Sunday, March 24, 2024

தீர்ப்பு


இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۙ‏

இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். (அல்குர்ஆன் : 21:78)

أن رجلين دخلا على داود، أحدهما صاحب

 حرث والآخر صاحب غنم، فقال صاحب الحرث: إن هذا أرسل غنمه في حرثي، فلم يُبق من حرثي شيئا، فقال له داود: اذهب فإن الغنم كلها لك، فقضى بذلك داود، ومرّ صاحب الغنم بسليمان، فأخبره بالذي قضى به داود، فدخل سليمان على داود فقالا يا نبيّ الله إن القضاء سوى الذي قضيت، فقال: كيف؟ قال سليمان: إن الحرث لا يخفى على صاحبه ما يخرج منه في كل عام، فله من صاحب الغنم أن يبيع من أولادها وأصوافها وأشعارها حتى يستوفي ثمن الحرث، فإن الغنم لها نسل في كلّ عام، فقال داود: قد أصبت، القضاء كما قضيت، ففهَّمها الله سليمان

தாவூது நபியிடம் இருவர் வந்தனர். ஒருவரின் நிலத்தில் மற்றொருவரின் ஆடுகள் இரவில் மேய்ந்து பயிர்களை அழித்து விட்டதாக வழக்குரைத் தனர். தாவூது நபி அலை அவர்கள் வழக்கை விசாரித்து, அழிந்த பயிர்களின் இழப்பும் பயிர்களை அழித்த ஆடுகளின் விலையும் சமமாக இருந்ததால் நிலத்திற்குரியவர் இழப்பிற்கு ஈடாக ஆடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தீர்ப்பு அளித்தார்கள்.

தீர்ப்பைப் பெற்றுத் திரும்பிய இருவரும் வழியில் தாவூது நபியின் மகன் சுலைமான் நபியை சந்தித்தனர். அவர்களின் வழக்கையும் தாவூது நபி அலை அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் சுலைமான் நபி அலை அவர்களிடம் கூறினர். அப்பொழுது சுலைமான் நபி அலை அவர்களுக்கு சுமார் 13 வயது. தந்தை தாவூது நபி அலை அவர்களின் தீர்ப்பினும் தெளிவான எளிய தீர்ப்பு இருப்பதாக சுலைமான் நபி அலை அவர்கள் அறிவித்தார்கள். இச்செய்தியை அறிந்த தாவூது நபி அலை அவர்கள் தன் மகனை அழைத்து தக்க தீர்ப்பு என்ன வென்று வினவினார்கள்

"ஆடுகள் பயிரை அழித்து விட்டதாக வழக்கு. ஆடுகளுக்கு சொந்தக்காரன் அந்நிலத்தில் விவசாயம் செய்து கதிர் அறுத்து விளைச்சலை நிலத்துக்கு உரியவரிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு விளைச்சலை ஆடுகளுக்கு உரியவன் கொடுக்கும் வரை ஆடுகளை விவசாயி வளர்த்து ஆடுகளின் பாலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆடுகள் ஈனும் குட்டிகளையும் திரும்ப ஒப்படைக்கும் வரையில் நிலத்துக்குரியவன் வளர்த்து பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்கள். இது  தான் சரியான தீர்ப்பு என்று தாவூது நபி அலை அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் தப்ரீ)

இந்தத் தீர்ப்பால் வழக்குரைத்த இருவருக்கும் பாதிப்பில்லாமல் இழப்பீடு செய்யப்பட்டது. அழிந்த பயிரின் விளைச்சலை நிலத்துக்குச் சொந்தக்காரன் பெறுகிறான். ஆட்டுக்குச் சொந்தக்காரனும் ஆடுகளை இழந்து விடாமல் மீண்டும் பெறுகிறான்.

எனவே நீதிபதிகள் ஒரு பக்க சார்பாக தீர்ப்பை வழங்கி அதன் மூலம் இன்னொரு பக்கம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதை இஸ்லாம் விரும்ப வில்லை. எனவே தீர்ப்புகள் ஒரு நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டாலும், நியாயத்தையும் தாண்டி தொலை நோக்கு சிந்தனையும் இருக்க வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர்கள் வழங்கிய இந்த தீர்ப்பின் காரணமாக கொஞ்ச  காலத்தில் இருவருக்குமே எந்த வித பாதிப்பும் இல்லாமல் இழந்ததைப் பெற்றுக் கொண்டார்கள்.

