Sunday, March 2, 2025

தராவீஹ் 2 - அவர்கள் உங்களுக்கு ஆடை

 

هُنَّ لِبَاسٌ لَّكُمْ  وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு அணையாகவும் இருக்கின்றீர்கள். (பகரா 187)

சமீப காலமாக நம் இஸ்லாமியக் குடும்பங்களில் பிரச்சனைகள் சண்டைகள் குடும்பத் தகராறுகள் குறிப்பாக விவாகரத்துக்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்துக்கள் சர்வசாதாராணமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.நம் நாட்டில் வாழக்கூடிய மக்களில் அமைதியான குடும்ப வாழ்க்கைக்கும் அமைதியான குடும்ப சூழலுக்கும் அதிக பிரச்சனைகள் இல்லாத, அதிக குடும்ப தகராறுகள் இல்லாத குடும்ப முறைக்கும்  சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள் தான். நாட்டினுடைய குடும்ப நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் விவாகரத்து வழக்குகளில் மிக மிக குறைவாக பதிவாயிருப்பது முஸ்லிம் சமூகத்தினுடைய வழக்குகள் தான் என்பது கடந்த காலத்தினுடைய வரலாறு. ஆனால் இன்றைக்கு வீட்டுக்கு வீடு விவாகரத்துக்கள் பெருகிக் கொண்டே வருகிறது. மாதத்திற்கு 2 அல்லது 3 குடும்ப பஞ்சாயத்துகள் பள்ளிவாசலுக்கு வருவது வாடிக்கையாகிப் போனது. திருமணமாகி 2 வருடங்களில், சில குடும்பங்களில் 2 மாதங்களில் கணவன் மனைவிக்கான உறவு கசந்து போய் விடுகிறது. இந்த நேரத்தில் நம் குடும்பங்களில் அதிகமாக மணமுறிவுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன அதற்கான தீர்வு என்ன என்று யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம். 

பொதுவாக மனிதர்களுக்கு, தான் விரும்பிய துணையை தேர்வு செய்து முறையாக திருமணம் செய்து சேர்ந்து வாழ்வதற்கு உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதைப் போன்றே ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ முடியாத நிர்பந்த நிலை ஏற்படுகின்ற போது பிரிந்து கொள்வதற்கான உரிமைகள் கணவன் மனைவி இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.அந்த அடிப்படையில் தான் இஸ்லாம் தலாக்கை அறிமுகப்படுத்தியது.பிரிந்து வாழும் உரிமைக்காக வழங்கப்பட்டிருந்தாலும் இஸ்லாம் தலாக்கை கடுமையாக எச்சரிக்கிறது.

- أنَّ رسولَ اللَّهِ ﷺ أُخبِرَ عن رجلٍ طلَّقَ امرأتَه ثلاثَ تطليقاتٍ جميعًا فقامَ مُغضَبًا ثمَّ قالَ أيُلعَبُ بِكتابِ اللَّهِ وأنا بينَ أظهُرِكم

 

ஒரு மனிதர் ஒரே தடவை தன் மனைவியை மூன்று தலாக் விட்டு விட்டார் என்ற செய்தி நபியவர்களுக்கு சொல்லப்பட்ட போது கோபத்தோடு எழுந்த பெருமானார் ஸல் அவர்கள், நான் உங்களுக்கு மத்தியில் இருக்கின்ற போதே அல்லாஹ்வினுடைய வேதத்தோடு விளையாடப்படுகிறதா என்று கோபம் தொணித்த வார்த்தைகளோடு கேட்டார்கள். (ஜாதுல் மஆத்)

கணவன் மனைவிக்கிடையில் ஏதோ காரணத்தினால் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் ஒன்றாக பயணிக்க முடியாத நிர்பந்த நிலை வருகிற போது இருவரும் பிரிந்து வேறொரு வாழ்க்கையை தேர்வு செய்யலாம் என்று ஆசைப்படுவார்கள். பிரிவதற்கு அனுமதியில்லை யென்றால் மனம் நொந்து கொண்டே காலம் முழுக்க வாழ வேண்டிய நிலை ஏற்படும். அதை தவிர்ப்பதற்குத்தான் இக்கட்டான சூழ்நிலையில் தலாக் விடுவதற்கு இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. ஆனால் இன்றைக்கு தகுந்த காரணங்களோ நிர்பந்தங்களோ எதுவுமின்றி சாதாரணமாக தலாக் என்ற முடிவுக்கு போய் விடுகிறார்கள். அதுவும் இன்றைக்கு பெண்களாக விரும்பி கேட்கின்ற குலாக்கள் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. 

