Monday, March 18, 2024

நைனுவா மக்கள்

 


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ يُوْنُسَ  لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ‏

எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த  ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம். (அல்குர்ஆன் : 10:98)

وَرُوِيَ فِي قِصَّةِ قَوْمِ يُونُسَ عَنْ جَمَاعَةٍ مِنَ الْمُفَسِّرِينَ: أَنَّ قَوْمَ يُونُسَ كَانُوا بِنِينَوَى مِنْ أَرْضِ الْمَوْصِلِ وَكَانُوا يَعْبُدُونَ الْأَصْنَامَ، فَأَرْسَلَ اللَّهُ إِلَيْهِمْ يُونُسَ عَلَيْهِ السَّلَامُ يَدْعُوهُمْ إِلَى الْإِسْلَامِ وَتَرْكِ مَا هُمْ عَلَيْهِ فَأَبَوْا، فَقِيلَ: إِنَّهُ أَقَامَ يَدْعُوهُمْ تِسْعَ سِنِينَ فَيَئِسَ مِنْ إِيمَانِهِمْ، فَقِيلَ لَهُ: أَخْبِرْهُمْ أَنَّ الْعَذَابَ مُصَبِّحُهُمْ إِلَى ثَلَاثٍ فَفَعَلَ، وَقَالُوا: هُوَ رَجُلٌ لَا يَكْذِبُ فَارْقُبُوهُ فَإِنْ أَقَامَ مَعَكُمْ وَبَيْنَ أَظْهُرِكُمْ فَلَا عَلَيْكُمْ، وَإِنِ ارْتَحَلَ عَنْكُمْ فَهُوَ نُزُولُ الْعَذَابِ لَا شَكَّ، فَلَمَّا كَانَ اللَّيْلُ تَزَوَّدَ يُونُسُ وَخَرَجَ عَنْهُمْ فَأَصْبَحُوا فَلَمْ يَجِدُوهُ فَتَابُوا وَدَعَوُا اللَّهَ ولبسوا المسوج وَفَرَّقُوا بَيْنَ الْأُمَّهَاتِ وَالْأَوْلَادِ مِنَ النَّاسِ وَالْبَهَائِمِ، وَرَدُّوا الْمَظَالِمَ فِي تِلْكَ الْحَالَةِ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُمْ غَشِيَتْهُمْ ظُلَّةٌ وَفِيهَا حُمْرَةٌ فَلَمْ تَزَلْ تَدْنُو حَتَّى وَجَدُوا حَرَّهَا بَيْنَ أَكْتَافِهِمْ   وَقَالَ ابْنُ جُبَيْرٍ: غَشِيَهُمُ الْعَذَابُ كَمَا يَغْشَى الثَّوْبُ الْقَبْرَ، فَلَمَّا صَحَّتْ تَوْبَتُهُمْ رَفَعَ اللَّهُ عَنْهُمُ الْعَذَابَ قرطبي

ஈராக் நாட்டின் தஜ்லா நதிக் கரையோரத்தில் நைனுவா என்ற பெயருடன் ஒரு நகரம் இருந்தது. அந்நகரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் விக்கிரகத்தை வணங்குபவர்களாக இருந்தனர். அந்த மக்களிடம் தான் ஹள்ரத் யூனுஸ் நபி அனுப்பப்பட்டார்கள்.நைனுவா மக்கள்  அதிகமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு கடும் தொந்தரவுகளைக் கொடுத்தார்கள். இவ்வளவு எதிர்ப்பிக்கிடையிலும் சுமார் 30 ஆண்டுகள் அவர்கள் உபதேசித்தார்கள். ஆனால் அதில் இருவர் மட்டுமே அவர்களைப் பின்பற்றியதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

இவர்கள் முப்பது வருடம். நூஹ் நபி 950 வருடம். ஹூத் 464 வருடம். இப்படி நபிமார்கள் பல நூறு வருடங்கள் வாழ்ந்து தங்கள் சமூகத்தை அழைத்தும் ஈமான் கொண்டது மிகவும் சொற்பமான மக்கள் தான்.  எவ்வளவு சகிப்புத்தன்மையும் பொறுமையும் அவர்களுக்கு இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே தான் நபிமார்களின் வரலாறுகள் உங்கள் உள்ளத்தை உறுதிபடுத்தும் ஆறுதலை ஏற்படுத்தும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌  وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏

(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன. (அல்குர்ஆன் : 11:120)

ஒரு கட்டத்தில் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நைனுவா மக்களை நோக்கி ‘நீங்கள் இவ்வாறு என் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காது போனால் அல்லாஹ்வின் கோபப்பார்வை உங்கள் மீது இறங்கி விடும். ஜாக்கிரதை’ என்று எச்சரித்தார்கள். அதற்கு அந்த நைனுவா மக்கள், உங்களுடைய அல்லாஹ்வின் கோபப்பார்வை எங்களை என்ன செய்து விடும் என்று கேலி செய்து கைகொட்டி சிரித்தார்கள்.

