Thursday, May 25, 2023

கண்ணியமான மாதங்கள்

 

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது. (அல்குர்ஆன் : 22:32)

அல்லாஹ் கண்ணியப்படுத்திய பொருளை ஒருவர் கண்ணியப்படுத்த வேண்டும். அல்லாஹ் கண்ணியப்படுத்திய மனிதர்களை ஒருவர் கண்ணியப்படுத்த வேண்டும். இது அவர் இறையச்சம் உள்ளவர் என்பதற்கான அடையாளம். அல்லாஹ் மனிதர்களில் சிலரை கண்ணியமானவர்களாக ஆக்கியிருக்கிறான். அவர்களை நாம் கண்ணியப்படுத்த வேண்டும். பொருள்களில் சிலதை கண்ணியமானதாக ஆக்கியிருக்கிறான். அவைகளை நாமும் கண்ணியமாகவே பார்க்க வேண்டும். பூமியில் சில இடங்களை கண்ணியமான இடங்களாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். அவைகளின் கண்ணியத்தை விளங்கி நாம் செயல் பட வேண்டும். அதேபோன்று சில மாதங்களை கண்ணியமிக்க மாதங்களாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் ஆக்கியிருக்கிறான். அவைகளை நாமும் கண்ணியப்படுத்த வேண்டும். இஸ்லாமிய மாதங்களில் 11 ம் மாதமான துல்கஅதாவில் நாம் அமர்ந்திருக்கிறோம். அல்லாஹ்வினால் கண்ணியமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதாவும் ஒன்று.

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌  ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌  وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌   وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 9:36)

وروى عن قتادة أيضًا قال: «إن الله اصطفى صَفَايا من خلقه؛ اصطفى من الملائكة رسُلًا، ومن الناس رسلًا، واصطفى من الكلام ذكرَه، واصطفى من الأرض المساجد، واصطفى من الشهوررمضانَ والأشهر الحرم، واصطفى من الأيام يوم الجمعة، واصطفى من الليالي ليلةَ القدر،فعظِّموا ما عظم الله، فإنما تعظم الأمور بما عظَّمها الله عند أهل الفهم وأهل العقل». جامع البيان عن تأويل آي القرآن (6/3647

நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்புக்களில் சில தூய்மையான மனிதர்களை தேர்வு செய்து கொண்டான். வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை அல்லாஹ் தேர்வு செய்து கொண்டான். பேச்சில் தன்னுடைய பேச்சையும் பூமியில் மஸ்ஜிதுகளையும் மாதங்களில் ரமலான் மற்றும் கண்ணியம் பொருந்திய நான்கு மாதங்களையும் நாட்களில் ஜும்மாவையும் இரவுகளில் லைலத்துல் கதர் இரவையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அல்லாஹ் கண்ணியப்படுத்தியதை நீங்களும் கண்ணியப்படுத்துங்கள். அறிவுடையவர்களும் விளக்கமுடையவர் களும் மட்டுமே அல்லாஹ் கண்ணியப்படுத்தியதை கண்ணியப் படுத்துவார்கள் என கதாதா ரலி அவர்கள் கூறுகிறார்கள். (ஜாமிவுல் பயான்)

இந்த நான்கு மாதங்களும் இஸ்லாம் வருவதற்கு முன்பு வாழ்ந்து கொண்டிருந்த அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் காலத்து மக்களிடத்திலும் கன்னிமானதாகவே இருந்தது. அந்த மாதங்களில் அம்மக்கள் யாரிடத்திலும் சண்டையிட மாட்டார்கள். யாருக்கும் அநீதம் செய்ய மாட்டார்கள். யாரையும் கொலை செய்ய மாட்டார்கள்.யாரையும் அடித்து துன்புறுத்த மாட்டார்கள். தன் தந்தையையோ மகனையோ கொலை செய்தவரைப் பார்த்தால் கூட அவரைப் பழி வாங்க மாட்டார்கள்.

أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ يُقَالُ لَهُ: "عَوْفُ بْنُ مَالِكٍ الْأَشْجَعِيُّ" كَانَ لَهُ ابْنٌ، وَأَنَّ الْمُشْرِكِينَ أَسَرُوهُ، فَكَانَ فِيهِمْ، وَكَانَ أَبُوهُ يَأْتِي رَسُولَ اللَّهِ فَيَشْكُو إِلَيْهِ مَكَانَ ابْنِهِ وَحَالِهِ الَّتِي هُوَ بِهَا وَحَاجَتَهُ، فَكَانَ رَسُولُ اللَّهِ يَأْمُرُهُ بِالصَّبْرِ، وَيَقُولُ لَهُ: "إِنَّ اللَّهَ سَيَجْعَلُ لَكَ فَرَجًا"(١٣) فَلَمْ يَلْبَثْ بَعْدَ ذَلِكَ إِلَّا يَسِيرًا أَنِ انْفَلَتَ ابْنُهُ مِنْ أَيْدِي الْعَدُوِّ فَمَرَّ بِغَنَمٍ مِنْ أَغْنَامِ الْعَدُوِّ، فَاسْتَاقَهَا فَجَاءَ بِهَا إِلَى أَبِيهِ، وَجَاءَ مَعَهُ بِغِنًى(١٤) قَدْ أَصَابَهُ مِنَ الْغَنَمِ، فَنَزَلَتْ فِيهِ هذه الآية: ﴿وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ﴾ ابن كثير

அவ்ஃப் பின் மாலிக் ரலி அவர்களுடைய மகனை முஷ்ரிக்குகள் கைதியாக பிடித்துச் சென்று விட்டார்கள். அவர் நபி அவர்களிடத்தில் வந்து விஷயத்தைக் கூறினார். பெருமானார் அவர்கள் பொறுமையாக இரு. அல்லாஹ் உன்னிடத்தில் உன் மகனை திருப்பிக் கொண்டு வந்து உனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவான் என்று ஆறுதல் கூறினார்கள். சில தினங்களிலேயே அவருடைய மகன் எதிரிகளிடமிருந்து தப்பித்து மதீனா வந்து விட்டார். வரும் பொழுது அவர் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளும் அவரோடு சேர்ந்து வந்து விட்டன. அவர் விஷயமாகத்தான்

وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا

எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு  ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான். (அல்குர்ஆன் : 65:2) என்ற வசனம் இறங்கியது. (இப்னு கஸீர்)

அவருடைய மகனை முஷ்ரிக்குகள் பிடித்துச் சென்ற போது அது கண்ணியமான மாதங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அவரை எதிரிகள் எதுவும் செய்ய வில்லை. அந்த மாதங்கள் கழியும் வரை தங்களது ஆடுகளைக் கொடுத்து மேய்க்கும் படி சொல்லி விட்டார்கள். தப்பிப்பதற்கான அவகாசத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விடவே அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார். இரண்டு மூன்று மாதங்களாக அவரிடத்தில் பழகி விட்ட அந்த ஆடுகள் அவர் ஓடி வருவதைப் பார்த்து அவரோடு அவைகளும் மதீனா வந்து விட்டன.