 

«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الجَنَّةِ

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது. (திர்மிதி: 1187)

இஸ்லாம் தலாக்கை வன்மையாக கண்டிக்கிறது.அது மிகப்பெரும் குற்றமாக வர்ணிக்கிறது. இருந்தாலும் நம் சமூகத்தில் தலாக் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த காலம் மாறி இப்போது வீடுகள் தோறும் சாதாரணாக நடந்து கொண்டிருக்கிறது. தலாக் என்ற கொடுமையாக சட்டத்தின் மூலம் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது. அவர்களின் உரிமைகளை பறிக்கிறது.அவர்களின் உள்ளங்களை காயப்படுத்துகிறது. அவர்களின் வாழ்க்கையை அழிக்குறது என்று குற்றச்சாட்டு வைக்கப்படும் அளவிற்கு இன்றைக்கு தலாக்குகள் நம்மிடையே பெருகி விட்டது.                                                

இந்த நேரத்தில் மண வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டும்.கணவன் மனைவி உறவு சீராக சரியாக செல்வதற்கான வழிகளை யோசிக்க வேண்டும்.

முதல் விஷயம் ;

ஒரு ஆணும் பெண்ணும் பொருத்தம் பார்த்து மணமுடிக்கப்பட வேண்டும். பொருத்தம் என்றால் ஜாதகப் பொருத்தமல்ல. வயதிலும் அறிவிலும் அந்தஸ்திலும் ஓரளவு இருவருக்கும் பொருத்தம் இருக்க வேண்டும். இவைகளில் இரண்டு பேருக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் இருந்தால் அந்த உறவு நீடிக்காது,நிலைக்காது என்பதை நிதர்சனமாக நாம் பார்த்து வருகிறோம்.

 

تَخَيَّرُوا لِنُطَفِكُمْ، وَانْكِحُوا الأكْفَاءَ، وَأَنْكِحُوا إِلَيْهِمْ

 

நிகாஹ் செய்வதற்கு சரியான பெண்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பொருத்தமானவர்களையே நீங்கள் திருமணம் செய்யுங்கள்.திருமணம் செய்து வைய்யுங்கள். (ஹாகிம் 2687)

பொருத்தமானவர்கள் என்பதற்கு குடும்ப பாரம்பரியத்திலும் அந்தஸ்திலும் வசதிகளிலும் உங்களுக்கு பொருத்தமானவர்களை மணமுடிக்க வேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.ஒன்றுமே வசதியில்லாத அன்றாடம் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத ஒருவனுக்கு மிகப்பெரும் செல்வம் படைத்த ஒரு செல்வச் சீமாட்டியை மனமுடித்து வைத்தால் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போய் விடும்.அறவே அழகில்லாத பங்கரையான தோற்றமுள்ள ஒருவனுக்கு ஊரிலேயே மிகப்பெரும் அழகியாக இருக்கிற ஒரு அழகு சுந்தரியை மனமுடித்து வைத்தால் அவர்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஊரிலேயே ஆக மோசமான குடும்பத்தைச் சார்ந்த ஒருவனுக்கு மிக உயர்ந்த குடும்பத்து பெண்ணை மனமுடித்து வைத்தால் அவர்களுக்குள் ஒத்துப் போகாது. மழைக்குக் கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத கையெழுத்தைக் கூட சரியாக போடத்தெரியாத ஒருவனுக்கு நிறைய படித்து எண்ணற்ற பட்டங்களைப் பெற்ற ஒரு பட்டதாரிப் பெண்ணை மனமுடித்து வைத்தால் அவர்களுக்குள் இணக்கம் ஏற்படாமல் பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே இருவருக்கும் மத்தியில் கொஞ்சமாவது ஒத்துப் போக வேண்டும். மகனுக்கு பெண்ணைத் தேடுகின்ற பெற்றோர்கள், மகளுக்கு மாப்பிள்ளை தேடுகின்ற பெற்றோர்கள் இதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.ஏனென்றால் இன்றைக்கு அதிகமாக மணவாழ்க்கை தலாக்கில் போய் முடிவதற்கு காரணம் பொருத்தமில்லாமல் இணைக்கப்பட்டு திருமணம் முடிக்கப்படுகின்ற காரணத்தினால் தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மணவாழ்வில் அடியெடுத்து வைக்கிற மணமக்கள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் எந்த அடிப்படையில் இணைய வேண்டும் என்பதை அல்லாஹ் இன்று ஓதப்பட்ட வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு அணையாகவும் இருக்கின்றீர்கள். (பகரா 187)