நெருப்பு மழையை பொழியச் செய்து உங்களையெல்லாம் அழித்து விடுவான் என்றார்கள். அப்படியா! அவ்வளவு சக்தி உண்டா அல்லாஹ்வுக்கு? என்று கேலியும் கிண்டலும் செய்தார்கள்.

அதற்கு யூனூஸ் நபி அவர்கள் ‘ அல்லாஹ்வின் சக்தியைப் பற்றி நீங்கள் இவ்வாறு கிண்டலும் கேலியும் பேசுவது நல்லதல்ல. மீண்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்த விக்கிரக வணக்கத்தை விட்டொழித்து அல்லாஹ்வுக்கு மட்டும் சிரம்பணிந்து வாருங்கள். இல்லா விட்டால் இன்னும் 40 நாளில் நெருப்பு மழை பொழிந்து நீங்கள் அனைவருமே அழிந்து போவீர்கள் ‘ என்று கடும் கோபத்துடன் சொன்னார்கள்.

அதன் பிறகு அவர்கள் அந்நகரை விட்டுப் புறப்பட்டு ஒரு மலை உச்சி மீது அமர்ந்து கொண்டார்கள். அங்கிருந்தவாறே அவர்கள் ‘யாஅல்லாஹ் நான் அந்த நைனுவா மக்களை திருத்த எவ்வளவோ பாடுபட்டேன். அவர்கள் கடைசி வரை திருந்தவே இல்லை. என்னை கொடுமைப்படுத்தினதைப் பற்றி கூட நான் பொருட்டாக நினைக்க வில்லை. ஆனால் உன்னுடைய சக்தியை பற்றி இழிவாக பேசியது பற்றி தான் என்னால் பொறுக்க முடியாமல் போய் விட்டது. அதனால் தான் நாற்பது நாட்களில் நெருப்பு மழை பொழிந்து அவர்கள் எல்லோரும் அழிந்து போவார்கள் என்று சாபமிட்டு விட்டேன்’  என்று சொன்னார்கள். மேலும் யா அல்லாஹ் நான் கூறிய தவணைப்படி நாற்பது நாட்களானதும் அவர்கள் மீது நெருப்பு மழை பொழிந்து நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாயாக! என்ற பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள்.

யூனூஸ் நபி அவர்கள் சொன்ன நாற்பது நாட்களில் 39 நாட்கள் கழிந்தன. அம்மக்களில் ஒரு சிலருக்கு ஒருவித அச்சம் பிடித்துக் கொண்டது. நாற்பதாவது நாள் அரசன் உட்பட மக்கள் அனைவரும் வானத்தைப் பார்த்த வண்ணம் குலை நடுங்கிப் போய் இருந்தனர். பொழுது புலர்ந்து தென்றல் காற்று ஜிலு ஜிலு என்று வீசவாரம்பித்தது. இருந்தாலும் சிறிது நேரத்திற்குள் திடீரென சூழ்நிலை மாறத் துவங்கியது. தென்றல் காற்று ஓயத் தொடங்கி, இலேசான உஷ்ணக் காற்று வீசவாரம்பித்தது. போகப் போக அதன் வேகமும் உஷ்ணமும் கூடிக் கொண்டே சென்றது. அடுத்து யாருமே எதிர்பாரா வண்ணம் சிவப்பு மேகங்கள் தீப்பிழம்புகள் பொழியத் தொடங்கின.

வேதனை வரப்போகிறது என்பதை உணர்ந்த அம்மக்கள் வீட்டை விட்டு வெளியே அல்லாஹ்விடம் தவ்பா தேடினார்கள். கதறி அழுது பிரார்த்தித்தார்கள். அவர்கள் வேதனையிலிருந்து காக்கப்பட்டார்கள். (தஃப்ஸீர் குர்துபீ)

எந்த சமூகம் பாவமன்னிப்பை கையில் எடுக்கின்றதோ அந்த சமூகம் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்பதற்கு யூனுஸ் நபியின் சமூகம் ஒரு சான்று.


وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏

ஆனால்நீங்கள் அவர்களுக்கிடையில் இருக்கும் வரையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். அன்றி,  அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். (அல்குர்ஆன் : 8:33)


قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ لَزِمَ الاِسْتِغْفَارَ ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجاً ، وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجاً ، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ 

யார் பாவமன்னிப்பை அவசியமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹுத்தஆலா எல்லா கவலைகளிலிருந்து மகிழ்ச்சியையும் எல்லா நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழியையும் அவருக்குக் கொடுத்து விடுகிறான். மேலும் அவர் அறியாத புறத்திலிருந்து அவருக்கு ரிஜ்க் அளிக்கிறான். (ஷரஹுஸ் ஸுன்னா 1296)


قال  عمر بن عبد العزيز  : " أيها الناس مَن ألمَّ بذنبٍ فليستغفر الله وليتب ، فإن عاد فليستغفر الله وليتب ، فإن عاد فليستغفر وليتب ، فإنما هي خطايا مطوَّقة في أعناق الرجال ، وإن الهلاك في الإصرار عليها
 

உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் மக்களே உங்களில் ஒருவர் பாவம் செய்து விட்டால் உடனே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கட்டும். அவன் அவரை மன்னித்து விடுவான். மீண்டும் பாவம் செய்தால் மறுபடியும் பாவ மன்னிப்பு கேட்கட்டும். அல்லாஹ் மீண்டும் அவரை மன்னிப்பான். மீண்டும் பாவம் செய்து மன்னிப்புக் கேட்டாலும் அவரை அல்லாஹ் மன்னித்து விடுவான். யார் பாவம் செய்து விட்டு மன்னிப்பு கேட்காமல் அதிலேயே நீடித்திருக்கிறாரோ அவருக்கு அழிவு ஏற்படும் என்றார்கள்.

இந்த நேரத்தில் தவ்பாவிற்கான நிபந்தனைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவ்பா செய்கின்ற போது மிக முக்கியமாக 7 விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

1 பாவத்தை பாவம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக்குள்ள நவீன காலத்தில் நிறைய  பாவங்கள் பாவங்களாகவே தெரிவதில்லை. பொய் சொல்வதும், வட்டி வாங்குவதும், பிறர் பொருளை அபகரிப்பதும், அந்நிய பெண்களோடு சகஜமாக பழகுவதும், மது குடிப்பதும்  சாதாரணமாகி விட்ட ஒரு காலம். பல குற்றங்களை குற்றங்களாகவே ஏற்றுக் கொள்ளாத ஒரு காலம். ஆனால் தவ்பாவில் கவனிக்கப்பட வேண்டிய முதல் விஷயம் பாவத்தை பாவமாக ஏற்றுக் கொள்வது.

 

2 வது விஷயம் நம்பிக்கை. பாவத்தின் அளவைப் பார்க்காமல் அல்லாஹ்வுடைய அருளின் விசாலத்தைப் பார்க்க வேண்டும். எத்தனை பெரிய பாவமாக இருந்தாலும் உரிய முறையில் நம் தவ்பா அமைந்து விட்டால் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கும் என்ற உணர்வு என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும்.

நம் சிந்தனைக்கே எட்டாத அளவு  இப்படியும் பாவம் செய்ய முடியும் என்று நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு பெறும் பெறும் குற்றங்களைச் செய்தவர்களையும் அல்லாஹ் மன்னித்த வரலாறுகள் வரலாற்று நூற்களிலும் ஹதீஸ் நூட்களிலும் பதிவாகியிருக்கிறது.

 

3 வது விஷயம் அந்த தவ்பா அல்லாஹ்வுக்காக இருக்க வேண்டும். பாவத்தை விடுவதிலும் தவ்பா செய்வதிலும் அல்லாஹ்வின் அச்ச உணர்வு இருக்க வேண்டும்.உண்மையிலேயே அல்லாஹ்வுக்கு பயந்து தவ்பா செய்ய வேண்டும்.

4 வது விஷயம் பாவத்திலிருந்து விலகிக் கொள்வது.பாவத்தை நிறுத்தி விட்டு அதற்குப் பிறகு தான் தவ்பா செய்ய வேண்டும். அந்த பாவத்தில் இருந்து கொண்டே தவ்பா செய்யக்கூடாது. அப்படிச் செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

5 வது விஷயம் இனிமேல் அந்த பாவத்தை செய்ய மாட்டேன்.அதன் பக்கம் மீள மாட்டேன் என்ற உறுதி இருக்க வேண்டும்.தவ்பாவுக்கு பிறகு சந்தர்ப்ப வசமாக மறுபடியும் அந்த பாவத்தை செய்வது வேறு விஷயம். ஆனால் தவ்பா செய்யும் போது அந்த உறுதி இருக்க வேண்டும்.