கண்ணியமான மாதங்களில் துல்ஹஜ் மாதம் என்பது ஹஜ் செய்யக்கூடிய மாதம். ஹஜ்ஜின் கடமைகளை மக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நிறைவேற்ற வேண்டும். அதற்கு முந்தைய மாதமான துல்கஅதா மாதத்தில் தான் மக்கள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஹஜ்ஜுக்காக மக்காவை நோக்கி பயணப்படுவார்கள். எனவே ஹஜ்ஜுக்காக செல்லக்கூடிய அந்த ஹாஜிகளின் பயணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதில் எந்த இடையூறுகளும் ஏற்படக்கூடாது. முஹர்ரம் மாதத்தில் தான் அனைத்து ஹாஜிகளும் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருப்பார்கள். எனவே அந்தப் பயணமும் அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். இந்த காரணங்களுக்காக அந்த மூன்று மாதங்களையும் கண்ணியமான மாதங்களாக இருந்தன. வருடத்தின் இடையில் கஃபத்துல்லாவை ஜியாரத் செய்வதற்கும் உம்ரா செய்வதற்கும் மக்கள் தூரத்திலிருந்து வருவதை கவனித்து ரஜப் மாதத்தையும் அவர்கள் கண்ணியப்படுத்தியிருந்தார்கள். அந்த வகையில் தான் நான்கு மாதங்கள் இஸ்லாம் வருவதற்கு முன்பே அந்த மக்களிடத்தில் கண்ணியமானதாக பார்க்கப்பட்டது.

فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُم

இந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதம் இழைத்துக் கொள்ள வேண்டாம்.

عن قتادة: أما قوله: ﴿فلا تظلموا فيهن أنفسكم﴾ ، فإن الظلم في الأشهر الحرم أعظم خطيئةً ووِزْرًا، من الظلم فيما سواها، وإن كان الظلم على كل حال عظيمًا، ولكن الله يعظِّم من أمره ما شاء.

அநீதம் என்பது எல்லாக் காலத்திலும் பெரும் குற்றமாக இருந்தாலும் மற்ற காலங்களில் செய்கின்ற அநீதத்தை விட கண்ணியமிக்க மாதங்களில் செய்கின்ற அநீதம் மிகப்பெரிய பாவச் சுமையை ஏற்படுத்தும் என கதாதா ரலி அவர்கள் கூறுகிறார்கள். (தஃப்ஸீர் தப்ரி)

 

எங்கு செய்தாலும் குற்றம் குற்றம் தான். ஆனால் கண்ணியம் மிகுந்த இடங்களில் வைத்து ஒரு குற்றம் செய்தால் அது மாபெரும் குற்றமாக கருதப்படும்.

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَـرَامِ الَّذِىْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَآءَ اۨلْعَاكِفُ فِيْهِ وَالْبَادِ‌  وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ‏

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து அல்லாஹ்வின் பாதை(யில் செல்வதை)யும் தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்களாயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதுக்குச் செல்வதையும் தடை செய்து கொண்டு, அதில் மார்க்கத்திற்கு விரோதமான அநியாயம் செய்ய விரும்பினால், அவர்கள் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம். (அல்குர்ஆன் : 22:25)

அதேபோன்று எப்போது தவறு செய்தாலும் பாவம் தான். ஆனால் புனிதமான மாதங்களில் புனிதமான நாட்களில் செய்கின்ற பாவம் பெரும் பாவமாக கருதப்படும்.

குற்றத்தைப் போன்று நன்மைகளுக்கும் இந்த மாதத்தில் இரட்டிப்பான கூலிகள் உண்டு.

قال الإمام القرطبي رحمه الله : ( كما يضاعف الثواب بالعمل الصالح، فإن من أطاع الله في الشهر الحرام في البلد الحرام ليس ثوابه ثواب من أطاعه في الشهر الحلال في البلد الحرام

கண்ணியமான ஊரில் கண்ணியமான மாதத்தில் ஒருவர் நன்மையான காரியத்தை செய்தால் அது மற்ற ஊர்களில் மற்ற காலங்களில் செய்கின்ற நன்மையை போன்று அல்ல.

قال النووي رحمه الله في المجموع: (قال أصحابنا: ومن الصوم المستحب صوم الأشهر الحرم، وهي: ذو القعدة وذو الحجة والمحرم ورجب، وأفضلها المحرم

அல்லாமா நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;  கண்ணியமான இந்த நான்கு மாதங்களில் நோன்பு நோற்பது முஸ்தஹப்பாகும்.


எனவே தான் நபி  அவர்கள் சங்கையான மாதங்களில் நோன்பு வைப்பதை ஆர்வப்படுத்தினார்கள்.

أتى رَسُولَ الله صلى الله عليه وسلم، ثُمّ انْطَلَقَ فَأتَاهُ بَعْدَ سَنَةٍ وَقَدْ تَغَيّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ، فقال: يَارَسُولَ الله أمَا تَعْرِفُنِي؟ قال: وَمَنْ أنْتَ؟ قال: أنَا الْبَاهِليّ الّذي جِئْتُكَ عَامَ الأوّلِ، قال: فَمَا غَيّرَكَ وَقَدُ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ؟ قُلْتُ مَا أكَلْتُ طَعَاماً مُنْذُ فَارَقْتُكَ إلاّ بِلَيْلٍ، فقال رَسُولُ الله صلى الله عليه وسلم لِمَ عَذّبْتَ نَفْسَكَ، ثُمّ قال: صُمْ شَهْرَ الصّبْرِ وَيَوْماً مِنْ كُلّ شَهْرٍ، قال: زِدْني فإنّ بِي قُوّةً، قال: صُمْ يَوْمَيْنِ، قال: زِدْنِي، قال: صُمْ ثَلاَثَةَ أيّامٍ، قال: زِدْنِي، قال: صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ، صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ، صُمْ مِنَ الْحُرْمِ وَاتْرُكْ، وَقال بِأصَابِعِهِ الثّلاَثَةِ فَضَمّهَا ثُمّ أرْسَلَهَا".

ஒரு நபித்தோழர் நபியை சந்தித்து விட்டு சென்றார். அதற்குப் பிறகு அவருடைய தோற்றமும் அவருடைய உடல் அமைப்பும் மாற்றமடைந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நபியை சந்திக்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார். நீ யார் என்று நபியவர்கள் கேட்ட பொழுது ஒரு வருடத்திற்கு முன்பு உங்களிடத்தில் வந்த மனிதர் தான் என்று சொன்னார். முன்பு நீ வரும் பொழுது அழகான தோற்றத்தோடு இருந்தாயே. ஆனால் இப்பொழுது உன்னை இப்படி மாற்றியது எது? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர், உங்களை சந்தித்து விட்டுச் சென்றதிலிருந்து நான் இரவில் மட்டும் தான் உணவை உட்கொள்கிறேன். அதாவது தொடர்ந்து நோன்பு வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். அதைக் கேட்ட நபியவர்கள் உனக்கு நீயே வேதனை கொடுத்துக் கொண்டாயே என்று சொன்னார்கள். பின்பு, வேண்டுமென்றால் பொறுமையின் மாதமான ரமலான் மாதத்தில் நோன்பு வைத்துக் கொள். மாதம் ஒரு நாள் நோன்பு வைத்துக் கொள் என்று சொன்னார்கள். எனக்கு ஆற்றல் இருக்கிறது. இதை விட அதிகமாக என்னால் நோன்பு வைக்க முடியும் என்று அவர் சொன்னார். அப்படி என்றால் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் நோன்பு வைத்துக் கொள் என்று சொன்னார்கள். இன்னும் அதிகமாக என்னால் முடியும் என்று அவர் சொன்னார். அப்படியானால் ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு வைத்துக் கொள் என்று சொன்னார்கள். இதை விட அதிகப்படுத்துங்கள் என்று அவர் சொன்ன பொழுது, நபி  அவர்கள் தன்னுடைய மூன்று விரல்களை சேர்த்து பின்பு பிரித்துக் காட்டி சங்கையான மாதங்களில் நோன்பு வை. பின்பு விட்டு விடு. சங்கையான மாதங்களில் நோன்பு வை. பின்பு விட்டு விடு. சங்கையான மாதங்களில் நோன்பு வை. பின்பு விட்டு விடு என்று மூன்று முறை கூறினார்கள். (அபூதாவூது 2428) 