قَدْ ذَكَرْنا في تَشْبِيهِ الزَّوْجَيْنِ بِاللِّباسِ وُجُوهًا:

أحُدُها: أنَّهُ لَمّا كانَ الرَّجُلُ والمَرْأةُ يَعْتَنِقانِ، فَيَضُمُّ كُلُّ واحِدٍ مِنهُما جِسْمَهُ إلى جِسْمِ صاحِبِهِ حَتّى يَصِيرَ كُلُّ واحِدٍ مِنهُما لِصاحِبِهِ كالثَّوْبِ الَّذِي يَلْبَسُهُ، سُمِّيَ كُلُّ واحِدٍ مِنهُما لِباسًا. قالَ الرَّبِيعُ: هُنَّ فِراشٌ لَكم وأنْتُمْ لِحافٌ لَهُنَّ، وقالَ ابْنُ زَيْدٍ: ﴿هُنَّ لِباسٌ لَكم وأنْتُمْ لِباسٌ لَهُنَّ﴾، يُرِيدُ أنَّ كُلَّ واحِدٍ مِنهُما يَسْتُرُ صاحِبَهُ عِنْدَ الجِماعِ عَنْ أبْصارِ النّاسِ.

وثانِيها: إنَّما سُمِّيَ الزَّوْجانِ لِباسًا لِيَسْتُرَ كُلُّ واحِدٍ مِنهُما صاحِبَهُ عَمّا لا يَحِلُّ، كَما جاءَ في الخَبَرِ ”«مَن تَزَوَّجَ فَقَدْ أحْرَزَ ثُلُثَيْ دِينِهِ» “ .

وثالِثُها: أنَّهُ تَعالى جَعَلَها لِباسًا لِلرَّجُلِ، مِن حَيْثُ إنَّهُ يَخُصُّها بِنَفْسِهِ، كَما يَخُصُّ لِباسَهُ بِنَفْسِهِ، ويَراها أهْلًا لِأنْ يُلاقِيَ كُلُّ بَدَنِهِ كُلَّ بَدَنِها كَما يَعْمَلُهُ في اللِّباسِ.

ورابِعُها: يُحْتَمَلُ أنْ يَكُونَ المُرادُ سَتْرُهُ بِها عَنْ جَمِيعِ المَفاسِدِ الَّتِي تَقَعُ في البَيْتِ، لَوْ لَمْ تَكُنِ المَرْأةُ حاضِرَةً، كَما يَسْتَتِرُ الإنْسانُ بِلِباسِهِ عَنِ الحَرِّ والبَرْدِ وكَثِيرٍ مِنَ المَضارِّ.

ஆடையை கொண்டு அல்லாஹ் ஒப்பிட என்ன காரணம்?

இதற்கு விளக்கம் கூறுகின்ற முபஸ்ஸிரீன்கள் சில கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

முதலாவது: ஆடை மனிதனுக்கு அழகை தருகிறது.ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பார்கள்.ஒருமனிதனுக்கு மரியாதையும் கண்ணியமும் மனைவியின் மூலமே கிடைக்கிறது.

 

அவர்கள் நம் வாழ்வின் அழகு மாத்திரமல்ல,அமைதியும் அவளின் மூலமே கிடைக்கிறது.

இரண்டாவது:ஆடை மனிதனின் குறையை மறைக்கிறது.

ஒரு கனவன் மனைவியின் குறையை,மனைவி கனவனின் குறையை மறைத்து வாழ வேண்டும்.அதாவது இவனின் துக்கமும் பலகீனமும் மனைவியுடன் மட்டுமே பரிமாறப்பட வேண்டும்.

மனைவியின் குறையை வெளிப்படுத்துபவர்கள் நல்ல மனிதர்கள் அல்ல.

أحد السلف لما أراد أن يطلق زوجته لأمر ما فقيل له: لم تطلقها؟ قال: أنا لا أهتك ستر زوجتي. ثم طلقها بعد ذلك فقيل له: لم طلقتها؟ قال: ما لي وللكلام عن امرأة صارت أجنبية عنى فمن حسن إسلام المرء تركه ما لا يعنيه

முன்னோர்களில் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய நாடிய போது, ஏன் விவாகரத்து செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர், என் மனைவியின் ரகசியத்தை வெளிப்படுத்த மாட்டேன் என்று கூறி விட்டார். பிறகு மனைவியை பிரிந்து விட்டார். அப்போது உங்கள் மனைவியை ஏன் விவாகரத்து செய்தீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர், இப்போது அவள் என்னை விட்டும் பிரிந்து அன்னிய பெண்ணாக மாறி விட்டாள். எனவே அவளைப்பற்றி பேசுவதற்கு எனக்கு என்ன இருக்கிறது என்று கூறி விட்டு, தேவையில்லாத விஷயங்களை விட்டு விடுவது ஒரு மனிதனுடைய அழகான இஸ்லாமிய பண்புகளில் உள்ளது என்ற நபிமொழியை நினைவுபடுத்தினார்.

