Thursday, July 15, 2021

குர்பானி சொல்லும் செய்தி

 


உலகத்தில் நமக்கு எத்தனையோ இலட்சியங்களும் எதிர்பார்ப்புக்களும் இருக்கிறது.இவ்விரண்டும் தான் வெற்றிக்கான படிக்கட்டுகள். வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லாதவன் வெற்றி பெற முடியாது.வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவன் சாதிக்க முடியாது.

எதாவது இலட்சியத் தோடு பயணிக்க வேண்டும் என்பது தான் வாழ்க்கை குறித்து பேசக்கூடிய, சிந்திக்கக் கூடிய அத்தனை பேரும் முன் வைக்கிற கருத்து.ஆனால் ஒரு முஸ்லிமைப் பொறுத்த  வரை அவன் எதை நோக்கி பயணிக்க வேண்டும்,எதை இலட்சியமாக கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் அவன் எதை எதிர்பார்க்க வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸ் வழியாக ஆய்வு செய்து பார்த்தால் ஒரு முஸ்லிம் எதை எதிர் பார்க்கிறானோ இல்லையோ அல்லாஹ்வின் அன்பை எதிர் பார்க்க வேண்டும். எதை அடைந்து கொள்ள முயற்சிக்கிறானோ இல்லையோ அல்லாஹ்வின் அன்பையும் பிரியத்தையும் அடைய முயற்சிக்க வேண்டும் பாடுபட வேண்டும்.

அல்லாஹ்வின் அன்பு கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை அல்லாஹ்வின் அன்பு கிடைத்து விட்டால்.. என்ற என்னுடைய இந்த கட்டுரையில் விருப்பமுள்ளவர்கள்  பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த அல்லாஹ்வின் அன்பு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின் அன்பு கிடைக்க வழிகள் என்ன என்பதை முதலில் நாம் அறிய வேண்டும்.குர்ஆன் ஹதீஸின் வெளிச்சத்தில் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருவதற்கு பல வழிகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான வழி நம்மைப் படைத்த அல்லாஹ்வுக்காக வாழ வேண்டும். அல்லாஹ்வுக்காக எல்லாவற்றையும் இழக்க முன் வர வேண்டும், அல்லாஹ்வுக்காக எத்தனை பெரிய தியாகங்களையும் செய்ய முன் வர வேண்டும்.

இன்றைக்கு உலகில் மனிதன் ஒன்று தனக்காக வாழுகிறான்.அல்லது தன் குடும்பத்திற்காக வாழுகிறான். அல்லது தன் இனத்திற்காக தன் சமூகத்திற்காக வாழுகிறான்.அல்லது எதுவும் இல்லாமல் எந்த லட்சியமும் இல்லாமல் வாழுகிறான்.ஒரு மனிதன் அல்லாஹ்வுக்காக வாழ வேண்டும்.அல்லாஹ் கொடுத்த இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த இந்த ஜீவிதம் அவனுக்காக மாறிகிற போது தான் ஒருவன் இறை அன்பைப் பெற முடியும்.

قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

நிச்சயமாக எனது தொழுகையும் எனது குர்பானியும் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்விற்கே சொந்தமாகும். (அல்குர்ஆன் : 6 ; 162)

நம் வாழ்க்கையின் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தும் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும்.அந்த பரிசுத்தமான வாழ்க்கை தான் நமக்கு படைத்தவனின் அன்பைப் பெற்றுத்தரும்.

 

நாம் இப்போது துல் ஹஜ் மாதத்தின் மகத்தான நாட்களில் அமர்ந்திருக்கிறோம். துல்ஹஜ் என்றாலே நம் நினைவுக்கு வருவது இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜும், உலகம் முழுக்க இருக்கிற முஸ்லிம்கள் மிக ஈடுபாட்டோடு கொடுக்கக்கூடிய குர்பானிக் கடமையும் ஹஜ்ஜின் கிரியைகளையும் குர்பானியையும் நமக்கு அறிமுகப்படுத்திய இப்ராஹீம் நபியும் அவர்களின் குடும்பத்தினரும் தான்.

قد كانت لكم اسوة حسنة في ابراهيم والذين معه

இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களோடு இருந்தவர்களிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் :60 ;4)

கொஞ்சம் கூட அச்சுப் பிசகாமல் அடி பிறழாமல் மக்களால், ஒரு சமூகத்தால் பின்பற்றப்பட வேண்டும்,மார்க்கம் சொல்கின்ற உண்மையான   தலைமைத் துவத்துக்குத் தேவையான அத்தனை பண்புகளும் அமையப்பெற்றிருக்க வேண்டும். அத்தகைய தலைமைக்குத்தான் உஸ்வா என்று சொல்லப்படும்.அந்த உஸ்வா என்று அல்லாஹ் குர்ஆனில் 2 நபர்களைத்தான் குறிப்பிடுகிறான். ஒன்று அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள். மற்றொன்று இப்ராஹீம் அலை அவர்கள்.

