நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தின் 2 வது வார ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். வருடத்தின் எல்லா மாதங்களிலும் எல்லா வாரங்களிலும் நபி ﷺ அவர்களைப் பற்றி பேசப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை அலசப்படுகிறது. அவர்களின் வரலாறுகள் குறித்து ஆராயப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவர்களின் பெயர் உலகம் முழுக்க உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உலக மக்களால் அதிகம் மொழியப்படும் வார்த்தை முஹம்மது ﷺ என்ற வார்த்தை தான். உலகில் அதிகம் பேசப்படும் நபராக, அதிகம் எழுதப்படும் நபராக, அதிகம் விசுவாசம் கொள்ளப்படும் நபராக, அதிகம் நேசிக்கப்படும் நபராக, அதிகம் பின்பற்றப்படும் நபராக இருப்பது பெருமானார் ﷺ அவர்கள் தான். உலகம் முழுக்க குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்படும் பெயர்களில் 5 வது இடத்தில் இருப்பது அஹ்மது என்ற பெயர். நம்பர் 1 ஆக இருப்பது முஹம்மது ﷺ என்ற பெயர். Who is the best human in the world உலகில் தலைசிறந்த மனிதர் யார் என்று google ல் கேட்டால் முஹம்மது ﷺ என்ற பெயரைத்தான் அதுவும் பதிலாகத் தருகிறது.