6 வது விஷயம் செய்த பாவத்தை நினைத்து கைசேதப்பட வேண்டும்,மனம் வருந்த வேண்டும், உள்ளத்தால் அழ வேண்டும். தவ்பா செய்கிற போது கண்களில் தண்ணீர் கசிகிறதோ இல்லையோ உள்ளத்தில் தண்ணீர் கசிய வேண்டும். الندم التوبة  மன வருத்தம் தான் தவ்பா என்றார்கள் நபி ஸல் அவர்கள். எனவே உள்ளத்தில் அதைப்பற்றிய வருத்தம் எதுவும் இல்லாமல் வெறும் உதட்டளவில் மட்டும் அஸ்தக்ஃபிருல்லாஹ் என்று சொல்வதில் அர்த்தம் எதுவுமில்லை.

7 தவ்பா செய்ய அனுமதிக்கப்பட்ட தவனைக்குள் தவ்பா செய்ய வேண்டும்.

 

இப்படி தவ்பா செய்வதற்கென்று சில வழிமுறைகளை சில நிபந்தனைகளை சில கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்திருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு நாம் நம் தவ்பாக்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

إنْ قالَ قائِلٌ: إنَّهُ تَعالى حَكى عَنْ فِرْعَوْنَ أنَّهُ تابَ في آخِرِ الأمْرِ، ولَمْ يَقْبَلْ تَوْبَتَهُ، وحَكى عَنْ قَوْمِ يُونُسَ أنَّهم تابُوا وقَبِلَ تَوْبَتَهم، فَما الفَرْقُ ؟

والجَوابُ: أنَّ فِرْعَوْنَ إنَّما تابَ بَعْدَ أنْ شاهَدَ العَذابَ، وأمّا قَوْمُ يُونُسَ فَإنَّهم تابُوا قَبْلَ ذَلِكَ؛ فَإنَّهم لَمّا ظَهَرَتْ لَهم أماراتٌ دَلَّتْ عَلى قُرْبِ العَذابِ تابُوا قَبْلَ أنْ شاهَدُوا فَظَهَرَ الفَرْقُ

கேள்வி ;

ஃபிர்அவ்ன் தன் கடைசி நேரத்தில் ஈமான் கொள்வதாக சொன்னான். தவ்பா செய்தான். அவனுடைய தவ்பா ஏற்கப்பட வில்லை. யூனுஸ் நபியின் சமூகமும் கடைசி நேரத்தில் தவ்பா செய்தது. அவர்களது தவ்பா ஏற்கப்பட்டு விட்டது.இரண்டிற்கும் வித்தியாசம் என்னவென்றால், ஃபிர்அவன் வேதனையை கண்கூடாக பார்த்த பிறகு தவ்பா செய்தான். எனவே ஏற்கப்பட வில்லை.ஆனால் யூனுஸ் நபியின் சமூகம் வேதனையின் அடையாளங்களைப் பார்த்தார்கள். வேதனை வந்து விடும் என அஞ்சினார்கள். உடனே தவ்பா செய்தார்கள். எனவே அவர்கள் வேதனை வருவதற்கு முன்பே தவ்பா செய்து விட்டார்கள். எனவே அவர்களின் தவ்பா ஏற்கப்பட்டது. (தஃப்ஸீர் ராஸீ)

யூனுஸ் நபி அலை அவர்கள் தன் சமூகத்திற்கு அல்லாஹ்வின் வேதனை வரும் என்று எச்சரித்திருந்தார்கள். ஆனால் வர வில்லை. எனவே ஊர் மக்கள் தன்னை பொய்யர் என்று சொல்வார்கள். எனவே ஊருக்குள் போக முடியாது. கால்போன போக்கில் நடக்க வாரம்பித்தார்கள். இவ்வாறு சென்று கொண்டு இருக்கும் போது கடல் தெரிந்தது. அங்கு புறப்படுவதற்கு கப்பல் ஒன்று தயாராக இருப்பதும் தெரிந்தது. அந்த கப்பலில் ஏறி வேறு எந்த நாட்டிற்காகவது சென்று விடலாம் என்று எண்ணிய அவர்கள், மாலுமியிடம் அனுமதி கேட்டு அதில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களின் கள்ளங்கபடமற்ற தோற்றமும், அருள் சுரக்கும் முகமும் அங்குள்ள எல்லோரது உள்ளங்களையும் கவர்ந்து விட்டது. அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதிலும் மிகவும் அக்கறைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் கப்பல் நடுக்கடலில் நின்று விட்டது. கப்பலின் மாலுமி கப்பலை முழுமையாக சோதித்துப் பார்த்தான். அதில் எவ்விதக் கோளாறும் இல்லை என்று தெரிந்தது.