وقال الحافظ ابن رجب في لطائفه – رحمه الله : (وقد كان بعض السلف يصوم الأشهر الحرم كلّها، منهم ابن عمر، والحسن البصري، وأبو إسحاق السبيعي، وقال الثوري: الأشهر الحرم أحبُّ إليَّ أن أصوم فيها

இப்னு உமர் ரலி ஹஸனுல் பஸரீ ரஹ் போன்ற நம் முன்னோர்கள் கண்ணியமான மாதங்களில் மாதம் முழுக்க நோன்பு வைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அல்லாமா ஸவ்ரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;  கண்ணியமான மாதங்களில் நோன்பு வைப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது.

அந்த நான்கு மாதங்களில் இந்த துல்கஅதா மாதத்திற்கு தனிச்சிறப்புகள் உண்டு.

الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ

 ஹஜ் என்பது (அதற்கெனக்) குறிப்பிட்ட மாதங்களில் தான். (அல்குர்ஆன் : 2 ;197)

وَقَالَ ابْنُ عُمَرَ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا-: " أَشْهُرُ الحَجِّ: شَوَّالٌ، وَذُو القَعْدَةِ، وَعَشْرٌ مِنْ ذِي الحَجَّةِ"،

ஹஜ்ஜிக்கான காலங்கள் என்பது ஷவ்வால்,துல்கஅதா மற்றும் துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்களாகும்.

நபி அவர்கள் அனைத்து உம்ராக்களையும் துல்கஅதாவில் தான் செய்திருக்கிறார்கள்.

فعُمَر النبي -صلى الله عليه وسلم- الأربع كنّ في شهر ذي القعدة، قَالَ أَنَسٌ -رَضِيَ اللَّهُ عَنْهُ-: "اعْتَمَرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَرْبَعَ عُمَرٍ، كُلَّهُنَّ فِي ذِي القَعْدَةِ، إِلَّا الَّتِي كَانَتْ مَعَ حَجَّتِهِ: عُمْرَةً مِنَ الحُدَيْبِيَةِ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مِنَ العَامِ المُقْبِلِ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مِنَ الجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ" (متفق عليه).

 

 இறைத்தூதர் நபி அவர்கள் தம் வாழ்நாளில் நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவற்றில் ஹஜ்ஜின் போது செய்த உம்ராவைத் தவிர மற்ற அனைத்தையும் துல்கஅதாவிலேயே செய்தார்கள் என்று என்னிடம் சொல்லி விட்டு அந்த நான்கையும் கூறினார்கள்.

1, ஹுதைபிய்யா நிகழ்வின் போது செய்த உம்ரா.

2, அதற்கு அடுத்த ஆண்டு துல்கஅதாவில் செய்த உம்ரா.

ஹுனைன் போரிக்களத்தின் போது கிடைத்த செல்வங்களை பங்கிட்டு கொடுத்த நேரத்தில் ஜிஃரானா என்னும் இடத்திலிருந்து சென்ற உம்ரா. (புகாரி ; 4148)

وَوٰعَدْنَا مُوْسٰى ثَلٰثِيْنَ لَيْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِيْنَ لَيْلَةً ‌  وَقَالَ مُوْسٰى لِاَخِيْهِ هٰرُوْنَ اخْلُفْنِىْ فِىْ قَوْمِىْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيْلَ الْمُفْسِدِيْنَ‏

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி "நீங்கள் நம்முடைய மக்களிடையே என்னுடைய இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துங்கள். அன்றி விஷமிகளுடைய வழியை நீங்கள் பின்பற்றாதீர்கள்" என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:14)

அல்லாஹ் வாக்களித்த 30 நாட்கள் என்பது துல்கஅதா மாதத்தின் 30 நாட்களாகும் என்பது குர்ஆன் விரிவுரையாளர்களின் கூற்றாகும்.

புனிதமான மாதத்தை அடைந்திருக்கிற நாம் இதில் அதிகம் நன்மைகளை செய்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக! 

Thursday, May 18, 2023

எல்லாம் நன்மைக்கே

நாம் நம் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை ஆசைப்படுகிறோம். அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கிற விஷயங்கள் நடக்கும். சமயங்களில் நாம் எதிர் பார்க்காத, சற்றும் அதைப் பற்றி சிந்திக்காத காரியங்களும் நடந்து விடும். நாம் எதிர் பார்த்த விஷயங்கள் நடந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ்! நாம் நினைத்தது நடந்து விட்டது. இனிமேல் எந்தக் கவலையும் இல்லை. எல்லாம் கைராக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தீங்காக அமைந்து விடும். நாம் எதிர் பார்க்காத விஷயங்கள் நடக்கும் போது ஆகா இப்படி நடந்து விட்டதே! இனி என்ன ஆகப் போகுதோ! ஏது ஆகப் போகுதோ! என்று கவலைப்படுவோம், அச்சப்படுவோம். ஆனால் அது நன்மையாக அமைந்து விடும். எனவே நடக்கின்ற காரியங்களில் எது நலவானது? எது தீங்கானது? என்று நமக்குத் தெரியாது. அதை அறிந்தவன் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் மட்டும் தான்.

Thursday, May 11, 2023

விபத்துக்களும் பாதுகாப்பு வழிமுறைகளும்

 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த அவசர யுகத்தில் பரபரப்பான சூழலில் பயணங்கள் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்டது. படிப்பிற்காக, தொழிலுக்காக, குடும்பத்தின் அலுவல்களுக்காக, சொந்த காரியங்களுக்காக அல்லது சமூகக் காரியங்களுக்காக, சுகத் துக்கங்களுக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு, இப்படி ஒவ்வொரு நாளும் நாம் பயணம் மேற்கொள்கிறோம். மனிதர்களும் மனிதர்கள் மேற்கொள்கிற பயணங்களும் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் வாகனங்களும் பெருத்து விட்டது.

Thursday, April 27, 2023

ரமலான் கபூலாகி விட்டதா ?