நபிகள் பெருமானார் ஸல் அவர்கள் வாழ்வின் மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருப்பதைப் போன்றே நபி இப்ராஹீம் அலை அவர்களும் சிறந்த வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருக்கிறார்கள்.அதனால் தான் நபியின் மீது நாம் சொல்லும் ஸலவாத்தில் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. கியாமத்  வரை தனியாகவோ, கூட்டாகவோ, கடமையான தொழுகையிலோ, நஃபிலான தொழுகையிலோ ஜனாஸா தொழுகையிலோ, அப்படித்தான் ஓதப்படுகிறது, அப்படித்தான் ஓத வேண்டும். இன்னும் சொல்லப் போனால், நாம் நபி (ஸல்) அவர்களின் மீது ஓதுகிற ஸலவாத்திலேயே ஆக உயர்ந்ததும் நபிக்கு விருப்பமானதும் இது தான் என்று ஹதீஸ்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடம் இன்று மகாமு இப்ராஹீம்தொழுமிடமாக..... அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தானை கல்லெடுத்து விரட்டிய இடம், இன்று ரம்யுல் ஹிஜார்எனும் அமலாக.....அன்று அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தமது மனைவி மக்களை விட்டு விட்டு வந்த இடம் பாலைவனம் இன்று உலக மக்கள் அனைவரின் உள்ளங்களும் இலயித்துப் போயிருக்கிற ஹரம் ஷரீஃபாக அவர்களின் அருமை மகனார் ஹள்ரத் இஸ்மாயீல் அவர்களின் பாதம் பட்ட இடம் ஜம் ஜம்நீருற்றாக அன்று அல்லாஹவிற்காக தம் மகனை அர்ப்பணிக்கத் துணிந்த அந்த தீர செயல் இன்று குர்பானிஎனும் இபாதத்தாக..... இப்படி நாம் செய்யும் ஒவ்வொரு அமல்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி அந்த அமல்களின் வழியாக நம்மிடத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இப்ராஹீம் நபி அலை அவர்கள்.

உலக முஸ்லிம்களின் முன்னோடியாக, தியாகத்தின் முன் மாதிரியாக உலக வரலாற்றில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள், மறக்காமல் நினைவு கூறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூறும் விதத்தில் அமைந்த ஓர் உயரிய வணக்கம் தான் உள்ஹிய்யா எனும் குர்பானி.

 عن زيد بن أرقم - رضي الله عنه - قال : قلنا : يا رسول الله ما هذه الأضاحي ؟ قال : " سنة أبيكم إبراهيم " قال : قلنا : فما لنا منها ؟ قال : " بكل شعرة حسنة " . قلنا : يا رسول الله فالصوف ؟ قال : " فكل شعرة من الصوف حسنة

அல்லாஹ்வின் தூதரே! இந்தக்குர்பானி, அது என்னவென்று சொல்லுங்கள் என நபியின் தோழர்கள் கேட்டார்கள், அதற்கு உங்களின் தந்தை இபுராஹிம் (அலை) அவர்களின் சுன்னத் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே!  அதை நிறைவேற்றுவதிலே எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று நபிதோழர்கள் கேட்க, ஒவ்வொரு முடிகளுக்கும் ஒரு நன்மை கிடைக்கும் என்றார்கள். மீண்டும் அடர்த்தியாக முடியிருக்கும் செம்மறி ஆட்டின் முடியிலே என்ன கிடைக்கும் என்று கேட்க, செம்மறி ஆட்டின் ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு என்றார்கள்.(இப்னு மாஜா :  233)

ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عزوجل من إهراق الدم و إنها لتأتي يوم القيامة بقرونها و أشعارها و أظلافها و أن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا.

துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப்பிரியமான அமல் வேறொன்றும் இல்லை. நிச்சயமாக அவை கியாமத் நாளில் தங்களின் கொம்புகளுடனும், உரோமங்களுடனும், குளம்புகளுடனும் வரும்; நிச்சயமாக குர்பானிக் கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் அல்லாஹ்வின் அங்கீகாரத்தை அக்குர்பானி பெற்று விடுகிறது. எனவே அதனை மனமுவந்துச் செய்யுங்கள். (திர்மிதி :180)

என் வாழ்க்கையில் இறை அன்பைப் பெறுவதற்காக எந்த ஒரு தருணத்திலும், எதையும் அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன்.. அது என் உயிராக, உடமையாக, என் உணர்வாக, எதுவாக இருந்தாலும் சரியே! என இறையின் முன்பாக ஒரு மனிதன் தன் அற்பணிக்கும் உணர்வை வெளிப்படுத்துவதற்குப் பெயர் தான் குர்பானி.அதன் மூலம் தான் அல்லாஹ்வின் அன்பும் கிடைக்கும்.

