3, ஷரீஅத் சட்டங்கள் தெளிவாக, துல்லியமாக, சமநிலையோடு  இருக்கிறது. இதில் ஏற்றத்தாழ்வு, பாரபட்சம் என்று எவ்விதக் குளறுபடிகளும் இல்லை. ‘என் பாச மகள் பாத்திமா திருடினாலும் அவரது கை நிச்சயம் வெட்டப்படும்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ‘எனக்குப் பின் நபி மூசா (அலை) அவர்கள் வந்தாலும், அவர் எனது ஷரீஅத்தைத்தான் பின்பற்ற வேண்டும். இறுதி காலத்தில் தோன்றும் நபி ஈசா (அலை) எனது ஷரீஅத்தைத் தான் பின்பற்றுவார்’ என்ற நபி மொழிகள் எல்லாம் இந்த இறுதி ஷரீஅத்தின் வழி தான் நிலையானது; நிறைவானது; நிரந்தரமானது என்பதையே அறிவிக்கின்றது.இது ஷரீஅத்தின் சிறப்பம்சங்களில் மூன்றாவது.

عن جابر بن عبد الله رضي الله عنهما: {أن عمر بن الخطاب رضي الله عنه وأرضاه أتى رسول الله صلى الله عليه وسلم بنسخة من التوراة، فقال: يا رسول الله! هذه نسخة من التوراة، فسكت النبي صلى الله عليه وسلم، فجعل عمر يقرأ ووجه رسول الله صلى الله عليه وسلم يتمعر ويتغير، فقال أبو بكر رضي الله عنه وأرضاه: ثكلتك الثواكل يا بن الخطاب! ألا ترى ما لوجه رسول الله صلى الله عليه وسلم؟! -وفي رواية- أن عبد الله بن زيد قال: أمسخ الله عقلك! ألا ترى ما بوجه رسول الله صلى الله عليه وسلم؟! فنظر عمر إلى وجه رسول الله صلى الله عليه وسلم، ثم قال: أعوذ بالله من غضب الله وغضب رسوله، رضينا بالله رباً، وبالإسلام ديناً، وبمحمد صلى الله عليه وسلم نبياً، فقال صلى الله عليه وسلم: أمُتَهَوِّكون فيها يا بن الخطاب؟! ألَمْ آتِكم بها بيضاء نقية؟ والذي نفسي بيده! لو بدا لكم موسى فتبعتموه وتركتموني لضللتم سواء السبيل، والله لو كان موسى حياً ما وسعه إلا أن يتبعني

 

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் தவ்ராத்தின் ஒரு பிரதியைக் கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே!இது தவ்ராத்தின் பிரதியாகும் என்று கூறினார்கள்.   அப்போது நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.   உமர் (ரலி) அப்பிரதியை வாசிக்க ஆரம்பித்தார்கள்.   அப்போது நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறத் தொடங்கியது.   உடனே அபூபக்கர் (ரலி), உமரே! உனக்கு நாசமுண்டாகட்டும் அல்லாஹ்வின் தூதரின் முகத்தை நீர் பார்க்கவில்லையா எனக் கூறினார்கள்.   உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தை பார்த்த உமர்(ரலி), அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கோபத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்.   அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை மார்க்க மாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக் கொண்டேன் எனக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்,  முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஒரு வேலை மூஸா (அலை) அவர்கள் உங்களுக்கு மத்தியில் வந்தால், அப்போது என்னை ஏற்று பின்பற்றுவதை விட்டு விட்டு அவரை நீங்கள் பின்பற்றினால் வழிகெட்டு விடுவீர்கள்.

 

மூஸா (அலை) உயிருடன் இருந்து என் நபித்துவத்தை அடைந்து கொண்டால் அவரும் என்னையே பின்பற்ற வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் என்பது மிகத் துல்லியமாக எல்லோருக்கும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் வகையில் யாருக்கும் பாதகம் இல்லாமல் மிக அழகான முறையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. எனவே தான் இன்றைக்கு பல இனத்தைச் சார்ந்தவர்களும் இஸ்லாமிய சரியத் சட்டதிட்டங்களை ஏற்க ஆரம்பித்து விட்டார்கள். பல நாடுகளிலும் இஸ்லாமிய சரியத் சட்டங்களே நடைமுறைக்கும் சூழ்நிலைக்கும் ஒத்து வருகிறது என்று சொல்லி அதை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

உலகில் பெரும்பாலான நாடுகளிலும் பல சமய அரசுகள் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன என்றாலும் அரசாங்க குற்றவியல் சட்டங்கள் பல    குர்ஆன் நபிமொழி அடிப்படையில் உருவானது என்பது தான் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும். உதாரணமாக விபச்சாரம், திருட்டு, மது போன்ற சட்டங்களை கூறலாம்.