 

அருள்மிக்க ரமலான் மாதத்தை அடைந்து பகல் காலங்களில் நோன்பு நோற்று இரவு காலங்களில் நின்று வணங்கி இன்னும் பல்வேறு அமல்களை செய்த திருப்தியிலும் பெருநாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியிலும் நாம் அமர்ந்திருக்கிறோம். இது ரமலான் மாதத்தில் நாம் செய்த அமல்களைக் குறித்து சிந்திக்க வேண்டிய, கவலைப்பட வேண்டிய ஒரு நேரம். ஏனென்றால் மிகப்பெரும் சிரத்தை எடுத்து ஒரு காரியத்தை மேற்கொண்டோம், செய்து முடித்தோம். அத்தோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. அது வெற்றி பெற வேண்டும். அது நல்ல முடிவைத் தர வேண்டும். அது தான் மிக முக்கியமானது. 

Friday, April 21, 2023

பெருநாள் தர்மம்


அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். பெரும்பாலும் ஒரு மாதத்தில் நான்கு ஜும்ஆக்கள் தான் இருக்கும். ஆனால் இவ்வருடம் ஜும்ஆ தினத்திலிருந்தே ரமலான் தொடங்கியதால் ஐந்து ஜும்ஆக்களை தொழுகும் நஸீபை இறைவன் தந்திருக்கிறான். அல்ஹம்து லில்லாஹ்! நன்மைகளை அள்ளித்தரும் ரமலான், பாவங்களை பொசுக்கும் ரமலான், மனித உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் ரமலான், இஸ்லாமியச் சமூகத்தை இறை இல்லங்களோடு இணைக்கும் ரமலான், வணக்கங்களில் இன்பம் காண வைக்கும் ரமலான் நம்மை விட்டும் விடைபெறப் போகிறது. இது ரமலானின் இறுதி நாளாக இருந்தாலும் இது நமக்கு இறுதி ரமலானாக ஆகி விடாமல் ரப்புல் ஆலமீன் பாதுகாத்து நம் வாழ்வில் எண்ணற்ற ரமலான்களை சந்திக்கின்ற வாய்ப்பினைத் தருவானாக!

Saturday, April 15, 2023

அவர்கள் கழுதையைப் போன்றவர்கள்

 

مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌  بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

"தவ்றாத்" என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகாகெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் : 62:5)

Friday, April 14, 2023

நரகம்

 அல்லாஹ்வின் அருளால் புனித ரமலானை அடைந்து அதன் முதல் இரு பகுதிகளைக் கடந்து அதன் மிக முக்கியமான மூன்றாவது பகுதியில் இருக்கிறோம். ரமலான் மாதத்தினுடைய மூன்றாம் பகுதி நரகத்தின் விடுதலையை நரகிலிருந்து பாதுகாப்பை நம்மைப்படைத்த ரப்புல் ஆலமீனிடம் கேட்கும் ஒரு பகுதி. இந்த நேரத்தில் நரகத்தைப் பற்றிய சிந்தனை நமக்கு வர வேண்டும்.உண்மையில் நரகத்தின் சிந்தனை நம் வாழ்க்கையை செதுக்கும், பக்குவப்படுத்தும். நமக்கு இறையச்சத்தைத் தரும். பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். வணக்க வழிபாடுகளில் அதீத ஈடுபாட்டைத் தரும்.

Thursday, April 13, 2023

ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்

 

ﺇِﺫْ ﻳَﺘَﻠَﻘَّﻰ ﺍﻟْﻤُﺘَﻠَﻘِّﻴَﺎﻥِ ﻋَﻦِ ﺍﻟْﻴَﻤِﻴﻦِ ﻭَﻋَﻦِ ﺍﻟﺸِّﻤَﺎﻝِ ﻗَﻌِﻴﺪٌ . ﻣَﺎ ﻳَﻠْﻔِﻆُ ﻣِﻦ ﻗَﻮْﻝٍ ﺇِﻟَّﺎ ﻟَﺪَﻳْﻪِ ﺭَﻗِﻴﺐٌ ﻋَﺘِﻴﺪٌ

(மனிதனின்) வலப்பறத்திலும் இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் : 50 ; 17,18)

Wednesday, April 12, 2023

இதுவே தெளிவான வெற்றி

 

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ۙ‏

(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அல்குர்ஆன் : 48:1)

Tuesday, April 11, 2023

நான்கு CCTV கேமராக்கள்

 

حَتّٰٓى اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும். (அல்குர்ஆன் : 41:20)

Monday, April 10, 2023

மகிழ்ச்சி கூடும்,கூடாது

 

ذٰ لِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْـتُمْ تَمْرَحُوْنَ‌ ‏

(பின்னர் அவர்களை நோக்கி) "பூமியில் நீங்கள் செய்த உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)" என்றும், (அல்குர்ஆன் : 40:75)

Sunday, April 9, 2023

அமானிதம்

 

اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَيْنَ اَنْ يَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَ حَمَلَهَا الْاِنْسَانُ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۙ‏

நிச்சயமாக "(நம்முடைய) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?" என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் வினவினோம். அதற்கு அவை அதனைப் பற்றிப் பயந்து, அதனைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாமையால் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டான். (அல்குர்ஆன் : 33:72)

Friday, April 7, 2023

பொருளாதார சமநிலையும் ஜகாத்தும்

 உலகில் வாழும் மக்களிடையே ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், அடிமை வா்க்கம் என்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் உண்டு. அந்த ஏற்றத்தாழ்வுகளும் வித்தியாசங்களும் ஜனநாயகத்தின் மூலமாக மாற்றப்பட்டு, அம்பானிக்கும் ஒரு வாக்கு, குடிசையில் வசிக்கும் சுப்பனுக்கும் ஒரு வாக்கு என்று அனைவருக்கும் ஒரே மாதிரியான வாக்குரிமை அளித்து அரசியல் சமநிலையை பெரும்பாலான நாடுகளில் கொண்டு வரப்பட்டு விட்டது.

ஹுத்ஹுத்

 

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ ‌  اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏

அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது "என்ன காரணம்? "ஹுத்ஹுத்" என்னும் பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கின்றதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?) (அல்குர்ஆன் : 27:20)

Thursday, April 6, 2023

அவதூறு

 

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன்:24:4.)

Wednesday, April 5, 2023

மதில் மேல் பூனை

 

وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ‌ ‌ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ‌  وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ‌ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ‌  ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏

மனிதரில் பலர் (மதில் மேல் பூனையைப் போல்) உறுதியற்ற   நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்கள் யாதொரு நன்மை அடையும் பட்சத்தில் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும். (அல்குர்ஆன் : 22:11)

Tuesday, April 4, 2023

நூலைப் போல சேலை

 

فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ‌ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا‏

பின்னர், (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்துகொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) "மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய். (அல்குர்ஆன் : 19:27)

Monday, April 3, 2023

அழைப்புப் பணி

 

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ‌ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏

(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான். (அல்குர்ஆன் : 16:125)

Sunday, April 2, 2023

நிம்மதி

 

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌  اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ‏

மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 13:28)

Saturday, April 1, 2023

வான்மறை கூறும் வரலாறுகள்

 

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌  وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏

உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 11:120)

Friday, March 31, 2023

உண்மையே அமைதிக்கான வழி

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் : 9:119)

Thursday, March 30, 2023

பிளவு ஆபத்தானது

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏

அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 8:46)

Wednesday, March 29, 2023

அஃராஃப்

 

وَبَيْنَهُمَا حِجَابٌ‌ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّا بِسِيْمٰٮهُمْ‌  وَنَادَوْا اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْ‌ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ‏