இஸ்லாமிய தீர்ப்பு இப்படித்தான் அமைந்திருந்தது.அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் தொலைநோக்குச் சிந்தனையோடும் தீர்ப்புக்களை வழங்கினார்கள் இஸ்லாமிய நீதிபதிகள். அறிவின் வாசல் என்று அண்ணல் நபி ஸல் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட ஹள்ரத் அலி ரலி அவர்கள் இது மாதிரி எண்ணற்ற வழக்குகளை சந்தித்திருக்கிறார்கள். நபியின் சொல்லுக்கிணங்க அவர்களின் அத்தனை தீர்ப்புக்களும் அறிவுப்பூர்வமாகத்தான் அமைந்திருந்தது.

நீதிபதிகள் இப்படித்தான் இருக்க வேண்டும்.சட்டங்களில் மிகச்சிறந்த விற்பன்னர்களாக இருப்பதோடு சமயோஜித சிந்தனையோடு தீர்ப்பு வழங்குவதற்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.ஆனால் இன்றைக்குள்ள நீதிபதிகள் சட்டத்தில் கூட அறைகுறையாக இருப்பது வேதனை தரும் செய்தி.

மனித சமுதாயத்துக்கிடையில் எழும் பிரச்சனைகள், தகராறுகளை விசாரித்து அவர்களுக்கு நீதி வழங்க நீதிபதிகளை ஏற்படுத்தும் முறை ஆதிகாலம் தொடுத்த ஒன்று தான்.ஆனால் நீதிபதிகள் தனியார் குருக்கீட்டாலோ, பண ஆசையினாலோ வேலியே  பயிரை மேய நடந்து கொள்வது சமீபகால சாபக் கேடாகும்.

மனசாட்சிக்குப் பயந்து, அநீதி இழைக்கப்பட்டுவோரின் அக்கினிப் பார்வைக்கு அஞ்சி, சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எரிந்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் அவருக்கும் ஒரே நீதி தான் என்ற வகையில் நீதிப்பரிபாலனம் செய்து கொண்டிருந்த நீதிக்காலம் மலையேறிப் போய் விட்டது. நீதி குழிதோண்டிப் புதைக்கப்படு விட்டது. அநீதி பெருகப் பெருகப் நாட்டில் குழப்பங்களும், கலகங்களும் மின்னல் வேகத்தில் வெடித்துச் சிதறிவருகின்றன . இஸ்லாம் சொல்லித்தரும் முறையில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தால், பழைய பொற்காலத்தைக் கண்முன் காணலாம்.

 

நீதிபதிகள் குறித்து நபி அவர்கள் சொன்னார்கள் :

 

الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ

நீதிபதிகள் மூன்று வகையினர். அதில் ஒரு வகையினர் சொர்க்கம் செல்வார்கள். இன்னும் இரு வகையினர் நரகம் செல்வார்கள். உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சொர்க்கம் செல்வார். உண்மையை அறிந்து அநியாயமாக தீர்ப்பு வழங்குபவரும் அறியாமையால் மக்களுக்கு தவறாக தீர்ப்பு வழங்குபவரும் நரகம் செல்வார்கள். (அபூதாவூது : 3573)

இந்த ஹதீஸின் படி முதல் பிரிவில் இன்றைக்குள்ள நீதிபதிகளைப் பார்ப்பது அரிதான விஷயம்.ஒன்று சத்தியத்தை அறிந்து கொண்டு அதற்கு மாற்றமாக தீர்ப்பு வழங்குவார்கள், அல்லது எதுவும் தெரியாமல் தீர்ப்பு வழங்குவார்கள்.இது தான் இன்றைய நீதிபதிகளின் நிலை.

தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருப்பவர் எல்லா சட்ட நுனுக்கங்களையும் அறிந்தவராக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் அவர் குர்ஆனுடைய ஞானம் உள்ளவராக இருக்க வேண்டும். குர்ஆனுடைய ஞானம் இல்லாத ஒருவர் நீதிபதியாக ஆக முடியாது.

