وكذلك جعلنكم امة وسطا
அவ்வோறே நடுநிலைச்
சமூகமாகவும் நாம் உங்களை ஆக்கினோம். (அல்குர்ஆன் : 2 ; 143)
நாம் பின்பற்றி
வாழுகின்ற இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம். வாழ்வின் அனைத்து விஷயங்களிலும்
நடுநிலையைக் கற்றுத் தரும் ஓர் ஒப்பற்ற மார்க்கம்.படைத்தவனுக்காக படைப்பினங்களையோ
படைப்பினங்களுக்காக படைத்தவனையோ மறந்து விடுவதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம்
அவ்விருவரையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிறது.ஆன்மிகத்திற்காக
உலகத்தையோ உலகத்திற்காக ஆன்மிகத்தையோ விட்டு விடுவதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம்
அவ்விரண்டும் வேண்டும் என்று கூறுகிறது.பூர்வீகத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு
சமகாலத்தையோ சமகாலத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு பூர்வீகத்தையோ கண்டு கொள்ளாமல்
இருப்பதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விரண்டையும் கவனத்தில் வைத்துக்
கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது.கசப்பான கடந்த காலத்தை நினைத்து வருங்காலத்
திட்ட மில்லாமல் இருப்பதோ கடந்த காலத்தை மறந்து வருங்காலத் திட்டமிடுவதோ
நடுநிலையல்ல. கடந்த காலத்தை மறக்காமல் வருங்காலத் திட்டமிடல் வேண்டும் என்று
இஸ்லாம் வழிகாட்டுகிறது.