(நரகவாசிகளும் சுவர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சுவர்க்கவாசிகளை நோக்கி "(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாகுக!" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சுவர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப் பார்கள். (அல்குர்ஆன் : 7:46)

Tuesday, March 28, 2023

வேண்டாம் அவர்களின் தொடர்பு

 

وَاِذَا رَاَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِىْۤ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖ‌  وَاِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ

(நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்கிப் போவோர்களை நீங்கள் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில் நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (இக்கட்டளையை) ஷைத்தான் உங்களுக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீங்களும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் அமர்ந்திருக்க வேண்டாம். (அல்குர்ஆன் : 6:68)

Sunday, March 26, 2023

கல்நெஞ்சும் கறையும்

 

وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّ‌ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏

தவிர, (இத்தகையவர்களில் பலர் நம்முடைய) தூதர் மீது அருளப்பட்டவைகளை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர்கள். அன்றி "எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர். (அல்குர்ஆன் : 5:83)

இஸ்லாம் கூறும் வாரிசுரிமைச் சட்டம்

  

یُوصِیكُمُ ٱللَّهُ فِیۤ أَوۡلَـٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَیَیۡنِۚ 

உங்கள் சந்ததியில் ஆணும் பெண்ணும் இருந்தால் ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 4 ;11)

Saturday, March 25, 2023

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் : 3:102)

Friday, March 24, 2023

இரண்டும் வேண்டும்

 

وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏

அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர் களும் மனிதர்களில் உண்டு. (அல்குர்ஆன் : 2:201)

Thursday, March 23, 2023

அருளான மாதத்தில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவோம்

பாக்கியங்களில் மிக உயர்ந்த பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இரண்டு மாதங்களாக எந்த மாதத்தை அடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் கரம் ஏந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோமோ அந்த அருள் மிக்க மாதத்தை நாம் அடைந்து விட்டோம். அருள்மிக்க இந்த ரமலானை நாம் அடைந்து கொண்டதற்காகவும் நம் துஆவை கபூல் செய்ததற்காகவும் ரப்புல் ஆலமீனுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், கடந்த வருடம் நம்மோடு ரமலானை சந்தித்த எத்தனையோ பேர் இப்போது இல்லை. கடந்த வருடம் பகலெல்லாம் நோன்பிருந்து இரவெல்லாம் நின்று தொழுத எத்தனையோ பேர் மண்ணுக்குள் சென்று விட்டார்கள். அல்லாஹ் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறான். நாம் நம்மை சரிபடுத்திக் கொள்வதற்கும் கடந்த கால பாவங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்து தூய்மையடைந்து கொள்வதற்கும் நம்முடைய நன்மைகளின் தட்டை கனமாக்குவதற்கும் நம் வாழ்வில் இன்னொரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் வழங்கிருக்கிறான்.மாபெரும் பொக்கிஷமாக நமக்கு கிடைத்திருக்கின்ற இந்த மாதத்தின் எந்த நிமிடத்தையும் வீணடிக்காமல் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். அது தான் இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய ரப்புல் ஆலமீனுக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக் கடனாகும்.

Wednesday, March 22, 2023

ஏன் இந்த தயக்கம் ?

 

اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏

கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான். (அல்குர்ஆன் : 2:26)

Thursday, March 16, 2023

மனிதனைப் பக்குவப்படுத்தும் நோன்பு

 

அல்லாஹ்வின் அருளால் ஷஃபான் மாதத்தின் இறுதி ஜும்ஆ இது. அநேகமாய் அல்லாஹ் நாடினால் அடுத்த வார ஜும்ஆ ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும். ரப்புல் ஆலமீன் பூரண உடல் சுகத்தோடு அதை அடைந்து கொள்ள தவ்ஃபீக் செய்வானாக! ரமலானைத் தொட்டும் விடும் தூரத்தில் நாம் இருக்கிறோம். ரமலானுடைய காலங்கள் நம்முடைய வாழ்வில் பொன்னான காலங்கள். ரமலான் மாதம் வந்து விட்டாலே நம் எல்லாரின் முகத்திலும் மலர்ச்சி தோன்றி விடும். நம் உள்ளங்களில் சந்தோஷம் ஒட்டிக் கொள்ளும்.நம் வணக்கங்களில் உற்சாகமும் உத்வேகமும் பிறந்து விடும்.தொலைத்து பல நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஒரு புதையல் கிடைத்ததைப் போன்ற ஒரு உணர்வு நமக்குள் பிறக்கும். மற்ற காலங்களில் பசியே தெரியாத அளவிற்கு அவ்வப்போது எதையாவது ஒன்றை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கும் நமக்கு ரமலான் காலங்களில் பகல் முழுதும் உண்ணாமலும் பருகாமலும் இருந்தாலும் அந்த பசியும் தாகமும் சுமையைத் தருவதற்குப் பதில் நமக்கு சுகத்தைத் தரும். இது தான் நோன்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தனித்தன்மை.

Thursday, March 9, 2023

பேணுதலான வாழ்வு


இஸ்லாம் மனித வாழ்வின் அத்துனை பகுதிகளிலும் ஒழுக்கத்தையும் பேணுதலையும் கடைபிடிக்குமாறு  போதிக்கிறது. கடமைகளை செய்யச் சொல்லும் இஸ்லாம் அதை கவனமாகவும் செய்யச் சொல்கிறது. அ்தேபோன்று சிறு குற்றங்களிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. கவனம் தவறினால் காலப்போக்கில் அது கடமை தவறக் காரணமாகி விடும். கடமைகளை விடக்கூடியவர்கள்   அதை ஒரே நாளில் கற்றுக் கொள்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் ஏற்படும் அலட்சியமும் கவனக்குறைவும் தான் கடமைகளில் குறையுள்ளவர்களாக அவர்களை மாற்றி விடுகிறது. அதேபோன்று பெரும்பாவங்களை மனிதன் உடனே செய்து விடுவதில்லை. சிறு குற்றங்களில் அவனிடம் இருக்கும் எச்சரிக்கையின்மை தான் நாளடைவில் பெரும்பாவங்கள் செய்வதற்கான துணிச்சலை ஏற்படுத்துகிறது.


Thursday, February 23, 2023

இளம் வயது மரணங்கள்

 

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் என்பது நிச்சயமானது. உறுதியானது. பிறப்பவர் என்றாவது ஒரு நாள் மரணித்தே ஆக வேண்டும். உலகிலுள்ள அனைத்துத் தரப்பினரும் கருத்து வேற்றுமைக்கு இடமின்றி உறுதியாக ஏற்றுக்கொண்டிருக்கிற, நம்பியிருக்கிற ஒரு விஷயம் மரணம் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் பல நூறு மரணங்களை நாம் பார்க்கிறோம். கேள்விப் படுகிறோம்.