القاضي الجاهل مهلك لنفسه ولغيره: قال علي بن أبي طالب رضي الله عنه لرجل كان يقضي بين الناس: "هل تعرف الناسخ والمنسوخ؟ قال: لا، قال: هل أشرفت على مراد الله في أمثال القرآن؟ قال: لا، قال: إذن هلكتَ وأهلكتْ". (الناسخ والمنسوخ)

மக்களுக்கு தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்த ஒருவரிடம் அலி ரலி அவர்கள் உனக்கு குர்ஆன் வசனங்களில் ناسخ எது منسوخ எதுவென்று தெரியுமா என்று கேட்டார்கள். அவர் தெரியாது என்றார். குர்ஆனில் உதாரணம் கூறும் வசனங்களின் நோக்கங்களை நீ அறிவாயா என்று கேட்டார்கள். அவர் தெரியாது என்றார். அப்படியானால் தீர்ப்பு கூறுவதால் நீயும் அழிந்து மக்களையும் அழிவில் கொண்டு போய் சேர்த்து விடுவாய் என்றார்கள். (அன்நாஸிஹ் வல் மன்ஸூஹ்)

 

நீதிபதி பொறுப்பு என்பது சாதாரணமான மற்ற பொறுப்புக்களைப் போல் அல்ல. ஈருலகத்திலும் பெரும் ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். அதனால் தான் நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள் ;

والقضاء مسؤولية عظيمة حيث قال النبي صلى الله عليه وسلم "من ولي القضاء فقد ذبح بغير سكين" رواة الترمذي

தீர்ப்பு வழங்கும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அவர் கத்தியின்றி அறுக்கப்பட்டு விட்டார். (அபூதாவூது : 3571)

கத்தியைக் கொண்டு அறுப்பதால் வேதனையின்றி இலகுவாக மரணம் ஏற்படும்.ஆனால் கத்தியின்றி அறுக்கப்படுவது எவ்வளவு வேதனையைத் தருமோ அதை விட மிகவும் ஆபத்தானது தீர்ப்பளிக்கும் பொறுப்பு என்பது. ஏனென்றால் நீதமாக தீர்ப்பளித்தால் யாருக்கு எதிராக அத்தீர்ப்பு அமைகிறதோ அவரின் மூலம் உலகில் அவருக்கு ஆபத்து ஏற்படும். அநீதமாக தீர்ப்பளித்தால் மறுமையில் வேதனை உண்டு. எனவே இவ்வாறு நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

 

அதனால் தான் அந்தப் பொறுப்புக்கு வருவதற்கு நம் முன்னோர்கள் தயக்கம் காட்டினார்கள். எப்படியாவது அதிலிருந்து தப்பிக்க முயற்சித்தார்கள்.

فهذا بكر بن عبد الله المزني -رحمه الله- لما ذهبوا به إلى القضاء قال: "إني والله لا علم لي بالقضاء، فإن كنت صادقاً فما ينبغي لكم أن تستعملوني، وإن كنت كاذباً فلا تولوا كاذبًا"  الطبقات الكبرى (7/ 157)،

தாபிஃ யான பிக்ர் பின் அப்தில்லாஹ் அல்முஜ்னீ ரஹ் அவர்களிடம் தீர்ப்புக்காக மக்கள் சென்ற போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக அதைப்பற்றிய அறிவு எனக்கில்லை என்று கூறினார்கள். அவர்கள் விடுவதாக இல்லை. நீங்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று சொன்ன போது,  எனக்கு அந்த அறிவு இல்லை. நான் உண்மை சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்தால்  எனக்கு அந்த பொறுப்பைத் தராதீர்கள். நான் சொல்வது பொய் என்று நீங்கள் கருதினால் பொய் சொல்பவருக்கு அந்த தகுதி இல்லை என்று கூறினார்கள். (அத்தபகாதுல் குப்ரா)

2022 துஆ ஏற்கப்பட வேண்டுமா

2023 மதில் மேல் பூனை

வாஹிதிகள் பேரவை இறைச்சி

No comments:

Post a Comment