முகம்மது அலி ஜின்னா அவர்கள் வழக்கறிஞருக்கான கல்வி பெற பிரிட்டன் சென்ற போது பல கல்லூரிகளையும் பார்த்த பின் லிங்கன்ஸ் இன் (Lincoln’s Inn) என்ற கல்லூரியைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது “கல்லூரி வாசலில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தில் உலகில் தலைசிறந்த பத்து வல்லுனர்களில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் இருந்தது தான் காரணம்” என்று சொன்னார். மனிதனால் இயற்றப்படுகிற சட்டங்கள் மனிதனின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப விளக்கங்களுக்கு உட்படுவதால் மக்கள் உள்ளத்தை அவை தொடுவதில்லை.

ஷரீஅத் சட்டம் என்பது உலகத்தில் உள்ள ஏனைய சட்டங்களை போன்று சர்வ தேசத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்று கூடி உருவாக்கிய சட்டத் தொகுப்பல்ல. இறைவனால் ‘வஹி’ எனும் இறை அறிவிப்பின் வழியாக நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு அவ்வப்போது அருளப்பட்டு விதிக்கப்பட்ட ஒரு சட்டத்தொகுப்பு.

இறைவன் அருளிய சட்டம் என்பதால் அதை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ அதில் கருத்து சொல்வதற்கோ உலகில் யாருக்கும் அதிகாரம் இல்லை.

உலகத்தில் எந்த அறிஞர்களோ புரோகிதர்களோ அரசர்களோ அதிகாரிகளோ ஆட்சியாளர்களோ அவர்களாக எதையும் ஹலால்  ஆகுமாக்கி விட முடியாது. ஹராம் என்று தடுத்து விட முடியாது அப்படி செய்யக்கூடியவர்களையும் அதற்கு இணங்கி நடக்கக் கூடியவர்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكُمْ وَلَا تَعْتَدُوْا‌  اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‏

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் ஆகாதவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை. (அல்குர்ஆன் : 5:87)

ஹலாலை ஹராமாக்குதல் என்பது வரம்பு மீறி செயல்படுறது. அல்லாஹ்வின் அதிகாரத்திலேயே கை வைக்கின்ற மிக மோசமான செயல்.

எனவே தான் முன்னோர்களான இமாம்கள் ஃபத்வா கொடுப்பதில் ரொம்ப பேணுதலை கடைபிடித்தார்கள். இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் ஏதாவது விவகாரம் குறித்து விசாரித்தால், ஹராம் என்று சொல்லி விடாமல் 'நான் அதை வெறுக்கின்றேன்' அல்லது 'எனக்கு அது விருப்பம் இல்லை' அல்லது 'எனக்கு அது நன்றாகத் தோன்ற வில்லை' அல்லது 'எனக்கு அது மகிழ்வைத் தராது' என்று மட்டுமே பதில் கூறுவார்கள்.

தங்கள் மனோ இச்சைப்படி சட்டங்கள் சொல்பவர்களையும் சட்டங்களை மாற்றுபவர்களையும் மற்றும் அவர்களை பின்பற்றக்கூடியவர்களையும் அல்லாஹ் கண்டிக்கின்றான்.

اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ‌  وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌  لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌  سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ

இவர்கள் அல்லாஹ்வைத் தவிர்த்து தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவற்றைவிட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன் : 9:31)

وقد روي عن عدي بن حاتم رضي الله عنه أنه ظن أن عبادة الأحبار والرهبان إنما تكون في الذبح لهم، والنذر لهم، والسجود والركوع لهم فقط ونحو ذلك، وذلك عندما قدم على النبي ﷺ مسلما وسمعه يقرأ هذه الآية. فقال: يا رسول الله، إنا لسناا نعبدهم، يريد بذلك النصارى حيث كان نصرانيا قبل إسلامه، قال ﷺ: أليس يحرمون ما أحل الله فتحرمونه ويحلون ما حرم فتحلونه؟ قال: بلى قال: فتلك عبادتهم. رواه أحمد والترمذي وحسنه.