Friday, February 17, 2023

சிறைகளுக்குள்ளேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது

 

وكذلك جعلنكم امة وسطا

அவ்வோறே நடுநிலைச் சமூகமாகவும் நாம் உங்களை ஆக்கினோம். (அல்குர்ஆன் : 2 ; 143)

நாம் பின்பற்றி வாழுகின்ற இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம். வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் நடுநிலையைக் கற்றுத் தரும் ஓர் ஒப்பற்ற மார்க்கம்.படைத்தவனுக்காக படைப்பினங்களையோ படைப்பினங்களுக்காக படைத்தவனையோ மறந்து விடுவதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விருவரையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிறது.ஆன்மிகத்திற்காக உலகத்தையோ உலகத்திற்காக ஆன்மிகத்தையோ விட்டு விடுவதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விரண்டும் வேண்டும் என்று கூறுகிறது.பூர்வீகத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு சமகாலத்தையோ சமகாலத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு பூர்வீகத்தையோ கண்டு கொள்ளாமல் இருப்பதற்குப் பெயர் நடுநிலையல்ல. இஸ்லாம் அவ்விரண்டையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது.கசப்பான கடந்த காலத்தை நினைத்து வருங்காலத் திட்ட மில்லாமல் இருப்பதோ கடந்த காலத்தை மறந்து வருங்காலத் திட்டமிடுவதோ நடுநிலையல்ல. கடந்த காலத்தை மறக்காமல் வருங்காலத் திட்டமிடல் வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

Thursday, February 9, 2023

பேரிடர்களும் நாம் பெற வேண்டிய பாடங்களும்

 

கடந்த நான்கு நாட்களாக அனைத்து ஊடகங்களையும் ஆக்கர மித்திருப்பது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த செய்திகள் தான். அந்த அதிர்ச்சி செய்தியும் அதன் புகைப் படங்களும் அனைவரின் உள்ளங்களையும் நடுங்கச் செய்து விட்டது. அந்த மக்களின் மரண ஓலங்களும் அவர்கள் விட்ட கண்ணீர்த் துணிகளும் கல்நெஞ்சம் கொண்டவர்களின் இதயங்களையும் கரையச் செய்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து உறங்கப்போன துருக்கி மக்கள் பலருக்கு மறுநாள் விடியாமலேயே போய் விட்டது. நிலநடுக்கம் அதிகாலை ஃபஜ்ருக்கு முன் என்பதால் தப்பிக்க வாய்ப்பில்லாமல் பல ஆயிரம் பேர் அப்படியே ஷஹீதாகி விட்டார்கள்.

Thursday, February 2, 2023

இளவல்களோடு இணைந்து பயணிப்போம்

 

நம் சமூகத்து வாலிபர்களை நெறிப்படுத்துவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடிவடிக்கைகள், முன்னெடுப்புக்கள் என்ன என்பதைப் பற்றி பேசி வருகிறோம். மக்தப் மதரஸாக்களை மேப்படுத்துவது நல்ல நட்பை உருவாக்கித் தருவது என இரு விஷயங்களை கடந்த வாரங்களில் பார்த்து விட்டோம். வாலிபர்களை ஒழுங்குபடுத்து வதற்கும் சீர்படுத்துவற்கும் அவர்களை நேரிய பாதையிலிருந்து விலகாமல் பாதுகாப்பதற்கும் நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கை அவர்களை எப்போதும் நம்மோடு வைத்துக் கொள்வது. நம்முடைய ஒவ்வொரு காரியங்களிலும் அவர்களை நம்மோடு இணைத்துக் கொள்வது.

Thursday, January 26, 2023

கூடா நட்பு கேடாய் முடியும்

சமூகத்தின் முக்கிய அங்கமாக இருக்கிற வாலிபர்களை நெறிப்படுத்த வேண்டும், இளம் சமூகத்தை சீர்படுத்த வேண்டும். இன்றைய மோசமான கலாச்சாரச் சீரழிவிலிருந்து அவர்களைப் பாதுகாத்து பழுதுபடாமல் அடுத்த சிறந்த தலைமுறைக்குரியவர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில் தொடர்ந்து மூன்று வாரங்களாக அது குறித்து சிந்தித்தும் பேசியும் வருகிறோம். வாலிபர்களை நெறிப்படுத்த நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய முதல் தேவை பள்ளிவாசல்களில் காலையும் மாலையும் நடைபெறும் மார்க்கத்தின் அடிப்படை விஷயங்கள் போதிக்கப்படுகின்ற மக்தப் மதரஸாக்களை முறைப்படுத்த வேண்டும். அதை மேம்படுத்த வேண்டும் என்று கடந்து வாரம் பேசினோம். அடுத்து நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம், இன்றைய வாலிபர்களின் நட்பு வட்டாரத்தை கவனிக்க நோக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த நட்புகளை உருவாக்கித் தர வேண்டும்.

Friday, January 20, 2023

வாலிபச் சமூகத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் ; 1, மக்தப்

 

கடந்த வாரம் இன்றைய காலத்து நம் வாலிப சமூகம் வீண் விளையாட்டுக்களிலும் கூத்து கும்மாளங்களிலும் வீணான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். சாதிக்க வேண்டிய பருவமாக இருக்கிற வாலிபத்தை  அவர்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். மொபைலுக்கும் இன்டர்நெட்டுக்கும் கேம்ஸுக்கும் சினிமாவிற்கும் போதைக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களுக்குப் பின்னால் நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கோடிட்டுக் காட்டினோம். இந்த ஆபத்தான சூழலிலிருந்து அவர்களைக் காக்க நம் வாலிபச் சமூகத்தை மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? எந்த மாதிரியான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் ? என்பதைக் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்து சிந்திக்க இருக்கிறோம்.

Friday, January 13, 2023

பைத்தியங்கள் பல விதம்

மனித வாழ்வில் மூன்று பருவங்கள் உண்டு.மூன்று பருவங்களைக் கொண்டு மனித வாழ்வை இறைவன் அமைத்திருக்கிறான். குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம். இறைவன் தந்திருக்கிற இந்த மூன்று பருவங்களில் மிக முக்கியமான எல்லா வகையான சிறப்பம்சங்களைப் பெற்ற எல்லா வகையான பாக்கியங்களையும் பெற்ற ஒரு பருவம் இளமைப்பருவம்.ஏனென்றால் குழந்தைப் பருவம் விளையாட்டுப் பருவம். அதில் கொஞ்சம் ஆற்றல் இருக்கும். ஆனால் அதற்குத்தேவையான அறிவும் பக்குவமும் இருக்காது. முதுமைப்பருவத்தில் கொஞ்சம் அறிவும் பக்குவமும் இருக்கும்.ஆனால் அதனை செயல்படுத்துவதற்குத் தேவையான ஆற்றல் இருக்காது. ஆனால் அறிவும் பக்கவமும் ஆற்றலும் நிறைவாக ஒரு சேர அமையப் பெற்றிருக்கிற ஒரு பருவம் வாலிபப்பருவம் தான்.எனவே குழந்தைப் பருவம் அறியாமைக்கும் விளையாட்டுக்கும் சொந்தமானது,வயோதிகப்பருவம் இயலாமைக்கும் பலவீனத்திற்கும் சொந்தமானது, வாலிபம் தான் ஆற்றலுக்கும் சாதனைக்கும் சொந்தமானது. 

Thursday, December 22, 2022

இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கூலியா ?