அர்ப்பணித்தல் என்பது பல வகையாக இருக்கிறது. உயிரை அர்ப்பணித்தல், பொருளை அர்ப்பணித்தல், நம் வாழ்வின் பொன்னான நேரங்களையும் காலங்களையும் அர்ப்பணித்தல், நம் அந்தஸ்தை அர்ப்பணித்தல், (அல்லாஹ்விற்காகவும் இந்த மார்க்கத்திற்காகவும் அந்தஸ்தை விட்டுத் தருதல்) குடும்பத்தை அர்ப்பணித்தல். இவை அனைத்திற்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்கள் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள். 

இப்ராஹீம் நபி அலை அவர்கள் தனக்கு வைக்கப்பட்ட அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்று உண்மையான அர்ப்பணிக்கும் உணர்வையும் தியாகத்தின் உணர்வையும் அந்த சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் வெளிப்படுத்தியதைக் கொண்டுதான் இறைவனின் அன்பைப் பெற்றார்கள். இறைவன் அவர்களை தன் உற்ற தோழனாக தேர்வு செய்து கொண்டான்.

ஆடோ மாடோ வாங்கி அதற்கு தீணி போட்டு வளர்த்து அதன் மீது அன்போ பிரியமோ ஏற்பட்டு, அதை நாம் பிரிய முடியாமல் நம்மை விட்டும் அது பிரிய முடியாத நிலை வந்து அதன் பிறகு அதை அல்லாஹ்விற்காக அறுத்துப் பலியிடுவதில் தான் உண்மையான தியாகம் ஒளிந்திருக்கிறது.ஆனால் இன்று ரொம்ப இலகுவாக ஆகி விட்டது. கூட்டுக்குர்பானிக்கு காசைக் கொடுத்து விட்டு பேசாமல் இருந்து விடுகிறோம்.

கூட்டுக் குர்பானி என்பது தனியாக ஒரு நபரால் ஒரு ஆடு கொடுக்க முடியாமல் போகிற போது 7 பேராக சேர்ந்து அந்த சுமையை குறைப்பதற்குப் பெயர் தான் கூட்டுக் குர்பானி. ஆனால் இன்று நாம் நம் வசதிக்காக அந்த சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறோம். சந்தைக்குப் போய் வாக்குவாதம் செய்து விலை பேசி ஒரு ஆட்டை வாங்கி அதற்கு தீணி போட்டு வளர்த்து அதை பராமரித்து அதற்கு நோக்காடு எதுவும் வந்து  விட்டால் அதற்கு மருந்து கொடுத்து பாதுகாத்து அறுப்பதற்கு ஒருவரைப் பிடித்து அறுப்பத்தற்கு ஒரு இடத்தை தேடிக் கண்டு  பிடிச்சி அறுத்து அதை பங்கு வைத்து அதை வினியோகம் செய்து,  அதற்கு பிறகு எல்லா வற்றையும் சுத்தம் செய்து முடிக்க வேண்டும். எதுக்கு இவ்ளோ கஷ்டம்  என்று பேசாம் காசைக் கொடுத்தோமா  கூட்டுக் குர்பானிக்குப் பெயரைக் கொடுத்தோமா என்று இருந்து விடுகிறோம்.

உண்மையில் இது  எப்படி தியாகத்தின் வெளிப்பாடாக ஆகும் என்று சிந்திக்க வேண்டும். கூட்டுக்குர்பானி மார்க்கம் அங்கீகரித்த ஒன்று தான். இல்லையென்று சொல்ல வில்லை. ஆனால் நம் நிய்யத்தும் நம் நிலைபாடும் மாறி விட்டது என்பதைத் தான் சுட்டிக் காட்டுகிறேன்.

அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக உண்மையான நிய்யத்தோடும் தியாக உணர்வோடும் குர்பானிக் கடமையை நிறைவேற்ற அருள் புரிவானாக  நம்  வாழ்வும் மரணமும் அல்லாஹ்விற்காக  ஆகி அதன் மூலம் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவோமாக

 

(இடையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையையும் சேர்த்துப் படித்தால் பயனுள்ளதாக இருக்கும்.)


5 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் உணர்வுள்ள உபதேசம் தங்களுடைய கல்வியை எல்லாம்வல்ல அல்லாஹ் பரிபூரணமாக பொருந்திக்கொள்வானாக

    ReplyDelete
  2. ஸலவாத்திலே ஆக உயர்ந்ததும், நபிக்கு விருப்பமானதும் இதுதான் என்கிறீர்கள் அப்படியானால் ஸலாத்துன்னாரிய்யா ???

    ReplyDelete
  3. குர்பானி மூன்று பங்கு வைக்க வேண்டும் என்று ஹதீஸ்உள்ளதா.

    ReplyDelete
  4. ஹதீஸ்கிதாபு ,நம்பர்

    ReplyDelete