கிறிஸ்த்தவராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் இணைவதற்காக வந்த ‘அதீ இப்னு ஹாதம்’ (ரலி) அவர்களிடம் இந்த வசனத்தை நபி ஸல் அவர்கள் ஓதிக் காட்டிய போது அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்க வில்லையே! (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராம் என்று கூறினார்கள். நீங்கள் அவ்வாறு சொன்னீர்கள்.அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலால் என்று கூறினார்கள். நீங்களும் அவ்வாறே சொன்னீர்கள். இவ்வாறு கண்மூடித்தனமாக நீங்கள் அவர்களை பின்பற்றியது அவர்களை கடவுள்களாக கருதியதற்கு நிகரானது என்று விளக்கம் தந்தார்கள். (திர்மிதீ)

எனவே ஷரீஅத்தின் சட்டங்களில் கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை.அவ்வாறு செய்யக்கூடாது என்பது ஷரீஅத்தின் சட்டங்களில் நாம் கடை பிடிக்க வேண்டிய முதலாவது விஷயம்.

இரண்டாவது அதை முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும். முஸ்லிம்களாகிய நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்  இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை கடை பிடிக்க கடைமைப் பட்டிருக்கிறோம்.

ஷரீஅத்தை முழுமையாக பின்பற்றி நடப்பவர்கள் தான் உண்மை முஸ்லிம்கள்.

அல்லாஹ் முனாஃபிக் களையும் முஃமின்களையும் பற்றி அல்குர்ஆனில் கூறுகின்றான்.

وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ

தவிர, தங்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி நியாயத்) தீர்ப்புபெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்து விடுகின்றனர்.(அல்குர்ஆன் : 24:48)

وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَ

எனினும், தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் (நம் தூதருக்கு) கீழ்ப்படிந்து (நடப்பவர்களைப் போல்) அவரிடம் வருகின்றனர். (அல்குர்ஆன் : 24:49)

اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ

என்னே! இவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவர்களுக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? (அவர்கள் அநீதி செய்யப்படவே மாட்டார்கள்.) மாறாக, இவர்கள்தான் வரம்பு மீறும் அநியாயக்காரர்கள் ஆவர். (ஆதலால்தான் இவ்வாறு செய்கின்றனர்.) (அல்குர்ஆன் : 24:50)

اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் ‘‘நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் கீழ்ப்படிந்தோம்'' என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இவர்கள்தான் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள் ஆவர். (அல்குர்ஆன் : 24:51)

தங்களின் விவகாரங்களில் ஷரீஅத்தை பின்பற்றாமல் புரக்கணிப்பவர்களை அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கண்டிக்கின்றான்.

فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰيٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا‌  سَنَجْزِى الَّذِيْنَ يَصْدِفُوْنَ عَنْ اٰيٰتِنَا سُوْٓءَ الْعَذَابِ بِمَا كَانُوْا يَصْدِفُوْنَ

ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம் வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். (அல்குர்ஆன் : 6:157)

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏

எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம். (அல்குர்ஆன் : 20:124)

ஆனால் இன்று நம் சமூகத்தின் நிலை

ஷரீஅத்தின் சில சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றது. உதாரணத்திற்கு இத்தாவைக் குறிப்பிடலாம்.கணவன் இறந்து விட்டால் மனைவி 4 மாதங்கள் 10 நாட்கள் இத்தா இருக்க  வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ‌‌ فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِىْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ

உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், (அம்)மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் (இத்தா முடிவதை) எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு ‘மரண இத்தா' என்று பெயர்.) ஆதலால், அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை முடித்து விட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் : 2:234)

குர்ஆனில் வெளிப்படையான வார்த்தைகளால் கூறப்பட இந்த இத்தாவின் சட்டம் பகிரங்கமாக மீறப்படுகிறது. கணவனை இழந்த பெண்களில் பலர் இவ்வாறு அல்லாஹ் சொன்ன கணக்கின் படி முறையாக இத்தா இருப்பதில்லை. அநேகமான பெண்கள் எங்களுக்கு வசதியில்லை. உடன் இருப்பதற்கு ஆள் இல்லை என்று சொல்லிக் கொண்டு 40 நாட்கள் மட்டுமே இத்தா இருக்கிறார்கள். இது இஸ்லாம் காட்டித்தராத ஒரு நடைமுறை. மட்டுமல்ல, ஷரீஅத்தை மீறுகின்ற, அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைக்கின்ற ஒரு மோசமான நடைமுறை. இதற்கு குடும்பத்தினர் அனைவரும் உடந்தையாக இருக்கிறார்கள்.

தலாக் விடப்பட்ட பெண்கள் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இதையும் இன்று பல பெண்கள் கடைபிடிப்பதில்லை.