 

அல்லாஹுத்தஆலா பூமியில் மனிதனைப் படைத்து மனித வாழ்க்கைக்குத் தேவையான மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான அனைத்தையும் அவனே வழங்கியிருக்கிறான். பூமியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற அனைத்தும் ரப்புல் ஆலமீன் தந்தவை. உண்ணும் உணவு, தங்கும் இருப்பிடம், உடுத்தும் உடை,செலவழிக்கும் பணம், அறிவு,ஆற்றல்,திறமை,நம் பேச்சு முதல் மூச்சு வரை அனைத்தும் இறைவன் அளித்தவை. நம் கையில் இருப்பவை அனைத்தும் நம் உடமை அல்ல, இறைவுடைமை. இந்த சிந்தனை நமக்கு வேண்டும்.

Thursday, December 1, 2022

இஸ்லாம் கூறும் அடிமை ஒழிப்பு திட்டம்

 

நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் வாழ்க்கை நெறியாக தீனுல் இஸ்லாத்தை நமக்களித்திருக்கிறான். தீனுல் இஸ்லாம் உலகிற்கு சொன்ன கருத்துக்களும் இவ்வையகத்தில் கொண்டு வந்த மாற்றங்களும், நிகழ்த்திய சாதனைகளும், செய்த புரட்சிகளும் அசாதாரணமானவை. இஸ்லாம் ஏற்படுத்திய மாபெரும் புரட்சிகளில் ஒன்று உலகில் மனிதனாய் பிறந்த அனைவரும் சமம், யாரும் யாருக்கும் அடிமையல்ல, சுதந்திரமாக வாழுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்பது.ஒரு மனிதன் சட்டம், நீதி போன்றவற்றுக்கு முரண்படாத வகையிலும், இறைவனுக்கு மாற்றம் செய்யாத வகையிலும், அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காத அமைப்பிலும், தான், நினைத்ததை பேசுவதற்கும் செயற்படுவதற்குமான உரிமைக்கு சுதந்திரம் எனறு கூறப்படும். அந்த சுதந்திரத்தை மனிதனுக்கு இஸ்லாம் முழுமையாக வழங்கியுள்ளது.

Thursday, November 24, 2022

குளிர்காலம் பாரமல்ல, பாக்கியம்

 

அல்லாஹுத்தஆலா தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்துவதற்கு இவ்வுலகில் எண்ணற்ற அத்தாட்சிக்களை வைத்திருக்கிறான். அந்த அத்தாட்சிக்களை சிந்தித்து அவனுடைய வல்லமை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நமக்குக் கட்டளையிடுகின்றான். படைத்தோனின் வல்லமையை நமக்கு புரிய வைக்கும் அத்தாட்சிக்களில் ஒன்று தான் பருவ காலங்கள்.

Friday, November 18, 2022

மனிதர்களில் சிறந்தவர் யார் ?

 

வருடந்தோறும் நவம்பர் 19 ம் தேதி INTERNATIONAL MENS DAY தேசிய ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.அல்லாஹுத்தஆலா மனிதர் களில் ஆண் பெண் என்ற இரு பாலினத்தைப் படைத்திருக்கிறான். பேச்சுக்களில் தன்மைகளில் நடைமுறைகளில் பழக்க வழக்கங்களில் ஆண்,பெண் இருவருக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு சில மார்க்க சட்ட திட்டங்களில் கூட இருவருக்கும் வித்தியாசங்கள் இருப்பதை நாம் காணலாம். ஆண்,பெண் இரு பாலர்களில் பொதுவாக ஆண்கள் என்றைக்கும் தங்களை உயர்வாகவே நினைக்கும் குணம் கொண்டவர்கள். பெண்களை விட தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்வதில் அனைத்து ஆண்களும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையும் யதார்த்தமும் என்னவென்றால் பல விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

Thursday, November 3, 2022

கௌஸுல் அஃழம் ரலி அவர்கள்

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் வசந்தமான மாதங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டு மாதங்களில் முதல் வசந்தமான ரபீவுல் அவ்வல் நிறைவு பெற்று இரண்டாம் வசந்தமான ரபீவுஸ்ஸானி தொடங்கியிருக்கிறது. உலக முஸ்லிம்களால் போற்றப்படுகிற, உயர்த்திப் பேசப்படுகிற, பரிசுத்தமான வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட, கௌஸுல் அஃலம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவுகூறப்படுகிற, அவர்களின் வரலாறுகள் பேசப்படுகின்ற மாதம் இந்த ரபீவுல் ஆகிர் மாதம்.

Thursday, October 20, 2022

நபி ﷺ அவர்களின் கண்ணியமே மேலானது

 

اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ‏

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுவதற்காகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுவதற்காகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : 48:8)

Thursday, October 13, 2022

நபி ﷺ அவர்களை எப்படி நம்ப வேண்டும் ?

 

அகிலத்தின் அருட்கொடை மனிதருல் மாணிக்கம் நபிமார்களின் தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் நாம் இருக்கிறோம். காலம் முழுக்க நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி பேசப்படுகிறது, எழுதப்படுகிறது, அவர்களின் வரலாறுகள் ஆலசப்படுகிறது, ஆராயப்படுகிறது. அவர்களைப் பற்றி பேசாமல் அவர்களின் சொல்லை மேற்கோள் காட்டாமல் அவர்களின் செயல்களை குறிப்பிடாமல் எந்த விஷயத்தையும் பேச முடியாது. எந்த தலைப்புக்குள்ளும் நுழைய முடியாது. அந்த அளவு உலக மக்களால் அனுதினமும் பேசப்படும் நபராக அவர்கள் இருக்கிறார்கள். உலக மக்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக முகம்மது என்ற அவர்களின் பெயர் இருக்கிறது. காலம் முழுக்க அவர்களைத் தொட்டு பேசினாலும் அவர்கள் பிறந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது.

Thursday, September 22, 2022

குழந்தைகள் மீது கவனம் தேவை

 

அல்லாஹுத்தஆலா மனித சமூகத்திற்கு எண்ணற்ற நிஃமத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு வல்ல இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட அளப்பெரும் நிஃமத்துக்களில் ஒன்று ஆரோக்கியம்.

Thursday, September 15, 2022

இஸ்லாமியர்களின் வீழ்ச்சிக்கு காரணம்

 

உலகில் வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்கும் தான் சார்ந்திருக்கிற துறைகளில் தடம் பதிக்க வேண்டும். தான் செய்கின்ற காரியங்களில் வெற்றி பெற வேண்டும். வாழ்க்கையில் உயர்வை அடைய வேண்டும். உச்சத்தைத் தொட வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் நிறைந்திருக்கும்.

Thursday, September 8, 2022

ஈமான் இல்லையேல் எதுவும் இல்லை

 

அல்லாஹுத்தஆலா உலகில் நமக்கு வாழ்க்கை நெறியாக தீனுல் இஸ்லாத்தை கொடுத்திருக்கிறான். தீனுல் இஸ்லாம் என்பது ஈமானை அடிப்படையாகக் கொண்டது, இறை நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டது, செயல்களை காட்டிலும் இறை நம்பிக்கைக்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் முதன்மை இடத்தைக் கொண்டது. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அமல்கள் என்பது அவனுக்கு முக்கியமானதாக இருந்தாலும் அந்த அமல்களுக்கு மிகவும் பிரதானமானது அவனது இறை நம்பிக்கையும் இறை விசுவாசமும் தான். இறை விசுவாசம் தான் அவன் செய்யக்கூடிய காரியங்கள் நன்மையா இல்லையா என்பதையே தீர்மானிக்கிறது. இறை விசுவாசத் திற்கு பிறகு தான் ஒரு காரியம் நன்மை என்ற அங்கீகாரத்தையே பெறுகிறது.