அக்காலத்தில் ஒரு எஜமானுக்கு கட்டுப்படாதவர் தெரியாமல் ஓடி வந்து கப்பலில் ஏறிக் கொண்டாலும் அந்த கப்பல் நடுக்கடலில் நின்று விடும். அதன் அடிப்படையில் மாலுமி ‘உங்களில் யாராவது ஒருவர் உங்கள் எஜமானுக்கு கட்டுப்படாமல் இங்கு வந்து ஏறிக் கொண்டிருக்கிறீர்களா? அவர் இந்த கப்பலை விட்டும் அப்புறப்பட்டு விடுங்கள். அந்த ஒருவருக்காக இக்கப்பலிலுள்ள அனைவருக்கும் ஆபத்து வந்து விடும் என்றான்.

சிறிது நேரம் வரை கப்பலில் ஒரே அமைதியாக இருந்தது. இறுதியில் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்த யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் தான் அந்தக் குற்றவாளி. என் எஜமான் இட்ட கட்டளையை நிறைவேற்றாது அவனது அனுமதியின்றி ஓடோடி வந்து இக்கப்பலில் ஏறிக் கொண்டேன். தயவு செய்து என்னைத் தூக்கி கடலில் எறிந்து விடு’ என்று சொன்னார்கள்.

கப்பலில் உள்ள அனைவரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர்கள் யூனூஸ் நபியின் கூற்றை நம்ப வில்லை. என்னுடைய கூற்றில் நம்பிக்கை ஏற்பட வில்லையா? நான் சொல்வது பொய் என்று நினைக்கிறீர்களா? என் எஜமானின் உத்தரவின்றி நான் ஓடி வந்தது உண்மை தான். என் ஒருவனுக்காக உங்கள் அத்தனை பேரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நான் சொல்வது உண்மையா? பொய்யா? என்பதை சீட்டு எழுதி குலுக்கிப் போட்டு அதன் படி முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னபடி சீட்டை எழுதிப் போட்டு குலுக்கிப் பார்த்து எடுத்ததில் உண்மை என்றே வந்தது. பல தடவை போட்டும் அப்படியே வந்தது. இறுதியாக மாலுமியே போட்டு பார்த்தான். அப்பவும் அப்படியே வந்தது. ஒரு மனிதப் புனிதர் மீது இவ்வாறு பழியை சுமத்தி அவரை கப்பலை விட்டு எப்படி அப்புறப்படுத்துவது என்று தயங்கிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த யூனூஸ் நபி அவர்கள் ‘உங்கள் அனைவரின் தயக்கத்தையும் நான் புரிந்து கொண்டேன். இத்தகைய குற்றத்தை நான் செய்திருக்க மாட்டேன் என்று தானே நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள். ஆனால் அப்படியில்லை. நான் என் எஜமானிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடி வந்தது உண்மை தான். என் ஒருவனுக்காக நீங்கள் ஆபத்தில் சிக்குவதை நான் விரும்ப வில்லை என்று சொல்லியவாறே யாரும் எதிர்பாராத வண்ணம் கப்பலிலிருந்து கடலில் குதித்து விட்டார்கள். மீன் அவர்களை விழுங்கியது.

فأوحى الله إلى ذلك الحوت ألا تأكل له لحما ، ولا تهشم له عظما; فإن يونس ليس لك رزقا ، وإنما بطنك له يكون سجنا

மீனுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். அவர் உனக்கான உணவல்ல. உன் வயிறு அவருக்கான சிறை.எனவே அவரை உண்ணக்கூடாது.

மீன் வயிற்றில் அவர்கள் மூன்று நாட்கள் இருந்தார்கள். ஒரு வாரம் இருந்தார்கள். நாற்பது நாட்கள் இருந்தார்கள் என்று பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது.