இதை விடக் கொடுமை சில பெயர் முஸ்லிம் பெண்கள் எங்களுக்கு ஷரீஅத் தேவையில்லை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று பகிரங்கமாக கூறுகின்றனர்.

கேரளாவின் ஆலப் புழாவை சேர்ந்த சபியா என்ற முஸ்லிம் பெண், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்:

அதில் நான் முஸ்லிம் மதத்தில் பிறந்திருந்தாலும் அந்த மதத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிகாரப்பூர்வமாக மதத்தைவிட்டு வெளியேறவில்லை. என்றாலும் சட்டப்பிரிவு 25ன் கீழ், மதத்திற்கான அடிப்படை உரிமையை அமல்படுத்த விரும்புகிறேன். அதில், நம்பிக்கையற்றவர் என்ற உரிமையை வெளிப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தின் கீழ் ஆளப் படுவதை விரும்பாதவர் கள், நம் நாட்டின் வாரிசு சட்டத்தின் கீழ் ஆளப்படுவதை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த மனு கடந்த 28 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த மனு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நான்கு வாரங்களுக்குள் தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு மே 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிலைகளை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

மார்க்கத்தில் சின்ன சின்ன விவகாரங்களில் கூட சுன்னத்திற்கு மாற்றமாக நடப்பதையும் அதனால் அல்லாஹ்வின் வேதனை இறங்கி விடுவதையும் இமாம்கள் பயந்தார்கள்.

نظر سعيد بن المسيب إلى رجل صلى بعد النداء من صلاة الصبح, فأكثر الصلاة فحصبه, ثم قال: إذا لم يكن أحدكم يعلم فليسأل: إنه لا صلاة بعد النداء إلا ركعتين فانصرف فقال: يا أبا محمد أتخشى أن يعذبني الله بكثرة الصلاة ؟ قال: بل أخشى أن يعذبك الله بترك السنة.

பஜ்ர் பாங்கு சொல்லப்பட்ட பிறகு ஒருவர் தொழுது கொண்டிருப்பதை ஸஈத் பின் முஸய்யப் ரஹ் அவர்கள் பார்த்தார்கள் அவர் சுன்னத்தான இரண்டு ரக்அத்தைத் தாண்டி அதிகமாக தொழுது கொண்டிருந்தார். அவரை அழைத்து பஜ்ருடைய பாங்கிற்குப் பிறகு அந்த பஜ்ருடைய சுன்னத்தான இரண்டு ரக்அத்தை தவிர அதை விட அதிகமாக தொழுவதற்கு ஷரீஅத்தில் அனுமதி இல்லை என்று சொல்லி திரும்பி விட்டார்கள். அந்த மனிதர் அவர்களை அழைத்து தொழுகை நன்மையான காரியம் தானே. அதை அதிகமாக தொழுவது குற்றமா என்று கேட்ட போது, நபியவர்களின் சுன்னத் அது தான். அந்த சுன்னத்தை மீறி நடப்பது குற்றம் என்று அவருக்கு பதில் சொன்னார்கள்.

கடமையான ஒரு விஷயத்தை விட்டால் பரவாயில்லை. ஆனால் தன் வசதிக்காக ஷரீஅத்தின் சட்டங்களை வளைக்கும் நம் சமூகத்தை என்ன சொல்வது?

ஷரீஅத்தைப் பாதுகாக்க வேண்டிய முஸ்லிம்களே ஷரீஅத்தை மீறி நடந்தால், ஷரீஅத்திற்கு எதிராக செய்பட்டால் உத்தரகாண்டை அடுத்து மற்ற இடங்களில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தும் நிலை வரலாம். அதற்கான முயற்சிகள் தான் நடந்து கொண்டிருக்கின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக ஷரீஅத் சட்டங்களையும் நம் இஸ்லாமியர்களையும்.

 

11 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லா அருமையான வரிகள்

    ReplyDelete
  3. தொடர்ந்து பதிவிட வாழ்த்தும் துஆவும்

    ReplyDelete
  4. Assalamu Alaikum, it would be great if you started a group on WhatsApp.

    ReplyDelete
  5. ஷேக் ஹுஸைன் பைஜி

    ReplyDelete
  6. அருமையான கட்டுரை
    جزاك الله خيرا كثيرا في الدارين
    முஹிப்புல்லாஹ் பாகவி சென்னை

    ReplyDelete
  7. அருமையான கட்டுரை மெளலானா! மாஷா அல்லாஹ்!! பாரக்கல்லாஹ்!!!

    ReplyDelete
  8. الحمد لله حضرت. جزاكم الله خير الجزاء يا استاذ الكريم

    ReplyDelete