Friday, August 5, 2022

ஆஷூரா தரும் படிப்பினை - அல்லாஹ் என்னோடு இருக்கிறான்

 

அல்லாஹ்வின் பேரருளால் வரலாற்று சிறப்புமிக்க முஸ்லிம் சமூகம் என்றைக்கும் மறக்காத மறக்க முடியாத மறக்கக்கூடாத ஒரு மகத்தான நாளை நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஆம் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளான ஆஷுரா தினம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.ரமலான் மாதத்தை அடுத்து மிகச்சிறந்த நோன்பு என்றால் அது, முஹர்ரம் மாதத்தில், குறிப்பாக இந்த ஆஷுரா தினத்தில் நோற்கும் நோன்பு என்று மார்க்கம் கூறுகிறது.

Friday, July 22, 2022

எந்தக் கல்வி தற்கொலையிலிருந்து பாதுகாக்கும் ?

உலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்று கல்வி. கல்வி தான் மனிதனை மனிதனாக்கும், மனித நேயமுள்ளவனாக்கும், ஞானமுள்ளவனாக மாற்றும், நேரான பாதை எது, தவறான பாதை எது என்பதை உணர்ந்து கொள்ளும் பகுத்தறிவு தன்மையை வழங்கும். கல்வியின்றி ஒரு மனிதன் நிச்சயம் முழுமை பெற மாட்டான். அதனால் தான் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.

Thursday, July 7, 2022

அரஃபா மற்றும் அய்யாமுத் தஷ்ரீக்

 

அல்லாஹ்வின் அருள் நிறைந்த மிகச்சிறந்த மாதத்தில், மிகச்சிறந்த நாட்களில் நாம் அமர்ந்திருக்கிறோம். நாளைய தினம் அரஃபா என்ற மகத்தான நாள். நமக்கு இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் தியாகத்திருநாளாக, நாம் கொண்டாடும் பெருநாளாக இருந்தாலும் உண்மையில் நாம் ஈமானிய உணர்வோடு ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய, பரிமார வேண்டிய ஒரு மகத்தான நாள் இந்த அரஃபாவுடைய நாள்.

Friday, June 24, 2022

குரல் கொடுப்போம் வாருங்கள்




நாட்டில் நடக்கிற அநீதங்களையும் அக்கரமங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கிற அடக்குமுறைகளையும் கடந்த வாரம் நாம் அலசினோம். இவ்வாறு அநீதங்களும் அக்கரமங்களும் அடக்குமுறைகளும் நடக்கிற போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் நாம் பார்க்க இருக்கிறோம். இதுமாதிரியான நேரங்களில் நாம் நான்கு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று நாம் பாவங்களை குறைத்துக் கொண்டு செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும். ஏனென்றால் நமக்கு ஏற்படும் அத்தனை சோதனைகளுக்கும் காரணம் நம் பாவங்கள் தான்.

Thursday, June 16, 2022

இது இந்தியாவா ? இல்லை இஸ்ரேலா ?

இஸ்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வழங்கியிருக்கிறது. மனிதன் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது, எதைப் பெற வேண்டும் எதைப் பெறக்கூடாது, எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்கக் கூடாது, எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது, இப்படி அத்தனை விஷயங்களையும் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

Thursday, June 9, 2022

அவர்கள் மோசமான முடிவுகளைத் தான் சந்திப்பார்கள்

 

கடந்த மே மாதம் 27 ம் தேதி டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஞானவாபி பள்ளிவாசல் சர்ச்சை குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா அங்கே பேசப்பட்ட விவாதப் பொருளை விட்டு விட்டு இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் தன்னுடைய வெறுப்புணர்வை கக்கும் வகையில் நாம் நம் உயிரை விட மேலாக மதிக்கின்ற நபி பெருமானார் ஸல் அவர்களை மரியாதைக் குறைவாக அவமதிக்கும் முகமான வார்த்தைகளை சொல்ல அது இப்போது உலகம் முழுக்க இஸ்லாமியர்களிடம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் கொந்தளிப்பு ஈரான் கத்தார் குவைத் ஓமன் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் வரை வெளிப்பட்டிருக்கிறது.

Friday, June 3, 2022

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்

 


هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் : 2:29)

Thursday, May 26, 2022

ஏன் இத்தனை மணமுறிவுகள் ?

 

சமீப காலமாக நம் இஸ்லாமியக் குடும்பங்களில் பிரச்சனைகள் சண்டைகள் குடும்பத் தகராறுகள் குறிப்பாக விவாகரத்துக்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்துக்கள் சர்வசாதாராணமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

Friday, May 20, 2022

முஸ்லிம்களுக்கு கவனமும் விழிப்புணர்வும் வேண்டும்

 

இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை நமக்கு நன்றாக தெரியும். கடுமையான பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், மதக்கலவரங்கள், எல்லாம் தனியார் மயமாக்கப்படுவது என்று நிர்வாக ரீதியாக மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது. தனது தோல்வியை மறைப்பதற்காகவும், RSS- ன் அஜென்டாவை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களோடு கைகோர்த்து மத்திய பாஜக அரசு மதப்பிரச்சனைகளை கையில் எடுத்திருக்கிறது. RSS- ன் மிக முக்கியமான அஜென்டாவே இஸ்லாமிர்களைத் தீண்டி அவர்களை கொதிப்படையைச் செய்வதும் அவர்கள் உயிராக மதிக்கின்ற ஷரீஅத்தில் கை வைப்பதும் அவர்களின் முக்கிய அடையாளச் சின்னங்களை கைப்பற்றி அதன் மூலம் நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துவதும் தான்.

Thursday, May 12, 2022

மிகப்பெரும் நிஃமத் மார்க்க கல்வி

ஷவ்வால் மாதத்தினுடைய 2 வது ஜும்ஆ இது.ஷவ்வால் மாதம் என்பது உலகம் முழுக்க அரபு மதரஸாக்கள், அல்லாஹ்வின் வேதமும் அண்ணல் நபியின் உயர்ந்த வாழ்வியல் நெறிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்ற அரபுக்கல்லூரிகள் மற்றும் மக்தப் மதரஸாக்கள் திறக்கப்படுகிற ஒரு நேரம். இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் இஸ்லாமியக்கல்லூரிகள் திறக்கப்படுகின்ற, அதன் புதிய ஆண்டை தொடங்கயிருக்கிற நேரம் இது. 

Thursday, May 5, 2022

ரமலான் கபூலாக வேண்டுமா ?

அல்லாஹ்வின் பேருதவியால் மாதங்களில் சிறந்த மாதமான ரமலான் மாதத்தை அடைந்து அதில் எண்ணற்ற அமல்களைச் செய்த மகிழ்ச்சி யிலும் திருப்தியிலும் நாம் இருக்கிறோம்.ரமலான் முடிந்திருக்கிற இந்த வேளையில் நம் சிந்தனையும் மனோநிலையும் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.