فَقَامَ يُصَلِّي فِي بَطْنِ الْحُوتِ، وَكَانَ مِنْ جُمْلَةِ دُعَائِهِ: "يَا رَبِّ، اتخذتُ لَكَ مَسْجِدًا فِي مَوْضِعٍ لَمْ يَبْلُغْهُ أَحَدٌ مِنَ النَّاسِ"

மீனுக்குள் இருந்த நாட்களில் அங்கே அவர்கள் தொழுதார்கள். தொழுது, இறைவா உலகில் யாரும் அடைய முடியாத இடத்திலும் நான் உனக்காக மஸ்ஜிதை அமைத்து விட்டேன் என்று கூறி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். (இப்னு கஸீர்)

أَنَّ يُونُسَ النَّبِيَّ ﷺ(١٢) حِينَ بَدَا لَهُ أَنْ يَدْعُوَ بِهَذِهِ الْكَلَمَّاتِ، وَهُوَ فِي بَطْنِ الْحُوتِ، فَقَالَ: اللَّهُمَّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ. فَأَقْبَلَتِ الدَّعْوَةُ تَحُفُّ بِالْعَرْشِ، قَالَتِ الْمَلَائِكَةُ: يَا رَبِّ، هَذَا صَوْتٌ ضَعِيفٌ مَعْرُوفٌ مِنْ بِلَادٍ بَعِيدَةٍ غَرِيبَةٍ؟ فَقَالَ: أَمَا تَعْرِفُونَ ذَلِكَ؟ قَالُوا: يَا رَبِّ، وَمَنْ هُوَ؟ قَالَ: عَبْدِي يُونُسُ. قَالُوا: عَبْدُكَ يُونُسُ الَّذِي لَمْ يَزَلْ يُرْفَعُ لَهُ عَمَلٌ مُتَقَبَّلٌ، وَدَعْوَةٌ مُسْتَجَابَةٌ؟ قَالُوا: يا رب، أو لا تَرْحَمُ مَا كَانَ يَصْنَعُ فِي الرَّخَاءِ فتنجِّيه فِي الْبَلَاءِ؟ قَالَ: بَلَى. فَأَمَرَ الْحُوتَ فَطَرَحَهُ بالعرَاء".

மீன் வயிற்றில் அவர்கள் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார்கள். அந்த சப்தத்தை வானவர்கள் கேட்டார்கள். புதுமையான ரொம்ப தூரமான ஒரு இடத்திலிருந்து அறிமுகமான ஒருவரின் பலவீனமான குரல் கேட்கிறது என்று மலக்குகள் சொன்னார்கள். அவர் என் அடியாரான யூனுஸ் என்று இறைவன் சொன்னான். அவர் மகிழ்ச்சியாக இருக்கிற போதும் இவ்வாறு ஓதிக் கொண்டும் தொழுது கொண்டும் இருந்தார். இப்போது ஆபத்தில் இருக்கிறார். அவரின் மீது நீ கருணை காட்ட மாட்டாயா என்று கேட்டார்கள். அல்லாஹ் மீனுக்கு உத்தரவிட்டான். அது அவர்களை தன் வயிற்றிலிருந்து வெளியாக்கியது. அவர் காப்பாற்றப்பட்டார்கள். (இப்னு கஸீர்)

யூனுஸ் நபியின் வரலாறு கூறும் பாடங்கள்.

1.    அல்லாஹ்வின் பிரியத்தைப் பெற்ற மனிதர்களுக்கு பெரும் சோதனைகள் வரும்.

2. சோதனையில் பொறுமை கொண்டால் அல்லாஹ் அதை இலேசாக்கி விடுவான்.

3.       தஸ்பீஹும் தொழுகையும் துஆவும் சோதனைகளை நீக்கும்

4.      காரியத்திற்காக மட்டும் இல்லாமல் எப்போதும் அல்லாஹ்வை தொழுது கொண்டும் துஆ செய்து கொண்டும் இருந்தால் ஆபத்தின் போது அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்

5. அவர்களின் விடா முயற்சி. மனம் தளராத அவர்களின் மார்க்கத்தின் உழைப்பு

6.       தவ்பா வேதனைகளைத் தடுக்கும்.

2022 அமல்களை இறைவனை மட்டும் பார்க்கிறான்

2023 உண்மையே அமைதிக்கான வழி

வாஹிதிகள் பேரவை வலிமார்கள்

2 comments:

  1. அல்லாஹு அக்பர் நீண்ட நாளைக்கு பிறகு தங்கள் சகாப்தம் ரமலானில் தொடங்கி இருக்கிறது தொடரட்டும் தங்கள் புனிதப் பணி.இறைவன் கிருபை செய்வானாக

    ReplyDelete