மூன்றாவது:ஆடை மனிதன் உடலுடன் அவ்வளவு நெருக்கம் பெற்றுள்ளது.கணவன் மனைவி உடலும் ஆடையும் போல ஒருவரோடு ஒருவர் ஒட்டி வாழ வேண்டும்.

திருக்குர்ஆன் விரிவுரையில் பெண்ணை ஆணின் விலா எழும்பிலிருந்து ஏன் படைத்தான் என்று விவரிக்கும் போது,

அவனின் தலை எழும்பிலிருந்து படைத்தால் அவன் மனைவியை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவான். கால் எழும்பிலிருந்து படைத்திருந்தால் மனைவியை காலுக்கு கீழ் போட்டு மிதித்து விடுவான். ஆனால் அவனின் இடது விலா எழும்போ இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது.எனவே அவளை இதயத்தில் வைக்க வேண்டும் என்றே அல்லாஹ் விலா எழும்பை தேர்வு செய்ததாக குறிப்பிடுவார்கள்.

கணவன் மனைவி அவ்வளவு தூரம் நெருக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் இன்னொருவரை இதயத்தில் சுமக்க வேண்டும்.

நான்காவது; ஒருவன் தன் ஆடையை அவன் மட்டுமே பயன்படுத்துவான். அனைவருக்கும் உடுத்த தர மாட்டான். அதேபோன்று கணவன் மனைவி இருக்க வேண்டும்.

ஐந்தாவது : நாம் அணிகின்ற ஆடை நம்மை குளிரிலிருந்தும் வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் நம்மைக் காக்கின்றது. அதேபோன்று கணவன் மனைவியைப் பாதுகாக்க வேண்டும். மனைவி கணவனைப் பாதுகாக்க வேண்டும்.

ஆறாவது  சரியான நமக்கு பிடித்தமான ஆடை உடுத்துகின்ற போது அது நமக்கு மகிழ்வைத் தரும். மன அமைதியை ஏற்படுத்தும். அதேபோன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் மனைவியை அமைதியைத் தருபவள் என்றே கூறுகிறான். அமைதி என்பதற்கு ஸுகூன் என்ற வார்த்தையைப் படுத்துகிறான். இதே வார்த்தை நான்கு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1, இரவு

هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا‌  اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّسْمَعُوْنَ

நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் (அனைத்தையும் தெளிவாகப்) பார்ப்பதற்காகப் பகலையும் உங்களுக்கு அவனே உருவாக்கினான். (அவனுடைய வசனங்களுக்குச்) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 10:67)

2, நபி ஸல் அவர்களின் துஆ

خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ‌ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ‌ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ

(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தர்மத்தை நீர் எடுத்துக் கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்வீராக. உங்கள் (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான். (அல்குர்ஆன் : 9:103)

3, வீடு

وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ بُيُوْتِكُمْ سَكَنًا

உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான். (அல்குர்ஆன் : 16:80)

4, மனைவி

هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّـفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ اِلَيْهَا‌  فَلَمَّا تَغَشّٰٮهَا حَمَلَتْ حَمْلًا خَفِيْفًا فَمَرَّتْ بِهٖ‌  فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَٮِٕنْ اٰتَيْتَـنَا صَالِحًا لَّـنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ

ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்'' என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். (அல்குர்ஆன் : 7:189)

அல்லாஹ் அந்த உவமையின் மூலம் என்ன கூறுகின்றானோ எந்தெந்த அம்சங்கள் இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றானோ அத்தகைய அம்சங்களைப் பெற்று நல் வாழ்க்கை வாழ அல்லாஹ் அருள் புரிவானாக!


கடந்த வருட குறிப்புகள் 

2022 குர்ஆனிய தொடர்பு

2023 இரண்டும் வேண்டும்

2024 செய்வதை திருந்தச் செய்

வாஹிதிகள் பேரவை துஆ

1 comment: