Saturday, November 9, 2013

இஸ்லாமிய பார்வையில் பரக்கத் part -1



அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1434 –ம் ஆண்டு நிறைவு பெற்று 1435 –ம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ்.இந்த புத்தாண்டை அல்லாஹுத்தஆலா வளமானகவும்,செழிப்பாகவும்,பரக்காகவும் ஆக்கித்தருவானாக!.
நாம் நமது எல்லா காரியங்களிலும் இறைவனின் அருளை எதிர் பார்க்கிறோம்.உண்ணும் உணவில்,தங்கும் வீட்டில் சம்பாதிக்கும் வருமானத்தில்,நாம் நடத்தும் கடைகளில்,நேரங்களில், குழந்தைகளில், நமது ஆயுட்காலத்தில் என்று எல்லா காரியங்களும் பரக்கத்தானதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.ஆசைப்படுகிறோம்.
ஆனால் நாம் எதிர்பார்க்கிற,ஆசைப்படுகிற அந்த பரக்கத் நமது வாழ்க்கையில் இருக்கிறதா ? என்று கேட்டால் இல்லை என்று தான் நமது நாவுகளிலிருந்து பதில் வரும்.கை நிறைய வருமானம் பார்க்கிற ஒருவரை அழைத்து உங்கள் வாழ்க்கை எப்படி போகிறது ? என்று கேட்டால் ஏதோ போகுது என்று சொல்வார்.தொழில் செய்கிற ஒரு தொழிலதிபரை அழைத்து உங்க வாழ்க்கை எப்படி இருக்கிறது ? என்று கேட்டால் சொல்ற மாதிரி ஒன்னும் இல்லை என்று கூறுவார்.இப்படி வளமாக,செழிப்பாக வாழுபவர்களும் சரி,நடுத்தரமான நிலையில் இருப்பவர்களும் சரி தங்கள் வாழ்க்கை குறித்து கேட்கப்பட்டால் இப்படி சலிப்போடும்,இருக்கத்தோடும் பதில் சொல்வதை நாம் பார்க்கலாம்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் யோசித்துப் பார்ப்போம். இரண்டு விஷயங்கள் :
1, பரக்கத் என்பதற்கு இஸ்லாம்  கற்பிக்கும் இலக்கணத்தை நாம் அறியவில்லை.
2, பரக்கத்தை நாம் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை புரிய வில்லை.
பரக்கத்தின் இலக்கணம் குறித்த அறிவும்,பரக்கத்தின் பெறுவதைக் குறித்த அறிவும் நம்மிடம் இல்லாததினால் இறைவனின் {பரக்கத்தை} அருள் வளத்தை அணுபவிக்காத,உணராத துற்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
அதிகமாக இருத்தல்”  இது தான் நாம் பரக்கத் என்ற வார்த்தைக்கு  கற்பிக்கும் அர்த்தம்.
நிறைய சம்பாதிப்பது,நிறைய வியாபாரம் நடப்பது,நிறைய சாப்பிடுவது, நிறைய நேரங்கள் ஓய்வு கிடைப்பது,நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்வது இது தான் {பரக்கத்} அபிவிரித்தி என்று நாம் நினைத்து வருகிறோம்.
ஆனால் உண்மையில இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அதிகமாக  இருத்தல் என்பது பரக்கத்திற்கான அறிகுறி அல்ல.காரணம் இறைவன் தன் திருமறையில் ;
فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்தபோது [அல்லாஹ்வின் கட்டளைகளை விட்டபோது} {முதலில் ரிஜ்கின்} எல்லா வாயில்களையும் நாம் அவர்களுக்கு திறந்து விட்டோம். பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை {நம் வேதனையைக் கொண்டு} அவர்களை திடீரென பிடித்துக் கொண்டோம்.அப்போது அவர்கள் நம்பிக்கயிழந்தவர்களாக ஆகிவிட்டனர். {6 ; 44}
ரிஜ்கின் எல்லா வாசல்களும் திறக்கப்படுவது ; வேதனையின் அடையாளமாகக் கூட அமையலாம் என்பதை இந்த திருவசனம் நமக்கு உணர்த்துகிறது.
عن عقبة بن عامر، عن النبي صلى الله عليه وسلم قال: "إذا رأيت الله يُعْطِي العبدَ من الدنيا على مَعاصيه ما يُحِبُّ، فإنما هو اسْتِدْرَاج". ثم تلا رسول الله صلى الله عليه وسلم { فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ }
ஒருவன் பாவமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உலகில் அவன் விரும்புகிற அனைத்தையும் இறைவன் அவனுக்கு தருவதை நீ கண்டால் அவனை இறைவன் விட்டுப்பிடிக்கிறான் என்று பொருள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறிவிட்டு இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். {தஃப்ஸீர் தப்ரீ,முஸ்னத் அஹ்மது – 4/154}
இந்த ஹதீஸும்,அதிகமாக உலக வளங்கள் நமக்கு வழங்கப்படுவது ; பரக்கத்திற்கான அடையாளம் இல்லை என்று கூறுகிறது.இதற்கு காரூனும் சிறந்த உதாரணமாகும்

எனவே அதிகம் தான் பரக்கத் என்று நாம் கூறுவது அறியாமையின் வெளிப்பாடாகும்.                      தொடரும் இன்ஷா அலலாஹ்.......

No comments:

Post a Comment